Thursday, March 29, 2012

எங்கே மனக்கட்டுப்பாடு? - எம். சஹானா

மனிதன் ஒழுக்கமிக்கவனாக, நேர்மையாளனாக வாழ்வதற்கு மனக்கட்டுப்பாடு மிக அவசியமாகும். ஆனால் இன்றைய நவீன உலகில் மனக்கட்டுப்பாடு என்றால் என்ன என்று கூட தெரியாமல் வாழ்பவர்கள் பலர்.

மனக்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய பல விஷயங்களில் நாம் அலட்சியமாக இருந்து பாவங்களை சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம். மனக்கட்டுப்பாட்டுடன் இருந்திருந்தால் இவ்வுலகிலும் நன்மை பெற்று மறுஉலகிலும் நாம் நன்மையை ஈட்டியிருக்க முடியும்.

நாம் எதில் மனக்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

கோபம்


உணர்வுகள் மிதிக்கப்படும் போது, உரிமைகள் பறிக்கப்படும் போது நியாயங்கள் மீறப்படும் போது ஆத்திரமும் கோபமும் ஆர்ப்பரித்து எழுவது இயற்கை தான். இது போன்ற காரணத்திற்கு மட்டும் தான் கோபம் வருகிறதா? இல்லை. இதுவல்லாத பல காரணங்களுக்காக நாம் எல்லை மீறிக் கோபப்படுகிறோம்.

ஒரு சிறிய வார்த்தைக்காகக் கோபப்பட்டு அதன் காரணமாக பகை உணர்வை மலை போல் உயர்த்தி விடுகிறோம். இதனால் அன்போடும் பாசத்தோடும் இருந்தவர்கள் பாம்பும் கீறியும் போல் மாறி விடுகிறார்கள். நல்ல நட்பு சிதறி, அன்புள்ளங்கள் தீக்கங்குகளாக மாறிவிடுகின்றன.

தேவையில்லாமல் கோபப்பட்டு பகை உணர்வை ஏற்படுத்துபவர்களுக்கு அழகிய ஒரு போதனையை நபிகளார் கூறியுள்ளார்கள்.

மக்களைத் தனது பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (6114)

கோபம் ஏற்படும் போது எவ்வளவு பெரிய மனிதர்களும் தன் கட்டுப்பாட்டை இழந்து விடுகிறார்கள். இதனால் விபரீதமான முடிவுக்குச் சென்று பின்னர் வருத்தப்படுவார்கள். இவர்கள் உண்மையிலேயே பெரிய மனிதர்கள் தான் என்றால் முதலில் கோபம் வரும் போது அதைத் தடுத்து நிறுத்தி சமநிலைக்குக் கொண்டு வர வேண்டும்.



அடிக்கடி கோபப்படும் மனிதருக்கு நாம் செய்ய வேண்டிய முதல் உபதேசம், கோபப்படாதே! என்பது தான். இவ்வாறு தான் நபிகளார் ஒரு மனிதருக்கு தொடர்ந்து அறிவுரை கேட்டபோது. கோப்பப்படாதே என்றே அறிவுரை வழங்கினார்கள்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கடம், எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். நபி (ஸல்) அவர்கள், கோபத்தைக் கைவிடு என்று (அறிவுரை) கூறினார்கள். அவர் பல முறை கேட்ட போதும் நபி (ஸல்) அவர்கள் கோபத்தைக் கைவிடு என்றே சொன்னார்கள்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (6116)

நல்ல மனிதர்களைப் பற்றி திருக்குர்ஆன் கூறும் போது, அவர்கள் கோபத்தை மென்று விழுங்குவார்கள் என்று குறிப்பிடுகிறது.

அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல் வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன் 3:134)

கோபத்தை உண்டாக்கும் வண்ணம் யாரும் நடந்து கொண்டால் அவர்களை மன்னித்து, கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

உங்களுக்கு எந்தப் பொருள் கொடுக்கப்பட்டாலும் அது இவ்வுலக வாழ்க்கையின் வசதிகளே. அல்லாஹ்விடம் இருப்பதே நம்பிக்கை கொண்டு தம் இறைவனையே சார்ந்திருப்போருக்கும், பெரும் பாவங்களையும், வெட்கக்கேடான வற்றையும் தவிர்த்துக் கொள்வோருக்கும், கோபம் கொள்ளும் போது மன்னிப்போருக்கும், தமது இறைவனுக்கு பதிலளித்து தொழுகையை நிலை நாட்டி தமது காரியங்களில் தமக்கிடையே ஆலோசனை செய்வோருக்கும் நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவோருக்கும், தமக்கு அநீதி இழைக்கப்பட்டால் (இறைவனிடம்) உதவி தேடுவோருக்கும் சிறந்ததும் நிலையானதுமாகும்.  (அல்குர்ஆன் 42:36-39)

கோபத்தை மனிதர்களிடம் ஷைத்தான் ஏற்படுத்துகின்றான். இவ்வாறு தேவையில்லாமல் கோபத்தை ஏற்படுத்தினால் ஷைத்தானிடமிருந்து அந்நேரத்தில் பாதுகாப்பு தேடிக் கொள்ளுங்கள்.

நபி (ஸல்) அவர்கள் அருகில் இரண்டு பேர் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டார்கள். அப்போது நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்தோம். அவர்கள் ஒருவரது முகம் சிவந்து விட்டிருக்கக் கோபத்துடன் தம் தோழரைத் திட்டிக் கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும். அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் (சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என்பதே அச்சொல்லாகும் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: சுலைமான் பின் ஸுரத் (ரலி), நூல்: புகாரி (6115)

செல்வம் செல்வம் வாழ்க்கைக்குத் தேவை தான். அதற்காக வாழ்க்கையே செல்வத்தைத் தேடுவது தான் என்று இருந்துவிடக் கூடாது. வாழ்க்கையில் ஒரு கட்டுப்பாடு இல்லாமல் இருந்தால் நம் ஆசையே பேராசையாக உருவெடுத்து நம்மை அழிவுக்குக் கொண்டு போய் சேர்த்து விடும்.

பொருளாசையில் பெண்கள் கட்டுப்பாடு இல்லாத காரணத்தால் கணவன்மார்களைக் கடனாளிகளாக,  வட்டிக் கடைக்கு ஏறி இறங்கக் கூடியவர்களாக மாற்றி விடுகிறார்கள். காரணம் ஆசைக்கு ஒரு கட்டுப்பாடு இல்லாத காரணம் தான்.

ஆடம்பர உலகுக்கு அடிமையாகி, ஆடம்பரப் பொருளை அடைய வேண்டும் என்ற பேராசை தான் பொரும்பாலும் மக்களை கடனாளியாக மாற்றுகிறது. எனவே இவற்றில் ஒரு கட்டுப்பாட்டுடன் இருக்கப் பழகினால், இருப்பதைக் கொண்டு போதுமாக்கிக் கொண்டால் இரு உலகிலும் நன்மையை அடையலாம்.

மனிதர்கள் பண விஷயத்தில் எவ்வளவு பேராசைக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு நபிகளாரின் உதாரணம் மிக அழகிய சான்றாகும்.

அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் மக்காவில் சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) உரையாற்றும்போது சொல்லக் கேட்டேன்: மக்களே! நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: ஆதமின் மகனுக்கு (-மனிதனுக்கு) ஒரு நீரோடை நிறைய பொன் வழங்கப்பட்டாலும் அதனுடன் இரண்டாவது நீரோடை கிடைக்க வேண்டுமென்று அவன் விரும்புவான். இரண்டாவது நீரோடை அவனுக்கு வழங்கப்பட்டால் அதனுடன் மூன்றாவது கிடைக்க வேண்டுமென்று அவன் விரும்புவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (-மரணத்தை)த் தவிர வேறெதுவும் மூடாது. மேலும், (மேற்கண்ட பேராசை போன்ற பாவங்கருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டு விட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்பாஸ் பின் ஸஹ்ல், நூல்: புகாரி (6438)

நிரந்தரமாக ஓடும் தண்ணீராக தங்கத்தைக் கொடுத்தாலும் இன்னொன்று வேண்டும் என்று ஆசைப்படும் மனிதர்கள் இன்று நிறைய இருக்கிறார்கள். இருப்பதைப் பொருந்திக் கொண்டு, மார்க்கம் அனுமதித்த வழிகளில் பொருளை ஈட்டுபவர்கள் மிக மிகக் குறைவு. வாழ்க்கையில் ஒரு கட்டுப்பாட்டுடன் வாழாததால் தான், வருமான வழிகள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை; பணம் கிடைத்தால் போதும் என்று மார்க்கம் தடை செய்த லாட்டரி, மது, வட்டி போன்ற தொழில்களில் முஸ்லிம்கள் ஈடுபடுகிறார்கள்.

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று சொல்வார்கள். இந்தக் கொள்கையில் உறுதியுள்ளவர்கள் எத்தனை பேர்?

(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (6446) 

திருமணம்


திருமணம் என்பது மனிதர்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டியவைகளில் ஒன்று. இது மதம், சாதி என்று இல்லாமல் அனைவர் வாழ்விலும் பின்பற்ற வேண்டிய ஒன்றாகும். குறிப்பிட்ட வயதை அடைந்து விட்டால் ஆணாக இருந்தாலும் சரி! பெண்ணாக இருந்தாலும் சரி! அவர்களுக்கு ஆசை உணர்வு வந்து விடும். அதை தீர்ப்பதற்குத் திருணம் அவசியமாகத் தேவைப்படுகிறது.

இன்று திருமணம் செய்யாமல் துறவிகளாக இருப்பவர்கள் பல பெண்களின் கற்பைச் சூறையாடும் துரோகிகளாக மாறுகின்றனர். கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டியவர்களே தறிகெட்டு ஓடுகின்றனர்.

பருவ வயதை அடையும் ஆண்களும் பெண்களும் தமக்குத் தாமே கட்டுப்பாடுகளை போட்டுக் கொள்ள வேண்டும். பருவ வயது என்பது சறுகி விடுவதற்கு ஏற்ற வயதாகும். அனுமதிக்கப்பட்ட முறையில் இன்பத்தைப் பெறும் வரை கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.

ஆனால் இன்று விஞ்ஞான வளர்ச்சியின் பரிசான செல்போன், கட்டுப்பாட்டை சீர்குலைக்கும் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. இளைஞனும் இளைஞியும் ஆபாச வார்த்தைகளை பரிமாறிக் கொள்ளும் கருவியாக செல்போன் பயன்படுகிறது.

தடுமாறும் வயது, இதில் தடம் புரளும் உள்ளம் என்று சொல்வதைப் போன்று இந்த வயதில் தான் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். ஒரு நெருங்கிய உறவினராக உள்ள ஆணுடன் கூட ஒரு பெண் தனித்து இருப்பதை நபிகளார் தடை செய்ததன் காரணம் தடம் புரண்டு விடக் கூடும் என்பதால் தான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன் என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகல் ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள் என்று கூறினார்கள்.  அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: புகாரி (5232)

இதைப் போன்று தெருக்களில் இருக்கும் போது மனக்கட்டுப்பாட்டுடன் பார்வையைத் தாழ்த்தி இருக்குமாறும் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.

நீங்கள் சாலைகல் அமர்வதைத் தவிருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை. அவை தாம், நாங்கள் பேசிக் கொள்கின்ற எங்கள் சபைகள் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும் போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள் என்று கூறினார்கள். மக்கள், பாதையின் உரிமை என்ன? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், (அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்குப் பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும் என்று பதிலத்தார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி (2465)

பார்ப்பதும், அதற்காக நடப்பதும், தொடுவதும் கூட விபச்சாரம் என்று கூறி இதிலும் கவனமாக இருங்கள் என்று நபிகளார் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
 
விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி (6243), முஸ்லிம்(5164)


எனவே இளைஞர்களும் இளைஞிகளும் திருமணம் முடியும் வரை இஸ்லாம் கூறும் மனக்கட்டுப்பாட்டுடன் நடந்து, வல்ல இறைவனின் மன்னிப்பையும் மாபெரும் அருளையும் பெறுவோமாக!

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner