Sunday, December 28, 2014

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் - தொடர் 10 - பி.ஜே

அதே போன்று திருக்குர்ஆன் பல இடங்களில்

குர்ஆனில் முரண்பாடுகள் இல்லை (4:82) என்றும்
சிந்திக்க மாட்டீர்களா? (4:82, 17:41, 21:10, 23:68, 25:73, 38:29, 47:24) என்றும்
தவறுகள் வராது (41:42)
இது பாதுகாக்கப்பட்ட வேதம் (15:9, 18:1, 39:28, 41:42, 75:17) என்றும்
சொல்லப்பட்டுள்ளது.


இவை அனைத்துமே குர்ஆனில் சந்தேகம் ஏற்படக் கூடாது என்பதை அடித்துச் சொல்லும் வசனங்களாகும்.

நபிகள் நாயகத்துக்கு ஆறுமாத காலம் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால், ”வீனர்கள் சந்தேகப்படுவார்கள்” என்பதற்கு ஏற்ப அந்த வீனர்கள் இந்த ஆறுமாத காலத்தில் அருளப்பட்ட வசனங்களைச் சந்தேகித்திருப்பார்கள்.

மனநோய் பாதிப்பினால் அல்லாஹ் சொல்லாததை அல்லாஹ் சொன்னதாக ஏன் முஹம்மது சொல்லி இருக்க மாட்டார் என்று கேட்க மாட்டார்களா?

மற்றவர்களின் உள்ளங்களில் மனனம் ஆவதை விட அதிகமாக மனதில் பதியவைத்துக் கொள்ளும் ஆற்றலை அல்லாஹ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கி இருந்தான்.

(முஹம்மதே!) இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்! அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது.  எனவே நாம் அதை ஓதும்போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக! பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது.

75:16-19


குர்ஆனைப் பாதுகாப்பதற்காக எந்த மனிதருக்கும் வழங்காத கூடுதல் ஆற்றலை அல்லாஹ் நபியவர்களுக்கு வழங்கி பலப்படுத்தியதாக அல்லாஹ் கூறுகிறான். ஆனால் அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் செய்தி அவர்களின் உள்ளத்தை பலவீனத்திலும் பலவீனமாக ஆக்கிக் காட்டுகிறது.

பலமான உள்ளத்தை அல்லாஹ் கொடுத்திருக்க, சூனியத்தை நம்பும் கூட்டம் நபி அவர்களுக்கு பலவீனமான உள்ளம் இருப்பதாகச் சித்தரிக்கின்றது.

பைத்தியம் என்று நபியை ஏற்காதவர்கள் சொன்னார்களே அவர்களைப் போன்று இவர்களும் சொல்லாமல் சொல்கின்றார்கள்.

யூதர்கள் எப்படியாவது இஸ்லாத்தை வீழ்த்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார்கள். சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும் அதற்குப் பயன்படுத்த தயாராக இருந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆறு மாத காலம் மனநோயாளியாக இருந்தார்கள் என்றால் அந்த மனநோய் யூதர்களின் மந்திர சக்தியால ஏற்பட்டது என்றால் இந்த வாய்ப்பை அவர்கள் ஒருக்காலும் நழுவ விட்டிருக்க மாட்டார்கள்.

 நாங்கள் உங்களது இறைத்தூதரை எப்படி ஆக்கிவிட்டோம் பார்த்தீர்களா? இன்னுமா அவரை இறைத்தூதர் என்று நம்புகிறீர்கள்? என விமர்சித்திருப்பார்கள்.

இப்படி ஒருவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விமர்சிக்கவில்லை.

இப்படி நாம் கேள்வியெழுப்பினால் சூனியக் கட்சியினர் இதற்கும் ஒரு பதிலைச் சொல்லி நபியவர்களை மனநோயாளியாக காட்டியே தீர்வது என்பதில் குறியாக உள்ளனர்.

நபியவர்களுக்கு ஏற்பட்ட மனநோய் மனைவிமார்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருந்தது. மக்களில் யாருக்கும் தெரியாததால் இது போன்ற விமர்சனம் வரவில்லை என்கிறார்கள்.

சூனியம் வைத்து மனநோயாளியாக ஆக்கினானே அவனுக்கு கூடவா தெரியாமல் போய் விட்டது? அவன் தனது கூட்டத்தாரிடம் சொல்லி பெருமையடித்து இருக்க மாட்டானா என்பதைக் கூட அறியாத ஞான சூன்யங்களாக மாறி இக்கேள்வியைக் கேட்கிறார்கள்.

பொதுவாக தலைவர்களுக்கு அதிகமான பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இருக்கும். மக்கள் அவர்களை எளிதில் அணுக முடியாது. இந்த நிலையில் அவர்களுக்குப் பைத்தியம் பிடித்தால் அதை மக்களுக்குத் தெரியாமல் மறைக்க முடியும்.

ஆனால் நபியவர்கள் இதுபோல் மக்களால் அணுக முடியாத நிலையில் இருந்தார்களா? நிச்சயமாக இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களோடு மக்களாக இருந்தார்கள். தினமும் ஐந்து வேளைத் தொழுகைக்கும் வருவார்கள். யார் வேண்டுமானாலும் அவர்களைச் சந்திக்கலாம். முனாபிக்குகள் கூட பள்ளிவாசலுக்கு வந்து தொழக் கூடியவர்களாக இருந்தனர்.

இப்படியிருக்கும் போது இந்த ஆறுமாத பாதிப்பு மக்கள் அனைவரையும் எளிதில் சென்றடைந்திருக்கும். இதனால் மக்களுக்குத் தெரிந்திருக்கும்.

இதற்கு முன்பு ஆதாரமில்லாமல் தான் முஹம்மது நபி பைத்தியம் என்று சொன்னோம். இப்போது அவர்களின் மனைவியே சொல்லி விட்டார்கள் என்று ஆட்டம் போட்டிருக்க மாட்டார்களா? மக்களை இஸ்லாத்திற்கு வராமல் தடுக்க முயற்சிக்காமல் இருப்பார்களா? இஸ்லாத்தில் உள்ள மக்களும் மீண்டும் பழைய நிலைக்கே சென்றிருப்பார்களே?

இது போன்று எந்தச் செய்தியும் எந்த நூலிலும் பதிவு செய்யப்படவில்லை.

குர்ஆனை நாமே இறக்கினோம். நாமே பாதுகாப்போம் என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.

குர்ஆனைப் பாதுகாப்பது என்றால் நபி அவர்களின் உள்ளத்தைப் பாதுகாக்க வேண்டும். உள்ளம் சிதைந்து விட்டது என்று சொன்னால் செய்திகளும் சிதைந்து விடும். அப்போது குர்ஆனைப் பாதுகாக்க முடியாது.

அல்லாஹ்வுடைய அற்புதம் என்று நினைக்கும் இந்த திருக்குர்ஆன் பாதுகாக்கப்படாவிட்டாலும் சரி நாங்கள் இந்தச் செய்தியை ஏற்றுக் கொள்வோம் என்ற நிலையில் சூனியக்காரனுக்கு ஆதரவாக இந்த உலமாக்களின் பிரச்சாரம் உள்ளது.


முஸ்லிமல்லாத ஒருவரிடம் எங்கள் நபிக்கு யூதர்கள் சூனியம் செய்து மனநோயாளியாக ஆக்கி விட்டார்க்ள் என்று கூறினால் அவர்கள் இஸ்லாத்தை ஏற்பார்களா? நபிகள் நாயகத்தை விட அற்புத சக்தி பெற்ற யூதர்களிடம் செல்வார்களா?

அல்லாஹ்வை நம்பவேண்டும். சூனியக் கதை அதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

வேதத்தை நம்ப வேண்டும். அதிலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நம்ப வேண்டும். அதிலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

சூனியக்காரனுக்கு ஆற்றல் உள்ளதாக நம்பும் போது இஸ்லாத்தின் அடிப்படையே ஆட்டம் காண்கிறது.


அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கையில் எந்தச் சந்தேகமும் வரக்கூடாது. திருக்குர்ஆன் இறைவேதம் தான் என்பதில் கடுகளவு கூட சந்தேகம் வரக்கூடாது. இதில் சந்தேகத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு செய்தியையும் நாங்கள் நம்ப மாட்டோம். அவற்றை நாங்கள் முழுவதுமாக நிராகரிப்போம் என்ற அளவில் இருந்தால் தான் அது ஈமான்.

ஒரு தந்தை தனது சொத்தை ஒரு மகனுக்கு எழுதி வைத்தால் அவரது மற்ற மகன்கள் தனது தந்தைக்குப் பைத்தியம் பிடித்து இருந்த போது தான் எழுதிக் கொடுத்தார் என்று ஒரு ஆதாரத்தை உருவாக்கி நீதிமன்றம் நம்பும் வகையில் எடுத்து வைத்தால் அந்த மகனுக்கு எழுதிவைத்தது செல்லாது என்று தீர்ப்பு அளிக்கப்படும்.

இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும் இதுதான் சட்டம். முஸ்லிம் நாடுகளிலும் இதுதான் சட்டம்.

பைத்தியம் என்ற நிலையை ஒருவர் அடைந்தால் அவரது எல்லா கொடுக்கல் வாங்கலும் செல்லத் தகாததாக ஆகிவிடுகிறது.

சொத்து விஷயங்களில் சரியாக இதைப் புரிந்து வைத்திருக்கும் நாம் மார்க்க விஷயத்தில் மட்டும் மூளையை அடகு வைத்து விட்டு ஏறுக்கு மாறாக சிந்திப்பது சரிதானா?

பைத்தியம் என்பதையும் ஏற்றுக் கொள்வேன்; பைத்தியம் இல்லை எனப்தையும் ஏற்றுக் கொள்வேன் என்று ஒருவன் கூற முடியுமா?

குர்ஆன் பாதுகாக்கப்பட்டது என்பதையும் நான் நம்புவேன். பாதுகாக்கப்படவில்லை என்பதையும் நம்புவேன் என்று ஒருவன் கூறமுடியுமா?


அல்லாஹ்வைப் போல் எவனும் எந்த விஷயத்திலும் செயல் பட முடியாது என்றும் நம்புவேன். அவ்வாறு சூனியக்க்காரன் மட்டும் செயல்படுவான் என்றும் நம்புவேன் என்று அறிவுள்ள யாராவது சொல்வார்களா?

திருக்குர்ஆன் மீது அதிகளவு நம்பிக்கை வைத்திருப்பவனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது அதிக அளவு மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவனும் நபி அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்று எப்படி நம்புவான்?

இன்னொரு காரணத்தினாலும் நபியவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு இருக்க முடியாது என்பது உறுதியாகின்றது.

ஒருவரை இறைத்தூதர் என்று நம்புவதற்கு இறைவன் எத்தகைய ஏற்பாட்டைச் செய்திருந்தான்?

இறைத்தூதர்களாக அனுப்பப்படுவோர் மனிதர்களிலிருந்து தான் தேர்வு செய்யப்பட்டனர். எல்லா வகையிலும் அவர்கள் மனிதர்களாகவே இருந்தார்கள்.

எல்லா வகையிலும் தங்களைப் போலவே இருக்கும் ஒருவர் தன்னை இறைவனின் தூதர் என்று வாதிடுவதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தூதராக மனிதரையா அல்லாஹ் அனுப்பினான்? என்று அவர்கள் கூறுவதுதான், மனிதர்களிடம் நேர்வழி வந்த போது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது.

(திருக்குர்ஆன் 17:94)

"நீங்கள் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்வோராகவே இருக்கிறீர்கள்'' என்று கூறினர்.

(திருக்குர்ஆன் 36:15)

நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. உம்மைப் பொய்யராகவே கருதுகிறோம்.

(திருக்குர்ஆன் 26:186)

"நீர் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு இல்லை. நீர் உண்மையாளராக இருந்தால் சான்றைக் கொண்டு வருவீராக!''

(திருக்குர்ஆன் 26:154)

"இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடைவீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?'' என்று கேட்கின்றனர்.

(திருக்குர்ஆன் 25:7)

"இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்பதையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அருந்துவதையே இவரும் அருந்துகிறார்'' என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏகஇறைவனை) மறுத்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யெனக் கருதி, இவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை வழங்கினோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர்.

(திருக்குர்ஆன் 23:33)

"இவ்விருவரின் சமுதாயத்தினர் நமக்கு அடிமைகளாக இருக்கும் நிலையில் நம்மைப் போன்ற இரு மனிதர்களை நாம் நம்புவோமா?'' என்றனர்.

(திருக்குர்ஆன் 23:47)

அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. "இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார்? பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா?'' என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர்.

(திருக்குர்ஆன் 21:3)


"மனிதனால் நியமிக்கப்படும் தூதர் மனிதனாக இருக்கலாம். இறைவனால் நியமிக்கப்படும் தூதர் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவராகத்தான் இருக்க வேண்டும்'' என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் கருதினார்கள்.

மக்கள் இவ்வாறு எண்ணியதிலும் நியாயங்கள் இருந்தன. இறைத்தூதர் என்று ஒருவர் கூறியவுடனே அவரை ஏற்றுக் கொள்வது என்றால் இறைத்தூதர்கள் என்று பொய்யாக வாதிட்டவர்களையும் ஏற்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

மற்ற மனிதர்களிலிருந்து எந்த வகையிலாவது இறைத்தூதர்கள் வேறுபட்டிருக்க வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை ஓரளவு இறைவன் ஏற்றுக் கொள்கிறான்.

தனது தூதராக யாரை அனுப்பினாலும் அவர் இறைத்தூதர் தான் என்பதை நிரூபித்துக் காட்டும் வகையில் சில அற்புதங்களை அவர்களுக்குக் கொடுத்து அனுப்புகிறான்.

மற்ற மனிதர்களால் செய்ய முடியாத அந்த அற்புதங்களைக் காணும் போது அவர் இறைவனின் தூதர்தான் என்று நம்புவதற்கு நேர்மையான பார்வையுடயவர்களுக்கு எந்தத் தயக்கமும் ஏற்படாது.

இதன் காரணமாகவே எந்தத் தூதரை அனுப்பினாலும் அவருக்கு அற்புதங்களை வழங்கியே அனுப்பி வைத்ததாகத் திருக்குர்ஆன் பல்வேறு வசனங்களில் சுட்டிக்காட்டுகிறது.

தம்மை இறைத்தூதர்கள் என்று நிரூபிப்பதற்காக எல்லாதூதர்களுக்கும் அற்புதங்கள் வழங்கப்பட்டன. அந்த அற்புதங்களை வைத்துத் தான் அவர்கள் தூதர்கள் என்று நம்பப்பட்டனர்.

(முஹம்மதே!) உம்மை அவர்கள் பொய்யரெனக் கருதினால் உமக்கு முன் பல தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் தெளிவான சான்றுகளையும், ஏடுகளையும், ஒளி வீசும் வேதத்தையும் கொண்டு வந்தனர்.

திருக்குர்ஆன் 3:184,

(முஹம்மதே!) இந்த ஊர்கள் பற்றிய செய்திகளை உமக்குக் கூறுகிறோம். அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளுடன் வந்தனர். முன்னரே அவர்கள் பொய்யெனக் கருதியதால் அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. இவ்வாறே (தன்னை) மறுப்போரின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்.

திருக்குர்ஆன் 7:101

அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கருதினால் அவர்களுக்கு முன் சென்றோரும் (தூதர்களை) பொய்யரெனக் கருதியுள்ளனர். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளையும், ஏடுகளையும், ஒளிவீசும் வேதத்தையும் கொண்டு வந்தனர்.

திருக்குர்ஆன் 35:25

அவருக்குப் பின்னர் பல தூதர்களை அவரவர் சமுதாயத்திற்கு அனுப்பினோம். அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் முன்னரே பொய்யெனக் கருதியதால் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. வரம்பு மீறியோரின் உள்ளங்கள் மீது இவ்வாறே முத்திரையிடுவோம்.

திருக்குர்ஆன் 10:74

உங்களுக்கு முன் அநீதி இழைத்த பல தலைமுறையினரை அழித்திருக்கிறோம். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. குற்றம் புரியும் கூட்டத்தை இவ்வாறே தண்டிப்போம்.

திருக்குர்ஆன் 10:13

அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தபோது மறுத்ததே இதற்குக் காரணம். எனவே அவர்களை அல்லாஹ் தண்டித்தான். அவன் வலிமையுள்ளவன்; கடுமையாகத் தண்டிப்பவன்.

திருக்குர்ஆன் 40:22

அவர்களுக்கு முன் சென்ற நூஹுடைய சமுதாயம், ஆது, மற்றும் ஸமூது சமுதாயம், இப்ராஹீமின் சமுதாயம், மத்யன்வாசிகள், (லூத் நபி சமுதாயம் உள்ளிட்ட) தலைகீழாகப் புரட்டப்பட்டோரைப் பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைக்கவில்லையா? அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கு இழைத்தவனாக இல்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கு இழைத்தனர்.

திருக்குர்ஆன் 9:70

அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வருவோராக இருந்தும், ஒரு மனிதர் எங்களுக்கு வழிகாட்டுவதா? என்று அவர்கள் கூறி (ஏகஇறைவனை) மறுத்துப் புறக்கணித்ததே இதற்குக் காரணம். அல்லாஹ் அவர்களைப் புறக்கணித்தான். அல்லாஹ் தேவைகளற்றவன்; புகழுக்குரியவன்.

திருக்குர்ஆன் 64:6

"உங்களிடம் உங்கள் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வரவில்லையா?'' என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு இவர்கள் ''ஆம்'' என்று கூறுவார்கள். அப்படியானால் நீங்களே பிரார்த்தியுங்கள்! என்று (நரகின் காவலர்கள்) கூறுவார்கள். (ஏகஇறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே முடியும்.

திருக்குர்ஆன் 40:50

நமது தூதர்களைத் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும், மக்கள் நீதியை நிலைநாட்ட தராசையும் இறக்கினோம்.

திருக்குர்ஆன் 57:25


இறைத்தூதர்கள் என்பதை நிரூபிக்க நபிமார்களுக்கு அல்லாஹ் அற்புதங்களை வழங்கினான் என்பதையும் அற்புதம் வழங்கப்படாமல் எந்த தூதரும் அனுப்பப்படவில்லை என்பதையும் இவ்வசனங்களில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்

தான் செய்து காட்டும் அற்புதங்கள் மூலம்தான் ஒரு இறைத்தூதர் தன்னை இறைத்தூதர் என்று நிரூபிக்கும் நிலையில் இருக்கிறார்.

இந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதர்கள் சூனியம் வைத்து அவர்களையே மந்திர சக்தியால் முடக்கிப் போட்டிருந்தால் இறைத்தூதரை விட யூதர்கள் செய்து காட்டியது பெரிய அற்புதமாக மக்களால் கருதப்பட்டிருக்கும்.

இறைவனால் தேர்வு செய்யப்பட்டவரையே முடக்கிப் போட்டார்கள் என்றால் அன்று எத்தகைய விளைவுகள் ஏற்பட்டிருக்கும்?

"நம்மைப் போன்ற மனிதராக இவர் இருந்தும் இவர் செய்து காட்டிய சில அற்புதங்களைக் கண்டு இறைத்தூதர் என்று நம்பினோம்; இன்று இவரது எதிரிகள் இவரது மனநிலையையே பாதிக்கச் செய்து விட்டார்களே; இவரை விட யூதர்கள் அல்லவா ஆற்றல் மிக்கவர்கள்'' என்று அம்மக்களில் கனிசமானவர்கள் எண்ணியிருப்பார்கள்.

"இவர் செய்து காட்டிய அற்புதத்தை விட யூதர்கள் பெரிய அற்புதம் செய்து காட்டி விட்டார்கள். அற்புதம் செய்தவரையே மந்திர சக்தியால் வீழ்த்தி விட்டார்கள்'' என்று ஒருவர் கூட விமர்சனம் செய்யவில்லை. அதைக் காரணம் காட்டி ஒருவர் கூட இஸ்லாத்தை விட்டு மதம் மாறிச் செல்லவில்லை.

"எவ்வித சாதனத்தையும் பயன்படுத்தாமல் சீப்பையும், முடியையும் பயன்படுத்தி இறைத்தூதரை வீழ்த்தினார்கள்'' என்பது தவறான தகவல் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

இறைத்தூதர்களுக்கு எதிராக இத்தகைய அற்புத சக்தியை எதிரிகளுக்கு வழங்கி, நம்பிக்கை கொண்ட மக்களை அல்லாஹ் நிச்சயம் தடம் புரளச் செய்திருக்க மாட்டான் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டிருக்கவே முடியாது என்பதில் ஐயமில்லை.

இன்னும் என்னென்ன பாதிப்புகளை சூனியம் ஏற்படுத்துகின்றது என்பதை இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்து பார்க்கலாம்.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner