Saturday, March 24, 2012

பெருநாளில் சப்தமிட்டு தக்பீர் கூறலாமா?

நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களிலும் இறைவனை பெருமைப்படுத்துவதற்காக தக்பீர் கூறுவது முஸ்லிம்கள் மீது கடமையாகும். இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள குமரிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். எந்த அளவிற்கென்றால் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களைக் கூடப் புறப்படச் செய்யவேண்டுமெனக் கட்டளையிடப்பட்டோம். பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) ஆண்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு ஆண்கள் தக்பீர் சொல்லும் போது அவர்களும் தக்பீர் சொல்வார்கள். ஆண்கள் பிரார்த்திக்கும் போது அவர்களும் பிரார்த்திப்பார்கள். அந்த நாளின் அருள் வளத்தையும் (பாவத்) தூய்மையையும் எதிர்பார்ப்பார்கள்.   அறிவிப்பவர் : உம்மு அத்திய்யா (ரலி)  நூல் : புகாரி (971)

பெருநாள் அன்று தக்பீர் கூற வேண்டுமென்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையாகும். இதனைப் பின்பற்றுவது அனைத்து முஸ்லிம்கள் மீதும் கடமையாகும்.

தக்பீர் கூறுதல் என்றால் ''அல்லாஹூ அக்பர்’’ என்ற வாசகத்தைக் கூறுவது தான்.

''கப்பர” என்ற அரபி வார்த்தைக்கு ''அல்லாஹூ அக்பர்” என்று கூறினான் என்பது தான் பொருளாகும்.

நபியவர்களும் இந்தப் பொருளில் தான் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்கள்.

பெருநாளன்று ''அல்லாஹூ அக்பர்” என்ற வாசகத்தை விட அதிகப்படியான வாசகங்களைக் கொண்டு நபியவர்கள் தக்பீர் கூறினார்கள் என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் கிடையாது.

மேலும் இந்த தக்பீர் வாசகத்தைப் பெருநாளன்று நபியவர்கள் சப்தமிட்டுக் கூறினார்கள் என்பதற்கோ, அல்லது மக்களுக்கு சப்தமிட்டுக் கூறுமாறு கட்டளையிட்டார்கள் என்பதற்கோ ஆதாரப் பூர்வமான எந்த நபிமொழிகளும் கிடையாது.

 பொதுவாக இறைவனை நினைவு கூறும் போது சப்தமிட்டுச் செய்வது கூடாது என்பது தான் அல்லாஹ்வின் கட்டளையாகும்.

وَاذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ
الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآَصَالِ وَلَا تَكُنْ مِنَ الْغَافِلِينَ (205) سورة
الأعراف

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!  (அல்குர்ஆன் 7 : 205)

இறைவனை நினைவு கூறும் போது உரத்த சப்தமின்றி நினைவு கூற வேண்டும் என்பது இறைவனின் கட்டளையாகும் என்பதை மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்திலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

2992  حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَاصِمٍ عَنْ
أَبِي عُثْمَانَ عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكُنَّا إِذَا
أَشْرَفْنَا عَلَى وَادٍ هَلَّلْنَا وَكَبَّرْنَا ارْتَفَعَتْ أَصْوَاتُنَا فَقَالَ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَيُّهَا النَّاسُ ارْبَعُوا
عَلَى أَنْفُسِكُمْ فَإِنَّكُمْ لَا تَدْعُونَ أَصَمَّ وَلَا غَائِبًا إِنَّهُ
مَعَكُمْ إِنَّهُ سَمِيعٌ قَرِيبٌ تَبَارَكَ اسْمُهُ وَتَعَالَى جَدُّهُ  رواه
البخاري

அபூமூசா  அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறும் போது, ''லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை)'' என்றும் ”அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)'' என்றும் கூறி வந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்து விட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள், ”மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள். மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில்,  நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கில்லாதவனையோ அழைக்கவில்லை. அவன் உங்களுடனேயே இருக்கின்றான். அவன் செவியேற்பவன்; அருகிலிருப்பவன். (இறைவனான) அவனது திருப்பெயர் நிறைவானது. அவனது மதிப்பு உயர்ந்தது'' என்று கூறினார்கள்.  நூல் : புகாரி (2992)

காது கேட்காதவனையோ, தூரத்தில் உள்ளவனையோ அழைக்கும் போது தான் சப்தமிட்டு அழைக்க வேண்டும். நாம் அல்லாஹ்வைச் சப்தமிட்டு திக்ரு செய்தால் இறைவன் செவிடன் என்றும் தூரத்தில் உள்ளவன் என்றும் உறுதிப்படுத்துகிறோம்.

நாம் சப்தமில்லாமல் இறைவனை நினைவு கூறும் பொழுது தான் இறைவன் நம்மோடு இருக்கிறான். நாம் கூறுவதைச் செவியேற்றுக் கொண்டிருக்கின்றான், அருகிலிருக்கின்றான் என்பதை நம்பிய மக்களாக நாம் ஆக முடியும்.

எனவே பெருநாளன்று சப்தமிட்டு தக்பீர் கூறுவது மேற்கண்ட இறை வசனம் மற்றும் நபிமொழிக்கு எதிராக இருக்கின்ற காரணத்தினால் சப்தமிட்டு தக்பீர் கூறுவது கூடாது. அது நபிவழிக்கு எதிரானதாகும் என்று நாம் கூறி வருகிறோம்.


0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner