Saturday, March 3, 2012

ஆதம் (அலை), ஹவ்வா (அலை) ஆகியோருக்கு தொப்புள் கிடையாதா?

கேள்வி - ஆதம் (அலை), ஹவ்வா (அலை) ஆகியோர் எந்த நாட்டில் இறக்கப்பட்டார்கள்? அவர்களுக்குத் தொப்புள் கிடையாது என்று கூறப்படுவது உண்மையா?  எம்.ஏ. ஜின்னாஹ், கடலூர் துறைமுகம்

பதில் - ஆதம் (அலை) அவர்கள் எங்கு இறக்கப்பட்டார்கள் என்பது குறித்து நேரடியாக குர்ஆன் ஹதீஸில் எந்தக் குறிப்பும் இல்லை. இது குறித்து ஏராளமான கதைகள் கூறப்படுகின்றன. இவற்றில் எதற்குமே ஆதாரம் இல்லை. ஆனால் முதன்முதலில் அல்லாஹ்வை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட ஆலயம் மக்காவில் உள்ள கஃபா தான் என்று அல்குர்ஆன் கூறுகின்றது.

அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.  அல்குர்ஆன் 3:96

மனித சமுதாயம் இறைவனை வழிபடுவதற்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் கஃபா என்றால் அதை ஏற்படுத்தியவர் ஆதம் (அலை) அவர்களாகத் தான் இருக்க வேண்டும். ஆதம் (அலை) அவர்கள் இறைத்தூதராக இருந்ததால் அவர்கள் வணங்குவதற்காக நிச்சயம் ஓர் ஆலயத்தை நிர்மாணித்திருப்பார்கள். அந்த ஆலயம் மக்காவில் உள்ள கஃபா என்று இறைவன் கூறுகின்றான். எனவே இதை வைத்துப் பார்க்கும் போது ஆதம் (அலை) அவர்களும் அவரது துணைவியாரும் இறக்கப்பட்டது மக்காவில் தான் என்பது தெளிவாகின்றது.

அவ்விருவருக்கும் தொப்புள் உண்டா என்று கேட்டுள்ளீர்கள். தொப்புள் என்பது கருவில் இருக்கும் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் செல்லும் குழாயின் இணைப்பாகவுள்ளது.

கருவில் வளரும் குழந்தைக்குத் தான் தொப்புள் கொடி இருக்கும். இறைவனால் நேரடியாக இருவரும் படைக்கப்பட்டதால் தொப்புள் இருக்க முடியாது என்ற லாஜிக்கின் அடிப்படையில் அவ்விருவருக்கும் தொப்புள் கிடையாது என்று சிலர் கூறுகின்றனர்.

ஆனால் இந்த லாஜிக்கை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் தொப்புள் கொடிக்கு இவர்கள் கூறுகின்ற காரணம் பொருந்தினாலும் அது ஆணுக்கும் பெண்ணுக்கும் கவர்ச்சியை அதிகரிக்கக் கூடிய ஒரு படைப்பாக அமைந்துள்ளது.

மனிதனை அழகிய வடிவில் படைத்தோம் என்று இறைவன் கூறுவது தொப்புளையும் சேர்த்துத் தான். தொப்புள் இல்லாத ஆணையோ பெண்ணையோ கற்பனை செய்து பாருங்கள். விகாரமாக இருக்கும். எனவே ஆதம், ஹவ்வா ஆகிய இருவரும் அவ்வாறு இருந்திருந்தால் நிச்சயமாக அது அழகிய வடிவமாக இருக்காது.

தொப்புள் இல்லாமல் இருப்பது தான் அழகிய வடிவம் என்றால் அவ்விருவரின் வழித் தோன்றல்களுக்கு மற்ற தழும்புகள் காலப்போக்கில் மறைவது போல் தொப்புளும் மறைந்து சமமாக ஆகி விடவேண்டும். அவ்வாறு ஆகாமால் வேண்டுமென்றே அல்லாஹ் குறிப்பிட்ட வடிவத்தில் அதை விட்டு வைத்துள்ளான். எனவே தொப்புள் கொடி லாஜிக் பேசி, ஆதம், ஹவ்வாவுக்கு தொப்புள் கிடையாது என்று கூறுவதை ஏற்க முடியாது.

- பி.ஜே

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner