Tuesday, February 7, 2012

பாமரர்களால் குர்ஆனை விளங்க முடியுமா?

கேள்வி : சாதாரணமானவர்களால் குர்ஆன், ஹதீஸை எப்படி விளங்க முடியும்? மொழி பெயர்ப்புகளைத் தானே நம்ப வேண்டியுள்ளது?  - S.M.செய்யிது அஹ்மது அலி B.Aதூத்துக்குடி.

பதில் : மத்ஹபுகளை நியாயப்படுத்துவோர்எடுத்து வைக்கும் ஆதாரமற்ற வாதங்களில் இதுவும் ஒன்றாகும். குர்ஆன், ஹதீஸையே பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையுடையவர்களுக்குக் கூட மயக்கத்தை ஏற்படுத்தும் பொய்யான வாதமாகும் இது.

குர்ஆனும்,ஹதீஸ்களும் அரபு மொழியிலேயே அமைந்துள்ளன என்பது உண்மை தான். அரபு மொழி அறியாத மக்கள் மொழி பெயர்ப்புகளைத் தான் நம்ப வேண்டியுள்ளது என்பதும் உண்மை தான்.

இந்தக் காரணங்களுக்காகத் தான் மத்ஹபுகள் அவசியம் என்றால் மத்ஹபுடைய இமாம்கள் தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ் மொழியில் தான் சட்டங்களை எழுதினார்களா? நான்கு இமாம்களும் தமது தாய் மொழியாக அரபி மொழியைக் கொண்டவர்களே! அவர்கள் எழுதிய, அல்லது எழுதியதாகச் சொல்லப்படும் நூல்கள் யாவுமே அரபி மொழியில் அமைந்தவையே.

இதே வாதத்தின் அடிப்படையில் இவர்கள் என்ன சொல்ல வேண்டும்? மத்ஹபுகளின் சட்டங்கள் அரபி மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது என்பதனாலும், அந்த இமாம்களும் அரபியராக இருந்ததனாலும் மத்ஹபுகளும்,  அதன் சட்டங்களும் விளங்காது என்று கூறியிருக்க வேண்டும். தமிழ் நாட்டில் பிறந்த யாரையாவது இமாமாக ஏற்றிருக்க வேண்டும்.

அப்படிச் செய்யவில்லையே அது ஏன்?  இதைத் தான் நாம் சிந்திக்க வேண்டும்.

மத்ஹபுடைய மூல நூல்கள் அரபு மொழியில் இருந்தாலும் அதைத் தமிழாக்கம் செய்தால் மக்களுக்குப் புரியும் என்று இவர்கள் நம்பியதால் தானே மத்ஹபுகளைப் பின்பற்றுவதாகக் கூறுகின்றார்கள்.

அரபு மொழியில் எழுதப் பட்ட மத்ஹபுச் சட்டங்கள் தமிழாக்கம் செய்தால் விளங்க முடியும் என்றால் இந்த நியாயம் குர்ஆன்,ஹதீஸ் விஷயத்தில் பொருந்தாமல் போனது ஏன்?

மத்ஹபுகள் மீது இவர்களுக்கு வெறி இருப்பதாலும்,குர்ஆன், ஹதீஸ் இவர்களுக்குத் தேவையற்றதாக இருப்பதாலுமே இந்தப் பாரபட்சமான முடிவுக்கு வருகின்றனா.

தவறுகளும் சரியானவையும் கலந்துள்ள மனிதர்களின் அரபு மொழி வாசகங்கள் தமிழாக்கம் செய்யப்பட்டால் விளங்க முடியும் என்றால் தவறே இல்லாத முற்றிலும் சரியாகவே உள்ள குர்ஆன்,ஹதீஸ்கள் தமிழாக்கம் செய்யப்படும் போது ஏன் விளங்காது?

மொழி பெயர்ப்புகளில், மொழி பெயர்த்தவர்களின் கவணக் குறைவினாலோ, வேறு காரணங்களினாலோ சில தவறுகள் ஏற்படலாம் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. குர்ஆன், ஹதீஸ் மட்டுமின்றி எல்லா மொழி மாற்றத்தின் போதும் இது ஏற்படத்தான் செய்யும். இதை அரபி மொழியறியாதவர்களால் சில வேலை கண்டுபிடிக்கப்படாமலும் போகும்.

ஆனால் அதற்காக குர்ஆன், ஹதீஸை விட்டு விட முடியுமா? விட்டு விட வேண்டும் என்றால் மத்ஹபுகள் உள்பட எந்த மொழி மாற்றத்தையும் விட்டாக வேண்டும்.

நம்மால் இயன்றளவு முயற்சித்துப் பார்த்துவிட்டு மொழி பெயர்ப்பை நாம் நம்புகிறோம். நாம் அறியாத வகையில் தவறுகள் நிகழ்ந்திருந்தால் அதை அல்லாஹ் மன்னிப்பான். வேண்டுமென்றே குர்ஆன், ஹதீஸை அலட்சியம் செய்வதை மன்னிக்க மாட்டான்.

இன்னொன்றையும் நாம் கவணிக்க வேண்டும். இந்தக் கருத்துடையவர்கள் தாங்கள் சொற்பொழிவுகளில், குத்பாக்களில் புத்தகங்களில் குர்ஆன்,ஹதீஸ் மொழிபெயர்ப்புகளை அவ்வப்போது பயன்படுத்துகின்றார்களே விளங்காத குர்ஆன்,ஹதீஸை ஏன் மக்களிடம் கூற வேண்டும்.

மக்களிடம் வசூல் வேட்டை நடத்துவதற்கு மட்டும் குர்ஆன், ஹதீஸ்கள் கூறினால் விளங்கும் மற்ற விஷயங்களுக்கு விளங்காதா?

இதெல்லாம் ஷைத்தானின் மாய வலை. இதில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner