Monday, February 20, 2012

இப்ராஹீம் நபி வாழ்வு தரும் படிப்பினை

திருக்குர்ஆனில் கூறப்பட்ட நபிமார்களில் இப்ராஹீம் (அலை) அவர்கள் மிகவும் சிறப்பித்துக் கூறப்பட்டவர்கள். இவர்களது குடும்பத்தினரின் வாழ்வின் பின்னணியில் நாம் பின்பற்றும் முக்கிய கடமைகளும் உள்ளன. ஹஜ் கடமையில் ஸஃபா, மர்வாவுக்கு மத்தியில் ஓடுதல், குர்பானி கொடுத்தல் போன்ற காரியங்களில், இவர்களது குடும்பம் பின்னணியில் இருப்பதை நாம் மறந்து விட முடியாது.

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மாபெரும் தியாகத்தை நினைவு கூரும் வண்ணமே இவ்வாறு அல்லாஹ் அமைத்துள்ளான். மேலும் பகுத்தறிவுக் கொள்கையை இவ்வுலகிற்குப் பறை சாற்றியவர்களில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு முதலிடம் தரலாம்.

எந்த விதமான சக்தியும் இல்லாத கல், மண்ணை விட சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எவ்வளவே மேல் என்று அறிவுப்பூர்வமாக விளக்கி, கடவுள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தினார்கள்.

இரவு அவரை மூடிக் கொண்ட போது ஒரு நட்சத்திரத்தைக் கண்டு இதுவே என் இறைவன் எனக் கூறினார். அது மறைந்த போது மறைபவற்றை நான் விரும்ப மாட்டேன் என்றார். சந்திரன் உதிப்பதை அவர் கண்ட போது இதுவே என் இறைவன் என்றார். அது மறைந்த போது என் இறைவன் எனக்கு நேர் வழி காட்டா விட்டால் வழி கெட்ட கூட்டத்தில் ஒருவனாக ஆகி விடுவேன் என்றார். சூரியன் உதிப்பதை அவர் கண்ட போது இதுவே என் இறைவன்! இதுவே மிகப் பெரியது என்றார். அது மறைந்த போது என் சமுதாயமே! நீங்கள் இணை கற்பிப்பவற்றை விட்டு நான் விலகிக் கொண்டவன் எனக் கூறினார். வானங்களையும், பூமியையும் படைத்தவனை நோக்கி உண்மை வழியில் நின்றவனாக என் முகத்தைத் திருப்பி விட்டேன். நான் இணை கற்பித்தவனல்லன்;  (என்றும் கூறினார்).  அல்குர்ஆன் 6:76-79

ஒவ்வொரு வருடமும் குர்பானி கொடுத்து ஹஜ் பெருநாளைக் கொண்டும் முஸ்லிம்கள், நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் இந்த வழிகாட்டுதலை சிந்தித்துப் பார்த்தால் தர்ஹா வழிபாடுகள் தவிடு பொடியாகிக் காணாமல் போயிருக்கும்.
 
இறந்து, மண்ணோடு மண்ணாக மக்கிப் போய் விட்ட ஒரு மனிதரின் கல்லறையில் சமாதி கட்டி, அவரிடம் கையேந்துவது நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் காட்டிய பகுத்தறிவுக் கொள்கைக்கு விரோதமானதில்லையா? இறந்த போன அந்த நல்லடியார்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்களா? அல்லது உங்களுக்கு உதவி தான் செய்வார்களா? அல்லது உங்களுக்கு தீங்கு செய்யத் தான் முடியுமா? நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் கேள்வியைப் பாருங்கள்: நீங்கள் அழைக்கும் போது இவை செவியுறுகின்றனவா? அல்லது உங்களுக்கு நன்மையோ தீமையோ செய்கின்றனவா? என்று அவர் கேட்டார். எங்கள் முன்னோர்கள் இவ்வாறு செய்வதைக் கண்டோம் என்று அவர்கள்  கூறினர்.  அல்குர்ஆன் 26:72, 73


தர்ஹாவில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் என்றாவது நமது கோரிக்கைகளை செவியுற்றுள்ளார்களா? அல்லது நேரடியாக வந்து ஏதாவது நன்மையைப் புரிந்துள்ளார்களா? அல்லது யாருக்காவது கெடுதியைத் தான் ஏற்படுத்தியுள்ளார்களா? இல்லை. எனவே நிச்சயம் இவர்களுக்கு எந்த சக்தியும் கிடையாது என்பதை உணர வேண்டாமா? நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் கேள்வியை நினைத்துப் பார்த்தார்களா?

இப்ராஹீம் நபியை உண்மையாக மதிப்பவர்களாக இருந்தால் மூட நம்பிக்கை மற்றும் இணை வைப்புக் கொள்கையை முதலில் கைவிட்டு விட்டு, பகுத்தறிவைப் பயன்படுத்தி அறிவொளியை ஏற்றட்டும்.

- தீண்குலப் பெண்மணி

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner