Sunday, March 11, 2012

கொள்கை விளக்கம் - பி.ஜே - தொடர் 7

கந்தூரி

தமிழக முஸ்லிம்கள் எதையுமே விழாவாக்குவதில் கைதேர்ந்தவர்களாக உள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முக்கியத்துவம் பற்றி அவர்களுக்குக் கூறப்பட்டால் நபியைப் பின்பற்றுவதன் அவசியத்தை அதிலிருந்து உணர மாட்டார்கள். மாறாக அதை எப்படி விழாவாக்குவது என்பதிலேயே அவர்களின் கவனம் செல்கின்றது.

இறை நேசர்களில் சிலர் இந்த மார்க்கத்துக்காக ஆற்றிய சேவைகளைக் கூறினால் நாமும் அப்படிச் சேவை செய்ய வேண்டும்' என்று அதிலிருந்து உணர மாட்டார்கள். மாறாக அதை எப்படி விழாவாக ஆக்கலாம் என்பதில் தான் அவர்களுக்குக் கவனம்.

புகாரி இமாம் அவர்கள் நபிமொழிகளைத் திரட்டுவதற்காக செய்த தியாகத்தைக் கூறினால் அதிலிருந்து ஹதீஸ்களின் முக்கியத்துவத்தை உணர மாட்டார்கள். மாறாக அதையும் விழாவாக்குவது அவர்களின் நோக்கம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன்னர் எத்தனையோ நபிமார்கள் சென்று விட்டனர். அவர்களுக்கெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கந்தூரி நடத்திக் கொண்டிருக்கவில்லை. உணவுகள் வழங்கிக் கொண்டிருக்கவில்லை.

முஸ்லிம்கள் இஸ்லாத்தின் அடிப்படைகளை மறக்கச் செய்வதற்காக ஷைத்தான் விரிக்கும் மாய வலைகள் இவை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் மவ்லூது ஓதினால் போதும்; எல்லாக் கடமைகளையும் புறக்கணிக்கலாம் என்ற மனப்பான்மையை வளர்த்தது இந்த விழாக்கள் தான்.

'புகாரி கந்தூரி நடத்துவது தான் ஹதீஸுக்குச் செய்யும் மரியாதை. ஹதீஸைப் பின்பற்ற வேண்டியதில்லை' என்ற எண்ணம் வளரவும் இந்த விழாக்கள் தான் காரணம்.

உண்மையான முஸ்லிம்கள் இது போன்ற விழாக்களை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும்.

786 என்பதைப் பயன்படுத்தலாமா?

நியூமராலஜி என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவர். அது போல் அரபு எழுத்துக்களுக்கும் சிலர் எண்கைளைக் குறியீடுகளாகப் பயன்படுத்தலாயினர். (உம். அலிப் 1, பே 2, ஜீம் 3, தால் 4)

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்பதில் இடம் பெற்ற ஒவ்வொரு எழுத்தின் எண்களையும் மொத்தமாகக் கூட்டினால் 786 வரும். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதன் சுருக்கமாகக் கருதி இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இஸ்லாமிய அடிப்படையில் இது ஏற்க முடியாததாகும். எண்கள் எழுத்துக்களாக முடியாது.

அஸ்ஸலாமு அலைக்கும் என்பதற்குப் பதிலாக 238 என்று சொன்னால் அதை எவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

ஒருவர் 6666 வசனங்களைக் கொண்ட குர்ஆனை ஓதுவதற்குப் பதிலாக அதன் கூட்டுத் தொகை எண்ணைப் பயன்படுத்தினால் அவர் குர்ஆனை ஓதியவர் என்று கருதப்பட மாட்டார். (குர்ஆன் வசனங்களின் எண்ணிக்கை பற்றி பல கருத்துக்கள் உள்ளன) அது போல் 786 என்று சொன்னால் அல்லது எழுதினால் அவர் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சொன்னவராகவும், எழுதியவராகவும் ஆக மாட்டார்.

786 என்ற எண் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்கு மட்டும் தான் வரும் என்று கூற முடியாது. மோசமான அர்த்தங்கள் கொண்ட வார்த்தைகளுக்கும் கூட இதே எண் வரலாம். ஹரே கிருஷ்ணா என்பதை எண்கள் அடிப்படையில் கூட்டினால் அதன் தொகையும் 786 தான்.

அப்துல் கபூர் என்பதற்குப் பதிலாக 618 என்று அழைத்தால் அதை அப்பெயருடையவர் விரும்ப மாட்டார். அவ்வாறிருக்க அல்லாஹ்வின் திருப்பெயருக்கு இப்படி எண் குறிப்பது அல்லாஹ்வைக் கேலி செய்வதாகும்.

அவனது திருப் பெயர்களை அப்படியே எழுதுவது தான் உண்மை முஸ்லிமுக்கு அழகாகும்.

முஸ்லிமல்லாதவர்கள் கையில் கிடைத்தால் அதன் புனிதம் கெட்டு விடும் என்றெல்லாம் இதற்குச் சமாதானம் கூறுவது ஏற்க முடியாததாகும்.
 
ஏனெனில் காபிராக இருந்த ஒரு பெண்ணுக்கு சுலைமான் (அலை) அவர்கள் கடிதம் எழுதி இஸ்லாத்தின் பால் அழைக்கும் போது அதன் துவக்கத்தில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்று அவர்கள் எழுதியுள்ளார்கள்.  (பார்க்க : அல்குர்ஆன் 27:30)

 
நபிகள் நாயகம் (ஸல்) பல நாட்டு மன்னர்களுக்கு எழுதச் செய்த கடிதத்தின் துவக்கத்திலும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்றே எழுதியுள்ளனர்.  பார்க்க : புகாரி 7, 2941, 4553


நாமும் அது போல் முழுமையாக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்றே எல்லா நேரத்திலும் எழுத வேண்டும்.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner