Monday, June 25, 2012

பாவியாக்கும் பராஅத் இரவு

சூரியன் பொழுதை அடந்ததும் ஒரே பரபரப்பு! முஸ்லிம் வீடுகளில் பெண்கள் விழித்த உடனே மறக்காமல் கணவனிடம், கறி வாங்கிட்டு வாங்க என்று கூறுவதும், பாத்திஹா ஓத முன் கூட்டியே ஹஜரத்திடம் சொல்லி வர ஆளனுப்புவதுமாக வீடு முழுவதும் ஒரே பரபரப்பாகக் காட்சியளிக்கும்.

இது மாத்திரமா? மாலை நேரத்தில் ரொட்டி சுட்டு, வீடு வீடாகக் கொடுப்பதற்காக மாடிக் கட்டடங்கள் போல் அடுக்கப்பட்டிருக்கும். சிலர் நேர்ச்சைக்காக கோழிக் குழம்பு வைப்பார்கள்.

மஃக்ரிப் தொழுகை முடிந்ததும் பள்ளியிலேயே சூரத்துல் பாத்திஹா அமோகமாக ஆரம்பிக்கப்பட்டு விடும். ஹஜரத்தைக் கூட்டிச் செல்வதற்காக குழந்தைகளின் வரிசை ஒரு பக்கம். சில வீட்டினர் தங்கள் ரொட்டிகளை பள்ளிவாசலுக்கே அனுப்பி வைப்பார்கள். வழமைக்கு மாற்றமாக பள்ளிவாசலில் இறைச்சிக் குழம்பு வாடை மூக்கைத் துளைக்கும்.

தொழுகை முடிந்ததும் ஹஜரத் அவர்கள் வெளி வராண்டாவில் (வராண்டா இல்லாத ஊர்களில் உள் பள்ளியிலும்) யாசீன் ஓதுவார். எத்தனை தடவை தெரியுமா? மூன்று தடவை ஓத வேண்டுமாம். எதற்காக?

முதல் யாசீன் பாவ மன்னிப்பிற்காகவும்

இரண்டாவது யாசீன் கப்ராளிகளுக்கு ஹதியாவாகவும், நீண்ட ஆயுளுக்காகவும்

மூன்றாவது யாசீன் பரகத் கிடைக்க வேண்டியும் ஆக மொத்தம் மூன்று யாஸீன் ஓதப்படும்.


அது மட்டுமல்ல! வழமை போல் 8 மணிக்கு நடைபெறும் இஷா தொழுகை அன்றிரவு 10மணிக்கு நடைபெறும். காரணம் ஹஜரத்திற்கு வந்த பாத்திஹா ஆர்டர்களை முடித்து விட்டு, இரவு 8 மணிக்கு ஜமாஅத் தொழுகைக்கு வந்து சேர முடியாத நிலை. அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட தொழுகையை விட யாரோ உருவாக்கிய பராஅத் இரவு சிறந்ததாகப் போய் விட்டது, ஏழு வருடம் படித்த மார்க்க அறிஞருக்கு?

அந்நாளில் விசேஷத் தொழுகையும் நடைபெறும். எத்தனை ரக்அத்கள் தெரியுமா? 100ரக்அத்களாம். வேறு சில ஊர்களில் இதை விட அதிக ரக்அத்கள் கொண்ட தொழுகையும் உண்டு.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் இதைச் செய்யும் சுன்னத் வல் ஜமாஅத்தினரைச் சார்ந்த உலமாக்கள் குர்ஆன், ஹதீஸை விட மத்ஹபுகளுக்குத் தான் முன்னுரிமை வழங்குவார்கள். அந்த மத்ஹப் புத்தகங்களில் இவர்கள் செய்கின்ற இச்செயலுக்கு முரணாகக் கூறப்பட்டுள்ளது தான் வேடிக்கை. பராஅத் இரவு வணக்கத்தை மத்ஹப் ஆதரிக்கிறதா?

ரஜப் மாதத்தில் முதல் ஜும்ஆ இரவில் மஃரிபுக்கும் இஷாவிற்கும் இடையில் 12 ரக்அத் கொண்ட தொழுகையும், ஷஅபான் மாதத்தில் நடுப்பகுதி 15ஆவது இரவில் தொழும் 100ரக்அத்கள் கொண்ட தொழுகையும் இழிவாக்கப்பட்ட அனாச்சாரங்களாகும். இதை செய்யக் கூடியவர் பாவியாவார். இதை (தொழுகையை) தடுப்பது பொறுப்பாளர்கள் மீது கட்டாயமாகும்.

(இச்செய்தி ஷாபி மத்ஹபின் இஆனதுல் தாலிபீன் என்ற புத்தகத்தில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் இருக்கின்றது) மக்களிடம் அறிமுகமான ஷஅபான் பிறை 15ல் (இவர்களால் உருவாக்கப்பட்ட 100 ரக்அத்கள்) தொழும் தொழுகையும் ஆஷுரா தினமன்று தொழும் தொழுகையும் மோசமான அனாச்சாரங்களாகும். இது சம்பந்தமாக வரும் அனைத்து ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவைகளாகும்.

(இச்செய்தி ஷாஃபி மத்ஹபின் பத்ஹுல் முயீனில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.) பராஅத் இரவன்று பள்ளி வாசல்களிலும் வீதிகளிலும் கடை வீதிகளிலும் மின் விளக்குகளை வைப்பது (பித்அத்) அனாச்சாரமாகும் என்று ஹனஃபி மத்ஹபின் பஹ்ருர் ராஹிக் என்ற புத்தகத்தில் 5ஆம் பாகத்தில் 232ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

மத்ஹப் புத்தகங்களைப் பின்பற்றும் அறிஞர்கள் இதை ஏன் பின்பற்றுவதில்லை? இவர்கள் குர்ஆன், ஹதீஸையும் பின்பற்றவில்லை; மத்ஹபுகளையும் பின்பற்றவில்லை. மறுமையில் என்ன செய்யப் போகிறார்களோ? அல்லாஹ் இவர்களைக் காப்பாற்றுவானாக!

பராஅத் அன்று நோன்பு நோற்கலாமா?

ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராமாகும். ஏனெனில் ஷஅபான் பாதியாகி விட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ஆதாரப்பூர்வமாக இடம் பெற்றுள்ளது. (நூல்: ஷாஃபி மத்ஹபின் இயானதுத் தாலிபீன், பாகம்: 2, பக்கம்: 273)

*ஏன் இந்த சிறப்பு?*

அன்றைய தினம் இந்த அளவுக்கு என்ன தான் சிறப்பு என்கிறீர்களா? அன்று தான் ஷஅபான் பிறை 15ல் வரும் பராஅத் இரவாம். அந்த இரவைப் புனிதமிக்க இரவாக மாற்ற புதுப் புது பாத்திஹாக்களை உருவாக்கி, வித்தியாசமான முறையில் அலங்கரித்து வடிமைத்துள்ளார்கள் நவீன கால பராஅத் அறிஞர்கள்.

Wednesday, June 20, 2012

தர்ஹா வழிபாடு - PJ - தொடர் 2

மக்கத்துக் காபிர்களின் நம்பிக்கையும் இன்றைய முஸ்லிம்களின் நம்பிக்கையும்....

இன்றைக்கு தமிழக முஸ்லிம்களில் பலர் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டு சமாதிகளிலும் வழிபாடு நடத்துகிறார்களே இது போன்று தான் மக்கத்துக் காபிர்களின் கடவுள் நம்பிக்கை இருந்தது.

அல்லாஹ்வைப் பற்றி இவ்வாறு நம்புவது மட்டும் போதும் என்றிருந்தால் அவர்களுக்கு ஒரு நபியை அல்லாஹ் அனுப்பி இருக்கத் தேவையே இல்லை. ஒரு வகையில் பார்த்தால் இன்றைய தமிழக முஸ்லிம்கள் பலரின் நம்பிக்கையை விட மக்கத்துக் காபிர்களின் நம்பிக்கை சற்று மேலானதாக இருந்தது என்று கூறலாம்.

ஏனெனில் இன்றைய தமிழக முஸ்லிம்களில் பலர் கடுமையான துன்பம் நேரிடும் போதும், பெரிய ஆபத்தைச் சந்திக்கும் போதும் முஹ்யித்தீனே என்று அழைப்பதைக் காண்கிறோம்.

ஆனால் மக்கத்துக் காபிர்கள் சிறிய துன்பம் ஏற்படும் போதும், சிறிய அளவிலான கோரிக்கையின் போதும் மட்டுமே அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்தனை செய்து வந்தனர்.

மிகப் பெரிய ஆபத்தின் போது அவர்கள் அல்லாஹ்வைத் தான் அழைப்பார்கள். குட்டித் தெய்வங்களையும், மகான்களையும் மறந்து விடுவார்கள்.

இதைப் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

'இதிலிருந்து அவன் எங்களைக் காப்பாற்றினால் நன்றி செலுத்துவோராக இருப்போம்' என்று பணிவாகவும், இரகசியமாகவும் அவனிடம் பிரார்த்தனை செய்யும் போது 'நிலம் மற்றும் கடலின் இருள்களிலிருந்து உங்களைக் காப்பாற்றுபவன் யார்?' என்று கேட்பீராக! 'இதிலிருந்தும், ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்' என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 6:63, 64)
'உங்களிடம் அல்லாஹ்வின் வேதனை வந்தால் அல்லது அந்த நேரம் வந்து விட்டால் அல்லாஹ் அல்லாதவர்களையா அழைக்கிறீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் பதில் சொல்லுங்கள்!' என்று கேட்பீராக! மாறாக அவனையே அழைக்கிறீர்கள். நீங்கள் இணை கற்பித்தவர்களை மறந்து விடுகிறீர்கள். அவன் நாடினால் அவனை எதற்காக அழைத்தீர்களோ அதை நீக்கி விடுகிறான். (அல்குர்ஆன் 6:40, 41)

Monday, June 18, 2012

இந்து மத சகோதரரின் ஜாதியைப் பற்றி மனக்குமுறல்கள்

 

சாதியால் பாதிக்கப்பட்ட இந்து மத சகோதரரின் மனக் குமுறல்கள்

இஸ்லாத்தில் ஜாதி இல்லை தானே...

Wednesday, June 13, 2012

மிஃராஜும், தவறான நம்பிக்கைகளும்

மிஃராஜ் என்பது நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதமாகும். வேறு எந்த மனிதருக்கும், ஏன் வேறு எந்த நபிக்கும் கூட வழங்கப்படாத மாபெரும் அற்புதமாக இந்த விண்ணுலகப் பயணம் அமைந்துள்ளது.

மிஃராஜ் ஓர் அற்புதம்

மஸ்ஜிதுல் ஹராமிருந்து சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை அழைத்துச் சென்றவன் தூயவன் அவன் செவியுறுபவன் பார்ப்பவன். (17:1)

ஓர் இரவில் மஸ்ஜிதுல் ஹராம் என்ற மக்காவிருந்து ஜெருஸலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை அழைத்துச் சென்ற செய்தியை இவ்வசனத்தில் அல்லாஹ் கூறிக் காட்டுகிறான்.

ஒரேயொரு இரவில் இவ்வளவு பெரிய தொலைவைக் கடந்து செல்வது என்பது சாத்தியமற்ற செயல் என்று பலர் நினைத்தாலும் ரப்புல் ஆலமீனாகிய இறைவனுக்கு இது சாத்தியமானதே!

அழகிய தோற்றமுடைய வமைமிக்கவர் (ஜிப்ரில்) அதைக் கற்றுக் கொடுக்கிறார். அவர் (தெளிவான) அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார். பின்னர் இறங்கி நெருங்கினார். அது வில்ன் இரு முனையளவு அல்லது அதை விட நெருக்கமாக இருந்நது. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அவன் அறிவித்தான். அவர் பார்த்ததில் அவர் உள்ளம் பொய்யுரைக்கவில்லை. அவர் கண்டது பற்றி அவரிடத்தில் தர்க்கம் செய்கிறீர்களா?. (53:5-12)

ஜிப்ரில் என்னும் வானவரை நபி (ஸல்) அவர்கள் முதன் முதல் சந்தித்ததை இறைவன் மேற்கூறிய வசனங்களில் கூறுகின்றான். இந்தச் சந்திப்பு நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதல் வஹீ அறிவிக்கப்பட்ட போது நடந்தது.

இந்த வசனங்களைத் தொடர்ந்து வரும் வசனங்களில் ஜிப்ரீலை மற்றொரு முறை நபி (ஸல்) அவர்கள் சந்தித்ததாகக் கூறுகிறான்.

ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார். அங்கே தான் சொர்க்கம் எனும் தங்குமிடம் உள்ளது. அந்த இலந்தை மரத்தை மூட வேண்டியது மூடிய போது, அவரது பார்வை திசை மாறவில்லை; கடக்கவுமில்லை. தமது இறைவனின் பெரும் சான்றுகளை அவர் கண்டார். (53:13-18)

இந்தச் சந்திப்பு ஸித்ரத்துல் முன்தஹா என்னும் இடத்தில் நடந்ததாகவும் அந்த இடத்தில் தான் சுவர்க்கம் இருப்பதாகவும் கூறுகிறான். நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் என்னும் விண்வெளிப் பயணம் சென்றதைத் தான் இவ்வசனங்கள் கூறுகின்றன. இல்லையெனில் வானுலகில் உள்ள ஸித்ரத்துல் முன்தஹாவுக்கு அருகில் நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலைப் பார்த்திருக்க முடியாது. எனவே இதுவும் மிஃராஜ் பற்றியே கூறுகிறது.

(முஹம்மதே) உமக்கு நாம் காட்டிய காட்சியை குர்ஆனில் மனிதர்களுக்கு சோதனையாகவே ஆக்கியுள்ளோம். (17:60)

Saturday, June 9, 2012

தர்ஹா வழிபாடு - PJ - தொடர் 1

இஸ்லாத்தின் அடிப்படை

'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை' என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இஸ்லாத்தின் கொள்கை இது தான் என்பதை முஸ்லிமல்லாதவர்களும் கூட அறிந்து வைத்துள்ளனர்.

ஆனாலும் தமிழகத்தில் வாழும் கனிசமான முஸ்லிம்கள் இக்கொள்கையைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களாக உள்ளனர்.

'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை' என்பதில் இரண்டு செய்திகள் அடங்கியுள்ளன.

1. அல்லாஹ்வை வணங்க வேண்டும்.

2. அல்லாஹ்வைத் தவிர எவரையும் வணங்கக் கூடாது.


இதில் முதலாவது செய்தியை ஓரளவு ஏற்று நடக்கும் முஸ்லிம்கள் இரண்டாவது செய்தியை அறியாதவர்களாகவுள்ளனர். இதன் காரணமாகத் தான் ஒரு பக்கம் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டு இன்னொரு பக்கம் இறந்தவர்களையும், அவர்களை அடக்கம் செய்துள்ள சமாதிகளையும், மகான்கள் என்று உலா வரும் போலிகளையும் வணங்கி வருகின்றனர்.

இவ்விரண்டு செய்திகளில் இரண்டாவது தான் முக்கியமானதாகும். இதைச் சொல்வதற்காகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டனர்.

அல்லாஹ்வை வணங்குங்கள் என்று சொல்லித் தருவதற்காகவோ, அல்லாஹ்வின் பண்புகளைச் சொல்லிக் கொடுப்பதற்காகவோ மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்படவில்லை. ஏனெனில் அம்மக்கள் அல்லாஹ்வை நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள். அல்லாஹ்வை வணங்குவதிலும் அவர்களுக்கு ஆட்சேபனை ஏதும் இருந்ததில்லை.

அல்லாஹ்வைத் தவிர எவரையும், எதனையும் வணங்கக் கூடாது என்பது தான் அவர்களால் எதிர்க்கப்பட்டது.

இது கற்பனை அல்ல. தக்க சான்றுகள் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

வரலாற்றுச் சான்று

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது தந்தையின் பெயர் அப்துல்லாஹ் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அல்லாஹ்வின் அடிமை என்பது இதன் பொருள்.

Wednesday, June 6, 2012

வரதட்சணைக்காக உறவினர் திருமணத்தை புறக்கணிக்கலாமா?

 

சொந்தங்களை அரவணைக்க வேண்டும் என்று சொல்லும் இஸ்லாமிய மார்க்கத்தில் மார்க்கத்திற்கு முரணான காரியம் நடக்கும் சொந்தங்களை அரவணைத்து திருமணத்தில் கலந்து கொள்ளலாமா?

இஸ்லாத்தில் இதன் நிலைபாடு என்ன?
 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner