Monday, March 12, 2012

தொழுகையில் ருகூவு, ஸஜ்தாவில் திருக்குர்ஆன் வசனங்களை ஓதலாமா?

கேள்வி -  திருக்குர்ஆனை ருகூவு, ஸஜ்தாவில் ஓதக் கூடாது என்று ஹதீஸில் தடை இருக்கிறது. திருக்குர்ஆனின் வசனங்களில் இடம் பெற்றிருக்கும் துஆக்களை திருக்குர்ஆன் வசனங்கள் என்று இல்லாமல் துஆ என்று எண்ணி ஓதலாமா?

பதில் - அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட்களில் உடல் நலிவுற்றிருந்தபோது தமது அறையின்) திரைச் சீலையை விலக்கி (பள்ளிவாசலுக்குள் நோக்கி)னார்கள். அப்போது மக்கள், அபூபக்கர் (ரலி) அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றுகொண்டிருந்தனர். (அவர் களிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்களே! நபித்துவத்தின் நற்செய்திகளிலிருந்து ஒரு முஸ்லிம் காண்கின்ற அலலது அவருக்குக் காட்டப்படுகின்ற நல்ல (உண்மையான) கனவுகளைத் தவிர வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை. அறிந்துகொள்ளுங்கள்: ருகூஉ அல்லது சஜ்தாச் செய்து கொண்டிருக்கையில் குர்ஆன் (வசனங்களை) ஓத வேண்டாமென்று நான் தடை விதிக்கப் பெற்றுள்ளேன். ருகூஉவில் இறைவனை மகிமைப் படுத்துங்கள். சஜ்தாவில் முனைந்து பிரார்த்தியுங்கள். உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியானதாகும் என்று கூறினார்கள்.  அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (824)

ஸஜ்தாவில் திருக்குர்ஆன் ஓதுவதைத் தடை செய்த நபி (ஸல்) அவர்கள் துஆ கேட்பதை ஆர்வப்படுத்தியுள்ளார்கள். எனவே ஸஜ்தாவில் அதிகமதிகம் துஆக் கேட்கலாம். திருக்குர்ஆனிலும் ஏராளமான துஆக்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றை திருக்குர்ஆனுடைய வசனமாக ஓதுகிறோம் என்று இல்லாமல் அதைப் பிரார்த்தனையாக எண்ணி ஓதுவதில் தவறில்லை.

அல்லது அந்தப் பிரார்த்தனையில் சில வார்த்தைகளை கூடுதலாகச் சொல்லி கேட்டுக் கொள்ளலாம். உதாரணமாக, ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனா, வஃபில் ஆகிரத்தி ஹஸனா, வகினா அதாபன்னார் (2:201) என்ற வசனத்தில் இடம் பெறும் துஆவில் அல்லாஹும்ம (அல்லாஹ்வே!) என்ற வாசகத்தை அதிகப்படுத்தி அல்லாஹும்ம ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனா, வஃபில் ஆகிரத்தி ஹஸனா, வகினா அதாபன்னார் என்று கூறலாம். இவ்வாறு நபி (ஸல்) அவர்களும் பிராத்தனை செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள், அல்லாஹும்ம ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனா, வஃபில் ஆகிரத்தி ஹஸனா, வகினா அதாபன்னார் (அல்லாஹ்வே! எங்கள் இறைவனே! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக! மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக! மேலும், நரக நெருப்பின் வேதனையிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக?) எனப் பிரார்த்தித்து வந்தார்கள்.  அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (4522)

- பி.ஜே

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner