Monday, March 16, 2015

நல்லவருக்கு அதிகக் கஷ்டம் ஏன்?

கேள்வி - நான் லண்டனில் வசித்து வருகிறேன் ,இங்கு என்னால் முடிந்த வரையில் ஹராமான வருமானத்தைத் தவிர்த்து நேர்மையாக உழைக்கிறேன் .ஆனால் என்னைச் சுற்றி உள்ளவர்கள் அவ்வாறு இல்லாமலும் என்னைக் குறை சொல்லிக் கொண்டும் இருகிறார்கள் . மேலும் அவர்களை விட எனக்குச் சோதனை அதிகமாகவும் நெருக்கடி அதிகமாகவும் உள்ளன. சமயத்தில் எனக்கு அவர்களைப் போல் இருந்து விடலாம் போலும் தோன்றுகிறது .இந்நிலையில் நான் என்ன செய்வது? தயவு செய்து நல்ல விளக்கம் தரவும்,எனக்காக துவா செய்யவும் . - இப்ராஹிம்

பதில் பி.ஜே - உலகில் நல்லவனாக வாழ்வது கஷ்டமானது என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. அவர்கள் தடம் புரள்வதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது.

எனவே இது குறித்து மனதை ஆறுதல்படுத்தி நல்வழியில் மேலும் உறுதியுடன் நடக்க கீழ்க்காணும் ஆக்கங்களைப் பார்க்கவும்.

http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/muslimkal_thunburuvathu_ethanal/

http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/nallavarkal_noyal_avathiyuruvathu_en/

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/ulakil_kastapatal_marumai_vetri/

பொதுவாக இந்த உலகம் இறை நம்பிக்கையாளர்களுக்கு ஒரு சிறைச்சாலையைப் போன்றதாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம், இறை நம்பிக்கையாளர்களுக் குச் சிறைச்சாலையாகும்; இறை மறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும்

அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் 5663


சிறைச்சாலையில் நாம் விரும்பியவாறு சுற்றித் திரியவோ, விரும்பியதைச் சாப்பிடவோ, இன்பத்தை அனுபவிக்கவோ முடியாது. குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும். அது போன்று தான் இறை நம்பிக்கையாளர்களுக்கு இந்த உலக வாழ்க்கையும் உள்ளது.

இறைவனுக்கு மாறு செய்பவர்கள் இவ்வுலகில் நன்றாக இருப்பதைப் போன்று தெரிந்தாலும் மறுமையில் அவர்களுக்கு எவ்வித பாக்கியமும் கிடைக்காமல் இருப்பதற்காகத்தான் இறைவன் அவர்களுக்கு வாரி வழங்குகிறான். இதைப் பற்றி அல்லாஹ் திருமறையில் முஃமின்களுக்கு எச்சரிக்கை செய்கின்றான்.

(ஏகஇறைவனை) மறுப்போர் ஊர்கள் தோறும் (சொகுசாக) திரிவது உம்மை ஏமாற்றி விட வேண்டாம். இது அற்ப வசதி. பின்னர் அவர்களின் புகலிடம் நரகம். தங்குமிடத்தில் அது கெட்டது. எனினும் தமது இறைவனை அஞ்சியோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்வின் விருந்து. அல்லாஹ்விடம் இருப்பவை நல்லோருக்குச் சிறந்தது.

அல்குர்ஆன் 3 : 196 – 198


யார் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்ற மன உறுதியில் இருக்கின்றார்களோ அவர்களை பல்வேறு சோதனைகளை வழங்கி அல்லாஹ் சோதிப்பான். இச்சோதனைகள் எல்லாம் நாம் அல்லாஹ்வை உண்மையில் நம்புகின்றோமா என்பதை மறுமையில் அடையாளம் காட்டுவதற்காகத்தான்.

நாம் யாரையும் ஏமாற்றாமல், மோசடி செய்யாமல் வாழ வேண்டும் என்ற மனஉறுதியுடன் செயல்படும் போது நமக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி அல்லாஹ் நம்முடைய இறைநம்பிக்கையை சோதிக்கக் கூடும். இது போன்ற நேரங்களில் நாம் தடம் புரண்டு விடக் கூடாது. அப்போதுதான் நாம் இறையருளைப் பெற்று மறுமையில் வெற்றி பெறமுடியும்.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது ''நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர்.

அல்குர்ஆன் 2 : 155, 156, 157


இவ்வுலகின் வறுமை போன்ற துன்பங்களைக் காட்டி ஷைத்தான் நம்மைத் தவறான பாதையில் அழைத்துச் செல்வற்கு முயற்சி செய்வான். நாம் ஒருபோதும் ஷைத்தானின் மாயவலையில் வீழ்ந்து விடக் கூடாது.

ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக்கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 2 : 268


இவ்வுலக வாழ்க்கையின் வசதிகளுக்காக நாம் மறுமையை பாழாக்கிவிடக் கூடாது என்பதற்காக அல்லாஹ் முஃமின்களுக்கு மறுமையை முன்னிறுத்தி உபதேசம் செய்கின்றான்

பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் ஆகிய ஆசைப்படும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது. ''இதை விடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று கேட்பீராக! (இறைவனை) அஞ்சுவோருக்குத் தம் இறைவனிடம் சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். தூய்மையான துணைகளும், அல்லாஹ்வின் திருப்தியும் உள்ளன. அல்லாஹ் அடியார்களைப் பார்ப்பவன்.

அல்குர்ஆன் 2 : 14, 15


பெரும்பாலும் இவ்வுலகில் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசைதான் மனிதர்கள் மார்க்கம் தடை செய்த காரியங்களைச் செய்வதற்கு தூண்டுகோலாக அமைகிறது.

பணம் சம்பாதிக்கும் விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நபியவர்கள் மிகச் சிறந்த உபதேசத்தை நமக்குச் செய்துள்ளார்கள்.

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடையில் அமர்ந்து) இறைவன் உங்களுக்காக வெளிக்கொணரும் பூமியின் வளங்களைத்தான் உங்கள் விஷயத்தில் நான் அதிகம் அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள். பூமியின் வளங்கள் எவை? என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் (கனிமப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், பயிர் வகைகள் ஆகிய) இவ்வுலகக் கவர்ச்சிப் பொருட்கள்(தாம் அவை) என்று பதிலளித்தார்கள். அப்போது ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (செல்வம் எனும்) நன்மை தீமையை உருவாக்குமா? என்று வினவினார். அதற்கு (பதிலளிக்காமல்) நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறதோ என்று நாங்கள் நினைத்தோம். பிறகு, தமது நெற்றியைத் துடைக்கலானார்கள். பின்னர் கேள்வி கேட்டவர் எங்கே? என்று வினவினார்கள். அம்மனிதர் (இதோ) நான் (இங்கிருக்கிறேன்) என்று கூறினார். (அவர் கேள்வி கேட்டதையடுத்து மக்களுக்குப் பயனளிக்கும்) அந்த பதில் வெளிப்பட்டதற்காக அவரை நாங்கள் மெச்சினோம். நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நன்மையால் நன்மையே விளையும். இந்த (உலகின்) செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். வாய்க்கால் மூலம் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை,) வயிறு புடைக்கத் தின்னவைத்துக் கொன்று விடுகின்றன; அல்லது கொல்லும் அளவுக்குச் சென்றுவிடுகின்றன. பசுமையான புல்லைத் தின்னும் கால்நடைகளைத் தவிர. (அவை மடிவதில்லை. ஏனெனில்,) அவை (புல்லைத்) தின்று வயிறு நிரம்பிவிடும் போது சூரியனை நோக்கி(ப் படுத்து)க் கொண்டு அசை போடுகின்றன. (இதனால் நன்கு சீரணமாகி) சாணமும் சிறுநீரும் வெளியேறுகின்றன. பின்னர் (வயிறு காலியானவுடன்) மறுபடியும் சென்று மேய்கின்றன. இந்த (உலகின்) செல்வம் இனிமையானதாகும். யார் இதை உரிய முறையில் சம்பாதித்து உரிய முறையில் செலவிடுகின்றாரோ அவருக்கு அது நல்லுதவியாக அமையும். யார் இதை முறையற்ற வழிகளில் சம்பாதிக்கின்றாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார்.

நூல் : புகாரி 6427


அல்லாஹ்விற்கு அஞ்சி மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்ற நன்னோக்கத்தில் வாழ்ந்தால் யாரும் நம்மை வழிகெடுத்துவிட முடியாது. உள்ளம் நேர்வழியின் மீது நிலைத்திருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

எங்கள் இறைவா! எங்களுக்கு நேர் வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.

அல்குர்ஆன் 3: 8

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner