Tuesday, December 16, 2014

காரியம் சாதிக்க தந்திரம் செய்யலாமா? - திருக்குர்ஆன் விளக்கங்கள் - பி.ஜே

அவரது சகோதரரின் சுமைக்கு முன் இவர்களின் சுமைகளை (யூசுஃப் சோதிக்க) ஆரம்பித்தார். பின்னர் அவரது சகோதரரின் சுமையிலிருந்து அதை வெளியே எடுத்தார். இவ்வாறே யூஸுஃபுக்கு தந்திரத்தைக் கொடுத்தோம். அல்குர்ஆன் (12:76)
 
யூசுஃப் நபியவர்கள் தமது சகோதரரைத் தம்முடனே வைத்துக் கொள்வதற்காக அவர் மீது திருட்டுப் பட்டம் சுமத்தி, அதையே காரணம் காட்டி, பிடித்து வைத்துக் கொண்டதாக இவ்வசனம் கூறுகிறது.

இதை யூசுஃப் நபி, தன்னிச்சையாகச் செய்தார் என்று கருத முடியாது. ஏனெனில், "இந்தத் தந்திரத்தை நாமே அவருக்குக் கற்றுக் கொடுத்தோம்' என்று இதே வசனத்தின் தொடர்ச்சியாக அல்லாஹ் கூறுகிறான்.

இறைவனே இந்தத் தந்திரத்தைக் கற்றுக் கொடுத்திருப்பதால் இந்த நிகழ்ச்சியில் எந்தக் கருத்து அடங்கியுள்ளதோ அது போன்ற நிலையில் நாமும் தந்திரத்தைக் கையாளலாம்.

இச்சம்பவத்தில், திருடாத ஒருவர் மீது திருட்டுப்பழி சுமத்தப்பட்டாலும், பழிசுமத்தி அவரை இழிவுபடுத்துவது இதன் நோக்கமல்ல! பழி சுமத்தப்பட்டவருக்கு சிறந்த ஏற்பாட்டைச் செய்து கொடுப்பதே இதன் நோக்கம்.

யூஸுஃப் நபியின் தந்தைவழிச் சகோதரர்கள் பஞ்சத்தில் அடிபட்டு, உணவு கேட்டு வருகிறார்கள். அவர்களுடன் வந்திருந்த தமது இளைய சகோதரர், அங்கிருந்து கஷ்டப்படுவதை விடத் தம்முடன் இருப்பது தான் நல்லது என்று கருதி இந்தத் தந்திரத்தைக் கையாண்டார்கள்.

இதை விட முக்கியமாக இங்கு கவனிக்க வேண்டிய அம்சம், தம் சகோதரர் மீது திருட்டுப்பழி சுமத்துவதற்கு முன்னால் அவரைத் தனியாக அழைத்து, இந்தத் தந்திரத்தைக் கையாளப் போகிறேன் என்று உண்மை நிலவரத்தை எடுத்துக் கூறி, அந்தச் சகோதரரும் ஒத்துக் கொண்ட நிலையில் தான் யூஸுஃப் நபி இதைச் செய்தார்கள்.

இது போன்ற சூழ்நிலைகளில், இந்த நெறிமுறைகளைக் கவனத்தில் கொண்டு தந்திரத்தைக் கையாளலாம்.

மோசடி செய்வதற்கோ பிறருக்குக் கேடு செய்வதற்கோ மார்க்கத்தை வளைப்பதற்கோ தந்திரம் செய்ய இந்தச் சம்பவம் சான்றாக ஆகாது.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner