Sunday, July 26, 2015

மழலையரைக் காக்க மதரஸாக்கள் நடத்துவோம்!

ஏகத்துவக் கொள்கை ஒவ்வொரு ஊரிலும் துளிர் விட்டு வளர்வதற்காக உயிர், உடல், பொருள் மூலமாக பெருந்தியாகங்கள் பெருமளவுக்கு முதலீடாகவும், மூலதனமாகவும் செலுத்தப்பட்டிருக்கின்றன.

அதன் பின்னர்தான் ஏகத்துவம் பெரிய மரமாக வளர்ந்து நின்று பலனைத் தருகின்றது. மரம் தான் வளர்ந்து விட்டதே! அத்துடன் நமது வேலை முடிந்து விட்டது என்று ஓர் ஏகத்துவவாதி எண்ணினால் அவர் நிச்சயமாக ஏமாந்து விடுகின்றார். தான் ஈடுபட்ட தியாகத் திருப்பணியில் ஈடுகட்ட முடியாத நஷ்டவாளியாகி விடுகின்றார்.

பூச்சிகள், புழுக்கள் போன்றவை சிறு செடி கொடிகளைத் தான் தாக்கும்; பெரும் மரங்களைத் தாக்காது என்று நினைத்துவிடக் கூடாது. படர்ந்து, விரிந்து நிற்கின்ற பலமான மரத்தைக் கூட வைரஸ் தாக்கி பட்ட மரமாக்கி விட்டிருக்கின்றது.

தவ்ஹீது பாதை என்பது நேரிய, நெடிய பாதையாகும். அந்தப் பாதையின் இறுதி இலக்கை அடைகின்ற வரை ஷைத்தான் ஒரு தவ்ஹீதுவாதியைச் சுற்றிலும் முற்றுகையிட்டு நிற்பான். இதைக் கீழ்க்காணும் வசனத்தின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

"நீ என்னை வழிகெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்'' என்று கூறினான். "பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிக மானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்'' (என்றும் கூறினான்).

அல்குர்ஆன் 7:16, 17

ஏகத்துவப் பிரச்சாரத்தைத் துவங்கிய மாத்திரத்தில், தவ்ஹீது மக்களை வழிமறித்துக் கொண்டு செல்வதற்காக ஜிஹாத் என்ற பெயரில் விடியல் வெள்ளியினர் உள்ளே நுழைந்து வழிகெடுத்தனர். ஜிஹாத் செய்ய வேண்டும் என்ற சிந்தனையை விதைத்தனர். இதற்குப் பதிலடி கொடுத்து அந்த வைரஸ்களிடமிருந்து ஜமாஅத்தைக் காப்பாற்றினோம். இன்றும் அந்த விஷக்கிருமிகள் பிரண்ட், பேக் என பல்வேறு பெயர்களில் வந்து தாக்கிக் கொண்டு தான் இருக்கின்றன. அவற்றை எதிர்த்து நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.

அஹ்லுல் குர்ஆன் என்ற விஷக் கூட்டம் முளைத்து, குர்ஆன் மட்டும் போதும், ஹதீஸ் தேவையில்லை என்று வாதிட்டனர். அந்த வைரஸ்களை விட்டும் அல்லாஹ்வின் அருளால் மக்களை மீட்டெடுத்தோம்.

சர்வதேசப் பிறை என்ற ஜோதிடக் கணிப்பு கோஷ்டியினர் மூலம் ஒரு வைரஸ் தாக்குதல் வந்தது. அல்லாஹ்வின் கிருபையால் அதை விட்டும் இந்த ஜமாஅத்தைக் காப்பாற்றினோம். அதுவரை ஜாக் இயக்கத்துடன் ஒன்றுபட்டிருந்த நம்மை, அதை விட்டும் பிரிக்கும் மையப்புள்ளியாக இந்த ஜோதிடப் பிறை கணிப்பு அமைந்தது என்பதையும் இங்கு நினைவுபடுத்திக் கொள்கிறோம்.


நாம் வளர்த்த தமுமுகவே நம்மை அழிப்பதற்கான வைரஸாக மாறியது. சளைக்காமல், சடையாமல் அதிலிருந்தும் ஜமாஅத்தைக் கரை சேர்த்தோம்.

இப்போது ஸலஃபு என்றொரு வைரஸ் தோன்றியுள்ளது. இதனால் ஜமாஅத்திற்கு நேரடிப் பாதிப்பு இல்லையென்றாலும் ஆங்காங்கே சிறுவர், சிறுமியர் மதரஸாக்களை அமைத்துக் கொண்டு, அவர்களிடம் சிறு வயதிலேயே விஷத்தை விதைத்து, வருங்கால தலைமுறையை வழித்தடம் மாற்றும் வேலையில் இந்த ஸலஃபுகள் இறங்கியுள்ளனர்.

இன்று நமது ஜமாஅத்தின் கிளைகளில் பெண்கள் மதரஸாவை நிறுவுவதில் பெரும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். தற்போதுள்ள கால சூழ்நிலையில் 10 அல்லது 12ஆம் வகுப்பு முடித்ததும் தங்கள் பெண் மக்களை மேற்படிப்பு படிக்க அனுப்புவதற்கு மக்கள் கடுமையாக அஞ்சுகின்றனர். அதனால் பட்டப் படிப்பெல்லாம் தேவையில்லை, நமது பெண்மக்கள் ஆலிமாக்களாக வரட்டும் என்று அவர்களை மார்க்கக் கல்வி படிப்பதற்கு அனுப்பி வைக்கின்றனர். அவர்களுக்குக் கல்வி கொடுக்கின்ற கல்வி நிலையங்கள் அவசியம் தேவை தான். அதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆனால் பெண் ஆலிமாக்களை உருவாக்கும் இந்தத் துறை பயம் நிறைந்தது; பலன் குறைந்தது. பாடம் நடத்துகின்ற அல்லது நிர்வாகம் செய்கின்றவர்களை ஷைத்தான் வழிகெடுப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. அல்லாஹ் காப்பானாக! அதனால் பெண்கள் மதரஸாக்களில் கவனம் செலுத்துவதை விட காலை, மாலை சிறுவர் சிறுமியருக்கான மதரஸாக்களை நடத்துவதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் நமது மழலைகள், சந்ததிகள், வருங்காலத் தலைமுறைகள் நாளை நம்முடன் சுவனத்தில் நுழைவார்கள்.

யார் நம்பிக்கை கொண்டு அவர்களின் சந்ததிகளும் நம்பிக்கை கொள்வதில் அவர்களைப் பின்பற்றினார்களோ அவர்களுடன் அவர்களின் சந்ததிகளைச் சேர்ப்போம். அவர்களின் செயல்களில் எதையும் குறைக்க மாட்டோம்.

அல்குர்ஆன் 52:21

நம் சந்ததிகளுக்கு ஏகத்துவக் கொள்கையை சரியாகப் போதிக்கவில்லை என்றால் அவர்கள் நரகம் போய்ச் சேர்ந்து விடுவார்கள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். எனவே அந்தச் சின்னஞ்சிறு தளிர்களை தவ்ஹீத் வார்ப்பில் வளர்க்கவும் வார்க்கவும் வேண்டும். அதற்குச் சரியான களமும் தளமும் காலை, மாலையில் நடத்தப்படும் மக்தப் மதரஸாக்கள் தான்.

இன்று தமுமுக, விடியல் வெள்ளி போன்ற அமைப்பினர் தவ்ஹீத் ஜமாஅத் செய்கின்ற வேலைகள் அத்தனையையும் கையில் எடுக்கின்றனர். அவர்கள் காலை, மாலை மக்தப்களையும், பெண்கள் மதரஸாக்களையும் உருவாக்குகின்றனர். இவர்களுக்கு எள்ளளவும் சம்பந்தமே இல்லாத இந்தத் துறையில் ஆர்வம் காட்டுவதற்குக் காரணம் மறுமை அல்ல!    ஈ கூட எட்டிப் பார்க்காத தங்கள் ஆர்ப்பாட்ட, போராட்டக் களங்களுக்கு மக்களை வினியோகம் செய்யும் கருவூலமாக, களஞ்சியமாக இந்தத் துறைகளைப் பயன்படுத்த முனைகின்றனர். இவர்களின் செயல்கள் முழுக்க முழுக்க அரசியல் ஆதாயத்தை நோக்கமாகக் கொண்டது.

இந்தத் துறையில் இவர்கள் கவனம் செலுத்துவதற்கு மற்றொரு காரணம் மார்க்கப்பணி என்றால் அதில் காசு, பணம் பார்க்கலாம். வசூல் வேட்டை நடத்தலாம். அதற்காக இந்த முகமூடியைக் கையில் எடுத்துள்ளனர்.

என்ன தான் இவர்கள் நமது பாதையில் குறுக்கிட்டாலும் அல்லாஹ்வின் அருளால் நமது வளர்ச்சிப் பணி அசாதாரணமாக உள்ளது, அல்ஹம்துலில்லாஹ். இதற்குக் காரணம் நம்முடைய மைய நோக்கமே மறுமை மட்டும் என்பது தான்.

இட ஒதுக்கீடு என்ற சமுதாய நோக்கத்திற்காகத் தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவளித்து வந்தோம். அதையும் தற்போது அற்று, அறுத்து எறிந்து விட்டோம். மறுமையை மட்டும் உயிர் மூச்சாக ஆக்கிக் கொண்டோம். கொள்கை என்ற விளக்குடன் இலக்கை நோக்கிப் பயணம் செய்வோம்.

இந்தப் பயணத்தின் போது நமது தலைமுறையினரையும் அழைத்துச் செல்வதற்கு, காலை, மாலை நேர மதரஸாக்களில் கவனம் செலுத்துவோம். இதுதவிர மற்ற நேரங்களில் குறிப்பாக மக்ரிப், இஷா நேரங்களில் வாலிபர்கள் மற்றும் முதியவர்களுக்கான மதரஸாக்களை நடத்துவோம். இந்த மதரஸாக்கள் தான் கொள்கை வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும்.

நம்மை மட்டும் நரகத்தில் இருந்து காப்பது நமது லட்சியமல்ல! நமது சந்ததிகளையும் சேர்த்து நரகத்திலிருந்து காப்பதே நமது லட்சியமாகும்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறுசெய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.

(அல்குர்ஆன் 66:6)

இந்த வசனத்தின் ஆணைப்படி, நம்மையும் நமது சந்ததிகளையும் நரகத்திலிருந்து காப்போமாக!

- ஏகத்துவம் 2015

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner