Wednesday, December 31, 2014

ஹதீஸ்கள் குர்ஆனிற்கு முரண்படுமா? - தொடர் 12

இந்த நூல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போது அப்பாஸ் அலி எழுதியது. தற்போது ஜமாஅத்திலிருந்து வெளிவந்தவுடன் இந்த நூலில் உள்ள கருத்துகளுக்கு முழுவதும் மாறுபடுவதாகவும், இனி இந்த நூலிற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

நடைமுறை சிக்கல்கள்

இச்சட்டம் குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமாக இருப்பதுடன் பல நடைமுறைச் சிக்கல்களையும் தோற்றுவிக்கிறது.

1.    மதம் மாறியவனைக் கொல்ல வேண்டும் என்று நாம் கூறினால் இஸ்லாத்திற்கு வந்தவன் இஸ்லாத்தைப் பற்றி சிந்திக்கப் பயப்படுவான். அவனுக்கு ஏற்படும் சந்தேகங்களை வெளிக்கொணர அஞ்சுவான். ஆனால் இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை என்று கூறினால் தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தைக் கூறி விளங்கிக் கொள்ள முயற்சிப்பான். அவன் மேலும் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கு இம்முறை உதவும். இல்லையென்றால் இந்தச் சந்தேகங்கள் அவனுக்கு மிகைத்து இறுதியில் மதம் மாறுகின்ற நிலைக்குத் தள்ளப்படுவான்.

2.    அல்லாஹ்வுடைய இந்த மார்க்கம் உண்மையானதென்றும் தெளிவானதென்றும் எல்லாக் கேள்விகளுக்கும் சரியான பதிலைத் தரக்கூடியதென்றும் நாம் நம்பும் போது ஏன் இப்படி ஒரு சட்டத்தை இயற்றி நிர்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும்?

3.    மாற்று மதத்திற்கு மாறியவனைக் கொலை செய்வது மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தாமல் மதவெறியைத் தான் உருவாக்கும். இஸ்லாமியருடன் பழக்கம் வைப்பதை மக்கள் விட்டுவிட்டு இஸ்லாத்தின் எதிரிகளோடு இணைந்து கொள்வார்கள்.

4.    இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை என்று கூறினால் தான் இஸ்லாத்தை விளங்காத மக்கள் கூட விளங்கிக் கொள்வதற்காக இஸ்லாத்தில் இணைந்து கொள்வார்கள். இதன் மூலம் அவர்கள் உண்மையான முஸ்லிமாவதற்குரிய வாய்ப்பு ஏற்படும். மதம் மாறியவரைக் கொலை செய்வோம் என்றால் விளங்க நினைப்பவர்கள் கூட பயந்து கொண்டு இதில் இணைய மறுத்து விடுவார்கள்.

5.    இதை இஸ்லாமியச் சட்டம் என்றால் உலக மக்களிடையே இஸ்லாம் கொடூரமான மார்க்கம் என்ற தவறான கொள்கை எளிதாக பரவிவிடும். இன்னும் இஸ்லாம் தவறான கொள்கையுள்ள மார்க்கம் என்பதால் தான் சவாலை எதிர் கொள்ளாமல் நிர்பந்தப்படுத்துகிறது என்ற எண்ணமும் அவர்களுடைய மனதில் எழும்.

6.    இஸ்லாம் ஒளிவு மறைவு இல்லாத மார்க்கம் என்பதால் மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்று கூறுபவர்கள் மேடை அமைத்து இச்சட்டத்தைப் பகிரங்கப்படுத்துவார்களா? பகிரங்கப்படுத்த முடியாத ஒரு சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குச் சொல்வார்களா?

7.    இஸ்லாத்தை விரும்பாதவர்களை இஸ்லாமிய சமுதாயத்தில் நிர்பந்தப்படுத்தி வைத்துக் கொண்டிருந்தால் அவன் இச்சமுதாயத்திற்கு தீங்கு செய்ய நினைப்பானே தவிர நன்மை செய்ய நாட மாட்டான்.

8.    இஸ்லாத்தை விட்டு யாரும் வெளியேறக் கூடாது. அப்படி வெளியேறினால் கொல்லப்படுவார்கள் என்று ஒரு புறம் நாம் கூறிக் கொண்டு இன்னொரு புறம் மாற்று மதத்தார்களை நோக்கி உங்கள் மார்க்கத்தை விட்டுவிட்டு எங்கள் மார்க்கத்தில் இணைந்து கொள்ளுங்கள் என்று கூறுவது நம்மை வெறி பிடித்தவர்களாக மக்கள் மன்றத்தில் காட்டும். முஸ்லிம்கள் நம் மார்க்கத்திற்கு வர தடைபோடும் போது நாம் அவர்களுடைய மார்க்கத்தைக் கேட்பதற்கு ஏன் செல்ல வேண்டும் என்று மக்கள் கருதினால் இது நம்முடைய அழைப்புப் பணிக்கு பெரும் முட்டுக்கட்டையாக வந்தமையும்.

9.    இஸ்லாம் அழகிய மார்க்கம் என்று நாம் அனைவரும் ஒத்துக் கொண்டுள்ளோம். மதம் மாறியவனைக் கொல்ல வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது என்றால் இச்சட்டம் அறிவுப்பூர்வமானது. அழகானது என்பதை நிரூபிக்கும் கடமை இச்சட்டத்தைக் கூறுபவர்களுக்கு உண்டு. இவர்கள் இந்தக் கோரமான சட்டத்தை அழகானது அறிவிப்பூர்வமானது என்று எப்படி நிரூபிப்பார்கள்?

3. குர்ஆனில் ஹதீஸ் ஒளியில் சூனியத்தின் விளக்கம்


ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது எவ்வித சாதனங்களையும் பயன்படுத்தாமல் உடல் அளவிலோ உள்ளத்திலோ பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை அறியாத மக்களிடம் உள்ளது. முஸ்லிம் சமுதாயத்திலும் இந்த நம்பிக்கையுள்ளவர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள். இது பில்லி சூனியம் ஏவல் செய்வினை என்று பல்வேறு சொற்களால் குறிப்பிடப்படுகின்றது.

ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி ஒருவன் இன்னொருவனின் உடலில் காயத்தையோ வேதனையையோ ஏற்படுத்த முடியும் என்பதை நாம் நம்பலாம். கண்கூடாக இதை நாம் காணுவதால் மார்க்க அடிப்படையில் இதற்கு ஆதாரத்தைத் தேட வேண்டியதில்லை.

ஆனால் புறச்சாதனங்கள் எதையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியின் மூலம் இது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த இயலும் என்றால் மார்க்கத்தில் அதற்கு ஆதாரம் இருக்க வேண்டும்.

திருக்குர்ஆனிலும் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலும் இது பற்றி கூறுப்படுவது என்ன என்பதை நாம் மேலோட்டமாக பார்க்கும் போது முரண்பட்ட இரண்டு கருத்துக்களுக்கும் இடம் தருவது போல் அமைந்துள்ளன, இதன் காரணத்தினால் தான் அறிஞர்கள் இதிலே முரண்பட்டு நிற்கின்றனர்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது முரண்பட்ட இரு கருத்துக்களுக்கு இடம் இருப்பது போல் தோன்றினாலும் கவனமாக ஆராயும் போது ஒரு கருத்து தான் சரியானது என்ற முடிவுக்கு நாம் வர முடியும். மக்களை ஏமாற்றுவதற்காகவும் கவர்வதற்காகவும் செய்து காட்டப்படும் தந்திர வித்தைகள் தான் சூனியம். உண்மையில் சூனியம் மூலமாக எந்த அதிசயமும் நிகழ்வதில்லை என்பது தான் சரியான முடிவாகும்.

சூனியம் என்பதற்கு அரபுமொழியில் சிஹ்ர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் இந்தச் சொல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்விரண்டிலும் இச்சொல் பயன்படுத்தப்பட்ட பகுதிகளை நாம் ஒவ்வொன்றாக ஆய்வு செய்தால் ஸிஹ்ர் என்பதற்கு பித்தலாட்டம் மோசடி ஏமாற்றும் தந்திர வித்தை என்பது தான் பொருள் என்பதைச் சந்தேகமின்றி அறிந்து கொள்ளலாம்.

மக்களை நல்வழிப்படுத்துவதற்காக இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களுக்கு தம்மை இறைத் தூதர்கள் என்று நிரூபிக்க சில அற்புதங்களை இறைவன் வழங்கினான். உதாரணமாக மூஸா நபியவர்கள் இறைவனின் கட்டளைப்படி தமது கைத்தடியைக் கீழே போட்டவுடன் அது சீறும் பாம்பாக உருமாறியது. கைத்தடி பாம்பாக உருமாறிய நிலையில் அதைத் தொட்டுப் பார்த்தாலும் எந்த வகையான சோதனைக்கு உட்படுத்தினாலும் அது பாம்பு தான் என்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகும். இது தான் அற்புதமாகும்.

கைத்தடி பாம்பு போல் தோற்றமளித்து அதைத் தொட்டுப் பார்த்தாலோ அல்லது சோதனைக்கு உட்படுத்தினாலோ அது கைத்தடியாகவே இருந்தால் நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து அது தந்திர வித்தை மேஜிக் என்று கூறுவோம். இறைத் தூதர்கள் செய்து காட்டியது முதல் வகையானது. அதில் எந்த விதமான தில்லுமுல்லும் ஏமாற்றுதலும் கிடையாது.

ஆனாலும் இறைத் தூதர்கள் தமது தூதுத்துவத்தை நிரூபிக்கும் வகையில் அற்புதங்களைச் செய்துகாட்டிய போது அதனை அந்த மக்கள் அற்புதம் என்று நம்பவில்லை. மாறாக இவர் நமக்குத் தெரியாதவாறு தந்திரம் செய்கிறார். நம்மை ஏமாற்றுகிறார் என்று அவர்கள் நினைத்தனர். இதைக் குறிப்பிட ஸிஹ்ர் (சூனியம்) என்ற சொல்லையே பயன்படுத்தினர்.

Tuesday, December 30, 2014

முஸ்லிமல்லாதவர் மரணித்த செய்தி கேட்டால் இன்னாலில்லாஹி... கூறலாமா?

கேள்வி - முஸ்லிமல்லாதவர் மரணித்த செய்தி கேட்டால் இன்னாலில்லாஹி கூறலாமா? - எம்.பீர்முஹம்மத்

பதில் பி.ஜே - நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள் என்பது இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் என்ற சொல்லின் நேரடிப் பொருளாகும்.

இதை எப்போது சொல்ல வேண்டும் என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளான்.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!  தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள்.  அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர்.

திருக்குர்ஆன் 2:155, 156, 157


ஒரு முஸ்லிமுக்கு இவ்வுலகில் துன்பம் ஏற்படும் போது இடிந்து போய் முடங்கி விடாமல் மேற்கண்டவாறு கூறி பொறுமையை மேற்கொள்ள வேண்டும் என்று மேற்கண்ட வசனம் கூறுகிறது.

ஒருவருக்கு முஸ்லிமல்லாத தந்தை அல்லது முஸ்லிமல்லாத மகன் இருந்து அவர் இறந்து விட்டால் அந்த முஸ்லிமுக்கு துன்பத்தை தரும். ஏனெனில் முஸ்லிமல்லாதவராக இருந்தாலும் அவர் மூலம் கிடைத்து வந்த நன்மைகள் இனி மேல் கிடைக்காது எனும் போது அது அந்த முஸ்லிமுக்கு துன்பமாகத் தான் அமையும். அது போல் சில நண்பர்கள் மூலம் ஒரு முஸ்லிம் பலவித நன்மைகளை அடைந்து வரும் போது அந்த நண்பர்களில் ஒருவர் மரணித்து விட்டால் அதனால் முஸ்லிம் பாதிக்கப்படுவார். இப்படி முஸ்லிமுக்கு தனது இழப்பின் மூலம் ஒருவர் பாதிப்பை ஏற்படுத்தினால் அதற்காக இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் எனக் கூறலாம். நமக்கு துன்பம் ஏற்படுகிறதா என்பது தான் இதில் கவனிக்க வேண்டியதாகும். மேலும் மேற்கண்ட வாக்கியத்தில் இறந்தவருக்கு பாவ மன்னிப்பு கேட்பது போன்ற கருத்து அமைந்திருக்கவில்லை. மாறாக இவர் போனது போல் நாமும் போவோம் என்ற நம்மை ஆறுதல் படுத்திக் கொள்ளும் கருத்து தான் இதில் இருக்கிறது.

அது போல் ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி கொடுங்கோலனாக இருக்கிறார். அல்லது மக்களை தவறான கொள்கையைக் கூறி வழி கெடுத்துக் கொண்டிருக்கிறார். இவர் மரணித்து விட்டால் இது முஸ்லிம்களுக்கு துன்பமான காரியம் அல்ல. மாறாக துன்பத்தில் இருந்து கிடைக்கும் விடுதலை ஆகும். இத்தகையவர்கள் இறந்து விட்ட செய்தியை நாம் கேள்விப்படும் போது நாம் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் எனக் கூற வேண்டியதில்லை. ஏனெனில் இதில் நமக்கு எந்தத் துன்பமும் ஏற்படவில்லை.

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் - தொடர் 11 - பி.ஜே

சூனியக்காரன் பிறருக்குப் பாதிப்பை ஏற்படுத்த நினைக்கும் போது மனிதனைப் போல் செயல்படாமல் அல்லாஹ்வைப் போல் பாதிப்பை ஏற்படுத்துகிறான் என்ற நிலை ஏற்படுவதால் சூனியத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று நம்புவது அப்பட்டமான இணைவைத்தல் என்று நாம் கூறுகிறோம்.

சூனியக்காரனுக்கு வக்காலத்து வாங்கி மக்களை இணைவைப்பில் தள்ளும் கூட்டத்தினர் இதற்கு ஒரு மறுப்பைக் கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

சூனியக்காரர்கள் தங்களின் சுயமான ஆற்றலால் இப்படிச் செய்யவில்லை. அல்லாஹ் அவர்களுக்கு அந்த ஆற்றலைக் கொடுத்துள்ளதால் தான் அப்படிச் செயல்படுகிறார்கள். இது எப்படி இணைவைத்தலாகும்? என்பது தான் அவர்களின் அந்தப் பதில்.

நாங்களும் தவ்ஹீத்வாதிகள் தான் என்று சொல்லிக் கொள்ளும் கூட்டத்தினரும் இதே பதிலைச் சொல்லி இணைவைப்பை நியாயப்படுத்தப் பார்க்கின்றனர்.

இந்த வாதத்தைப் பார்க்கும் போது இவர்கள் ஏகத்துவத்தின் அரிச்சுவடியைக் கூட படிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
எல்லா படைப்பினங்களின் செயல்பாடுகளும் அல்லாஹ் கொடுத்த அடிப்படையில் நடப்பவைதான்.

நாம் பேசுகிறோம்; பார்க்கிறோம்; கேட்கிறோம்; உண்ணுகிறோம்; பருகுகிறோம்; ஓடுகிறோம்; ஆடுகிறோம்; இல்லறத்தில் ஈடுபடுகிறோம் என்றால் அவை அனைத்துமே நாமாக உருவாக்கிக் கொண்டதல்ல. அல்லாஹ் கொடுத்த அடிப்படையில் தான் இவற்றை நாம் செய்ய முடிகிறது.

அல்லாஹ் மனிதனுக்கு ஏராளமான ஆற்றலைக் கொடுத்து இருந்தாலும் ஒருக்காலும் தன்னைப் போன்ற ஆற்றலை யாருக்கும் கொடுக்க மாட்டான். எனக்கு இணை இல்லை என்று அல்லாஹ் சொல்வதில் இது அடங்கியுள்ளது.

"சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக!

திருக்குர்ஆன் 17:111

அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.

திருக்குர்ஆன் 25:2


தனக்கே உரித்தான எந்தத் தன்மையையும் யாருக்கும் அல்லாஹ் கொடுக்க மாட்டான் என்பதை அழகான உதாரணத்தின் மூலம் அல்லாஹ் விளக்குவதைப் பாருங்கள்

உங்களில் ஒருவரை விட மற்றவரை செல்வத்தில் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். (செல்வத்தால்) சிறப்பிக்கப்பட்டோர் தமது செல்வத்தைத் தமது அடிமைகளிடம் கொடுத்து, தங்களுக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை. அல்லாஹ்வின் அருட்கொடையையா இவர்கள் நிராகரிக்கிறார்கள்?

திருக்குர்ஆன் 16:71


அல்லாஹ் மனிதர்களுக்கு எந்த அளவு ஆற்றலை அளிப்பான் என்று இங்கே அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அதாவது தனக்கே உரித்தான எந்தத் தன்மையையும் அல்லாஹ் யாருக்கும் கொடுக்கவே மாட்டான் என்பதுதான் அந்த அடிப்படை.

இந்த அடிப்படையை விளங்கிக் கொண்ட யாரும் சூனியக்காரனுக்கு தன்னைப் போன்று செயல்படும் ஆற்றலை அல்லாஹ் வழங்குவான் என்று சொல்லவே மாட்டான்.

இந்த மனிதன் குழந்தையைக் கொடுப்பான்; ஆனால் அவனாகக் கொடுப்பதில்லை. அல்லாஹ் கொடுத்த ஆற்றல் மூலம் இதைச் செய்கிறான் என்று சொல்லி விட்டால் அது இணைவைத்தல் இல்லை என்று ஆகிவிடுமா? என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டும்.
மக்காவில் வாழ்ந்த காபிர்களும் அல்லாஹ்வை நம்பினார்கள். அத்துடன் வேறு சிலரையும் வணங்கி வந்தனர்.

இவ்வாறு மற்றவர்களை வணங்கும் போது அவர்களெல்லாம் கடவுள்கள் என்ற நம்பிக்கையோ, அவர்களுக்கு அனைத்து ஆற்றலும் உண்டு என்ற நம்பிக்கையோ அவர்களிடம் இருக்கவில்லை.

எனவே இது இணைகற்பித்தலில் சேராது என்று வாதிட்டு அவர்களும் இதே நியாயத்தைத் தான் சொன்னார்கள். அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

'இந்த மகான்கள் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள். இவர்களுக்கு வழிபாடு நடத்தினால் அல்லாஹ்விடம் பேசி நமது தேவைகளைப் பெற்றுத் தருவார்கள். அல்லாஹ்விடம் நம்மையும் நெருக்கமாக ஆக்குவார்கள்' என்பது தான் அவர்களின் நம்பிக்கையாக இருந்தது.

இதைத் திருக்குர்ஆன் மிகத் தெளிவாகவே குறிப்பிடுகிறது.

பெண் வீட்டு விருந்து கூடுமா?

கேள்வி - ஒரு தந்தை தனது மகளின் திருமணத்தை ஒட்டி மன விருப்பத்துடன் விருந்தளித்தால் அது தவறா? - நூருத்தீன்

பதில் பி.ஜே - இஸ்லாத்தில் பெண் வீட்டு விருந்து என்பதே கிடையாது. திருமணத்தில் ஒரே ஒரு விருந்து முறையை மட்டுமே இஸ்லாம் கற்றுத் தந்துள்ளது. அது திருமணத்தை முன்னிட்டு மாப்பிள்ளை கொடுக்கும் வலீமா விருந்தாகும். இதைத் தவிர வேறு விருந்தை திருமணத்தில் இஸ்லாம் காட்டித் தரவில்லை.

ஆனால் இன்றைக்கு மாப்பிள்ளை கொடுக்க வேண்டிய வலீமாவைப் போன்று பெண் வீட்டு விருந்து என்பது திருமணத்தில் இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்டது. இது இல்லாமல் திருமணம் இல்லை என்கின்ற அளவிற்கு சில ஊர்களில் எழுதப்படாத சட்டமாகவே இது சமூகத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. எந்த அளவிற்கென்றால் பெண் வீட்டாருக்கும் சேர்த்து நாங்கள் விருந்தளிக்கின்றோம் என மாப்பிள்ளை வீட்டார் ஒத்துக் கொண்டால் கூட பெண் வீட்டார் இந்த விருந்தைக் கைவிடுவதில்லை. நடத்தியே தீர வேண்டும் என்று நினைக்கின்றனர்.

ஏனென்றால் பெண் வீட்டார் விருந்து போடா விட்டால் அது தனக்கும் தனது குடும்பத்துக்கும் கேவலம் என்று பெண் வீட்டார் கருதுகின்றனர். பெண் வீட்டார் தங்களுக்கு வேண்டியவர்களை அழைத்து திருமண விருந்து கொடுக்காவிட்டால் அவர்களைக் கஞ்சர்களாகவும் கேவலமாகவும் சமுதாயம் பார்ப்பதே இதற்குக் காரணம். எனவே தான் சக்தி உள்ளவர்களும் சக்தி இல்லாதவர்களும் இந்த விருந்தை எப்பாடுபட்டாவது நடத்தி வருகின்றனர்.

இத்தகைய பெண்வீட்டு விருந்து என்பது வரதட்சணையை விட கொடுமையானதும் கொடூரமானதாகும். மணப்பெண்ணின் வாழ்க்கைக்கு பொறுப்பேற்றுக் கொள்ளும் கணவன் பெண் வீட்டாரிடம் எதையும் கேட்டு வாங்குவதே கூடாது என்கிற போது மணப் பெண்ணுக்கு எந்த வகையிலும் பலன் தராத ஊர் மக்கள் பெண் வீட்டாரிடமிருந்து உணவை எதிர்பார்ப்பது நிச்சயம் வரதட்சணையை விட கொடுமையானது தான். எனவே பெண் வீட்டு விருந்து என்பது ஒருவரின் பொருளை அநியாயமான முறையில் உண்பதற்குச் சமமான குற்றமாகும்.

பல திருமணங்களில் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டார் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் பெண் வீட்டாரே விருந்தளிக்கும் நிலையும் இருக்கின்றது. இதுவும் வரதட்சணையே. "பெண்வீட்டார் மீது எந்த ரீதியில் பொருளாதாரச் சுமையை சுமத்தினாலும் அவை அனைத்தும் வரதட்சணையாகும்.

மாப்பிள்ளை வீட்டார் நிர்பந்தப்படுத்தாத நிலையில் பெண் வீட்டார் தானாக முன்வந்து விருந்துக்கு பொறுப்பேற்பது தவறல்ல என்று சிலர் வாதிடுகின்றனர். இத்தகைய பெண் வீட்டார்கள் தான் சமுதாயத்திற்கு மிகவும் ஆபத்தானவர்கள்.   ஏனென்றால் திருமணத்தில் வலீமா அல்லாத வேறு ஒரு விருந்தை இஸ்லாம் காட்டித் தரவில்லை என்கிற போது இஸ்லாம் காட்டித் தராத விருந்தாகவும் சமுதாயத்தைச் சீரழிக்கக்கூடிய விருந்தாகவும் உள்ள இந்த பெண் வீட்டு விருந்தை ஒழிக்க பாடுபடுவது ஒவ்வொருவரின் கடமையாகும்.

தனக்கு அனுமதிக்கப்பட்ட ஒரு காரியத்தைக் கைவிடுவதால் சமுதாயத்துக்கு நன்மை ஏற்படும் என்றால் சமுதாய நலம் விரும்புவர்கள் நிச்சயமாக அந்தக் காரியத்தை விட்டு விடுவார்கள். பெண் வீட்டார் இவ்விஷயத்தில் சமுதாய நன்மையைக் கவனத்தில் கொள்ளாமல் நான் விரும்பிக் கொடுப்பது தவறா? என்று கேட்பது அவர்களின் சுயநலத்தை வெளிப்படுத்துகின்றது. மேலும் பெண்வீட்டு விருந்தை நடத்தும் அனைவரும் இந்த வாதத்தின் மூலம் தங்களது வழிகேட்டை நியாயப்படுத்துவதற்கும் இவர்கள் காரணமாக அமைகின்றனர்.

ஒரு அரசு ஊழியர் ஒரு காரியத்தை முடித்துத் தருவதற்காக ஒரு நீதிபதி தனக்கு சாதகமாக தீர்ப்பளித்ததற்காக ஒருவர் சந்தோசப்பட்டு விரும்பி கொடுத்தால் அது லஞ்சம் இல்லை என்று கூற முடியுமா?


அஸ்த் எனும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஜகாத்) வசூலிப்பவராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நியமித்தார்கள். அவர் இப்னுல் லுத்பிய்யா என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஜகாத் வசூலித்துக் கொண்டு வந்த போது, "இது உங்களுக்குரியது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது'' என்று கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இவர் தன் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்பு கிடைக்கிறதா? இல்லையா? என்று பார்க்கட்டும். என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் அந்த ஜகாத் பொருளிலிருந்து முறைகேடாக எதனைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தனது பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும். பசுவாகவோ, ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும்'' என்று கூறினார்கள். பிறகு அவர்களுடைய அக்குள் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தமது கைகளை உயர்த்தி, "இறைவா! நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா?'' என்று மூன்று முறை கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாயிதி (ரலி)

நூல்: புகாரி 2597, 6636


வசூல் செய்த இந்தத் தோழர், "மக்கள் தாமாகத் தந்தார்கள்'' என்ற வாதத்தை முன் வைக்கின்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை விடச் சிறந்த வாதத்தை முன்வைக்கின்றார்கள். இவர் வீட்டில் இருந்தால் இது கிடைக்குமா? என்று கேட்கின்றார்கள்.

பெண் வீட்டு விருந்து விஷயத்தில் இது போன்றே நாமும் கேட்கின்றோம். "தன் மகளை மணந்து கொண்டார் என்பதற்காகத் தான் தான் இந்த விருந்தைப் பெண் வீட்டார் வைக்கின்றார்களா? அல்லது வேறு காரணத்திற்காகவா? தன் மகளைக் கட்டிக் கொடுத்திருப்பதால் மாப்பிள்ளை மற்றும் மாப்பிள்ளை வீட்டார் தன் மகளை ஒழுங்காக வைத்துக் காப்பாற்ற வேண்டும் என்ற காரணத்திற்காகத் தான் பெண் வீட்டுக்காரர்கள் இந்த விருந்து, சீதனம், நகை, தொகை எல்லாவற்றையும் கொடுக்கின்றார்கள். உண்மையில் பெண் வீட்டுக்காரர்கள் விருந்து கொடுப்பது ஒரு மறைமுக நிர்ப்பந்தமே!

இன்று பெற்றோர் இறந்த பிறகு அவர்களிடமிருந்து கிடைக்க வேண்டிய சொத்துக்கள் பெண் மக்களுக்குக் கிடைப்பதில்லை. ஆண் மக்கள் அந்தச் சொத்தை அப்படியே அபகரித்து அனுபவித்துக் கொள்கின்றார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம், பெண் மக்களுக்கான கல்யாணச் செலவு தான். கழுத்தில் போட்ட நகை, கையில் கொடுத்த தொகை, வைத்த விருந்து ஆகியவற்றிற்கு நிறைய செலவாகி விட்டது; எனவே அதைப் பெண்ணுக்குச் சேர வேண்டிய சொத்தில் கழித்துக் கொள்கிறோம்; அதற்கு இது சரியாகி விட்டது என்று காரணம் கூறுகின்றனர். இப்படி வாரிசுக்குச் சேர வேண்டிய சொத்தை மறுப்பது வரம்பு மீறுதலாகும். இதற்குத் தண்டனை நிரந்தர நரகம் என்று அல்குர்ஆன்4:13,14 வசனங்கள் கூறுகின்றன. 

இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. அல்குர்ஆன் (4:13)

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்து அவனது வரம்புகளை மீறுபவனை (அல்லாஹ்) நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு. அல்குர்ஆன் (4:14)
 
நிரந்தர நரகத்திற்குத் தூண்டும் இந்தப் பாவத்தை எந்த முஸ்லிமும் செய்யக்கூடாது.

Monday, December 29, 2014

ஹதீஸ்கள் குர்ஆனிற்கு முரண்படுமா? - தொடர் 11

இந்த நூல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போது அப்பாஸ் அலி எழுதியது. தற்போது ஜமாஅத்திலிருந்து வெளிவந்தவுடன் இந்த நூலில் உள்ள கருத்துகளுக்கு முழுவதும் மாறுபடுவதாகவும், இனி இந்த நூலிற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
 

புதிய ஆதாரங்கள்!


ஆதாரம் : 1

இஸ்லாத்தில் நிர்பந்தம் இருக்கிறது என்ற மோசமான கருத்தை நிலை நாட்ட பின் வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை முஹம்மது" அல்லாஹ்வின் தூதர் என்று மனிதர்கள் உறுதியாக நம்பி தொழுகையை நிலைநிறுத்தி ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போர் புரிய வேண்டுமென்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தமது உயிர் உடைமைகளை என்னிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வார்கள் இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறினாலே) தவிர மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி (25)


இஸ்லாத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளும் வரை அவர்களிடம் போர் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். எனவே வாளால் இஸ்லாம் பரவியது என்று இஸ்லாமிய விரோதிகள் கூறும் கூற்று உண்மை தான் என்று இவர்கள் ஒத்துக் கொள்கிறார்கள்.

நமது விளக்கம்

இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது இவர்கள் கூறுவது சரி போலத் தெரியும். ஆனால் போர் புரிவதற்கு இஸ்லாம் வகுத்துள்ள விதிமுறைகளைக் கவனித்தால் இந்த ஹதீஸை இவ்வாறு விளங்கக் கூடாது என்ற முடிவிற்கே நியாயமானவர்கள் வருவார்கள். திருக்குர்ஆன் அழகான இந்த விதிமுறைகளைக் கூறுகிறது.

வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர் :

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

அல்குர்ஆன் (2 : 190)

தமது உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை (முஹம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா? அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்கள் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே அதிகத் தகுதியுள்ளவன்.

அல்குர்ஆன் (9 : 13)


சொந்த ஊரை விட்டு விரட்டியவர்களுடன் தான் போர் :

(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை.

அல்குர்ஆன் (2 : 191)

"எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்;

அல்குர்ஆன் (22 : 40)


போரிலிருந்து விலகிக்கொள்வோருடன் போரில்லை :


(போரிலிருந்து) விலகிக் கொள்வார்களானால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் (2 : 192)

அநீதி இழைக்கப்படும் பலவீனமான ஆண்கள் பெண்கள் சிறுவர்களுக்காகவே போர். போரை முதலில் துவக்கக் கூடாது :

"எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்து வாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!'' என்று கூறிக் கொண்டிருக்கின்ற ஆண்களில் பலவீனமானவர்கள், பெண்கள், மற்றும் சிறுவர்களுக்காக அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?

அல்குர்ஆன் (4 : 75)

"போர் தொடுக்கப்பட்டோர் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர்'' என்ற காரணத்தால் அவர்களுக்கு (எதிர்த்துப் போரிட) அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு உதவிட ஆற்றலுடையவன். "எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்;

அல்குர்ஆன் (22 : 39)


சமாதானத்தை விரும்புவோருடன் போர் இல்லை :

(முஹம்மதே!) அவர்கள் சமாதானத்தை நோக்கிச் சாய்ந்தால் நீரும் அதை நோக்கிச் சாய்வீராக! அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அவனே செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் (8 : 61)

மதத்தைப் பரப்பப் போரில்லை :

இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் (2 : 256)

இணை கற்பிப்போரில் உம்மிடம் அடைக்கலம் தேடுபவர் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.

அல்குர்ஆன் (9 : 6)

(ஏக இறைவனை) மறுப்பவர்களே!'' நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு'' என (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் (109)


குர்ஆன் மேற்கண்ட விதிமுறைகளைக் கூறுவதால் எதிர்த் தரப்பினர் சுட்டிக் காட்டிய ஹதீஸை குர்ஆனுடைய விதிமுறைகளுக்கு உட்பட்டே விளங்கிக் கொள்ள வேண்டும்.

தீண்டாமைக்குத் தீர்வு திருக்குர்ஆன் மட்டுமே! - பி.ஜே

பரமக்குடியில் 7 பேரின் உயிரைப் பலி கொண்ட இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு அடிப்படைக் காரணம், சாதித் தகராறு தான் என்று தமிழக முதல்வரே சட்டமன்றத்தில் அறிவிக்கின்றார்.

சாதிப் பாகுபாட்டின் காரணமாகவும், தீண்டாமையின் காரணமாகவும் இந்தியாவில் தலித் மக்கள் தாக்கப்படுவதென்பது தனி நிகழ்வல்ல! இது அன்றாடம் நடைபெறும் அநியாயமும் அக்கிரமும் ஆகும்.

1968ம் ஆண்டு கீழ் வெண்மணி என்ற கிராமத்தில் கூலியை உயர்த்திக் கேட்டார்கள் என்ற காரணத்திற்காக 44 தலித்துக்களை, உயர்சாதி நிலச் சுவான்தார்கள் எரித்துக் கொன்ற வடு இன்னும் ஆறவில்லை. அதன் நினைவு தினம் டிசம்பர் 25ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

1992ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி தர்மபுரி மாவட்டம் வச்சாத்தி என்ற கிராமத்தில் மலைவாழ் இனத்தைச் சேர்ந்த 18 பெண்கள் காவல்துறையினரால் கற்பழிக்கப்பட்ட வழக்கு தற்போது தான் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.

1997ஆம் ஆண்டு தென்மாவட்டங்களில் நடைபெற்ற சாதிக் கலவரங்கள்

1999ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர் பேரணியில் காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் தாமிரபரணி ஆற்றில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

இப்படி தமிழகத்தில் நடைபெற்ற அநியாயங்களை மட்டும் பட்டியல் போட்டால் கூட இந்த ஏடு தாங்காது. அனைத்திந்திய அளவில் எனும் போது அதை அளவிடவே முடியாது.

2002ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று ஹரியானா மாநிலத்திலுள்ள துலினி கிராமத்தில், செத்த மாட்டின் தோலை உரித்தார்கள் என்பதற்காக 5 தலித்துகள் அடித்துக் கொல்லப்பட்டனர்.

உதாரணத்திற்கு ஒன்றிரண்டு சம்பவங்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் இந்தக் கொடூரங்கள் அனுதினமும் நடந்தேறிய வண்ணம் இருக்கின்றன.

அடிப்படைக் காரணங்கள்


இதற்கு அடிப்படைக் காரணம் என்ன? இந்துக்களின் வேத நூலான மனு சாஸ்திரம் தான். அது பிராமணரை உயர் குலத்தோர் என்று சித்தரித்தது.

பிரம்மா தம் முகத்திலிருந்து பிரம்மர்களையும், தோளிலிருந்து சத்திரியர்களையும், தொடையில் இருந்து வைசியர்களையும், காலிலிருந்து சூத்திரர்களையும் பிறப்பித்தார்.

(மனு தர்மம் 2:35)


பிராமணரைச் சூத்திரர் கையாலேனும், கருவியாலேனும் தாக்கினால் பிராமணரை எந்தெந்த இடத்தில் அடித்தானோ, அடித்தவனின் உறுப்புகளைக் குறைப்பதே தக்க தண்டனையாகும்.

பிராமணனுக்குச் சமமாக அகங்காரத்தோடு அமர்கின்ற சூத்திரனுக்கு உயிருக்குத் தீங்கற்ற தண்டனை தருக. இடுப்பில் சூடு போடுக. உட்கார்ந்த உறுப்பை அறுத்திடுக. ஊரை விட்டும் அவனைத் துரத்துக.

பிராமணன் மீது காறி உமிழ்பவன் உதடுகளை அறுத்திடு. மூத்திரம் பெய்தால் குறியை வெட்டு. மலத்தை வீசினால் ஆசனப் பகுதியை அறுத்து விடு.

சூத்திரன் பிராமணனின் குடுமி, மீசை, தாடி, கழுத்து, குறி முதலியவற்றைப் பற்றியிழுத்தால் அவன் கையைத் துண்டித்து விடுக.

சூத்திரன் பிராமணனைக் கடுமையாக வைதால் சூத்திரன் நாக்கை அறுத்தெறியவும். பிராமணனின் குலம் குறித்து இழித்துரைத்தால் பத்து அங்குல நீளக் கம்பியைப் பழுக்கக் காய்ச்சி சூத்திரன் வாயினுள் திணிக்க வேண்டும். 

(மனு தர்மம் 9:263-267)

வேதமறிந்த பிராமணர்க்குப் பணிவிடை செய்வதே சூத்திரர் தர்மம். சூத்திரர்க்கு அதுவே மோட்சப் பாதை. 
(மனு தர்மம் 10:276)

பிராமண, சத்திரிய, வைசியர்க்கு ஒருவரில்லாவிடில் அடுத்தவருக்குத் தொண்டு புரிவதே சூத்திரருக்குத் தர்மம் ஆகும்.

(மனுதர்மம் 10:277)

இழி பிறப்பாளன் ஒருவன் பிராமணப் பணியைப் புரியும் போதும் அவன் இழி பிறப்பாளன் தான். இழி தொழில் யாது புரிந்தாலும் பிராமணன் ஒரு போதும் இழி பிறப்பாளன் ஆகான். அவன் பிறப்பு உயர் பிறப்பு தான். பிரமனின் ஆணை அவ்வாறு. 

(மனு தர்மம் 11:33)

பிராமணனுக்கு மங்களம், சத்திரியனுக்கு பலம், வைசியனுக்குச் செல்வம், சூத்திரனுக்கு அவனது அடிமை நிலை தோன்றும்படியான பெயர்களைச் சூட்ட வேண்டும்.

(மனு தர்மம் 3:23)
மக்களை இப்படி வர்ணாஸ்ரம அடிப்படையில் பல கூறுகளாகப் பிரித்து வைத்திருப்பதால் தான்  தீண்டாமை எனும் நுகத்தடியில் இந்தியா சிக்கித் தவிக்கின்றது.


பிராமணர்கள், சூத்திரப் பெண்களைத் திருமணம் முடிக்கக் கூடாது.


சூத்திரர்கள் கல்வி கற்கக் கூடாது; மீறிக் கற்றால் அவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்.
உயர்ஜாதிக்காரர்களின் தெருக்களில் நாய்கள், பன்றிகள் செல்லலாம்; ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்லக் கூடாது.

உயர்ஜாதிக்காரர்களின் குளத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குளிக்கக் கூடாது; குளத்தில் தண்ணீர் அள்ளக் கூடாது.

தாழ்த்தப்பட்டவர்கள் வேத மந்திரங்கள் ஓதக் கூடாது; பூஜை செய்யக் கூடாது; ஏன்? கோயில்களுக்குள் நுழையவே கூடாது.

இப்படி ஆண்டாண்டு காலம் மக்களை மனு தர்ம வர்ணங்களின் அடிப்படையில் பிரித்து வைத்துள்ளனர். தொட்டால் தீட்டு! பட்டால் பாவம் என்று தீண்டாமை தலைவிரித்தாடுகிறது. இது தான் இந்தியாவின் நிலை!

Sunday, December 28, 2014

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் - தொடர் 10 - பி.ஜே

அதே போன்று திருக்குர்ஆன் பல இடங்களில்

குர்ஆனில் முரண்பாடுகள் இல்லை (4:82) என்றும்
சிந்திக்க மாட்டீர்களா? (4:82, 17:41, 21:10, 23:68, 25:73, 38:29, 47:24) என்றும்
தவறுகள் வராது (41:42)
இது பாதுகாக்கப்பட்ட வேதம் (15:9, 18:1, 39:28, 41:42, 75:17) என்றும்
சொல்லப்பட்டுள்ளது.


இவை அனைத்துமே குர்ஆனில் சந்தேகம் ஏற்படக் கூடாது என்பதை அடித்துச் சொல்லும் வசனங்களாகும்.

நபிகள் நாயகத்துக்கு ஆறுமாத காலம் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால், ”வீனர்கள் சந்தேகப்படுவார்கள்” என்பதற்கு ஏற்ப அந்த வீனர்கள் இந்த ஆறுமாத காலத்தில் அருளப்பட்ட வசனங்களைச் சந்தேகித்திருப்பார்கள்.

மனநோய் பாதிப்பினால் அல்லாஹ் சொல்லாததை அல்லாஹ் சொன்னதாக ஏன் முஹம்மது சொல்லி இருக்க மாட்டார் என்று கேட்க மாட்டார்களா?

மற்றவர்களின் உள்ளங்களில் மனனம் ஆவதை விட அதிகமாக மனதில் பதியவைத்துக் கொள்ளும் ஆற்றலை அல்லாஹ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கி இருந்தான்.

(முஹம்மதே!) இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்! அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது.  எனவே நாம் அதை ஓதும்போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக! பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது.

75:16-19


குர்ஆனைப் பாதுகாப்பதற்காக எந்த மனிதருக்கும் வழங்காத கூடுதல் ஆற்றலை அல்லாஹ் நபியவர்களுக்கு வழங்கி பலப்படுத்தியதாக அல்லாஹ் கூறுகிறான். ஆனால் அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் செய்தி அவர்களின் உள்ளத்தை பலவீனத்திலும் பலவீனமாக ஆக்கிக் காட்டுகிறது.

பலமான உள்ளத்தை அல்லாஹ் கொடுத்திருக்க, சூனியத்தை நம்பும் கூட்டம் நபி அவர்களுக்கு பலவீனமான உள்ளம் இருப்பதாகச் சித்தரிக்கின்றது.

பைத்தியம் என்று நபியை ஏற்காதவர்கள் சொன்னார்களே அவர்களைப் போன்று இவர்களும் சொல்லாமல் சொல்கின்றார்கள்.

யூதர்கள் எப்படியாவது இஸ்லாத்தை வீழ்த்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார்கள். சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும் அதற்குப் பயன்படுத்த தயாராக இருந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆறு மாத காலம் மனநோயாளியாக இருந்தார்கள் என்றால் அந்த மனநோய் யூதர்களின் மந்திர சக்தியால ஏற்பட்டது என்றால் இந்த வாய்ப்பை அவர்கள் ஒருக்காலும் நழுவ விட்டிருக்க மாட்டார்கள்.

 நாங்கள் உங்களது இறைத்தூதரை எப்படி ஆக்கிவிட்டோம் பார்த்தீர்களா? இன்னுமா அவரை இறைத்தூதர் என்று நம்புகிறீர்கள்? என விமர்சித்திருப்பார்கள்.

இப்படி ஒருவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விமர்சிக்கவில்லை.

இப்படி நாம் கேள்வியெழுப்பினால் சூனியக் கட்சியினர் இதற்கும் ஒரு பதிலைச் சொல்லி நபியவர்களை மனநோயாளியாக காட்டியே தீர்வது என்பதில் குறியாக உள்ளனர்.

நபியவர்களுக்கு ஏற்பட்ட மனநோய் மனைவிமார்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருந்தது. மக்களில் யாருக்கும் தெரியாததால் இது போன்ற விமர்சனம் வரவில்லை என்கிறார்கள்.

சூனியம் வைத்து மனநோயாளியாக ஆக்கினானே அவனுக்கு கூடவா தெரியாமல் போய் விட்டது? அவன் தனது கூட்டத்தாரிடம் சொல்லி பெருமையடித்து இருக்க மாட்டானா என்பதைக் கூட அறியாத ஞான சூன்யங்களாக மாறி இக்கேள்வியைக் கேட்கிறார்கள்.

பொதுவாக தலைவர்களுக்கு அதிகமான பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இருக்கும். மக்கள் அவர்களை எளிதில் அணுக முடியாது. இந்த நிலையில் அவர்களுக்குப் பைத்தியம் பிடித்தால் அதை மக்களுக்குத் தெரியாமல் மறைக்க முடியும்.

ஆனால் நபியவர்கள் இதுபோல் மக்களால் அணுக முடியாத நிலையில் இருந்தார்களா? நிச்சயமாக இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களோடு மக்களாக இருந்தார்கள். தினமும் ஐந்து வேளைத் தொழுகைக்கும் வருவார்கள். யார் வேண்டுமானாலும் அவர்களைச் சந்திக்கலாம். முனாபிக்குகள் கூட பள்ளிவாசலுக்கு வந்து தொழக் கூடியவர்களாக இருந்தனர்.

இப்படியிருக்கும் போது இந்த ஆறுமாத பாதிப்பு மக்கள் அனைவரையும் எளிதில் சென்றடைந்திருக்கும். இதனால் மக்களுக்குத் தெரிந்திருக்கும்.

இதற்கு முன்பு ஆதாரமில்லாமல் தான் முஹம்மது நபி பைத்தியம் என்று சொன்னோம். இப்போது அவர்களின் மனைவியே சொல்லி விட்டார்கள் என்று ஆட்டம் போட்டிருக்க மாட்டார்களா? மக்களை இஸ்லாத்திற்கு வராமல் தடுக்க முயற்சிக்காமல் இருப்பார்களா? இஸ்லாத்தில் உள்ள மக்களும் மீண்டும் பழைய நிலைக்கே சென்றிருப்பார்களே?

இது போன்று எந்தச் செய்தியும் எந்த நூலிலும் பதிவு செய்யப்படவில்லை.

குர்ஆனை நாமே இறக்கினோம். நாமே பாதுகாப்போம் என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.

குர்ஆனைப் பாதுகாப்பது என்றால் நபி அவர்களின் உள்ளத்தைப் பாதுகாக்க வேண்டும். உள்ளம் சிதைந்து விட்டது என்று சொன்னால் செய்திகளும் சிதைந்து விடும். அப்போது குர்ஆனைப் பாதுகாக்க முடியாது.

அல்லாஹ்வுடைய அற்புதம் என்று நினைக்கும் இந்த திருக்குர்ஆன் பாதுகாக்கப்படாவிட்டாலும் சரி நாங்கள் இந்தச் செய்தியை ஏற்றுக் கொள்வோம் என்ற நிலையில் சூனியக்காரனுக்கு ஆதரவாக இந்த உலமாக்களின் பிரச்சாரம் உள்ளது.

ரிங் டோனாக குர்ஆன் வசனங்கள் வைத்துக் கொள்ளலாமா?

கேள்வி - செல்போனில் குர்ஆன் வசனங்களை ரிங் டோனாக வைத்துக் கொள்ளலாமா? - ஹிதாயதுல்லாஹ்

பதில் பி.ஜே - சவூதி உலமாக்கள் சிலர் இது கூடாது என்று ஃபத்வா கொடுத்துள்ளனர். ஆனால் கூடாது என்பதற்கு இவர்கள் கூறும் காரணம் ஏற்கத் தக்கதல்ல.

ரிங் டோனாக குர்ஆன் வசனம் இருந்தால் போன் அழைப்பை ஏற்கும் போது குர்ஆனை இடையில் நிறுத்தும் நிலை ஏற்படும் என்பதைத் தான் இதற்குக் காரணமாகக் கூறுகின்றனர் இது குர்ஆனை அவமதிப்பதாகும் என்று கூறுகின்றனர்.

குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பவர் தேவை ஏற்படும் போது இடையில் நிறுத்தக் கூடாது என்று ஏதாவது ஆதாரம் இருந்தால் இவர்களின் வாதத்தை ஏற்கலாம். தொழுகையை இடையில் நிறுத்தக் கூடாது என்று தடை உள்ளது போல் குர்ஆன் ஓதுவதை தேவைப்படும் போது இடையில் நிறுத்தக் கூடாது என்று தடையேதும் இல்லாத போது இவர்கள் கூறும் காரணம் ஏற்கத் தக்கதல்ல.

நாம் குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கும் போது ஒருவர் கதவைத் தட்டுகிறார் என்றால் குர்ஆன் ஓதுவதை நிறுத்தி விட்டு கதவைத் திறக்கலாமா என்றால் திறக்கலாம் என்று தான் இவர்களே கூறுவார்கள். இதனால் குர்ஆனை அவமதித்து விட்டார் என்று ஆகாது. ஒருவர் ஒரு தேவைக்காக நம்மைத் தொடர்பு கொள்ளும் போது அதற்குப் பதிலளிப்பது என்பது குர்ஆன் கற்றுத் தரும் பண்பாட்டுக்கு ஏற்றது தான்.

நாம் குர்ஆன் ஓதும் போது ஒருவர் நமக்கு ஸலாம் கூறினால் ஓதுவதை நிறுத்தி விட்டு பதில் சொல்ல வேண்டும். இது குர்ஆனை அவமதித்ததாக ஆகாது.

ஒரு முஸ்லிமிடம் இருக்க வேண்டிய நற்பண்புகளைக் கடைப்பிடிப்பதற்காக குர்ஆனை இடையில் நிறுத்துவது எந்த வகையிலும் குர்ஆனை அவமதித்ததாக ஆகாது. குர் ஆன் வழிகாட்டுதலை மதித்தததாகத் தான் ஆகும். இடையில் நிறுத்தக் கூடாது என்று கட்டளை இருந்தால் மட்டுமே அது குர்ஆனை அவமதித்ததாக ஆகும்.
தொலை பேசியில் வரும் ரிங் டோனும் ஒரு அழைப்பு தான். அந்த அழைப்புக்குப் பதில் சொல்வதற்காக நாம் ரிங் டோனை நிறுத்துகிறோமே தவிர குர்ஆனை அவமதிப்பதற்காக அல்ல.

பாடல்களும் இசையும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டிருக்கும் போது அதைத் தவிர்க்க வேண்டுமே என்ற இறையச்சத்தின் காரணமாகவே அதிகமானோர் குர்ஆனை ரிங் டோனாக வைத்துக் கொள்கின்றர். இந்த ஃப்தவாவினால் மீண்டும் பாடல்களை ரிங் டோனாக மாற்றும் நிலைக்குத் தள்ளுகின்றனர்.

Saturday, December 27, 2014

இறந்த தியாகிகளுக்கு நினைவுச் சின்னங்கள் அமைக்கலாமா?

கேள்வி - உயிர் தியாகிகளுக்கு நினைவுத் தூண் அமைக்கலாமா?  - முஹம்மது அஸ்மீர்

பதில் பி.ஜே - இஸ்லாத்தின் உயிர் மூச்சான கொள்கை ஏகத்துவக் கொள்கையாகும். இந்த ஏகத்துவக் கொள்கையைக் குழி தோண்டிப் புதைக்கும் எந்தச் செயலுக்கும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை.

இறந்தவர்களுக்காக நினைவுச் சின்னம் எழுப்புவது ஏகத்துவக் கொள்கைகயை குழி தோண்டி புதைக்கும் விதமாக தோற்றுவிக்கப்பட்ட பிறமதக் கலாச்சாரமாகும். நாளடைவில் அவற்றுக்கு புனிதத்தன்மை இருப்பதாகக் கருதி அவற்றை வணங்கும் நிலைக்கு மக்கள் சென்றுவிடுவர்.

இதனால் தான் நபிகள் நாயகம் தமக்கோ  தமக்கு முன் வாழ்ந்து மறைந்த நல்லோர்களுக்கோ இது போன்று நினைவுச் சின்னங்கள் அமைக்க அனுமதி அளிக்கவில்லை. மாறாக வன்மையாகக் கண்டித்துள்ளார்கள். தடை செய்துள்ளார்கள்.

யூதர்கள் தங்களில் ஒரு நல்லடியார் இறந்து விட்டால் அவர்களின் சமாதியில் கட்டடம் எழுப்பி அவர்களின் நினைவாக அவரது உருவத்தையும் பதித்து விடுவார்கள். இந்த செயலைச் செய்ததினால் யூதர்களை நபியவர்கள் சபித்துள்ளார்கள்.

அபிசீனிய நாட்டில் தாம் கண்ட "மரியா' என்றழைக்கப்ட்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உம்மு சலமா அவர்கள் கூறினார்கள்.  அதில் தாம் கண்ட உருவப்படங்களைக் குறித்தும் உம்மு சலமா அவர்கள் குறிப்பிட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்கள் எத்தகைய மக்கள் எனில், அவர்களிடையே நல்ல அடியார் "அல்லது நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும்போது அவரது சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றைக் கட்டிவிடுவார்கள்; அதில் அந்த உருவங்களை வரைந்தும் விடுவார்கள். இத்தகையோர்தாம் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிகவும் மோசமானவர்கள்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 434


ஒருவர் நல்லடியாராகவே இருந்தாலும் அவர் இறந்த பிறகு அவருக்காக கட்டடம் எழுப்புவது நினைவுச் சின்னம் அமைப்பது கூடாது என்று நபியவர்கள் தடை செய்துள்ளார்கள்.

இணைவைப்பாளர்கள் நினைவுச் சின்னமாக ஒரு மரத்தை ஏற்படுத்தி அதற்கு புனிதத் தன்மை இருப்பதாக நம்பலானார்கள். முஸ்லிம்களும் அது போன்று   தங்களுக்கும் ஒரு மரத்தை ஏற்படுத்தக் கோரிய போது நபியவர்கள் அதைக் கண்டித்துள்ளார்கள்.

மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து ஹுனைன் என்ற இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். அவ்வழியில் இணை வைப்பாளர்களுக்கு ஒரு மரம் இருந்தது. (புனிதம் கருதி) அங்கே அவர்கள் தங்குவார்கள். அதில் தங்களது ஆயுதங்களைத் தொங்க விடுவார்கள். அதற்கு தாது அன்வாத் என்று சொல்லப்படும். நாங்கள் பசுமையான பிரம்மாண்டமான ஒரு மரத்தைக் கடந்து சென்ற போது அல்லாஹ்வின் தூதரே எங்களுக்கும் ஒரு தாது அன்வாத்தை ஏற்படுத்துங்கள் என்று கூறினோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மூஸாவே! அவர்களுக்கு இருக்கும் கடவுள்கள் போல் எங்களுக்கும் கடவுள்களை எற்படுத்தித் தருவீராக!'' (7 : 138) என்று மூஸா (அலை) அவர்களின் சமுதாயத்தினர்கள் கேட்டதைப் போன்று நீங்கள் கேட்டுள்ளீர்கள். எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக இவையெல்லாம் (நரகத்திற்கு அழைத்துச் செல்லும்) வழிகள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களின் வழியை ஒவ்வொன்றாக நீங்கள் கடைப்பிடிப்பீர்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ வாகித் (ரலி)

நூல் : அஹ்மத் (20892)


நினைவுத்தூண்கள் அமைக்கும் பிறமதக்கலாச்சாரத்தைப் பார்த்து நாமும் அது போன்று அமைக்கலாமே என்று கேட்பது மூஸாநபியின் சமுதாயம் மூஸாநபியிடம்  கோரிக்கை .வைத்ததை போன்றாகும்.

இன்றைக்கு நடக்கும் இணைவைப்புக் காரியங்களில் அதிகமானவை இறந்தவர்கள் பெயரில் ஏற்படுத்திய நினைவுச் சின்னங்கள் பெயரால் தான் நடைபெறுகின்றன. நபியவர்கள் தடை செய்துள்ளதால் இஸ்லாத்தில் இதற்கு அனுமதி கிடையாது.

ஹதீஸ்கள் குர்ஆனிற்கு முரண்படுமா? - தொடர் 10

இந்த நூல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போது அப்பாஸ் அலி எழுதியது. தற்போது ஜமாஅத்திலிருந்து வெளிவந்தவுடன் இந்த நூலில் உள்ள கருத்துகளுக்கு முழுவதும் மாறுபடுவதாகவும், இனி இந்த நூலிற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

மதம் மாறிவிட்டவர்கள் அனைவரையும் கொல்ல வேண்டுமா?


இஸ்லாத்தில் இருந்து கொண்டே புரட்சி செய்பவர்களுக்குத் தான் மரண தன்டனை என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் நிரூபணம் செய்கிறது. தனது தீனை மாற்றிக் கொண்டவனைக் கொல்லுங்கள் என்று கூறும் ஹதீஸ் மதம் மாறியவர்களைக் குறிக்கும் என்று வைத்துக் கொண்டாலும் மதம் மாறிய அனைவரையும் குறிக்காது.

இஸ்லாத்தை விட்டு வேறொரு மதத்திற்குச் செல்பவர்களை இரண்டு வகையினராகப் பிரிக்கலாம். ஒன்று மதம் மாறியதோடு யாருக்கும் எந்த இடையூறும் தராமல் தனது கொள்கையில் இருந்து கொள்பவர்கள்.

இரண்டாவது வகையினர் மதம் மாறியதோடு இஸ்லாத்திற்கு எதிராகச் செயல்படுபவர்கள். இரண்டாவது வகையைச் சார்ந்த மதம் மாறிகளைக் கொல்ல வேண்டும் என்பதற்குத் தான் ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மூன்று தன்மைகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலே தவிர (வேறெந்த நிலையிலும்) முஸ்லிமான மனிதரைக் கொல்வது ஆகுமானதல்ல. திருமணம் முடித்த பிறகும் விபச்சாரம் செய்தவன் கல்லெரிந்து கொல்லப்படுவான். ஒருவரை வேண்டுமென்றே கொலை செய்தவன் கொல்லப்படுவான். இஸ்லாத்தை விட்டும் வெளியேறி அல்லாஹ்விடத்திலும் அவனது தூதரிடத்திலும் போர் செய்தவன் கொல்லப்படுவான் அல்லது சிலுவையில் ஏற்றப்படுவான் அல்லது நாடு கடத்தப்படுவான்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள்

நூல் : நஸயீ (3980)


இஸ்லாத்தை விட்டும் வெளியேறியதோடு இஸ்லாத்திற்கு எதிராக செயல்படுபவனைத் தான் கொல்ல வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். மதம் மாறி இஸ்லாத்திற்கு எதிராகச் செயல்படாமல் தான் விரும்பிய கொள்கையில் யாருக்கும் எந்த இடையூரையும் ஏற்படுத்தாமல் வாழுபவன் இந்த ஹதீஸீல் சொல்லப்பட்ட மூன்று நபர்களுள் அடங்க மாட்டான்.

இந்த மூன்று நபர்களைத் தவிர வேறு யாரையும் கொல்லக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது இப்பட்டியலில் அடங்காத ஒருவனைக் கொலை செய்வது எப்படி நியாயம்? இதற்குப் பிறகும் மதம் மாறியவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்று கூறினால் அநியாயமாகக் கொலை செய்த குற்றத்திற்காக மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் இச்சட்டத்தைக் கூறிய இவர்கள் கொல்லப்பட வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறிய மூன்றாவது நபரைப் பற்றி அல்லாஹ்வும் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான். நபியவர்கள் அவனுக்குக் கூறிய அதே தண்டனையைத் தான் அல்லாஹ்வும் கூறுகிறான்.

கொல்லப்படுவது, அல்லது சிலுவையில் அறையப்படுவது, அல்லது மாறுகால், மாறுகை வெட்டப்படுவது, அல்லது நாடு கடத்தப்படுவது ஆகியவையே அல்லாஹ்வுடனும், அவனது தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் செய்ய முயற்சிப்போருக்குரிய தண்டனை. இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். அவர்களுக்கு மறுமையில் கடும் வேதனை உள்ளது.

அல்குர்ஆன் (5 : 33)


மதம் மாறியவர்களைப் பற்றி பல இடங்களில் பேசிய இறைவன் அங்கெல்லாம் இந்தத் தண்டனையைப் பற்றிப் பேசவில்லை. மாறாக மதம் மாற்றியவர்களைப் பற்றி இங்கு பேசாமல் அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும் போர் செய்பவர்களைப் பற்றி பேசுகின்ற இந்த இடத்தில் தான் மரணதண்டனையைக் கூறுகிறான். மதம் மாறாமல் தன்னை இஸ்லாமியன் என்று சொல்லிக் கொண்டே ஒருவன் எதிர்த்தாலும் அவனையும் கொல்லும்படித் தான் இஸ்லாம் கூறுகிறது.

மதம் மாறியவன் மதம் மாறாதவன் என்று பாகுபடுத்தாமல் எதிரியாக மாறுபவன் யாராக இருந்தாலும் அவனைக் கொல்ல வேண்டும் என்றே இஸ்லாம் கூறுகிறது. இதிலிருந்து எதிராகச் செயல்பட்டால் தான் தண்டனை வழங்கப்படுமே தவிர மதம் மாறிவிட்டான் என்பதற்காக அல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

கை கால்களை வெட்ட வேண்டும் என்று இந்த வசனம் கூறும் சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் உக்ல் என்ற கூட்டத்தாருக்குச் செயல்படுத்தினார்கள். அந்தக் கூட்டத்தினர் மதம் மாறியோதோடில்லாமல் பல மோசடித்தனங்களைச் செய்தார்கள்.

Thursday, December 25, 2014

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் - தொடர் 9 - பி.ஜே

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதன் ஒருவன் சூனியம் வைத்து அவர்களை மனநோயாளியாக ஆக்கிவிட்டான் என்று நம்பினால் அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் குற்றமாக அது அமையும். எனவே நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாக வரும் செய்தி கட்டுக்கதை என்பதை இதுவரை பார்த்தோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒரு யூதன் சூனியம் வைத்து மன நோயாளியாக ஆக்கிவிட்டான் என்று நம்பும்போது அது அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆனில் அது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்பதாலும் அந்தக் கட்டுக்கதையை நாம் நிராகரிக்க வேண்டும்.

இஸ்லாத்தின் மிகப் பெரிய அற்புதம் திருக்குர்ஆன். ஒவ்வொரு நபிமார்களும் சில அற்புதங்களைச் செய்வார்கள். அந்த அற்புதங்களைப் பார்த்துவிட்டு அவர் இறைத்தூதர் என மக்கள் நம்புவார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடைசி நபி என்பதால் அவர்களுக்குப் பின் இறைத்தூதர்கள் வர மாட்டார்கள். அதன் பிறகு தூதர்கள் வந்தால் தான் இறைத்தூதர்தான் என்பதற்கு சில அற்புதங்களைச் செய்து காட்டுவார்கள். அதனை வைத்து அவர் தூதர்தான் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும். இந்த வாய்ப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று எவ்வாறு நம்புவது? நமக்கு ஒரு அற்புதம் வேண்டுமே என்ற கேள்விக்கு அந்த அற்புதம் திருக்குர்ஆன் தான் என்று இஸ்லாம் விடையளிக்கிறது.

"ஒவ்வொரு இறைத்தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 4981, 7274


இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து தான் வந்தது என்பதை திருக்குர்ஆனே நிரூபிக்கின்றது. இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது நிரூபணமானால் அதனைக் கொண்டு வந்தவர் அல்லாஹ்வின் தூதர் என்பதும் நிரூபணமாகிவிடும்.

14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் மனிதன் சொல்ல முடியாத செய்திகளையெல்லாம் திருக்குர்ஆன் சொல்லி அது நிரூபணமாகிக் கொண்டு இருக்கின்றது.

திருக்குர்ஆன் ஒரு அற்புதம் தான் என்பதை ஏற்கனவே ஒரு ரமலானில் ”தனித்து விளங்கும் இஸ்லாம்” என்ற தலைப்பில் முழுமையாக நாம் விளக்கியுள்ளோம்.

பார்க்க:

http://onlinepj.com/bayan-video/thotar_uraikal/thanithu_vilangum_islam/

திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்ட அற்புதம் என்று நாம் மெய்யாக நம்பினால் திருக்குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு செய்தியையும் நாம் தூக்கி எறிந்துவிட வேண்டும்.

இதில் சந்தேகம் இல்லை என்பதை அல்லாஹ் திருக்குர்ஆனின் ஒரு தகுதியாக மக்களுக்கு அடையாளப்படுத்துவதைப் பின்வரும் வசனங்களில் இருந்து அறியலாம்.

இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழிகாட்டி.

திருக்குர்ஆன் 2:2


இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை. மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது. இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது.

திருக்குர்ஆன் 10:37


(இது) அகிலத்தின் இறைவனிடமிருந்து அருளப்பட்ட வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

திருக்குர்ஆன் 32:2


இந்தக் கருத்தில் இன்னும் பல வசனங்கள் உள்ளன. எந்த மனிதர்களுக்கு நல்வழி காட்டுவதற்காக அல்லாஹ் இதை அருளினானோ அவர்கள் நம்பும் வகையில் அது இருந்தால் தான் அவர்கள் வேதம் என்று ஏற்று நேர்வழிக்கு வருவார்கள். எனவே தான் இதில் சந்தேகம் இல்லை என்பதை முக்கியமான வாதமாக அல்லாஹ் வைக்கிறான்.

திருக்குர்ஆனில் முஸ்லிமல்லாத பலருக்குச் சந்தேகம் உள்ளதை நாம் அறிகிறோம். எனவே இதில் ஒருவருக்கும் சந்தேகம் இல்லை என்ற கருத்தில் சொல்லப்படவில்லை. இதில் சந்தேகம் கொள்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதற்கு எதிராக எழுப்பப்படும் எந்த சந்தேகத்துக்கும் இஸ்லாத்தில் விடை உண்டு என்பதுதான் இதன் பொருள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆறுமாத காலம் மனநோயாளியாக ஆக்கப்பட்டு, தாம் செய்யாததைச் செய்ததாகச் சொல்லும் அளவுக்கு பாதிப்பு அடைந்திருந்தால் அந்த ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட வசனங்களில் சந்தேகத்தைக் கிளப்ப முடியும்.

அந்த மாத காலம் எது என்பது குறித்து சூனியக் கட்சியிடம் ஆதாரம் இல்லாததால் மதீனாவில் அருளப்பட்ட வசனங்கள் அனைத்தும் அந்த ஆறு மாதங்களில் அருளப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படும்.

வரதற்சணை விருந்துக்கும், மவ்லிது விருந்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

கேள்வி : 1)நீங்கள் பேசிய இஸ்லாம் கூறும் பொருளியல் பாகம்-14 ல், திருக்குர்ஆன் சூரா 4:140 வசனம் குறிப்பிட்டு அல்லாஹ்வை கேலி செய்யும் சபையில் நீங்கள் அமராதீர்கள்.அதாவது பித்-அத் நடக்கும் திருமணத்தில் கலந்து கொள்வது தவறு.ஆனால் அதில் தரும் சாப்பாட்டை நம் வீட்டிற்க்கு அனுப்பி நாம் சாப்பிடுவது ஹராம் இல்லை என்று கூறி உள்ளீர்கள  .

 2) மெளலீது, ஹத்தம், ஃபாத்திஹா ஓதுவது ஹராம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை    ?

ஆனால் அதில் தரும் சீரனி, சாப்பாடு ஹராம் என்று கூறுகிறீர்கள்.

இதிலும் அல்லாஹ்வுடைய வசனம் கேலிதானே!  செய்யப்படுகிறது. அப்படி என்றால் இதை ஓதி நம் வீட்டிற்க்கு சாப்பாடு அனுப்பினால் நாம் சாப்பிடலாம் தானே! இதற்க்கு உங்களின் விளக்கத்தை கூறி எனக்கு புரிய வைக்கவும் .
நிரவி.அ.காதிர் முஹ்யீதீன்.பிரான்ஸ்
 
பி.ஜே பதில் : மார்க்கத்திற்கு மாற்றமாக நடக்கும் திருமணத்தை முன்னிட்டு தரப்படும் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும் என்று கூறுகிறோம். இத்திருமணத்தை நாம் ஆதரிக்கக்கூடாது என்பதே இதற்குக் காரணம்.

இத்திருமணத்தை முன்னிட்டு தரப்படும் விருந்தில் பங்கெடுத்துவிட்டு நான் இத்திருமணத்தை ஆதரிக்கவில்லை என்று கூறினால் இந்தக் கூற்றில் எந்த உண்மையும் இல்லை. அந்த விருந்தில் நாம் கலந்துகொள்வதே அதை நாம் ஆதரிக்கின்றோம் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது.

அதே நேரத்தில் இத்திருமண விருந்துக்கு நம்மை அழைத்து நாம் போகாவிட்டால் இதை நாம் புறக்கணித்து இருக்கின்றோம் என்பதை திருமணம் நடத்தியவர்கள் கூட விளங்கிக்கொள்கிறார்கள். இந்த அடிப்படையில் தான் திருமண விருந்தில் கலந்துகொள்ளக்கூடாது என்று கூறுகிறோம்.

அத்திருமணத்தில் தரப்படும் உணவு ஹராம் என்று நாம் கூறவில்லை. உணவே பரிமாராமல் மார்க்கத்திற்கு மாற்றமான திருமணம் நடந்தால் அப்போதும் இந்த திருமணத்தில் கலந்துகொள்ளக்கூடாது என்றே கூறுவோம். ஏனென்றால் இவ்வாறு நாம் கூறுவதற்கு உணவு காரணமல்ல. மார்க்கத்திற்கு மாற்றமான திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கக்கூடாது என்பதே காரணம்.

வரதட்சணை, பித்அத்துகள், ஷிர்க்கான பாடல்கள் போன்றவை திருமணங்களில் இடம் பெறுவதால் அந்தப் பாவத்திற்குத் துணை போய் விடக் கூடாது என்பதற்காகவே நாம் இந்தத் திருமணங்களையும், அதையொட்டி நடைபெறும் விருந்துகளையும் புறக்கணிக்கின்றோம். இது போன்ற திருமண விருந்துகளில் கலந்து கொள்ளாமல் இருப்பது அந்த உணவு ஹராம் என்பதற்காக அல்ல!

திருமணத்தில் கலந்துகொள்ளக்கூடாது என்பதற்கு நாம் கூறிய இந்த காரணம் நமது வீட்டில் இருந்துகொண்டு அந்த உணவை உண்ணும் போது ஏற்படாது. அதாவது இந்த உணவை நமது வீட்டில் இருந்துகொண்டு உண்பதால் அத்திருமணத்தை ஆதரிக்கும் நிலை ஏற்படவில்லை. இந்த உணவை உண்பது மார்க்கத்தில் எந்த அடிப்படையிலும் தவறில்லை என்பதால் இதை உண்ணுகிறோம்.

நமது வீட்டிற்கு உணவுகளைக் கொடுத்து விட்டால் அதைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை. ஏனெனில் நமது வீட்டிற்குக் கொடுத்து விடப்படும் உணவு அன்பளிப்பு என்ற நிலையை அடைந்து விடுகின்றது.

பரீராவுக்குத் தர்மமாகக் கொடுக்கப் பட்ட இறைச்சி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள், ''இது பரீராவுக்குத் தர்மமாகும். ஆனால் நமக்கு இது அன்பளிப்பாகும்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 1495


தர்மப் பொருள்களை நபி (ஸல்) அவர்கள் சாப்பிடுவது தடையாக இருந்தாலும், தர்மத்தைப் பெற்றவர் அதை நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய போது அதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். எனவே அன்பளிப்பு என்ற அடிப்படையில் வீட்டிற்கு வரும் உணவுகளைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை.

மவ்லூது ஹத்தம் ஃபாத்திஹா ஆகிய அநாச்சாரங்கள் அரேங்கற்றப்பட்டு தரப்படும் உணவு நம் வீட்டிற்கு வந்தாலும் அதை நாம் உண்ணக்கூடாது. மார்க்கத்திற்கு மாற்றமான சபையை புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக இதை உண்ணக்கூடாது என்று நாம் கூறவில்லை.

மாறாக இவ்வாறு தரப்படும் உணவில் புனிதம் இருப்பதாகவும் மற்ற உணவைக் காட்டிலும் இந்த உணவுகளுக்கு தனிச்சிறப்பு இருப்பதாகவும் நம்பப்படுகின்றது.

மவ்­து, கந்தூரி, ஃபாத்திஹா போன்றவற்றிற்காக உணவு தயாரிப்பவர்கள் அந்த உணவு முழுவதுமே பரக்கத் நிறைந்தது என்று கருதியே தயாரிக்கின்றார்கள். முழு உணவையும் வைத்து மவ்­து ஓதாமல் சிறிதளவு எடுத்து வைத்து ஓதினாலும் முழு உணவையும் தபர்ரூக் என்றே குறிப்பிடுவார்கள். அதற்கென்று தனி மகத்துவம் இருப்பதாகவே நினைக்கின்றார்கள். மவ்லூது ஓதுபவர்கள் முழு உணவையும் எடுத்து வைத்து மவ்­து ஓதாவிட்டாலும் அதை நேர்ச்சையாக எண்ணியே தயாரிப்பதால் அதைச் சாப்பிடக் கூடாது.

ஒரு உணவில் இப்படிப்பட்ட தவறான நம்பிக்கை வைக்கப்படுமானால் அதை உண்பது தடுக்கப்பட்டுவிடுகின்றது. மீறி இந்த உணவை உண்டால் இதில் புனிதம் இருப்பதாக மூடர்கள் நினைப்பதை நாம் ஆதரித்ததாக ஆகிவிடும்.

இந்த உணவு உங்களுக்கு மட்டுமல்ல வேறு யாருக்கும் ஆகுமானதல்ல. இந்த உணவு பூஜை செய்யப்பட்ட பொருட்களின் அந்தஸ்த்தை எட்டிவிடுகின்றது.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வ­யச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 2:173


இந்த வசனத்தில் 'அறுக்கப் பட்டவை' என்று நாம் மொழி பெயர்த்துள்ள இடத்தில் அரபு மூலத்தில் 'உஹில்ல' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சப்தமிடப்பட்டவை என்பது இதன் பொருள். அதாவது அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர் கூறப்பட்ட பொருட்களை உண்ணக் கூடாது என்பதையும் சேர்த்தே இந்த வசனம் கூறுகின்றது.

இந்த அடிப்படையில் சாமிக்குப் படைக்கப்பட்ட உணவுகள் மட்டுமின்றி, முஸ்­ம்கள் என்ற பெயரில் அவ்­லியாக்களுக்காகப் படைக்கப்பட்ட உணவுகளையும் புனிதம் இருப்பதாக கருதப்படும் உணவுகளையும் உண்ணக் கூடாது என்று கூறி வருகிறோம்.

வரதட்சனை திருமணத்தில் தரப்படும் உணவு பூஜிக்கப்படுவதில்லை. அதில் புனிதம் இருப்பதாக யாரும் நம்பிக்கை வைக்கவுமில்லை. மற்ற உணவுகளைப் போன்று அதுவும் சாதாரண உணவு என்ற நம்பிக்கையில் அது பரிமாறப்படுவதால் அதை உண்ணலாம் என்று கூறுகிறோம்.

Sunday, December 21, 2014

ஹதீஸ்கள் குர்ஆனிற்கு முரண்படுமா? - தொடர் 9

இந்த நூல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போது அப்பாஸ் அலி எழுதியது. தற்போது ஜமாஅத்திலிருந்து வெளிவந்தவுடன் இந்த நூலில் உள்ள கருத்துகளுக்கு முழுவதும் மாறுபடுவதாகவும், இனி இந்த நூலிற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துப் பிழைகள்


1. வாலிப வயதை அடைந்த ஒரு அன்னிய ஆணிற்கு அன்னியப் பெண்ணைப் பால்புகட்டும்படி கூறுவது அசிங்கமான காரியம். இவ்வாறு பலருக்குச் சொல்லாமல் ஒருவருக்கு மட்டும் சொன்னாலும் அசிங்கம் அசிங்கம் தான். கெட்ட வார்த்தைகளைப் பேசாமல் அதிக வெட்கத்தைப் பெற்றிருந்த நபி (ஸல்) அவர்கள் ஒரு போதும் இந்தக் காரியத்தை செய்யும் படி சொல்லவே மாட்டார்கள். 

2. சாலிம் தனது வீட்டிற்குள் வருவதைக் கூட விரும்பாத அபூ ஹுதைஃபா அவர்கள் தன்னுடைய மனைவியின் மார்பகத்தில் சாலிம் பால்குடிப்பதை எப்படி ஒத்துக் கொள்வார்கள்? சிரிய விஷயத்திற்காக அதிர்ப்தியடைந்தவர் இவ்வளவு பாரதூரமான காரியத்திற்கு ஒத்துக் கொள்ளவே மாட்டார்.

3. சாலிம் வருவதை சஹ்லா அவர்களும் விரும்பவில்லை என்று ஒரு செய்தி கூறுகிறது. சாலிம் வந்து போவது இப்பெண்ணிற்கு உறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் போது சாலிமிற்கு பால்கொடுக்கச் சொல்வது சந்தோஷத்தை ஏற்படுத்தாது.

4. சாலிம் (ரலி) அவர்களுக்கு ஹிந்த் என்ற பெண்ணை மணமுடித்திருந்தார்கள். ஒரு பெண் தன்னுடைய கணவன் இன்னொரு பெண்ணிடத்தில் பாலருந்துவதை எக்காலமும் ஏற்றுக் கொள்ள மாட்டாள்.

5. நம்முடைய சொந்தத் தாயாக இருந்தால் கூ.ட குறிப்பிட்ட வயது வந்தவுடன் சிறுவனாக இருக்கும் போது அவர்களிடத்தில் நடந்துகொண்டதைப் போல் அல்லாமல் பழகும் முறையை மாற்றிக் கொள்கிறோம். சஹ்லா (ரலி) அவர்களை சாலிம் தாயாக கருதியிருந்தால் அவர்களின் மார்பகத்தில் பாலருந்த சாலிம் ஒத்துக் கொண்டிருக்க மாட்டார்.

6. தன்னிடத்தில் யார் யாரெல்லாம் வரவேண்டும் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் விரும்பினார்களோ அந்த ஆண்களை தன்னுடைய சகோதர சகோதரிகளின் மகள்களிடத்தில் அனுப்பி பால்குடிக்க வைத்து வர வைத்தார்கள் என்று பச்சையாக ஆயிஷா (ரலி) அவர்களின் மீதும் ஏனைய நபித்தோழியர்கள் மீதும் பழிசுமத்தும் இச்செய்தி இஸ்லாத்திற்கு உகந்ததா? ஆயிஷா (ரலி) அவர்களின் சகோதர சகோதரியின் மகள்கள் கணக்கின்றி ஆயிஷா (ரலி) அவர்கள் அனுப்புகின்ற ஆண்களுக்கெல்லாம் பால் புகட்டினார்கள் என்று ஒத்துக் கொள்பவர்கள் இப்பத்தினிப் பெண்களின் மீது அவதூறு சொன்ன குற்றத்திற்கு ஆளாகுவார்கள். 

7. அபூ ஹுதைஃபா (ரலி) அவர்கள் சாலிமை வளர்ப்புப் பிள்ளையாக எடுத்துக் கொண்டதைப் போல் நபி (ஸல்) அவர்கள் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை வளர்ப்புப் பிள்ளையாக கவனித்து வந்தார்கள். முஹம்மதுடைய மகன் ஸைத் என்று சொல்லும் அளவிற்கு நபி (ஸல்) அவர்கள் ஸைத் (ரலி) அவர்களை நேசித்தார்கள். ஸைத் (ரலி) அவர்களின் மேலுள்ள பிரியத்தினால் ஸைத் (ரலி) அவர்களின் மகன் உஸாமா அவர்களையும் கடுமையாக நேசித்தார்கள். உஸாமா (ரலி) அவர்களுக்கு ஹிப்பு ரசூலில்லாஹ் (அல்லாஹ்வின் தூதருக்கு விருப்பமானவர்) என்ற பெயர் கூட மக்களால் சூட்டப்பட்டது. பெரியவருக்கு பால்புகட்டி தாய் மகன் உறவை ஏற்படுத்துவது மார்க்கத்தில் ஆகுமான காரியமாக இருந்தால் முதலில் நபி (ஸல்) அவர்கள் ஸைத் (ரலி) அவர்களை தன்னுடைய மனைவிமார்களில் யாரிடத்திலாவது அனுப்பி பால்குடிக்க வைத்து இரத்த பந்த உறவை ஏற்படுத்தி இருப்பார்கள். இதிலிருந்து சாலிமுடைய சம்பவம் உண்மையல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம். 

8. பெரியவருக்குப் பால் புகட்டினாலும் பால்குடி உறவு ஏற்படும் என்றால் இன்றைக்கு எத்தனையோ கணவன்மார்கள் தங்கள் மனைவியிடத்தில் இவ்விதம் நடந்து கொள்கிறார்கள். இதனால் மனைவியிடத்தில் பால்குடித்த கணவன் மனைவிக்கு மகனாக மாறி விடுவான் என்ற அறிவீன தீர்ப்பை இவர்கள் கூறுவார்களா?

முரண்பாடுகள்


1. சஹ்லா (ரலி) அவர்கள் சாலிமிற்கு 5 முறை பால் புகட்டடியதாக அபூதாவுதில் (1764) என்ற எண்ணில் இடம்பெற்ற செய்தி கூறுகிறது. ஆனால் அஹ்மதில் (25111) என்ற எண்ணில் இடம் பெற்ற இதே சம்பவத்தில் சஹ்லா (ரலி) அவர்கள் சாலிமிற்கு 10 முறை பாலூட்ட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வந்துள்ளது. ஒரே சம்பவம் தொடர்பாக வரும் ஹதீஸில் முரண்பாடு இருந்தால் இந்த முரண்பாடே அந்த ஹதீஸ் சரியில்லை என்பதற்குப் போதிய சான்றாகிவிடும். இவ்விதி ஹதீஸ் கலையில் உள்ள விதியே.

2. புகாரியில் (2647) வது எண்ணில் இடம்பெற்றுள்ள செய்தி பெரிய வயதை அடைந்த பிறகு பால்குடித்தால் பால்குடிஉறவு ஏற்படாது என்ற சரியான தகவலைத் தருகிறது. இந்த ஹதீஸை ஆயிஷா (ரலி) அவர்கள் தான் அறிவிக்கிறார்கள். ஆனால் அபூதாவுதில் (1764) வது எண்ணில் இடம்பெற்றுள்ள செய்தி ஆயிஷா (ரலி) அவர்கள் தன்னுடைய சகோதர சகோதரியின் மகள்களிடத்தில் ஆட்களை அனுப்பி பால்குடிக்க வைத்து தன்னிடத்தில் வருவதற்கு அனுமதித்தார்கள் என்று மோசமான கருத்தைக் கூறுகிறது. சாலிமுடைய சம்பவமும் இதையே கூறுகிறது. இந்தத் தகவலையும் ஆயிஷா (ரலி) அவர்கள் தான் அறிவிக்கிறார்கள். பெரியவர்களுக்கு பால்குடி சட்டம் கிடையாது என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியிருக்கும் போது பெரியவருக்கு பால்புகட்டி பால்குடி உறவை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை அவர்களே எப்படி செய்வார்கள்? இந்த முரண்பாடும் சாலிமுடைய சம்பவம் குளறுபடியானது என்பதை வலுப்படுத்துகிறது. 

3. சாலிமுடைய சம்பவத்தில் 5 முறை பால் புகட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆனால் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து இந்த எண்ணிக்கைக்கு மாற்றமாக 10 முறை பால்குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்றும் 7 முறை குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்றும் 3 முறை பால் குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்றும் முரண்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 10 7 5 3 இந்த நான்கில் எந்த எண்ணிக்கையில் பால்புகட்ட வேண்டும் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று குழப்பம் நிலவுவதால் இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ள முடியாது. இது தொடர்பான விரிவான விளக்கம் குர்ஆனில் நீக்கம் செய்யப்பட்டதா? என்ற பின்வரும் தலைப்பில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது. 

2. மதம் மாறியவனைக் கொல்ல வேண்டுமா?


இஸ்லாத்தை விட்டு விட்டு வேறொரு மதத்தைத் தழுவியன் இஸ்லாமிய அரசாங்கத்தால் கொல்லப்பட வேண்டும் என்ற நச்சுக் கருத்தை பல அறிஞர்கள் தவறுதலாகக் கூறி வருகிறார்கள். இதற்கு அவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். 

நபி (ஸல்) அவர்கள் எவன் தன் மார்க்கத்தை மாற்றிக் கொள்கிறானோ அவனைக் கொன்று விடுங்கள் என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) 

நூல் : புகாரி (3017)

Saturday, December 20, 2014

அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா? என்ற இக்கேள்விக்குப் பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

பெண்கள் தங்களுடைய முகத்தையும் இரு முன் கைகளையும் கரண்டைக்குக் கீழ் உள்ள கால் பகுதிகளையும் தவிர மற்ற பாகங்களை மறைக்க வேண்டும். இம்முறை ஹிஜாப் பர்தா என்று இஸ்லாமிய வழக்கில் சொல்லப்படுகின்றது. பெண்கள் தாங்கள் அணியும் ஆடைகளை மேற்கண்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அணிந்தால் அவர்கள் பர்தாவைப் பேணியவர்களாகி விடுவர்.

ஆனால் இன்றைக்கு நடைமுறையில் இயல்பான ஆடைகளுக்கு மேல் கூடுதலாக நீண்ட வேறு ஒரு ஆடையைப் பெண்கள் அணிந்து கொள்கிறார்கள். இந்தக் கூடுதலான ஆடை தான் பர்தா என்றும் பலர் கருதுகின்றனர். இவ்வாறு ஒரு பெண் தனது சுயவிருப்பத்தின் அடிப்படையில் கூடுதலாக ஆடைகளை அணிந்து கொண்டால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை. ஆனால் எல்லோரும் இவ்வாறு தான் அணிய வேண்டும் என்றோ இது தான் இஸ்லாமிய பர்தா முறை என்றோ கட்டாய சட்டமாகக் கூறுவது கூடாது. ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பர்தாவிற்கு என பெண்கள் தனியே எந்த ஒரு ஆடையையும் வைத்துக் கொள்ளவில்லை. ஆடை வேறு பர்தா வேறு என்றில்லாமல் பர்தா சட்டத்தைக் கடைப்பிடிக்கும் வகையில் தங்களது ஆடை முறையை அமைத்துக் கொண்டார்கள்.

இதைப் பின்வரும் செய்தியிலிருந்து அறியலாம். இக்ரிமா கூறுகிறார் :

ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்கள் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட, அந்தப் பெண்ணை அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் அல்குறழீ (ரலி) அவர்கள் மணந்து கொண்டார்கள். (பிறகு நடந்தவற்றை) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(ஒரு முறை) அந்தப் பெண்மணி பச்சை நிற முக்காடு அணிந்துகொண்டு என்னிடம் (வந்து தம் கணவர் அப்துர் ரஹ்மான் தம்மைத் துன்புறுத்துவதாக) முறையிட்டார். தம் கணவர் தம்மை அடித்ததால் தமது மேனியில் (கன்றியிருந்த) பச்சை நிற அடையாளத்தை எனக்குக் காட்டினார்.

-(இக்ரிமா கூறுகிறார்:) பெண்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்வது வழக்கம் தானே?) அந்த வழக்கப்படி நபி (ஸல்) அவர்கள் வந்த போது, "அல்லாஹ்வின் தூதரே! நான் (ஆயிஷா) இறை நம்பிக்கையுடைய பெண்கள் சந்திக்கும் துன்பத்தைப் போன்று எங்கும் பார்த்ததில்லை. இவருடைய மேனி (இவருடைய கணவர் அப்துர் ரஹ்மான் அடித்ததால் கன்றிப்போய்) இவரது (பச்சை நிற முக்காடுத்) துணியை விடக் கடுமையான பச்சை நிறமுடையதாக உள்ளது'' என்று சொன்னேன். (இதற்கிடையில்)-அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் (ரலி) அவர்கள் தம் மனைவி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று தம்மைப் பற்றி முறையிட்டார் என்று கேள்விப்பட்டார். ஆகவே, மற்றொரு மனைவியின் மூலமாகத் தமக்குப் பிறந்த இரு மகன்களைத் தம்முடன் அழைத்து வந்தார்.


அப்பெண்மணி, "(அல்லாஹ்வின் தூதரே!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவருக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆனால், (தாம்பத்திய சுகத்தில்) இவரிடமிருந்து இதை விட அதிகமாக ஒன்றும் என்னைத் திருப்திப்படுத்த முடியவில்லை'' என்று கூறி, தமது ஆடையின் முந்தானைக் குஞ்சத்தை எடுத்துக் காட்டினார்.

நூல்: புகாரி 5825


மேற்கண்ட சம்பவத்தில் நபி (ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்ட பெண் பச்சை நிறத்தில் முக்காடு அணிந்திருந்தார் என்றும் தனது ஆடையின் முந்தானைக் குஞ்சத்தை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துக் காட்டினார் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே அவர்கள் இயல்பான ஆடையைத் தான் தங்களது பர்தாவாக ஆக்கினார்கள் என்பதை இதன் மூலம் புரிகின்றோம். பொதுவாக ஆடைகளை அழகாகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மார்க்கம் போதிக்கின்றது. இந்த அடிப்படையில் ஆண்கள் எவ்வாறு தங்களது ஆடைகளை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள உரிமை பெற்றிருக்கின்றார்களோ அது போன்ற உரிமை பெண்களுக்கும் இருக்கின்றது.

பொதுவாகப் பெண்கள் தங்களது அலங்காரங்களை வெளிப்படுத்தக்கூடாது என்று திருக்குர்ஆன் கூறும் அதே வேளையில் வெளிப்படையான அலங்காரங்களை மட்டும் பெண்கள் வெளிப்படுத்திக் கொள்ள அனுமதியளிக்கின்றது.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.

அல்குர்ஆன் (24:31)


மேற்கண்ட வசனத்தில் வெளிப்படையான அலங்காரங்களைத் தவிர மற்ற அலங்காரங்களை அன்னிய ஆண்களிடமிருந்து பெண்கள் மறைக்க வேண்டும் என்று உத்தரவிடப்படுகின்றது.

பெண்களின் ஆடைகளில் வெளிப்படையான அலங்காரம் என்பது அவர்கள் அணியும் ஆடையைத் தான் குறிக்கும். தேவை கருதி இந்த அலங்காரத்தை மட்டும் வெளிப்படுத்த இஸ்லாம் அனுமதிக்கின்றது. ஆடைகளில் இரண்டு வகைகள் இருக்கின்றது. சாதாரண ஆடைகள் பிறருடைய கவனத்தை ஈக்கும் வகையில் அமைந்த ஆடைகள். பிறரை ஈர்க்கும் வகையில் அமைந்திராத சாதாரண அலங்காரங்கள் உள்ள ஆடைகளை பெண்கள் அணிவதைத் தான் மேற்கண்ட வசனம் அனுமதிக்கின்றது.

எந்த ஆடைகள் மிகவும் கவர்ச்சியாகவும் பிறர் கவனத்தை ஈர்க்கக் கூடியதாகவும் இருக்கின்றதோ அது போன்ற அலங்கார ஆடைகளைப் பெண்கள் அந்நிய ஆண்களுக்கு முன்பு அணிந்துவரக் கூடாது. எனவே பெண்கள் அணியும் பர்தா என்பது பொதுவாக மக்கள் மத்தியில் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படும் வகையில் உள்ள அலங்காரங்களைக் கொண்டிருந்தால் அதை அணிவது தவறல்ல. எந்த வகையான அலங்காரங்கள் மக்களை விட்டும் தன்னை தனிமைப்படுத்தி காட்டக்கூடியதாகவும் பிறர் கவனத்தை தன்பால் ஈர்க்கக் கூடியதாகவும் அமைந்துள்ளதோ அது போன்ற அலங்காரங்கள் உள்ள பர்தாவை அணியக் கூடாது.

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் - தொடர் 8 - பி.ஜே

அது மட்டுமின்றி தஜ்ஜால் செய்வது பொய்யும் பித்தலாட்டமும் தான்; உண்மை அல்ல என்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர்.

3450 ரிப்யீ பின் ஹிராஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் ஹுதைஃபா (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்டதை எங்களுக்கு அறிவிக்கமாட்டீர்களா? என்று கேட்டார். ஹுதைஃபா (ரலி) அவர்கள், தஜ்ஜால் வெளியே வரும் போது அவனுடன் தண்ணீரும் நெருப்பும் இருக்கும். மக்கள் எதை இது நெருப்பு' என்று கருதுகின்றார்களோ அது (உண்மையில்) குளிர்ந்த நீராக இருக்கும். மக்கள் எதை இது குளிர்ந்த நீர்' என்று கருதுகின்றார்களோ, அது (உண்மையில்) எரித்துக் கரித்துவிடும் நெருப்பாக இருக்கும். அவனை உங்களில் எவர் சந்திக்கின்றாரோ அவர், தான் நெருப்பாகக் கருதுவதில் விழட்டும். ஏனெனில், அது குளிர்ந்த சுவையான நீராகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன் என்று சொன்னார்கள்.

புகாரி 3450


அவன் எதை நரகம் என்று சொல்கிறானோ அது நரகமல்ல. சோலையாக இருக்கும். அவன் குளிர் நீர் என்று சொன்னது உண்மையில் கொதி நீராக இருக்கும். இதன் மூலம் அவன் இறைவன் அல்ல; பித்தலாட்டக்காரன் என்பது அப்போதே நிரூபிக்கப்பட்டு விடும்.

சூனியக்காரன் அல்லாஹ்வைப் போல் ஒருதடவை செயல்படுவான். அப்போதே அது பொய் என்று நிரூபிக்கப்படுவதுடன் மறுபடியும் அவனால் அதைச் செய்ய இயலாமல் போய்விடும் என்று இவர்கள் நம்பி அதற்கான ஆதாரத்தையும் காட்டுவார்களா?

இறுதியில் 40 நாட்கள் கழித்து ஈஸா நபி அவர்கள் வந்து  அவனைக் கொன்று விடுவார்கள்.

இதுவும் சூனியமும் ஒன்றாகுமா?

அது போல் மூஸா நபிகாலத்தில் வாழ்ந்த சாமிரி என்பவன் தங்கத்தால் செய்த காளைமாட்டுச் சிற்பத்தில் மண்ணை அள்ளிப்போட்டதும் அந்தச் சிற்பம் சப்தம் போட்டதாக திருக்குர்ஆன் கூறுகிறது. தங்கச் சிற்பத்தை சப்தமிடச் செய்வது அல்லாஹ்வின் செயல் அல்லவா? சாமுரி அதைச் செய்துள்ளான் என்று திருக்குர்ஆன் கூறுகிறதே இதுவும் இணைவைத்தல் என்பீர்களா என்றும் சூனியக் கட்சியினர் கேட்கின்றனர்.

சாமிரி என்பவன் மூஸா நபி காலத்தில் இருந்தான். மூஸா நபியை அல்லாஹ் உறையாடுவதற்காக வரச் சொன்னதால் தனது சகோதரரான ஹாரூன் நபியிடம் மக்களை வழிநடத்தச் சொல்லிவிட்டு தூர்சினா மலைக்கு மூஸா நபி அவர்கள் சென்றுவிடுகின்றார்கள்.

மூஸா நபி சென்றவுடன் சாமிரி என்பவன் தங்கத்தாலான காளைமாட்டைச் செய்தான். மூஸா நபி அவர்களின் காலடி மண்ணை எடுத்து அதை காளை சிற்பத்தின் மீது போட்டான். உடனே அது சப்தம் போட்டது. இதுதான் உங்கள் இறைவன் என்று கூறி மக்களை வழிகெடுத்தான் என்று திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது உண்மை தான்.

ஆனால் சாமிரியிடம் வெளிப்பட்ட செயல் அவனுடையது அல்ல என்பதையும் அதே இடத்தில் திருக்குர்ஆன் விளக்கி விடுவதை கவனிக்கத் தவறி விடுகின்றனர்.

அவர்களுக்காக உடலுடன் கூடிய காளைக்கன்றை (அவன்) வெளிப்படுத்தினான். அது சப்தமும் போட்டது. உடனே அவர்க(ளில் அறிவீனர்க)ள் "இதுவே உங்கள் இறைவன். மூஸாவின் இறைவன். அவர் வழிமாறிச் சென்று விட்டார்'' என்றனர். "அது எந்தச் சொல்லுக்கும் பதிலளிக்காது என்பதையும், அவர்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அது அதிகாரம் பெற்றிருக்கவில்லை'' என்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?

திருக்குர்ஆன் 20:89,90


"ஸாமிரியே! உனது விஷயமென்ன?'' என்று (மூஸா) கேட்டார். "அவர்கள் காணாததைக் கண்டேன். இத்தூதரின் காலடியில் ஒரு பிடி அள்ளினேன். அதை எறிந்தேன். என் மனம் இவ்வாறு என்னைத் தூண்டியது'' என்றான். "நீ சென்று விடு! உனது வாழ்க்கையில் "தீண்டாதே' என நீ கூறும் நிலையே இருக்கும். மாற்றப்பட முடியாத வாக்களிக்கப்பட்ட நேரமும் உனக்கு உள்ளது. நீ வணங்கிய உனது கடவுளைப் பார்! அதை நெருப்பில் எரித்து பின்னர் அதைக் கடலில் தூவுவோம்'' என்று (மூஸா) கூறினார்.

திருக்குர்ஆன் 20:95, 96,97


இந்த வசனங்களைக் கவனியுங்கள். சாமிரியிடம் இருந்து வெளிப்பட்டது அவனது செயல் அல்ல என்று அவனே வாக்கு மூலம் தருகிறான்.

மூஸா நபி அவனிடம் விசாரித்த போது தூதரின் காலடி மண்ணை எடுத்து போட்டுப் பார்ப்போமே என்று திடீரென்று எனக்குத் தோன்றியது என்று அவன் பதிலளிக்கிறான்.

தனக்கு இது போல் எந்த ஆற்றலும் இல்லை என்றும் நான் திட்டமிடாமல் எனக்குத் தோன்றியதைச் செய்தேன் என்பதுதான் அவனது பதில்.

எனக்கு இது போல் செயல்பட முடியும். வேறு என்ன செய்துகாட்ட வேண்டும் என்று அவன் சவால் விடவில்லை. என்னையறியாமல் என்னிடமிருந்து இது நடந்துள்ளது என்று அவன் சொன்ன பதிலில் இருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

Wednesday, December 17, 2014

அத்தாட்சிகளை மறுக்கலாமா?

கேள்வி: தங்களின் பார்வைக்கு மரம் ருகூவு செய்வது போன்ற புகைப்படத்தின் காப்பியை அனுப்பி உள்ளேன். இது போன்ற வேறு சில புகைப்படங்களும் கை வசம் உள்ளன. மீன் வயிற்றில் அல்லாஹ் என்றும் முஹம்மது என்றும் எழுதப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மன் நாட்டில் ஒரு மரத்தில் (லாயிலாஹ இல்லல்லாஹ்) என்ற அரபி பதம் தெளிவாக தெரியும் வகையில் அமைந்த புகைப் படங்களும் உள்ளன. இது போன்ற விஷயங்களை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்ற கருத்தோடு நானும் இணைகிறேன். என்றாலும் மாற்றுக்கருத்துடைய சகோதரர்கள் இந்த விஷயத்தை நம்பி பெரிதாக எடுத்துக்கொண்டு மற்றவர்களிடமும் இதைப் பெரிய அளவில் பிரச்சாரம் செய்கிறார்கள்.

அவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்காக பல பாகங்களிலும், அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம். உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா? (திருக்குர்ஆன் 41:53)

என்ற வசனத்தை எடுத்துக்காட்டி இது அல்லாஹ்வின் அற்புதம் தான் என்றும் இதை மறுத்தால் இந்த வசனத்தையே மறுத்தது போல் ஆகும் என்றும் கூறுகிறார்கள். மேலும் இதை எல்லாம் அற்புதமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது என்றும் கேட்கிறார்கள்?

எம்.ஹுசைன், யூ.ஏ.இ.

பதில்: இறைவன் தனது அத்தாட்சிகளைக் காட்டுவான் என்பதிலோ, அவற்றை நம்ப வேண்டும் என்பதிலோ மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

மாயையையும், மாயத் தோற்றங்களையும் அத்தாட்சிகள் என்று கூறுவோர் தான் இவை அத்தாட்சி என்பதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.

தற்செயலாக அமைந்த இது போன்றவற்றை எல்லாம் அத்தாட்சிகள் என வாதிட்டால் எல்லா மதத்தவர்களிடமும் இதுபோன்ற அத்தாட்சிகள் அதிகமதிகம் உள்ளன. சிலுவை, மேரி வடிவத்தில் பல்லாயிரம் பொருட்கள் உள்ளன. எல்லா மதத்தினரும் தற்செயலாக அமைந்து விட்ட இது போன்ற காட்சிகளைக் காட்டுகின்றனர். உங்கள் நண்பர்கள் வாதப்படி இவையும் அத்தாட்சிகள் தாமா?

இதோ வணக்கம் செய்யும் மரம் என்று நீங்கள் கூறினால் கும்பிடுவது போல தோற்றமளிக்கும் மரங்களை அவர்கள் காட்டுவார்கள். அல்லாஹ் என்ற அரபு எழுத்து எழுதப்பட்டுள்ளது என்று நீங்கள் காட்டினால் இல்லை சூலம் தான் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறுவார்கள். இறைவனின் அத்தாட்சிகள் இவ்வளவு பலவீனமாக, வமையற்றதாக ஒருக்காலும் இருக்க முடியாது.

அத்தாட்சிகள் என்பன, ஒரே இறைவன் இருக்கிறான் என்பதைத் தெளிவாக அறிவிக்கும். நீங்கள் கூறுபவற்றை எல்லாம் அத்தாட்சிகள் என்று எடுத்துக் கொண்டால் பல கடவுள் உள்ளனர் என்பதற்கும் இது போன்ற அத்தாட்சிகளை (?) மற்றவர்கள் காட்டுவார்கள்.

அல்லாஹ்வைப் பற்றிய அறிவும் அவனது அத்தாட்சிகள் பற்றிய அறிவும் இல்லாதவர்கள் தான் மாயைகளை அத்தாட்சிகள் என்பர்.

மூஸா நபி இலேசாக பாறையில் தட்டியவுடன் தண்ணீர் பீறிட்டு அடித்தது. இது போல் எவரும் செய்ய முடியாது என்பதால் இதை அத்தாட்சி எனலாம்.

வானங்கள், பூமி, சூரியன், கோள்கள், மழை மேகங்கள், விண்மீன்கள், காற்று, பயிர்கள் முளைப்பது, கருவில் மனிதன் வளர்வது, மனிதனுக்குள்ளே அமைக்கப்பட்டுள்ள வியக்க வைக்கும் அற்புதங்கள் என கோடானு கோடி அத்தாட்சிகளை அல்லாஹ் காட்டிக் கொண்டே தான் இருக்கிறான்.


இத்தகைய பிரம்மாண்டமான மலைக்கச் செய்யும் அத்தாட்சிகளை விட்டு விட்டு அற்பமானவைகளை அத்தாட்சி என்று கூறுவது முற்றிலும் தவறாகும். கோடி கோடியாக செல்வம் வைத்திருப்பவன் செல்லாத காலணாவைப் பெரிதாக நினைப்பது போலவே இவர்களின் நிலைமை அமைந்துள்ளது.

இத்தகைய அற்பமான தற்செயலானவற்றை அத்தாட்சி என்று கூற ஆரம்பித்தால் நிச்சயம் நீங்கள் தோற்று விடுவீர்கள்! இது போன்ற செல்லாக்காசுகள் உங்களை விட மற்றவர்களிடம் மூட்டை மூட்டையாகக் குவிந்துள்ளன.

அல்லாஹ்வுடைய வசனத்தைத் தவறான இடத்தில் பயன்படுத்தாதீர்கள்!

இவை அத்தாட்சி இல்லை என்று நம்மிடம் ஆதாரம் கேட்கக் கூடாது. யார் அத்தாட்சி என்று வாதிடுகிறார்களோ அவர்கள் தான் இது போன்றவைகளை அத்தாட்சிகளாக இறைவன் கூறியிருக்கிறான் என்ற ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.

பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து....

ஹதீஸ்கள் குர்ஆனிற்கு முரண்படுமா? - தொடர் 8

இந்த நூல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போது அப்பாஸ் அலி எழுதியது. தற்போது ஜமாஅத்திலிருந்து வெளிவந்தவுடன் இந்த நூலில் உள்ள கருத்துகளுக்கு முழுவதும் மாறுபடுவதாகவும், இனி இந்த நூலிற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

 அதிக எண்ணிக்கை ஆதாரமாகாது


ஆயிஷாவைத் தவிர்த்து நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் அனைவரும் சாலிமிற்கு மட்டும் உரியது என்று கூறுவதால் அதிகமானவர்கள் சொல்லுகின்ற கருத்தையே ஏற்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த விளக்கத்தைத் தருகிறார்கள். இவர்கள் முக்கியமான இரண்டு விஷயங்களை இங்கு கவனிக்க மறந்து விட்டார்கள்.

1.    ஆயிஷா (ரலி) அவர்கள் இச்சட்டத்தை தன்னுடைய யூகமாகச் சொல்லாமல் இது தான் நபிவழி என்று உறுதி செய்கிறார்கள். எனவே இங்கு அதிகமானவர்கள் என்ற பேச்சிற்கே இடமில்லை.

2.    ஆயிஷா (ரலி) அவர்களும் மற்ற மனைவிமார்கள் அனைவரும் ஹதீஸைப் பற்றிய ஞானத்தில் சமமான அந்தஸ்து உடையவர்கள் என்றால் இந்த வாதத்தை முன் வைக்கலாம். ஆனால் விஷயம் அப்படியல்ல. நபி (ஸல்) அவர்களின் ஏனைய மனைவிமார்களை விட ஆயிஷா (ரலி) அவர்கள் மார்க்க விஷயத்தில் மிகச்சிறந்த தனித்துவத்தைப் பெற்றிருந்தார்கள்.


நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் அனைவரும் ஹதீஸை அறிந்திருக்காத காரணத்தால் ஒரு தவறான முடிவுக்குச் செல்லும் போது நபி (ஸல்) அவர்களின் கூற்றைச் சுட்டிக்காட்டி அது தவறு என்பதை உணர்த்தும் அளவிற்கு மார்க்க ஞானம் கொடுக்கப்பட்டவர்கள் ஆயிஷா (ரலி) அவர்கள். இதற்குப் பின்வரும் சம்பவம் சான்றாக உள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த போது அவர்களின் மனைவிமார்கள் உஸ்மான் (ரலி) அவர்களை அபூபக்கர் (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்து (அல்லாஹ்வின் தூதரிடமிருந்து) தங்களுக்குச் சேர வேண்டிய சொத்தை அபூபக்கர் (ரலி) அவர்களிடம் கேட்க விரும்பினர். அப்போது நான் (அவர்களைப் பார்த்து) (இறைத்தூதரான) எங்களுக்கு எவரும் (சொத்தில்) வாரிசாக முடியாது. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லவில்லையா? என்று கேட்டேன்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள்

நூல் : புகாரி (6730)


நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் அதிக ஹதீஸை அறிவித்தவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களே. சஹாபாக்கள் யாருக்கும் தெரியாத சட்டங்களை ஆயிஷா (ரலி) அவர்கள் ஹதீஸைக் கூறி விளக்கியுள்ளார்கள். அபூஹுரைரா, உன்ர், இப்னு உமர் போன்ற பெரும் சஹாபாக்கள் அறிவித்த ஹதீஸ்களில் குறையைக் கண்டு பிடித்து சரி செய்தவர்கள்.

நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு ஹதீஸைச் சொல்லும் போது அதில் குறுக்கு விசாரணை செய்து துல்லியமாக விளங்கிக் கொண்டவர்கள். இவ்வளவு பெரிய மேதை சாலிமுடைய சம்பவம் பொதுவானது என்று கூறியதாக வரும் போது அதைப் புறக்கணித்து விட்டு அதிகமான ஆட்கள் சொல்கிறார்கள் என்ற வாதத்தை எழுப்புவது எவ்வளவு பெரிய அறிவீனம்!

நமது விளக்கம் : 2


சாலிம் சம்பவத்தில் உள்ள விகாரத்தைக் குறைப்பதற்கு சஹ்லா (ரலி) அவர்கள் சாலிமிற்கு பாலைக் கறந்து கொடுத்திருக்கலாம் என்று அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள் என்ற வாதத்தை எடுத்து வைத்தார்கள். இந்த விளக்கமும் இந்த சம்பவத்தோடு பல விதங்களில் பொருந்தவில்லை.

ஹதீஸில் அர்ளியீஹி (சாலிமிற்கு பால்புகட்டு) என்ற அரபி வாசகம் இடம் பெற்றுள்ளது. மார்பகத்தில் வாய் வைத்துக் குடிப்பதற்குத் தான் இந்த வார்த்தை ஏராளமான ஹதீஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எந்தத் தாயும் தன் குழந்தைக்கு நேரடியாக பால் கொடுப்பாலே தவிர கறந்து கொடுக்க மாட்டாள். கறந்து கொடுப்பதற்கான அவசியமும் வராது. கறந்து கொடுப்பதற்கும் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவார்கள் என்று வாதிடுபவர்கள் தங்கள் வாதத்திற்கு ஏதாவது ஒரு ஹதீஸையாவது அல்லது குறைந்தது அகராதியிலாவது ஆதாரம் காட்டியிருக்க வேண்டும்.

Tuesday, December 16, 2014

காரியம் சாதிக்க தந்திரம் செய்யலாமா? - திருக்குர்ஆன் விளக்கங்கள் - பி.ஜே

அவரது சகோதரரின் சுமைக்கு முன் இவர்களின் சுமைகளை (யூசுஃப் சோதிக்க) ஆரம்பித்தார். பின்னர் அவரது சகோதரரின் சுமையிலிருந்து அதை வெளியே எடுத்தார். இவ்வாறே யூஸுஃபுக்கு தந்திரத்தைக் கொடுத்தோம். அல்குர்ஆன் (12:76)
 
யூசுஃப் நபியவர்கள் தமது சகோதரரைத் தம்முடனே வைத்துக் கொள்வதற்காக அவர் மீது திருட்டுப் பட்டம் சுமத்தி, அதையே காரணம் காட்டி, பிடித்து வைத்துக் கொண்டதாக இவ்வசனம் கூறுகிறது.

இதை யூசுஃப் நபி, தன்னிச்சையாகச் செய்தார் என்று கருத முடியாது. ஏனெனில், "இந்தத் தந்திரத்தை நாமே அவருக்குக் கற்றுக் கொடுத்தோம்' என்று இதே வசனத்தின் தொடர்ச்சியாக அல்லாஹ் கூறுகிறான்.

இறைவனே இந்தத் தந்திரத்தைக் கற்றுக் கொடுத்திருப்பதால் இந்த நிகழ்ச்சியில் எந்தக் கருத்து அடங்கியுள்ளதோ அது போன்ற நிலையில் நாமும் தந்திரத்தைக் கையாளலாம்.

இச்சம்பவத்தில், திருடாத ஒருவர் மீது திருட்டுப்பழி சுமத்தப்பட்டாலும், பழிசுமத்தி அவரை இழிவுபடுத்துவது இதன் நோக்கமல்ல! பழி சுமத்தப்பட்டவருக்கு சிறந்த ஏற்பாட்டைச் செய்து கொடுப்பதே இதன் நோக்கம்.

யூஸுஃப் நபியின் தந்தைவழிச் சகோதரர்கள் பஞ்சத்தில் அடிபட்டு, உணவு கேட்டு வருகிறார்கள். அவர்களுடன் வந்திருந்த தமது இளைய சகோதரர், அங்கிருந்து கஷ்டப்படுவதை விடத் தம்முடன் இருப்பது தான் நல்லது என்று கருதி இந்தத் தந்திரத்தைக் கையாண்டார்கள்.

இதை விட முக்கியமாக இங்கு கவனிக்க வேண்டிய அம்சம், தம் சகோதரர் மீது திருட்டுப்பழி சுமத்துவதற்கு முன்னால் அவரைத் தனியாக அழைத்து, இந்தத் தந்திரத்தைக் கையாளப் போகிறேன் என்று உண்மை நிலவரத்தை எடுத்துக் கூறி, அந்தச் சகோதரரும் ஒத்துக் கொண்ட நிலையில் தான் யூஸுஃப் நபி இதைச் செய்தார்கள்.

இது போன்ற சூழ்நிலைகளில், இந்த நெறிமுறைகளைக் கவனத்தில் கொண்டு தந்திரத்தைக் கையாளலாம்.

மோசடி செய்வதற்கோ பிறருக்குக் கேடு செய்வதற்கோ மார்க்கத்தை வளைப்பதற்கோ தந்திரம் செய்ய இந்தச் சம்பவம் சான்றாக ஆகாது.

Monday, December 15, 2014

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் - தொடர் 7 - பி.ஜே

சூனியத்தால் நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு பதிப்பு ஏற்பட்டது என்று நம்பினால் சூனியக்காரன் அல்லாஹ்வைப் போல் செயல்படுகிறான் என்ற கருத்து இதில் உள்ளடங்கியுள்ளது. இவ்வாறு நம்புவது இணைவைத்தல் என்று நாம் சொல்லும் போது நபிமார்களின் அற்புதங்களும் இப்படித்தானே உள்ளது என்று கேட்கின்றனர். இதற்கான பதிலை நாம் பார்த்தோம்.

தஜ்ஜால் இனிமேல் வருவான் என்று நாம் நம்புகின்றோம். தஜ்ஜால் வந்து பல செயல்களைச் செய்து மக்களை தன் பக்கம் ஈர்ப்பான். அவன் செய்யக் கூடிய செயல்களில் இறந்தவரை உயிர்ப்பிப்பதும் அடங்கும். ஒருவரை இறக்கச் செய்து உயிர்ப்பித்துக் காண்பிப்பான்.

அல்லாஹ்வைப் போல யாரும் செயல்பட முடியாது என்று நாம் நம்பினால் தஜ்ஜால் இவ்வாறு செய்வதை எப்படி நம்ப முடியும்? அதுவும் இணைவைத்தல் ஆகாதா என்றும் எதிர்க்கேள்வி கேட்கின்றனர்.


இந்தக் கேள்வியை மேலோட்டமாகப் பார்த்தால் சரியாகத்தான் தெரியும். இதனைச் சிந்தித்துப் பார்த்தால் இது தவறான கேள்வி என்பது விளங்கும்.

ஏனென்றால் தஜ்ஜால் என்ற ஒருவன் இறுதிக் காலத்தில் வரவிருப்பதாக நூஹ் நபி அவர்களின் காலத்திலிருந்து அனைத்து நபிமார்களும் தமது சமுதாயத்துக்கு எச்சரித்துள்ளார்கள்.

3057 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

.....பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்பப் புகழ்ந்தார்கள். பிறகு தஜ்ஜாலை நினைவு கூர்ந்து சொன்னார்கள்:

நான் அவனைக் குறித்து உங்களை எச்சரிக்கின்றேன். எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தன் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தினரை அவனைக் குறித்து எச்சரித்தார்கள். ஆயினும், நான் அவனைப் பற்றி வேறெந்த இறைத்தூதரும் தன் சமுதாயத்தாருக்குச் சொல்லாத ஒரு விபரத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன் என்பதையும் அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

நூல் : புகாரி 3057


தஜ்ஜால் என்று ஒருவன் வருவான். இவன் சில காரியங்களைச் செய்து காட்டுவான். அவன் தன்னைக் கடவுள் என்று சொல்வான்.  அவனை நம்பிவிடாதீர்கள். இவன் ஒன்றரைக் கண்ணுள்ளவனாக இருப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனைக் குறித்து எச்சரித்துள்ளார்கள்.

3338 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:

நான் உங்களிடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லப் போகிறேன் வேறெந்த இறைத்தூதரும் அதைத் தன் சமூகத்தாருக்குச் சொன்னதில்லை. அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். அவன் தன்னுடன் சொர்க்கம் நரகம் போன்றதைக் கொண்டு வருவான். அவன் எதை சொர்க்கம் என்று கூறுகின்றானோ அது தான் நரகமாக இருக்கும். நூஹ் அவர்கள் அவனைக் குறித்து தன் சமூகத்தாரை எச்சரித்ததைப் போன்று நானும் உங்களை (அவனைக் குறித்து) எச்சரிக்கின்றேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 3338


3439 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது :

நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை மக்களின் நடுவே அமர்ந்தபடி தஜ்ஜால் என்னும் மஸீஹை நினைவு கூர்ந்தார்கள். அப்போது, அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன். ஆனால், தஜ்ஜால் என்னும் மஸீஹ், வலது கண் குருடானவன். அவனது கண், (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருக்கும் என்று கூறினார்கள்.

புகாரி 3439


அம்ர் பின் ஸாபித் அல்அன்சாரீ (ரஹ்) அவர்கள், நபித்தோழர்களில் சிலர் தம்மிடம் கூறியதாகப் பின்வருமாறு என்னிடம் தெரிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைப் பற்றி எச்சரித்த அன்றைய தினத்தில், தஜ்ஜாலின் இரு கண்களுக்கிடையில் காஃபிர் (இறைமறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும். அவனது நடிவடிக்கையை வெறுக்கின்ற ஒவ்வொருவரும் அதை வாசிப்பார்கள்; அல்லது ஒவ்வோர் இறை நம்பிக்கையாளரும் வாசிப்பார்கள் என்றும், "அறிந்து கொள்ளுங்கள்: உங்களில் எவரும் இறப்பதற்குமுன் தம் இறைவனைப் பார்க்க முடியாது'' என்றும் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 5615


5620 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எல்லா இறைத்தூதர்களும் தம் சமுதாயத்தாரை மகா பொய்யனான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. அறிந்து கொள்ளுங்கள்: அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். ஆனால், உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அந்தப் பொய்யனுடைய இரு கண்களுக்கிடையே காஃப், ஃப, ரா (இறைமறுப்பாளன் - காஃபிர்) என்று (தனித் தனி எழுத்துகளில்) எழுதப்பட்டிருக்கும்.

பெண்கள் என்றால் மட்டமானவர்களா?

கேள்வி - பெண்களை விட ஆண்கள் உயர்ந்தவர்களா? கணவன் சொல்வதைத் தான் மனைவி கேட்க வேண்டுமா? கணவனுக்குப் பிடிக்காதவங்க வீட்டுக்கு வரக் கூடாதா?. குடும்பத்தில் ஆண்களுக்கு தான் முடிவு எடுக்க வேண்டுமா? ஆண்களை கேட்டு தான் செயல் பட வேண்டுமா பெண்கள்? மார்க்கம் என்ன சொல்லுது? என் தந்தையும் சொல்லுகிறார் இறைவன் படைக்கும் போதே ஆண்களை பெண்களை விட உயர்வாகவும் மேன்மையாகவும் படைத்திருக்க்கிறான். இது உண்மையா? 

பதில் - பெண்களை விட ஆண்களுக்கு ஒரு உயர்வு உண்டு என இறைவன் கூறுகிறான்.

பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 2 : 228


எல்லா வகையிலும் ஆண்கள் உயர்ந்தவர்கள்:  பெண்கள் தாழ்ந்தவர்கள் என்பது இதன் கருத்தல்ல. காரண காரியங்களின் அடிப்படையில் ஒருவரை விட மற்றவர் சிறப்புக்குரியவர்களாக இருக்கிறார்கள் என்பது தான் இஸ்லாத்தின் கருத்தாகும்.

சில வகையில் பெண்களை விட ஆண்கள் சிறப்பிற்குரியவர்களாகவும், மற்ற சில வகையில் ஆண்களை விட பெண்கள் சிறப்புக்குரியவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு.

எந்த ஒரு நிர்வாகமாக இருந்தாலும் அதற்கு ஒரு தலைவன் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அது நிர்வாகமாக இருக்கும். சிறிய நிறுவனம் என்றாலும் பெரிய நிறுவனம் என்றாலும் இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பு ஒருவரிடம் இருந்தாக வேண்டும். யார் வேண்டுமானாலும் முடிவு எடுக்கலாம் என்று இருந்தால் அவர்கள் தனித்தனியாக இருக்கிறார்கள் என்று ஆகுமே தவிர நிர்வாகமாக ஆகாது. எவ்வளவு தான் நெருக்கமானவர்களாக இருந்தாலும் அவர்களிடையே எல்லா விஷயத்திலும் ஒத்த கருத்து வராது. எந்த முடிவு எடுப்பது என்பதில் கருத்து வேறுபாடு வரும் போது யாராவது ஒருவருக்கு மற்றவர் கட்டுப்பட்டால் மட்டுமே குடும்ப நிர்வாகம் குலைந்து போகாமல் இருக்கும். முரண்பாடு வருகிறது என்பதற்காக குடும்பம் சிதைந்து விடக் கூடாது என்பதற்காகத் கணவனுக்கு இறுதி முடிவு எடுக்கும் அதிகாரத்தை வழங்கியுள்ளது.

இதற்கான காரணங்களும் இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆண்கள் தான் குடும்பத்துக்காக பொருள் திரட்டக் கடமைப்பட்டுள்ளார். உழைத்து சம்பாதித்து மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் செலவிடுகிறார்கள் என்பது முதல் காரணமாகும். பொருளாதாரத்தை திரட்டுபவன் என்ற அடிப்படையில் தான் அவனுக்கு இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடமையைச் செய்யாத ஒரு கணவன் தனக்கு மனைவி கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று இஸ்லாத்தின் பெயரால் உரிமை கொண்டாட முடியாது.

அடுத்ததாக உடலமைப்பில் ஆண்கள் தான் பெண்களை விட வலிமையுள்ளவர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் முடிவு எடுக்கும் போது மற்றவர் அதற்குக் கட்டுப்பட மறுத்தால் அப்போதும் குடும்ப அமைப்பு சீர்குலைந்து விடும். யாருக்கு வலிமை அதிகம் உள்ளதோ அவரிடம் அந்த அதிகாரம் இருந்தால் மற்றவர் கட்டுப்பட எளிதாக இருக்கும் என்பது மற்றொரு காரணமாக இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. 

Sunday, December 14, 2014

போலி ஆவணங்கள் மூலம் ஹஜ் உம்ரா செய்யலாமா? - பி.ஜே



போலி ஆவணங்கள் மூலம் ஹஜ் உம்ரா செய்யலாமா?

எவருக்கு ஹஜ் கடமையாகும்?

ஹதீஸ்கள் குர்ஆனிற்கு முரண்படுமா? - தொடர் 7

இந்த நூல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போது அப்பாஸ் அலி எழுதியது. தற்போது ஜமாஅத்திலிருந்து வெளிவந்தவுடன் இந்த நூலில் உள்ள கருத்துகளுக்கு முழுவதும் மாறுபடுவதாகவும், இனி இந்த நூலிற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

 1. பருவ வயதை அடைந்தவருக்கு பால்புகட்டுதல்


நபி (ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான அபூஹுதைஃபா பின் உத்பா (ரலி) அவர்கள் சாலிம் அவர்களைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டார். மேலும் அவருக்குத் தம் சகோதரர் வலீத் பின் உத்பாவின் மகள் ஹிந்த் என்பாரைத் திருமணமும் செய்து வைத்தார். சாலிம் ஓர் அன்சாரிப் பெண்ணின் அடிமையாக இருந்தவர். நபி (ஸல்) அவர்கள் ஸைதைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டது போல் (சாலிமை அபூஹுதைஃபா வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டார்) மேலும் அறியாமைக் காலத்தில் ஒருவரை அவருடைய வளர்ப்புத் தந்தை (யின் பெயர்) உடன் இணைத்து மக்கள் அழைக்கும் வழக்கமும் அவரது சொத்துக்கு வாரிசாக (வளர்ப்பு மகனை) நியமிக்கும் வழக்கமும் இருந்தது.

ஆகவே நீங்கள் (வளர்த்த) அவர்களை அவர்களுடைய (உண்மையான) தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து அழையுங்கள். அது தான் அல்லாஹ்விடத்தில் மிக நீதியாக இருக்கிறது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களுடைய மார்க்கச் சகோதரராகவும் உங்கள் மார்க்கச் சிநேகிதர்களாகவும் இருக்கிறார்கள் எனும் (33 : 5ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளும் வரையில் (இந்த வழக்கம் நீடித்தது).

பின்னர் வளர்ப்புப் பிள்ளைகள் அவர்களுடைய சொந்தத் தந்தையருடன் இணைக்கப்பட்டனர். எவருக்குத் தந்தை (இருப்பதாக) அறியப்படவில்லையோ அவர் மார்க்க சிநேகிதராகவும் மார்க்கச் சகோதரராகவும் ஆனார். பிறகு அபூஹுதைஃபா பின் உத்பா அவர்களின் துணைவியார் சஹ்லா பின்த் சுஹைல் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நாங்கள் சாலிமை பிள்ளையாகவே கருதிக் கொண்டிருந்தோம். அவர் விஷயத்தில் அல்லாஹ் தாங்கள் அறிந்துள்ள (33 : 5 ஆவது) வசனத்தை அருளி விட்டான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (5088)


(ஒரு முறை) சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே சாலிம் பின் மஅகில் என்னுடைய வீட்டிற்கு வரும் போது அபூஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியை நான் பார்க்கிறேன் என்று கூறினார்கள். சாலிம் (ரலி) அவர்கள் அபூஹுதைஃபாவின் அடிமை ஆவார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு என்று கூறினார்கள். சஹ்லா (ரலி) அவர்கள் அவர் பருவ வயதை அடைந்த மனிதராயிற்றே. அவருக்கு நான் எவ்வாறு பாலூட்டுவேன்? என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தவாறு அவர் பருவ வயதை அடைந்தவர் என்று எனக்கும் தெரியும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள்

நூல் : முஸ்லிம் (2878)


சஹ்லா (ரலி) அவர்களும் அவரது கணவர் அபூஹுதைஃபா மற்றும் வளர்ப்பு மகன் சாலிம் ஆகிய மூவரும் நெருக்கடியான ஒரே வீட்டில் இருப்பதாகவும் சஹ்லா அவர்கள் முறையாக ஆடை அணியாமல் இருக்கும் போது சாலிம் வரக்கூடிய சூழ்நிலை இருப்பதாகவும் சஹ்லா (ரலி) அவர்கள் முறையிட்டதாக வேறு அறிவிப்புக்களில் வந்துள்ளது.

குர்ஆனுடன் முரண்படுகிறது


பால்குடி உறவு ஏற்படுவதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை. பருவ வயதை அடைந்த ஆணிற்கு ஒரு பெண் பால் புகட்டினாலும் அந்தப் பெண் அந்த ஆணிற்கு தாயாக மாறி விடுவாள் என்ற கருத்தை இந்த ஹதீஸ் தருகிறது. இந்த ஹதீஸ் குர்ஆனிற்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் முரண்படுவதால் இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறோம்.

அல்லாஹ் பால்குடி சட்டத்திற்கு குழந்தை பிறந்த முதல் இரண்டு வருடத்தை எல்லையாக நிர்ணயிக்கிறான். இந்த எல்லையைத் தாண்டிய ஒருவர் பால் குடிப்பதினால் பால்குடி உறவு ஏற்படாது என்று பின்வரும் வசனங்கள் கூறுகிறது.

1. பாலூட்டுவதை முழுமைப்படுத்த வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும்.

அல்குர்ஆன் (2 : 233)

2. மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.

 அல்குர்ஆன் (31 : 14)

3. அவனை (மனிதனை) அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள்.

அல்குர்ஆன் (46 : 15)
 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner