Wednesday, March 25, 2015

குருடரும், நபிகள் நாயகத்தின் புறக்கணிப்பும் - விளக்கங்கள் பி.ஜே

1, 2. தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் (முஹம்மது) கடுகடுத்தார்.  அலட்சியம் செய்தார்.

3. அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்?

4. அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம்.

5, 6. யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர்.

7. அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை.

8, 9, 10. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர்.

11. அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை.

12. விரும்பியவர் இதில் படிப்பினை பெற்றுக் கொள்வார்.

(அல்குர்ஆன் 80:1-12)

இந்த அத்தியாயத்தில் (80:1-12) முக்கியமான ஒரு வரலாற்று நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. உம்மு மக்தூம் என்பவரின் மகன் அப்துல்லாஹ். இவர் கண் தெரியாதவர். அன்றைய சமுதாயத்தில் இழிவாகக் கருதப்பட்டவர். ஆரம்ப கால முஸ்லிம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயர் குலத்தாரோடு பேசிக் கொண்டிருக்கும் சபைக்கு இவர் வந்து நபிகள் நாயகத்துக்கு ஸலாம் கூறுகிறார்.

"உயர் குலத்தவர்களோடு பேசும்போது, இந்தச் சாதாரண மனிதர் வந்து இடையூறு செய்கிறாரே'' என்று நபிகள் நாயகத்திற்குக் கோபம் வந்து முகத்தைச் சுளித்து விடுகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோபம் அடைந்ததோ, முகத்தைச் சுளித்ததோ கண் தெரியாத இந்த மனிதருக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்காது.

ஆனால், உடனடியாக இறைவன் புறத்திலிருந்து எச்சரிக்கை வருகிறது.

உம்மை ஆர்வத்தோடு தேடி வருகிற இவரை உயர் குலத்தவர்களுக்காக விரட்டியடிக்கிறீரா? என்று அல்லாஹ் நபிகள் நாயகத்தைக் கண்டிக்கிறான். இதைக் கண்டித்த பிறகு தான் அந்தக் குருடருக்கே இந்தச் செய்தி தெரிகிறது.

இது ஒரு உண்மையை நமக்குச் சொல்கிறது.

குர்ஆனை முஹம்மது நபி, தாமே சொந்தமாக உருவாக்கியிருந்தால் இவ்வளவு கடுமையாக விமர்சனம் செய்கின்ற ஒரு வாசகத்தைத் தமக்கு எதிராக அவர்கள் உருவாக்கியிருக்க முடியாது.

காலாகாலத்திற்கும் இந்த வேதத்தைப் படிப்பவர்கள் தம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று நினைத்து இது போன்று உருவாக்காமல் இருந்திருப்பார்கள்.

இது இறைவன் புறத்திலிருந்து வந்தது என்பதால்தான் அந்தக் குருடர் மத்தியிலும், தம்மைப் பெரிதும் மதிக்கின்ற சமுதாயத்தின் மத்தியிலும் "அல்லாஹ்வே என்னைக் கண்டித்து விட்டான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்கிறார்கள்.

திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்குரிய அறிவுப்பூர்வமான சான்றாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

அது மட்டுமின்றி நபிகள் நாயகமே ஆனாலும் அவர்கள் இறைவன் விரும்பாததைச் செய்வதற்கு அதிகாரம் இல்லை.

செய்பவர் யார் என்று பார்த்து அல்லாஹ் நீதி வழங்க மாட்டான்; செய்யப்படும் காரியத்தைத்தான் அவன் பார்ப்பான் என்பதையும் இதிலிருந்து அறியலாம்.


ஒரு சாதாரண மனிதராகக் கருதப்பட்ட கண் தெரியாதவருக்காக தனது தூதரையே அல்லாஹ் கண்டிக்கிறான் என்றால் இது எவ்வளவு அற்புதமான ஒரு மார்க்கம்! இது போன்ற ஒரு கடவுள் கொள்கையினால் மனித குலத்திற்கு எவ்வளவு பயன் கிடைக்கும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூட இதன் பிறகு அந்தக் குருடரிடத்தில் முன்பிருந்ததை விட அதிக மரியாதையோடு நடந்து கொண்ட வரலாற்றையும் நாம் பார்க்க முடிகிறது.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner