Sunday, March 4, 2012

தொழுகையில் விரலசைப்பதால் கவனம் சிதறுமா?

கேள்வி - தொழுகையில் விரலசைப்பதால் நம் கவனமும், மற்றவரின் கவனமும் சிதறாதா? தொழுகையில் இறையச்சத்துடன் தொழ வேண்டும் என்ற கட்டளை இதனால் கெடாதா? -  அப்துல்லாஹ், நாகர்கோவில்

பதில் - ஒரு அடிப்படை விஷயத்தைக் கவனத்தில் கொள்ளாமல் இக்கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். தொழுகை என்ற வணக்கத்தை எவ்வாறு நிறைவேற்ற வேண்டுமென்பதை நபி (ஸல்) அவர்கள் தான் நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள். மேலும், என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள் (புகாரி 631) என்று கூறியுள்ளார்கள். 

இவ்வாறு கூறிய நபி (ஸல்) அவர்கள் தொழும் போது விரலசைத்து தொழுதுள்ளார்கள். ...நபி (ஸல்) அவர்கள் தமது இடது முன் கையை இடது தொடை மீதும் மூட்டுக்கால் மீதும் வைத்தார்கள். தமது வலது முழங்கையை வலது தொடை மீது வைத்தார்கள். பின்பு தமது விரல்களில் இரண்டை மடக்கிக் கொண்டு (நடுவிரலையும் கட்டை விரலையும் இணைத்து) வளையம் போல் அமைத்து, ஆட்காட்டி விரலை உயர்த்தி அதன் மூலம் (யாரையோ) அழைப்பது போல் அவர்கள் அசைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)  நூல்: நஸயீ 879

இச்செய்தி தாரமீ 1323, அஹ்மத் 18115, இப்னு ஹுஸைமா பாகம் 1; பக்கம் 354, இப்னு ஹிப்பான் பாகம் 5; பக்கம் 170, தப்ரானீ கபீர் பாகம் 22; பக்கம் 35, பைஹகீ பாகம் 1; பக்கம் 310, ஸுனனுல் குப்ரா இமாம் நஸயீ பாகம் 1; பக்கம் 376, அல்முன்தகா இப்னுல் ஜாரூத் பாகம் 1; பக்கம் 62ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.

எனவே தான் நாம் விரலசைத்து தொழ வேண்டுமென்று கூறுகிறோம்.

தொழுகையில் பேணுதல் இருக்க வேண்டுமென்று சுட்டிக் காட்டிய நபி (ஸல்) அவர்கள் தான் விரலசைத்துத் தொழுதுள்ளார்கள். தக்பீர் கட்டி நிற்பவர் திடீரென்று குனிந்து ருகூவுச் செய்வதால் கவனம் திரும்புகிறது என்று சொல்ல முடியுமா? அது போன்று தான், விரலசைப்பதால் கவனம் திரும்புகிறது என்று சொல்வதும் அமைந்துள்ளது. நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்கன் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். 

அது பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்கன் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டு விட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்க்கொண்டனர். அவர்கல் ஒருவர், (இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுது கொண்டே இருக்கப் போகிறேன் என்றார். இன்னொருவர், நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன் என்று கூறினார். மூன்றாம் நபர் நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ள மாட்டேன் என்று கூறினார். 

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்கடம்) வந்து, இப்படி இப்படியெல்லாம் பேசிக் கொண்டது நீங்கள் தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி)  நூல்: புகாரி 5063

உங்களை விட அல்லாஹ்விற்கு அதிகம் அஞ்சுபவன் நானே! என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் விரலசைத்துத் தொழுதுள்ளதால் விரலசைத்துத் தொழுவது பேணுதலான ஒன்றே!

இறைவனுக்குச் செய்யும் வணக்கங்கள் மனிதனின் விருப்பு, வெறுப்பு அடிப்படையில் அமைந்தவை அல்ல! படைத்தவனின் விருப்பத்தின் அடிப்படையில் அமைந்தவையே! படைத்த இறைவன் தனது தூதர் மூலம் எப்படி தொழச் சொன்னானோ அதன்படி வணங்குவதே அல்லாஹ்வின் அன்பையும், கூலியையும் பெற்றுத் தரும் என்பதைக் கவனத்தில் கொள்க!

- பி.ஜே

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner