Wednesday, March 28, 2012

கல்வியைத் தேடி..

மற்ற மதங்களை விட இஸ்லாம் பல வகைகளில் சிறப்புற்று விளங்குகிறது. மதங்கள் பெரும்பாலும் ஆன்மீகத்தை மட்டுமே போதிக்கின்றன. உலக விவகாரங்களில் அவை தலையிடுவதில்லை. ஆனால் இஸ்லாம் மட்டும் தான் ஆன்மீகத்தையும் உலகத்தையும் இணைத்து மனிதனுக்கு அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தெளிவான வழியைக் காட்டுகிறது.

படைத்தவனை வணங்க வேண்டும் என்று கூறும் இஸ்லாம் உலகத்தையும் சிந்தித்து, அதில் இறைவன் வைத்திருக்கும் ஆற்றலை விளங்கிக் கொள்ள வேண்டும் என்று பணிக்கிறது. 

நல்லவர்களைப் பற்றித் திருக்குர்ஆன் பேசும் போது...
 
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன.

அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! (என்று கூறுவார்கள்)  (அல்குர்ஆன் 3:190, 191)


அல்லாஹ்வை நினைப்பவர்கள், வானங்கள், பூமி, மற்றும் இரவு பகல் மாறி மாறி வருவது  போன்றவற்றில் உள்ள சான்றுகளைச் சிந்தித்துப் பார்ப்பார்கள் என்று இந்தத் திருக்குர்ஆன் வசனம் கூறுகின்றது. ஆன்மீகத்தை மட்டும் இறைவன் கூறவில்லை; உலக விஷயங்களைப் பற்றியும் சிந்திக்கச் சொல்கிறான் என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்துகிறது.

நபிகளார் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது, அது நபிகளாரின் மகன் இப்ராஹீம் இறந்த காரணத்தால் தான் ஏற்பட்டது என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபிகளார் இந்த மூட நம்பிக்கையை உடைத்து, ஒருவரது பிறப்பிற்காகவோ அல்லது மறைவுக்காகவோ கிரகணங்கள் ஏற்படுவதில்லை. அவை இரண்டும் இறைவனின் அத்தாட்சிகள் என்று கூறினார்கள்.

இது போன்று, இஸ்லாத்தை ஏற்றிருப்பவர்கள் சிந்தனை உள்ளவர்களாகவும் விவரமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதைப் பல இடங்களில் திருக்குர்ஆன் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இந்தத் திருக்குர்ஆனை வேதமாகப் பெற்ற முஸ்லிம்கள் தான் இன்று பெரும்பாலும் படிப்பறிவு இல்லாதவர்களாகவும் மூட நம்பிக்கை நிறைந்தவர்களாகவும் உள்ளனர்.

இந்தக் கல்வியாண்டிலாவது படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து நமது குழந்தைகளின் படிப்பை இடையில் நிறுத்தி விடாமல் உயர் கல்வியில் சேர்வதற்கும் நல்ல நிலைக்குக் கொண்டு வரவும் முயற்சி செய்வோம். வறுமை நிலையில் இருப்பவர்கள் படிப்பைத் தொடர்வதற்குரிய உதவிகளையும் செய்வோம்.

உலகக் கல்வியைப் படிக்கும் நம் குழந்தைகள் உலகக் கல்வியிலேயே மூழ்கி, படைத்தவனை மறந்து மார்க்கத்திற்கு முரணாக நடக்கும் நிலைக்குப் போய் விடாமல் பார்த்துக் கொள்வதும் பெற்றோர்களின் கடமையாகும். படிக்கும் நமது குழந்தைகள் தினமும் ஐவேளைத் தொழுகையைப் பேணுபவர்களாகவும், திருக்குர்ஆன், நபிமொழிகளைப் படிப்பவர்களாகவும், இஸ்லாத்தின் ஏனைய ஒழங்குகளைப் பேணுபவர்களாகவும் இருக்க வழிவகை செய்ய வேண்டும்.

(இறை) இல்லங்கள் உயர்த்தப்படவும், அதில் அவனது பெயர் நினைக்கப்படவும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். அதில் காலையிலும், மாலையிலும் அவனை சில ஆண்கள் துதிக்கின்றனர். வணிகமோ, வர்த்தகமோ அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை நிலை நாட்டுவதை விட்டும், ஸகாத் கொடுப்பதை விட்டும் திசை திருப்பாது. பார்வைகளும், உள்ளங்களும் தடுமாறும் நாளை அவர்கள் அஞ்சுவார்கள். (அல்குர்ஆன் 24:36,37)

நற்கல்வியைத் தேடுவோம். அதன் மூலம் நாமும் பயன் பெற்று, மக்களுக்கும் பயன் பெறச் செய்து, மார்க்கக் கடமைகளையும் முழுமையாகப் பேணி சொர்க்கத்தைப் பெறுவோம்.

யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 5231)

- தீண்குலப் பெண்மணி

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner