Wednesday, May 30, 2012

ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம்


மார்க்க விடயங்களில் மிகவும் பேணுதலாக நடக்கும் ஒவ்வொரு கொள்கைவாதிகளும் சறுக்கி விழுகின்ற, தோற்றுப்போகின்ற ஒரு சம்பவம் தான் இந்தத்திருமணம் ஆகும். மார்க்க சட்டதிட்டங்களை பேசுவார்கள் பேணுவார்கள்.ஆனால் இந்த ஒரு விடயத்தில் மட்டும் மௌனியாவார்கள்.ஒரு சுன்னத்தைப் பேணுவதற்காக பல ஹராமான காரியங்கள் அரங்கேறுவதை இன்றைய திருமணங்களில் காணலாம்.நிக்காஹ்வை பள்ளிவாசல்களில் மிகவும் எளிமையான முறையில் நடாத்தி ஒரு பயானையும் நிகழ்த்தி விட்டு அதற்குப் பிறகு நடப்பதுவோ முழுக்க முழுக்க அநாச்சாரமும், ஆடம்பரமும், அநியாயமுமாகும்.

திருமணத்தில் நடக்கின்ற ஆடம்பரங்கள்

• ஹோட்டல் (Hotel) அல்லது மண்டபத்துக்கான செலவுகள்

• மணமக்களின் ஆடை அலங்காரத்துக்கான செலவுகள்

• மணமக்கள் அமரும் மேடை அலங்காரம்

• வீடியோ போட்டோவுக்கான செலவுகள்

• அழைப்பிதலுக்கான செலவுகள்

• பெண் வீட்டாரிடம் சுமத்துகின்ற செலவுகள்

• இன்னும் பல அநாச்சார, அந்நிய கலாச்சார செலவுகள்

• இறுதியில் விரயமாகின்ற குப்பையில் தஞ்சமாகின்ற சாப்பாடு

இவையனைத்திற்கும் பல லட்ச ரூபாய்கள் வீணடிக்கப்படுகின்றன. இதனால் யாருக்கும் எந்தவித பிரயோசனமும் நன்மையும் கிடையாது.மாறாக இத்தகைய திருமணத்தின் மூலம் கடன்காரன் என்ற அந்தஸ்து மட்டுமே எஞ்சுகிறது.இந்த ஆடம்பரங்களும் அநாச்சாரங்களும் நாமே நம் மீது திணித்துக் கொண்டவை.இந்தப்பல லட்ச ரூபாய்களைக் கொண்டு எத்தனையோ வாழ வழியற்ற குடும்பங்களை வாழ வைக்க முடியும் என்பதை எவரேனும் சிந்தித்து பார்த்ததுண்டா? இதன் மூலம் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் நற்கூலியைப் பெற்றுக் கொள்ளலாம்.ஏழை எளியவர்களும் நமக்கு துஆ செய்வார்கள்.பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களையும் சற்று கவனித்துப் பாருங்கள்.

வீண்விரையம் செய்யாதீர்கள்! வீண்விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 6:141)

உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான். (அல்குர்ஆன் 7:31)

உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண்விரையம் செய்து விடாதீர்! விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17:26,27)

மணமகனுக்கு இவ்வநியாயத்தை எதிர்த்து போராட முடியாதா?

பெற்றோரையும் உற்றாரையும் எதிர்த்து நின்று தான் விரும்பும் பெண்ணை மணமுடிக்கத் துடிக்கும் இளைஞர்கள் அதனை சாதித்துக் கொள்வதைப் போல் இந்த அநியாயத்தையும், ஆடம்பரத்தையும், அக்கிரமத்தையும் எதிர்க்க, போராட ஏன் அவர்களுக்கு தைரியமில்லை? மணமகன் மட்டும் ஒற்றைக்காலில் நின்று அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து இவ்வநியாயத்தை எதிர்த்துப் போராடினால் நிச்சயம் இன்ஷா அல்லாஹ் பல லட்ச ரூபாய்கள் வீணாவதிலிருந்தும், கொடிய நரகிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.

திருமண விருந்து எப்படி அமைய வேண்டும்?

முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் திருமணங்களையும் அவர்களின் அங்கீகாரத்துடன் நடந்த திருமணங்களையும் நாம் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.ஸஹாபாக்களின் திருமணத்தின் போது அவர்கள் நபியைக் கூட அழைக்கவில்லை என்பதை பின்வரும் சம்பவம் மூலம் அறியலாம்.

Monday, May 28, 2012

இஸ்லாமியத் திருமணத்தில் பெண்களுக்கு உரிமை இல்லையே?



கேள்வி: பருவம் அடையாத சிறுமியைத் திருமணம் செய்யலாமா?

பெண்ணின் திருமணம் நிறைவேற வலி எனும் பொறுப்பாளர் தேவை என்றால் பெண்ணுக்கு இதில் உரிமை இல்லாமல் போகிறதே?

அத்துடன் இஸ்லாத்தில் தந்தை பார்க்கும் ஆணைமட்டுமே ஒரு பெண் கல்யாணம் கட்ட வேண்டும் ஏனெனில் பெண் விரும்பினால் மட்டும் போதாது அப்பெண்ணின் (guardian) வலீயும் இதற்கு சம்மதிக்க வேண்டும் இதில் பெண்ணுக்கு உரிமை உள்ளது எனக் கூறும் இஸ்லாம் அதனை (guardian) வலீ இடம் ஒப்படைத்துள்ளது.

இந்தவிடயம் சம்பந்தமாக தயவு செய்து விளக்கம் தரவும் - நஸீருத்தீன்

பதில்: சிறிய வயதுப் பெண்களையும், பெண்ணின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்வதையும் இஸ்லாம் முற்றாகத் தடை செய்துள்ளது.

சிறு வயதுப் பெண்ணைத் திருமணம் செய்வது அன்றைய அரபுகள் மத்தியில் சாதாரணமாக நடந்து வந்தது. சிறுமிகளைத் திருமணம் செய்யக் கூடாது என்ற தடைவிதிக்கப்படுவதற்கு முன் அந்த வழக்கப்படி நபிகள் நாயகம் ஸல் அவர்களும் சிறுவயதுடைய ஆயிஷா(ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள்.

பின்னர் திருமணத்திற்கான ஒழுங்குகள் இறைவன் புறத்தில் இருந்து அருளப்பட்டன.

விபரமில்லாத சிறுமிகளைத் திருமணம் செய்வதை இஸ்லாம் முற்றாகத் தடைசெய்தது.

இதைப் பின்வரும் ஆதாரங்களிலிருந்து அறியலாம்.

திருமண வயது என்று ஒரு குறிப்பிட்ட வயதை இஸ்லாம் குறிப்பிடாவிட்டாலும் ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டிய தருணம் எது என்பதை மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது.

திருமண வாழ்வில் பெண்கள் ஆற்ற வேண்டிய கடைமைகள் பல உள்ளன. கணவனுக்குக் கட்டுப்படுவதும், வீட்டைக் கவனிப்பதும், குழந்தைகளைப் பேணுவதும் மனைவியின்கடமையாகும்.

விவரமற்ற சிறுமிகளால் இந்தக் கடமைகளைப் பேண இயலாது.

பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. (அல்குர்ஆன் 2:228)

தன் கணவனைத் தேர்வு செய்யும் உரிமையைப் பெண்ணுக்கு இஸ்லாம் வழங்கியுள்ளது.

விபரமுள்ள பெண்களே இந்த உரிமையைச் சரியாக பயன்படுத்த முடியும். சிறு வயது பெண்கள் சுயமாக தனது கணவனைத் தேர்வு செய்யும் நிலையில் இல்லை.

நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. (அல்குர்ஆன் 4:19)

கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெறவேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியபோது, "கன்னிப்பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே?'' என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  " அவளது மௌனமே அவளது சம்மதமாகும் '' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),  நூல்: புகாரி 6971, 6964, 5137

என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மண முடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது, அத் திருமணத்தை ரத்து செய்தார்கள். அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம்(ரலி),  நூல்: புகாரி 5139, 6945, 6969

அப்பெண்கள் உங்களிடம் கடுமையான உடன் படிக்கையை எடுத்துள்ளார்கள்.  (அல்குர்ஆன்4:21)

இந்த வசனத்தில் திருணமத்தை ஒரு கடுமையான ஒப்பந்தம் என்று திருக்குர் ஆன் கூறுகின்றது. அந்த ஒப்பந்தம் செய்வதற்கான தகுதியும், முதிர்ச்சியும் பருவவயதை அடைந்தால்தான் ஏற்படும்.

மணவாழ்க்கையில் தன்னுடைய உரிமைகள் என்ன? கடமைகள் என்ன? தனக்கு கணவனாக வருபவர் எவ்வாறு இருக்க வேண்டும்? என்று நன்கு ஆராய்ந்து முடிவெடுப்பதற்கு ஏற்ற வயதில் தான் பெண்களின் திருமணங்கள் நடைபெறவேண்டும் என்பதை இந்த வசனங்களும் ஹதீஸ்களும் உறுதி செய்கின்றன.

திருமணம் என்பது கடுமையான உடன்படிக்கை என்றால் கணவன் மனைவி ஆகிய இருவரும் திருமணம் என்றால் என்ன? எதற்காகத் திருமணம் செய்யப்படுகிறது? ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்பதையெல்லாம் அறிந்தால் தான் அதை ஒப்பந்தம் என்று கூற முடியும்.

எனவே இதை எல்லாம் அறிய முடியாத பருவத்தில் உள்ள ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் செய்விப்பதற்கு இப்போது அனுமதி இல்லை.

இந்தச் சட்டம் நடைமுறையில் இலலாதகாலத்தில் நடந்த திருமணம் குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை.

ஒரு பெண்ணுக்கு வலி எனும் பொறுப்பாளர் இருப்பது அவசியம் என்பதால் பெண்ணின் உரிமை பறிக்கப்படாது. வலி எனும் பொறுப்பாளர் பெண் விரும்பாத ஒருவனுக்கு மணமுடித்துக் கொடுக்க அனுமதி இல்லை. பெண்ணின் சம்மதம் இல்லாமல் திருமணம் செல்லாது.

பெண்ணின் திருமணத்துக்கு பொறுப்பாளர் வேண்டும் என்று சொல்வது பெண்கள் ஏமாற்றப்படாமல் தவிர்ப்பதற்கும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் தான்.

- ஆன்லைன் பி.ஜே.

Friday, May 25, 2012

அர்த்தமுள்ள இஸ்லாம் - தொடர் 7 - PJ - முடிவுற்றது

பண்டிகைகளின் பெயரால்..


மதங்கள் அர்த்தமற்றவை' எனக் கூறும் சிந்தனையாளர்கள் பண்டிகைகள் கொண்டாடும் முறைகளைப் பார்த்து விட்டு மதங்களை வெறுக்கின்றனர்.

நாம் மகிழ்ச்சியுடன் இருப்பதற்காக மற்றவர்களைத் துன்பத்திற்குள்ளாக்குவதுஎப்படி அர்த்தமுள்ள செயலாக இருக்கும்?' என்று அவர்கள் எண்ணுகின்றனர்.

பண்டிகைகளின் போது பலவிதமான பட்டாசுகள் வெடிக்கப் படுகின்றன. அந்தச்சப்தமும், நெருப்பினால் ஏற்படும் வர்ண ஜாலங்களும் நமக்குச் சிறிது நேரமகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.

ஆனால், அதனால் ஏற்படும் விளைவுகள் மோசமாக உள்ளன.

எத்தனையோ குடிசைகள் இதனால் எரிந்து சாம்பலாகின்றன.

உயிர்களும் கூட பலியாகின்றன.

அக்கம் பக்கத்தில் உள்ள அமைதியை விரும்பும் மக்களும், இதய நோயாளிகளும், தொட்டில் குழந்தைகளும் இதனால் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர்.

நச்சுப் புகையின் காரணமாக மற்றவர்களுக்கும், நமக்கும் கூட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

வசதி படைத்தவர்கள் விலை உயர்ந்த புதுமையான பட்டாசுகள் கொளுத்துவதைக் காணும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வயிறு எரிகின்றது.

இப்படி இன்னும் பல தீமைகள் இதனால் ஏற்படுகின்றன.

நாம் தீப்பிடிக்காத வீட்டில் இருக்கலாம். குடிசையை இழந்த அந்த ஏழை ஒரு குடிசையை மீண்டும் உருவாக்க எத்தனை நாட்கள் உழைக்க வேண்டும்?

அவன் சிறுகச் சிறுகச் சேர்த்த அற்பமான பொருட்களை மீண்டும் சேர்க்க எத்தனை ஆண்டுகள் உழைக்க வேண்டும்?

இதையெல்லாம் எண்ணிப் பார்க்காது நடக்கும் இந்தக் கொண்டாட்டங்கள் அர்த்தமுள்ளவை தாமா? என்று சிந்தனையாளர்கள் எண்ணுகின்றனர்.

வீதிகளில் பூசனிக்காய்களை உடைத்து விபத்துக்களை ஏற்படுத்துவதும், குப்பைகளை வீதிகளில் எரிப்பதும், மாடுகளை வீதியில் விரட்டி அவற்றுக்குஆத்திரமூட்டுவதும், வாகனங்களில் செல்பவர்களை மறித்து வாழ்த்துச் சொல்லிஅவர்களை நிலைகுலைய வைப்பதும், பஜனைப் பாடல்களை இரவு முழுவதும் உரத்தகுரலில் பாடுவதும், பொது இடங்களில் ஆடல் பாடல் கும்மாளம் போடுவதும்நமக்குச் சந்தோஷமாகத் தெரிந்தாலும் இது மற்றவர்களுக்கு பாதிப்பைஏற்படுத்தாதா? நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்காக மற்றவரைத்துன்புறுத்துவதில் என்ன அர்த்தமிருக்கிறது என்றும் அவர்கள் கேட்கின்றனர்.

இந்த விமர்சனத்தையும் இஸ்லாத்திற்கு எதிராக எழுப்ப முடியாது.

'தனது கையாலும் நாவாலும் பிறருக்குத் தொல்லை தராதவன் எவனோ அவனே முஸ்லிம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். நூல்: புகாரி 10, 11, 6484 ஒரு முஸ்லிம் தனக்கோ, மற்றவருக்கோ துன்பம்இழைக்கக் கூடாது என்பதை முன்னரே விளக்கியுள்ளோம். எனவே முஸ்லிம்கள்கொண்டாடும் பண்டிகைகளில் இது போன்ற காரியங்களைச் செய்ய அனுமதி இல்லை.

முஸ்லிம்களுக்கு இரண்டு பெருநாட்களே உள்ளன.

இவ்விரு பெருநாட்களிலும் புத்தாடைகள் அணியலாம்.

சிறப்பான உணவுகள் சமைத்து உண்ணலாம்.

உடலுக்கு வலிமை தரும் விளையாட்டுக்களில் இவ்விரு நாட்களிலும் ஈடுபடலாம்.

இரண்டு பெருநாட்களிலும் நடுத்தர வர்க்கத்தினரும், வசதி படைத்தவர்களும் தான தர்மங்கள் செய்தல்

அதிகாலையில் சிறப்புத் தொழுகையில் ஈடுபடுதல், இறைவனிடம் நல்லருளை வேண்டுதல்

உடலுக்கு வலிமை சேர்க்கும் வீர விளையாட்டுக்களில் ஈடுபடுதல்

போன்றவை தான் இஸ்லாமியப் பண்டிகைகளின் போது கடைப்பிடிக்க வேண்டியவை.

எந்த முஸ்லிமுக்கும், முஸ்லிமல்லாத மக்களுக்கும் இப்பண்டிகைகளால்எந்தவிதமான தொல்லைகளும் இல்லை. இறைவனைப் பற்றி நினைவு கூர்வதும், மனிதர்களுக்கு நலம் நாடுவதும் தான் இஸ்லாமியப்
பண்டிகைகளில் உள்ளன.

எனவே பண்டிகைகள் என்ற பெயரால் மற்றவர்களுக்கு இடையூறு செய்யப்படுகின்றன என்ற விமர்சனமும் இஸ்லாத்துக்கு பொருந்தாது.

மதங்கள் அர்த்தமற்றவை; மனித குலத்துக்குத் தேவையில்லாதவை என்பதைநிலைநாட்டுவற்காக கூறப்படும் காரணங்களில் ஒன்று கூட இஸ்லாம்மார்க்கத்துக்கு பொருந்தாது. 

எனவே இஸ்லாம் அர்த்தமுள்ள மார்க்கம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

Saturday, May 12, 2012

தீ மிதிக்க முடியுமா?

கேள்வி: இஸ்லாம் உருவ வழிபாடு கூடாது என்று போதிக்கின்றது என்று கூறுகிறீர்கள். அப்படியெனில், நாங்கள் மாரியம்மனின் அருளினால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் சாமியை நினைத்து தீ மிதிக்கிறோம். அவ்வாறு உங்களுடைய இறைவனின் அருளினால் அந்த இறைவனை நினைத்துக் கொண்டே எந்தவித பாதிப்பும் இல்லாமல் நீங்கள் தீ மிதித்து வர முடியுமா? என்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியைப் பார்த்து வரும் ஒரு இந்து நண்பர் கேட்கின்றார்.  - ஜே. கோரி முஹம்மது, ஆடுதுறை.

பதில்: தீ மிதிப்பதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கும் பக்திக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

மனிதர்களின் உள்ளங்கைகளிலும், உள்ளங்கால்களிலும் மற்ற பகுதிகளை விட வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் அதிகமாக உள்ளது.

விளக்கில் தீ எரியும் போது அதில் விரலை நீட்டித் தொட்டு தொட்டு வெளியே எடுக்கலாம். ஒன்றும் செய்யாது. வைத்துக் கொண்டே இருந்தால் தான் விரலைப் பொசுக்கும்.

ஒரு அடுப்பில் உள்ள தீக்கங்கை ஒரு கையால் எடுத்து மறு அடுப்பில் கிராமத்துப் பெண்கள் சர்வ சாதாரணமாகப் போடுவார்கள்.

உள்ளங்கைகளையும், உள்ளங்கால்களையும் நெருப்பில் தொடர்ந்து வைத்துக் கொண்டு இருந்தால் தான் பொசுக்குமே தவிர நெருப்பில் வைத்து வைத்து எடுத்தால் சில நிமிடங்கள் தாக்குப் பிடிக்க முடியும்.

இதன் காரணமாகத் தான் கடவுள் இல்லை எனக் கூறுவோரும் தீ மிதித்துக் காட்டுகின்றனர். முஸ்லிம்களில் அறிவீனர் சிலர் முஹர்ரம் பத்தாம் நாள் அன்று இது போன்ற தீ மிதித்தலை சில பகுதிகளில் செய்கின்றனர்.

எவராலும் செய்ய முடிகின்ற சாதாரணமான ஒரு காரியம் அறியாமை காரணமாக அசாதாரணமான காரியமாகக் கருதப்படுகின்றது.

மாரியம்மன் அருளால் தான் தீ மிதிக்கிறோம் என்று கூறுவதில் அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் தீயில் நடக்காமல் ஒரு நிமிடம் நின்று காட்டச் சொல்லுங்கள்!

அல்லது உள்ளங்காலை வைக்காமல் இருப்பிடத்தை தீக்கங்கில் வைத்து பத்து விநாடி உட்காரச் சொல்லுங்கள்! மாரியம்மன் அருள் தான் காரணம் என்றால் அதையும் செய்து காட்டத் தான் வேண்டும். இதற்கு யாரும் முன் வர மாட்டார்கள். நெருப்பில் வைத்து விட்டு உடனே எடுத்து விடும் நிகழ்ச்சி தான் தீமிதிப்பதில் உள்ள சூட்சுமம்.

நீங்கள் தீ மிதிக்கத் தயாரா? என்று அவர் அறை கூவல் விடுத்தால் அதையும் செய்து காட்ட நாம் தயாராக இருக்கிறோம். ஆனால் அதன் பின்னர் அவர் தமது கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். அவரிடம் கேட்டு எழுதுங்கள்!

அல்லது நாம் கூறியவாறு தீயில் ஒரு நிமிடம் உட்கார்ந்து விட்டு எந்தப் பாதிப்பும் இல்லாமல் எழுந்து காட்டட்டும். நாம் நமது கருத்தை மாற்றிக் கொள்வோம். சரி தானே!

- PJ

Monday, May 7, 2012

ஷியாயிஸம் என்பது இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமானதா? - பி.ஜே

கேள்வி - ஷியாயிஸம் என்பது இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமானதா? விளக்கவும். -  எஸ்.எம். இல்யாஸ், திருமங்கலக்குடி

பதில் -  ஷியாயிஸம் என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு கொள்கையாகும். இன்னும் சொல்லப்போனால் அது ஒரு தனி மதம் என்று கூட சொல்லலாம்.

நபி (ஸல்) அவர்களை விட அலீ (ரலி) அவர்களை உயர்வானவர்களாகச் சித்தரிப்பவர்கள் ஷியாக்கள். மேலும் அபூபக்ர், உமர், உஸ்மான் போன்ற கலீஃபாக்களும் நபித்தோழர்களும் காஃபிர்கள் என்பது ஷியாக்களின் நம்பிக்கை.

ஷியாக் கொள்கை இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமானது என்பதைப் புரிந்து கொள்வதற்கு ஷியாக்கள் புனிதமாகப் போற்றும் நூல்களிலிருந்து சிலவற்றை இங்கு தருகின்றோம்.

"தொழுகைகளைப் பேணிக் கொள்ளுங்கள்! நடுத்தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்'' என்பது திருக்குர்ஆன் வசனம். இதற்கு விளக்கம் கூறப் புகுந்த ஷியாக்களின் விரிவுரையாளர்கள் அய்யாஷ், ஹுவைஸீ ஆகிய இருவரும் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

(ஐந்து) தொழுகைகள் என்பது ரசூல் (ஸல்), அலீ (ரலி), ஃபாத்திமா (ரலி), ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி) ஆகிய ஐவராவர். நடுத் தொழுகை என்று விஷேசமாகக் குறிப்பிட்டது அலீ (ரலி) ஆவார்.  அய்யாஷி தப்ஸீர் பாகம் 1, பக்கம் 128, நூருஸ்ஸகைன் பாகம் 1, பக்கம் 238

ஷியாக்களின் மற்றொரு தப்ஸீரில், நபி (ஸல்) அவர்கள் ருகூவு, ஸஜ்தா செய்ய நான் பார்த்திருக்கிறேன். அப்போது அவர்கள், இறைவா! உன் அடியார் அலீயின் பொருட்டால் அவர்களின் கண்ணியத்தினால் என் உம்மத்தின் பாவிகளை மன்னிப்பாயாக! என்று துஆ செய்தார்கள் என இப்னு மஸ்ஊது (ரலி) கூறினார்களாம்.  அல் புர்ஹான் ஃபீ தப்ஸீரில் குர்ஆன் பாகம் 4, பக்கம் 226

"நான் மூஸா (அலை), கிழ்ரு (அலை) ஆகியோர் முன்னிலையில் இருந்திருந்தால் அவ்விருவரை விட நான் மிகவும் அறிந்தவன் என்று பிரகடனம் செய்திருப்பேன்'' என்று அலீ (ரலி) கூறினார்களாம். ஷியாக்களில் புகாரி இமாமைப் போல் மதிக்கப் படும் குலைனீ என்பவர் தமது நூலில் இவ்வாறு கூறுகின்றார்.  அல் உஸுலுல் காபி கிதாபுல் ஹுஜ்ஜத் பாகம் 1, பக்கம் 261

"உம்மைக் கொண்டே இறைவன் ஆதமை மன்னித்தான். உம்மைக் கொண்டே யூசுப் நபியை பாழுங்கிணற்றிலிருந்து காப்பாற்றினான். உம்மைக் கொண்டே அய்யூப் நபியைச் சோதித்தான்'' என்று அலீ (ரலி) அவர்களை நோக்கி ஸல்மான் பார்ஸீ (ரலி) கூறினார்களாம். அல் புர்ஹான் முன்னுரை பக்கம் 27

நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்று இறைவனை நெருங்கிய போது "முஹம்மதே! திரும்பிப் பாரும்'' என்றானாம் இறைவன். திரும்பிப் பார்த்தால் அங்கே அலீ (ரலி)  நிற்கின்றார்களாம்.  தஃப்ஸீருல் புர்ஹான் பாகம் 2, பக்கம் 404
 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner