கேள்வி : சப்தமில்லாமல் ஓதித் தொழும் லுஹர் அஸர் ஆகிய தொழுகைகளில் முதல் இரண்டு ரக் அத்களில் அல்ஹம்து சூராவுடன் துணை சூராவும் ஓத வேண்டுமா?
பதில் : இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகையில் மட்டும் அவருக்குப் பின்னால் தொழுபவர்கள் எதையும் ஓதக்கூடாது. மாறாக மௌனமாக இருந்து அவர் ஓதுவதை செவிதாழ்த்திக் கேட்க வேண்டும்.
லுஹர் அஸர் போன்ற தொழுகைகளில் இமாம் சப்தமிட்டு ஓத மாட்டார். இப்போது இமாமுக்குப் பின்னால் தொழுபவர்கள் கண்டிப்பாக சூரத்துல் ஃபாத்திஹாவை ஓத வேண்டும். ஏனென்றால் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதாதவருக்கு தொழுகை இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : திருக்குர்ஆனின் தோற்றுவாய் (எனும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகை கிடையாது. இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி (756)
சூரத்துல் ஃபாத்திஹா ஓதுவது மட்டுமே வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு ஒருவர் துணை சூராக்களை ஓத விரும்பினால் ஓதிக் கொள்ளலாம். அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் மற்றும் அஸ்ர் தொழுகையின் முதலிரண்டு ரக்அத்களிலும் உம்முல் கிதாப் ("குர்ஆனின் அன்னை' எனும் அல்ஃபாத்திஹா)அத்தியாயத்தையும் அதனுடன் மற்றோர் அத்தியாயத்தையும் ஓதுவார்கள். சில நேரங்களில் சில வசனங்களை எங்களுக்குக் கேட்குமளவுக்கு (குரலுயர்த்தி) ஓதுவார்கள். (இரண்டாவது ரக்அத்தை விட) முதல் ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுவார்கள். புகாரி (778)
துணை சூராக்களை ஓதுவது கட்டாயமில்லை. ஒருவர் இவற்றை ஓதாமல் சூரத்துல் ஃபாத்திஹாவை மட்டும் ஓதினாலும் தொழுகை நிறைவேறி விடும். துணை சூராக்களை ஓதுவது அவசியமானதாக இருந்தால் அதைக் கட்டாயம் ஓதுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு கூறவில்லை.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : எல்லாத் தொழுகைகüலும் (குர்ஆன் வசனங்கள்) ஓதப்பட வேண்டும். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கேட்கும் விதமாக ஓதியவற்றை உங்களுக்குக் கேட்கும் விதமாக (சப்தமாக) நாம் ஓதுகிறோம். நபி (ஸல்) அவர்கள் எங்கள் காதில் விழாதபடி மெதுவாக ஓதியதை நாமும் (சப்தமின்றி) மெதுவாக ஓதுகிறோம். (தொழுகையில்) குர்ஆனின் அன்னை(யான அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) விட அதிகமாக வேறெதையும் நீ ஓதாவிட்டாலும் (உன் தொழுகை) நிறைவேறிவிடும் ஆயினும், அதை விட அதிகமாக நீ ஓதுவதே சிறந்ததாகும். புகாரி (772)
- ஆன்லைன் பி.ஜே
0 comments:
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...