Saturday, February 25, 2012

மாமனார், மாமியார் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டுமா? அல்லது மனைவியின் பேச்சை கேட்டு நடக்க வேண்டுமா?

கேள்வி - தன் கணவன் சொல்படி தான் நான் நடப்பேன், மாமனார், மாமியார் சொல்படி நடக்க வேண்டும் என்று குர்ஆன், ஹதீஸில் இல்லை என்று மருமகள் கூறுகிறாள். இதனால் மனைவி பேச்சைக் கேட்டு மகனும் நடக்கின்றான். இவ்வாறு செய்வது கூடுமா? (புகாரியின் 6675, 6920) ஹதீஸின் கருத்துக்கு இது எதிரானது இல்லையா?

பதில் - நல்ல கருத்துக்களை யார் சொன்னாலும் ஏற்று நடக்க வேண்டியது ஒவ்வொரு முஃமினிடமும் இருக்க வேண்டிய நல்ல பண்பாகும்.

யார் தீய சக்திகளை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அல்லாஹ்வை நோக்கித் திரும்புகிறாரோ அவர்களுக்கு நற்செய்தி உள்ளது. எனது அடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக! அவர்கள் சொல்லைச் செவிமடுத்து அதில் அழகானதைப் பின்பற்றுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் நேர் வழி காட்டினான். அவர்களே அறிவுடையவர்கள். அல்குர்ஆன்  37:17,18

மாமியார் ஆகட்டும்; அல்லது மருமகள் ஆகட்டும்; நல்ல கருத்தை யார் சொன்னாலும் ஏற்று  நடக்கும் பண்பாடு நம்மிடம் வர வேண்டும். தான் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தாள் பொன் குடம் என்று மாமியார் நடக்கக் கூடாது. இதைப் போன்று வயதில் மூத்த மாமனார், மாமியாரை அவமதிக்கும் விதமாகவும், அவர்களின் நல்ல கருத்துக்களைக் கூட அவமதிக்கும் விதமாகவும் மருமகள் நடக்கக் கூடாது. குறிப்பாக தாய், தந்தையிடமிருந்து மகனைப் பிரிக்கும் மாபாதகமான காரியத்தைச் செய்யக் கூடாது. மேலும் பெற்றோரின் பேச்சைக் கேட்க விடாமல் அவர்களுக்கு எதிராக நடக்கும்படி கணவனை மாற்றக் கூடாது. அவ்வாறு செய்தால் மிகப் பெரிய தீமை செய்யத் தூண்டியவராக கருதப்படுவார்.

இறைவனுக்கு இணை கற்பிப்பது, தாய் தந்தையரைப் புண்படுத்துவது, கொலை செய்வது, பொய்ச் சத்தியம் செய்வது ஆகியன பெரும் பாவங்களாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 6675

பெற்றோரைப் புண்படுத்தும் காரியத்தைத் தம் கணவர் செய்து பெரும் பாவியாக மாற மனைவியே காரணமாக இருக்கக் கூடாது. கணவனே பெற்றோர்களிடம் கடினமாக நடந்தாலும் நபிமொழியை எடுத்துக் கூறி அவரைத் திருத்த முன்வர வேண்டுமே தவிர எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றும் வேலையைச் செய்யக் கூடாது.

- பி.ஜே

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner