Wednesday, March 21, 2012

அறியாமைக் காலம் - இப்னு தாஹிரா

இவ்வுலகைப் படைத்து அதில் ஏராளமான இன்பங்களையும் வைத்த இறைவன், மனிதன் ஒரு ஒழுங்கு முறையோடு வாழ வேண்டும் என்பதற்காக இறைத்தூதர்களையும் வேதங்களையும் வழங்கினான். 

அனுப்பிய இறைத்தூதர்கள் காட்டிய வழியின்படி நடப்பவர்கள் தான் மறுமை நாளில் வெற்றியடைவார்கள் என்றும், அதற்கு மாற்றமாக நடப்பவர்கள் நரகில் நிரந்தரமாகக் கடும் வேதனை அனுபவிப்பார்கள் என்றும் எச்சரித்துள்ளான்.

இந்த அடிப்படையில் இறுதித்தூதராக நபி (ஸல்) அவர்களை இவ்வுலகத்திற்கு அனுப்பி வைத்தான். அறியாமைக் காலம் என்று சொல்லப்படும் காலத்தில் வாழ்ந்த அந்த மக்களிடம் இருந்த மூட நம்பிக்கைகளையும் தவறான கொள்கைகளையும் நீக்கி, அறிவொளி பாய்ச்சி, அழகிய வழிமுறையை நபி (ஸல்) அவர்கள் அம்மக்களுக்கு வழங்கிச் சென்றார்கள்.

நபிகளாரின் வழிமுறைகளைப் பின்பற்றி வந்த நன்மக்கள் காலம் உருண்டோட உருண்டோட கொள்கைப் பிடிப்பு தளர்ந்து, ஷைத்தானின் வழிமுறைகள் ஊடுறுவத் தொடங்கி, இன்று அறியாமைக் காலப் பழக்க வழக்கங்கள் இஸ்லாமியர்களின் வாழ்வில் வணக்கமாக மாறி விட்டது.

நபிகளார் எந்தப் பழக்கத்தை ஒழிக்க வந்தார்களோ அதே பழக்கம் இன்று இஸ்லாமியர்களிடம் மதிப்பு மிக்க காரியமாகக் கருதப்படுகிறது. இவ்வாறு நபிகளார் ஒழித்த எந்தெந்தக் காரியங்கள் இன்று நம்மிடம் ஊடுறுவி உள்ளன என்பதையும், அறியாமைக் காலப் பழக்கங்கள் எவை என்பதையும் இந்தத் தொடரில் பார்க்கலாம்.

1. வீணானதை நம்புதல்

திருக்குர்ஆன் கூறும் நம்பிக்கையை விட்டு விட்டு, வீணான அசத்தியமான கருத்துக்களை நம்பக் கூடியவர்களாக அன்றைய அறியாமைக் கால மக்கள் இருந்ததாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.

எனக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன். அவன் வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அறிகிறான். வீணானதை நம்பி அல்லாஹ்வை மறுப்போரே நஷ்டமடைந்தவர்கள்  என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 29:52)

படைத்தவனை நம்பும் விஷயத்திலும் கூட அவர்கள் தவறான நம்பிக்கையே கொண்டிருந்தார்கள் என்று திருக்குர்ஆன் கூறிவிட்டு, படைத்தவனை நெருங்குவதற்கு இன்னொரு புரோகிதர் தேவை என அவர்கள் நம்பி, அவர்களிடம் பிரார்த்தனை செய்யும் வழக்கம் கொண்டிருந்ததையும் தெளிவுபடுத்துகிறது.
 
அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள் என்றும் கூறுகின்றனர். வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன் என்று கூறுவீராக!

(முஹம்மதே!) உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை உம்மிடம் நாம் அருளியுள்ளோம். எனவே வணக்கத்தை உளத் தூய்மையுடன் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனை வணங்குவீராக!

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 39:2,3)


2. தக்லீத் (கண்மூடிப் பின்பற்றுதல்)

மார்க்க விஷயங்களில் ஒன்றைச் செய்ய வேண்டும், ஒன்றைச் செய்யக் கூடாது என்பதற்கு முன்னோர்கள் கூறிய கருத்தையே ஏற்றுக் கொள்வார்கள். அந்த முன்னோர்கள் செய்தது சரியா? தவறா? அது இறைவனின் விருப்பத்திற்குரியதா? என்றெல்லாம் அறியாமைக் கால மக்கள் சிந்திக்க மாட்டார்கள்.



இவ்வாறே எந்த ஊருக்கும் எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பும் போதெல்லாம் எங்கள் முன்னோர்களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம். நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின் பற்றுபவர்கள் என்று அவ்வூரில் சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை.

உங்கள் முன்னோர்களை எதில் கண்டீர்களோ அதை விட நேர் வழியை நான் கொண்டு வந்தாலுமா? எனக் கேட்பீராக! எதனுடன் நீங்கள் அனுப்பப்பட்டுள்ளீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்களே என்று அவர்கள் கூறினர். (அல்குர்ஆன் 43:23,24)

அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்! என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம் என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா? (அல்குர்ஆன் 2:170)

அல்லாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை (முஹம்மதை) நோக்கியும் வாருங்கள்! என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும் என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும், நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா? (அல்குர்ஆன் 5:104)

இவ்வாறு முன்னோர்களைப் பின்பற்றி, படைத்தவனின் கட்டளையை நிராகரித்த காரணத்தால் அவர்களுக்கு எதைப் பின்பற்ற வேண்டும் என்ற அறிவுரையைத் திருக்குர்ஆன் கூறுகிறது.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்! (அல்குர்ஆன் 7:3)

இறைவனிடமிருந்து வந்த வஹீயைத் தவிர வேறு எதனையும் பின்பற்றக் கூடாது என்று கூறி,  தக்லீத் செய்பவர்களுக்கு திருக்குர்ஆன் அழகிய போதனையைச் செய்கிறது. மேலும் நபி (ஸல்) அவர்களின் ஆரம்ப கால போதனை, உங்கள் முன்னோர் சொன்னதை விட்டு விடுங்கள் (புகாரி 7) என்றே அமைந்திருந்தது. மேலும் பிற்காலத்தில் வரும் மக்களுக்கும் அதை எச்சரிக்கை செய்து சென்றுள்ளார்கள்.
 
உங்களுக்கு முன்னிருந்தவர்கன் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், வேறெவரை? என்று பதிலத் தார்கள்.  அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி (3456)


3. பிரிந்திருத்தல்

ஒற்றுமையாகச் சேர்ந்திருப்பதற்குப் பதிலாக, பிரிந்து கிடந்தனர். சிறிய பிரச்சனைகளுக்காகப் பல ஆண்டுகள் சண்டையிட்டுக் கொண்டனர். இவர்களை ஒற்றுமையுடன் வாழுமாறு திருக்குர்ஆன் பணித்தது.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்!
 
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர் வழி பெறுவதற்காக இவ்வாறே அல்லாஹ் தனது சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 3:102, 103) மதீனாவில் வாழ்ந்த அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரத்தினர் 120வருட காலங்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். (ஆதாரம்: அல்காமில் ஃபித்தாரிக்லி-இப்னுல் அஸீர்)


4. தீய நடத்தை உள்ளவர்களைப் பின்பற்றுதல்

இறைவனின் கட்டளையை விட்டுவிட்டு, தீய அறிஞர்களைப் பின்பற்றி வழிகேட்டில் சென்றனர். இப்படிப்பட்டவர்கள் யூத, கிறித்தவர்களில் இருந்துள்ளனர்.

நம்பிக்கை கொண்டோரே! மத குருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் வழியை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர். அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு என்று எச்சரிப்பீராக!  (அல்குர்ஆன் 9:34)

வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் உண்மைக்கு மாற்றமாக (கூறி) வரம்பு மீறாதீர்கள்! இதற்கு முன் தாங்களும் வழி கெட்டு, அதிகமானோரையும் வழி கெடுத்து, நேரான பாதையை விட்டும் தடம் புரண்ட கூட்டத்தின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்! என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன் 5:77)

5. அறிவற்ற கேள்விகள் கேட்டு சத்தியத்தை மறுத்தல்

ஓரிறைக் கொள்கையை ஏற்று நடங்கள் என்று கூறினால், இதற்கு முன்னர் இணை வைப்புக் கொள்கையில் இருந்த எங்கள் முன்னோர்கள் என்ன முட்டாள்களா? அவர்கள் நரகவாதிகளா? என்பன போன்ற கேள்விகளைக் கேட்டு சத்தியக் கருத்துக்களை நிராகரித்தனர்.

மூஸாவே! உங்களிருவரின் இறைவன் யார்? என்று அவன் கேட்டான்.

ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய தோற்றத்தை வழங்கி பின்னர் வழி காட்டியவனே எங்கள் இறைவன் என்று அவர் கூறினார்.

முந்தைய தலைமுறையினரின் நிலை என்ன? என்று அவன் கேட்டான்.

அது பற்றிய ஞானம் எனது இறைவனிடம் (உள்ள) பதிவேட்டில் இருக்கிறது. என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான் என்று அவர் கூறினார்.  (அல்குர்ஆன் 20:49-52)

 
மூஸா, அவர்களிடம் நமது தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது, இது  இட்டுக்கட்டப்பட்ட சூனியம் தவிர வேறில்லை. இது பற்றி முன்னோர்களான எங்களது மூதாதையரிடம் நாங்கள் கேள்விப்படவில்லை என்றனர்.

தன்னிடமிருந்து நேர்வழியைக் கொண்டு வந்தவன் யார் என்பதையும், யாருக்கு நல்ல முடிவு ஏற்படும் என்பதையும் என் இறைவன் நன்கறிந்தவன். அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள் என்று மூஸா கூறினார். (அல்குர்ஆன் 28:36, 37)


நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீங்கள் அஞ்ச வேண்டாமா? என்று கேட்டார்.

அவரது சமுதாயத்தில் (ஏக இறை வனை) மறுத்த பிரமுகர்கள் இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரைத் தவிர வேறில்லை. உங்களை விட சிறப்படைய இவர் விரும்புகிறார். அல்லாஹ் நினைத்திருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பான். முந்தைய நமது முன்னோர்களிடமிருந்து இதை நாம் கேள்விப்பட்டதுமில்லை என்றனர்.

இவர் ஒரு பைத்தியக்காரர் தவிர வேறில்லை. சிறிது காலம் வரை இவருக்கு அவகாசம் கொடுங்கள்! (என்றனர்.) (அல்குர்ஆன் 23:23-25)


அவர்களிலிருந்தே எச்சரிப்பவர் அவர்களிடம் வந்ததில் ஆச்சரியப்பட்டனர். இவர் பொய்யர்,  சூனியக்காரர் என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறினர்.

கடவுள்களை ஒரே கடவுளாக ஆக்கி விட்டாரா? இது வியப்பான செய்திதான்.

(இவரை விட்டும்) சென்று விடுங்கள்! உங்கள் கடவுள்கள் விஷயத்தில் உறுதியாக இருங்கள்! இது ஏதோ எதிர்பார்ப்பில் கூறப்படும் விஷயமாக உள்ளது என்று அவர்களில் பிரமுகர்கள் கூறினர்.

இதை வேறு மார்க்கத்தில் நாம் கேள்விப்பட்டதில்லை. இது கட்டுக்கதை தவிர வேறில்லை.

நமக்கிடையே இவர் மீது (மட்டும்) அறிவுரை அருளப்பட்டு விட்டதா? (என்றும்
 கேட்கின்றனர்.) மாறாக எனது அறிவுரையில் சந்தேகத்தில் உள்ளனர். இவர்கள் எனது  வேதனையைச் சுவைத்துப் பார்த்ததில்லை. (அல்குர்ஆன் 38:4-8)


6. பெரும்பான்மை மீது நம்பிக்கை கொள்ளுதல்

ஒரு கருத்து சரியா? இல்லையா? என்பதை ஆய்வு செய்யாமல், பெரும்பான்மை மக்கள் எதில்  இருக்கிறார்களோ அதுவே சரியான கருத்து என்று நம்பி வந்தனர். அதனால் தான் நபிகளாரை, நீர் பெரும்பான்மை மக்கள் எந்தப் பக்கம் இருக்கிறார்களோ அந்தக் கருத்தை, அவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்பதற்காகப் பின்பற்றினால் நீர் வழி தவறி விடுவீர் என்று எச்சரிக்கை செய்துள்ளான்.

பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு (முஹம்மதே!) நீர் கட்டுப்பட்டால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல்லை.

தனது பாதையை விட்டும் வழி தவறியவன் யார்? என்பதை உமது இறைவன் நன்றாக அறிபவன். நேர் வழி பெற்றோரையும் அவன் மிக அறிந்தவன். (அல்குர்ஆன் 6:116, 117)


7. நடைமுறையில் இல்லாத ஒன்று பொய் என நம்புதல்
 
தாங்கள் காணாத, பார்க்காத, கேட்காத செய்திகளை ஒருவர் கூறினால் அது உண்மையாக இருக்காது என்று நம்பினார்கள். அதற்கு ஆதாரம் உள்ளதா? இவ்வாறு இருக்க சாத்தியம் உண்டா? என்றெல்லாம் அவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.

அவர்களிலிருந்தே எச்சரிப்பவர் அவர்களிடம் வந்ததில் ஆச்சரியப்பட்டனர். இவர் பொய்யர், சூனியக்காரர் என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறினர்.

கடவுள்களை ஒரே கடவுளாக ஆக்கி விட்டாரா? இது வியப்பான செய்தி தான்.

(இவரை விட்டும்) சென்று விடுங்கள்! உங்கள் கடவுள்கள் விஷயத்தில் உறுதியாக இருங்கள்! இது ஏதோ எதிர்பார்ப்பில் கூறப்படும் விஷயமாக உள்ளது என்று அவர்களில் பிரமுகர்கள் கூறினர்.

இதை வேறு மார்க்கத்தில் நாம் கேள்விப்பட்டதில்லை. இது கட்டுக்கதை தவிர வேறில்லை.

நமக்கிடையே இவர் மீது (மட்டும்) அறிவுரை அருளப்பட்டு விட்டதா? (என்றும்
 கேட்கின்றனர்.) மாறாக எனது அறிவுரையில் சந்தேகத்தில் உள்ளனர். இவர்கள் எனது  வேதனையைச் சுவைத்துப் பார்த்ததில்லை. (அல்குர்ஆன் 38:4-8)


இஸ்லாம் புதுமையானதாகவே தோன்றியது. மீண்டும் புதுமையானதைப் போன்று திரும்பும்.  அப்போது புதுமைவாதிகளுக்கு நற்செய்தி உண்டாகட்டும் என்று நபி (ஸல்) அவர்கள்  கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 208)

8. செல்வந்தவர்களே இறைநேசர்கள் என நம்புதல்

ஏழைகளாகவும் அதிகாரமற்றும் இருப்பவர்களை அல்லாஹ் தேர்வு செய்ய மாட்டான்; அவர்களின் கருத்துக்களை நாம் கேட்க வேண்டியதில்லை; செல்வந்தவர்கள் தாம் இறையருளைப் பெற்றவர்கள் என்று நம்பினர்.

எந்த ஊருக்கு எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பினாலும் எதைக் கொடுத்து அனுப்பப்பட்டுள்ளீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்கள் என்று அங்கே சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை.

நாங்கள் அதிகமான பொருட் செல்வமும் மக்கட் செல்வமும் பெற்றவர்கள். நாங்கள் தண்டிக்கப்படுவோர் அல்லர் என்றும் அவர்கள் கூறினர்.

என் இறைவன், தான் நாடியோருக்கு செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள் என்று கூறுவீராக!

உங்களின் மக்கட் செல்வமும், பொருட் செல்வமும் நம்மிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை அல்ல. நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்களுக்கு அவர்கள் செய்தவற்றின் பன்மடங்கு கூலி இருக்கிறது. அவர்கள் உயர்ந்த மாளிகைகளில் கவலையற்றிருப்பார்கள். (அல்குர்ஆன் 34:34-37)

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner