Sunday, October 25, 2015

நல்லதை அறிய அறிவு மட்டும் போதுமா?

கேள்வி : மனிதனின் அறிவு நல்லதை மட்டும் ஏவுமா, தீயதையும் ஏவுமா? காரல் மார்க்ஸ் வாதிகள் 'மனிதனின் அறிவாற்றல் தான் எல்லாமே; மற்ற எந்த நம்பிக்கையும் வீண்' என்கிறார்கள். கல்லூரி மாணவிகள் இதைப் பற்றி அறிய பெரிதும் ஆவல் கொள்கிறார்கள். விளக்கவும்! - -ஜுலைஹா புதல்வி, தருமாபுரம், காரைக்கால்

பதில் பி.ஜே : மனிதனின் அறிவு மகத்தானது என்பதில் ஐயமில்லை. பல விஷயங்களை அறிவு சரியாகவே கண்டு பிடித்து விடும். ஆயினும் சில விஷயங்களில் அறிவு தவறிழைத்து விடுவதும் உண்டு.

பல விஷயங்களை அறிவு சரியாகக் கண்டு பிடித்து விட்டாலும் அறிவின் கண்டு பிடிப்பைக் காலில் போட்டு மிதித்து விட்டு வேறு வழியில் மனிதனை இழுத்துச் செல்லும் இன்னொரு ஆற்றல் மனிதனிடம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பது நன்மையா? எனக் கேட்டால் அதில் உள்ள கேடுகளை நம்மை விட விரிவாக அவர் விளக்குவார். அவரது அறிவு புகை பிடிப்பதைத் தவறு என்று தீர்ப்பளித்த பிறகும் ஏன் புகை பிடிக்கிறார்? தவறு எனக் கண்டு பிடித்தவுடன் அதை அந்த மனிதனால் ஏன் விட முடியவில்லை? எனச் சிந்தித்தால் அறிவுக்குப் பெரிய ஆதிக்கம் ஏதுமில்லை என அறியலாம்.

திருடுபவன், மது அருந்துபவன், கொலை செய்பவன் என பல்வேறு தீமைகளில் மூழ்கியிருப்போர்க்கு அவை தீமைகள் என்று அவர்களின் அறிவுகள் உணர்த்துகின்றன. உணர்த்துவதைத் தவிர அவர்களது அறிவால் வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை. செவிடன் காதில் ஊதிய சங்காக இதை மனிதன் எடுத்துக் கொள்கிறான்.

சர்வாதிகார நாட்டின் அதிபருக்கும், ஒரு பள்ளிக் கூட வாத்தியாருக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறதோ அதை விட அதிக வித்தியாசம் மனிதனின் அறிவுக்கும் அவனை இயக்கும் மற்றொரு சக்திக்கும் இருக்கிறது.

பள்ளிக்கூட வாத்தியார் நல்லது கெட்டது இது எனச் சொல்லித் தருவார். அந்த வழியில் மாணவனை நடத்திச் செல்ல அவருக்கு ஆற்றல் இல்லை. ஒரு சர்வாதிகாரி ஒரு உத்தரவின் மூலம் மனிதனை வழி நடத்திச் செல்வான்.

இந்த வகையில் அறிவு என்பது எவ்வித அதிகாரமும் செலுத்த முடியாத பள்ளிக் கூட வாத்தியார் போன்ற பரிதாப நிலையில் உள்ளது.

எத்தனையோ விஷயங்கள் நன்மையானவை என்று மனிதனின் அறிவு கூறுகிறது. ஆயினும் அவற்றை அவன் செய்வதில்லை. அறிவு மூலம் நன்மையைக் கண்டு பிடிக்க முடிந்ததே தவிர அவ்வழியில் மனிதனை வழி நடத்த முடியவில்லை.

காரல் மார்க்ஸுக்கு இது தெரியா விட்டாலும் நம் அனைவருக்கும் இது கண் கூடாகத் தெரிகிறது. நாமே கூட நமது அறிவை இப்படித் தான் நடத்துகிறோம்.

அறிவு சொல்லும் பாதையில் மனிதனை நடத்திச் செல்ல அவனை விட வலிமையான ஒரு சக்தியை நம்ப வேண்டும். தவறு, தீமை எனத் தெரிந்தவற்றை நாம் செய்தால் நம்மை ஒருவன் தண்டிப்பான் என்ற நம்பிக்கை மட்டுமே அறிவுக்கு மரியாதையைப் பெற்றுத் தரும்.

இது முதல் விஷயம். எல்லா விஷயத்திலும் நன்மையையும், தீமையையும் அறிவு கண்டு பிடித்து விடுகிறதா என்றால் இல்லை என்று அடித்துச் சொல்லலாம்.

இரண்டு அறிவாளிகள் ஒரு விஷயத்தை தீமை என்று முடிவு செய்வதில் மாறுபட்ட கருத்துக் கொள்கின்றனர். இவர்களில் ஏதோ ஒருவரது அறிவு தவறான முடிவை அவருக்குக் காட்டியுள்ளது. புதிய பொருளாதாரக் கொள்கை நன்மை பயப்பது என வாதிடுவோரும், தீமை பயப்பது என வாதிடுவோரும் முட்டாள்கள் அல்லர். மாபெரும் மேதைகள் தான் முரண் பட்ட இவ்விரண்டு வாதங்களையும் முன் வைக்கின்றனர்.

இவ்விரண்டும் ஒரு சேர உண்மையாக இருக்க முடியாது. ஏதோ ஒன்று தான் இதில் உண்மையாக இருக்க முடியும். அப்படியானால் ஒரு தரப்புடைய அத்தனை அறிவாளிகளின் அறிவும் அவர்களுக்குச் சரியான முடிவைக் காட்டவில்லை என்பது தெளிவு.

வட்டி ஒரு வன்கொடுமை என வாதிடும் காரல் மார்க்ஸும், வட்டி ஒரு வணிகமே எனக் கூறுவோரும் அறிவாளிகள் தாம். முரண்பட்ட இவ்விரண்டில் எது சரியானது என வைத்துக் கொண்டாலும் ஒரு சாரரின் அறிவு சரியானதைக் கண்டு பிடிக்கவில்லை என்பது உறுதி.

அறிஞர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் உடைய விஷயங்கள் ஆயிரமாயிரம் உள்ளன. இதிலிருந்து மனித அறிவின் லட்சணத்தை அறிந்து கொள்ளலாம்.

அறிவாற்றல் தான் எல்லாமே என்பது ஒரு மாயை! மார்க்ஸ் வழி வந்த ரஷ்யாவே மார்க்ஸை ஏன் ஓரம் கட்டியது? மார்க்ஸுக்குச் சரி எனப்பட்டது அவர் வழி வந்தவர்களுக்கே தவறு எனப்பட்டது ஏன்? என்றெல்லாம் சிந்தித்தால் அறிவு மமதையிருந்து விடுபட்டு, ஆன்மீக நெறியின் மூலம் மனிதன் தன்னை பக்குவப்படுத்துவதன் அவசியத்தை உணரலாம்.

பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து...

Wednesday, October 21, 2015

ஆசூரா நோன்பு

கேள்வி - ஆசூரா நோன்புபற்றி உங்கள் கருத்து என்ன?   - ரிஜ்வியா 

பதில் பி.ஜே : நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பு நோற்பதை நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள்.

ரமலான் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டு விடட்டும். என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 1592

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அறியாமைக் கால (குறைஷி) மக்கள் ஆஷூராவுடைய நாளன்று நோன்பு நோற்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் அந்நோன்பை நோற்றார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள், நிச்சயமாக ஆஷூரா நாள் அல்லாஹ்வுடைய நாட்களில் உள்ள நாளாகும். எனவே விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். விரும்பியவர் விட்டு விடலாம் எனக் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 1901

மேற்கண்ட ஹதீஸ்கள் ஆஷூரா நோன்பு நோற்பது சிறப்பிற்குரியதும் சுன்னத்தானதும் ஆகும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

ஆஷூரா நோன்பு ஏன்?


ஆஷூரா நோன்பு எதற்காக நோற்கிறோம் என்பதைக் கூட இன்றைக்கு அதிகமான மக்கள் அறிந்திருக்கவில்லை. எதற்காக இந்நோன்பு என்பதைப் பற்றி ஹதீஸ்களில் தெளிவாகவே வந்துள்ளது.

Tuesday, October 20, 2015

தடை செய்யப்பட்டவைகளை விற்பது கூடுமா?

கேள்வி -  இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது கூடுமா? கூடாது என்றால் அதை மாற்று மதச் சகோதரர்களுக்கு விற்கலாமா? தங்க மோதிரம், பட்டுச் சட்டை போன்றவற்றை ஆண்கள் அணியத் தடை உள்ளது. இவற்றை விற்கலாமா?  - எஸ்.எம். அப்துல் ஹமீது வி. களத்தூர்

பி.ஜே பதில் - தடை செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவது எவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதோ அது போல் அதை விற்பனை செய்வதும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது. 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது, 'நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்!' என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகின்றது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள்!' எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'கூடாது! அது ஹராம்!' எனக் கூறினார்கள். மேலும் தொடர்ந்து, 'அல்லாஹ் யூதர்களைத் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கிய போது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தைச் சாப்பிட்டார்கள்!' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: புகாரி 2236 

ஒரு மனிதர் மதுவை விற்பதாக அறிந்த உமர் (ரலி), 'அவரை அல்லாஹ் சபிப்பானாக! யூதர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்ட போது, அதை உருக்கி அவர்கள் விற்றதால் அல்லாஹ் அவர்களை அழிப்பானாக' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை அவர்கள் அறியவில்லையா?' என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 2223

இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் எந்தெந்த பொருட்கள் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளனவோ அவற்றை விற்பனை செய்வதும் கூடாது அறியலாம்.

தடை செய்யப்பட்டவைகளைப் பிற மதத்தவர்களுக்கு விற்பதற்கு அனுமதி இல்லை.

தடை செய்யப்பட்டவை இரு வகைகளில் உள்ளன. நூறு சதவிகிதம் முற்றிலுமாக தடுக்கப்பட்டவை ஒரு வகை. இது போல் தடை செய்யப்பட்டவைகளை முஸ்லிம்களுக்கும் பிற மதத்தவர்களுக்கும் விற்பதற்கும் அன்பளிப்பு செய்வதற்கும் அனுமதி இல்லை.
 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner