Tuesday, December 30, 2014

பெண் வீட்டு விருந்து கூடுமா?

கேள்வி - ஒரு தந்தை தனது மகளின் திருமணத்தை ஒட்டி மன விருப்பத்துடன் விருந்தளித்தால் அது தவறா? - நூருத்தீன்

பதில் பி.ஜே - இஸ்லாத்தில் பெண் வீட்டு விருந்து என்பதே கிடையாது. திருமணத்தில் ஒரே ஒரு விருந்து முறையை மட்டுமே இஸ்லாம் கற்றுத் தந்துள்ளது. அது திருமணத்தை முன்னிட்டு மாப்பிள்ளை கொடுக்கும் வலீமா விருந்தாகும். இதைத் தவிர வேறு விருந்தை திருமணத்தில் இஸ்லாம் காட்டித் தரவில்லை.

ஆனால் இன்றைக்கு மாப்பிள்ளை கொடுக்க வேண்டிய வலீமாவைப் போன்று பெண் வீட்டு விருந்து என்பது திருமணத்தில் இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்டது. இது இல்லாமல் திருமணம் இல்லை என்கின்ற அளவிற்கு சில ஊர்களில் எழுதப்படாத சட்டமாகவே இது சமூகத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. எந்த அளவிற்கென்றால் பெண் வீட்டாருக்கும் சேர்த்து நாங்கள் விருந்தளிக்கின்றோம் என மாப்பிள்ளை வீட்டார் ஒத்துக் கொண்டால் கூட பெண் வீட்டார் இந்த விருந்தைக் கைவிடுவதில்லை. நடத்தியே தீர வேண்டும் என்று நினைக்கின்றனர்.

ஏனென்றால் பெண் வீட்டார் விருந்து போடா விட்டால் அது தனக்கும் தனது குடும்பத்துக்கும் கேவலம் என்று பெண் வீட்டார் கருதுகின்றனர். பெண் வீட்டார் தங்களுக்கு வேண்டியவர்களை அழைத்து திருமண விருந்து கொடுக்காவிட்டால் அவர்களைக் கஞ்சர்களாகவும் கேவலமாகவும் சமுதாயம் பார்ப்பதே இதற்குக் காரணம். எனவே தான் சக்தி உள்ளவர்களும் சக்தி இல்லாதவர்களும் இந்த விருந்தை எப்பாடுபட்டாவது நடத்தி வருகின்றனர்.

இத்தகைய பெண்வீட்டு விருந்து என்பது வரதட்சணையை விட கொடுமையானதும் கொடூரமானதாகும். மணப்பெண்ணின் வாழ்க்கைக்கு பொறுப்பேற்றுக் கொள்ளும் கணவன் பெண் வீட்டாரிடம் எதையும் கேட்டு வாங்குவதே கூடாது என்கிற போது மணப் பெண்ணுக்கு எந்த வகையிலும் பலன் தராத ஊர் மக்கள் பெண் வீட்டாரிடமிருந்து உணவை எதிர்பார்ப்பது நிச்சயம் வரதட்சணையை விட கொடுமையானது தான். எனவே பெண் வீட்டு விருந்து என்பது ஒருவரின் பொருளை அநியாயமான முறையில் உண்பதற்குச் சமமான குற்றமாகும்.

பல திருமணங்களில் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டார் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் பெண் வீட்டாரே விருந்தளிக்கும் நிலையும் இருக்கின்றது. இதுவும் வரதட்சணையே. "பெண்வீட்டார் மீது எந்த ரீதியில் பொருளாதாரச் சுமையை சுமத்தினாலும் அவை அனைத்தும் வரதட்சணையாகும்.

மாப்பிள்ளை வீட்டார் நிர்பந்தப்படுத்தாத நிலையில் பெண் வீட்டார் தானாக முன்வந்து விருந்துக்கு பொறுப்பேற்பது தவறல்ல என்று சிலர் வாதிடுகின்றனர். இத்தகைய பெண் வீட்டார்கள் தான் சமுதாயத்திற்கு மிகவும் ஆபத்தானவர்கள்.   ஏனென்றால் திருமணத்தில் வலீமா அல்லாத வேறு ஒரு விருந்தை இஸ்லாம் காட்டித் தரவில்லை என்கிற போது இஸ்லாம் காட்டித் தராத விருந்தாகவும் சமுதாயத்தைச் சீரழிக்கக்கூடிய விருந்தாகவும் உள்ள இந்த பெண் வீட்டு விருந்தை ஒழிக்க பாடுபடுவது ஒவ்வொருவரின் கடமையாகும்.

தனக்கு அனுமதிக்கப்பட்ட ஒரு காரியத்தைக் கைவிடுவதால் சமுதாயத்துக்கு நன்மை ஏற்படும் என்றால் சமுதாய நலம் விரும்புவர்கள் நிச்சயமாக அந்தக் காரியத்தை விட்டு விடுவார்கள். பெண் வீட்டார் இவ்விஷயத்தில் சமுதாய நன்மையைக் கவனத்தில் கொள்ளாமல் நான் விரும்பிக் கொடுப்பது தவறா? என்று கேட்பது அவர்களின் சுயநலத்தை வெளிப்படுத்துகின்றது. மேலும் பெண்வீட்டு விருந்தை நடத்தும் அனைவரும் இந்த வாதத்தின் மூலம் தங்களது வழிகேட்டை நியாயப்படுத்துவதற்கும் இவர்கள் காரணமாக அமைகின்றனர்.

ஒரு அரசு ஊழியர் ஒரு காரியத்தை முடித்துத் தருவதற்காக ஒரு நீதிபதி தனக்கு சாதகமாக தீர்ப்பளித்ததற்காக ஒருவர் சந்தோசப்பட்டு விரும்பி கொடுத்தால் அது லஞ்சம் இல்லை என்று கூற முடியுமா?


அஸ்த் எனும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஜகாத்) வசூலிப்பவராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நியமித்தார்கள். அவர் இப்னுல் லுத்பிய்யா என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஜகாத் வசூலித்துக் கொண்டு வந்த போது, "இது உங்களுக்குரியது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது'' என்று கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இவர் தன் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்பு கிடைக்கிறதா? இல்லையா? என்று பார்க்கட்டும். என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் அந்த ஜகாத் பொருளிலிருந்து முறைகேடாக எதனைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தனது பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும். பசுவாகவோ, ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும்'' என்று கூறினார்கள். பிறகு அவர்களுடைய அக்குள் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தமது கைகளை உயர்த்தி, "இறைவா! நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா?'' என்று மூன்று முறை கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாயிதி (ரலி)

நூல்: புகாரி 2597, 6636


வசூல் செய்த இந்தத் தோழர், "மக்கள் தாமாகத் தந்தார்கள்'' என்ற வாதத்தை முன் வைக்கின்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை விடச் சிறந்த வாதத்தை முன்வைக்கின்றார்கள். இவர் வீட்டில் இருந்தால் இது கிடைக்குமா? என்று கேட்கின்றார்கள்.

பெண் வீட்டு விருந்து விஷயத்தில் இது போன்றே நாமும் கேட்கின்றோம். "தன் மகளை மணந்து கொண்டார் என்பதற்காகத் தான் தான் இந்த விருந்தைப் பெண் வீட்டார் வைக்கின்றார்களா? அல்லது வேறு காரணத்திற்காகவா? தன் மகளைக் கட்டிக் கொடுத்திருப்பதால் மாப்பிள்ளை மற்றும் மாப்பிள்ளை வீட்டார் தன் மகளை ஒழுங்காக வைத்துக் காப்பாற்ற வேண்டும் என்ற காரணத்திற்காகத் தான் பெண் வீட்டுக்காரர்கள் இந்த விருந்து, சீதனம், நகை, தொகை எல்லாவற்றையும் கொடுக்கின்றார்கள். உண்மையில் பெண் வீட்டுக்காரர்கள் விருந்து கொடுப்பது ஒரு மறைமுக நிர்ப்பந்தமே!

இன்று பெற்றோர் இறந்த பிறகு அவர்களிடமிருந்து கிடைக்க வேண்டிய சொத்துக்கள் பெண் மக்களுக்குக் கிடைப்பதில்லை. ஆண் மக்கள் அந்தச் சொத்தை அப்படியே அபகரித்து அனுபவித்துக் கொள்கின்றார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம், பெண் மக்களுக்கான கல்யாணச் செலவு தான். கழுத்தில் போட்ட நகை, கையில் கொடுத்த தொகை, வைத்த விருந்து ஆகியவற்றிற்கு நிறைய செலவாகி விட்டது; எனவே அதைப் பெண்ணுக்குச் சேர வேண்டிய சொத்தில் கழித்துக் கொள்கிறோம்; அதற்கு இது சரியாகி விட்டது என்று காரணம் கூறுகின்றனர். இப்படி வாரிசுக்குச் சேர வேண்டிய சொத்தை மறுப்பது வரம்பு மீறுதலாகும். இதற்குத் தண்டனை நிரந்தர நரகம் என்று அல்குர்ஆன்4:13,14 வசனங்கள் கூறுகின்றன. 

இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. அல்குர்ஆன் (4:13)

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்து அவனது வரம்புகளை மீறுபவனை (அல்லாஹ்) நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு. அல்குர்ஆன் (4:14)
 
நிரந்தர நரகத்திற்குத் தூண்டும் இந்தப் பாவத்தை எந்த முஸ்லிமும் செய்யக்கூடாது.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner