Saturday, September 1, 2012

மஹர் (மணக் கொடை)

திருமணம் செய்வதற்காக மணமகன் மணமகளுக்கு வழங்கும் பொருள் மஹர் (மணக் கொடை) எனப்படும்.

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை108 கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்! (அல்குர்ஆன் 4:4)

(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 4:24,25, 4:127, 5:5, 33:50, 60:10)

ஒரு பெண் திருமண வாழ்வின் மூலம் தனக்கு ஏற்படும் இழப்புகளைக் கருத்தில் கொண்டு எவ்வளவு வேண்டுமானாலும் மஹர் கேட்பதற்கு உரிமை உள்ளது. அதை அவள் மட்டுமே உடமையாக வைத்துக் கொள்வதற்கும் உரிமை உள்ளது.

இல்லற வாழ்க்கையில் அதிகமான இழப்புக்கு ஆளாவது பெண்கள் தான். தங்களின் அழகையும், இளமையையும் இழந்த பின் அவர்கள் விவாகரத்துச் செய்யப்படக் கூடும். அந்த நிலையை எல்லாம் எண்ணிப் பார்த்து மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமையை பெண்களுக்கு இஸ்லாம் வழங்குகின்றது.

மஹர் தொகையை எவ்வளவு வேண்டுமானாலும் பெண்கள் கேட்கலாம். இவ்வளவு தான் கேட்க வேண்டும் என்று வரையறை செய்யும் உரிமை எவருக்கும் இல்லை.

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள இந்த உரிமையைப் பெண்கள் பயன்படுத்தத் தவறிவிட்டதால் அவர்களின் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. இவர்கள் மஹர் கேட்காததால் ஆண்கள் வரதட்சனை கேட்கும் கொடுமை அதிகமாகி விட்டது.

கொடுக்கக் கடமைப்பட்ட ஆண்கள் கேட்டுப் பெறக் கூடிய அளவுக்கு மானமிழந்து விட்டனர். வரதட்சணை வாங்காதீர்கள் என்பதை விட நீங்கள் கொடுங்கள் என்பது கடுமையான கட்டளையாகும். உண்மையான எந்த முஸ்லிமும் வரதட்சணை கேட்கத் துணிய மாட்டான்.

இது தான் அறிவுப்பூர்வமானதும், நேர்மையானதுமாகும்.

பெண்கள் தாம் அதிகமான தியாகத்தைச் செய்கின்றனர். அதிகமான சிரமங்களையும் சுமக்கின்றனர். எனவே பெண்களுக்கு ஆண்கள் கொடுப்பது தான் நீதியாகும்.

# ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடந்த பின் ஆண் தனது வீட்டிலேயே இருக்கிறான். தனது தாய், தந்தையர் மற்றும்  உறவினருடன் இருக்கிறான். ஆனால் அவனை விட வயதில் குறைந்த
பெண் தனது பெற்றோரையும், சொந்தங்களையும் துறந்து விட்டு கணவன் வீட்டுக்கு வந்து விடுகிறாள். இந்தத் தியாகத்திற்காக பெண்களுக்குத் தான் ஆண்கள் வழங்க வேண்டும்.

# திருமணத்திற்குப் பின் மனைவிக்காக கணவன் எந்தச் சேவையும் செய்வதில்லை. அதிகபட்சமாக அவளது வாழ்க்கைச் செலவினங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான். ஆனால் பெண்கள் கணவனுக்காக சமைத்தல், உடைகளைத் துவைத்தல், வீட்டைப் பராமரித்தல், கணவனுக்கு மட்டுமின்றி கணவனின் உறவினர்களுக்கும் சேர்த்து பணிவிடை செய்தல் என்று ஏராளமான சுமைகளைத் தம் தலையில் சுமந்து கொள்கின்றனர். மாமியார் கொடுமைகளையும் சில பெண்கள் கூடுதலாக தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. இந்தக் காரணத்துக்காகவும் ஆண்கள் தாம் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்.

# இல்லறத்தில் ஈடுபட்டு ஒரு பெண் கருவுற்றால் ஆணுக்கு இதனால் எந்தச் சிரமமும், சுமையும் இல்லை. பெண்தான் சிரமப்படுகிறாள். அவள் எதையும் உண்ண முடியாத மசக்கை நிலையை அடைகிறாள். இயல்பாக நடக்கவும், படுக்கவும் முடியாத சிரமத்தைத் தாங்கிக் கொள்கிறாள். அத்துடன் மரணத்தின் வாசல் கதவைத் தட்டி விட்டு பிரசவித்து மீள்கிறாள். இந்த ஒரு காரணத்துக்காகவே அவளுக்கு கோடி கொடுத்தாலும் போதாது.

# பிரசவித்த பின் குழந்தைக்காக தந்தை எதையும் செய்வதில்லை. பாலூட்டுவதும், சீராட்டுவதும், கண் தூங்காது கவனிப்பதும் என ஏராளமான சுமைகளும் அவள் மீது தான் சுமத்தப்பட்டுள்ளன. இந்தக் காரணத்திற்காகவும் ஆண்கள் பெண்களுக்கு மஹர் கொடுப்பது தான்
நேர்மையானது.

# அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்து விட்டால் பெண் தனது எல்லா வசந்தங்களையும் துறந்து விடும் நிலையை அடைகிறாள்.

பெண்களுக்கு ஆண்கள் தான் கொடுக்க வேண்டும் என்பதை மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனும் மறுக்க முடியாது.

வரதட்சணை கேட்கும் கொடிய வழக்கம் காரணமாக ஏராளமான தீய விளைவுகள் ஏற்படுகின்றன. வரதட்சணை கேட்போரும், அதை ஆதரிப்போரும் அத்தனை தீய விளைவுகளிலும் பங்காளி களாகின்றனர்.

# வரதட்சணை காரணமாக 15 வயதிலிருந்தே வாழ்க்கைக்கு ஏங்கும் பெண்கள் முப்பது வயது வரை கூட மண வாழ்வு கிடைக்காத நிலையில் உள்ளனர்.

# இதன் காரணமாக பெண்களில் சிலர் வீட்டை விட்டே வெளியேறி ஓடி விடுகின்றனர். ஏமாற்றப்படுகின்றனர். விபச்சார விடுதியில் கூட அவர்களில் பலர் தள்ளப்படுகின்றனர். இந்தப் பாவங்கள் அனைத்திலும் வரதட்சணை வாங்கியவர்களுக்கும் ஒரு பங்கு நிச்சயமாக உள்ளது. சில
பெண்கள் இதனால் இஸ்லாத்தையே உதறித் தள்ளிவிட்டு பிற மதத்தவர்களுடன் ஓடிப் போகும் நிலையும்
உள்ளது.

# மணவாழ்வு கிடைக்காது என்ற நிலையில் தம் உயிரைத் தாமே மாய்த்துக் கொள்ளும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர். பெண்ணைப் பெற்றவர்களும் கூண்டோடு தற்கொலை செய்கின்றனர். வரதட்சணை கேட்போர் இந்தப் பாவத்திலும் பங்காளிகள் ஆகின்றனர்.

# மணவாழ்வு கிடைக்காது என்பதால் ஒருத்தி ஓடி விட்டால் அவளது குடும்பத்தில் எஞ்சியுள்ள பெண்களுக்கும் வாழ்வு கிடைக்காத நிலை ஏற்படும். இதிலும் வரதட்சணை கேட்பவர்களுக்குப் பங்கு
இருக்கிறது.

# வரதட்சணை வழக்கத்தையும், அதனால் ஏற்படும் கேடுகளையும் முன்கூட்டியே உணர்பவர்கள் பெண் குழந்தை பிறந்ததும் தாமே தமது குழந்தைகளைக் கொன்று விடுகின்றனர். வேறு சிலர் ஸ்கேன்
மூலம் கருவில் உள்ள குழந்தை பெண் என்பதை அறிந்து கருவில் சமாதி கட்டுகின்றனர். இந்த மாபாதகச் செயலிலும் வரதட்சணை கேட்பவர்கள் பங்காளிகளாகின்றனர்.
# மானத்துடன் வாழ்ந்த ஒருவனை, பெண்ணைப் பெற்ற காரணத்துக்காக ஊர் ஊராகச் சென்று பிச்சை எடுக்க வைக்கின்றனர். இந்தப் பாவமும் இவர்களைச் சும்மா விடாது.
# பருவத்தில் எழுகின்ற உணர்வுகளுக்கு வடிகால் இல்லாத நிலையில் பெண்களில் பலர் மனநோயாளிகளாகி விடுகின்றனர். இந்தக் கொடுமையிலும் இவர்கள் பங்கு பெற்றுக் கொள்கின்றனர்.

இப்படி ஏராளமான தீமைகளின் மொத்த வடிவமாகத் திகழும் வரதட்சணையை வாங்குவோர், இவ்வளவு பாவங்களுக்கான தண்டனைக்காகத் தம்மை முன்பதிவு செய்கிறார்கள். நியாயத் தீர்ப்பு வழங்கக் கூடிய இறைவன் முன்னால் நாம் நிறுத்தப்படுவோம் என்ற அச்சம் கடுகளவாவது இருந்தால் எவரும் வரதட்சணை கேட்கவே மாட்டார்.

- பி.ஜே திருக்குர்ஆன் விளக்கம்.

Wednesday, August 22, 2012

ரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்

அல்குர்ஆன் வாழும் வேதம் மட்டுமல்ல!  அது ஆளும் வேதம் என்பதை ஒவ்வொரு ரமளானும் நிரூபித்துக் காட்டுகின்றது.  நாம் பாராத புதுப் புது முகங்கள்!  அதுவரை பள்ளி பக்கமே வாராதிருந்து இப்போது பள்ளியில் அடியெடுத்து வைத்த எத்தனையோ தோற்றங்கள்!

ஐந்து நேரத் தொழுகைகளில் ஆட்கள் அதிகரிப்பு! பள்ளியை விரிவாக்கம் செய்ய வேண்டுமோ என்று எண்ணும் அளவுக்கு பள்ளியில் மக்கள் நெருக்கமும் இறுக்கமும் ஏற்பட்டு பள்ளி நிரம்பி வழிந்தது.  இவ்வளவு சிறப்பும் எதனால்? அல்லாஹ் இம்மாதத்தில் குர்ஆனை இறக்கியருளியதால்!  குர்ஆன் இறங்கிய லைலத்துல் கத்ர் அம்மாதத்தில் அமைந்திருப்பதால்!

எல்லாம் வல்ல அல்லாஹ் அந்த இரவை ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவாக ஆக்கி வைத்தான்.  இம்மாதத்தில் பக­ல் நோன்பு நோற்று இரவில் நின்று வணங்குவோருக்கு அல்லாஹ் மன்னிப்பை வழங்குவதாக வாக்களித்தான்.  அதன் பலனை சிம்பா­க்காக வெளிப்படுத்தும் விதமாக சுவனத்தைத் திறந்து வைத்து நரகத்தை மூடினான்.

இதனால் கொஞ்ச நஞ்ச ஈமானிய உணர்வு உள்ளவர்களும் இம்மாதத்தில் அல்லாஹ் அளிக்கும் அரிய வாய்ப்பைப் பெற வேண்டி படையெடுத்து வந்தார்கள்.  உண்மையில் ரமளான் இவர்களை இரவிலும் பக­லும் சிறைப்படுத்தி வைத்திருந்தது.

அந்த வகையில் ரமளான் அவர்களைக் கைது செய்து நற்பண்புகளைப் போதித்த ஒரு சிறைச்சாலை!

நல்ல பாடங்களைப் படித்துக் கொடுத்த ஒரு பாடசாலை!

இறையச்சத்தில் ஊனமாகிப் போய் கிடந்த சகோதரர்களை இறையச்சத்தின் பக்கம் நடை பயில வைத்த நடை வண்டி!

இந்த ரமளான் மாதத்தில் பெற்ற பண்புகள் என்ன? பாடங்கள் என்ன? என்று பார்ப்போம்.

ஐந்து நேர ஜமாஅத் தொழுகைகளில் தவறாது கலந்து கொண்டோம்.  இரவு நேரங்களில் தொழுதோம்.  சப்தங்கள் அடங்கிப் போன ஸஹர் நேரத்தில் விழித்து பிரார்த்தனை செய்தோம்.

இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்பு தேடுவோராகவும் (இருப்பார்கள்) (அல்குர்ஆன் 3:17)

இரவில் குறைவாகவே தூங்கிக் கொண்டிருந்தனர்.  இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்பு தேடுவார்கள். (அல்குர்ஆன் 51:17-18)

Thursday, August 16, 2012

நோன்பின் சட்டங்கள் - தொடர் 23 - பி.ஜே - முடிவுற்றது

பெருநாள் கொண்டாட்டங்கள்

புத்தாடை அணிதல் / வீர விளையாட்டுக்கள்

புத்தாடை அணிதல்

கடைவீதியில் விற்பனை செய்யப்பட்ட பட்டுக் குராடை ஒன்றை உமர் (ரலி) எடுத்துக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! இதை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்; பெருநாலும், தூதுக்குழுவினரைச் சந்திக்கும் பொழுதும் நீங்கள் அலங்கரித்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது (மறுமைப்) பேறு அற்றவர்கன் ஆடையாகும் எனக் கூறினார்கள். நூல்: புகாரி 948, 3054

பட்டாடை மார்க்கத்தில் தடுக்கப்பட்டதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாங்க மறுக்கின்றார்கள். ஆனால் இந்த ஹதீஸில் பெருநாளைக்குப் புது ஆடை அணியும் நடைமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்திருக்கின்றது என்பதை அறிய முடிகின்றது. அதே சமயம் ஒவ்வொரு பெருநாளைக்கும் புது ஆடை எடுக்க வேண்டியதில்லை என்பதை உமர் (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கடம் தெரிவிக்கும் கருத்திருந்து விளங்கிக் கொள்ளலாம்.

பெருநாலும் தூதுக்குழுவைச் சந்திக்கும் போதும் நீங்கள் அலங்கரித்துக் கொள்ளலாம் என்று உமர் (ரலி) கூறும் கருத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கன் யதார்த்த நிலையைப் பிரதிபலிக்கின்றது. ஒவ்வொரு ஆண்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புத்தாடை வாங்கியிருந்தால் உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியிருக்க முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் வாழ்ந்த பத்தாண்டு காலத்தில் எந்தப் பெருநாளுக்கும் புத்தாடை வாங்கியதாக எந்தக் குறிப்பையும் நாம் பார்க்க முடியவில்லை.

ஒவ்வொரு பெருநாலும் புது ஆடை வாங்கி அணிந்தால் தான் பெருநாள்; இல்லையேல் அது பெருநாள் இல்லை என்ற நம்பிக்கை பலமாக மக்கடத்தில் பதிந்து விட்டது. அதனால் பல்லாயிரக்கணக்கான ரூபாயைக் கடன் வாங்கி துணிமணிகள் வாங்கி விட்டு, கடைசியில் அந்தக் கடனை அடைக்க முடியாமல் காலமெல்லாம் கஷ்டப்படும் அவல நிலையைப் பார்க்கின்றோம். இருப்பதில் நல்ல ஆடையை அணிந்து கொண்டால் போதுமானது. கடன் பட்டு அவஸ்தைக்கு நாம் உள்ளாக வேண்டிய அவசியமில்லை.

பெருநாளும், பொழுது போக்கு அம்சங்களும்

புஆஸ் (எனும் பழமையான போர்) பற்றி அன்ஸாரிகள் புனைந்துள்ளவற்றை அன்ஸாரிகளைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் என் முன்னே பாடிக் கொண்டிருந்த போது அபூபக்ர் (ரலி) வந்தார்கள். அவ்விரு சிறுமியரும் பாடகிகள் அல்லர். அல்லாஹ்வின் தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா? என்று அபூபக்ர் (ரலி) கேட்டார்கள். இது நடந்தது ஒரு பெருநான் போதாகும். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூ பக்ரே! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாட்கள் உள்ளன. இது நமது பெருநாளாகும் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 952, 3931

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கன் முன்னிலையில் ஷைத்தானின் இசைக் கருவிகளா? என்று அபூபக்ர் (ரலி) கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூபக்ரே! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாட்கள் உள்ளன; இது நமது பெருநாளாகும் என்று கூறியதன் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கன் முன்னிலையில் இசை வாத்தியக் கருவிகள் இருந்தன; அதனால் பெருநாள் அன்று இன்னிசைக் கச்சேரி பாடல்கள் கூடும் என்ற அளவுக்குச் சிலர் சென்று விடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னிலையில் அந்த சிறுமியர் வாத்தியக் கருவிகள் எதையும் வைத்துக் கொண்டு பாடவில்லை. அவர்கள் தஃப் என்ற கொட்டடித்திருக்கின்றார்கள். இதை நஸயீயில் உள்ள ஹதீஸ் விளக்குகின்றது. அபூபக்ர் (ரலி) ஆயிஷா (ரலி) யிடம் வந்தார்கள். அவர் அருகே இரண்டு சிறுமியர் தஃப் அடித்துக் கொண்டிருந்தனர். அவ்விருவரையும் அபூபக்ர் (ரலி) அதட்டினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தச் சிறுமியர்களை (பாடுதற்கு) விட்டு விடுங்கள். ஏனெனில், ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள் உண்டு என்று கூறினார்கள். அறிவிப்பவர்: உத்வா நூல்: நஸயீ 1575

இந்த ஹதீஸில் தஃப் (கொட்டு) என்று விளக்கமாக வருவதால், அந்தச் சிறுமிகள் இசைக் கருவிகளை வைத்துக் கொண்டு பாடவில்லை என்பதையும், அபூபக்ர் (ரலி) இந்தக் கொட்டையே இசைக் கருவிகள் போன்று கருதி கடுமையாகக் கண்டித்திருக்கின்றார்கள் என்ற விபரம் நமக்குத் தெரிய வருகின்றது. எனவே, மார்க்கத்தில் தடுக்கப்படாத இது போன்ற அனுமதிக்கப்பட்ட பொழுது போக்கு அம்சங்களைச் செயல் படுத்துவதின் மூலம் சினிமா, பாட்டு கச்சேரி, போன்ற ஹராமான காரியங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கலாம்.

வீர விளையாட்டுக்கள்

வீர சாகச விளையாட்டுகள் விளையாடுவதையும் பெருநாளன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்திருக்கின்றார்கள்.

ஒரு பெருநான் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமாகவோ, அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ நீ பார்க்க ஆசைப்படுகிறாயா? எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின் புறமாக என் கன்னம் அவர்கன் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி) அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள் என்று கூறினார்கள். நான் பார்த்துச் சத்த போது உனக்குப் போதுமா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அப்படியானால் (உள்ளே) போ! என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 950, 2907

பெருநாள் தினத்தில் இது போன்ற வீர விளையாட்டுக்களை ஊர் தோறும் ஏற்பாடு செய்வதன் மூலமும் மக்கள் ஹராமான காரியங்களில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டிய வழியில் மட்டும் நமது வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள இறைவன் அருள் புரிவானாக!

Wednesday, August 15, 2012

நோன்பின் சட்டங்கள் - தொடர் 22 - பி.ஜே

தொழுகையும் குத்பாவும் /  பாங்கு இகாமத் உண்டா? / பெருநாள் தொழுகைக்கு முன் சுன்னத் உண்டா? / தொழுகை முறை / கூடுதல் தக்பீர்கள் / 

தக்பீர்களுக்கு இடையில்…. / ஓத வேண்டிய அத்தியாயங்கள் / பெருநாள் (குத்பா) உரை / மிம்பர் (மேடை) இல்லை / பெண்களுக்குத் தனியாகப் பிரச்சாரம் செய்ய வேண்டுமா? / பெருநாள் குத்பாவைக் கேட்பதன் அவசியம் / பெருநாள் பிரார்த்தனை / ஓர் உரையா? இரண்டு உரையா? / பெருநாள் தக்பீர் கூறுதல் / ஒரு வழியில் சென்று மறுவழியில் திரும்புதல் / பெருநாள் தொழுகைக்குப் பின் சுன்னத் உண்டா? / சாப்பிட்டு விட்டுத் தான் செல்ல வேண்டுமா? / ஜும்ஆவும் பெருநாளும்

தொழுகையும் குத்பாவும்

பெருநாள் தொழுகை ஜும்ஆ தொழுகையைப் போன்று இரண்டு ரக்அத்துகள் தொழுகையும், சொற்பொழிவும் அடங்கியதாகும். ஜும்ஆவின் போது முதல் இமாம் உரை நிகழ்த்தி விட்டுப் பின்னர் தொழுகை நடத்த வேண்டும். ஆனால் பெருநாள் தொழுகையில் முதல் தொழுகை நடத்திவிட்டு அதன் பிறகு இமாம் உரை நிகழ்த்த வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடன் நான் பெருநாள் தொழுகையில் பங்கு எடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுபவர்களாக இருந்தனர்.  அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 962

பாங்கு இகாமத் உண்டா?

நோன்புப் பெருநாலும், ஹஜ் பெருநாலும் பாங்கு சொல்லப்பட்டதில்லை.
அறிவிப்பவர்கள்: இப்னு அப்பாஸ் (ரலி), ஜாபிர் (ரலி) நூல்: புகாரி 960

முஸ்மில் இடம் பெற்றுள்ள மற்றொரு ஹதீஸில் இகாமத்தும் சொல்லப்பட்டதில்லை என்று ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்கள். எனவே பெருநாள் தொழுகைக்கு பாங்கோ, இகாமத்தோ இல்லை.

பெருநாள் தொழுகைக்கு முன் சுன்னத் உண்டா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாலும், ஹஜ்ஜுப் பெருநாலும் முஸல்லா என்ற திடலுக்குச் செல்வார்கள். அவர்கள் முதன் முதல் (பெருநாள்) தொழுகையைத் தான் துவக்குவார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) நூல்: புகாரி 956

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அதற்கு முன்பும், பின்பும் அவர்கள் எதையும் தொழவில்லை. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 964, 989, 1431, 5881, 5883

சில ஊர்கல் பெருநாள் தொழுகைக்கு முன் சுன்னத் என்ற பெயரில் இரண்டு ரக்அத் தொழும் வழக்கம் இருந்து வருகின்றது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய, நபிவழிக்கு மாற்றமான நடைமுறையாகும்.

தொழுகை முறை

பெருநாள் தொழுகை மற்ற தொழுகைகளைப் போன்றது தான். ஆயினும் இதற்கென சில கூடுதல் அம்சங்கள் உள்ளன. எனவே, இந்தக் கூடுதல் அம்சங்கள் எவை என்பதை மட்டும் நாம் பார்ப்போம். மற்றபடி உளூச் செய்தல், கிப்லாவை முன்னோக்குதல் போன்ற தொழுகைக்கு உள்ள அனைத்துக் காரியங்களும் பெருநாள் தொழுகைக்கும் செய்யப்பட வேண்டும்.

பெருநாள் தொழுகைக்காக நின்றவுடன் இமாம், பெருநாள் தொழுகைக்கான நிய்யத் சொல்க் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. நிய்யத் என்பதன் பொருள் மனதால் எண்ணுவதாகும். வாயால் மொழிவதல்ல! எந்த வணக்கத்தில் ஈடுபட்டாலும் வணக்கத்தில் ஈடுபடும் எண்ணம் இருப்பது அவசியமாகும். வாயால் சொல்வது நபிவழியல்ல! இதை முன்பே நாம் விளக்கியுள்ளோம்.

கூடுதல் தக்பீர்கள்

சாதாரண தொழுகைகல் சொல்லப்படும் வழக்கமான தக்பீர்களை விட பெருநாள் தொழுகையில் கூடுதலான தக்பீர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களுமாக மொத்தம் 12 தக்பீர்கள் சொல்ல வேண்டும்.

நோன்பின் சட்டங்கள் - தொடர் 21 - பி.ஜே

நோன்புப் பெருநாள் தர்மம் / நிறைவேற்றும் நேரம் / யாருக்குக் கடமை? /

எதைக் கொடுக்கலாம்? / எவ்வளவு கொடுக்க வேண்டும்? / எப்படிக் கொடுப்பது?

நோன்புப் பெருநாள் தர்மம்

நோன்புப் பெருநாளை ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதற்காக இஸ்லாம் செய்துள்ள ஏற்பாடு தான் (சதகதுல் பித்ர் எனும்) நோன்புப் பெருநாள் தர்மம்.

கட்டாயக் கடமை

நோன்புப் பெருநாள் தர்மம் கட்டாயமான ஒரு கடமையாகும்.

அடிமைகள், அடிமைகள் அல்லாத மற்றவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர், பெரியோர் ஆகிய அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். பேரீச்சம் பழம், தீட்டப்படாத கோதுமை ஆகியவற்றிருந்து ஒரு ஸாவு எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். மேலும் (பெருநாள்) தொழுகைக்கு மக்கள் புறப்படுவதற்கு முன்பே அதை வழங்கிவிட வேண்டும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1503

இந்த ஹதீஸில் ஃபரள (கடமையாக்கினார்கள்) என்ற வாசகம் தெவாக இடம் பெற்றுள்ளதால் இது ஒரு கட்டாயமான கடமை என்பதை அறிந்து கொள்ளலாம்.

நிறைவேற்றும் நேரம்

நோன்புப் பெருநாள் தர்மத்தை எப்போதிருந்து நிறைவேற்றலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலக்கெடு எதனையும் நிர்ணயிக்கவில்லை. ஆயினும் நோன்புப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன்பாகக் கொடுத்து விட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். இந்தக் கட்டளை மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

இந்தக் கட்டளையை முஸ்லிம் அறிஞர்கள் இரண்டு விதமாகப் புரிந்து கொண்டுள்ளனர்.

1) பெருநாள் பிறை தென்பட்டது முதல் பெருநாள் தொழுகை தொழுவதற்கு முன் கொடுத்து விட வேண்டும்.

2) ரமலான் மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் வழங்கலாம். வழங்கப்படுவதற்கான கடைசி நேரம் தான் அந்தக் கட்டளையில் கூறப்பட்டுள்ளது. ஆரம்ப நேரம் பற்றி கூறப்படவில்லை.

இவ்வாறு இரு கருத்துக்கள் நிலவுகின்றன. இதில் இரண்டாவது கருத்துத் தான் ஏற்புடையதாக உள்ளது.

நபித்தோழர்கள் நோன்புப் பெருநாளைக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாக அதைக் கொடுத்து வந்தனர். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1511

பெருநாள் பிறையைக் கண்ட பிறகு தான் இதைக் கொடுக்க வேண்டும் என்றிருந்தால் இரண்டு நாட்களுக்கு முன்பே நபித்தோழர்கள் கொடுத்திருக்க மாட்டார்கள்.

மேலும் பெருநாள் தர்மத்தின் நோக்கம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதும் இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கிறது.

நோன்பு நோற்றவர் வீணான காரியங்கல் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பு அதை நிறைவேற்றுகிறாரோ அது ஏற்கப்பட்ட கடமையான ஸகாத்தாக அமையும். யார் பெருநாள் தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது சாதாரண தர்மங்கல் ஒரு தர்மம் போல் அமையும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: அபூதாவூத் 1371

ஏழைகள் மகிழ்வுடன் பெருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதற்காகத் தான் பெருநாள் தொழுகைக்கு முன்பே கொடுப்பதையும், பின்னால் கொடுப்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார்கள். பெருநாள் தொழுகைக்குப் பின்னால் கொடுப்பது ஏழைகள் பெருநாள் கொண்டாட உதவாது என்பதால் அதைச் சாதாரண தர்மம் எனக் கூறுகிறார்கள்.

பெருநாள் தினத்தை ஏழைகள் மகிழ்ச்சியுடன் கொண்டாட இந்த தர்மம் உதவ வேண்டும் என்பது தான் இதன் முக்கியமான நோக்கம்.

இன்றைய காலத்தில் மற்றவர்களைப் போல் ஏழைகளும் பெருநாளைக் கொண்டாட வேண்டுமென்றால் பெருநாளைக்குச் சில நாட்களுக்கு முன்பே இந்தத் தர்மத்தைக் கொடுத்தால் தான் சாத்தியமாகும்.

ஏழைகள் மகிழ்வுடன் பெருநாள் கொண்டாட உதவுகிறதா என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட்டு அதற்கு உதவுகிற வகையில் ரமளானில் எப்போது கொடுத்தாலும் அதைக் குறை கூற முடியாது.

யாருக்குக் கடமை?

நோன்பில் ஏற்படும் தவறுகளுக்குப் பரிகாரமாக இந்தத் தர்மம் கடமையாக்கப்பட்டதாக மேற்கண்ட ஹதீஸ் கூறினாலும் நோன்பு நோற்காதவர்களுக்கும் இது கடமையாகும். மேற்கண்ட ஹதீஸில் ஏழைகள் மகிழ்வுடன் பெருநாளைக் கொண்டாட வேண்டும்; நோன்பின் தவறுகளுக்குப் பரிகாரமாக வேண்டும் என்று இரு நோக்கங்கள் கூறப்படுகின்றன.

Sunday, August 12, 2012

நோன்பின் சட்டங்கள் - தொடர் 20 - பி.ஜே

பெருநாள் தொழுகை

பெருநாள் தொழுகையின் அவசியம் / தொழுகை நேரம் / பெருநாள் தொழுகையில் பெண்கள்

பெருநாள் தொழுகையின் அவசியம்

பருவமடைந்த ஆண், பெண் அனைவரும் பெருநாள் தொழுகை தொழுவது அவசியமாகும். ஜும்ஆத் தொழுகை கடமை என்பதை நாம் அறிவோம். ஜும்ஆ தினத்தில் பெருநாள் வந்தால் ஜும்ஆவிற்குப் பதிலாக பெருநாள் தொழுகையே போதுமானது என்று மார்க்கம் கூறுகின்றது என்றால் பெருநாள் தொழுகை எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியலாம்.
(இது பின்னர் விரிவாக விளக்கப்பட்டுள்ளது)

ஜமாஅத் தொழுகை, ஜும்ஆத் தொழுகை போன்ற கூட்டுத் தொழுகைகல் பெண்கள் பங்கு கொள்ளாமல் தமது வீடுகலேயே தனியாகத் தொழுது கொள்ளலாம் என்று இஸ்லாம் பெண்களுக்குச் சலுகை வழங்கியுள்ளது. அப்படிச் சலுகை வழங்கிய இஸ்லாம் பெருநாள் தொழுகையில் மட்டும் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறது. தகுந்த ஆடை இல்லாவிட்டால் இரவல் ஆடை வாங்கியாவது கலந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. (இதுவும் பின்னர் விளக்கப்பட்டுள்ளது).

மற்ற தொழுகைகளை விட அதிக முக்கியத்துவம் அக்கப்பட்டதில் இருந்து இத்தொழுகையின் அவசியத்தை அறிந்து கொள்ளலாம்.

தொழுகை நேரம்

இன்றைய தினத்தில் நாம் முதல் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் அறுத்துப் பயிடுவோம். யார் இவ்வாறு செய்கின்றாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: பர்ராஃ பின் ஆஸிப் (ரலி) நூல்: புகாரி 951, 965, 968, 976, 5545, 5560

மேற்கண்ட ஹதீஸ் பெருநாள் தினத்தில் முதல் காரியமாக தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வயுறுத்துகின்றது. முதல் காரியமாக பெருநாள் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்றால் சுபுஹ் தொழுது முடித்த மறு நிமிடமே தொழுது விடவேண்டும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் பொதுவாக சுபுஹு தொழுகைக்குப் பின்னர் சூரியன் நன்கு வெப்படும் வரை தொழுவதற்குத் தடை உள்ளது.

சுபுஹுக்குப் பின் சூரியன் உதித்துப் பிரகாசிக்கின்ற வரை தொழுவதையும், அஸருக்குப் பின் சூரியன் மறைகின்ற வரை தொழுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தனர். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 581

இந்த ஹதீஸில் சுபுஹுக்குப் பின்னர் சூரியன் முழுமையாக வெப்படும் வரை தொழுவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருப்பதால் அந்த நேரம் முடிந்தவுடன் பெருநாள் தொழுகையின் நேரம் துவங்கி விடுகின்றது.

தமிழகத்தில் அனேக இடங்கல் காலை 11 மணி வரை தாமதப்படுத்தி பெருநாள் தொழுகையைத் தொழுகின்றார்கள். இது தவறாகும்.

பெருநாள் தொழுகை மைதானத்தில் தொழவேண்டிய தொழுகையாகும்.

தொழுகையைத் தாமதப்படுத்தும் போது வெயிலின் கடுமை காரணமாக மைதானத்தில் மக்கள் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

Monday, July 30, 2012

நோன்பின் சட்டங்கள் - தொடர் 19 - பி.ஜே

லைலத்துல் கத்ரு இரவு / லைலத்துல் கத்ரின் அமல்கள்

லைலத்துல் கத்ரு இரவு

ரமளான் மாதத்தில் ஓர் இரவு உள்ளது. அந்த ஓர் இரவானது ஆயிரம் மாதங்களை விடச் சிறப்பானதாக அமைந்துள்ளது.

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. அல்குர்ஆன் 97:1-3

இந்த மகத்துவமிக்க இரவு இது தான் என்று வரையறுத்து, குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலோ கூறப்படவில்லை. ஆனாலும் ரமளான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் அந்த இரவு அமைந்திருக்கலாம் என்பது தான் ஹதீஸ்களிலிருந்து பெறப்படும் உண்மையாகும்.

லைலத்துல் கத்ரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் நீங்கள் தேடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 2017, 2020

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களிடம் வந்தார்கள். அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடிக் கொண்டிருந்தனர். அதை நான் மறந்து விட்டேன். எனவே அதை 27, 29, 25 ஆகிய நாட்களில் தேடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி) நூல்: புகாரி 49, 2023, 6049

குறிப்பிட்ட இரவு லைலத்துல் கத்ர் என்று சில ஹதீஸ்கள் வந்திருந்தாலும் கடைசிப் பத்து நாட்களில் ஏதேனும் ஒரு இரவாக அது இருக்கும் சாத்தியம் உள்ளது என்று இந்த ஹதீஸ்கள் கூறுவதால் இந்தப் பத்து நாட்களும் அதற்காக முயற்சிப்பதே சிறப்பானதாகும்.

லைலத்துல் கத்ரின் அமல்கள்

லைலத்துல் கத்ர் இரவுக்கென்று விசேஷமான தொழுகையோ, வணக்கமோ ஹதீஸ்களில் காணப்படவில்லை. ஆயினும் கடைசிப் பத்து நாட்களும் பள்ளிவாசலிலேயே தங்கியிருக்கும் இஃதிகாஃப் எனும் வணக்கத்தை நபியவர்கள் செய்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள். அவர்களுக்குப் பின் அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 2026

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்க நாடினால் சுபுஹ் தொழுது விட்டுத் தமது இஃதிகாஃப் இருக்குமிடம் சென்று விடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 2041

Friday, July 27, 2012

நோன்பின் சட்டங்கள் - தொடர் 18 - பி.ஜே

 ரமளான் இரவு வணக்கங்கள் / இரவுத் தொழுகை தனியாகத் தொழலாமா? / தவறான கருத்துக்கள்

ரமளான் இரவு வணக்கங்கள்

புனித ரமளானில் நின்று வணங்குவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. ஆயினும் ரமளானில் தொழுவதற்கென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரத்தியேகமான வணக்கம் எதனையும் கற்றுத் தரவில்லை. அவர்களும் பிரத்தியேகமான எந்த வணக்கத்தையும் செய்யவில்லை.

ரமளானில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது? என்று ஆயிஷா (ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமளான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அபூ ஸலமா நூல்: புகாரி 1147, 2013, 3569

ரமளானில் விசேஷமான தொழுகை ஏதும் உண்டா? என்பதை அறிந்து கொள்வதற்காக அபூஸலமா அவர்கள் கேள்வி கேட்கிறார்கள். ரமளானுக்கென்று விசேஷமாகத் தொழுகை ஏதும் இல்லை என்று ஆயிஷா (ரலி) விடையளிக்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவு வணக்கத்தை அவர்களின் மனைவியர் தவிர மற்றவர்கள் அதிகம் அறிய முடியாது.

ரமளான் அல்லாத நாட்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுது வந்த ரக்அத்களையே ரமளானிலும் தொழுது வந்தார்கள். அதைத் தவிர மேலதிகமாக எந்தத் தொழுகைகளையும் தொழுததில்லை என்பதை இதன் மூலம் அறியலாம்.

தராவீஹ் என்ற பெயரில் 20 ரக்அத்கள் தொழும் வழக்கம் பரவலாக உள்ளது.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பல்லாயிரக்கணக்கான ஹதீஸ்கள் இருந்தும் ஒரேயொரு ஹதீஸில் கூட தராவீஹ் என்ற வார்த்தையே இடம் பெறவில்லை. அல்லாஹ்வின் தூதருடைய வாயிலிருந்து இந்த வார்த்தை கூட வெளிப்பட்டதற்கு ஆதாரமில்லை.

இந்த வார்த்தையே ஹதீஸ்களில் இல்லை எனும் போது இது நாமாகக் கண்டுபிடித்த தொழுகை என்பதையும், மார்க்கத்திற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதையும் அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமளான் அல்லாத மாதங்களிலும் தொழுத தொழுகை தஹஜ்ஜுத், இரவுத் தொழுகை என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்மைகளை அதிகமதிகம் அள்ளித் தரக் கூடிய புனிதமிக்க மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தராத நடவடிக்கைகளில் இறங்குவதற்கு அதிகமாக அஞ்ச வேண்டும்.

இது தஹஜ்ஜுத் தொழுகை பற்றியதாகும்; தஹஜ்ஜுத் தொழுகை அல்லாத வேறு தொழுகையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதிருப்பார்கள் என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர்.

ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியே ரமளான் தொழுகை பற்றித் தான். கூரிய மதி படைத்த அவர்கள் ரமளானில் விசேஷத் தொழுகை கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்த பின் இவர்களின் வாதம் ஏற்கத்தக்கது தானா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

Thursday, July 26, 2012

நோன்பின் சட்டங்கள் - தொடர் 17 - பி.ஜே

சுன்னத்தான நோன்புகள் / மிஃராஜ், பராஅத், தொடர் நோன்பு மற்றும் நோன்பு நோற்கக் கூடாத நாட்கள் 

சுன்னத்தான நோன்புகள்

புனித ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமையாக்கப்பட்டிருப்பது போல் வேறு பல நோன்புகள், கட்டாயமாக்கப் படாவிட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் ஆர்வமூட்டப்பட்டுள்ளன. அவற்றையும் கடைப்பிடித்து நன்மைகளை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தராத, தவிர்க்க வேண்டிய நோன்புகள் சிலவும் நடைமுறையில் உள்ளன. அவற்றிலிருந்தும் நாம் விலகிக் கொள்ள வேண்டும்.

ஆஷூரா நோன்பு

முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் நோற்கப்படும் நோன்பு ஆஷூரா நோன்பு எனப்படுகிறது.

ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் இந்த நோன்பு கட்டாயமாக இருந்தது. ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் விரும்பியவர் நோற்கலாம் என்ற நிலைக்கு வந்தது. (ஹதீஸின் கருத்து) அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நுல்: புகாரி 1592

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்று மற்றவர்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! இந்த நாளை யூதர்களும், கிறித்தவர்களும் மகத்துவப்படுத்துகின்றனரே? என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அடுத்த வருடம் அல்லாஹ் நாடினால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் எனக் கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு வருவதற்குள் மரணித்து விட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 1916

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளின் கடைசி வருடத்திலும் ஆஷூரா நோன்புக்குக் கட்டளையிட்டுள்ளார்கள். மேலும் யூதர்களும், கிறித்தவர்களும் இந்த நாளை மகத்துவப்படுத்துகின்றனரே என்று கேட்கப்பட்ட போது அவர்களுக்கு மாறு செய்யும் வகையில் 9, 10 ஆகிய இரு நாட்கள் நோன்பு நோற்பதாகக் கூறியுள்ளனர்.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆசைப்பட்ட இரண்டு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும்.

முஸ்லிம்களும், கிறித்தவர்களும், யூதர்களும் மதிக்கின்ற பெரியார் மூஸா நபியாவார். இவர்கள் ஃபிர்அவ்னிடமிருந்து இந்த நாளில் தான் காப்பாற்றப்பட்டார்கள். இந்த நாளில் தான் ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டான்.

இந்த நோக்கத்திற்காகத் தான் இந்த நாளில் நோன்பு நோற்கப்படுகிறது என்பதை ஏராளமான ஹதீஸ்கள் விளக்குகின்றன. மூஸா நபி காப்பாற்றப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கத் தான் இந்த நோன்பு நோற்கிறோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால் சில முஸ்லிம்கள் கர்பலா எனும் இடத்தில் ஹுசைன் (ரலி) கொல்லப்பட்டது இந்த நாளில் தான்; எனவே இந்த நோன்பு நோற்கிறோம் என்று நினைக்கின்றனர்.

ஹுஸைன் (ரலி) கொல்லப்பட்டதற்கும் இந்த நோன்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஹுஸைன் (ரலி) கொல்லப்பட்டதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படி இந்த நாளில் நோன்பு நோற்றிருப்பார்கள்? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

மார்க்கத்தில் ஒரு காரியம் கடமையாகவோ, சுன்னத்தாகவோ ஆக வேண்டுமானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்தில் தான் ஆகுமே தவிர அவர்களுக்குப் பின்னால் உலகத்தில் என்ன நடந்தாலும் அதற்காக எந்த ஒரு வணக்கமும் மார்க்கத்தில் நுழைய இயலாது.

ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்திலேயே, இம்மார்க்கத்தை இன்று நான் முழுமைப்படுத்தி விட்டேன் (அல்குர்ஆன் 5:3) என்று அல்லாஹ் பிரகடனம் செய்து விட்டான்.

ஆறு நோன்புகள்

ரமளான் மாதத்திற்கு அடுத்த மாதமான ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் நோற்பதற்கு நபிகள் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.

யார் ரமலான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவராவார் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி) நூல்: முஸ்லிம் 1984

Thursday, July 19, 2012

நோன்பின் சட்டங்கள் - தொடர் 16 - பி.ஜே

ஒருவருக்காக மற்றவர் நோன்பு நோற்றல் / சிறுவர்கள் நோன்பு நோற்பது

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒருவரது சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் என்பது முக்கியமான கொள்கையாகும். ஒவ்வொருவரும் தத்தமது செய்கைகளுக்குப் பொறுப்பாளிகள் என்றாலும் இதிலிருந்து சில வணக்கங்கள் மட்டும் விதி விலக்குப் பெறுகின்றன. நோன்பும் அவ்வாறு விதிவிலக்குப் பெற்ற வணக்கங்களில் ஒன்றாகும்.

நோன்பு களாவாகவுள்ள நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்காக அவரது பொறுப்பாளர் நோன்பு நோற்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 1952

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். அல்லாஹ்வின் தூதரே! என் தாய் மீது ஒரு மாத நோன்பு (கடமையாக) உள்ள நிலையில் மரணித்து விட்டார். அவரது சார்பில் நான் அதை நிறைவேற்றலாமா?என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஆம்! நிறைவேற்றலாம். அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்பட அதிகம் தகுதியானது என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 1953

புகாரியின் மற்றொரு ஹதீஸில் ஒரு பெண் வந்து இவ்வாறு கேட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நோன்பு கடமையாகி களாவாகவுள்ள நிலையில் யாரேனும் மரணித்து விட்டால் அவரது வாரிசுகள் அவருக்காக நோன்பு நோற்கலாம் என்று கூறுவதை விட நோற்பது அவசியம் என்று தான் கூற வேண்டும். ஏனெனில் கடனுடன் நோன்பை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒப்பிட்டுள்ளார்கள். மேலும் கடனை விட நிறைவேற்றுவதற்கு அதிகத் தகுதியுடையது எனவும் கூறுகிறார்கள்.

இறந்தவர்களுக்காக மார்க்கத்தில் இல்லாத கத்தம் பாத்திஹா ஓதுவதை விடுத்து இறந்தவர் மீது நோன்பு களாவாக இருந்தால் அதை நிறைவேற்றலாம். இறந்தவரின் சொத்துக்களுக்கு மட்டும் வாரிசாக ஆசைப்படுவோர் மார்க்கம் அவர்கள் மீது சுமத்திய இந்தக் கடமையைச் செய்வதில்லை. நாமறிந்த வரை பெற்றோர்களுக்காக ஹஜ் செய்பவர்களைக் கூட காண்கிறோம். ஆனால் நோன்பு நோற்பவர்களைக் காண முடியவில்லை. பெற்றோர் மீது கடமையான நோன்புகள் களாவாக இருந்தால் தான் வாரிசுகள் நோற்க வேண்டும். உபரியான சுன்னத்தான நோன்புகளுக்கு ஆதாரம் இல்லை. ஏனெனில் இறந்தவர்களை அது குறித்து அல்லாஹ் விசாரிக்க மாட்டான். மேலும் இந்த ஹதீஸில் கடமையான நோன்பு பற்றியே கூறப்பட்டுள்ளது.

சிறுவர்கள் நோன்பு நோற்பது 

இஸ்லாத்தின் எல்லாக் கடமைகளும் பருவ வயதை அடைந்தவர்களுக்கு மட்டுமே உரியதாகும். சிறுவர்களுக்கு நோன்போ, தொழுகையோ கடமையில்லை என்றாலும் தொழுகைக்கு ஏழு வயது முதலே பயிற்சியளிக்க வேண்டும். பத்து வயதில் தொழாவிட்டால் அடிக்க வேண்டும் என்றெல்லாம் ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் நோன்பைப் பொறுத்த வரை இத்தகைய கட்டளை ஏதும் நபிகள் நாயகத்தினால் பிறப்பிக்கப்படவில்லை. பருவமடைந்தவர்களுக்கே பயணத்தில் இருப்பதாலும், நோயாளியாக இருப்பதாலும், கர்ப்பிணியாக இருப்பதாலும் நோன்பிலிருந்து மார்க்கம் சலுகையளித்துள்ளது. எனவே சிறுவர்களை தொழுகையைப் போல் கட்டாயப்படுத்தி நோன்பு நோற்குமாறு வற்புறுத்தக் கூடாது.

தொழுகைக்குப் பலவிதமான நடைமுறைகள், ஓத வேண்டியவை உள்ளன. அவற்றையெல்லாம் சிறுவயது முதலே கற்றுப் பயிற்சி எடுக்கும் அவசியம் உள்ளது. ஆனால் நோன்பைப் பொறுத்த வரை பருவமடைந்தால் அடுத்த நாளே நோன்பைக் கடைப்பிடிக்க முடியும்.

அதே நேரத்தில் சிறுவர்களுக்குச் சக்தியிருந்தால் அவர்களையும் நோன்பு நோற்கச் செய்ய அனுமதி உள்ளது. அனுமதி தானே தவிர அவசியமில்லை.


ரமளான் மாதத்தில் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் ஆஷுரா நோன்பு தான் கடமையான நோன்பாக இருந்தது. இந்த நோன்பு குறித்துப் பின்வரும் செய்தி புகாரி, முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. ஆஷுரா தினத்தில் நாங்களும் நோன்பு நோற்போம். எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்கச் செய்வோம். அவர்களுக்குத் துணியால் விளையாட்டுப் பொருளையும் தயார் செய்து வைத்துக் கொள்வோம். அவர்கள் உணவு கேட்கும் போது அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து நோன்பு துறக்கும் வரை கவனத்தைத் திருப்புவோம். அறிவிப்பவர்: ருபைய்யி பின்த் முஅவித் (ரலி) நூல்கள்: புகாரி 1960, முஸ்லிம் 2092

இந்தச் செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை அனுமதித்துள்ளார்கள் என்பது தான் தெரிகிறது. அவர்கள் தொழுகைக்குக் கட்டளையிட்டது போல் கட்டளை இடவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மேலும் ஆஷுரா நோன்பு என்பது ஒருநாள் மட்டுமே நோற்கும் நோன்பாகும்.
 
ஒரு நாள் என்பதால் சிறுவர்களுக்கு விளையாட்டுக் காட்டலாம். ரமளான் நோன்பு ஒரு மாதம் முழுவதும் உள்ள நோன்பாகும். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து சிறுவர்கள் நோற்றதாக எந்த ஆதாரமும் நமக்குக் கிடைக்கவில்லை.

இதில் கவனிக்க வேண்டிய அம்சம் சிறுவர்கள் நோன்பு நோற்பதால் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என்றால் அவர்களையும் நோன்புக்குப் பயிற்றுவிக்கலாம். நாகூர் ஹனீஃபாவின் ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழைப் பாலகன் என்ற கட்டுக் கதையை நம்பி சிறுவர்களை நோன்பு நோற்கச் சொல்லி சாகடித்து விடக் கூடாது.

நோன்பின் சட்டங்கள் - தொடர் 15 - பி.ஜே

இரத்தத்தை வெளியேற்றுதல் மற்றும் உடலில் இரத்தம் ஏற்றுதல், குளுக்கோஸ் ஏற்றுதல், ஊசி மூலம் மருந்துகளை ஏற்றுதல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும் அதற்கடுத்த கால கட்டத்திலும் அரபியரிடம் இரத்தத்தை உடலிலிருந்து வெளியேற்றும் வழக்கம் இருந்தது. தலையின் உச்சியில் கண்ணுக்குத் தெரியாத வகையில் துவாரமிட்டு, கொம்பு போன்ற கருவியின் மூலம் அதை உறிஞ்சி வெளியேற்றி வந்தனர்.  கண்ணாடிக் குவளையைப் பயன்படுத்தியும் இவ்வாறு இரத்தத்தை வெளியேற்றி வந்தனர்.

இது உடலுக்கு ஆரோக்கியமானது எனவும் நம்பி வந்தனர். இந்த வழக்கம் இன்றைக்கு ஒழிந்து விட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த இந்த நடைமுறையிலிருந்து வேறு பல சட்டங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.

இரத்தம் கொடுப்பவரும், எடுப்பவரும் நோன்பை முறித்து விட்டனர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ராபிவு பின் கதீஜ் (ரலி) நூல்: திர்மிதீ (705) 

இந்தக் கருத்தில் இன்னும் பல ஹதீஸ்களும் உள்ளன. ஆனாலும் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இந்தச் சட்டம் நடைமுறையிலிருந்து பின்னர் மாற்றப்பட்டு விட்டது.

இதற்கான ஆதாரங்கள் வருமாறு: ஆரம்பத்தில் ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைக் கடந்து சென்றார்கள். அப்போது, இரத்தம் கொடுத்தவரும் எடுத்தவரும் நோன்பை விட்டு விட்டனர் என்று கூறினார்கள். இதன் பிறகு நோன்பாளி இரத்தம் கொடுக்க அனுமதி வழங்கினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: தாரகுத்னீ (பாகம்: 2, பக்கம்: 182)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பு நோற்றவர் இரத்தம் கொடுப்பதை நீங்கள் வெறுத்ததுண்டா? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் (இதனால்) பலவீனம் ஏற்படும் என்பதனாலேயே அதை நாங்கள் வெறுத்தோம் என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: ஸாபித் அல்புனானீ நூல்: புகாரி 1940

நோன்பு நோற்றவர் உடலிலிருந்து இரத்தத்தை வெளியேற்றுவதை ஆதாரமாகக் கொண்டு, உயிர் காக்கும் அவசியத்தை முன்னிட்டு இரத்த தானம் செய்வதால் நோன்பு முறியாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

உடலில் இரத்தம் ஏற்றுதல், குளுக்கோஸ் ஏற்றுதல், ஊசி மூலம் மருந்துகளை ஏற்றுதல்

நோன்பு நோற்றவர் உடலில் இரத்தம் ஏற்றிக் கொள்ளுதல், குளுகோஸ் ஏற்றிக் கொள்ளுதல், ஊசி மூலம் மருந்துகளை உடலில் ஏற்றிக் கொள்ளுதல் போன்றவற்றுக்கு இதை ஆதாரமாகக் காட்ட முடியாது.

ஏனெனில் இரத்தத்தை வெளியேற்றுவதற்கும் உள்ளே செலுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. வெளியேற்றுவதற்கான சான்று உள்ளே செலுத்துவதற்குப் பொருந்தாது. மேலும் குளுகோஸ் ஏற்றும் அளவுக்கு ஒருவரது நிலை இருந்தால் அவர் நோன்பை முறித்துவிட சலுகை பெற்றவராக இருக்கிறார்.

குளுகோஸ் ஏற்றிக் கொண்டு நோன்பை முறித்து மற்றொரு நாளில் முறித்த நோன்பை களாச் செய்யலாம். குளுகோஸ் ஏற்றும் நிலைமை ஏற்படாமல் உடலுக்குத் தெம்பு ஏற்றும் நோக்கத்தில் குளுகோஸ் ஏற்றினால் அது கூடாது என்று கூறலாம்.

ஏனெனில் குளுகோஸ் என்பது உணவுடைய நிலையில் தான் உள்ளது. உணவு உட்கொள்வதற்குப் பதிலாக குளுகோஸ் ஏற்றிக் கொண்டு உணவு உட்கொண்டது போன்ற சக்தியைப் பெற இயலும். எனவே உண்ணக் கூடாது என்ற தடையை மீறியதாகவே இது அமையும்.

இது போலவே இரத்தம் ஏற்றும் நிலையும் சாதாரண நிலையில் நடப்பது அல்ல! உயிர் காக்கும் அசாதாரணமான நிலையில் தான் இரத்தம் ஏற்ற வேண்டிய நிலை ஏற்படும். இது போன்ற நிலைமையை அடைந்தவர் நோன்பை விட்டு விட சலுகை பெற்றுள்ளார். உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றால் நோன்பை விட்டு விடுவது இவரைப் பொறுத்த வரை கடமையாகவும் ஆகிவிடும்.

ஊசி மூலம் மருந்து செலுத்தும் அளவுக்கு உடல் நிலை சரியில்லாதவரும் நோன்பை விட்டு விட அனுமதி பெற்றவர் தான்.

நோயாளியாக இருப்பவர் வேறு நாளில் வைத்துக் கொள்ள இறைவன் தெளிவான வழி காட்டியிருக்கும் போது இவர்கள் நோன்பை விட்டுவிடுவதே சிறப்பாகும்.

அப்படியே உடலுக்குள் இவற்றைச் செலுத்தினால் வயிற்றுக்குள் சென்று செயல்படுவதை விட விரைவாக இரத்தத்தில் கலப்பதால் உணவு உட்கொண்டதாகத் தான் இதைக் கருத வேண்டும்.

நோன்பின் சட்டங்கள் - தொடர் 14 - பி.ஜே

நோன்பு வைத்துக் கொண்டு குளித்தல், பல் துலக்குதல்....

நோன்பு நோற்றவர் நோன்பு துறக்கும் முன் குளிக்கக் கூடாது என்று சிலர் எண்ணுகின்றனர். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது வெப்பத்தின் காரணமாகத் தமது தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்ததை நான் பார்த்துள்ளேன் என்று நபித்தோழர் ஒருவர் அறிவிக்கிறார். நூல்கள்: அஹ்மத் 22107, அபூதாவூத் 2018

நோன்பாளி உச்சி வெயில் நேரத்து வறட்சியைக் குறைத்துக் கொள்வதற்காகக் குளிப்பதும், தலையில் தண்ணீர் ஊற்றிக் கொள்வதும் கூடும் என்பதை இதிலிருந்து அறியலாம். சில பகுதிகளில் ஆறு, குளம், ஏரிகளில் குளிக்கும் வழக்கம் உள்ளது. அவ்வாறு குளிக்கும் போது காதுகளையும், மூக்கையும் விரல்களால் அடைத்துக் கொண்டு குளிக்க வேண்டுமென்று நினைக்கின்றனர். 

காதுகள் வழியாகவோ, மூக்கின் வழியாகவோ தண்ணீர் உள்ளே செல்லக் கூடாது என்பதற்காக இவ்வாறு செய்கின்றனர். இதற்கும் ஆதாரம் இல்லை. காதுகளுக்குள்ளேயும் மூக்குக்கு உள்ளேயும் தண்ணீர் செல்வது நோன்பை முறிக்கும் என்று அல்லாஹ்வோ, அவனது தூதரோ கூறவில்லை. காதுகளையும், மூக்கையும் அடைக்காமலே தண்ணீரில் மூழ்கிக் குளிக்கலாம். 

நறுமணம் பயன்படுத்துதல் நோன்பு நோற்றவர்கள் குளிக்கும் போது வாசனை சோப்புகள் போடக் கூடாது என்றும், உடம்பிலோ ஆடையிலோ நறுமணம் பூசிக் கொள்ளக் கூடாது என்றும் பலர் நினைக்கின்றனர். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தவர்கள் நறுமணம் பூசுவதைத் தடை செய்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பாளிக்கு இத்தகைய தடை எதனையும் பிறப்பிக்கவில்லை. நோன்பாளி நறுமணம் பூசக் கூடாது என்றிருந்தால் அல்லாஹ்வோ அவனது தூதரோ சொல்லாமல் விட்டிருக்க மாட்டார்கள். 

எனவே சோப், பவுடர், இதர நறுமணப் பொருட்களை நோன்பாளிகள் தாராளமாகப் பயன்படுத்தலாம். இதனால் நோன்புக்கு எந்தப் பாதகமும் ஏற்படாது. நோன்பு நோற்றவர் பல் துலக்குதல் நோன்பு நோற்றவர் நோன்பு துறந்த பிறகு தான் பல் துலக்க வேண்டும். அதற்கு முன் பல் துலக்கக் கூடாது என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். நோன்பாளியின் வாயிலிருந்து வெளிவரும் வாடை அல்லாஹ்வுக்கு கஸ்தூரியை விட விருப்பமானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதை இதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். இதைத் தவிர இவர்களுக்கு வேறு ஆதாரம் இல்லை. இந்த வாதம் ஏற்க முடியாத வாதமாகும்.

நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை வாயில் உற்பத்தியாவதில்லை. காலியான வயிற்றிலிருந்து தான் அந்த வாடை உற்பத்தியாகின்றது. பல் துலக்குவதால் நோன்பாளியின் வாயிலிருந்து வெளிவரும் வாடை நீங்கிவிடப் போவதில்லை. எனவே இவர்களின் கருத்தை நாம் ஏற்க வேண்டியதில்லை.

ஒவ்வொரு உளூவின் போதும் பல் துலக்குவதை வலியுறுத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் நோன்பாளி பல் துலக்கலாம்.

நோன்பாளி பல் துலக்கலாம் என்பதை ஒப்புக் கொள்ளும் சிலர் கை விரலாலோ, பல் துலக்கும் குச்சியாலோ தான் பல் துலக்க வேண்டும் என்றும் பல்பொடி, பற்பசை பயன்படுத்தக் கூடாது என்றும் கூறுகின்றனர். இவற்றுக்கு சுவை இருக்கிறது என்று காரணம் கூறுகின்றனர். பற்பசைக்குரிய சுவை பற்பசையில் உள்ளது போலவே சாதாரண குச்சியிலும் அதற்குரிய சுவை இருக்கத் தான் செய்கிறது. எனவே சுவையைக் காரணம் காட்டி இதைத் தடுக்க முகாந்திரம் இல்லை.

தண்ணீரில் வாய் கொப்பளிக்கும் போது கூட தண்ணீரின் சுவையை நாக்கு உணரத் தான் செய்யும். இவ்வாறு உணர்வதற்குத் தடையேதும் இல்லை. உண்பதும், பருகுவதும் தான் தடுக்கப்பட்டுள்ளது. பல் துலக்கியவர் பல் துலக்கிவிட்டு விழுங்க மாட்டார். எனவே இதைத் தடை செய்ய சரியான காரணம் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை.

உணவுகளை ருசி பார்த்தல் உணவு சமைக்கும் போது, போதுமான அளவு உப்பு மற்றும் காரம் உள்ளதா என்பதை அறிய நாக்கில் வைத்துப் பார்ப்பது பெண்களின் வழக்கமாக உள்ளது. நோன்பு நோற்றவர் இவ்வாறு ருசி பார்ப்பதில் தவறேதும் இல்லை. உள்ளே விழுங்கி விடாமல் ருசி பார்க்கலாம். மேலே நாம் சொன்ன அதே காரணங்களால் இதையும் தடுக்க முடியாது. எச்சிலை விழுங்குதல் நோன்பு நோற்றவர்கள் வாயிலிருந்து ஊறும் எச்சிலை அடிக்கடி உமிழ்ந்து கொண்டே இருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நோன்பினால் ஏற்பட்ட வறட்சியை இதன் மூலம் இவர்கள் மேலும் அதிகமாக்கிக் கொள்கின்றனர். எச்சிலை விழுங்கக் கூடாது என்றோ, அடிக்கடி காரி உமிழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்றோ அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்குக் கட்டளையிடவில்லை.

நோன்பாளி உணவை ருசி பார்த்தல், குளித்தல், நறுமணம் பூசிக் கொள்ளுதல் போன்றவை நபித் தோழர்கள் காலத்தில் நோன்புக்கு எதிரானதாகக் கருதப்பட்டதில்லை. பிற்காலத்தில் வந்த அறிவீனர்கள் தான் இதை நோன்புடன் சம்பந்தப்படுத்தி விட்டனர். புகாரியில் நபித்தோழர்கள் மற்றும் தாபியீன்களின் நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இப்னு உமர் (ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது துணியைத் தண்ணீரில் நனைத்து, தன் மீது போட்டுக் கொள்வார்கள்.

சமைக்கப்பட்ட உணவை ருசி பார்ப்பது தவறில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.

வாய் கொப்பளிப்பதும், உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதும் தவறில்லை என்று ஹஸன் பஸரி கூறினார்.

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் காலையில் தலைக்கு எண்ணெய் தேய்த்து தலை வாரிக் கொண்டு வெளியே வரட்டும் என்று இப்னு மஸ்வூத் (ரலி) கூறுகிறார்கள்.

என்னிடம் கல்லால் ஆன தண்ணீர்த் தொட்டி உள்ளது. நோன்பு வைத்துக் கொண்டு அதில் மூழ்கிக் குளிப்பேன் என்று அனஸ் (ரலி) கூறினார்கள்.

பச்சையான குச்சியால் பல் துலக்குவது குற்றமில்லை என்று இப்னு சீரீன் கூறினார். அதற்கு ருசி இருக்கிறதே என்று ஒருவர் கேட்டார். அதற்கவர்கள் தண்ணீருக்கும் தான் ருசி உள்ளது. ஏன் வாய் கொப்பளிக்கிறாய்? என்று திருப்பிக் கேட்டார்கள். இது புகாரி 1930வது ஹதீஸுக்கு முன்னால் உள்ள பாடத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்தக் காரியங்கள் நோன்புக்கு எதிரானது என்ற கருத்து பிற்காலத்தில் உருவானது என்பதற்கு, புகாரியில் இடம் பெற்ற இந்தச் செய்திகள் ஆதாரமாகவுள்ளன.

Wednesday, July 18, 2012

நோன்பின் சட்டங்கள் - தொடர் 13 - பி.ஜே

நோன்பை முறிக்கும் செயல்களை மறதியாகச் செய்தல்

நோன்பை முறிக்கும் காரியங்களை ஒருவர், தான் நோன்பு நோற்றுள்ள நினைவு இல்லாமல் செய்து விடலாம். பதினோரு மாதப் பழக்கத்தின் காரணமாக, தாகம் எடுத்தவுடன் தண்ணீரைக் குடித்து விடுவது உண்டு. குடித்தவுடன் அல்லது பாதி குடித்தும் குடிக்காமலும் உள்ள நிலையில் நோன்பு நோற்ற நினைவு வரும். இந்த நோன்பின் கதி என்ன? மறதியாகச் சாப்பிட்டால் அல்லது குடித்தால் எப்போது நினைவு வருகிறதோ உடனே அதை நிறுத்திக் கொண்டு விட்டால் அவரது நோன்புக்கு எள்ளளவும் குறைவு ஏற்படாது. நோன்பாளியாகவே அவர் தனது நிலையைத் தொடரலாம்.

ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது மறதியாகச் சாப்பிட்டாலோ பருகினாலோ அவர் தனது நோன்பை முழுமையாக்கட்டும். ஏனெனில் அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும், பருகவும் அளித்துள்ளான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1933, 6669

அவர் களாச் செய்ய வேண்டியதில்லை என தாரகுத்னீயில் இடம் பெற்ற ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.

எனவே மறதியாகச் சாப்பிட்டவர்கள், பருகியவர்கள், நினைவு வந்ததும் உண்ணுவதையும், பருகுவதையும் நிறுத்தி விட்டு நோன்பாளிகளாக இருந்து கொள்ள வேண்டும். அது முழுமையான நோன்பாக அமையும். நோன்பு நோற்றவர் மறதியாக உடலுறவு கொள்வது சாத்தியக் குறைவானதாகும். இது இருவர் சம்பந்தப்பட்டதாக இருப்பதால் ஒருவருக்கு மறதி வந்தால் மற்றவர் நினைவு படுத்திவிட முடியும். ஆனாலும் உண்மையிலேயே இருவருக்கும் மறதி ஏற்பட்டு விட்டால் இருவருக்கும் இது பொருந்தக் கூடியது தான்.

மனைவியுடன் நோன்பாளி நெருக்கமாக இருப்பது

நோன்பு நோற்பவர் பகல் காலங்களில் உடலுறவு கொள்ளாமல் விலகியிருப்பதுடன் உடலுறவுக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கைகளையும் தவிர்த்துக் கொள்வது சிறந்ததாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது தமது மனைவியரை முத்தமிடுவார்கள்; கட்டியணைப்பார்கள். அவர்கள் தம் உணர்வுகளை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தனர். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 1927

நோன்பாளி கட்டியணைப்பது பற்றி ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். மற்றொருவர் வந்து கேட்ட போது அவருக்கு அனுமதி மறுத்தார்கள். அனுமதி வழங்கப்பட்டவர் முதியவராகவும், அனுமதி மறுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தனர். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: அபூதாவூத் 2039

இதில் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது தான் முக்கியமான அளவுகோலாகும். முத்தமிடுவதில் ஆரம்பித்து உடலுறவில் போய் முடிந்து விடும் என்று யார் தன்னைப் பற்றி அஞ்சுகிறாரோ அத்தகையவர்கள் பகல் காலங்களில் அதைத் தவிர்த்துக் கொள்வது அவசியம்.

குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்பது இல்லறத்தில் ஈடுபட்டு, குளிப்புக் கடமையான நிலையில் ஸஹர் செய்வதற்காக எழக்கூடியவர்கள் குளித்து விட்டுத் தான் ஸஹர் செய்ய வேண்டுமா? இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறை என்ன?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இல்லறத்தில் ஈடுபட்டு விட்டுக் குளிக்காமல் நோன்பு நோற்பார்கள். சுபுஹ் வேளை வந்ததும் தொழுகைக்காகக் குளிப்பார்கள் என்று கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் பல உள்ளன. ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹு நேரத்தை அடைவார்கள். (அந்த நிலையில்) நோன்பும் நோற்பார்கள். அறிவிப்பவர்கள்: ஆயிஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி) நூல்: புகாரி 1926, 1930, 1932

தொழுகையை நிறைவேற்றத் தான் குளிப்பது அவசியமே தவிர நோன்புக்காகக் குளிக்க வேண்டியதில்லை. குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்று விட்டு சுப்ஹு தொழுகைக்காகக் குளிக்கலாம்.

Tuesday, July 17, 2012

நோன்பின் சட்டங்கள் - தொடர் 12 - பி.ஜே

நோன்பை முறித்ததற்குரிய பரிகாரம்

நோன்பு நோற்றவர் நோன்பை விடுவதற்குரிய காரணங்கள் ஏதுமின்றி நோன்பை முறித்தால் அது பெருங்குற்றமாகும். நோன்பு நோற்காதவர்களை விட நோன்பை வேண்டுமென்று முறிப்பவர்கள் கடும் குற்றவாளிகளாவர்.

இவ்வாறு நோன்பை முறித்தவர் ஒரு நோன்பை முறித்ததற்காக ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அதற்குரிய வசதியைப் பெறாதவர்கள் ஒரு நோன்பை முறித்ததற்காக இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். அதையும் தொடராக நோற்க வேண்டும். அந்த அளவுக்கு உடலில் வலு இல்லாதவர்கள் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நாங்கள் அமர்ந்திருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்! என்றார். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உனக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். நான் நோன்பு வைத்துக் கொண்டு என் மனைவியுடன் கூடி விட்டேன்! என்று அவர் சொன்னார். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார்.

தொடர்ந்து இரு மாதம் நோன்பு நோற்க உமக்குச் சக்தி இருக்கிறதா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். 

அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்குச் சக்தி இருக்கிறதா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் இல்லை என்றார். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். நாங்கள் இவ்வாறு இருக்கும் போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த அரக் எனும் அளவை கொண்டு வரப்பட்டது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேள்வி கேட்டவர் எங்கே? என்றார்கள். நான்தான்! என்று அவர் கூறினார். இதைப் பெற்று தர்மம் செய்வீராக! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அப்போது அம்மனிதர் அல்லாஹ்வின் தூதரே! என்னை விட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்?) மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை! என்று கூறினார். 

அப்போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள். பிறகு இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக! என்றார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1936, 1937, 2600, 5368, 6087, 6164, 6709, 6710, 6711

இம்மூன்று பரிகாரங்களில் எதையுமே செய்ய இயலாதவர்கள் எந்தப் பரிகாரமும் செய்ய வேண்டியதில்லை என்றாலும் செய்த குற்றத்திற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும்.

நோன்பு நோற்றுக் கொண்டு உடலுறவு கொள்வது சம்பந்தமாகத் தான் இந்த ஹதீஸில் கூறப்படுகிறது. உண்பதன் மூலமும், பருகுவதன் மூலமும் நோன்பை முறித்தால் இவ்வாறு பரிகாரம் செய்யுமாறு ஹதீஸ்களில் கூறப் படவில்லை. ஆயினும் செய்கின்ற காரியத்தைக் கவனத்தில் கொள்ளாமல் உணர்வுகளைக் கருத்தில் கொள்வதே பொருத்தமானதாகும். உடலுறவின் போது எவ்வாறு இறைவனது கட்டளை மீறப்படுகிறதோ அது போல் தான் உண்ணும் போதும் மீறப்படுகிறது. உடலுறவு எப்படி நோன்பை முறிக்குமோ அப்படித் தான் உண்பதும், பருகுவதும் நோன்பை முறிக்கும்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால் உடலுறவை விட உண்ணுதல் கடுமையான விஷயமாகும். ஏனெனில் சில சமயங்களில் மனிதனின் கட்டுப்பாட்டை மீறி உடலுறவு ஏற்பட சாத்தியம் உள்ளது. உண்ணுதல், பருகுதல் தன்னை மீறி ஏற்படக் கூடியதல்ல. எனவே உடலுறவு கொள்வதற்கே பரிகாரம் செய்ய வேண்டும் என்றால் உண்பதற்குப் பரிகாரம் இல்லை என்ற கூற முடியாது. பரிகாரம் செய்து விடுவதே பேணுதலுக்குரிய வழியாகும். இந்த ஹதீஸில் உடலுறவில் ஈடுபட்ட கிராமவாசிக்குப் பரிகாரம் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். ஆனால் அவரது மனைவியைப் பரிகாரம் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) கட்டளையிடவில்லை. எனவே நோன்பு நோற்றுக் கொண்டு உடலுறவில் ஈடுபட்டால் கணவன் மட்டுமே பரிகாரம் செய்ய வேண்டும். மனைவி பரிகாரம் செய்ய வேண்டியதில்லை என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்த ஹதீஸில் மனைவி குறித்து ஏதும் கூறப்படாவிட்டாலும் இவர்களின் வாதம் சரியானதல்ல! திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் ஏராளமான சட்டங்கள் ஆண்களுக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தியே கூறப்பட்டுள்ளன. பெண்களுக்கு மட்டும் என்று பிரித்துக் கூறப்படாத எல்லாச் சட்டங்களும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானவையே என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும்.

ஒருவர் வந்து தனது குற்றம் குறித்து முறையிட்டதால் அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இது அவருக்கு மட்டுமுரியது என்று யாரும் எடுத்துக் கொள்ள மாட்டோம். இந்தக் குற்றத்தை யாரெல்லாம் செய்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் இது தான் சட்டம் என்று எடுத்துக் கொள்வோம். அவரது மனைவி விஷயமாகவும் இப்படித் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பரிகாரம் என்பது, குறிப்பிட்ட குற்றத்திற்குரியதே அன்றி குறிப்பிட்ட நபருக்குரியதல்ல! அவரிடம் கூறினால் அவர் போய் தனது மனைவியிடம் கூறாமல் இருக்க மாட்டார்.

மனைவி பரிகாரம் செய்ய வேண்டியதில்லை எனக் கூறினால் மனைவியின் செயல் குற்றமில்லை என்று ஆகிவிடும்.

பரிகாரம் செய்தவுடன் முறித்த நோன்பையும் களாச் செய்ய வேண்டுமா? என்பது குறித்து இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. நேரடியாக இது குறித்து எந்த ஹதீஸ்களும் இல்லாததே இரு வேறு கருத்துக்கள் ஏற்படக் காரணமாகும். இது போன்ற சந்தர்ப்பங்களில் எது பேணுதலான முடிவோ அதையே நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த அடிப்படையில் விடுபட்ட ஒரு நோன்பையும் களாச் செய்து விடுவதே சரியான முடிவாக இருக்க முடியும்.

Monday, July 16, 2012

நோன்பின் சட்டங்கள் - தொடர் 11 - பி.ஜே

நோன்பை முறிக்கும் செயல்கள்

சுபுஹ் முதல் மஃரிப் வரை உண்ணாமல் இருப்பது, பருகாமல் இருப்பது, இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பது ஆகிய கட்டுப்பாடு தான் நோன்பு எனப்படுகிறது.

நோன்பாளிக்கு இந்த மூன்றைத் தவிர வேறு எதையும் செய்யக் கூடாது என்று தடை இல்லை. இம்மூன்று காரியங்களில் எதைச் செய்தாலும் நோன்பு முறிந்து விடும்.

இவை தவிர நோன்பாளி கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மீக ஒழுங்குகளும் உள்ளன. அவற்றையும் கடைப்பிடிக்க வேண்டும். பொய்யான பேச்சையும், பொய்யான (தீய) நடவடிக்கையையும் யார் கைவிடவில்லையோ அவர் பசித்திருப்பதும், தாகமாக இருப்பதும் அல்லாஹ்வுக்குத் தேவையில்லாத ஒன்று என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1903, 6057

எதை அல்லாஹ் தேவையில்லை என்று கூறினானோ அதற்கு அல்லாஹ் எந்தக் கூலியையும் தர மாட்டான். எந்த இலட்சியத்தை அடைவதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டதோ அந்த இலட்சியத்தை மறந்து விட்டுப் பசியோடும், தாகத்தோடும் இருப்பதில் பயனேதும் இருக்க முடியாது.

பொதுவாகவே பொய்கள், புரட்டுகள் மற்றும் தவறான நடவடிக்கைகளில் இருந்து விலகியிருக்க வேண்டும். ஆனால் நோன்பின் போது கண்டிப்பாக அவற்றிலிருந்து அதிகமாக விலகிக் கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காமல் இவற்றால் நோன்பு முறியாது என்று ஃபத்வாக்கள் அளித்து வந்ததால் தான் முஸ்லிம்களிடம் நோன்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

நோன்பு நோற்றுக் கொண்டு சினிமாக் கொட்டகைகளில் தவம் கிடப்பது, நோன்பு நோற்றுக் கொண்டு கலப்படம், மோசடி போன்ற செயல்களில் ஈடுபடுவது, பொய், புறம் பேசுவது ஆகியவற்றில் சர்வ சாதாரணமாக முஸ்லிம்கள் ஈடுபடுகின்றனர். பசியோடு இருப்பது மட்டும் தான் இறைவனுக்குத் தேவை என்று எண்ணுகின்றனர். இந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

நம்முடன் சண்டைக்கு வருபவர்களிடம் பதிலுக்குச் சண்டை போட பொதுவாக அனுமதி உள்ளது. நம்மிடம் எந்த அளவுக்கு ஒருவர் வரம்பு மீறுகிறாரோ அந்த அளவுக்கு வரம்பு மீறவும் அனுமதி இருக்கிறது. நோன்பாளி இந்த அனுமதியைக் கூட பயன்படுத்தக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளார்கள்.

நோன்பு நோற்றிருக்கும் போது உங்களிடம் ஒருவர் சண்டைக்கு வந்தால் – அறியாமையாக நடந்து கொண்டால், ஏசினால், நான் நோன்பாளி எனக் கூறிவிடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)நூல்: புகாரி 1894, 1904, 

பொதுவாக அனுமதிக்கப்பட்ட சண்டையையே தவிர்த்து விட வேண்டும் என்றால் நோன்பில் எவ்வளவு பக்குவமாக இருக்க வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

சாதாரண நாட்களில் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் கிடந்து ஹராமான காட்சிகளைப் பார்ப்பவர்கள் நோன்பு நோற்ற நிலையிலாவது அதிலிருந்து விடுபட வேண்டும். நமது நோன்பைப் பாழாக்கி விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

நோன்பின் சட்டங்கள் - தொடர் 10 - பி.ஜே

நோன்பு நோற்க வேண்டிய நாட்கள் (நோன்பு 29 சரியா? 30 சரியா?)

இஸ்லாமிய மார்க்கத்தில் மாதம் என்பது 29 நாட்களாகவும் சில வேளை 30 நாட்களாகவும் அமையும். இதை அறியாத சிலர் மாதம் 29 நாட்களில் முடியும் போது ஒரு நோன்பு விடுபட்டு விட்டதாக நினைக்கின்றனர்.

நினைப்பது மட்டுமின்றி விடுபட்டதாகக் கருதி அந்த ஒரு நோன்பைக் களாச் செய்யும் வழக்கமும் சிலரிடம் உள்ளது. ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்பது தான் நமக்கு இடப்பட்ட கட்டளை. 29 நாட்களில் மாதம் நிறைவடைந்தாலும் 30 நாட்களில் நிறைவடைந்தாலும் ஒரு மாதம் நோன்பு நோற்ற நன்மையை அல்லாஹ் வழங்குவான். முப்பது நாட்கள் நோன்பு நோற்க வேண்டும் என்பது இறைவனின் நாட்டமாக இருந்தால் 30 நாட்கள் நோன்பு பிடியுங்கள் என்று கூறியிருப்பான். எனவே இந்த அறியாமையிலிருந்து விடுபட வேண்டும். நன்மை என்று நினைத்துக் கொண்டு அல்லாஹ்வுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் நிலைக்குப் போய்விடக் கூடாது.

Sunday, July 15, 2012

நோன்பின் சட்டங்கள் - தொடர் 9 - பி.ஜே

நோன்பு துறக்கும் போது கூற வேண்டியவை

தமிழக்கத்தில் நோன்பு துறக்கும் துஆவாக அல்லாஹும்ம லக்க சும்த்து.. என்று துவங்கும் துஆவை ஓதி வருகிறார்கள். இவ்வாறு ஓதுவது விரும்பத்தக்கது என்று மத்ஹப் நூல்களில் கூறப்பட்டுள்ளது.

அல்லாஹும்ம லக்க சும்த்து… என்ற துஆ பல்வேறு வாசகங்களில் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அபூ ஹுரைரா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அனஸ் (ரலி), அலீ (ரலி) ஆகிய நான்கு நபித்தோழர்கள் வழியாகவும் முஆத் பின் ஸஹ்ரா என்று ஒரு தாபியி வழியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவைகள் அனைத்தும் பலவீனமான செய்திகளாகும்.

அல்லாஹும்ம லக்க சும்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து இந்த வாசகத்தை முஆத் பின் ஸஹ்ரா என்ற தாபியி அறிவிக்கும் செய்தி 
அபூதாவூத் (2011) 
முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா பாகம்: 2, பக்கம்: 511
பைஹகீ பாகம்: 4, பக்கம்: 239
ஷுஅபுல் ஈமான் – பைஹகீ 3747
அத்தஃவாத்துல் கபீர் – பைஹகீ (426)
அஸ்ஸுஹ்த் வர்ரகாயிக் – இப்னுல் முபாரக் (1388,1390)
அஸ்ஸுனனுஸ் ஸகீர் – பைஹகீ (1102)
பழாயிலுல் அவ்காத் – பைஹகீ (141)
அல்மராஸில் – அபூதாவூத் (95)

ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை இடம் பெற்ற அனைத்து நூல்களிலும் முஆத் பின் ஸஹ்ரா என்பவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதியதாக அறிவிக்கிறார். இவர் நபித்தோழர் அல்ல! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்காத நபர் அறிவிப்பதை நாம் ஏற்கக் கூடாது. எனவே இந்தச் செய்தி பலவீனம் அடைகிறது.

மேலும் இந்தச் செய்தியை அறிவிக்கும் முஆத் பின் ஸஹ்ரா என்பவரின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை. இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு எவரும் இவரைப் பற்றி குறிப்பிடவில்லை. இப்னு ஹிப்பான் அவர்கள் யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவது வழக்கம். எனவே இப்னு ஹிப்பான் மட்டும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவதை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்பதில்லை. எனவே முஆத் பின் ஸஹ்ரா என்பவர் யாரென அறியப்படாததால் மேலும் இச்செய்தி பலவீனமடைகிறது.

இதே செய்தி அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் மூலம் முஸன்னஃப் அபீ ஷைபா பாகம்: 2, பக்கம்: 511ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து ஹுஸைன் பின் அப்துர் ரஹ்மான் அஸ்ஸுலமீ என்பவர் அறிவித்துள்ளார்.

இவர், அபூஜுஹைஃபா (ரலி), அம்ர் பின் ஹுரைஸ் (ரலி), இப்னு உமர் (ரலி), அனஸ் (ரலி), உமரா பின் ருவைபா (ரலி), ஜாபிர் பின் ஸமுரா (ரலி), உபைதுல்லாஹ் பின் முஸ்லிம் அல்ஹள்ரமீ (ரலி) ஆகிய ஆறு நபித்தோழர்களிடமிருந்தும் உம்மு ஆஸிம் (ரலி), உம்மு தாரிக் (ரலி) ஆகிய இரண்டு நபித் தோழியர்களிடமிருந்தும் ஹதீஸ்களை அறிவித்துள்ளார். நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்

அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து எந்தச் செய்தியையும் அறிவித்ததாகக் குறிப்பு இல்லை. எனவே இந்தச் செய்தியும் ஆதாரத்திற்கு ஏற்றதாக இல்லை.

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஆனனீ ஃபசும்து வரஸகனீ வஅஃப்தர்த்து

இந்த வாசகம் முஸனஃப் இப்னு அபீ ஷைபா பாகம்: 2, பக்கம்: 511, பழாயிலுல் அவ்காத்-பைஹகீ (141) ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

இச்செய்தியையும் முஆத் பின் ஸஹ்ரா என்பவரே அறிவிக்கிறார். நாம் முன்னர் முஆத் பின் ஸஹ்ரா என்பவர் தொடர்பாக கூறிய அனைத்து விமர்சனங்களும் இந்தச் செய்திக்கும் பொருந்தும் என்பதால் இந்தச் செய்தியும் பலவீனமடைகிறது.

லக்க சும்த்து வலா ரிஸ்க்கிக்க அஃப்தர்த்து வதகப்பல் மின்னீ இன்னக்கஸ் ஸமீவுல் அளீம்

Saturday, July 14, 2012

நோன்பின் சட்டங்கள் - தொடர் 8 - பி.ஜே

பசியை அடக்கிக் கொண்டு தொழுதல்

தமிழக முஸ்லிம்களிடம் உள்ள மற்றொரு அறியாமையையும் சுட்டிக் காட்டுவது அவசியமாகும்.

நோன்பு துறப்பதற்காகத் தண்ணீர் குடித்தவுடன் மஃக்ரிப் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விடுவதுண்டு. இதனால் தண்ணீரைக் குடித்தவுடன் மஃக்ரிப் தொழுகைக்குச் சென்று விடுவார்கள். ஆனால் உடலும், மனமும் உணவில் பால் நாட்டம் சொண்டிருக்கும். இவ்வாறு செய்வது பேணுதல் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. உண்மையில் இது பேணுதல் அல்ல! மாறாக மார்க்கத்தில் கண்டிக்கப்பட்ட ஒரு செயலாகும்.

மல ஜலத்தை அடக்கிய நிலையிலும், உணவு முன்னே இருக்கும் போதும் எந்தத் தொழுகையும் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 869

உங்களில் ஒருவர் உணவில் இருக்கும் போது தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் உணவுத் தேவையை முடிக்கும் வரை தொழுகைக்குச் செல்ல வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 5465, 671

இந்த நபிமொழிகளிலிருந்து ஜமாஅத் தொழுகையை விட, பசியைப் போக்குவது முதன்மையானது என்பதை அறிந்து கொள்ளலாம். சாதாரண நாட்களிலேயே இந்த நிலை என்றால் நோன்பின் போது மஃக்ரிப் நேரத்தில் அதிகமான பசியும், உணவின் பால் அதிக நாட்டமும் இருக்கும். இந்த நேரத்தில் மனதை உணவில் வைத்து விட்டு, உடலை மட்டும் தொழுகையில் நிறுத்துவது அல்லாஹ்வுக்கு விருப்பமானது அல்ல என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு நமக்கு வழி காட்டியுள்ளார்கள்.

இன்னொன்றையும் நாம் மறந்து விடக் கூடாது. ஒவ்வொரு தொழுகைக்கும் ஒரு ஆரம்ப நேரமும், ஒரு முடிவு நேரமும் உள்ளது. முடிவு நேரத்துக்குள் தொழுகையை நிறைவேற்றி விட வேண்டும். பசியின் காரணமாக ஜமாஅத்தைத் தான் விடலாமே தவிர தொழுகையை விட்டு விடக் கூடாது. மஃக்ரிப் தொழுகையைப் பொறுத்த வரை சூரியன் மறைந்தது முதல் சுமார் 60 நிமிடம் வரை தொழுகை நேரம் நீடிக்கும். அதற்குள் தொழுகையை நிறைவேற்றி விட வேண்டும்.

ஏனெனில் தொழுகை முஃமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது என்று (4:103 வசனத்தில்) அல்லாஹ் கூறுகிறான்.

நோன்பு துறக்க ஏற்ற உணவு நம்மிடம் எந்த உணவு உள்ளதோ அதன் மூலம் நோன்பு துறக்கலாம் என்றாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு துறக்கும் போது முதலில் பேரீச்சம் பழங்களை உட்கொள்ளுமாறு ஆர்வமூட்டி உள்ளார்கள். யாருக்கு பேரீச்சம் பழம் கிடைக்கிறதோ அவர் அதன் மூலம் நோன்பு துறக்கட்டும்! கிடைக்காதவர்கள் தண்ணீர் மூலம் நோன்பு துறக்கட்டும்; ஏனெனில் அது தூய்மையானதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: திர்மிதீ 594

பேரீச்சம் பழத்தையோ, தண்ணீரையோ முதலில் உட்கொண்டு விட்டு அதன் பிறகு மற்ற உணவுகளை உட்கொள்வதால் நபிகள் நாயகத்தின் சுன்னத்தைப் பேணிய நன்மையை அடைந்து கொள்ளலாம்.

Wednesday, July 11, 2012

நோன்பின் சட்டங்கள் - தொடர் 7 - பி.ஜே

நிய்யத்

எல்லா வணக்கங்களும் நிய்யத்தைப் பொறுத்தே! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: புகாரி 1

தொழுகையானாலும், நோன்பானாலும், இன்ன பிற வணக்கங்களானாலும் நிய்யத் மிகவும் அவசியமாகும்.

நிய்யத் என்றால் என்ன? இதைப் பற்றியும் பெரும்பாலான மக்கள் அறியாதவர்களாகவே உள்ளனர்.

குறிப்பிட்ட சில வாசகங்களை வாயால் மொழிவது தான் நிய்யத் என இவர்கள் நினைக்கின்றனர். பல காரணங்களால் இவர்களது நினைப்பு தவறானதாகும்.

நிய்யத் என்ற வார்த்தைக்கு மனதால் எண்ணுதல், தீர்மானம் செய்தல் என்பது பொருளாகும். வாயால் மொழிவது என்ற அர்த்தம் இந்த வார்த்தைக்கு இல்லை.
ஒருவருக்குக் காலையில் எழுந்தது முதல், இரவு வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்கவில்லை. நோன்பைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரம் முழுவதும் எதையும் உண்ணாமல் பருகாமல் குடும்ப வாழக்கையில் ஈடுபடாமல் இருந்துள்ளார். ஆனால் நோன்பு வைப்பதாக இவர் எண்ணவில்லை. ஏதாவது கிடைத்தால் சாப்பிடிருப்பார். நோன்பாளியைப் போலவே இவர் எதையும் உட்கொள்ளா விட்டாலும் நோன்பு நோற்கும் தீர்மானம் எடுக்காததால் இவர் நோன்பு வைக்கவில்லை. இவ்வாறு மனதால் முடிவு செய்வது தான் நிய்யத் எனப்படுகிறது.

ஒருவர் ரமளான் மாதத்தில் வழக்கத்திற்கு மாறாக நான்கு மணிக்கு எழுகிறார். வழக்கத்திற்கு மாறாக இந்த நேரத்தில் சாப்பிடுகிறார். நோன்பு நோற்கும் எண்ணம் அவரது உள்ளத்தில் இருப்பதன் காரணமாகவே இவர் இப்படி நடந்து கொள்கிறார். எனவே இவர் நிய்யத் செய்து விட்டார். இன்னும் சொல்வதாக இருந்தால் இரவில் படுக்கும் போதே ஸஹருக்கு எழ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் படுக்கிறார்.

இது தான் நிய்யத்! இதற்கு மேல் வேறு ஒன்றும் தேவையில்லை. நோன்பு நோற்பதாக மனதால் உறுதி செய்ய வேண்டும் என்பதே சரியானதாகும்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட வாசகத்தைக் கூறுவதற்கு நிய்யத் என்ற நம்பிக்கை நடைமுறையில் உள்ளது.

நவைத்து ஸவ்ம கதின் அன்அதாயி பர்ளி ரமளானி ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹி தஆலா என்பது தான் அந்தக் குறிப்பிட்ட வாசகம்.

இந்த வருடத்தின் ரமளான் மாதத்தின் பர்லான நோன்பை அதாவாக நாளைப் பிடிக்க நிய்யத் செய்கிறேன் என்று தமிழாக்கம் வேறு செய்து அதையும் கூற வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.

இந்த வாசகத்தைக் கூற வேண்டுமென்று அல்லாஹ் கூறினானா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைக் கூறினார்களா? அதுவுமில்லை. அவர்களிடம் பாடம் கற்ற நான்கு கலீபாக்களோ, ஏனைய நபித் தோழர்களோ இவ்வாசகத்தைக் கூறினார்களா? என்றால் அதுவும் இல்லை.

நான்கு இமாம்களாவது இவ்வாறு கூறியுள்ளார்களா? என்றால் அது கூட இல்லை. உலகில் எல்லா நாடுகளிலும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். எங்கேயும் இந்த வழக்கம் இல்லை. இந்தியாவிலும், இந்தியர்கள் போய்க் கெடுத்த இலங்கை போன்ற நாடுகளிலும் தவிர வேறு எங்கும் இந்த வழக்கம் இல்லை.

Tuesday, July 10, 2012

நோன்பின் சட்டங்கள் - தொடர் 6 - பி.ஜே

ஸஹருக்காக அறிவிப்புச் செய்தல்

மக்கள் உறக்கத்திலிருந்து விழித்து ஸஹர் செய்ய வேண்டியுள்ளதால் ஸஹர் செய்வதற்காக மக்களை எழுப்பிவிடக் கூடிய ஏற்பாடு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் செய்யப்பட்டிருந்தது.

பிலால் (ரலி), அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) ஆகிய இரண்டு முஅத்தின்கள் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நியமிக்கப்பட்டிருந்தனர். இருவரது குரலும் மக்களுக்கு நன்கு பரிச்சயமாகி இருந்தது. ரமளான் மாதத்தில் ஸஹருக்கு ஒரு பாங்கும், சுபுஹ் தொழுகைக்கு ஒரு பாங்கும் என இரண்டு பாங்குகள் சொல்ல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

மக்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, பிலால் (ரலி) அவர்கள் ஸஹருக்கு எழுப்பி விடுவதற்கான பாங்கு சொல்வார் எனவும், அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) சுபுஹ் தொழுகைக்கு பாங்கு சொல்வார் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவிப்புச் செய்தார்கள்.

பிலாலின் பாங்கு ஸஹர் செய்வதிலிருந்து உங்களைத் தடுக்காது. ஏனெனில் (இரவில்) நின்று வணங்கியவர் வீடு திரும்புவதற்காகவும், உறங்குபவர் விழிப்பதற்காகவுமே அவர் பாங்கு சொல்வார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்கள்: ஆயிஷா (ரலி), இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 621, 5299, 7247

மற்றொரு அறிவிப்பில், இரண்டு பாங்குகளுக்கும் இடையே எவ்வளவு இடைவெளி இருக்கும் என்பதை விளக்கும் போது, அவர் பாங்கு சொல்லி விட்டு இறங்குவார்; இவர் பாங்கு சொல்வதற்காகச் செல்வார் என்று ஆயிஷா (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் விளக்கமளித்ததாக இடம் பெற்றுள்ளது. நூல்கள்: முஸ்லிம் 1829, புகாரி 1919

சுபுஹுக்குச் சிறிது நேரம் இருக்கும் போது ஒரு பாங்கு சொல்லி மக்களை விழித்தெழச் செய்யும் வழக்கம் பெரும்பாலும் எங்குமே இன்று நடைமுறையில் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த இந்த சுன்னத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும்.

முதல் பாங்கு ஸஹருக்கு எனவும், இரண்டாவது பாங்கு சுபுஹுக்கு எனவும் மக்களுக்குத் தெளிவாக விளக்கிவிட்டு இதை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தின் பல பகுதிகளில் மக்களை ஸஹருக்கு எழுப்பி விடுவதற்காகப் பலவிதமான நடைமுறைகள் உள்ளன.

நள்ளிரவு இரண்டு மணிக்கெல்லாம் ஒலிபெருக்கிக் குழாய் மூலம் பாடல்களைப் போட ஆரம்பித்து விடுகின்றனர்.

நன்மைகளை அதிகமதிகம் பெற்றுத் தரக்கூடிய புனித மாதத்தில், புனிதமான நேரத்தில் இசைக் கருவிகளுடன் பாடல்களை ஒலிபரப்பி, பாவத்தைச் சம்பாதித்து விடுகின்றனர். இது ஒட்டு மொத்த ஜமாஅத்தினரின் ஏற்பாட்டின் படி நடந்து வருகின்றது.

Monday, July 9, 2012

நோன்பின் சட்டங்கள் - தொடர் 5 - பி.ஜே

நோன்பின் நேரம்

சுப்ஹ் நேரம் வந்தது முதல் சூரியன் மறையும் வரை நோன்பின் நேரமாகும். அதாவது சுப்ஹ் நேரம் துவங்கியது முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமல், பருகாமல், உடலுறவு கொள்ளாமல் இருந்து நோன்பை முழுமைப்படுத்த வேண்டும்.

வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! அல்குர்ஆன் 2:187

இவ்வசனத்தில் ஃபஜ்ரு வரை உண்ணலாம், பருகலாம் என்று இறைவன் அனுமதிக்கிறான். ஃபஜ்ரிலிருந்து தான் நோன்பின் நேரம் ஆரம்பமாகிறது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

பெரும்பாலான முஸ்லிம்களிடம் காணப்படும் அறியாமையைச் சுட்டிக் காட்ட இது பொருத்தமான இடமாகும்.

தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் சுமார் இரவு மூன்று மணியளவில் ஸஹர் செய்வதற்காக எழுந்து உண்பார்கள். ஸஹர் முடிந்ததும் 3.30 மணியளவில் அல்லது நான்கு மணியளவில் நிய்யத் செய்வார்கள். (நிய்யத் பற்றிப் பின்னர் விளக்கப்படவுள்ளது.)

இவ்வாறு நிய்யத் செய்த பின் ஃபஜ்ரு நேரம் வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரமோ, அரை மணி நேரமோ மீதமிருக்கும். ஆனாலும் நிய்யத் செய்து விட்டதால் அதன் பிறகு எதையும் உண்ணக் கூடாது, பருகக் கூடாது என்று நினைக்கிறார்கள். இது தவறாகும்.

எந்த நேரம் முதல் உண்ணக் கூடாது என்று அல்லாஹ் நமக்குக் கட்டளையிட்டானோ அந்த நேரம் வரை உண்பதற்கு நமக்கு அனுமதியுள்ளது. நாம் நிய்யத் செய்து விட்டால் கூட, எப்போது முதல் நோன்பு நோற்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டானோ அப்போது முதல் நோன்பு நோற்கிறேன் என்பது தான் அதன் பொருள்.

எனவே 5.40 மணிக்கு சுபுஹ் வேளை வருகிறது என்றால் மூன்று மணிக்கே நிய்யத் செய்தாலும் 5.40 வரை உண்ணலாம்; பருகலாம்; இல்லறத்திலும் ஈடுபடலாம்.

இன்னொரு அறியாமையையும் நாம் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
சுபுஹ் நேரம் 5.30 மணிக்கு ஆரம்பமாகிறது என்று வைத்துக் கொள்வோம். 5.29 வரை உண்ணலாம்; பருகலாம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நோன்பு அட்டவணை என்று வெளியிடப்படும் அட்டைகளில் ஸஹர் முடிவு 5.20 என்றும், சுபுஹ் 5.30 என்று போடும் வழக்கம் உள்ளது.

அதாவது சுபுஹ் நேரம் வருவதற்குப் பத்து நிமிடம் இருக்கும் போதே ஸஹரை முடிக்க வேண்டும் என்று இந்த அட்டவணை கூறுகின்றது. இது அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமானதாகும்.

Sunday, July 8, 2012

நோன்பின் சட்டங்கள் - தொடர் 4 - பி.ஜே

விடுபட்ட நோன்பை களாச் செய்வது எப்போது?

மேற்கண்ட சலுகைகளைப் பெற்றவர்கள் விடுபட்ட நோன்பை எவ்வளவு நாட்களுக்குள் களாச் செய்ய வேண்டும்?

இதற்கு மார்க்கத்தில் எந்தக் காலக் கெடுவும் விதிக்கப்படவில்லை. வேறு நாட்களில் நோற்று விட வேண்டும் என்று மட்டுமே திருக்குர்ஆன் கூறுகிறது.

ரமளான் மாதத்தில் சில நோன்புகள் தவறி விடும். அதை ஷஅபான் மாதத்தில் தான் என்னால் நோற்க முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளே இதற்குக் காரணம் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி 1950

ஷஅபான் மாதம் என்பது ரமளானுக்கு முந்தைய மாதமாகும். ஒரு ரமளானில் விடுபட்ட நோன்பை மறு ரமளானுக்கு முந்தைய மாதம் வரை தாமதப்படுத்தி ஆயிஷா (ரலி) களாச் செய்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலேயே இது நடந்துள்ளதால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

விடுபட்ட நோன்பைக் களாச் செய்வதற்கு குறிப்பிட்ட காலக் கெடு எதுவும் இல்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

ஆயினும் மரணத்தை எதிர் நோக்கியவனாக மனிதன் இருக்கிறான். எந்த நேரத்திலும் மரணம் அவனை அடைந்து விடலாம். நோன்பை விட்டவர்களாக நாம் மரணித்தால் என்னவாகும் என்பதற்கு அஞ்சி, எவ்வளவு சீக்கிரம் நிறைவேற்ற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றி விடுவது சிறந்ததாகும்.

ரமளான் மாதத்தை முடிவு செய்தல்

நோன்பைக் கடமையாக்கிய இறைவன், யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும் என்று கூறுகிறான். இவ்வசனத்தை ஆரம்பமாக நாம் சுட்டிக் காட்டியுள்ளோம்.

Saturday, July 7, 2012

நோன்பின் சட்டங்கள் - தொடர் 3 - பி.ஜே

நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள்

நோன்பு நோற்பது கட்டாயக் கடமை என்றாலும் சிலர் நோன்பு நோற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விதிவிலக்கு நிரந்தர விதிவிலக்கு, தற்காலிக விதிவிலக்கு என இரு வகைகளாக உள்ளன.

தற்காலிகமான விதிவிலக்குப் பெற்றவர்கள் ரமளான் மாதத்தில் நோன்பை விட்டு விட்டு வேறு மாதங்களில் நோன்பு நோற்று விட வேண்டும்.

நிரந்தரமான விதிவிலக்குப் பெற்றவர்கள் வேறு மாதங்களில் கூட அதை நிறைவேற்றத் தேவையில்லை. இவர்கள் ஒவ்வொரு நோன்பை விடுவதற்காக ஒரு ஏழைக்கு உணவளிப்பதே போதுமானதாகும்.

1. தள்ளாத வயதினர்.

இவர்கள் நிரந்தரமான விதிவிலக்குப் பெற்றவர்கள். முதுமையின் காரணமாக நோன்பு நோற்க இயலாத நிலையில் உள்ளதால் எதிர் காலத்தில் நோன்பைக் களாச் செய்ய இவர்களால் இயலாது. ஏனெனில் எதிர் காலத்தில் மேலும் அதிக முதுமையில் இவர்கள் இருப்பார்கள்.

இவர்கள் நோன்பை விட்டு விடலாம். அதற்குரிய பரிகாரத்தைச் செய்ய வேண்டும்.

நோன்பு நோற்கச் சக்தி பெற்றவர்கள் ஒரு ஏழைக்கு உணவளிப்பது அவசியம் என்ற (2:184) வசனம் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறும் போது, இது முழுமையாக மாற்றப்படவில்லை. நோன்பு நோற்கச் சக்தியற்ற கிழவர்கள், கிழவிகள் ஒரு நாள் நோன்புக்குப் பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளனர். நூல்: புகாரி 4505

இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிடும் வசனம் பற்றி முதலில் நாம் அறிந்து கொண்டால் தான் முழு விளக்கம் பெற முடியும்.

நோன்பு கடமையாக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் ஒரு சலுகையுடன் தான் கடமையாக்கப்பட்டிருந்தது. நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் விரும்பினால் நோன்பு நோற்கலாம்; விரும்பினால் நோன்பை விட்டு விட்டு ஒரு ஏழைக்கு உணவளிக்கலாம் என்பது தான் அந்தச் சலுகை!

நல்ல திடகாத்திரமாக இருந்தவர்கள் கூட நோன்புக்குப் பதிலாக ஏழைக்கு உணவளித்து வந்தனர்.

பின்னர், ரமளானை அடைபவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும் என்ற வசனம் அருளப்பட்டவுடன் இந்தச் சலுகை நீக்கப்பட்டு விட்டது. சக்தியுள்ளவர்கள் கட்டாயம் நோன்பு தான் நோற்க வேண்டும் என்ற சட்டம் இதன் மூலம் நடைமுறைக்கு வந்தது.

இதைத் தான் இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிடுகிறார்கள். ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்ற சட்டம் சக்தியுள்ளவர்களைப் பொறுத்த வரை மாற்றப்பட்டாலும், தள்ளாத வயதினரைப் பொறுத்த வரை மாற்றப்படவில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகின்றார்கள்.

ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்றால் எதை உணவாக அளிப்பது? எந்த அளவுக்கு அளிப்பது? இது குறித்து அல்லாஹ்வும் அவனது தூதரும் வரையறை எதையும் செய்யவில்லை.

ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான உணவுப் பழக்கம் என்பதால் இதை வரையறை செய்யாமல் விட்டிருப்பது தான் பொருத்தமானதாகும்.

ஒவ்வொரு பகுதியினரும் எதைத் தமது உணவாக உட்கொள்கின்றனரோ அதை வழங்க வேண்டும் என்பதால் தான் இது குறித்து விரிவாகப் பேசப்படவில்லை. மேலும் சில பகுதிகளில் தினசரி மூன்று வேளை உணவு உட்கொள்ளும் பழக்கம் இருக்கலாம். சில பகுதிகளில் இரு வேளை உணவுப் பழக்கம் இருக்கலாம். ஒரே ஒரு வேளை உணவுப் பழக்கம் கொண்ட பகுதிகளும் இருக்கலாம்.

நமது நாட்டைப் பொறுத்த வரை ஒரு நாள் உணவு என்பது மூன்று வேளையாகும். எனவே ஒரு நோன்பை விட்டதற்காக மூன்று வேளையும் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். இதுவே பேணுதலான வழிமுறையாகும்.

Wednesday, July 4, 2012

நோன்பின் சட்டங்கள் - தொடர் 2 - பி.ஜே

நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்

நோன்பின் மூலம் இவ்வுலகில் நாம் பயிற்சி எடுக்கிறோம். இதனால் நமக்கு அல்லாஹ்விடம் என்ன கிடைக்கும்?

வேறு எந்த நல்லறத்துக்கும் கிடைக்காத மகத்தான பரிசுகள் இறைவனிடமிருந்து கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

ஒவ்வொரு நன்மையும் அது போன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1945

மற்ற எந்த வணக்கத்தையும் விட நோன்பு அதிகமான பரிசுகளைப் பெற்றுத் தரும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1894, 1904

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1904

இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்ச்சியுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருள்.

மறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?

யார் நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமளான் மாதம் நோன்பு நோற்பாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 38, 1901, 2014
பாவம் செய்யாதவர்கள் யாரும் கிடையாது. அனைத்துப் பாவங்களுக்கும் மன்னிப்பு கிடைப்பதென்பது சாதாரணமானதல்ல! சிறிய அமல் மூலம் இவ்வளவு பெரிய பாக்கியங்கள் கிடைப்பதால் நோன்பு நோற்பதில் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும்.
 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner