Sunday, December 7, 2014

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் - தொடர் 4 - பி.ஜே

அடுத்து இன்னொரு செய்தியைப் பாருங்கள்.

குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால் தான் பால்குடி உறவு உண்டாகும் என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என்று மாற்றப்பட்டது. இவ்வசனம் குர்ஆனில் ஓதப்பட்டு வந்த காலத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் (2876)


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ஒரு வசனம் திருக்குர்ஆனில் இருந்தது என்று ஆயிஷா (ரலி) கூறியதாக இந்தச் செய்தி கூறுகிறது.

நபியவர்கள் மரணிக்கும் வரை திருக்குர்ஆனில் இப்படி ஒருவசனம் இருந்திருந்தால் இப்போதும் அந்த வசனம் திருக்குர்ஆனில் இருக்க வேண்டும். ஆனால் இப்படி ஒரு வசனம் திருக்குர்ஆனில் இல்லை.

இதிலிருந்து தெரிவது என்ன? நபியவர்கள் காலத்தில் ஓதப்பட்டு வந்த வசனம் அதன் பின்னர் மாற்றப்பட்டு விட்டது என்ற கருத்தைத் தான் இது தருகிறது.

திருக்குர்ஆனில் ஒரு வசனத்தை அல்லாஹ் நபி அவர்கள் மூலமாக மாற்றுவானே தவிர, வேறு யாரும் மாற்ற முடியாது.

இப்போதுள்ள எந்த ஒரு குர்ஆனிலும் இது போன்ற ஒரு வசனம் கிடையாது. அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்ட்ட உஸ்மான் (ரலி) அவர்களின் குர்ஆன் பிரதியிலும் இது போன்ற வசனம் கிடையாது.

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.

திருக்குர் ஆன் 15:9


அல்லாஹ் திருக்குர்ஆனைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்று இருக்கும் போது திருக்குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்ற கருத்தைத் தரும் இந்தச் செய்தி கட்டுக் கதையாகத் தான் இருக்க முடியும். இந்தச் செய்தியை நம்பினால் திருக்குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று நம்புவதாக ஆகும்..

ஹதீஸை நாம் ஏற்றுக் கொள்ள அறிவிப்பாளரின் வரிசை மட்டும் சரியாக இருப்பது போதாது. அது குர்ஆனுடன் மோதாமலும் இருக்க வேண்டும்.

இது போன்ற ஹதீஸ்களை ஏன் நம்பவில்லை என்று அல்லாஹ் மறுமையில் கேட்டால், குர்ஆனைப் பாதுகாப்பதாக நீ சொல்லிருக்கின்றாய். இது குர்ஆனுக்கு முரண்படுகின்றது அதனால் நம்பவில்லை என்று சொல்லிவிடலாம்.

இது போன்ற ஹதீஸ்களை நம்புபவர்களை அல்லாஹ் இந்த ஹதீஸ்களை ஏன் நம்பினீர்கள் என்று கேட்டால் இது அறிவிப்பாளர் சரியாக இருந்தார்கள். புகாரி, முஸ்லிம் போன்ற நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்று சொன்னால் ஏற்பானா? எனது வசனம் பாதுகாக்கப்படவில்லை என்று எப்படி நீ நம்பினாய் என்று கேட்கமாட்டானா?

இந்த ஹதீஸ்களைக் கூறி மக்களைக் குழப்பியது போல் அல்லாஹ்வை குழப்பமுடியுமா?

இதை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள பின்வரும் ஹதீஸையும் பாருங்கள்!

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுடைய புதல்வர் சுலைமான் (அலை) அவர்கள், நான் இன்றிரவு (என்னுடைய) நூறு துணைவியரிடமும் சென்று வருவேன். அப்பெண்களில் ஒவ்வொருவரும் இறை வழியில் அறப்போர் புரியும் (வீரக்) குழந்தை ஒன்றைப் பெற்றெடுப்பார்கள் என்று கூறினார்கள். அப்போது (சுலைமான் -அலை) அவர்களிடம் அந்த வானவர் , இன்ஷா அல்லாஹ்-இறைவன் நாடினால் என்று (சேர்த்துச்) சொல்லுங்கள் என்றார். (ஆனால்,) சுலைமான் (அலை) அவர்கள், இன்ஷா அல்லாஹ்' என்று கூறவில்லை; மறந்து விட்டார்கள். அவ்வாறே சுலைமான் (அலை) அவர்களும் தம் துணைவியரிடம் சென்றார்கள். ஒரே ஒரு மனைவியைத் தவிர வேறெவரும் குழந்தை பெற்றெடுக்கவில்லை. அந்த ஒரு மனைவியும் (ஒரு புஜமுடைய) அரை மனிதரைத்தான் பெற்றெடுத்தார்.

புகாரி : 5242


ஒரே இரவில் நூறு மனைவியிடத்தில் சேருவதற்கு சக்தி உள்ளதா? இல்லையா? என்பது வேறு விஷயம்.

ஈமானைப் பாதிக்கும் அம்சத்தைப் பற்றி மட்டும் சுட்டிக் காட்டுகின்றேன்.

ஒரு நபி மறைவான விஷயங்களைப் பற்றி அல்லாஹ் அறிவித்துக் கொடுக்காமல் பேசக் கூடாது. அல்லாஹ் அறிவிக்காமல் மறைவான விஷயங்கள் அவர்களுக்குத் தெரியாது.

நூறு குழந்தைகளைப் பெற்றெடுப்பேன் என்று சுலைமான் நபி வஹியைக் கொண்டு சொல்லவில்லை. வஹியைக் கொண்டு சொல்லியிருந்தால் நூறு குழந்தை பெற்றிருப்பார்கள்.


நூறு குழந்தைகள் பிறப்பார்கள். அவர்கள் அனைவரும் ஆண்குழந்தைகளாகத் தான் பிறப்பார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களாக இருப்பார்கள் என்று சொல்வது அனைத்தும் மறைவான விஷயங்கள்.

அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறியமாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.

திருக்குர்ஆன் 34 : 31

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். நாளை என்ன நடக்கவிருக்கிறது என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். கருவறையில் ஏற்படும் குறைவை(யும் கூடுதலையும்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். மழை எப்போது வரும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். எந்த உயிரும் தாம் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது. மேலும் மறுமை (நாள்) எப்போது நிகழும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி (4697)

கருவறையில் உள்ளவற்றை அல்லாஹ்வைத் தவிர யாராலும் அறிய முடியாது என்றால் ஏகத்துவத்தை மக்களுக்கு போதிக்க வந்த ஒரு நபி இவ்வாறு சொல்ல முடியுமா?

இந்தச் செய்தி சுலைமான் நபியின் பெயரால் சொல்லப்பட்டிருந்தாலும், இது சுலைமான் நபி சொல்லியிருக்க முடியாது என்றுதான் உண்மை முஸ்லிம்கள் நம்ப முடியும்.

இது போல் சொல்வதற்கு நாமே பயப்படுவோம். ஒரு நபி இப்படி சொல்லியிருக்கவே முடியாது சுலைமான் நபி இப்படி சொல்லியிருக்கின்றார்கள் என்று முகம்மது நபியும் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று நம்ப வேண்டும்.

இன்னொரு செய்தியைப் பாருங்கள்!

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மலக்குல் மவ்த்' (உயிரை எடுத்துச் செல்லவரும் வானவர்) மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அனுப்பப்பட்டார். தம்மிடம் அவர் வந்த போது மூசா (அலை) அவர்கள் அவரை (முகத்தில்) அறைந்து விட்டார்கள். உடனே அவர் தம் இறைவனிடம் திரும்பிச் சென்று, மரணத்தை விரும்பாத ஓர் அடியாரிடம் என்னை நீ அனுப்பி விட்டாய் என்று கூறினார். இறைவன், நீ அவரிடம் திரும்பிச் சென்று அவரது கையை ஒரு காளை மாட்டின் முதுகின் மீது வைக்கச் சொல். (அதன் முதுகிலுள்ள முடிகளில் எந்த அளவிற்கு) அவரது கரம் மூடுகின்றதோ (அதில்) ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஓர் ஆண்டு (இந்த உலகில் வாழ) அவருக்கு அனுமதி உண்டு (என்று சொல்.) எனக் கூறினான். (அவ்வாறே அந்த வானவர் திரும்பிச் சென்று மூசா (அலை) அவர்களிடம் கூறிய போது) அவர், இறைவா! (அத்தனை காலம் வாழ்ந்து முடிந்த) பிறகு என்ன நடக்கும்? என்று கேட்டார்கள். இறைவன், மரணம் தான் என்று பதிலளித்தான். மூசா (அலை) அவர்கள், அப்படியென்றால் இப்போதே என் உயிரை எடுத்துக் கொள் என்று கூறிவிட்டு, (பைத்துல் மக்திஸ் என்னும்) புனித பூமிக்கு நெருக்கமாக அதிலிருந்து கல்லெறியும் தூரத்தில் தம் அடக்கத் தலம் அமைந்திடச் செய்யுமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள்.

(இதை எடுத்துரைத்த போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் அங்கு (பைத்துல் மக்திஸில்) இருந்திருந்தால் சாலையோரமாக செம்மணற் குன்றின் கீழே அவரது மண்ணறை இருப்பதை உங்களுக்கு காட்டி யிருப்பேன் என்று கூறினார்கள்.

ஹம்மாம் (ரஹ்) அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்கள் இதே போன்று நபி (ஸல்) அவர்களிடமிருந்து எமக்கு அறிவித்து உள்ளார்கள் என்று கூறுகிறார்கள்.

புகாரி : 3407

அல்லாஹ் ஒருவருக்கு மரணத்தைக் கொடுத்தால் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மலக்குல் மவுத்தை அல்லாஹ் அனுப்பினால் மூஸா அலை அவர்கள் தமது உயிரை எடுக்க ஒத்துழைத்து இருக்க வேண்டும். அல்லது வாழ்நாளை அதிகரிக்க கோரிக்கை வைத்திருக்க வேண்டும். உயிரை எடுக்கவே நியமிக்கப்பட்டு இருக்கும் மலக்குகள் அவரின் அனுமதியில்லாமல் அல்லாஹ் சொன்னதை நிறைவேற்றியிருக்க வேண்டும்.

அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்) குறை வைக்க மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 6 : 61


அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்.

திருக்குர்ஆன் 21 : 27


தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை அவர்கள் அஞ்சுகின்றனர். கட்டளையிடப்பட்டதைச் செய்கின்றனர்.

திருக்குர்ஆன் 16 : 50

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள்.
திருக்குர்ஆன் 66 : 6

இத்தகைய தன்மை பெற்ற வானவர்கள் அல்லாஹ் சொன்னதைத் தான் செய்வார்களே தவிர அடிவாங்கிக் கொண்டு திரும்ப மாட்டார்கள் என்ற சாதாரண அறிவு இருப்பவர் கூட இதை ஏற்க மாட்டார்.

அல்லாஹ்வின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வது ஒரு முஃமினின் மீது கடமை. இறைவன் அளித்த தீர்பபை நிராகரித்ததோடு அத்தீர்ப்பைக் கொண்டு வந்த தூதரையும் தாக்குவது இறைத் தூதரின் பண்பாக இருக்க முடியாது. இப்படிப்பட்ட செயல் இறை நிராகரிப்பில் தள்ளிவிடும்.

வந்தவர் வானவர் என்று தெரிந்து கொண்டே அவரை அறைந்து விரட்டியது அல்லாஹ்வுக்கு எதிரான செயல் என்ற சாதாரண உண்மை தெரிந்தவர்கள் இதை நம்ப முடியுமா?

இதை நம்பினால் அல்லாஹ்வை எதிர்த்துப் பேசலாம் என்ற நிலை வருகின்றது.

அல்லாஹ்வை எதிர்த்த யூனுஸ் நபியின் வரலாற்றை அல்லாஹ் தன் திருமறையில் சொல்லிக் காட்டியிருக்கின்றான்.

மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். "அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம்'' என்று நினைத்தார். "உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்'' என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார். அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம்.

திருக்குர்ஆன் 21:87,88

உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர் (யூனுஸ்) போல் நீர் ஆகிவிடாதீர்! அவர் துக்கம் நிறைந்தவராக (இறைவனை) அழைத்தார். அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார். ஆயினும் அவரை அவரது இறைவன் தேர்வு செய்தான். அவரை நல்லவராக்கினான்.

திருக்குர்ஆன் 68:48,49,50
யூனுஸ் நபியின் சம்பவத்தை அல்லாஹ் சொல்லிவிட்டு முகம்மதே மீன் வயிற்றில் இருந்தாரே அவரைப் போன்று ஆகிவிடக் கூடாது என்று எச்சரிக்கின்றான்.

இப்படி ஒன்று நடந்திருந்தால் மூஸா நபியையும் கண்டித்து அல்லாஹ் வசனத்தை இறக்கியிருப்பானே? எனவே இதுவும் கட்டுக்கதை என்று தான் மூஸா நபியை மதிப்பவர்கள் முடிவு செய்ய வேண்டும்.

மேலும் ஒரு செய்தியைப் பாருங்கள்:

(ஒரு முறை) சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே சாலிம் பின் மஅகில் என்னுடைய வீட்டிற்கு வரும் போது அபூஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியை நான் பார்க்கிறேன் என்று கூறினார்கள். சாலிம் (ரலி) அவர்கள் அபூஹுதைஃபாவின் அடிமை ஆவார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு என்று கூறினார்கள். சஹ்லா (ரலி) அவர்கள் அவர் பருவ வயதை அடைந்த மனிதராயிற்றே. அவருக்கு நான் எவ்வாறு பாலூட்டுவேன்? என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தவாறு அவர் பருவ வயதை அடைந்தவர் என்று எனக்கும் தெரியும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள்

நூல் : முஸ்லிம் (2878)

பருவ வயதை அடைந்த இளைஞன் ஒரு பெண்ணிடம் பால் குடிக்கும் போது குழந்தை போன்ற எண்ணம் ஏற்படுமா? தவறான எண்ணம் வருமா?

அன்னியப் பெண்ணுடன் தனித்திருக்கும் ஒருவன் மாட்டிக் கொண்டால் நான் இப்பதான் பால் குடித்தேன்; எனவே இவர் என் அம்மா ஆகி விட்டார். இவருடன் நான் தனிமையில் இருப்பது தவறல்ல என்று வாதிட்டால் அதை யாரேனும் ஏற்பார்களா?

பாலூட்டுவதைப் பற்றிய சட்டம் மார்க்கத்தில் தெளிவாக இருக்கின்றது.

அல்லாஹ் தன் திருமறையில் தாய்மார்கள் குழந்தைக்கு இரண்டு வயது வரை பாலூட்டுவார்கள் என்று சொல்லிக் காட்டுகின்றான்.

பாலூட்டுவதை முழுமைப்படுத்த வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும்.

அல்குர்ஆன் (2 : 233)

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.

 அல்குர்ஆன் (31 : 14)

அவனை (மனிதனை) அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள்.

அல்குர்ஆன் (46 : 15)

ஒரு குழந்தைக்கு ஒரு பெண் பால் கொடுத்து வளர்த்து வந்து பின்னர் அவர் பருவ வயதை அடைந்தால் அவர்கள் தனியாக இருப்பதில் தவறில்லை. அந்த பெண் பால்குடித் தாயாகி விடுவார்.

ஆனால் இந்தச் செய்தியை ஆதரிக்கும் சூனியக் கூட்டம் இது சரியான ஹதீஸ் என்று சொல்கின்றார்கள். அப்போது இதனை நீங்கள் நடைமுறைப்படுத்துவீர்களா என்று கேட்டால் பதில் வரவில்லை.

அடிப்படையைச் சரியாக விளங்கி வைத்திருக்க வேண்டும்.

இவை அனைத்தையும் இங்கே விளக்குவதற்குக் காரணம் சூனியத்தால் எதுவும் செய்ய முடியும் என்ற கொள்கை உடையவர்கள் எடுத்துவைக்கும் ஹதீஸ்கள் எத்தனை குர்ஆன் வசனங்களுக்கு முரண்படுகின்றது என்பதை விளக்குவதற்காகத் தான் இவை அனைத்தையும் கூறியுள்ளேன்.

திருக்குர்ஆனை எவ்வாறு புரிந்து கொள்வதை சில உதாரணங்கள் மூலம் இன்னும் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

பொதுவான அர்த்தம் தரும் சொற்களுக்கு எப்போதும் ஒரே மாதிரியான பொருளை நாம் கொடுக்க மாட்டோம். அதைச் சொல்பவர் யார் என்பதைப் பொருத்து பொருள் மாறுபடும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை ஏகத்துவம் என்பது எல்லோருக்கும் தெரியும்.

அது போல் பரேலவிகள் கப்ருகளை வணங்குவர்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

பெரியார்களை மதித்து நடங்கள் என்ற சொல்லை தவ்ஹீத் ஜமாஅத்தும் சொல்கிறது. பரேலவிகளும் சொல்கிறார்கள். ஆனால் இருதரப்பினரும் வெவ்வேறு பொருளில் இதைக் கூறுகின்றனர்.

பெரியார்களை மதிக்க வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத்தினர் சொன்னால் அதன் அர்த்தம் என்ன என்பதை இந்த ஜமாஅத்தின் நிலைபாட்டிற்கு ஏற்றவாறு புரிந்து கொள்கிறோம். பெரியார்களைத் தரக்குறைவாக பேசாதீர்கள். அவர்களிடம் கன்னியமாக நடந்து கொள்ளுங்கள் என்ற பொருளில் தான் இதைப் பயன்படுத்துகிறார்கள் என்று நாம் புரிந்து கொள்கிறோம்.

கப்ரு வணக்கம் செய்வோர் இந்தச் சொல்லைக் கூறினால் அவர்களின் கொள்கைக்கு ஏற்ப அவர்களின் கூற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இறந்து போனவர்களை வணங்க வேண்டும்; அவர்களிடம் பிரார்த்திக்க வேண்டும் என்ற கருத்தைச் சொல்வதற்காகத் தான் இச்சொல்லைப் பயன்படுத்துகிறார்கள் என்று புரிந்து கொள்வோம்.

இரு தரப்பினரின் கொள்கை, கோட்பாடு, அவர்களின் பிரச்சாரம் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு தான் அதன் பொருளை நாம் தீர்மானிக்கிறோம். வெறும் வார்த்தையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பொருள் செய்வதில்லை.

சஹாபாக்களை மதிக்க வேண்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சொன்னால், சஹாபாக்கள் செய்த தியாகங்கள், சமுதாயத்திற்கு சத்தியத்தைக் கொண்டு வந்து சேர்த்தது, கஷ்டமான காலத்தில் இஸ்லாத்தை தூய நோக்கில் ஏற்றுக் கொண்டது இவற்றையெல்லாம் மதித்து அவர்களுக்காக அல்லாஹ்விடத்தில் பிரார்த்திக்க வேண்டும் என்று அர்த்தம் கொடுக்க வேண்டும்.

சஹாபாக்களை மதிக்க வேண்டும் என்று மற்ற கொள்கையினர் சொன்னால், சஹாபாக்கள் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொன்னால் எவ்வாறு ஏற்றுக் கொள்வோமோ அது போல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் இதைப் பயன்படுத்துகிறார்கள் என்று விளங்கிக் கொள்கிறோம்.

வார்த்தை என்பது ஒன்று தான். யார் சொன்னார்கள் என்பதை வைத்து அதன் விளக்கத்தை பிரித்துப் புரிந்து கொள்கின்றோம்.

இதே போன்றுதான் சிஹ்ர், ஸியாரத் போன்றவற்றைப் பற்றி அல்லாஹ்வும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஒன்றைச் சொல்வார்களானால் இது குறித்து ஒட்டுமொத்தமாக குர்ஆன், ஹதீஸ் என்ன சொல்கின்றது என்று பார்த்து அந்த கொள்கைக்கு ஏற்றவாறுதான் அதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒட்டுமொத்த குர்ஆனுக்கு மாற்றமாக ஹதீஸ் வந்திருந்தால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இந்தச் செய்திகளை ஏற்றுக் கொண்டால் குர்ஆனை மறுக்கின்ற நிலை வரும். நாம் ”வேதத்தை நம்ப வேண்டும்” என்று அடிப்படை நம்பிக்கை இருக்கும் போது, ஒரு அறிவிப்பாளருடைய சொல்லைக் கேட்டுக் கொண்டு இதை நம்பினால் குர்ஆன் பொய்யாகிவிடுகின்றது.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner