Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Tuesday, December 15, 2015

இஸ்லாத்தின் பார்வையில் மீலாது...

இஸ்லாம் என்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித் தந்த வழிமுறைகள் தான். இது நபி(ஸல்) அவர்கள் காலத்தோடு முழுமைப் படுத்தப்பட்டு விட்டது. 

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.  (அல் குர்ஆன் 5:3)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நான் உங்களை (மார்க்கம்) வெண்மையான(தாக இருக்கும்) நிலையில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும். அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள். அறிவிப்பவர்: இர்பாள் பின் ஸாரியா(ரலி),  நூல்: அஹ்மத் (16519)

இப்படிப்பட்ட தெளிவான இஸ்லாமிய மார்க்கத்தில் இன்றைக்கு நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராத எத்தனையோ புதுப்புது வழிமுறைகள், வழிபாடுகள் புகுந்துவிட்டன. ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு பித்அத்(நூதனமான அனுஷ்டானங்க)களை உருவாக்கி வைத்துள்ளனர்.

ரபியுல் அவ்வல் மாதம் வந்து விட்டால் போதும். ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் பிறை 1 முதல் 12 வரை மௌலூதுகள் ஓதி மீலாது விழா கொண்டாடி வருகின்றனர். நபி(ஸல்) அவர்களின் புகழைப் பாடவேண்டும். அவர்களின் மீது நாம் கொண்டுள்ள நேசத்தை வெளிப்படுத்தவேண்டும். என்ற அடிப்படையில்தான் இந்த விழாக்களை கொண்டாடி வருகின்றனர்.

இந்த மீலாது விழாக்களில் ஊர்வலம் என்ற பெயரில் போதையால் மதி மயங்கியவர்களாக கேடு கெட்ட வாசகங்களைப் பயன்படுத்தி கோசமிடுவது, தெருவாரியாக வசூல் செய்து மௌலூது, பாதிஹா ஓதி நேர்ச்சை விநியோகிப்பது, அன்றை தினம் இசைக்கருவிகளுடன் பாட்டுக் கச்சேரி

Monday, November 16, 2015

ஸஃபர் மாதம் பீடையா?

கேள்வி : ஸஃபர் மாதம் பீடையா? - பி.எம். முஹம்மத் அலீ ரஹ்மானீ

பதில் பி.ஜே : இஸ்லாமிய மார்க்கம் ஓர் அறிவார்ந்த மார்க்கமென மாற்று மதத்தவர்கள் கூட கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களில் பலர் மூடப்பழக்க வழக்கங்களை மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றி வருகின்றார்கள்.

இந்த மூடப் பழக்க வழக்கங்களை அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து கற்றார்களா என்றால் நிச்சயமாக இல்லை. மாறாக மாற்று மதத்தினர்களின் செயல்களைக் கண்டு அவர்கள் செய்வதைப் போன்று இவர்களும் செய்கின்றனர். இவ்வாறு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றக் கூடியவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் அல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

தனக்குப் பின்னர் முஸ்லிம்கள் பல பித்அத்தான காரியங்களைப் பின்பற்றுவார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்ந்த காரணத்தினால் தான் பித்அத்துகளை தோற்றுவிக்காத அந்த நபித்தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள், புதுமையான காரியங்களை, பித்அத்துக்களைப் பற்றி எச்சரித்துக் கூறியுள்ளார்கள்.

முஸ்லிம்கள் எந்த அளவுக்கு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவார்கள் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

உங்களுக்கு முன்னால் உள்ளவர்களை நீங்கள் ஜானுக்கு ஜான், முளத்திற்கு முளம் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தால் நீங்களும் அதில் நுழைவீர்கள் என்று கூறியுள்ளார்கள். (புகாரி 3456)

இவ்வாறு புதிதாக ஒரு பித்அத்தைச் செய்தால் அதைச் செய்தவருக்கு அதன் தீமை கிடைக்கும். இத்துடன் அல்லாமல் இவரைப் பார்த்து யார் யாரெல்லாம் செய்வாரோ அவரின் தீமையும் கிடைக்கும் என்றும்  நபி (ஸல்) அவர்கள் பித்அத்தைப் பற்றி எச்சரித்துக் கூறியுள்ளார்கள். இது போன்று நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் பல இருக்கும் போது,  இஸ்லாமிய சமுதாயம் இவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மனம் போன போக்கில் செல்லக்கூடிய நிலையை தற்காலத்தில் அதிகம் கண்டு வருகிறோம்.

மாற்றுமதத்தினர் தேரிழுப்பதையும் விழாக் கொண்டாடுவதையும் பார்த்து விட்டு அதை அப்படியே இவர்கள் காப்பியடித்து சந்தனக்கூடு இழுப்பதையும், கந்தூரி கொண்டாடு வதையும் வழமையாக்கிக் கொண்டனர். இது போன்று இன்றைக்கு மாற்று மதத்தினர் ஆடி மாதத்தைப் பீடை மாதமாகக் கருதி கோயில் குட்டைகளுக்குச் சென்று தங்கள் பீடையை கழித்துக் கொள்கின்றனர்.

Wednesday, September 30, 2015

ஒரு குர்ஆனை நம்பும் முஸ்லிம்கள் நூறு பிரிவுகளானது ஏன்?

கேள்வி: சென்ற 27-11-2001 hindu நாளிதழில் open page என்ற பக்கத்தில் islam at the crossrods என்ற தலைப்பில் m.riaz hassan என்ற இங்கிலாந்தில் இருப்பவர் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதில் உள்ள ஒரு சில விசயங்கள் பற்றிய விளக்கம் தேவை.

அக்கட்டுரையில் சிறு தலைப்பில் slow decline மெதுவாக அழிகிறது என்று எழுதியிருக்கின்றார். அதில் அவர் முன் வைக்கும் வாதம் முகமது நபி(ஸல்) அவர்கள் 72 பிரிவுகளாக முஸ்லிம்கள் பிரிவார்கள் என்று கூறினார்கள். ஆனால், இப்போதோ 100க்கும் மேற்பட்ட பிரிவுகள் ஏற்பட்டுள்ளது என்றும் அனைவரும் தேர்வு செய்து இருப்பது ஒரே குர்ஆன் தான் என்றும் கூறியுள்ளார். இது பற்றி உங்கள் விளக்கம் என்ன?

மேலும் indian muslims என்கிற தலைப்பில் இந்தியா வில் இருந்து பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தவர்கள் இப் போது 53 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அங்கு அகதிகளாகவே உள்ளனர் எனக் கூறியுள்ளார் உண்மை தானா? ஏன்?

இதே கேள்வி ஒன்றைத் தான் எனது இந்து நண்பர் கேட்டார். நீங்கள் முஸ்லிம் என்று சொல்லி பாகிஸ்தான் சென் றால் உங்களைச் சேர்க்க மாட்டார்கள். பின்பு ஏன் சகோதரத் துவம் என்ற முறையில் பாகிஸ்தானை ஆதரிப்பதாக முஸ்லிம் கள் கூறுகிறார்கள். குறிப்பாக இந்திய முஸ்லிம்கள் ஏன் அனு மதிக்கப்படுவது இல்லை. இதைப் பற்றிய விளக்கம் தேவை.

Sunday, March 1, 2015

மனத் தூய்மையும் மகத்தான கூலியும்...

- எம். ஷம்சுல்லுஹா

மனிதன் இறைவனை வணங்கும் போது அந்த வணக்கத்தை அவனுக்காகவே தவிர வேறு யாருக்காகவும் ஆக்கி விடக்கூடாது என்ற நிபந்தனையை முக்கியமான நிபந்தனையாக இறைவன் விதித்திருக்கிறான். ஒரு வணக்கத்தைச் செய்யும் போது அவனை இன்னொரு மனிதன் மெச்ச வேண்டும் என்பதற்காகவும், புகழவேண்டும் என்பதற்காகவும், அல்லது உலகப் பலனை அடைய வேண்டும் என்பதற்காகவும் செய்தால் அந்த வணக்கத்தை இறைவன் தூக்கி எறிந்து விடுகின்றான். இதை நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் மிகத் தெளிவாக விளக்குகின்றன.

செயல்கள் எண்ணங்களைக் கொண்டு தான் அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கும். யாருடைய (நாட்டை விட்டு வெளியேறும்) பயணம் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் அமைகின்றதோ அவரது பயணம் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் அமைந்து விடுகிறது. எவரது பயணம் உலகத்தை அடைவதற்காகவோ அல்லது பெண்களை மணம் முடிப்பதற்காகவோ அமையுமெனில் அவரது பயணம், அவர் எந்த நோக்கத்திற்காகப் பயணம் செய்தாரோ அதற்காகவே அமைந்து விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி),

நூல்: புகாரி 1


சுத்தமான அமல் சோதனையின் போது அரண்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"(முற்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையிலுள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகையின் வாசலை அடைத்தது. அப்போது அவர்கள், "நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்'' என்றனர்.

அவர்களில் ஒருவர், "இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் ஆடு மேய்க்க வெளியே சென்று விட்டுப் பிறகு வந்து பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பார்கள். ஓர் இரவு நான் தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கி விட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தைகள் பசியால் என் காலடியில் அழுதனர். விடியும் வரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உனது திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்து!'' என்று கூறினார்.

மற்றொருவர், "இறைவா! எனது தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதை விட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தரும் வரை தன்னை அடையக் கூடாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளது இரு கால்களுக்கிடையில் நான் அமர்ந்த போது, "அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! உரிய முறையின்றி முத்திரையை உடைக்காதே!'' என்று அவள் கூறினாள். உடனே நான் அவளை விட்டு எழுந்து விட்டேன். இதை உனது திருப்தியை நாடி செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தை நீக்கு!'' என்று கூறினார். அல்லாஹ் அவர்களை விட்டும் மூன்றில் இரண்டு பங்கு நீக்கினான்.

மற்றொருவர், "இறைவா! நான் மூன்று ஸாஉ (ஒருவகை அளவைப் பாத்திரம்) கேழ் வரகு கூலிக்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்த போது அதை அவர் வாங்க மறுத்து விட்டார். அந்தக் கேழ் வரகைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு அவர் வந்து, "அல்லாஹ்வின் அடிமையே! எனது கூலியைக் கொடு!'' என்று கூறினார். "இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை. எடுத்துச் செல்லும்'' என்று கூறினேன். அதற்கவர், "என்னைக் கேலி செய்கின்றீரா?'' என்று கேட்டார். "நான் உம்மைக் கேலி செய்யவில்லை. இவை உமக்குரியவை தான்'' எனக் கூறினேன். இறைவா! இதை நான் உனது திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் எங்களை விட்டு இந்தச் சிரமத்தை நீக்கு'' என்று கூறினார். சிரமம் முழுமையாக விலகியது.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),

நூல்: புகாரி 2215


எண்ணத்திற்கேற்பவே இறுதி நாளில் கூலி

"ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள். வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும் போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை பூமிக்குள் புதையுண்டு போவார்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே?'' என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத் தான் செய்வார்கள். எனினும் பின்னர் அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: புகாரி 2118


ஊரில் இருந்தாலும் போரில் கலந்த நன்மை

நபி (ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போரில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அவர்கள், "மதீனாவில் (போருக்கு வர வேண்டும் என்ற எண்ணமிருந்தும் வர முடியாமல் ஆகி விட்ட) சிலர் இருக்கிறார்கள். நாம் எந்த மலைக் கணவாயையும், பள்ளத்தாக்கையும் அவர்கள் நம்முடன் இருக்கும் நிலையிலேயே தவிர நாம் கடக்கவில்லை. சில காரணங்களே அவர்களை (போரில் கலந்து கொள்ள முடியாமல்) தடுத்து விட்டன'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),

நூல்: புகாரி 2839

Sunday, January 4, 2015

பெண்கள் முகத்தை மறைக்க வேண்டுமா? - பி.ஜே

பெண்கள் பொதுவாக எந்த அளவுக்கு ஆடை அணிய வேண்டும்? தொழுகையின் போது எந்த அளவுக்குத் தமது உடலை மறைக்க வேண்டும்?

பெண்களின் ஆடை குறித்து அறிஞர்கள் மத்தியில் ஏராளமான கருத்து வேறுபாடுகள் நிலவுவதால் இது பற்றி விரிவாக அறிந்து கொள்வது தான் நமக்குத் தெளிவு ஏற்படுத்தும்.
1.  பெண்கள் தமது முகத்தையும் முன் கைகளையும் தவிர மற்ற பகுதிகளை மறைக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.

2.    முகத்தையும், முன் கைகளையும் கூட மறைத்தாக வேண்டும் என்று மற்றும் சிலர் கூறுகின்றனர்.

3.     தொழுகையின் போது பாதங்கள் அறவே தெரியாத அளவுக்கு மறைக்க வேண்டும் என்று வேறு சிலர் கூறுகின்றனர். காலுறை அணியாமல் தொழக் கூடாது என்றும் இவர்கள் வாதிடுகின்றனர்.


பெண்கள் உடலை எந்த அளவுக்கு மறைக்க வேண்டும் என்பதற்கு ஆதாரமாகப் பின்வரும் வசனம் அமைந்துள்ளது.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றி யடைவீர்கள். (அல்குர்ஆன் 24:31)

'தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர' என்ற சொற்றொடர் இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ளது.

'வெளியே தெரிபவை தவிர' என்ற சொற்றொடர் முகம், முன் கைகள் ஆகிய இரண்டையும் தான் குறிக்கிறது என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். இப்னு அப்பாஸ் (ரலி) உள்ளிட்ட பல நபித் தோழர்கள் இவ்வாறு விளக்கமளித்திருப்பதை இதற்குச் சான்றாக எடுத்துக் காட்டுகின்றனர்.

முகம், முன் கைகளை பெண்கள் வெளிப்படுத்தலாம் என்ற வாதத்தை நாம் ஏற்றுக் கொண்டாலும் அந்த வாதத்திற்கு மேற்கண்ட வசனத்தை ஆதாரமாகக் கொள்வதை நாம் நிராகரிக்கிறோம்.

பெண்களின் உடலில் எந்தப் பகுதிகளை வெளிப்படுத்தலாம்? எந்தப் பகுதிகளை மறைக்க வேண்டும் என்பதற்கும் மேற்கண்ட வசனத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

இவ்வசனத்தில், 'தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம்' என்ற வாக்கியமும், '......ஆகியோர் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்' என்ற வாக்கியமும் உள்ளன.

அலங்காரம் என்று நாம் மொழி பெயர்த்த இடங்களில் ஸீனத் என்ற அரபுச் சொல் இடம் பெற்றுள்ளது. இச்சொல்லுக்கு அழகு என்று பலர் விளக்கம் கூறினாலும் இச்சொல்லுக்கு அலங்காரம் என்பதே சரியான பொருளாகும்.

அழகு என்பது ஒருவரது உடலில் இயற்கையாக அமைந்துள்ள கவர்ச்சியைக் குறிக்கும். அதாவது ஒருவரது நிறம், முக அமைப்பு, கட்டான உடல், உயரம், பார்ப்பவரை ஈர்க்கும் வகையில் அமைந்த பற்கள், கண்கள் போன்றவற்றை அழகு என்ற சொல் குறிக்கும்.

உடலின் ஒரு பகுதியாக இல்லாத ஆபரணங்கள், ஆடைகள், மேக்கப் செய்தல், லிப்ஸ்டிக் போன்றவற்றை அலங்காரம் என்ற சொல் குறிக்கும்.

அழகை வெளிப்படுத்த வேண்டாம் என்பது உடல் உறுப்புக்களைக் குறிக்கும். அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்பது உடல் உறுப்புக்களைக் குறிக்காது. இதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


திருக்குர்ஆனில் ஸீனத் என்ற சொல் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த இடங்களைக் கவனமாக ஆராய்ந்தால் ஸீனத் என்பது அலங்காரத்தைத் தான் குறிக்கும் என்பதைச் சந்தேகமற அறியலாம்.

வானத்தில் நட்சத்திரங்களை அமைத்தோம். பார்ப்போருக்கு அதை அழகாக்கினோம்.

திருக்குர்ஆன் 15:16

முதல் வானத்தை நட்சத்திரங்கள் எனும் அலங்காரம் மூலம் நாம் அலங்கரித்துள்ளோம்.

திருக்குர்ஆன் 37:6

இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான். ஒவ்வொரு வானத்திலும் அதற்குரிய கட்டளையை அறிவித்தான். கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். (அவற்றை) பாதுகாக்கப்பட்டதாக (ஆக்கினோம்). இது அறிந்தவனாகிய மிகைத் தவனின் ஏற்பாடாகும்.

திருக்குர்ஆன் 41:12

அவர்களுக்கு மேலே உள்ள வானத்தை எவ்வாறு அமைத்து அதை அழகுபடுத்தியுள்ளோம் என்பதை அவர்கள் கவனிக்க வில்லையா? அதில் எந்த ஓட்டைகளும் இல்லை.

திருக்குர்ஆன் 50:6

முதல் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். அதை ஷைத் தான்கள் மீது எறியப்படும் பொருட்களாக ஆக்கினோம். அவர்களுக்கு நரகத்தின் வேதனையைத் தயாரித்துள்ளோம்.

திருக்குர்ஆன் 67:5
மேற்கண்ட வசனங்களில் நட்சத்திரங்கள் வானத்துக்கு அலங்காரமாக அமைந்துள்ளதாக அல்லாஹ் கூறுகின்றான்.

நட்சத்திரங்கள் வானத்தின் ஓர் அங்கம் அல்ல. வானத்தில் ஓர் அங்கமாக இல்லாமல் வானத்துக்குக் கவர்ச்சியை நட்சத்திரங்கள் அளிக்கின்றன. இதைக் குறிப்பிட இறைவன் ஸீனத் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளான்.

அவர்களில் அழகிய செயலுடையவர் யார் என்பதைச் சோதிப்பதற்காகப் பூமியில் உள்ளதை அதற்கு (பூமிக்கு) அலங்காரமாக நாம் ஆக்கினோம்.

திருக்குர்ஆன் 18:7
பூமியின் மேலுள்ள புற்பூண்டுகளை பூமிக்கு ஸீனத் (அலங்காரம்) என்று அல்லாஹ் கூறுகின்றான்.

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்! உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.

திருக்குர்ஆன் 7:31


தொழுமிடத்தில் அலங்காரம் செய்து கொள்ளுங்கள் என்பது உடல் அழகைக் குறிக்காது. அவ்வாறு குறித்தால் உடல் அழகு இல்லாதவர்கள் பள்ளிக்கு வருவது குற்றமாகி விடும். அணிகின்ற ஆடை நல்ல முறையில் அமைய வேண்டும் என்பதையே மேற்கண்ட வசனம் குறிப்பிடுகின்றது.

Monday, December 29, 2014

தீண்டாமைக்குத் தீர்வு திருக்குர்ஆன் மட்டுமே! - பி.ஜே

பரமக்குடியில் 7 பேரின் உயிரைப் பலி கொண்ட இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு அடிப்படைக் காரணம், சாதித் தகராறு தான் என்று தமிழக முதல்வரே சட்டமன்றத்தில் அறிவிக்கின்றார்.

சாதிப் பாகுபாட்டின் காரணமாகவும், தீண்டாமையின் காரணமாகவும் இந்தியாவில் தலித் மக்கள் தாக்கப்படுவதென்பது தனி நிகழ்வல்ல! இது அன்றாடம் நடைபெறும் அநியாயமும் அக்கிரமும் ஆகும்.

1968ம் ஆண்டு கீழ் வெண்மணி என்ற கிராமத்தில் கூலியை உயர்த்திக் கேட்டார்கள் என்ற காரணத்திற்காக 44 தலித்துக்களை, உயர்சாதி நிலச் சுவான்தார்கள் எரித்துக் கொன்ற வடு இன்னும் ஆறவில்லை. அதன் நினைவு தினம் டிசம்பர் 25ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

1992ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி தர்மபுரி மாவட்டம் வச்சாத்தி என்ற கிராமத்தில் மலைவாழ் இனத்தைச் சேர்ந்த 18 பெண்கள் காவல்துறையினரால் கற்பழிக்கப்பட்ட வழக்கு தற்போது தான் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.

1997ஆம் ஆண்டு தென்மாவட்டங்களில் நடைபெற்ற சாதிக் கலவரங்கள்

1999ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர் பேரணியில் காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் தாமிரபரணி ஆற்றில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

இப்படி தமிழகத்தில் நடைபெற்ற அநியாயங்களை மட்டும் பட்டியல் போட்டால் கூட இந்த ஏடு தாங்காது. அனைத்திந்திய அளவில் எனும் போது அதை அளவிடவே முடியாது.

2002ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று ஹரியானா மாநிலத்திலுள்ள துலினி கிராமத்தில், செத்த மாட்டின் தோலை உரித்தார்கள் என்பதற்காக 5 தலித்துகள் அடித்துக் கொல்லப்பட்டனர்.

உதாரணத்திற்கு ஒன்றிரண்டு சம்பவங்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் இந்தக் கொடூரங்கள் அனுதினமும் நடந்தேறிய வண்ணம் இருக்கின்றன.

அடிப்படைக் காரணங்கள்


இதற்கு அடிப்படைக் காரணம் என்ன? இந்துக்களின் வேத நூலான மனு சாஸ்திரம் தான். அது பிராமணரை உயர் குலத்தோர் என்று சித்தரித்தது.

பிரம்மா தம் முகத்திலிருந்து பிரம்மர்களையும், தோளிலிருந்து சத்திரியர்களையும், தொடையில் இருந்து வைசியர்களையும், காலிலிருந்து சூத்திரர்களையும் பிறப்பித்தார்.

(மனு தர்மம் 2:35)


பிராமணரைச் சூத்திரர் கையாலேனும், கருவியாலேனும் தாக்கினால் பிராமணரை எந்தெந்த இடத்தில் அடித்தானோ, அடித்தவனின் உறுப்புகளைக் குறைப்பதே தக்க தண்டனையாகும்.

பிராமணனுக்குச் சமமாக அகங்காரத்தோடு அமர்கின்ற சூத்திரனுக்கு உயிருக்குத் தீங்கற்ற தண்டனை தருக. இடுப்பில் சூடு போடுக. உட்கார்ந்த உறுப்பை அறுத்திடுக. ஊரை விட்டும் அவனைத் துரத்துக.

பிராமணன் மீது காறி உமிழ்பவன் உதடுகளை அறுத்திடு. மூத்திரம் பெய்தால் குறியை வெட்டு. மலத்தை வீசினால் ஆசனப் பகுதியை அறுத்து விடு.

சூத்திரன் பிராமணனின் குடுமி, மீசை, தாடி, கழுத்து, குறி முதலியவற்றைப் பற்றியிழுத்தால் அவன் கையைத் துண்டித்து விடுக.

சூத்திரன் பிராமணனைக் கடுமையாக வைதால் சூத்திரன் நாக்கை அறுத்தெறியவும். பிராமணனின் குலம் குறித்து இழித்துரைத்தால் பத்து அங்குல நீளக் கம்பியைப் பழுக்கக் காய்ச்சி சூத்திரன் வாயினுள் திணிக்க வேண்டும். 

(மனு தர்மம் 9:263-267)

வேதமறிந்த பிராமணர்க்குப் பணிவிடை செய்வதே சூத்திரர் தர்மம். சூத்திரர்க்கு அதுவே மோட்சப் பாதை. 
(மனு தர்மம் 10:276)

பிராமண, சத்திரிய, வைசியர்க்கு ஒருவரில்லாவிடில் அடுத்தவருக்குத் தொண்டு புரிவதே சூத்திரருக்குத் தர்மம் ஆகும்.

(மனுதர்மம் 10:277)

இழி பிறப்பாளன் ஒருவன் பிராமணப் பணியைப் புரியும் போதும் அவன் இழி பிறப்பாளன் தான். இழி தொழில் யாது புரிந்தாலும் பிராமணன் ஒரு போதும் இழி பிறப்பாளன் ஆகான். அவன் பிறப்பு உயர் பிறப்பு தான். பிரமனின் ஆணை அவ்வாறு. 

(மனு தர்மம் 11:33)

பிராமணனுக்கு மங்களம், சத்திரியனுக்கு பலம், வைசியனுக்குச் செல்வம், சூத்திரனுக்கு அவனது அடிமை நிலை தோன்றும்படியான பெயர்களைச் சூட்ட வேண்டும்.

(மனு தர்மம் 3:23)
மக்களை இப்படி வர்ணாஸ்ரம அடிப்படையில் பல கூறுகளாகப் பிரித்து வைத்திருப்பதால் தான்  தீண்டாமை எனும் நுகத்தடியில் இந்தியா சிக்கித் தவிக்கின்றது.


பிராமணர்கள், சூத்திரப் பெண்களைத் திருமணம் முடிக்கக் கூடாது.


சூத்திரர்கள் கல்வி கற்கக் கூடாது; மீறிக் கற்றால் அவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்.
உயர்ஜாதிக்காரர்களின் தெருக்களில் நாய்கள், பன்றிகள் செல்லலாம்; ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்லக் கூடாது.

உயர்ஜாதிக்காரர்களின் குளத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குளிக்கக் கூடாது; குளத்தில் தண்ணீர் அள்ளக் கூடாது.

தாழ்த்தப்பட்டவர்கள் வேத மந்திரங்கள் ஓதக் கூடாது; பூஜை செய்யக் கூடாது; ஏன்? கோயில்களுக்குள் நுழையவே கூடாது.

இப்படி ஆண்டாண்டு காலம் மக்களை மனு தர்ம வர்ணங்களின் அடிப்படையில் பிரித்து வைத்துள்ளனர். தொட்டால் தீட்டு! பட்டால் பாவம் என்று தீண்டாமை தலைவிரித்தாடுகிறது. இது தான் இந்தியாவின் நிலை!

Monday, December 15, 2014

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் - தொடர் 7 - பி.ஜே

சூனியத்தால் நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு பதிப்பு ஏற்பட்டது என்று நம்பினால் சூனியக்காரன் அல்லாஹ்வைப் போல் செயல்படுகிறான் என்ற கருத்து இதில் உள்ளடங்கியுள்ளது. இவ்வாறு நம்புவது இணைவைத்தல் என்று நாம் சொல்லும் போது நபிமார்களின் அற்புதங்களும் இப்படித்தானே உள்ளது என்று கேட்கின்றனர். இதற்கான பதிலை நாம் பார்த்தோம்.

தஜ்ஜால் இனிமேல் வருவான் என்று நாம் நம்புகின்றோம். தஜ்ஜால் வந்து பல செயல்களைச் செய்து மக்களை தன் பக்கம் ஈர்ப்பான். அவன் செய்யக் கூடிய செயல்களில் இறந்தவரை உயிர்ப்பிப்பதும் அடங்கும். ஒருவரை இறக்கச் செய்து உயிர்ப்பித்துக் காண்பிப்பான்.

அல்லாஹ்வைப் போல யாரும் செயல்பட முடியாது என்று நாம் நம்பினால் தஜ்ஜால் இவ்வாறு செய்வதை எப்படி நம்ப முடியும்? அதுவும் இணைவைத்தல் ஆகாதா என்றும் எதிர்க்கேள்வி கேட்கின்றனர்.


இந்தக் கேள்வியை மேலோட்டமாகப் பார்த்தால் சரியாகத்தான் தெரியும். இதனைச் சிந்தித்துப் பார்த்தால் இது தவறான கேள்வி என்பது விளங்கும்.

ஏனென்றால் தஜ்ஜால் என்ற ஒருவன் இறுதிக் காலத்தில் வரவிருப்பதாக நூஹ் நபி அவர்களின் காலத்திலிருந்து அனைத்து நபிமார்களும் தமது சமுதாயத்துக்கு எச்சரித்துள்ளார்கள்.

3057 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

.....பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்பப் புகழ்ந்தார்கள். பிறகு தஜ்ஜாலை நினைவு கூர்ந்து சொன்னார்கள்:

நான் அவனைக் குறித்து உங்களை எச்சரிக்கின்றேன். எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தன் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தினரை அவனைக் குறித்து எச்சரித்தார்கள். ஆயினும், நான் அவனைப் பற்றி வேறெந்த இறைத்தூதரும் தன் சமுதாயத்தாருக்குச் சொல்லாத ஒரு விபரத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன் என்பதையும் அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

நூல் : புகாரி 3057


தஜ்ஜால் என்று ஒருவன் வருவான். இவன் சில காரியங்களைச் செய்து காட்டுவான். அவன் தன்னைக் கடவுள் என்று சொல்வான்.  அவனை நம்பிவிடாதீர்கள். இவன் ஒன்றரைக் கண்ணுள்ளவனாக இருப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனைக் குறித்து எச்சரித்துள்ளார்கள்.

3338 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:

நான் உங்களிடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லப் போகிறேன் வேறெந்த இறைத்தூதரும் அதைத் தன் சமூகத்தாருக்குச் சொன்னதில்லை. அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். அவன் தன்னுடன் சொர்க்கம் நரகம் போன்றதைக் கொண்டு வருவான். அவன் எதை சொர்க்கம் என்று கூறுகின்றானோ அது தான் நரகமாக இருக்கும். நூஹ் அவர்கள் அவனைக் குறித்து தன் சமூகத்தாரை எச்சரித்ததைப் போன்று நானும் உங்களை (அவனைக் குறித்து) எச்சரிக்கின்றேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 3338


3439 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது :

நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை மக்களின் நடுவே அமர்ந்தபடி தஜ்ஜால் என்னும் மஸீஹை நினைவு கூர்ந்தார்கள். அப்போது, அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன். ஆனால், தஜ்ஜால் என்னும் மஸீஹ், வலது கண் குருடானவன். அவனது கண், (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருக்கும் என்று கூறினார்கள்.

புகாரி 3439


அம்ர் பின் ஸாபித் அல்அன்சாரீ (ரஹ்) அவர்கள், நபித்தோழர்களில் சிலர் தம்மிடம் கூறியதாகப் பின்வருமாறு என்னிடம் தெரிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைப் பற்றி எச்சரித்த அன்றைய தினத்தில், தஜ்ஜாலின் இரு கண்களுக்கிடையில் காஃபிர் (இறைமறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும். அவனது நடிவடிக்கையை வெறுக்கின்ற ஒவ்வொருவரும் அதை வாசிப்பார்கள்; அல்லது ஒவ்வோர் இறை நம்பிக்கையாளரும் வாசிப்பார்கள் என்றும், "அறிந்து கொள்ளுங்கள்: உங்களில் எவரும் இறப்பதற்குமுன் தம் இறைவனைப் பார்க்க முடியாது'' என்றும் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 5615


5620 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எல்லா இறைத்தூதர்களும் தம் சமுதாயத்தாரை மகா பொய்யனான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. அறிந்து கொள்ளுங்கள்: அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். ஆனால், உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அந்தப் பொய்யனுடைய இரு கண்களுக்கிடையே காஃப், ஃப, ரா (இறைமறுப்பாளன் - காஃபிர்) என்று (தனித் தனி எழுத்துகளில்) எழுதப்பட்டிருக்கும்.

Sunday, December 7, 2014

ஹதீஸ்கள் குர்ஆனிற்கு முரண்படுமா? - தொடர் 4

இந்த நூல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போது அப்பாஸ் அலி எழுதியது. தற்போது ஜமாஅத்திலிருந்து வெளிவந்தவுடன் இந்த நூலில் உள்ள கருத்துகளுக்கு முழுவதும் மாறுபடுவதாகவும், இனி இந்த நூலிற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

 

கருத்தைக் கவனித்து நிராகரிக்கப்பட்டவை

அறிஞர்கள் எத்தனையோ அறிவிப்பாளர் தொடர்களுக்கு தங்கள் புறத்திலிருந்து சரியானவை என்று தீர்ப்பு வழங்கிவிட்டு செய்தியில் உள்ள குறையினால் அதை ஏற்க மறுத்துள்ளார்கள். இந்த விதியைப் பல இடங்களில் கையாண்டுள்ளார்கள். இதற்கான சான்றுகள் பின்வருகிறது.

இமாம் இப்னு ஹஜர் :


ஜஃபர் பின் அபீதாலிப் அவர்கள் நோன்பு வைத்தவராக இரத்தம் குத்தி எடுத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரைக் கடந்து சென்ற போது இவ்விருவரும் நோன்பை முறித்துக் கொண்டார்கள் என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுப்பதில் நோன்பாளிக்கு சலுகை வழங்கினார்கள். அனஸ் நோன்பு வைத்த நிலையில் இரத்தம் குத்தி எடுப்பவராக இருந்தார்.

فتح الباري - ابن حجر  جزء 4 - صفحة 178 

ورواته كلهم من رجال البخاري الا أن في المتن ما ينكر لأن فيه أن ذلك كان في الفتح وجعفر كان قتل قبل ذلك

இப்னு ஹஜர் கூறுகிறார் : இதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் புகாரியின் அறிவிப்பாளர்கள். என்றாலும் இதில் மறுக்கப்பட வேண்டிய ஒன்று உள்ளது. ஏனென்றால் இந்நிகழ்வு மக்கா வெற்றியின் போது நிகழ்ந்ததாக வந்துள்ளது. ஜஃபர் மக்கா வெற்றிக்கு முன்பே கொல்லப்பட்டு விட்டார்.

நூல் : ஃபத்ஹுல் பாரீ பாகம் : 4 பக்கம் : 178

இமாம் நவவீ


நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் பள்ளிவாசலிலிருந்து (விண்ணுலகப் பயனத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவைக் குறித்துப் பேசினார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்னால் அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமில் தூங்கிக் கொண்டிருந்த போது (வானவர்களில்) மூன்று பேர் அவர்களிடம் வந்தார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : புகாரி (3570)


شرح النووي على مسلم جزء 2 - صفحة 209

وقد جاء فى رواية شريك فى هذا الحديث فى الكتاب اوهام أنكرها عليه العلماء وقد نبه مسلم على ذلك بقوله فقدم وأخر وزاد ونقص منها قوله وذلك قبل أن يوحى إليه وهو غلط لم يوافق عليه فان الاسراء أقل ما قيل فيه انه كان بعد مبعثه صلى الله عليه وسلم بخمسة عشر شهرا... ومنها أن العلماء مجمعون على أن فرض الصلاة كان ليلة الاسراء فكيف يكون هذا قبل أن يوحى إليه

இது தொடர்பாக ஷரீக் என்பார் அறிவிக்கும் இந்த ஹதீஸில் பல தவறுகள் உள்ளன. இவற்றை அறிஞர்கள் ஏற்க மறுத்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்னால் என்ற வார்த்தையைச் சுருக்கி பதிவு செய்ததன் மூலம் இமாம் முஸ்லிம் இந்த ஹதீஸில் உள்ள தவறைச் சுட்டிக் காட்டுகிறார். அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்னால் என்ற இந்த வார்த்தை தவறாக ஏற்பட்டு விட்டதாகும். இதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏùன்றால் விண்ணுலகப் பயணம் தொடர்பாகக் (கூறப்படும் கால அளவில்) மிகவும் குறைவாகச் சொல்லப்படுவது என்னவென்றால் நபி (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்டு 15 மாதங்களுக்குப் பிறகு தான் விண்ணுலகப் பயணம் செய்தார்கள் என்பதாகும். (ஆனால் விண்ணுலகப் பயணம் நடைபெறும் வரை வஹீ அருளப்படவில்லை என்று இந்த ஹதீஸ் கூறுகிறது) இன்னும் தொழுகை விண்ணுலகப் பயணத்தின் இரவின் போது தான் கடமையானது என்று அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளார்கள். அப்படியிருக்க நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ அறிவிக்கப்படுவதற்கு முன்னால் விண்ணுலகப் பயணம் எப்படி நடந்திருக்க முடியும்?

விண்ணுலகப் பயணத்திற்குப் பின்பு தான் வஹீ அருளப்பட்டது அது வரை நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ அருளப்படவில்லை. என்று இந்த ஹதீஸின் வார்த்தை உணர்த்துகிறது. இதனால் அறிஞர்கள் இதன் அறிவிப்பாளர் தொடரைப் பற்றிப் பேசாமல் இதன் கருத்து உறுதி பெற்ற விஷயத்திற்கு மாற்றமாக இருப்பதினால் இதை மறுக்கிறார்கள்.

Wednesday, August 22, 2012

ரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்

அல்குர்ஆன் வாழும் வேதம் மட்டுமல்ல!  அது ஆளும் வேதம் என்பதை ஒவ்வொரு ரமளானும் நிரூபித்துக் காட்டுகின்றது.  நாம் பாராத புதுப் புது முகங்கள்!  அதுவரை பள்ளி பக்கமே வாராதிருந்து இப்போது பள்ளியில் அடியெடுத்து வைத்த எத்தனையோ தோற்றங்கள்!

ஐந்து நேரத் தொழுகைகளில் ஆட்கள் அதிகரிப்பு! பள்ளியை விரிவாக்கம் செய்ய வேண்டுமோ என்று எண்ணும் அளவுக்கு பள்ளியில் மக்கள் நெருக்கமும் இறுக்கமும் ஏற்பட்டு பள்ளி நிரம்பி வழிந்தது.  இவ்வளவு சிறப்பும் எதனால்? அல்லாஹ் இம்மாதத்தில் குர்ஆனை இறக்கியருளியதால்!  குர்ஆன் இறங்கிய லைலத்துல் கத்ர் அம்மாதத்தில் அமைந்திருப்பதால்!

எல்லாம் வல்ல அல்லாஹ் அந்த இரவை ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவாக ஆக்கி வைத்தான்.  இம்மாதத்தில் பக­ல் நோன்பு நோற்று இரவில் நின்று வணங்குவோருக்கு அல்லாஹ் மன்னிப்பை வழங்குவதாக வாக்களித்தான்.  அதன் பலனை சிம்பா­க்காக வெளிப்படுத்தும் விதமாக சுவனத்தைத் திறந்து வைத்து நரகத்தை மூடினான்.

இதனால் கொஞ்ச நஞ்ச ஈமானிய உணர்வு உள்ளவர்களும் இம்மாதத்தில் அல்லாஹ் அளிக்கும் அரிய வாய்ப்பைப் பெற வேண்டி படையெடுத்து வந்தார்கள்.  உண்மையில் ரமளான் இவர்களை இரவிலும் பக­லும் சிறைப்படுத்தி வைத்திருந்தது.

அந்த வகையில் ரமளான் அவர்களைக் கைது செய்து நற்பண்புகளைப் போதித்த ஒரு சிறைச்சாலை!

நல்ல பாடங்களைப் படித்துக் கொடுத்த ஒரு பாடசாலை!

இறையச்சத்தில் ஊனமாகிப் போய் கிடந்த சகோதரர்களை இறையச்சத்தின் பக்கம் நடை பயில வைத்த நடை வண்டி!

இந்த ரமளான் மாதத்தில் பெற்ற பண்புகள் என்ன? பாடங்கள் என்ன? என்று பார்ப்போம்.

ஐந்து நேர ஜமாஅத் தொழுகைகளில் தவறாது கலந்து கொண்டோம்.  இரவு நேரங்களில் தொழுதோம்.  சப்தங்கள் அடங்கிப் போன ஸஹர் நேரத்தில் விழித்து பிரார்த்தனை செய்தோம்.

இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்பு தேடுவோராகவும் (இருப்பார்கள்) (அல்குர்ஆன் 3:17)

இரவில் குறைவாகவே தூங்கிக் கொண்டிருந்தனர்.  இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்பு தேடுவார்கள். (அல்குர்ஆன் 51:17-18)

Monday, June 25, 2012

பாவியாக்கும் பராஅத் இரவு

சூரியன் பொழுதை அடந்ததும் ஒரே பரபரப்பு! முஸ்லிம் வீடுகளில் பெண்கள் விழித்த உடனே மறக்காமல் கணவனிடம், கறி வாங்கிட்டு வாங்க என்று கூறுவதும், பாத்திஹா ஓத முன் கூட்டியே ஹஜரத்திடம் சொல்லி வர ஆளனுப்புவதுமாக வீடு முழுவதும் ஒரே பரபரப்பாகக் காட்சியளிக்கும்.

இது மாத்திரமா? மாலை நேரத்தில் ரொட்டி சுட்டு, வீடு வீடாகக் கொடுப்பதற்காக மாடிக் கட்டடங்கள் போல் அடுக்கப்பட்டிருக்கும். சிலர் நேர்ச்சைக்காக கோழிக் குழம்பு வைப்பார்கள்.

மஃக்ரிப் தொழுகை முடிந்ததும் பள்ளியிலேயே சூரத்துல் பாத்திஹா அமோகமாக ஆரம்பிக்கப்பட்டு விடும். ஹஜரத்தைக் கூட்டிச் செல்வதற்காக குழந்தைகளின் வரிசை ஒரு பக்கம். சில வீட்டினர் தங்கள் ரொட்டிகளை பள்ளிவாசலுக்கே அனுப்பி வைப்பார்கள். வழமைக்கு மாற்றமாக பள்ளிவாசலில் இறைச்சிக் குழம்பு வாடை மூக்கைத் துளைக்கும்.

தொழுகை முடிந்ததும் ஹஜரத் அவர்கள் வெளி வராண்டாவில் (வராண்டா இல்லாத ஊர்களில் உள் பள்ளியிலும்) யாசீன் ஓதுவார். எத்தனை தடவை தெரியுமா? மூன்று தடவை ஓத வேண்டுமாம். எதற்காக?

முதல் யாசீன் பாவ மன்னிப்பிற்காகவும்

இரண்டாவது யாசீன் கப்ராளிகளுக்கு ஹதியாவாகவும், நீண்ட ஆயுளுக்காகவும்

மூன்றாவது யாசீன் பரகத் கிடைக்க வேண்டியும் ஆக மொத்தம் மூன்று யாஸீன் ஓதப்படும்.


அது மட்டுமல்ல! வழமை போல் 8 மணிக்கு நடைபெறும் இஷா தொழுகை அன்றிரவு 10மணிக்கு நடைபெறும். காரணம் ஹஜரத்திற்கு வந்த பாத்திஹா ஆர்டர்களை முடித்து விட்டு, இரவு 8 மணிக்கு ஜமாஅத் தொழுகைக்கு வந்து சேர முடியாத நிலை. அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட தொழுகையை விட யாரோ உருவாக்கிய பராஅத் இரவு சிறந்ததாகப் போய் விட்டது, ஏழு வருடம் படித்த மார்க்க அறிஞருக்கு?

அந்நாளில் விசேஷத் தொழுகையும் நடைபெறும். எத்தனை ரக்அத்கள் தெரியுமா? 100ரக்அத்களாம். வேறு சில ஊர்களில் இதை விட அதிக ரக்அத்கள் கொண்ட தொழுகையும் உண்டு.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் இதைச் செய்யும் சுன்னத் வல் ஜமாஅத்தினரைச் சார்ந்த உலமாக்கள் குர்ஆன், ஹதீஸை விட மத்ஹபுகளுக்குத் தான் முன்னுரிமை வழங்குவார்கள். அந்த மத்ஹப் புத்தகங்களில் இவர்கள் செய்கின்ற இச்செயலுக்கு முரணாகக் கூறப்பட்டுள்ளது தான் வேடிக்கை. பராஅத் இரவு வணக்கத்தை மத்ஹப் ஆதரிக்கிறதா?

ரஜப் மாதத்தில் முதல் ஜும்ஆ இரவில் மஃரிபுக்கும் இஷாவிற்கும் இடையில் 12 ரக்அத் கொண்ட தொழுகையும், ஷஅபான் மாதத்தில் நடுப்பகுதி 15ஆவது இரவில் தொழும் 100ரக்அத்கள் கொண்ட தொழுகையும் இழிவாக்கப்பட்ட அனாச்சாரங்களாகும். இதை செய்யக் கூடியவர் பாவியாவார். இதை (தொழுகையை) தடுப்பது பொறுப்பாளர்கள் மீது கட்டாயமாகும்.

(இச்செய்தி ஷாபி மத்ஹபின் இஆனதுல் தாலிபீன் என்ற புத்தகத்தில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் இருக்கின்றது) மக்களிடம் அறிமுகமான ஷஅபான் பிறை 15ல் (இவர்களால் உருவாக்கப்பட்ட 100 ரக்அத்கள்) தொழும் தொழுகையும் ஆஷுரா தினமன்று தொழும் தொழுகையும் மோசமான அனாச்சாரங்களாகும். இது சம்பந்தமாக வரும் அனைத்து ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவைகளாகும்.

(இச்செய்தி ஷாஃபி மத்ஹபின் பத்ஹுல் முயீனில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.) பராஅத் இரவன்று பள்ளி வாசல்களிலும் வீதிகளிலும் கடை வீதிகளிலும் மின் விளக்குகளை வைப்பது (பித்அத்) அனாச்சாரமாகும் என்று ஹனஃபி மத்ஹபின் பஹ்ருர் ராஹிக் என்ற புத்தகத்தில் 5ஆம் பாகத்தில் 232ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

மத்ஹப் புத்தகங்களைப் பின்பற்றும் அறிஞர்கள் இதை ஏன் பின்பற்றுவதில்லை? இவர்கள் குர்ஆன், ஹதீஸையும் பின்பற்றவில்லை; மத்ஹபுகளையும் பின்பற்றவில்லை. மறுமையில் என்ன செய்யப் போகிறார்களோ? அல்லாஹ் இவர்களைக் காப்பாற்றுவானாக!

பராஅத் அன்று நோன்பு நோற்கலாமா?

ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராமாகும். ஏனெனில் ஷஅபான் பாதியாகி விட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ஆதாரப்பூர்வமாக இடம் பெற்றுள்ளது. (நூல்: ஷாஃபி மத்ஹபின் இயானதுத் தாலிபீன், பாகம்: 2, பக்கம்: 273)

*ஏன் இந்த சிறப்பு?*

அன்றைய தினம் இந்த அளவுக்கு என்ன தான் சிறப்பு என்கிறீர்களா? அன்று தான் ஷஅபான் பிறை 15ல் வரும் பராஅத் இரவாம். அந்த இரவைப் புனிதமிக்க இரவாக மாற்ற புதுப் புது பாத்திஹாக்களை உருவாக்கி, வித்தியாசமான முறையில் அலங்கரித்து வடிமைத்துள்ளார்கள் நவீன கால பராஅத் அறிஞர்கள்.

Wednesday, June 13, 2012

மிஃராஜும், தவறான நம்பிக்கைகளும்

மிஃராஜ் என்பது நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதமாகும். வேறு எந்த மனிதருக்கும், ஏன் வேறு எந்த நபிக்கும் கூட வழங்கப்படாத மாபெரும் அற்புதமாக இந்த விண்ணுலகப் பயணம் அமைந்துள்ளது.

மிஃராஜ் ஓர் அற்புதம்

மஸ்ஜிதுல் ஹராமிருந்து சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை அழைத்துச் சென்றவன் தூயவன் அவன் செவியுறுபவன் பார்ப்பவன். (17:1)

ஓர் இரவில் மஸ்ஜிதுல் ஹராம் என்ற மக்காவிருந்து ஜெருஸலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை அழைத்துச் சென்ற செய்தியை இவ்வசனத்தில் அல்லாஹ் கூறிக் காட்டுகிறான்.

ஒரேயொரு இரவில் இவ்வளவு பெரிய தொலைவைக் கடந்து செல்வது என்பது சாத்தியமற்ற செயல் என்று பலர் நினைத்தாலும் ரப்புல் ஆலமீனாகிய இறைவனுக்கு இது சாத்தியமானதே!

அழகிய தோற்றமுடைய வமைமிக்கவர் (ஜிப்ரில்) அதைக் கற்றுக் கொடுக்கிறார். அவர் (தெளிவான) அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார். பின்னர் இறங்கி நெருங்கினார். அது வில்ன் இரு முனையளவு அல்லது அதை விட நெருக்கமாக இருந்நது. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அவன் அறிவித்தான். அவர் பார்த்ததில் அவர் உள்ளம் பொய்யுரைக்கவில்லை. அவர் கண்டது பற்றி அவரிடத்தில் தர்க்கம் செய்கிறீர்களா?. (53:5-12)

ஜிப்ரில் என்னும் வானவரை நபி (ஸல்) அவர்கள் முதன் முதல் சந்தித்ததை இறைவன் மேற்கூறிய வசனங்களில் கூறுகின்றான். இந்தச் சந்திப்பு நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதல் வஹீ அறிவிக்கப்பட்ட போது நடந்தது.

இந்த வசனங்களைத் தொடர்ந்து வரும் வசனங்களில் ஜிப்ரீலை மற்றொரு முறை நபி (ஸல்) அவர்கள் சந்தித்ததாகக் கூறுகிறான்.

ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார். அங்கே தான் சொர்க்கம் எனும் தங்குமிடம் உள்ளது. அந்த இலந்தை மரத்தை மூட வேண்டியது மூடிய போது, அவரது பார்வை திசை மாறவில்லை; கடக்கவுமில்லை. தமது இறைவனின் பெரும் சான்றுகளை அவர் கண்டார். (53:13-18)

இந்தச் சந்திப்பு ஸித்ரத்துல் முன்தஹா என்னும் இடத்தில் நடந்ததாகவும் அந்த இடத்தில் தான் சுவர்க்கம் இருப்பதாகவும் கூறுகிறான். நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் என்னும் விண்வெளிப் பயணம் சென்றதைத் தான் இவ்வசனங்கள் கூறுகின்றன. இல்லையெனில் வானுலகில் உள்ள ஸித்ரத்துல் முன்தஹாவுக்கு அருகில் நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலைப் பார்த்திருக்க முடியாது. எனவே இதுவும் மிஃராஜ் பற்றியே கூறுகிறது.

(முஹம்மதே) உமக்கு நாம் காட்டிய காட்சியை குர்ஆனில் மனிதர்களுக்கு சோதனையாகவே ஆக்கியுள்ளோம். (17:60)

Wednesday, May 30, 2012

ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம்


மார்க்க விடயங்களில் மிகவும் பேணுதலாக நடக்கும் ஒவ்வொரு கொள்கைவாதிகளும் சறுக்கி விழுகின்ற, தோற்றுப்போகின்ற ஒரு சம்பவம் தான் இந்தத்திருமணம் ஆகும். மார்க்க சட்டதிட்டங்களை பேசுவார்கள் பேணுவார்கள்.ஆனால் இந்த ஒரு விடயத்தில் மட்டும் மௌனியாவார்கள்.ஒரு சுன்னத்தைப் பேணுவதற்காக பல ஹராமான காரியங்கள் அரங்கேறுவதை இன்றைய திருமணங்களில் காணலாம்.நிக்காஹ்வை பள்ளிவாசல்களில் மிகவும் எளிமையான முறையில் நடாத்தி ஒரு பயானையும் நிகழ்த்தி விட்டு அதற்குப் பிறகு நடப்பதுவோ முழுக்க முழுக்க அநாச்சாரமும், ஆடம்பரமும், அநியாயமுமாகும்.

திருமணத்தில் நடக்கின்ற ஆடம்பரங்கள்

• ஹோட்டல் (Hotel) அல்லது மண்டபத்துக்கான செலவுகள்

• மணமக்களின் ஆடை அலங்காரத்துக்கான செலவுகள்

• மணமக்கள் அமரும் மேடை அலங்காரம்

• வீடியோ போட்டோவுக்கான செலவுகள்

• அழைப்பிதலுக்கான செலவுகள்

• பெண் வீட்டாரிடம் சுமத்துகின்ற செலவுகள்

• இன்னும் பல அநாச்சார, அந்நிய கலாச்சார செலவுகள்

• இறுதியில் விரயமாகின்ற குப்பையில் தஞ்சமாகின்ற சாப்பாடு

இவையனைத்திற்கும் பல லட்ச ரூபாய்கள் வீணடிக்கப்படுகின்றன. இதனால் யாருக்கும் எந்தவித பிரயோசனமும் நன்மையும் கிடையாது.மாறாக இத்தகைய திருமணத்தின் மூலம் கடன்காரன் என்ற அந்தஸ்து மட்டுமே எஞ்சுகிறது.இந்த ஆடம்பரங்களும் அநாச்சாரங்களும் நாமே நம் மீது திணித்துக் கொண்டவை.இந்தப்பல லட்ச ரூபாய்களைக் கொண்டு எத்தனையோ வாழ வழியற்ற குடும்பங்களை வாழ வைக்க முடியும் என்பதை எவரேனும் சிந்தித்து பார்த்ததுண்டா? இதன் மூலம் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் நற்கூலியைப் பெற்றுக் கொள்ளலாம்.ஏழை எளியவர்களும் நமக்கு துஆ செய்வார்கள்.பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களையும் சற்று கவனித்துப் பாருங்கள்.

வீண்விரையம் செய்யாதீர்கள்! வீண்விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 6:141)

உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான். (அல்குர்ஆன் 7:31)

உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண்விரையம் செய்து விடாதீர்! விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17:26,27)

மணமகனுக்கு இவ்வநியாயத்தை எதிர்த்து போராட முடியாதா?

பெற்றோரையும் உற்றாரையும் எதிர்த்து நின்று தான் விரும்பும் பெண்ணை மணமுடிக்கத் துடிக்கும் இளைஞர்கள் அதனை சாதித்துக் கொள்வதைப் போல் இந்த அநியாயத்தையும், ஆடம்பரத்தையும், அக்கிரமத்தையும் எதிர்க்க, போராட ஏன் அவர்களுக்கு தைரியமில்லை? மணமகன் மட்டும் ஒற்றைக்காலில் நின்று அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து இவ்வநியாயத்தை எதிர்த்துப் போராடினால் நிச்சயம் இன்ஷா அல்லாஹ் பல லட்ச ரூபாய்கள் வீணாவதிலிருந்தும், கொடிய நரகிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.

திருமண விருந்து எப்படி அமைய வேண்டும்?

முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் திருமணங்களையும் அவர்களின் அங்கீகாரத்துடன் நடந்த திருமணங்களையும் நாம் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.ஸஹாபாக்களின் திருமணத்தின் போது அவர்கள் நபியைக் கூட அழைக்கவில்லை என்பதை பின்வரும் சம்பவம் மூலம் அறியலாம்.

Wednesday, April 25, 2012

முதுமை வரும் பின்னே! துஆ செய்வோம் முன்னே!

மனித வாழ்க்கை மூன்று பருவங்களைக் கொண்டது. பிறந்தவுடன் குழந்தைப் பருவத்தில் இருக்கின்றான். பால்குடி மறக்கின்ற வரை பெற்றோரை முழுமையாகச் சார்ந்திருக்கின்றான். வளர, வளர விடலைப் பருவம். அதன் பின் எதைப் பற்றியும் கவலைப்படாத, யாரையும் எவரையும் சார்ந்து நிற்காத இளமைப் பருவம். ஒரு நாற்பது வயது வரை அதை அவன் முழுமையாக அனுபவிக்கின்றான்.

அதற்குப் பின்னர், அது வரை ஏறுமுகத்தில் இருந்த அவனது பருவம், வீரியம், வீம்பு, வீராப்பு, திமிர், துணிச்சல், உடல் கட்டு, கூரிய பார்வை அனைத்தும் இறங்குமுகத்தில் ஆகி விடுகின்றது. வளர்பிறையாக இருந்தவன், தேய்பிறையாக மாறி விடுகின்றான்.

தலையில் நரை, பார்வையில், செவிப்புலனில் குறை, துள்ளிக் குதித்த காலம் போய் தளர்ந்த நடை போடும் காலம் அவனைத் தொற்றிக் கொள்கின்றது. இரு கால் பிராணியாக இருந்தவன் முக்கால் பிராணியாக மாறி விடுகின்றான்.

கண்ணில் கண்ணாடி! கையில் கைத்தடி!

ஆம்! கையில் கைத்தடி! கண்ணில் ஒரு கண்ணாடி! உளூச் செய்யும் விரல்களை வாயில் உள்ளே விட்டுப் பல் துலக்கிய காலம் போய் பல் செட்டைக் கழற்றி கையில் வைத்துக் கழுவுகின்றான்.

இரும்பு போன்ற எலும்புகளையும் உடைத்துத் தள்ளிய தாடைப் பற்கள், பொக்கையாகிப் போய் மென்மையான உணவுகளைக் கூட மென்று சாப்பிட முடியாத சூழ்நிலை! சோதனை!

இந்த முதுமையை விட்டு அவனால் தப்பிக்க முடியவில்லை. எத்தனையோ அறிவியல் புரட்சிகள், மருத்துவ சாதனைகள்! எவராலும் இந்த முதுமையை வெல்கின்ற, கொல்கின்ற மருந்தைக் கண்டுபிடிக்கவில்லை; கண்டுபிடிக்கப் போவதுமில்லை.

வளர்கின்ற வாலிபனின் தலையில் ஈயக்காட்டுக் கம்பியாக ஒரேயொரு நரைமுடி இழையோடிவிட்டால் அதைக் கண்ணாடியில் பார்த்துப் பார்த்து வேதனைப்படுகின்றான். தலையில் நரை, தன் வாலிபத்திற்கு ஒரு திரை என்று வெந்து நீருகின்றான். என்ன செய்ய முடியும்?

தான் இருக்கும் வயதை விட்டுத் தாண்டக் கூடாது என்றே நினைக்கின்றான். ஆனால் அவனது வயது, வாழ்நாள் அவனைக் கேட்காமலேயே தாண்டிச் செல்கின்றது. வயோதிகத்தின் பக்கம் வலுக்கட்டாயமாகத் தள்ளி விடுகின்றது. இதுவே மறுமை என்ற ஒன்று இருக்கின்றது என்பதை உணர்த்திக் கொண்டிருக்கின்றது. இதையே அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

நாம் யாருக்கு வாழ்நாள் அளித்தோமோ அவரைப் படைப்பில் இறங்குமுகமாக்குகிறோம். (இதை) அவர்கள் விளங்க மாட்டார்களா? அல்குர்ஆன் 36:68

பெற்றோரை விரட்டுகின்ற பிள்ளைகள்

மனிதன் வயது ஏற, ஏற நடமாட்டம் நிற்கின்றது. படுக்கையில் விழுந்து விடுகின்றான். சிறுநீர் பிரிவது அவனுக்குத் தெரிவதில்லை. மலம் கழிவதும் அவனுக்குப் புரிவதில்லை. இந்நிலையை திருக்குர்ஆன் படம்பிடித்துக் காட்டுகின்றது.

Sunday, April 22, 2012

அர்த்தமுள்ள இஸ்லாம் - தொடர் 5 - PJ

சுயமரியாதைக்குப் பங்கம் ஏற்படுத்துதல்

கடவுளை நம்பி அவனை வழிபடச் சொல்லும் மதவாதிகள் படிப்படியாக தங்களையும் கடவுள் தன்மை பெற்றவர்கள் என அப்பாவிகளை நம்ப வைத்து, மக்களைத் தங்களின் கால்களில் விழுந்து வழிபடச் செய்து வருகின்றனர்.

மானத்தோடும், மரியாதையோடும் வாழ வேண்டிய மனிதன், தன்னைப் போலவே மனிதனாக உள்ள மற்றொருவனுக்குத் தலை வணங்கும் நிலையை மதங்கள் தான் ஏற்படுத்தி விட்டன.

எனவே மதங்கள் யாவும் அர்த்தமற்றவை என்பதும் சிந்தனையாளர்களின் வாதம்.

இஸ்லாத்திற்கு எதிராக இந்த விமர்சனத்தையும் செய்ய முடியாது. ஏனெனில் மனிதனை மனிதன் வழிபடுவதை இஸ்லாம் எதிர்க்கும் அளவுக்கு சீர்திருத்த இயக்கங்கள் கூட எதிர்த்ததில்லை.

முஸ்லிம்கள் தங்களின் உயிரை விடவும் மேலாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிக்கின்றனர்.

எந்த மதத்தவரும், கட்சியினரும், இயக்கத்தினரும் தமது தலைவர்களை நேசிப்பதை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம்கள் அதிகம் நேசிக்கின்றனர்.

அப்படி இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம்களில் யாரும் வணங்குவதில்லை. அவர்களுக்காகச் சிலை வடிக்கவில்லை. அவர்களை ஓவியமாகத் தீட்டவில்லை. தங்களுக்கு வழிகாட்ட வந்த தலைவர் என்று மதிக்கிறார்களே தவிர அவர்களை முஸ்லிம்கள் ஒருக்காலும் வழிபட மாட்டார்கள்.

தம்மையும் கூட வழிபடக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்து சென்று விட்டார்கள்.

எனக்கு இறைவனிடமிருந்து செய்தி வருகிறது என்பதைத் தவிர மற்ற படி நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான்' என்று அழுத்தம் திருத்தமாக அவர்கள் கூறினார்கள். அவ்வாறு கூறவேண்டும் என்று இறைவனே தமக்குக் கட்டளையிட்டதாகக் கூறினார்கள்.

இந்தக் கட்டளையை திருக்குர்ஆன் 18:110, 41:6 ஆகிய வசனங்களில் காணலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மண விழாவுக்குச் சென்றார்கள். அங்குள்ள சிறுமிகள் பாட்டு பாடிக் கொண்டிருந்தனர். நபிகள் நாயகத்தைக் கண்டதும் 'நாளை நடப்பதை அறியும் நபி நம்மிடம் இருக்கிறார்' என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இவ்வாறு கூறாதே! முன்னர் பாடியதையே பாடு' என்றார்கள்.  நூல்: புகாரி 4001, 5147

Thursday, April 5, 2012

தேன் கூடும் திருமறைக் கூற்றும் - எம். ஷம்சுல்லுஹா

இன்று நிலத்தடி நீர் மிக மிக அரிதாகி விட்டது. காரணம் மணல் கொள்ளை! ஆற்றுப் படுகையில் இருக்கும் அடுக்கடுக்கான மணல் தட்டுக்கள் தான் நிலத்தடி நீரின் பிடிமானங்களாக இருக்கின்றன. ஆற்றுப்படுகையில் நடக்கும் அபரிமிதமான, அளவுக்கதிகமான மணல் கொள்ளையின் காரணமாக அந்த மணற் தட்டுக்கள் பறி போய் நிலத்தடி நீர் சேமிப்பாகவில்லை.

கொள்ளையடிக்கப்படும் மணல் எங்கு செல்கின்றது? மனிதர்கள் கட்டுகின்ற மாளிகைகளுக்கு! அறிவியல் விலங்கான மனிதன் ஒரு வீட்டைக் கட்டுகின்ற போது, இன்னொரு வளத்தை அழித்து, தன்னுடைய வீட்டைக் கட்டிக் கொள்கின்றான்.

பறவைகள் சில குச்சிகளை வைத்துக் கட்டுகின்றன. எறும்பு, கரையான் போன்றவை மண்ணை வைத்து வீட்டை அமைத்துக் கொள்கின்றன. இவையெல்லாம் கூடு கட்டுகையில் தங்கள் இனத்திற்கும், மற்றவர்களுக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மனிதன் மட்டுமே தான் கட்டுகின்ற வீட்டுக்காக மனித இனத்திற்கும், அடுத்த இனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றான்.

ஆனால் அல்லாஹ்வுடைய படைப்பின் அற்புதமான இந்தத் தேனீ, யாருக்கும் எதற்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் தன் மெழுகுக் கூட்டிற்கான மூலத்தை எப்படிப் பெற்றது? யார் கொடுத்தது? தேனீக்களில் பாட்டாளித் தேனீ, ஆண் தேனீ, ராணித் தேனீ என்று மூன்று வகைகள் உள்ளன. இதில் இளைய பாட்டாளித் தேனீ அல்லது பணியாளர் தேனீ தங்களின் அடிவயிற்றுக் கிடங்கில் அமையப் பெற்றிருக்கும் மெழுகுச் சுரப்பிகளில் இருந்து மெழுகைச் சுரக்கின்றன. இவ்வாறு சுரக்கப்பட்ட மெழுகை, தேனீக்கள் மென்று குழைத்து இந்தத் தேனடையை உருவாக்குகின்றன.

மென்று, குழைத்து, கட்டப்படுகின்ற தேன் கூட்டின் விதவிதமான அறைகளின் சுவர்கள் நன்கு காய்ந்து கனமாகி விடுகின்றன. ஆனால் அதே சமயம், 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பமூட்டப்பட்டால் நெகிழ்ச்சியடையும் நிலையையும், 145 டிகிரி அளவுக்கு வெப்பமூட்டப்பட்டால் உருகும் நிலையையும் அடைந்து விடுகின்றன.

இங்கு தான், கூடுகளைக் கட்டிக் கொள் (16:68) என்று அல்லாஹ் குறிப்பிடும் கட்டளையைச் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். மனிதன் தான் கட்டும் வீட்டிற்காக பெரிய சிமெண்ட் கிடங்கை வெளியில் வைத்திருக்கின்றான். கட்டடத்திற்கு சிமெண்ட் மட்டும் போதாது. ஜல்லி, இரும்பு, செங்கல், மணல், தண்ணீர் என பல மூலப் பொருட்கள் தேவைப்படுகின்றன.

Saturday, March 31, 2012

ஏப்ரல் ஃபூல்: ஏமாற்றாதீர்கள்! ஏமாறாதீர்கள்!!

ஏப்ரல் 1 என்றாலே ஏமாற்றுதல் என்று பொருள் மாறும் அளவிற்கு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி மாறிவிட்டது.
அன்று உலகம் முழுவதும் ஒருவர் மற்றவரிடம் நம்பவைத்து பொய் சொல்லி, நம்பிய  பிறகு ஏமாற்றி, அவரை பார்த்து மற்றவர்கள் ஏளனமாகச் சிரித்து மகிழ்வதை  வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
இவர்கள் பிறரை ஏப்ரல் ஃபூல் – முட்டாளாக்கி  இழிவுபடுத்துவதில் அளாதி இன்பம் அடைக்கின்றனர்.
April Fool’s Day அல்லது All Fool’s Day என்ற ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஏப்ரல் ஃபுல் க்கு பல வரலாறுகள் சொல்லப்படுகின்றது
முஸ்லிம்களில் சிலரும் அன்ற தினத்தில் நண்பர்களை ஏமாற்றி ஏப்ரல் ஃபூல் – முட்டாளாக்கி மகிழ்கின்றனர்.
எனவே நாம், நமக்கு வழிகாட்டியாக வந்த குர்ஆனையும், ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீமையைப் பற்றி அறிந்து, அதிலிருந்து விலகவும், நேர்வழி பெறவும் முயற்சிக்க வேண்டும்.

ஹோலி கலாச்சாரம்

பொதுவாக மாணவர்கள் ஏப்ரல் மாதத்தில் பிறருடைய மேலாடைகள் மீது மையைத் தெளித்து அசிங்கப் படுத்துகின்றார்கள். இதை ஏப்ரல் ஃபூலின் ஓர் அடையாளமாக நினைத்து செய்கின்றனர். மையைத் தெளிக்கும் இந்த நடைமுறையானது ஹோலி பண்டிகையின் போது நிறங்களை பரஸ்பரம் வீசிக் கொள்ளும் இந்துக்களின் ஒரு பிரிவினருடைய கலாச்சாரத்துடன் ஒத்துப் போகின்றது. எனவே மாற்று மதக் கலாச்சாரம் என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் இதைக் கைவிட வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பிற சமுதாயத்தின் சம்பிரதாயங்களை (கலாச்சாரத்தை) ஏற்படுத்திக் கொள்கிறானோ அவனும் அவர்களைச் சார்ந்தவனே! (நூல்: அபூதாவூத் 3512)

பொய்க் கலாச்சாரம்

இதைத் தவிர மக்களில் பலர் மற்றவர்களை ஏப்ரல் ஃபூல் (முட்டாள்) ஆக்குவதற்காக பொய் பேசுகின்றார்கள். இது பெருங்குற்றம் ஆகும். பொய் சொல்லி தீமை செய்து கொண்டிருப்பதன் காரணமாக அல்லாஹ்வின் அருளும் அன்பும் இழந்து அவனது கோபத்திற்கு ஆளாகி விடுகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழி வகுக்கும். தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டே இருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் பெரும் பொய்யன் என்று பதிவு செய்யப்பட்டு விடுவார். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி) நூல்: புகாரி 6094
ஆக இந்தப் பொய்யர்கள் அதிகமான தீமைகளைச் செய்து நரகத்தை அடைகின்றனர். எனவே நாம் பொய் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

Thursday, March 29, 2012

எங்கே மனக்கட்டுப்பாடு? - எம். சஹானா

மனிதன் ஒழுக்கமிக்கவனாக, நேர்மையாளனாக வாழ்வதற்கு மனக்கட்டுப்பாடு மிக அவசியமாகும். ஆனால் இன்றைய நவீன உலகில் மனக்கட்டுப்பாடு என்றால் என்ன என்று கூட தெரியாமல் வாழ்பவர்கள் பலர்.

மனக்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய பல விஷயங்களில் நாம் அலட்சியமாக இருந்து பாவங்களை சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம். மனக்கட்டுப்பாட்டுடன் இருந்திருந்தால் இவ்வுலகிலும் நன்மை பெற்று மறுஉலகிலும் நாம் நன்மையை ஈட்டியிருக்க முடியும்.

நாம் எதில் மனக்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

கோபம்


உணர்வுகள் மிதிக்கப்படும் போது, உரிமைகள் பறிக்கப்படும் போது நியாயங்கள் மீறப்படும் போது ஆத்திரமும் கோபமும் ஆர்ப்பரித்து எழுவது இயற்கை தான். இது போன்ற காரணத்திற்கு மட்டும் தான் கோபம் வருகிறதா? இல்லை. இதுவல்லாத பல காரணங்களுக்காக நாம் எல்லை மீறிக் கோபப்படுகிறோம்.

ஒரு சிறிய வார்த்தைக்காகக் கோபப்பட்டு அதன் காரணமாக பகை உணர்வை மலை போல் உயர்த்தி விடுகிறோம். இதனால் அன்போடும் பாசத்தோடும் இருந்தவர்கள் பாம்பும் கீறியும் போல் மாறி விடுகிறார்கள். நல்ல நட்பு சிதறி, அன்புள்ளங்கள் தீக்கங்குகளாக மாறிவிடுகின்றன.

தேவையில்லாமல் கோபப்பட்டு பகை உணர்வை ஏற்படுத்துபவர்களுக்கு அழகிய ஒரு போதனையை நபிகளார் கூறியுள்ளார்கள்.

மக்களைத் தனது பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (6114)

கோபம் ஏற்படும் போது எவ்வளவு பெரிய மனிதர்களும் தன் கட்டுப்பாட்டை இழந்து விடுகிறார்கள். இதனால் விபரீதமான முடிவுக்குச் சென்று பின்னர் வருத்தப்படுவார்கள். இவர்கள் உண்மையிலேயே பெரிய மனிதர்கள் தான் என்றால் முதலில் கோபம் வரும் போது அதைத் தடுத்து நிறுத்தி சமநிலைக்குக் கொண்டு வர வேண்டும்.

Wednesday, March 28, 2012

கல்வியைத் தேடி..

மற்ற மதங்களை விட இஸ்லாம் பல வகைகளில் சிறப்புற்று விளங்குகிறது. மதங்கள் பெரும்பாலும் ஆன்மீகத்தை மட்டுமே போதிக்கின்றன. உலக விவகாரங்களில் அவை தலையிடுவதில்லை. ஆனால் இஸ்லாம் மட்டும் தான் ஆன்மீகத்தையும் உலகத்தையும் இணைத்து மனிதனுக்கு அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தெளிவான வழியைக் காட்டுகிறது.

படைத்தவனை வணங்க வேண்டும் என்று கூறும் இஸ்லாம் உலகத்தையும் சிந்தித்து, அதில் இறைவன் வைத்திருக்கும் ஆற்றலை விளங்கிக் கொள்ள வேண்டும் என்று பணிக்கிறது. 

நல்லவர்களைப் பற்றித் திருக்குர்ஆன் பேசும் போது...
 
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன.

அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! (என்று கூறுவார்கள்)  (அல்குர்ஆன் 3:190, 191)


அல்லாஹ்வை நினைப்பவர்கள், வானங்கள், பூமி, மற்றும் இரவு பகல் மாறி மாறி வருவது  போன்றவற்றில் உள்ள சான்றுகளைச் சிந்தித்துப் பார்ப்பார்கள் என்று இந்தத் திருக்குர்ஆன் வசனம் கூறுகின்றது. ஆன்மீகத்தை மட்டும் இறைவன் கூறவில்லை; உலக விஷயங்களைப் பற்றியும் சிந்திக்கச் சொல்கிறான் என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்துகிறது.

Wednesday, March 21, 2012

அறியாமைக் காலம் - இப்னு தாஹிரா

இவ்வுலகைப் படைத்து அதில் ஏராளமான இன்பங்களையும் வைத்த இறைவன், மனிதன் ஒரு ஒழுங்கு முறையோடு வாழ வேண்டும் என்பதற்காக இறைத்தூதர்களையும் வேதங்களையும் வழங்கினான். 

அனுப்பிய இறைத்தூதர்கள் காட்டிய வழியின்படி நடப்பவர்கள் தான் மறுமை நாளில் வெற்றியடைவார்கள் என்றும், அதற்கு மாற்றமாக நடப்பவர்கள் நரகில் நிரந்தரமாகக் கடும் வேதனை அனுபவிப்பார்கள் என்றும் எச்சரித்துள்ளான்.

இந்த அடிப்படையில் இறுதித்தூதராக நபி (ஸல்) அவர்களை இவ்வுலகத்திற்கு அனுப்பி வைத்தான். அறியாமைக் காலம் என்று சொல்லப்படும் காலத்தில் வாழ்ந்த அந்த மக்களிடம் இருந்த மூட நம்பிக்கைகளையும் தவறான கொள்கைகளையும் நீக்கி, அறிவொளி பாய்ச்சி, அழகிய வழிமுறையை நபி (ஸல்) அவர்கள் அம்மக்களுக்கு வழங்கிச் சென்றார்கள்.

நபிகளாரின் வழிமுறைகளைப் பின்பற்றி வந்த நன்மக்கள் காலம் உருண்டோட உருண்டோட கொள்கைப் பிடிப்பு தளர்ந்து, ஷைத்தானின் வழிமுறைகள் ஊடுறுவத் தொடங்கி, இன்று அறியாமைக் காலப் பழக்க வழக்கங்கள் இஸ்லாமியர்களின் வாழ்வில் வணக்கமாக மாறி விட்டது.

நபிகளார் எந்தப் பழக்கத்தை ஒழிக்க வந்தார்களோ அதே பழக்கம் இன்று இஸ்லாமியர்களிடம் மதிப்பு மிக்க காரியமாகக் கருதப்படுகிறது. இவ்வாறு நபிகளார் ஒழித்த எந்தெந்தக் காரியங்கள் இன்று நம்மிடம் ஊடுறுவி உள்ளன என்பதையும், அறியாமைக் காலப் பழக்கங்கள் எவை என்பதையும் இந்தத் தொடரில் பார்க்கலாம்.

1. வீணானதை நம்புதல்

திருக்குர்ஆன் கூறும் நம்பிக்கையை விட்டு விட்டு, வீணான அசத்தியமான கருத்துக்களை நம்பக் கூடியவர்களாக அன்றைய அறியாமைக் கால மக்கள் இருந்ததாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.

எனக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன். அவன் வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அறிகிறான். வீணானதை நம்பி அல்லாஹ்வை மறுப்போரே நஷ்டமடைந்தவர்கள்  என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 29:52)

படைத்தவனை நம்பும் விஷயத்திலும் கூட அவர்கள் தவறான நம்பிக்கையே கொண்டிருந்தார்கள் என்று திருக்குர்ஆன் கூறிவிட்டு, படைத்தவனை நெருங்குவதற்கு இன்னொரு புரோகிதர் தேவை என அவர்கள் நம்பி, அவர்களிடம் பிரார்த்தனை செய்யும் வழக்கம் கொண்டிருந்ததையும் தெளிவுபடுத்துகிறது.
 
அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள் என்றும் கூறுகின்றனர். வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன் என்று கூறுவீராக!

(முஹம்மதே!) உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை உம்மிடம் நாம் அருளியுள்ளோம். எனவே வணக்கத்தை உளத் தூய்மையுடன் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனை வணங்குவீராக!

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 39:2,3)


2. தக்லீத் (கண்மூடிப் பின்பற்றுதல்)

மார்க்க விஷயங்களில் ஒன்றைச் செய்ய வேண்டும், ஒன்றைச் செய்யக் கூடாது என்பதற்கு முன்னோர்கள் கூறிய கருத்தையே ஏற்றுக் கொள்வார்கள். அந்த முன்னோர்கள் செய்தது சரியா? தவறா? அது இறைவனின் விருப்பத்திற்குரியதா? என்றெல்லாம் அறியாமைக் கால மக்கள் சிந்திக்க மாட்டார்கள்.

Monday, March 19, 2012

பொய் பேசுபவனின் மறுமை நிலை - பாத்திமா ஷஹானா

சமுரா இப்னு ஜுன்துப் (ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் 'உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?' என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம் அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:

இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பிஇ 'நடங்கள்' என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். - அல்லது பிளந்தார் - பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆம்விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான் 'அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?' என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம் செல்லுங்கள் என்றனர்.

அப்படியே நாங்கள் நடந்து அடுப்பு போன்று (மேல் பகுதி குறுகலாகவும் கீழ்ப்பகுதி விசாலமாகவும்) இருந்த (பொந்து) ஒன்றின் அருகில் வந்தோம். அதனுள்ளிருந்து (மனிதர்களின்) கூச்சலும் ஆரவாரமும் கேட்டது. உடனே நாங்கள் அதற்குள்ளே எட்டிப் பார்த்தோம். அங்கு ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக இருந்தார்கள். அங்கு அவர்களுக்குக் கீழேயிருந்து நெருப்பு ஜுவாலை ஒன்று (மேலே) வருகிறது. அந்த ஜுவாலை அவர்களை அடையும்போது அவர்கள் ஓலமிடுகிறார்கள்.

நான் (என்னுடன் வந்த) அவ்விரு(வான)வரிடம் 'இவர்கள் யார்?' என்று கேட்டேன். அவர்கள் 'செல்லுங்கள் செல்லுங்கள்' என்று என்னிடம் கூறினர்.
 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner