Thursday, February 9, 2012

மஹர் (மணக்கொடை) - திருக்குர்ஆன் வசனங்களுடன் விளக்கம்

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்! (அல்குர்ஆன் 4:4)

உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்தால் உங்களுக்குக் குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

நம்பிக்கை கொண்ட, கணவனில்லாத பெண்களை மணந்து கொள்வதற்கு உங்களில் (பொருள்) வசதி இல்லாதவர் நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!) உங்கள் நம்பிக்கையை அல்லாஹ் நன்கறிபவன். நீங்களும், அவர்களும் ஒன்றுக்குள் ஒன்றாக இருப்பவர்களே. அவர்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதியுடன் மணந்து கொள்ளுங்கள்! கள்ளக் கணவர்களை ஏற்படுத்தாமலும், விபச்சாரம் செய்யாமலும், கற்பொழுக்கமுடையோராகவும் உள்ள அடிமைப் பெண்களுக்கு மணக் கொடைகளை108 நியாயமான முறையில் அவர்களிடம் வழங்கி விடுங்கள்! அவர்கள் மணமுடிக்கப்பட்ட பின் வெட்கக் கேடானதைச் செய்தால் கணவனில்லாத பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி அவர்களுக்கு உண்டு. இது உங்களில் விபச்சாரத்தை அஞ்சுவோருக்குரியது! நீங்கள் பொறுமையை மேற்கொள்வது உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 4:24, 25)


பெண்கள் பற்றி அவர்கள் (முஹம்மதே!) உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர். அநாதைப் பெண்களுக்கு கடமையாக்கப்பட்டதைக்108 கொடுக்காமல் அவர்களை மணந்து கொள்ள நீங்கள் விரும்பியது பற்றியும், பலவீனமானவர்களான சிறுவர்கள் பற்றியும், அனாதைகளை நீங்கள் நியாயமாக நிர்வகிக்க வேண்டும் என்பது பற்றியும் இவ்வேதத்தில் (ஏற்கனவே) உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. ''அவர்களைப் பற்றி அல்லாஹ் (மேலும்) உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறான்'' எனக் கூறுவீராக! நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிபவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:127)

இன்றைய தினம் தூய்மையானவை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டது. உங்கள் உணவு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது. நம்பிக்கை கொண்ட கணவனில்லாத பெண்களையும், உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்ட கணவனில்லாத பெண்களையும் வைப்பாட்டிகளாக்கிக் கொள்ளாமலும், விபச்சாரம் செய்யாமலும், கற்பு நெறி தவறாமலும் அவர்களுக்குரிய மணக்கொடைகளை108 வழங்கி மணமுடிப்பது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தனது நம்பிக்கையை (இறை) மறுப்பாக ஆக்கிக் கொள்பவரின் நல்லறம் அழிந்து விட்டது. அவர் மறுமையில் நஷ்டமடைந்தவராக இருப்பார். (அல்குர்ஆன் 5:5)

அடிமைப் பெண்கள் தவிர வேறு பெண்கள் இதன் பிறகு உமக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களின் அழகு உம்மைக் கவர்ந்த போதும் சரியே. (அவர்களை விவாகரத்துச் செய்து விட்டு) அவர்களுக்குப் பகரமாக வேறு மனைவியரை மாற்றுவதும் கூடாது. அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 33:50)

நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர். அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை108 நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. ஏக இறைவனை மறுக்கும் பெண்களுடன் (முன்னர் செய்த) திருமண ஒப்பந்தங்களைத் தொடராதீர்கள். நீங்கள் செலவிட்டதை நீங்கள் கேளுங்கள்! அவர்கள் செலவிட்டதை அவர்கள் கேட்கட்டும். இதுவே அல்லாஹ்வின் கட்டளை. உங்களுக்கிடையே அவன் தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 60:10)

திருமணம் செய்வதற்காக மணமகன் மணமகளுக்கு வழங்கும் பொருள் மஹர் (மணக் கொடை) எனப்படும்.

ஒரு பெண் திருமண வாழ்வின் மூலம் தனக்கு ஏற்படும் இழப்புகளைக் கருத்தில் கொண்டு எவ்வளவு வேண்டுமானாலும் மஹர் கேட்பதற்கு உரிமை உள்ளது. அதை அவள் மட்டுமே உடமையாக வைத்துக் கொள்வதற்கும் உரிமை உள்ளது.

இல்லற வாழ்க்கையில் அதிகமான இழப்புக்கு ஆளாவது பெண்கள் தான். தங்களின் அழகையும், இளமையையும் இழந்தபின் அவர்கள் விவாகரத்துச் செய்யப்படக் கூடும். அந்த நிலையை எல்லாம் எண்ணிப் பார்த்து மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமையை பெண்களுக்கு இஸ்லாம் வழங்குகின்றது.

மஹர் தொகையை எவ்வளவு வேண்டுமானாலும் பெண்கள் கேட்கலாம். இவ்வளவு தான் கேட்க வேண்டும் என்று வரையறை செய்யும் உரிமை எவருக்கும் இல்லை.

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள இந்த உரிமையைப் பெண்கள் பயன்படுத்தத் தவறிவிட்டதால் அவர்களின் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. இவர்கள் மஹர் கேட்காததால் ஆண்கள் வரதட்சனை கேட்கும் கொடுமை அதிகமாகி விட்டது.

கொடுக்கக் கடமைப்பட்ட ஆண்கள் கேட்டுப் பெறக் கூடிய அளவுக்கு மானமிழந்து விட்டனர். வரதட்சணை வாங்காதீர்கள் என்பதை விட நீங்கள் கொடுங்கள் என்பது கடுமையான கட்டளையாகும். உண்மையான எந்த முஸ்லிமும் வரதட்சணை கேட்கத் துணிய மாட்டான்.

இது தான் அறிவுப்பூர்வமானதும், நேர்மையானதுமாகும்.

பெண்கள் தாம் அதிகமான தியாகத்தைச் செய்கின்றனர். அதிகமான சிரமங்களையும் சுமக்கின்றனர். எனவே பெண்களுக்கு ஆண்கள் கொடுப்பது தான் நீதியாகும்.

ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடந்த பின் ஆண் தனது வீட்டிலேயே இருக்கிறான். தனது தாய், தந்தையர் மற்றும் உறவினருடன் இருக்கிறான். ஆனால் அவனை விட வயதில் குறைந்த பெண் தனது பெற்றோரையும், சொந்தங்களையும் துறந்து விட்டு கணவன் வீட்டுக்கு வந்து விடுகிறாள். இந்தத் தியாகத்திற்காக பெண்களுக்குத் தான் ஆண்கள் வழங்க வேண்டும்.

திருமணத்திற்குப் பின் மனை விக்காக கணவன் எந்தச் சேவையும் செய்வதில்லை. அதிகபட்சமாக அவளது வாழ்க்கைச் செலவினங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான். ஆனால் பெண்கள் கணவனுக்காக சமைத்தல், உடைகளைத் துவைத்தல், வீட்டைப் பராமரித்தல், கணவனுக்கு மட்டுமின்றி கணவனின் உறவினர்களுக்கும் சேர்த்து பணிவிடை செய்தல் என்று ஏராளமான சுமைகளைத் தம் தலையில் சுமந்து கொள்கின்றனர். மாமியார் கொடுமைகளையும் சில பெண்கள் கூடுதலாக தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. இந்தக் காரணத்துக்காகவும் ஆண்கள் தாம் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்.

இல்லறத்தில் ஈடுபட்டு ஒரு பெண் கருவுற்றால் ஆணுக்கு இதனால் எந்தச் சிரமமும், சுமையும் இல்லை. பெண் தான் சிரமப்படுகிறாள். அவள் எதையும் உண்ண முடியாத மசக்கை நிலையை அடைகிறாள். இயல்பாக நடக்கவும், படுக்கவும் முடியாத சிரமத்தைத் தாங்கிக் கொள்கிறாள். அத்துடன் மரணத்தின் வாசல் கதவைத் தட்டி விட்டு பிரசவித்து மீள்கிறாள். இந்த ஒரு காரணத்துக்காகவே அவளுக்கு கோடி கொடுத்தாலும் போதாது.

பிரசவித்த பின் குழந்தைக்காக தந்தை எதையும் செய்வதில்லை. பாலூட்டுவதும், சீராட்டுவதும், கண் தூங்காது கவனிப்பதும் என ஏராளமான சுமைகளும் அவள் மீது தான் சுமத்தப்பட்டுள்ளன. இந்தக் காரணத்திற்காகவும் ஆண்கள் பெண்களுக்கு மஹர் கொடுப்பது தான் நேர்மையானது.

அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்து விட்டால் பெண் தனது எல்லா வசந்தங்களையும் துறந்து விடும் நிலையை அடைகிறாள்.

பெண்களுக்கு ஆண்கள் தான் கொடுக்க வேண்டும் என்பதை மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனும் மறுக்க முடியாது.

வரதட்சணை கேட்கும் கொடிய வழக்கம் காரணமாக ஏராளமான தீய விளைவுகள் ஏற்படுகின்றன. வரதட் சணை கேட்போரும், அதை ஆதரிப் போரும் அத்தனை தீய விளைவுகளிலும் பங்காளிகளாகின்றனர்.

வரதட்சணை காரணமாக 15 வயதிலிருந்தே வாழ்க்கைக்கு ஏங்கும் பெண்கள் முப்பது வயது வரை கூட மண வாழ்வு கிடைக்காத நிலையில் உள்ளனர்.

இதன் காரணமாக பெண்களில் சிலர் வீட்டை விட்டே வெளியேறி ஓடி விடுகின்றனர். ஏமாற்றப்படுகின்றனர். விபச்சார விடுதியில் கூட அவர்களில் பலர் தள்ளப்படுகின்றனர். இந்தப் பாவங்கள் அனைத்திலும் வரதட்சணை வாங்கியவர்களுக்கும் ஒரு பங்கு நிச்சயமாக உள்ளது. சில பெண்கள் இதனால் இஸ்லாத்தையே உதறித் தள்ளிவிட்டு பிற மதத்தவர்களுடன் ஓடிப் போகும் நிலையும் உள்ளது.

மணவாழ்வு கிடைக்காது என்ற நிலையில் தம் உயிரை தாமே மாய்த்துக் கொள்ளும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர். பெண்ணைப் பெற்றவர்களும் கூண்டோடு தற்கொலை செய்கின்றனர். வரதட்சணை கேட்போர் இந்தப் பாவத்திலும் பங்காளிகள் ஆகின்றனர்.

மணவாழ்வு கிடைக்காது என்பதால் ஒருத்தி ஓடி விட்டால் அவளது குடும்பத்தில் எஞ்சியுள்ள பெண்களுக்கும் வாழ்வு கிடைக்காத நிலை ஏற்படும். இதிலும் வரதட்சணை கேட்பவர்களுக்குப் பங்கு இருக்கிறது.

வரதட்சணை வழக்கத்தையும், அதனால் ஏற்படும் கேடுகளையும் முன் கூட்டியே உணர்பவர்கள் பெண் குழந்தை பிறந்ததும் தாமே தமது குழந்தைகளைக் கொன்று விடுகின்றனர். வேறு சிலர் ஸ்கேன் மூலம் கருவில் உள்ள குழந்தை பெண் என்பதை அறிந்து கருவில் சமாதி கட்டுகின்றனர். இந்த மாபாதகச் செயலிலும் வரதட்சணை கேட்பவர்கள் பங்காளிகளாகின்றனர்.

மானத்துடன் வாழ்ந்த ஒருவனை, பெண்ணைப் பெற்ற காரணத்துக்காக ஊர் ஊராகச் சென்று பிச்சை எடுக்க வைக்கின்றனர். இந்தப் பாவமும் இவர்களைச் சும்மா விடாது.

பருவத்தில் எழுகின்ற உணர்வுகளுக்கு வடிகால் இல்லாத நிலையில் பெண்களில் பலர் மனநோயாளிகளாகி விடுகின்றனர். இந்தக் கொடுமையிலும் இவர்கள் பங்கு பெற்றுக் கொள்கின்றனர்.

இப்படி ஏராளமான தீமைகளின் மொத்த வடிவமாகத் திகழும் வரதட்சணையை வாங்குவோர், இவ்வளவு பாவங்களுக்கான தண்டனைக்காகத் தம்மை முன்பதிவு செய்கிறார்கள். நியாயத் தீர்ப்பு வழங்கக் கூடிய இறைவன் முன்னால் நாம் நிறுத்தப்படுவோம் என்ற அச்சம் கடுகளவாவது இருந்தால் கூட எவரும் வரதட்சணை கேட்கவே மாட்டார்.

மேலும்,

''எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மண முடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர்'' என்று அவர் கூறினார்.(அல்குர்ஆன் 28:27)

திருமண வாழ்க்கையில் பெண்களுக்கு இருக்கின்ற உரிமையைக் கூறுகிறது.

ஒரு பெண்ணை மணமுடித்துத் தருவதற்காக எட்டு ஆண்டுகள் தம்மிடத்தில் கூலி வேலை செய்ய வேண்டும் என்று ஒரு பெரியவர் நிபந்தனை விதிக்க அதை மூஸா நபியவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

மஹர் கொடுக்காமல் பெண்களை ஏமாற்றுவதும், அற்பமான பொருட்களைக் கொடுத்து அவர்களை வஞ்சிப்பதும் இஸ்லாம் காட்டும் வழிமுறை அல்ல என்பதற்கு இந்த நிகழ்ச்சி சான்றாக அமைந்துள்ளது.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner