இஸ்லாமிய மார்க்கம் என்பது இவ்வுலக மக்களுக்குறிய ஒரு முழுமையான வாழ்க்கைத் திட்டமாகும். மனிதனின் அனைத்து செயல்பாடுகளிலும் நுழைந்து தெளிவான தீர்வை சொல்லும் மிகச் சிறப்பான வழிகாட்டியாகும். இம்மார்க்கத்தில் எந்தவொரு செயல்பாட்டுக்கும் வழிகாட்டுதல் இல்லாமல் இல்லை.
இப்படியிருக்கையில் நமது சமுதாயத்தினர் மத்தியில் திருமணம் பற்றிய சரியான விழிப்புனர்வோ, இஸ்லாத்தின் உண்மையான சட்ட திட்டங்களோ முறையாக சொல்லிக் கொடுக்கப்படாததினால் அல்லது அவர்கள் முறையாக கற்றுக் கொள்ளாததினால் வாழ்கைத் தேர்வு முறையில் பல தவறுகளை செய்கிறார்கள்.
நமது காலத்தில் பெரும்பாலும் எல்லா இடத்திலும் திருமணங்கள் பல நிச்சயிக்கப்பட்டு வருடக் கணக்குகளை அடிப்படையாகக் கொண்டுதான் நடத்தப்படுகின்றன. ஆனால் இது பற்றிய இஸ்லாமிய நிலைபாடு மிகத் தெளிவானதாகும். அதைப் பற்றியே கட்டுரை ஆராய்கிறது.
திருமணம் - தவிர்க்கக் கூடாத நடை முறை.
உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் (24 : 32))
அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : நானும் அல்கமா மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) சொன்னார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் "இளைஞர்களே! திருமணம் செய்துகொள்ள சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்'' என்று சொன்னார்கள். (நூல் புகாரி (5066))
மேலும் திருணம் செய்துகொள்வது நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும். தனக்கு திருமணம் செய்துகொள்ள சக்தியிருந்தும் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் அவர் தன்னைச் சார்ந்தவர் இல்லை என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள் : நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), "முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், "(இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்'' என்றார். இன்னொருவர், "நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்'' என்று கூறினார். மூன்றாம் நபர் "நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன்'' என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, "இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று சொன்னார்கள். (நூல் - புகாரி 5063)
உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம்.(அல்குர்ஆன் (13 : 38))
மேற்கண்ட நபி மொழிகளும், திருமறை வசனங்களும் திருமணம் என்பது யாரும் தவிர்க்க முடியாத, தவிர்க்கக் கூடாத ஒரு செயல்பாடாக இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளதை தெளிவாக உணர்த்துகின்றன.
நிச்சயிக்கப்படும் திருமணங்களும், கொச்சைப்படுத்தப்படும் இஸ்லாமிய குடும்பவியலும்.
இன்று நமக்கு மத்தியில் நடத்தப்படுகின்ற பல திருமணங்கள் வருடக் கணக்கை அடிப்படையாகக் கொண்டு நிச்சயம் செய்யப்படுகிறது.
ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது அல்லது மாப்பிள்ளைக்கு பெண் பார்க்கும் போது திருமணத்திற்கான தேதியை ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் சில இடங்களில் ஐந்து வருடம் வரை தள்ளி வைத்து விடுவார்கள் கேட்டால் நாங்கள் பேசி வைத்திருக்கிறோம் என்பார்கள்.
திருமணத்திற்கு பிறகு தான் கணவன், மணைவி பந்தம்.
ஆண் பெண்ணை மணமுடித்த பிறகு தான் அவள் அவனுக்கு சொந்தமாகிறாள். திருமணம் தான் இவர்கள் இருவரையும் இணைக்கும் பந்தமாக உள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் : ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இப்போது எனக்கு (மணப்) பெண் தேவையில்லை' எனக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "உம்மிடம் (மஹ்ர் செலுத்த) என்ன உள்ளது?'' என்று கேட்டார்கள். அவர், "என்னிடம் எதுவுமில்லை'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "இரும்பாலான மோதிரத்தையேனும் இவளுக்கு (மஹ்ராகக்) கொடு!'' என்று சொன்னார்கள். அவர், "என்னிடம் ஏதுமில்லை'' என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், "சரி, குர்ஆனில் ஏதேனும் உம்மிடம் (மனனமாய்) உள்ளதா?'' என்று கேட்டார்கள். அவர், "இன்னது இன்னது (மனனமாய்) உள்ளது'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு உரியவளாக்கி விட்டேன்'' என்று சொன்னார்கள். (புகாரி- 5141)
எனவே திருமணத்துக்குப் பிறகு தான் பெண் ஆணுக்கு உரியவளாகிறாள். மேலும் ஆணுடைய காதலுக்கும் அவனுடைய கொஞ்சலுக்கும் உரியவள் மனைவி தான் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.
நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 30 : 21)
எனவே நாம் பெண் பேசியிருந்தாலும் அப்பெண்ணை மணந்து கொள்ளாதவரை அவள் நமக்கு அந்நியப் பெண் தான். ஒரு அந்நியப் பெண்ணிடம் நாம் எந்த ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமோ அதே போன்று தான் நமக்கு பேசி முடிக்கப்பட்ட பெண்ணிடமும் நடந்து கொள்ள வேண்டும்.
ஆண், பெண் தனிமை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதே!
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: "ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம்; (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போது தவிர; ஒரு பெண் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் (தமது) சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். (ஹதீஸின் சுருக்கம்) (முஸ்லிம் 2611)
தனிமை என்பது இருவரும் நேரடியாகச் சந்திப்பதை மட்டும் குறிக்காது. தொலைபேசியில் இருவர் மட்டும் உரையாடினாலும் அதுவும் தனிமை தான். ஏனெனில் நேரில் தனியாக இருக்கும் போது பேசும் எல்லாப் பேசுக்களையும் தொலை பேசி உரையாடலும் பேச வழிவகுக்கும். எனவே தன்னுடன் மற்றொருவரை வைத்துக் கொண்டே தவிர எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் பேசக் கூடாது. திருமணம் செய்யத் தடை செய்யப்பட்ட உறவினரை அருகில் வைத்துக் கொள்ளச் சொல்வதற்குக் காரணம் எந்த வகையிலும் வரம்பு மீறிவிடக் கூடாது என்பதற்காகத் தான்.
இந்த வரம்பை மீறி சேர்ந்து ஊர் சுற்றுவது தனிமையில் இருப்பது, கணவன் மனைவிக்கிடையே மட்டும் பேசத்தக்கவைகளைப் பேசிக் கொள்வதற்கு எந்த விதமான அனுமதியும் இல்லை.
இதனால் பாரதூரமான் விளைவுகள் ஏற்படுவதையும் இளைஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
திரும்ணத்துக்கு முன்பே எல்லை மீறிவிட்டால் ஆண்களுக்கு இயல்பாகவே குடும்ப வாழ்வில் ஈடுபாடு குறைந்து விடும். இதனால் திருமணம் நின்று போய்விடும். அப்போது பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் உடலால் நெருங்காமல் தனியாக இருந்து பின்னர் திருமணம் தடை பட்டாலும் அதுவும் பெண்களைப் பாதிக்கும். ஏனெனில் எல்லாம் நடந்திருக்கும் என்று தான் மற்றவர்கள் நினைப்பார்கள்.
அல்லது மனதார விரும்பிய பெண் ஒழுக்கம் கெட்டவள் என்று தெரிய வரும் போது அல்லது சந்தேகம் ஏற்படும் போது அவன் அப்பெண்ணை மறுக்கலாம்.
தனிமையில் இருப்பதை இஸ்லாம் தடை செய்யக் காரணம், இருவரும் தனிமையில் இருக்கும் போது ஷைத்தானிய செயல்களில் ஈடுபட்டு விடக்கூடும் என்பதற்காகத் தான். திருமணம் பேசிவைக்கப்பட்ட ஒரு பெண்ணுடன் ஒருவர் தொலைபேசியில் தனிமையில் உரையாடும் போது அதற்கான வாசல்கள் இன்னும் அதிகமாகத் திறந்து விடப்படுகின்றன என்பதையும் நாம் கூடுதலாக கவனத்தில் கொள்ள வேண்டும்
தீய பேச்சுக்களை பேசுவது நாவு செய்யும் விபச்சாரம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும்கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் : புகாரி 6612)
நிச்சயம் செய்யப்பட்ட எத்தனையோ திருமணங்கள் பல காரணங்களால் இடையில் முறிந்து விடுகின்றது. இந்நேரங்களில் ஆணையும் பெண்ணையும் பிரித்து வைப்பதற்கு தலாக் குலாஃ போன்ற மணவிலக்குச் சட்டங்களை நாம் இங்கே கடைபிடிப்பதில்லை. இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம்.
அதேப் போல் ஒரு பெண்ணுக்கு பேசப்பட்ட ஆண் திருமணத்துக்கு முன்பு இறந்துவிட்டால் இப்போது அப்பெண் இத்தா இருக்க வேண்டுமா என்று கேட்டால் தேவையில்லை என்று கூறுவோம். இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம்.
எனவே இந்த பிரச்சனைகளில் எல்லாம் இவ்விருவருக்கும் இடையே கணவன் மனைவி உறவு இருக்கின்றதா? என நாம் பார்ப்பது போல தனக்குப் பேசப்பட்ட பெண்ணிடம் நெருங்கி பழகுவதற்கும் அவளிடம் ஃபோனில் கொஞ்சி குலாவுவதற்கும் இந்த உறவு உள்ளதா? என்று பார்க்க வேண்டும்.
நிச்சயிக்கப்பட்டவனுடன் எல்லை மீறி பழகி இருந்த நிலையில் திருமணம் தடைப்பட்டால் அந்தப் பெண்ணின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும். திருமணத்துக்கு முன்பே இவள் எப்படி நடந்து கொண்டால் என்ற விமர்சனம் எழும். இதனால் அவளுக்கு வேறு திருமணம் நடைபெறுவது பாதிக்கப்படும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஆண் தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடம் மணிக்கணக்கில் பேசுவதை இன்றைய சமுதாயம் தவறாக நினைப்பதில்லை. இதை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்வதில்லை.
சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் ஒரு அந்நியப் பெண்ணிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என ஆண்களுக்கு இஸ்லாம் வழிகாட்டி இருக்கின்றதோ அதே ஒழுங்கு முறைகளை தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடமும் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் இது நடை முறைப்படுத்தப்படுவதில்லை.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண் பேசுதல் என்றால் அதன் பொருள் திருமணத்துக்கு பெண்ணிடம் அனுமதி வேண்டுதல் என்பது தான் அர்த்தம். பெண் அனுமதி கொடுத்து விட்டால் பெண் பேசச் சென்ற அதே இடத்தில் கூட சாட்சிகளுடன் பெண்ணுடைய பொறுப்பாளர் முன்னிலையில் திருமணத்தை முடித்து விடலாம். இதைத் தான் நாம் முன்பு சுட்டிக் காட்டிய ஹதீஸ் கூறுகிறது.
பெண் பேசி வைக்கிறோம் என்ற பெயரில் நடக்கும் அனாச்சாரங்கள் குறைய வேண்டுமானால் நபியவர்களின் வழிகாட்டுதலைப் போல் பெண் பேசினால் திருமணத்தை செய்து விடுவதுதான் சிறந்த நடை முறையாகும். காலம் தாழ்த்தும் போது நாம் ஏற்கனவே சொன்னதைப் போன்ற அனைத்துப் பிரச்சினைகளும் ஏற்படுவது மட்டுமன்றி பெண் பிள்ளையும் அவள் தரப்பும் கடுமையான முறையில் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதைச் சமுதாயம் புரிந்து கொண்டால் பெண் பேசிவிட்டு ஆணையும் பெண்ணையும் நீண்ட காலம் பிரித்து வைக்கும் நிலை ஏற்படாது.
இறுதியாக…………………
அன்பின் இஸ்லாமிய சொந்தங்களே! இஸ்லாம் காட்டிய வழியில் நமது திருமணங்களை உடனுக்குடன் நாம் அமைத்துக் கொண்டால் நமது வாழ்வில் ஏற்படும் பல சிக்கள்களுக்கும் தீர்வாக அது அமைந்து விடும் என்பதை மனதில் நிறுத்தி இஸ்லாமியக் குடும்பவியலைச் சரியான முறையில் புரிந்து வாழ்ந்து இம்மை மறுமையில் வெற்றி பெருவோமாக!
0 comments:
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...