Saturday, February 18, 2012

நரகத்தில் புகுத்தப்பட்டார்கள் - விளக்கம்

கேள்வி - குர்ஆனில் 71 : 25 வசனத்தில் நூஹ் (அலை) அவர்களின் உபதேசத்தை ஏற்காதவர்கள் மூழ்கடித்து பின்பு நரகத்தில் புகுத்தப்பட்டார்கள் என்று இறைவன் கூறுகின்றான். அப்படியானால் இவர்களுக்கு கப்ர் வேதனை கிடையாதா? கியாமத் நாளின் விசாரணை கிடையாதா? -  எம். திவான் மைதீன், பெரிய குளம்.

பதில் - அந்த வசனத்தில் நரகத்தில் புகுத்தப்பட்டார்கள் என்று கடந்த கால வினையாகக் குறிப்பிடப்பட்டிருப்பதால் நூஹ் நபியை எதிர்த்தவர்கள் நரகத்தில் புகுத்தப்பட்டு விட்டதாக விளங்கிக் கொள்ளக் கூடாது. நரகத்திற்கு உரியவர்களாக ஆக்கப்பட்டார்கள் என்பதே அதன் பொருள். ஏனெனில் கப்ரு வாழ்க்கை உண்டு, மறுமையில் விசாரணை உண்டு என்பதைப் பல்வேறு குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் கூறுகின்றன.

யாருக்குத் தூதர்கள் அனுப்பப் பட்டார்களோ அவர்களையும் விசாரிப்போம். தூதர்களையும் விசாரிப்போம்.  அல்குர்ஆன் 7:6

இந்த வசனத்தின் படி நூஹ் (அலை) மற்றும் அவர்களுடைய சமுதாயம் உள்ளிட்ட அனைவருமே  விசாரணைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதை அறியலாம்.

மறுமை நாள் ஏற்படும் வரை கப்ரு வாழ்க்கையில் நரகத்தின் தண்டனையை அவர்கள் அனுபவிப்பார்கள். இதைக் கீழ்க்கண்ட வசனம் விளக்குகின்றது.

காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் அவர்கள் காட்டப்படுவார்கள். அந்த நேரம் (மறுமை) ஏற்படும் போது ஃபிர்அவ்னின் ஆட்களைக் கடுமையான வேதனையில் நுழையச் செய்யுங்கள்! (எனக் கூறப்படும்) (அல்குர்ஆன் 40:46)

அழிக்கப்பட்ட சமுதாயங்களில் ஒன்றான ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாருக்கு நியாயத் தீர்ப்பு நாள் ஏற்பட்டு, நரகத்தில் தண்டனை அளிக்கப்படும் வரை நரக நெருப்பில் அவர்கள் காட்டப் படுவார்கள் என்று இந்த வசனம் குறிப்பிடுகின்றது. இது கப்ரில் வழங்கப்படும் தண்டனையாகும். இது ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாருக்கு மட்டும் உரியது அல்ல! அநியாயம் செய்த அத்தனை பேருக்கும் இதுதான் தண்டனை என்பதைப் பின்வரும் வசனத்திலிருந்து அறியலாம்.

(ஏக இறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும் போது, "சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்!'' என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே! நீங்கள் செய்த வினையே இதற்குக் காரணம். அல்லாஹ் அடியார்களுக்கு அநீதி இழைப்பவன் அல்லன். ஃபிர்அவ்னின் ஆட்களுக்கும், அவர்களுக்கு முன் சென்றோருக்கும் ஏற்பட்ட கதியைப் போலவே (இவர்களுக்கும் ஏற்படும்). அவர்கள் அல்லாஹ்வின் சான்றுகளை மறுத்தனர். அவர்களது பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டித்தான். அல்லாஹ் வலிமை மிக்கவன்; கடுமையாகத் தண்டிப்பவன்.  அல்குர்ஆன் 8:50-52

பாவிகளின் உயிர்களைக் கைப்பற்றிய பின்னர் அளிக்கப்படும் வேதனை ஃபிர் அவ்னுடைய கூட்டத்தினருக்கு அளிக்கப்படும் வேதனை போன்றதாகும் என்று இறைவன் கூறுகின்றான். மறுமைக்கு முன்னர் அதாவது கப்ரு வாழ்க்கையில் வழங்கப்படும் தண்டனை ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பொதுவானது தான் என்பதை இதிலிருந்து அறியலாம்.

இறந்தவர் நல்லவராக இருந்தால் கப்ரு வாழ்க்கையில் உறங்குவார்கள் என்றும் கெட்டவராக இருந்தால் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன.

எனவே யாராக இருந்தாலும் கப்ரு வாழ்க்கை, மறுமையின் விசாரணையைச் சந்தித்தே ஆக வேண்டும்.
- பி.ஜே.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner