Tuesday, December 30, 2014

முஸ்லிமல்லாதவர் மரணித்த செய்தி கேட்டால் இன்னாலில்லாஹி... கூறலாமா?

கேள்வி - முஸ்லிமல்லாதவர் மரணித்த செய்தி கேட்டால் இன்னாலில்லாஹி கூறலாமா? - எம்.பீர்முஹம்மத்

பதில் பி.ஜே - நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள் என்பது இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் என்ற சொல்லின் நேரடிப் பொருளாகும்.

இதை எப்போது சொல்ல வேண்டும் என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளான்.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!  தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள்.  அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர்.

திருக்குர்ஆன் 2:155, 156, 157


ஒரு முஸ்லிமுக்கு இவ்வுலகில் துன்பம் ஏற்படும் போது இடிந்து போய் முடங்கி விடாமல் மேற்கண்டவாறு கூறி பொறுமையை மேற்கொள்ள வேண்டும் என்று மேற்கண்ட வசனம் கூறுகிறது.

ஒருவருக்கு முஸ்லிமல்லாத தந்தை அல்லது முஸ்லிமல்லாத மகன் இருந்து அவர் இறந்து விட்டால் அந்த முஸ்லிமுக்கு துன்பத்தை தரும். ஏனெனில் முஸ்லிமல்லாதவராக இருந்தாலும் அவர் மூலம் கிடைத்து வந்த நன்மைகள் இனி மேல் கிடைக்காது எனும் போது அது அந்த முஸ்லிமுக்கு துன்பமாகத் தான் அமையும். அது போல் சில நண்பர்கள் மூலம் ஒரு முஸ்லிம் பலவித நன்மைகளை அடைந்து வரும் போது அந்த நண்பர்களில் ஒருவர் மரணித்து விட்டால் அதனால் முஸ்லிம் பாதிக்கப்படுவார். இப்படி முஸ்லிமுக்கு தனது இழப்பின் மூலம் ஒருவர் பாதிப்பை ஏற்படுத்தினால் அதற்காக இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் எனக் கூறலாம். நமக்கு துன்பம் ஏற்படுகிறதா என்பது தான் இதில் கவனிக்க வேண்டியதாகும். மேலும் மேற்கண்ட வாக்கியத்தில் இறந்தவருக்கு பாவ மன்னிப்பு கேட்பது போன்ற கருத்து அமைந்திருக்கவில்லை. மாறாக இவர் போனது போல் நாமும் போவோம் என்ற நம்மை ஆறுதல் படுத்திக் கொள்ளும் கருத்து தான் இதில் இருக்கிறது.

அது போல் ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி கொடுங்கோலனாக இருக்கிறார். அல்லது மக்களை தவறான கொள்கையைக் கூறி வழி கெடுத்துக் கொண்டிருக்கிறார். இவர் மரணித்து விட்டால் இது முஸ்லிம்களுக்கு துன்பமான காரியம் அல்ல. மாறாக துன்பத்தில் இருந்து கிடைக்கும் விடுதலை ஆகும். இத்தகையவர்கள் இறந்து விட்ட செய்தியை நாம் கேள்விப்படும் போது நாம் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் எனக் கூற வேண்டியதில்லை. ஏனெனில் இதில் நமக்கு எந்தத் துன்பமும் ஏற்படவில்லை.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner