Wednesday, December 31, 2014

ஹதீஸ்கள் குர்ஆனிற்கு முரண்படுமா? - தொடர் 12

இந்த நூல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போது அப்பாஸ் அலி எழுதியது. தற்போது ஜமாஅத்திலிருந்து வெளிவந்தவுடன் இந்த நூலில் உள்ள கருத்துகளுக்கு முழுவதும் மாறுபடுவதாகவும், இனி இந்த நூலிற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

நடைமுறை சிக்கல்கள்

இச்சட்டம் குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமாக இருப்பதுடன் பல நடைமுறைச் சிக்கல்களையும் தோற்றுவிக்கிறது.

1.    மதம் மாறியவனைக் கொல்ல வேண்டும் என்று நாம் கூறினால் இஸ்லாத்திற்கு வந்தவன் இஸ்லாத்தைப் பற்றி சிந்திக்கப் பயப்படுவான். அவனுக்கு ஏற்படும் சந்தேகங்களை வெளிக்கொணர அஞ்சுவான். ஆனால் இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை என்று கூறினால் தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தைக் கூறி விளங்கிக் கொள்ள முயற்சிப்பான். அவன் மேலும் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கு இம்முறை உதவும். இல்லையென்றால் இந்தச் சந்தேகங்கள் அவனுக்கு மிகைத்து இறுதியில் மதம் மாறுகின்ற நிலைக்குத் தள்ளப்படுவான்.

2.    அல்லாஹ்வுடைய இந்த மார்க்கம் உண்மையானதென்றும் தெளிவானதென்றும் எல்லாக் கேள்விகளுக்கும் சரியான பதிலைத் தரக்கூடியதென்றும் நாம் நம்பும் போது ஏன் இப்படி ஒரு சட்டத்தை இயற்றி நிர்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும்?

3.    மாற்று மதத்திற்கு மாறியவனைக் கொலை செய்வது மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தாமல் மதவெறியைத் தான் உருவாக்கும். இஸ்லாமியருடன் பழக்கம் வைப்பதை மக்கள் விட்டுவிட்டு இஸ்லாத்தின் எதிரிகளோடு இணைந்து கொள்வார்கள்.

4.    இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை என்று கூறினால் தான் இஸ்லாத்தை விளங்காத மக்கள் கூட விளங்கிக் கொள்வதற்காக இஸ்லாத்தில் இணைந்து கொள்வார்கள். இதன் மூலம் அவர்கள் உண்மையான முஸ்லிமாவதற்குரிய வாய்ப்பு ஏற்படும். மதம் மாறியவரைக் கொலை செய்வோம் என்றால் விளங்க நினைப்பவர்கள் கூட பயந்து கொண்டு இதில் இணைய மறுத்து விடுவார்கள்.

5.    இதை இஸ்லாமியச் சட்டம் என்றால் உலக மக்களிடையே இஸ்லாம் கொடூரமான மார்க்கம் என்ற தவறான கொள்கை எளிதாக பரவிவிடும். இன்னும் இஸ்லாம் தவறான கொள்கையுள்ள மார்க்கம் என்பதால் தான் சவாலை எதிர் கொள்ளாமல் நிர்பந்தப்படுத்துகிறது என்ற எண்ணமும் அவர்களுடைய மனதில் எழும்.

6.    இஸ்லாம் ஒளிவு மறைவு இல்லாத மார்க்கம் என்பதால் மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்று கூறுபவர்கள் மேடை அமைத்து இச்சட்டத்தைப் பகிரங்கப்படுத்துவார்களா? பகிரங்கப்படுத்த முடியாத ஒரு சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குச் சொல்வார்களா?

7.    இஸ்லாத்தை விரும்பாதவர்களை இஸ்லாமிய சமுதாயத்தில் நிர்பந்தப்படுத்தி வைத்துக் கொண்டிருந்தால் அவன் இச்சமுதாயத்திற்கு தீங்கு செய்ய நினைப்பானே தவிர நன்மை செய்ய நாட மாட்டான்.

8.    இஸ்லாத்தை விட்டு யாரும் வெளியேறக் கூடாது. அப்படி வெளியேறினால் கொல்லப்படுவார்கள் என்று ஒரு புறம் நாம் கூறிக் கொண்டு இன்னொரு புறம் மாற்று மதத்தார்களை நோக்கி உங்கள் மார்க்கத்தை விட்டுவிட்டு எங்கள் மார்க்கத்தில் இணைந்து கொள்ளுங்கள் என்று கூறுவது நம்மை வெறி பிடித்தவர்களாக மக்கள் மன்றத்தில் காட்டும். முஸ்லிம்கள் நம் மார்க்கத்திற்கு வர தடைபோடும் போது நாம் அவர்களுடைய மார்க்கத்தைக் கேட்பதற்கு ஏன் செல்ல வேண்டும் என்று மக்கள் கருதினால் இது நம்முடைய அழைப்புப் பணிக்கு பெரும் முட்டுக்கட்டையாக வந்தமையும்.

9.    இஸ்லாம் அழகிய மார்க்கம் என்று நாம் அனைவரும் ஒத்துக் கொண்டுள்ளோம். மதம் மாறியவனைக் கொல்ல வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது என்றால் இச்சட்டம் அறிவுப்பூர்வமானது. அழகானது என்பதை நிரூபிக்கும் கடமை இச்சட்டத்தைக் கூறுபவர்களுக்கு உண்டு. இவர்கள் இந்தக் கோரமான சட்டத்தை அழகானது அறிவிப்பூர்வமானது என்று எப்படி நிரூபிப்பார்கள்?

3. குர்ஆனில் ஹதீஸ் ஒளியில் சூனியத்தின் விளக்கம்


ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது எவ்வித சாதனங்களையும் பயன்படுத்தாமல் உடல் அளவிலோ உள்ளத்திலோ பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை அறியாத மக்களிடம் உள்ளது. முஸ்லிம் சமுதாயத்திலும் இந்த நம்பிக்கையுள்ளவர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள். இது பில்லி சூனியம் ஏவல் செய்வினை என்று பல்வேறு சொற்களால் குறிப்பிடப்படுகின்றது.

ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி ஒருவன் இன்னொருவனின் உடலில் காயத்தையோ வேதனையையோ ஏற்படுத்த முடியும் என்பதை நாம் நம்பலாம். கண்கூடாக இதை நாம் காணுவதால் மார்க்க அடிப்படையில் இதற்கு ஆதாரத்தைத் தேட வேண்டியதில்லை.

ஆனால் புறச்சாதனங்கள் எதையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியின் மூலம் இது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த இயலும் என்றால் மார்க்கத்தில் அதற்கு ஆதாரம் இருக்க வேண்டும்.

திருக்குர்ஆனிலும் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலும் இது பற்றி கூறுப்படுவது என்ன என்பதை நாம் மேலோட்டமாக பார்க்கும் போது முரண்பட்ட இரண்டு கருத்துக்களுக்கும் இடம் தருவது போல் அமைந்துள்ளன, இதன் காரணத்தினால் தான் அறிஞர்கள் இதிலே முரண்பட்டு நிற்கின்றனர்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது முரண்பட்ட இரு கருத்துக்களுக்கு இடம் இருப்பது போல் தோன்றினாலும் கவனமாக ஆராயும் போது ஒரு கருத்து தான் சரியானது என்ற முடிவுக்கு நாம் வர முடியும். மக்களை ஏமாற்றுவதற்காகவும் கவர்வதற்காகவும் செய்து காட்டப்படும் தந்திர வித்தைகள் தான் சூனியம். உண்மையில் சூனியம் மூலமாக எந்த அதிசயமும் நிகழ்வதில்லை என்பது தான் சரியான முடிவாகும்.

சூனியம் என்பதற்கு அரபுமொழியில் சிஹ்ர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் இந்தச் சொல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்விரண்டிலும் இச்சொல் பயன்படுத்தப்பட்ட பகுதிகளை நாம் ஒவ்வொன்றாக ஆய்வு செய்தால் ஸிஹ்ர் என்பதற்கு பித்தலாட்டம் மோசடி ஏமாற்றும் தந்திர வித்தை என்பது தான் பொருள் என்பதைச் சந்தேகமின்றி அறிந்து கொள்ளலாம்.

மக்களை நல்வழிப்படுத்துவதற்காக இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களுக்கு தம்மை இறைத் தூதர்கள் என்று நிரூபிக்க சில அற்புதங்களை இறைவன் வழங்கினான். உதாரணமாக மூஸா நபியவர்கள் இறைவனின் கட்டளைப்படி தமது கைத்தடியைக் கீழே போட்டவுடன் அது சீறும் பாம்பாக உருமாறியது. கைத்தடி பாம்பாக உருமாறிய நிலையில் அதைத் தொட்டுப் பார்த்தாலும் எந்த வகையான சோதனைக்கு உட்படுத்தினாலும் அது பாம்பு தான் என்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகும். இது தான் அற்புதமாகும்.

கைத்தடி பாம்பு போல் தோற்றமளித்து அதைத் தொட்டுப் பார்த்தாலோ அல்லது சோதனைக்கு உட்படுத்தினாலோ அது கைத்தடியாகவே இருந்தால் நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து அது தந்திர வித்தை மேஜிக் என்று கூறுவோம். இறைத் தூதர்கள் செய்து காட்டியது முதல் வகையானது. அதில் எந்த விதமான தில்லுமுல்லும் ஏமாற்றுதலும் கிடையாது.

ஆனாலும் இறைத் தூதர்கள் தமது தூதுத்துவத்தை நிரூபிக்கும் வகையில் அற்புதங்களைச் செய்துகாட்டிய போது அதனை அந்த மக்கள் அற்புதம் என்று நம்பவில்லை. மாறாக இவர் நமக்குத் தெரியாதவாறு தந்திரம் செய்கிறார். நம்மை ஏமாற்றுகிறார் என்று அவர்கள் நினைத்தனர். இதைக் குறிப்பிட ஸிஹ்ர் (சூனியம்) என்ற சொல்லையே பயன்படுத்தினர்.


ஸிஹ்ர் என்பதற்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட அற்புதம் என்பது பொருள் என்றால் இறைத் தூதர்களை நிராகரிப்பதற்கு ஸிஹ்ர் என்ற காரணத்தைக் கூறியிருக்க மாட்டார்கள். இவர் எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. தந்திரம் செய்து நம்மை ஏமாற்றப் பார்க்கிறார். நடக்காததை நடந்தது போல் நம்ப வைக்கிறார் என்ற கருத்தை உள்ளடக்கித் தான் நபிமார்களின் அற்புதங்களை ஸிஹ்ர் (சூனியம்) என்று கூறி நிராகரித்தனர்.


மூஸா நபியும் அவர்கள் செய்து காட்டிய அற்புதமும்


மூஸா நபியவர்களுக்கு மகத்தான சில அற்புதங்களை அல்லாஹ் வழங்கியிருந்தான். அவற்றை ஏற்க மறுத்தவர்கள் அதை ஸிஹ்ர் (சூனியம்) என்று கூறியே மறுத்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது.

அப்போது அவர் தமது கைத் தடியைப் போட்டார். உடனே அது உண்மையாகவே பாம்பாக ஆனது. அவர் தமது கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது.. "இவர் தேர்ந்த சூனியக் காரராக (ஸிஹ்ர் செய்பவராக) உள்ளார். உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்?'' என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர்.

அல்குர்ஆன் (7 : 107)


அவர்களுக்குப் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் ஃபிர்அவ்னிடமும், அவனது சபையோரிடமும் நமது சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்கள் ஆணவம் கொண்டனர். குற்றம் செய்த கூட்டமாக இருந்தனர். நம்மிடமிருந்து அவர்களுக்கு உண்மை வந்த போது "இது தெளிவான சூனியம்'' (ஸிஹ்ர்) என்றனர். "உண்மை உங்களிடம் வந்திருக்கும் போது அதைச் சூனியம் என்று கூறுகிறீர்களா? சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்'' என்று மூஸா கூறினார்.

அல்குர்ஆன் (10 : 75)

"நீர் உண்மையாளராக இருந்தால் அதைக் கொண்டு வாரும்'' என்று அவன் கூறினான். அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது பெரிய பாம்பாக ஆனது. தமது கையை வெளிப்படுத்தினார். அது பார்ப்போருக்கு வெண்மையாக இருந்தது. "இவர் திறமை மிக்க சூனியக்காரர்'' (ஸிஹ்ர் செய்பவர்) என்று தன்னைச் சுற்றியிருந்த சபையோரிடம் அவன் கூறினான். "தனது சூனியத்தின் மூலம் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற இவர் நினைக்கிறார். நீங்கள் என்ன உத்தரவிடுகிறீர்கள்?'' (என்றும் கேட்டான்).

அல்குர்ஆன் (26 : 31)

மூஸா அவர்களிடம் நமது தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது இது இட்டுக்கட்டப்பட்ட சூனியம் (ஸிஹ்ரைத்) தவிர வேறில்லை. இது பற்றி முன்னோர்களான எங்களது மூதாதையரிடம் நாங்கள் கேள்விப்படவில்லை என்றனர்.

அல்குர்ஆன் (28 : 36)

மூஸாவை நமது சான்றுகளுடனும், தெளிவான ஆற்றலுடனும் ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியோரிடம் அனுப்பினோம். "பெரும் பொய்யரான சூனியக்காரர்'' (ஸிஹ்ர் செய்பவர்) என்று அவர்கள் கூறினர்.

அல்குர்ஆன் (40 : 23)


மூஸா நபி கொண்டு வந்த அற்புதங்களை நிராகரிக்க ஸிஹ்ர் என்னும் சொல்லை அவர்கள் பயன்படுத்தியதிலிருந்து ஸிஹ்ர் என்றால் தந்திரம் தான். உண்மையில் ஏதும் நடப்பதில்லை என்று அறிந்து கொள்கிறோம்.

மூஸா நபியவர்கள் தன்னை இறைத் தூதர் என்று நிரூபிப்பதற்கான சான்றுகளை ஃபிர்அவ்ன் எனும் கொடுங்கோல் மன்னனிடம் முன்வைத்தார்கள். அவர்கள் செய்து காட்டிய அற்புதங்கள் உண்மை என்று நம்ப ஃபிர்அவ்ன் மறுத்தான். இது சூனியம் (தந்திர வித்தை) என்றான். இவரை விடச் சிறந்த தந்திரக்காரர்கள் தன் நாட்டில் இருப்பதாகக் கூறி மூஸா நபியைப் போட்டிக்கு அழைத்தான். மூஸா நபியவர்கள் அந்தப் போட்டிக்கு உடன்பட்டார்கள். இது பற்றி குர்ஆன் பல்வேறு இடங்களில் கூறுகிறது.

"நீங்களே போடுங்கள்!'' என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.

அல்குர்ஆன் (7 : 116)


அவர்கள் செய்தது சாதாரண சூனியமல்ல. மகத்தான சூனியம் என்று மேற்கண்ட வசனம் கூறுவதுடன் அந்த மகத்தான சூனியம் எதுவென்றும் தெளிவாகக் கூறுகிறது. மக்களின் கண்களை மயக்கினார்கள் என்ற சொற்றொடரின் மூலம் அவர்கள் எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. மாறாக மக்களின் கண்களை ஏமாற்றினார்கள். மகத்தான சூனியத்தின் மூலம் செய்ய முடிந்தது இவ்வளவு தான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

மற்றொரு வசனம் இதை இன்னும் தெளிவாகக் காட்டுகிறது.

"இல்லை! நீங்களே போடுங்கள்!'' என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது.

அல்குர்ஆன் (20 : 66)


அவர்கள் செய்தது மகத்தான சூனியமாக இருந்தாலும் கயிறுகளையும் கைத்தடிகளையும் சீறும் பாம்புகளாக அவர்களால் மாற்ற இயலவில்லை. மாறாக சீறும் பாம்பைப் போன்ற பொய்த் தோற்றத்தைத் தான் அவர்களால் ஏற்படுத்த முடிந்தது என்று இவ்வசனம் கூறுகிறது. மற்றொரு வசனத்தில் சூனியம் என்பது மோசடியும் சூழ்ச்சியும் தவிர வேறில்லை என்று கூறப்படுகிறது.

"உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்'' (என்றும் கூறினோம்.)

அல்குர்ஆன் (20 : 69)


இவர்கள் செய்து காட்டியது சூனியக்காரனின் சூழ்ச்சி தான் என்று கூறுவதன் மூலம் சூனியம் என்பது தந்திர வித்தை தவிர வேறில்லை என்பதை அறிந்துகொள்ளலாம்.

ஈஸா நபியும் அவர்கள் செய்து காட்டிய அற்புதமும்


மூஸா நபியைப் போலவே ஈஸா நபியும் அதிகமான அற்புதங்களை செய்து காட்டினார்கள். அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களைப் பார்த்த பின்னரும் அதை உண்மை என்று அவரது சமுதாயத்தினர் நம்பவில்லை. இவர் ஏதோ தந்திரம் செய்கிறார் என்று தான் நினைத்தனர். இவர் ஸிஹ்ர் (தந்திரம்) செய்கிறார் என்று கூறி நிராகரித்து விட்டனர்.

"மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட்கொடையையும், ரூஹுல் குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களிடம் நீர் பேசினீர்! உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் நான் கற்றுத் தந்ததையும் எண்ணிப் பார்ப்பீராக! என் விருப்பப்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி அது பறவையாக மாறியதையும், என் விருப்பப்படி பிறவிக் குருடரையும் வெண் குஷ்டமுடையவரையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இறந்தோரை என் விருப்பப்படி (உயிருடன்) வெளிப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர்! அப்போது "இது தெளிவான சூனியமேயன்றி (ஸிஹ்ரேயன்றி) வேறில்லை'' என்று அவர்களில் (ஏக இறைவனை) மறுப்போர் கூறிய போது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக! என்று அல்லாஹ் (ஈஸாவிடம்) கூறியதை நினைவூட்டுவீராக!

அல்குர்ஆன் (5 : 110)


"இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதர். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப் படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்'' என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக! அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது "இது தெளிவான சூனியம்'' (ஸிஹர்) எனக் கூறினர்.
அல்குர்ஆன் (61 : 6)

நபி (ஸல்) அவர்களும் அற்புதங்களும்


நபி (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் என்று நிரூபிப்பதற்காக இறைவன் வழங்கிய சில அற்புதங்களைச் செய்து காட்டினார்கள். மாபெரும் அற்புதமாக அவர்களுக்கு வழங்கப்பட்ட திருக்குர்ஆனையும் மக்கள் மத்தியில் எடுத்து வைத்தார்கள். அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களை ஏற்க மறுத்த எதிரிகள் அவற்றை ஸிஹ்ர் (சூனியம்) என்று கூறினார்கள்.

(முஹம்மதே!) காகிதத்தில் எழுதப்பட்ட வேதத்தை உமக்கு நாம் அருளியிருந்து அதைத் தம் கைகளால் தொட்டுப் பார்த்தாலும்."இது வெளிப்படையான சூனியத்தைத் (ஸிஹ்ரைத்) தவிர வேறு இல்லை'' என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறியிருப்பார்கள்.

அல்குர்ஆன் (6 : 7)

"மக்களை எச்சரிப்பீராக'' என்றும், "நம்பிக்கை கொண்டோருக்குத் தம் இறைவனிடம் அவர்கள் செய்த நற்செயல் (அதற்கான கூலி) உண்டு என நற்செய்தி கூறுவீராக'' என்றும் மனிதர்களைச் சேர்ந்த ஒருவருக்கு நாம் அறிவிப்பது அவர்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா? "இவர் தேர்ந்த சூனியக்காரர்'' (ஸிஹ்ர் செய்பவர்) என்று (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் (10 : 2)

அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. "இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார்? பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் (ஸிஹ்ரிடம்) செல்கிறீர்களா?'' என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர்.

அல்குர்ஆன் (21 : 3)

இன்னும் இந்தக் கருத்து (28 : 48) (34 : 43) (37 : 14) (38 : 4) (43 : 30) (46 : 7) (54 : 2) ஆகிய வசனங்களிலும் கூறப்படுகிறது.

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதா?


சூனியம் என்பது கற்பனையல்ல. மெய்யான அதிசயமே. அதன் மூலம் ஒரு மனிதனின் கை கால்களை முடக்கலாம். படுத்த படுக்கையில் தள்ளலாம் என்றெல்லாம் பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். அவர்கள் தங்கள் கூற்றை நிரூபிக்க சில ஆதாரங்களையும் எடுத்துக் காட்டுகிறார்கள்.

புகாரி முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு நபிமொழித் தொகுப்புக்களில் நபி (ஸல்) அவர்களுக்கு யூதன் ஒருவன் சூனியம் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. தங்களின் கருத்தை மெய்யாக்குவதற்கு இவற்றை ஆதாரமாக இவர்கள் காட்டுகிறார்கள். அந்த ஹதீஸ்கள் வருமாறு :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. தாம் செய்யாத ஒன்றைச் செய்ததாக நினைக்கும் அளவிற்கு அவர்கள் பாதிக்கப்பட்டார்கள். ஒரு நாள் என்னை அழைத்தார்கள். எனக்கு நிவாரணம் கிடைக்கும் வழியை இறைவன் காட்டி விட்டான் என்பது உனக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். இரண்டு மனிதர்கள் என்னிடம் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைப்பகுதியில் அமர்ந்து கொண்டார். மற்றொருவர் என் கால்பகுதியில் அமர்ந்து கொண்டார். இந்த மனிதருக்கு ஏற்பட்ட நோய் என்ன? என்று ஒருவர் மற்றவரிடம் கேட்டார். இவருக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று மற்றவர் விடையளித்தார். இவருக்குச் சூனியம் செய்தவர் யார்? என்று முதலாமவர் கேட்டார். லபீத் பின் அல்அஃஸம் என்பவன் சூனியம் வைத்துள்ளான் என்று இரண்டாமவர் கூறினார். எதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று முதலாமவர் கேட்டார். அதற்கு இரண்டாமவர் சீப்பிலும் உதிர்ந்த முடியிலும் பேரீச்சை மரத்தின் பாளையிலும் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று விடையளித்தார். எந்த இடத்தில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று முதலாமவர் கேட்டார். தர்வான் என்ற கிணற்றில் வைக்கப்பட்டுள்ளது என்று இரண்டாமவர் கூறினார் என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். பின்னர் அந்தக் கிணற்றுக்குச் சென்று விட்டு திரும்பி வந்தார்கள். அங்குள்ள பேரீச்சை மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று இருந்தது என்று என்னிடம் கூறினார்கள். அதை அப்புறப்படுத்திவிட்டீர்களா? என்று நான் கேட்டேன். அதற்கு நபியவர்கள் இல்லை அல்லாஹ் எனக்கு நிவாரணம் அளித்துவிட்டான். மக்கள் மத்தியில் தீமையை பரப்பக்கூடாது என்று நான் அஞ்சுகிறேன் என்று கூறினார்கள். பின்னர் அந்தக் கிணறு மூடப்பட்டது.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (3268)


தம் மனைவியிடத்தில் தாம்பத்தியம் நடத்தாமல் தாம்பத்தியம் நடத்தியதாக நினைக்கும் அளவுக்கு அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

நூல் : புகாரி (5765)


நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட இந்த நிலை ஆறு மாதங்கள் நீடித்ததாக அஹ்மத் என்ற கிரந்தத்தில் இடம்பெற்ற செய்தி கூறுகிறது.

நூல் : அஹ்மத் (23211)


நபி (ஸல்) அவர்கள் தன்னிலை மறக்கும் அளவிற்கு ஆறு மாதக் காலம் சூனியத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றால் மற்றவர்களுக்கு ஏன் சூனியம் செய்ய முடியாது என்று இவர்கள் வாதிடுகிறார்கள். மேற்கண்ட ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது இது சரியான கருத்து போல தோன்றலாம். ஆனல் ஆழமாகப் பரிசீலனை செய்யும் போது நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கவோ அதனால் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கவோ முடியாது என்ற கருத்திற்குத் தான் வந்தாக வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட இறை வேதம்


நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டு அதன் காரணமாக அவர்களது மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டது. அந்த பாதிப்பு ஆறுமாதம் நீடித்தது. தான் செய்யாததைச் செய்ததாக கருதும் அளவுக்கு அந்தப் பாதிப்பு அமைந்திருந்தது என்று மேற்கண்ட ஹதீஸ்களில் கூறப்படுவதை நாம் அப்படியே ஏற்பதாக இருந்தால் அதனால் ஏராளமான விபரீதங்கள் ஏற்படுகின்றன.

திருக்குர்ஆனின் நம்பகத்தன்மைக்கு ஏற்படும் பாதிப்பு முதலாவது பாதிப்பாகும். சூனியம் வைக்கப்பட்டதின் காரணமாக தான் செய்யாததைச் செய்ததாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றால் அந்த ஆறுமாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட வஹீ (இறைச் செய்தி) சந்தேகத்திற்குரியதாக ஆகிவிடும்.

தம் மனைவியிடத்தில் இல்லறத்தில் ஈடுபட்டதை அல்லது ஈடுபடாமல் இருந்ததைக் கூட நபி (ஸல்) அவர்களால் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லையென்றால் இறைவனிடம் வஹீ வராமலேயே வஹீ வந்ததாகவும் அவர்கள் கூறியிருக்கலாம். தனக்கு வஹீ வந்திருந்தும் வரவில்லை என்று அவர்கள் நினைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தும். ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட அனைத்துமே சந்தேகத்திற்குரியதாக ஆகி விடும்.

எந்த ஆறு மாதம் என்று தெளிவாக விபரம் கிடைக்காததால் மதீனாவில் அருளப்பட்ட ஒவ்வொரு வசனமும் இந்த ஆறு மாதத்தில் அருளப்பட்டதாக இருக்குமோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்திவிடும்.

இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு இன்று நம்மிடம் இருக்கும் ஒரே அற்புதம் திருக்குர்ஆன் தான். திருக்குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் அனைத்தையும் நாம் நிராகரித்துத் தான் ஆக வேண்டும். திருக்குர்ஆனில் பொய்யோ கலப்படமோ கிடையாது. முழுக்க முழுக்க அது இறைவனின் வார்த்தை தான் என்று திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் நற்சான்று கூறுகிறது.

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.

அல்குர்ஆன் (15 : 9)

அவர்கள் (நம்மை) அஞ்சுவதற்காக அரபு மொழியில் எவ்விதக் கோணலும் இல்லாத குர்ஆனை (அருளினோம்.)

அல்குர்ஆன் (39 : 28)

இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞான மிக்கோனிடமிருந்து அருளப்பட்டது.

அல்குர்ஆன் (41 : 42)


அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

அல்குர்ஆன் (4 : 82)

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner