Thursday, February 16, 2012

மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே! - எம். ஷம்சுல்லுஹா

"இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)  நூல் : திர்மிதி எண்: 1082

ஒருவர் ஊருக்கு நல்லவராகி விடலாம். ஆனால் வீட்டுக்கு நல்லவரானால் தான் அவர் அல்லாஹ்விடம் நல்லவராவார் என்ற உயரிய பண்பை நபி (ஸல்) அவர்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றார்கள்.

இன்று நாம் தொழுகை, நோன்பு, ஹஜ், ஜகாத் போன்றவற்றைச் செய்து முழுமையான முஃமின்களாக ஆகி விடலாம் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோம். இந்த வணக்கங்களில் நாம் சரியாக இருந்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் மனைவியிடம் அக்னிப் பிழம்பாக ஆதிக்க எஜமானாக வாழ்ந்து கொண்டிருந்தால் நாம் முழுமையான முஃமினாக ஆகி விட முடியாது என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.

இன்று நம்மிடம் இது போன்ற வாழ்க்கை இன்னும் மலரவில்லை. நாம் இந்த நாட்டில் வாழும் பிற மத சமுதாய கலாச்சாரப் பிடியிலிருந்து விடுபடவில்லை. கணவன் சாப்பிட்ட பிறகு தான் மனைவி சாப்பிட வேண்டும்! கணவன் உறங்கும் போது மனைவி எழுப்பக் கூடாது! ஆனால் மனைவியைக் கணவன் எப்போது வேண்டுமானாலும் எழுப்பி வேலை வாங்கிக் கொள்ளலாம் என்ற மாற்று மதக் கலாச்சாரம் நம்மிடம் வேரூன்றிக் கிடக்கின்றது. ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தக் கலாச்சாரத்தை உடைத்தெறிகின்றார்கள்.

உணவு, உடை

அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று நான் கேட்ட போது, "நீ சாப்பிடும் போது அவளுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும். நீ உடை உடுத்தும் போது அவளுக்கும் உடை கொடுக்க வேண்டும். முகத்தில் அடிக்கக் கூடாது. அவளை நீ மனம் நோகச் செய்யக் கூடாது. வீட்டிற்குள்ளேயே தவிர (வேறு இடங்களில் அவள் மீது) வெறுப்பைக் காட்டக் கூடாது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.  அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி)  நூல் : அபூதாவூத் 1830

நாம் சாப்பிடும் போது நம்முடன் நமது மனைவியை சாப்பிடச் செய்ய வேண்டும் என்று இங்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள். கணவன் சாப்பிட்ட எச்சிலைத் தான் மனைவி சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை எச்சில் தொட்டியில் தூக்கி எறிகின்றார்கள். நமக்கு ஆடை எடுத்தால் மனைவிக்கும் சேர்த்து ஆடை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடுகின்றார்கள். அத்துடன் மட்டும் நபி (ஸல்) அவர்கள் நிற்கவில்லை. உனது மனைவிக்கு நீ ஊட்டி விடு, அதற்குக் கூலியும் கிடைக்கும் என்று கூறுவதைப் பார்க்கிறோம்.

"அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப் படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) நூல் : புகாரி 56

சுய மரியாதையைப் போற்றுதல்

மனைவியை அடிக்க வேண்டிய சில கட்டங்கள் வாழ்க்கையில் வரும். இது போன்ற கட்டங்களில் கன்னத்தில், முகத்தில் அறைந்து விடக் கூடாது என்ற நல்ல பண்பை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்றார்கள். அதனால் மனைவியை அடிப்பதற்கு இந்த ஹதீஸ் ஏகபோக உரிமை அளித்துள்ளது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.

"நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பது போல் அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் அவளுடனேயே உறவு கொள்வீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி)  நூல் : புகாரி 4942, 5204

மனைவியை அடித்து விட்டு அவள் பக்கத்தில் போய் படுப்பதற்கு வெட்கப்பட வேண்டாமா? என்று இந்த ஹதீஸ் கேட்கின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மனைவிமார்களை அடித்ததில்லை என்பதை இங்கு நாம் உணர வேண்டும்.

அடுத்ததாக "பொது இடங்களில் வைத்து மனைவி மீது வெறுப்பை நெருப்பாக அள்ளித் தட்டி விடாதே' என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள். இன்று நம்மில் பலர் மனைவியருக்கு சுயமரியாதை என்ற ஒன்று கிடையாது என்று முடிவு செய்து விட்டார்கள். அதனால் தான் பலர் முன்னிலையில், பொது இடங்களில் திட்டித் தீர்த்து விடுகின்றார்கள். நிச்சயமாக இது ஒரு நல்ல பண்பல்ல! இத்தீய பண்பை ஒரு முஸ்லிம் அறுத்து எறிந்து விட வேண்டும்.

மனைவி உறங்கும் போது அவளது உறக்கத்திற்கு இம்மியளவு கூட மதிப்பு கொடுப்பது கிடையாது. பகலில் மாடாய் உழைத்து விட்டு, இரவில் அயர்ந்து உறங்கும் போது கொஞ்சம் உறங்கட்டுமே என்று உறங்க விடுவது கிடையாது. வேலைக்காரியை எழுப்புவது போல் அலட்சியக் குரலில் முதலில் எழுப்பிப் பார்ப்பது, அதில் அவள் விழிக்கவில்லை என்றால் கழுதையைப் போன்று காட்டுக் கத்தல் கத்துவது, அதற்கும் சரிப்படவில்லை என்றால் காலால் எட்டி உதைப்பது போன்ற செயல்களால் மனைவியை மிருகத்தை விடக் கேவலமாக நடத்தும் காட்டுமிராண்டித்தனம் நம்மிடம் சர்வ சாதாரணமாகத் தொடர்கின்றது. இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் பாருங்கள்!

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த தமது மனைவி ஆயிஷா (ரலி) அருகில் வந்து படுக்கின்றார்கள். ஆயிஷா (ரலி) உறங்குகின்றார்கள் என்றெண்ணி அவர்களிடம் சொல்லாமல் (ஜன்னத்துல்) பகீஃக்கு செல்கின்றார்கள். உறங்குவது போல் காட்டிக் கொண்ட ஆயிஷா (ரலி) எழுந்து, நபி (ஸல்) அவர்களை பகீஃ வரை பின்தொடர்ந்து சென்று பார்த்து விட்டு, அவர்களுக்கு முன்னரே ஓட்டமெடுத்து வீட்டுக்கு வந்து சேர்கின்றார்கள். மூச்சிறைப்பின் காரணமாக ஆயிஷா (ரலி) அவர்களின் உடல் ஏறி இறங்குவதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் விசாரிக்கின்றார்கள். அதற்கு ஆயிஷா (ரலி), ஒன்றுமில்லை என்று கூறியதும், நீயாக சொல்லப் போகின்றாயா? அல்லது அல்லாஹ் எனக்கு உண்மையை அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே ஆயிஷா (ரலி) நடந்த நிகழ்வைக் கூறுகின்றார்கள். "பகீஃ-க்கு சென்று பாவமன்னிப்பு தேடுமாறு அல்லாஹ் கட்டளையிட்டதாக ஜிப்ரயீல் வந்து என்னிடம் கூறினார்கள். அதற்காக நான் புறப்பட்டேன். அப்போது நீ உறங்குகின்றாய் என்றெண்ணினேன். உன்னை எழுப்புவதற்கு சங்கடப்பட்டேன். அதன் மூலம் நீ வெறுப்படைவதை அஞ்சினேன்'' என்று தாம் சொல்லாமல் சென்றதற்கான காரணத்தை நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியாரிடம் தெரிவிக்கின்றார்கள். (ஹதீஸின் சுருக்கம்) நூல் : முஸ்லிம் 1619

இங்கு நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியருகே வந்து படுக்கும் போதும் எழுப்பவில்லை. அதன் பிறகு வெளியே செல்லும் போதும் எழுப்பவில்லை. காரணம் மனைவியின் தூக்கம் கலைந்து விடக் கூடாது என்பது தான். ஆனால் நம் நாட்டிலோ "பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி' என்று பதிகம் பாடிக் கொண்டிருக்கின்றார்கள். தனது ஆணாதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த நடைமுறை அன்றைய தினம் மட்டும் கடைப்பிடித்த அபூர்வ நடவடிக்கை அல்ல! அது அவர்களின் அன்றாட வாடிக்கையாக இருந்தது என்பதைப் பின்வரும் ஹதீஸ் உணர்த்துகின்றது.

நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவார்கள். உட்கார்ந்த நிலையில் ஓதுவார்கள். ஓத வேண்டியதில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும் போது எழுந்து நின்று அதை ஓதிவிட்டு ருகூவுச் செய்வார்கள். பின்னர் ஸஜ்தச் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் இது போலவே செய்வார்கள். தொழுது முடித்ததும் நான் விழித்துக் கொண்டிருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் உறங்கி விட்டால் அவர்களும் படுத்து விடுவார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி 1119

மனைவியின் ரசனைக்கு மதிப்பளித்த மாநபி

ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, "நீ பார்க்க ஆசைப்படுகின்றாயா?'' என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி) "அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்'' என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்த போது, "உனக்குப் போதுமா?'' என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். "அப்படியானால் செல்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி (950)

இங்கு மனைவியின் ரசனைக்கு மதிப்பளித்த ஒரு மாபெரும் தலைவரை நாம் காண்கின்றோம். மனைவியெனில் படுக்கையில் பாலுணர்வைப் பகிர்வதற்குரிய ஒரு சதைப் பிண்டம்! பகல் வேளையில் நம் வீட்டில் அனைத்துப் பணிகளையும் செய்வதற்குரிய மானுட இயந்திரம்! இவளிடம் என்ன பேச்சு வேண்டியிருக்கின்றது? இவளிடம் பேசுகின்ற நேரத்தில் நான்கு தஸ்பீஹ்களைச் சொன்னால் நன்மைகள் கிடைக்கும் என்று நாம் எண்ணுகின்றோம். நன்மையல்லாத காரியத்தையா நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருப்பார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

மனைவியின் உணவு, உடை, அவர்களுக்குரிய சுயமரியாதை போன்ற விஷயங்களையும் அவர்களது ரசனை உணர்வுகளையும் மதிப்போமாக! மாநபி வழியில் நடை போடுவோமாக....

- ஆன்லைன் பி.ஜே - ஏகத்துவம்

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner