Monday, April 30, 2012

அர்த்தமுள்ள இஸ்லாம் - தொடர் 6 - PJ

புரோகிதமும் சுரண்டலும்

மதங்கள் யாவும் அர்த்தமற்றவை' என்று கூறுவோர் மதங்களின் பெயரால் நடக்கும் புரோகிதத்தையும், சுரண்டலையும் மற்றொரு சான்றாக முன் வைக்கின்றனர்.

கடவுளை வழிபடுவதாக இருந்தாலும் திருமணம், அடிக்கல் நாட்டுதல், தொழில் துவங்குதல், புதுமனைப் புகுதல், காது குத்துதல், கருமாதி செய்தல் உள்ளிட்ட எந்தக் காரியமானாலும் அதில் மத குருமார்கள் குறுக்கிடுகின்றனர்.

அவர்கள் மூலமாகத் தான் இந்தக் காரியங்களைச் செய்ய வேண்டும் என்று விதி செய்து வைத்துள்ளனர்.

மேலும் பேய், பிசாசு, மாயம், மந்திரம், பில்லி சூனியம், தாயத்து, தட்டு என்று பல வகைகளிலும் மக்களை ஏமாற்றி பணம் பறிப்பவர்களும் மதத்தின் பெயரால் தான் இவற்றைச் செய்கின்றனர்.

இவற்றையெல்லாம் பார்க்கும் சிந்தனையாளர்கள் 'தங்களின் வயிற்றுப் பிழைப்புக்காக மத குருமார்கள் உருவாக்கியவை தாம் மதங்கள்' என்று திட்டவட்டமான முடிவுக்கு வந்து விடுகின்றனர்.

ஆனால் இஸ்லாத்துக்கு எதிராக இந்த விமர்சனத்தையும் செய்ய முடியாது.

ஏனெனில் புரோகிதத்தை வேரோடு பிடுங்கி எறிந்த மார்க்கம் இஸ்லாம்.

ஒவ்வொரு மனிதனும், ஆணும் பெண்ணும், நல்லவனும், கெட்டவனும், படித்தவனும், படிக்காதவனும் நேரடியாகவே இறைவனிடம் தனது தேவைகளைக் கேட்க வேண்டும். தனக்கு எந்த மொழி தெரியுமோ அந்த மொழியில் கேட்கலாம். ஏனெனில் இறைவனுக்கு எல்லா மொழியும் தெரியும் என்று இஸ்லாம் கூறுகிறது.

மேலும் 'மனிதனின் தனிப்பட்ட வாழ்விலும் புரோகிதர்களுக்கு வேலை இல்லை' என இஸ்லாம் அறிவிக்கிறது.

Wednesday, April 25, 2012

முதுமை வரும் பின்னே! துஆ செய்வோம் முன்னே!

மனித வாழ்க்கை மூன்று பருவங்களைக் கொண்டது. பிறந்தவுடன் குழந்தைப் பருவத்தில் இருக்கின்றான். பால்குடி மறக்கின்ற வரை பெற்றோரை முழுமையாகச் சார்ந்திருக்கின்றான். வளர, வளர விடலைப் பருவம். அதன் பின் எதைப் பற்றியும் கவலைப்படாத, யாரையும் எவரையும் சார்ந்து நிற்காத இளமைப் பருவம். ஒரு நாற்பது வயது வரை அதை அவன் முழுமையாக அனுபவிக்கின்றான்.

அதற்குப் பின்னர், அது வரை ஏறுமுகத்தில் இருந்த அவனது பருவம், வீரியம், வீம்பு, வீராப்பு, திமிர், துணிச்சல், உடல் கட்டு, கூரிய பார்வை அனைத்தும் இறங்குமுகத்தில் ஆகி விடுகின்றது. வளர்பிறையாக இருந்தவன், தேய்பிறையாக மாறி விடுகின்றான்.

தலையில் நரை, பார்வையில், செவிப்புலனில் குறை, துள்ளிக் குதித்த காலம் போய் தளர்ந்த நடை போடும் காலம் அவனைத் தொற்றிக் கொள்கின்றது. இரு கால் பிராணியாக இருந்தவன் முக்கால் பிராணியாக மாறி விடுகின்றான்.

கண்ணில் கண்ணாடி! கையில் கைத்தடி!

ஆம்! கையில் கைத்தடி! கண்ணில் ஒரு கண்ணாடி! உளூச் செய்யும் விரல்களை வாயில் உள்ளே விட்டுப் பல் துலக்கிய காலம் போய் பல் செட்டைக் கழற்றி கையில் வைத்துக் கழுவுகின்றான்.

இரும்பு போன்ற எலும்புகளையும் உடைத்துத் தள்ளிய தாடைப் பற்கள், பொக்கையாகிப் போய் மென்மையான உணவுகளைக் கூட மென்று சாப்பிட முடியாத சூழ்நிலை! சோதனை!

இந்த முதுமையை விட்டு அவனால் தப்பிக்க முடியவில்லை. எத்தனையோ அறிவியல் புரட்சிகள், மருத்துவ சாதனைகள்! எவராலும் இந்த முதுமையை வெல்கின்ற, கொல்கின்ற மருந்தைக் கண்டுபிடிக்கவில்லை; கண்டுபிடிக்கப் போவதுமில்லை.

வளர்கின்ற வாலிபனின் தலையில் ஈயக்காட்டுக் கம்பியாக ஒரேயொரு நரைமுடி இழையோடிவிட்டால் அதைக் கண்ணாடியில் பார்த்துப் பார்த்து வேதனைப்படுகின்றான். தலையில் நரை, தன் வாலிபத்திற்கு ஒரு திரை என்று வெந்து நீருகின்றான். என்ன செய்ய முடியும்?

தான் இருக்கும் வயதை விட்டுத் தாண்டக் கூடாது என்றே நினைக்கின்றான். ஆனால் அவனது வயது, வாழ்நாள் அவனைக் கேட்காமலேயே தாண்டிச் செல்கின்றது. வயோதிகத்தின் பக்கம் வலுக்கட்டாயமாகத் தள்ளி விடுகின்றது. இதுவே மறுமை என்ற ஒன்று இருக்கின்றது என்பதை உணர்த்திக் கொண்டிருக்கின்றது. இதையே அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

நாம் யாருக்கு வாழ்நாள் அளித்தோமோ அவரைப் படைப்பில் இறங்குமுகமாக்குகிறோம். (இதை) அவர்கள் விளங்க மாட்டார்களா? அல்குர்ஆன் 36:68

பெற்றோரை விரட்டுகின்ற பிள்ளைகள்

மனிதன் வயது ஏற, ஏற நடமாட்டம் நிற்கின்றது. படுக்கையில் விழுந்து விடுகின்றான். சிறுநீர் பிரிவது அவனுக்குத் தெரிவதில்லை. மலம் கழிவதும் அவனுக்குப் புரிவதில்லை. இந்நிலையை திருக்குர்ஆன் படம்பிடித்துக் காட்டுகின்றது.

Tuesday, April 24, 2012

நபி (ஸல்) அவர்கள் தனது மகள் திருமணத்திற்காக பொருள்கள் கொடுத்தார்களா?

கேள்வி - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மகளின் திருமணத்தின் போது சில பாத்திரங்களை கொடுத்தார்கள் என்று ஹதீஸ் உள்ளதா? -  உஸ்மான் துபை

أخبرنا نصير بن الفرج قال حدثنا أبو أسامة عن زائدة قال حدثنا عطاء بن السائب عن
أبيه عن علي رضي الله عنه قال جهز رسول الله صلى الله عليه وسلم فاطمة في خميل
وقربة ووسادة حشوها إذخر
 
பதில் - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மகள் ஃபாத்திமாவை திருமணம் முடித்துக் கொடுத்த போது ஒரு கனமான போர்வை, (தண்ணீர் பிடித்து வைத்துக் கொள்ளும்) ஒரு தோல் துருத்தி, இத்கிர் என்ற புல் சருகு அடைக்கப்பட்ட ஒரு தலையனை ஆகியவற்றைக் கொடுத்து அனுப்பினார்கள் என்று அலி ரலி அறிவிக்கிறார்கள்.  நஸாயீ 3331 மற்றும் இப்னுமாஜா அஹ்மத்


பெற்ற மகளுக்கு நாமாக விரும்பி சில பொருட்களைக் கொடுக்கலாம் என்பது இதில் இருந்து தெரிகிறது.

ஆனால் விரும்பி தரப்படுகிறதா அதில் நேரடியான மறைமுகமான நிர்பந்தம் உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். 

- பி.ஜே

விரும்பிக் கொடுத்தால் அது வரதட்சணை ஆகுமா?

பெண் வீட்டார்கள் விரும்பிக் கொடுக்கிறார்கள் இது சரியா? அந்த திருமணத்தில் கலந்து கொள்ளலாமா?

பெண் வீட்டார்கள் எங்கள் உறவினர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்கிறோம் என்கின்றார்கள் இது சரியா? இந்த திருமணத்தில் கலந்து கொள்ளலாமா?

விரும்பிக் கொடுப்பது என்றால் என்ன?

எந்த வித எதிர்பார்ப்பு இல்லாமல் கொடுப்பது என்றால் என்ன?

Sunday, April 22, 2012

அர்த்தமுள்ள இஸ்லாம் - தொடர் 5 - PJ

சுயமரியாதைக்குப் பங்கம் ஏற்படுத்துதல்

கடவுளை நம்பி அவனை வழிபடச் சொல்லும் மதவாதிகள் படிப்படியாக தங்களையும் கடவுள் தன்மை பெற்றவர்கள் என அப்பாவிகளை நம்ப வைத்து, மக்களைத் தங்களின் கால்களில் விழுந்து வழிபடச் செய்து வருகின்றனர்.

மானத்தோடும், மரியாதையோடும் வாழ வேண்டிய மனிதன், தன்னைப் போலவே மனிதனாக உள்ள மற்றொருவனுக்குத் தலை வணங்கும் நிலையை மதங்கள் தான் ஏற்படுத்தி விட்டன.

எனவே மதங்கள் யாவும் அர்த்தமற்றவை என்பதும் சிந்தனையாளர்களின் வாதம்.

இஸ்லாத்திற்கு எதிராக இந்த விமர்சனத்தையும் செய்ய முடியாது. ஏனெனில் மனிதனை மனிதன் வழிபடுவதை இஸ்லாம் எதிர்க்கும் அளவுக்கு சீர்திருத்த இயக்கங்கள் கூட எதிர்த்ததில்லை.

முஸ்லிம்கள் தங்களின் உயிரை விடவும் மேலாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிக்கின்றனர்.

எந்த மதத்தவரும், கட்சியினரும், இயக்கத்தினரும் தமது தலைவர்களை நேசிப்பதை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம்கள் அதிகம் நேசிக்கின்றனர்.

அப்படி இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம்களில் யாரும் வணங்குவதில்லை. அவர்களுக்காகச் சிலை வடிக்கவில்லை. அவர்களை ஓவியமாகத் தீட்டவில்லை. தங்களுக்கு வழிகாட்ட வந்த தலைவர் என்று மதிக்கிறார்களே தவிர அவர்களை முஸ்லிம்கள் ஒருக்காலும் வழிபட மாட்டார்கள்.

தம்மையும் கூட வழிபடக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்து சென்று விட்டார்கள்.

எனக்கு இறைவனிடமிருந்து செய்தி வருகிறது என்பதைத் தவிர மற்ற படி நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான்' என்று அழுத்தம் திருத்தமாக அவர்கள் கூறினார்கள். அவ்வாறு கூறவேண்டும் என்று இறைவனே தமக்குக் கட்டளையிட்டதாகக் கூறினார்கள்.

இந்தக் கட்டளையை திருக்குர்ஆன் 18:110, 41:6 ஆகிய வசனங்களில் காணலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மண விழாவுக்குச் சென்றார்கள். அங்குள்ள சிறுமிகள் பாட்டு பாடிக் கொண்டிருந்தனர். நபிகள் நாயகத்தைக் கண்டதும் 'நாளை நடப்பதை அறியும் நபி நம்மிடம் இருக்கிறார்' என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இவ்வாறு கூறாதே! முன்னர் பாடியதையே பாடு' என்றார்கள்.  நூல்: புகாரி 4001, 5147

Saturday, April 21, 2012

நல்லவர்கள் நோயால் அவதியுறுவது ஏன்?

நல்லவர்கள் நோயால் அவதியுறுவது ஏன்?

கேள்வி: ஒரு தாய்க்கு தன் மக்களிடத்தில் இருக்கும் கருணையைக் காட்டிலும் பல மடங்கு கருணையுள்ள இறைவன் மனிதர்களுக்கு நோயை வழங்குவது ஏன்? அதிலும், தீயவர்கள் பலர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழும் போது நல்லவர்கள் பலர் நோயால் அவதியுறுவதுடன் அதற்கு மருத்துவம் செய்யவும் உரிய வசதியின்றி வாடுவது ஏன்? என்று எனது நண்பர் ஒருவர் கேட்கிறார்.  - எம். அஹ்மது, சென்னை-1.

பதில்: மனிதர்களுக்கு நோய் ஏற்படுவது ஒரு பாதகமான அம்சம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மனித வாழ்க்கையில் பாதகமான அம்சங்கள் பல உள்ளன.

வறுமை, அழகின்மை, உடல் வலுவின்மை, குழந்தைப் பேறு இன்மை, வலிமையானவர்களின் அடக்குமுறைகளுக்கு ஆளாகுதல், தீர்க்க முடியாத கடன், பொருத்தமில்லாத வாழ்க்கைத் துணை, தறுதலைப் பிள்ளைகள், நெருக்கமானவர்களின் மரணம், உடல் ஊனம், நினைவாற்றல் குறைவு, சிந்தனைத் திறன் குறைவு, இப்படி ஆயிரமாயிரம் பாதகங்கள் உள்ளன.

நீங்கள் நோயை மட்டும் பாதகமாகக் கருதுகிறீர்கள்! மேலே சுட்டிக்காட்டியது போன்ற ஏதேனும் பாதகமான அம்சங்கள் சிலவற்றைப் பெற்றே மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். எந்தப் பாதகமும் இல்லாத ஒருவரும் உலகில் கிடையாது.

நமக்கு இறைவன் வறுமை மற்றும் நோயைக் கொடுத்திருக்கலாம். ஆனால் செல்வமும், ஆரோக்கியமும் உள்ளவருக்கு வேறு ஏதேனும் குறைகள் இருக்கும். அவருக்கு பொருத்தமில்லாத மனைவியையோ, மக்களையோ இறைவன் கொடுத்திருப்பான். அல்லது வேறு ஏதேனும் குறைகளைக் கொடுத்திருப்பான்.

நீங்கள் நோயை நினைத்துக் கவலைப்படுவது போலவே அவர் குடும்பத்தை நினைத்துக் கவலைப்படுவார். மனதை உலுக்குகிற அழுத்தம் இல்லாததால் நீங்கள் படுத்தவுடன் தூங்கி விடுவீர்கள். நீங்கள் யாரைப் பார்த்து பொறாமைப் படுகிறீர்களோ அவரால் பஞ்சு மெத்தையிலும் தூங்க முடியாது.

இந்த உலகம் சீராக இயங்க வேண்டுமானால் குறைகளையும், நிறைகளையும் பலருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும்.

Wednesday, April 18, 2012

இஸ்லாத்தின் பார்வையில் தற்கொலை

தற்கொலை செய்தலை இஸ்லாம் ஆதரிக்கிறதா?

ஆதரிக்கவில்லையெனில் நரகத்தில் அதற்குறிய தண்டனை என்ன?

வேதனைகள் எவ்வளவு வந்தாலும் அதற்கு தற்கொலைதான் தீர்வா?

இஸ்லாத்தில் துன்பம் வந்தால் நன்மையா?

தற்கொலை செய்தவருடைய உயிர் ஆவியாக சுற்றிக்கொண்டு இருக்குமா?

இறந்ததற்கு பின் மனிதனின் நிலை என்ன?


Saturday, April 14, 2012

அர்த்தமுள்ள இஸ்லாம் - தொடர் 4 - PJ

கடவுளின் பெயரால் அக்கிரமங்கள் நியாயப்படுத்தப்படுதல்


மேலோட்டமாகப் பார்த்தாலே அநியாயமாகவும், அக்கிரமமாகவும் தென்படுகின்ற பல காரியங்கள் மதத்தின் பெயரால் நியாயப்படுத்தப் படுகின்றன. மதங்கள் அர்த்தமற்றவை என்ற முடிவுக்கு வருவதற்கு இது போன்ற காரியங்களும் காரணங்களாக அமைந்துள்ளன.

கடவுளை வழிபாடு செய்யும் ஆலயங்களில் பாரபட்சம் காட்டப்படுகிறது. குறிப்பிட்ட இனத்தவர்கள் கடவுளுக்கு மிகவும் நெருக்கமாகச் சென்று வழிபாடு செய்யலாம். மற்றும் சிலர் தூரத்தில் நின்று தான் வழிபாடு நடத்த வேண்டும். இன்னும் சிலர் ஆலயத்திற்குள் நுழையவே கூடாது என்ற நடை முறையைச் சிந்தனையாளர்கள் காண்கிறார்கள். கடவுளின் பெயரால் இது நியாயப்படுத்தப் படுவதையும் பார்க்கிறார்கள்.

கட்டணம் செலுத்துவோருக்கு கடவுளை வழிபடுவதில் முன்னுரிமை அளிக்கப்படுவதையும், தர்ம தரிசனம் செய்பவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுவதையும் காண்கிறார்கள்.

முக்கியப் பிரமுகர்கள் வரும் போது பரிவட்டம் கட்டி தனி மரியாதையும், முதல் மரியாதையும் செய்யப்படுவதையும் சிந்தனையாளர்கள் காண்கிறார்கள்.

வழிபாட்டுத் தலங்களில் மட்டுமின்றி ஊரிலும், தெருவிலும் கூட சிலர் புழு பூச்சிகளை விட கேவலமாக நடத்தப்படுகின்றனர்.

தொட்டாலும், பட்டாலும் தீட்டு

சில வீதிகளில் நடமாடத் தடை

தேநீர்க் கடைகளில் தனித் தனிக் குவளைகள்

செருப்பணியத் தடை

பெண்கள் ஜாக்கெட் அணியத் தடை


என்றெல்லாம் மனிதனுக்கு மனிதன் செய்யும் அக்கிரமங்களையும், இதை மதத்தின் பெயராலேயே, கடவுளின் பெயராலேயே செய்வதையும் காண்கின்றனர்.

கடவுள் இப்படித் தான் மனிதர்களைப் படைத்திருக்கிறான். இதை ஏற்றுத் தான் ஆக வேண்டும்' என்று வேத நூல்கள் கூறுவதையும் காண்கின்றனர்.

இந்த அக்கிரமங்களை நியாயப்படுத்தி விட்டு மதங்கள் அர்த்தமுள்ளவை' என்று கூறுவதைச் சிந்தனையாளர்களால் ஏற்க முடியவில்லை.

Monday, April 9, 2012

அனைத்தும் இறைவன் செயல் என்றால் தீயவனைத் தண்டிப்பது என்ன நியாயம்?

கேள்வி : 'அனைத்து செயல்களும் இறைவனால் செய்யப் படுகிறது என்றால், மனிதன் செய்யும் தீய செயலும் இறை வனால் தான் செய்யப்படுகிறது. அப்படி இருக்கும் போது அவனுக்கு நரகம் கொடுப்பது எவ்வகையில் நியாயம்?' என்று ஒரு மாற்று மத நண்பர் என்னிடம் கேட்டார்.  - எஸ். ஷேக் பீர் முஹம்மது, மேலப்பாளையம்.

பதில் : விதியை நம்புவதால் நீங்கள் கூறுவது போன்ற கேள்விகள் எழுகின்றன. விதியை நம்பவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்போது வேறு விதமான கேள்விகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒவ்வொரு மனிதனும் தனது முடிவின் படி தான் செயல்படுகிறான். இதில் இறைவனின் தலையீடு ஏதுமில்லை என்று நம்பினால் நீங்கள் கேட்டுள்ள கேள்வியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

ஆனால், கடவுள் என்பவன் பலவீனனாக, கையாலாகாத வனாகக் கருதப்படும் நிலை இதனால் ஏற்படும்.

'நடந்தது, நடந்து கொண்டிருப்பது, இனி நடக்கவிருப்பது அனைத்தையும் அறிந்தவன்' என்பது கடவுளின் பண்பாகும். அந்தப் பண்பு இல்லாதவன் கடவுளாக இருக்க முடியாது.

நாளைய தினம் நீங்கள் சென்னை வரவிருக்கிறீர்கள். இது இன்றைக்கே இறைவனுக்குத் தெரியுமா என்று கேட்கப்படும் போது தெரியாது என்று நீங்கள் கூறினால் அப்படி ஒருவனை இறைவனாக ஏற்கத் தேவையில்லை. நாளை நடப்பது எப்படி எனக்குத் தெரியாதோ அது போல இறைவனுக்கும் நாளை நடப்பது தெரியாது என்று ஆகிறது.

நாளை நீங்கள் சென்னை வருவது இன்றைக்கே இறைவனுக்குத் தெரியும் என்பது உங்கள் விடையாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்திருக்கிறானோ அது நடந்து தீர வேண்டும். நாளை எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்துள்ளானோ அதைத்தான் உங்களால் செய்ய முடியுமே தவிர அதை மீற முடியாது என்பதும் இந்த விடைக்குள் அடங்கியுள்ளது.


அதாவது நாளை என்ன நடக்கும் என்பது இறைவனுக்குத் தெரியும் என்று நீங்கள் நம்பினால் விதியின் நம்பிக்கையும் அதனுள் அடங்குகிறது.

அவனுக்குத் தெரியாது என்று நம்பினால் அப்படி ஒரு இறைவன் தேவையில்லை என்று ஆகிறது.

இரண்டு நம்பிக்கைகளிலுமே சில சங்கடங்கள் உள்ளன.
 

Saturday, April 7, 2012

அர்த்தமுள்ள இஸ்லாம் - தொடர் 3 - PJ

மனிதனை மறந்து விட்டு கடவுளை நினைத்தல்


மதங்கள் அர்த்தமற்றவை' என்று விமர்சனம் செய்யும் சிந்தனையாளர்கள் எடுத்து வைக்கும் மற்றொரு வாதம் 'மதங்கள் கடவுளின் பெயரால் மனிதனை மறக்கச் செய்கின்றன' என்பதாகும்.

அன்றாடம் உண்பதற்கு உணவில்லாத கோடிக்கணக்கான மக்கள் இருக்கும் போது கோவில் உண்டியலில் கோடிக்கணக்கான ரூபாய்கள் போடப்படுகின்றன.

ஒரு மூக்குத்திக்குக் கூட வழியில்லாத ஏழைப் பெண்கள் கோடிக் கணக்கில் இருக்கும் போது சிலைகளும், கலசங்களும், தேர்களும் தங்கத்தால் செய்யப்படுகின்றன. செல்வந்தர்கள் இதற்காக வாரி வழங்குகின்றனர்.

தேவையுள்ள மனிதர்களுக்குச் செலவிடாமல் எந்தத் தேவையுமற்ற கடவுளுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் செலவிடப் படும் மனித நேயமற்ற காரியங்களைப் பார்க்கும் சிந்தனையாளர்கள் 'மதங்கள் அர்த்தமற்றவை' என்று கருதுகின்றனர்.

இஸ்லாத்தைப் பொருத்த வரை இந்த விமர்சனமும் பொருந்தாது. ஏனெனில் இது போன்ற காரியங்களையும் இஸ்லாம் மறுக்கிறது.

கடவுளுக்குச் செய்ய வேண்டிய வணக்கங்கள் இரு வகைகளாக இஸ்லாத்தில் வகைப்படுத்தப் பட்டுள்ளன.

ஒன்று உடலால் செய்வது.

மற்றொன்று பொருளாதாரத்தால் செய்வது.

தொழுகை, நோன்பு போன்றவை உடலால் செய்யப்படும் வணக்கங்களாகும்.

உடலால் செய்யும் வணக்கங்களை இறைவனுக்காக மட்டுமே செய்ய வேண்டும். வேறு எவருக்காகவும் செய்யக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.

மனிதர்கள் மறக்கப்படுகிறார்கள்' என்ற விமர்சனம் இதில் எழாது.

பொருளாதாரத்தைச் செலவிடுவதில் தான் மனிதர்கள் மறக்கப்படுகிறார்கள் என்ற விமர்சனம் எழும். இது பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?

மனிதர்கள் நோய் வாய்ப்படுகிறார்கள்.

வறுமையில் உழல்கிறார்கள்.

மன நிம்மதியை இழக்கிறார்கள்.

குழந்தைச் செல்வம் கிடைக்காமல் கவலைப்படுகிறார்கள்.

தேவையற்ற இறைவனுக்கு வணக்க வழிபாடுகள் ஏன்?

கேள்வி: அல்லாஹ் யாரிடத்தும் தேவையற்றவன் என்று திருக்குர்ஆனில் உள்ளது. அப்படி இருக்க 'தொழு! அறுத்துப் பலியிடு' என்ற கட்டளையும் உள்ளதே? இது எப்படி என்று ஒரு மாற்று மத சகோதரர் கேள்வி எழுப்புகிறார். -  - அபூ அப்துர்ரஹ்மான், ரியாத்.

பதில்: அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் என்பது இஸ்லாத்தின் முக்கியக் கோட்பாடு என்பதில் சந்தேகமில்லை. தேவையுள்ளவன் கடவுளாக இருப்பதற்குத் தகுதியற்றவன் என்று இஸ்லாம் உறுதிபடக் கூறுகிறது.

இறைவனைத் தொழ வேண்டும் எனவும், இறைவனுக்காக அறுத்துப் பயிட வேண்டும் எனவும் இஸ்லாம் கூறுவதால் அல்லாஹ் தேவையுள்ளவன் என்று கருத முடியாது.

இறைவனைத் தொழுவதில்லை என்று உலக மக்கள் அனைவரும் ஏகமனதாக முடிவு செய்தாலும் இறைவனுக்கு எந்தக் குறைவும் ஏற்படப் போவதில்லை. இறைவனை அனைவரும் வணங்க வேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானம் போட்டாலும் இறைவனது மதிப்பு இதனால் அதிகமாகி விடப் போவதில்லை. இந்தக் கருத்தில் நபிகள் நாயகத்தின் பொன்மொழியும் உள்ளது.  (நூல்: முஸ்லிம் 4674)

தொழுகை உள்ளிட்ட வணக்கங்களை நிறைவேற்றுமாறு இறைவன் கட்டளையிடுவது அவனுக்கு அது தேவை என்பதற்காக அல்ல. மாறாக, நிறைவேற்றும் மனிதனின் நன்மைக்காகவே.

இன்னொருவரின் நன்மைக்காக அவரை ஒரு காரியத்தில் ஈடுபடுமாறு நாம் கூறினால் நமக்கு அந்தக் காரியத்தின் பால் தேவையுள்ளது என்று எடுத்துக் கொள்ள மாட்டோம்.

உங்கள் மகன் பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று வற்புறுத்துகிறீர்கள்! போட்டிகளில் அவன் வெற்றி பெற வேண்டும் என்று ஆர்வமூட்டுகிறீர்கள்! இவையெல்லாம் உங்கள் தேவைக்காக அல்ல! மாறாக உங்கள் மகனின் நன்மைக்காகவே இவ்வாறு வலியுறுத்துகிறீர்கள்!

'மகன் நல்ல நிலையில் இருந்தால் நம்மை நன்றாகக் கவனிப்பான்' என்ற எதிர்பார்ப்பாவது இதில் மறைந்து நிற்கும்.

அல்லாஹ், நம்மிடம் எதிர்பார்க்கும் வணக்க வழிபாடுகளில் இது போன்ற எதிர்பார்ப்புகள் கூட கிடையாது.

எனவே, நமது நன்மைக்காக இடப்படும் கட்டளைகளை கட்டளை பிறப்பித்தவனின் தேவைக்காக இடப்பட்ட கட்டளை என்று கருதுவது தவறாகும்.

- பி.ஜே.

Thursday, April 5, 2012

தேன் கூடும் திருமறைக் கூற்றும் - எம். ஷம்சுல்லுஹா

இன்று நிலத்தடி நீர் மிக மிக அரிதாகி விட்டது. காரணம் மணல் கொள்ளை! ஆற்றுப் படுகையில் இருக்கும் அடுக்கடுக்கான மணல் தட்டுக்கள் தான் நிலத்தடி நீரின் பிடிமானங்களாக இருக்கின்றன. ஆற்றுப்படுகையில் நடக்கும் அபரிமிதமான, அளவுக்கதிகமான மணல் கொள்ளையின் காரணமாக அந்த மணற் தட்டுக்கள் பறி போய் நிலத்தடி நீர் சேமிப்பாகவில்லை.

கொள்ளையடிக்கப்படும் மணல் எங்கு செல்கின்றது? மனிதர்கள் கட்டுகின்ற மாளிகைகளுக்கு! அறிவியல் விலங்கான மனிதன் ஒரு வீட்டைக் கட்டுகின்ற போது, இன்னொரு வளத்தை அழித்து, தன்னுடைய வீட்டைக் கட்டிக் கொள்கின்றான்.

பறவைகள் சில குச்சிகளை வைத்துக் கட்டுகின்றன. எறும்பு, கரையான் போன்றவை மண்ணை வைத்து வீட்டை அமைத்துக் கொள்கின்றன. இவையெல்லாம் கூடு கட்டுகையில் தங்கள் இனத்திற்கும், மற்றவர்களுக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மனிதன் மட்டுமே தான் கட்டுகின்ற வீட்டுக்காக மனித இனத்திற்கும், அடுத்த இனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றான்.

ஆனால் அல்லாஹ்வுடைய படைப்பின் அற்புதமான இந்தத் தேனீ, யாருக்கும் எதற்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் தன் மெழுகுக் கூட்டிற்கான மூலத்தை எப்படிப் பெற்றது? யார் கொடுத்தது? தேனீக்களில் பாட்டாளித் தேனீ, ஆண் தேனீ, ராணித் தேனீ என்று மூன்று வகைகள் உள்ளன. இதில் இளைய பாட்டாளித் தேனீ அல்லது பணியாளர் தேனீ தங்களின் அடிவயிற்றுக் கிடங்கில் அமையப் பெற்றிருக்கும் மெழுகுச் சுரப்பிகளில் இருந்து மெழுகைச் சுரக்கின்றன. இவ்வாறு சுரக்கப்பட்ட மெழுகை, தேனீக்கள் மென்று குழைத்து இந்தத் தேனடையை உருவாக்குகின்றன.

மென்று, குழைத்து, கட்டப்படுகின்ற தேன் கூட்டின் விதவிதமான அறைகளின் சுவர்கள் நன்கு காய்ந்து கனமாகி விடுகின்றன. ஆனால் அதே சமயம், 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பமூட்டப்பட்டால் நெகிழ்ச்சியடையும் நிலையையும், 145 டிகிரி அளவுக்கு வெப்பமூட்டப்பட்டால் உருகும் நிலையையும் அடைந்து விடுகின்றன.

இங்கு தான், கூடுகளைக் கட்டிக் கொள் (16:68) என்று அல்லாஹ் குறிப்பிடும் கட்டளையைச் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். மனிதன் தான் கட்டும் வீட்டிற்காக பெரிய சிமெண்ட் கிடங்கை வெளியில் வைத்திருக்கின்றான். கட்டடத்திற்கு சிமெண்ட் மட்டும் போதாது. ஜல்லி, இரும்பு, செங்கல், மணல், தண்ணீர் என பல மூலப் பொருட்கள் தேவைப்படுகின்றன.

Wednesday, April 4, 2012

அர்த்தமுள்ள இஸ்லாம் - தொடர் 2 - PJ

பெற்றோரை மட்டுமின்றி உற்றார் உறவினருக்கு உதவுதல்

அவர்கள் நோய்வாய்ப்பட்டால் விசாரித்தல்

மரணம் ஏற்பட்ட இல்லம் சென்று ஆறுதல் கூறுதல்
 
தீமையான காரியங்கள் நடப்பதைக் கண்டு அதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தல்

நன்மையான காரியங்களை மக்களுக்குச் சொல்லிக் கொடுத்தல்

பொது நலத் தொண்டுகள் செய்தல்

என எண்ணற்ற நன்மைகளைத் துறவிகள் இழந்து விடுகின்றனர்.'  எது எக்கேடு கெட்டால் எனக்கென்ன?' என்று 'தனது குடும்பத்தையும், ஊரையும், உலகையும் விட்டுச் செல்வது எப்படி உயர்ந்த நிலையாக இருக்க முடியும்?' என்று இஸ்லாம் கேள்வி எழுப்புகிறது.

கடவுளுக்காக அனைத்தையும் துறக்கிறோம் என்று கூறிக் கொண்டு ஆடைகளைத் துறப்பதையும் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மட்டும் தனியாக இருக்கும் போது நிர்வாணமாக இருக்கலாமா? என்று நபிகள் நாயகத்திடம் தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நாம் வெட்கப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் தகுதியுடையவன்' என விளக்கமளித்தார்கள்.  நூல்: திர்மிதீ 2693, 2718

யாருமே பார்க்காத போதும், கடவுள் நம்மைப் பார்க்கிறான் என்று எண்ணி நிர்வாணம் தவிர்க்க வேண்டும்.

மலஜலம் கழித்தல், இல்லறத்தில் ஈடுபடுதல் தவிர மற்ற எல்லா நேரத்திலும் மறைக்க வேண்டியவைகளை மறைத்தே தான் வாழ வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.

இந்த உலகில் எங்களுக்கு எந்தத் தேவையும் இல்லை' என்று கூறி ஆடையை அவிழ்த்துத் திரியும் ஞானிகள்(?) தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் ஒரு பருக்கையைக் கூட உண்ணாமலும், ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட பருகாமலும் இருந்து காட்ட வேண்டும். இந்த இரண்டையும் எந்த நிர்வாணச் சாமியாரும் துறந்ததில்லை. துறக்கவும் முடியாது.

இந்த உலகை அறவே துறந்து வாழ்வது சாத்தியமில்லை என்பதை ஒவ்வொரு கவள உணவை உட்கொள்ளும் போதும் இவர்களே நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 

Monday, April 2, 2012

மாதவிடாய் பெண்களுக்கு குழிப்பதை விட வேறு ஏதேனும் சலுகை உள்ளதா?

கேள்வி :  நான் திருமணம் ஆகிய ஒரு பெண். ஒவ்வொரு மாதத்திலும் பல நாட்கள் பெரும் தொடக்கு உடையவளாகி விடுகிறேன். அதனால் சுப்ஹ் தொழுகைக்காக தொடர்ந்து அதிகாலையில் குளிக்க வேண்டியேற்படுகிறது. இதன் காரணமாக எனது உடல் நிலை பாதிக்கப்படுகிறது. (தண்ணீர் கிடைக்காவிட்டால் தான் தயம்மும் செய்ய வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது.) எனக்கு ஏதாவது மாற்று ஏற்பாடுகள் சலுகைகள் இருக்கிறதா? பதில் தரவும் -  முஸ்லீம் பெண்மணி
பதில் : தண்ணீர் கிடைக்காவிட்டால் மட்டுமே தயம்மம் செய்ய அனுமதியுள்ளது என்ற கருத்து தவறானது. நாம் நோயாளியாக இருந்து நோயின் காரணமாக தண்ணீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டாலும் தயம்மம் செய்து கொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளது. இந்நிலையில் நாம் தண்ணீரைப் பெற்றிருந்தாலும் அதைப் பயன்படுத்தி உளூ செய்ய வேண்டும் என்ற கட்டாயம் நமக்கு இல்லை. தயம்மம் செய்தாலே போதுமானது என்று குர்ஆன் கூறுகின்றது.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنْتُمْ سُكَارَى
حَتَّى تَعْلَمُوا مَا تَقُولُونَ وَلَا جُنُبًا إِلَّا عَابِرِي سَبِيلٍ حَتَّى
تَغْتَسِلُوا وَإِنْ كُنتُمْ مَرْضَى أَوْ عَلَى سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِنْكُمْ
مِنْ الْغَائِطِ أَوْ لَامَسْتُمْ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا
صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ إِنَّ اللَّهَ كَانَ
عَفُوًّا غَفُورًا(43)4

நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.  அல்குர்ஆன் (4 : 43)

நோயாளியாக இருந்தால் குளிக்க வேண்டியதில்லை. தயம்மம் செய்து கொண்டால் போதும் என்று இவ்வசனம் கூறுகின்றது. குளித்தால் நோய் ஏற்படும் என்ற அச்சம் இருந்தாலும் குளிக்காமல் தயம்மம் செய்து கொள்ள அனுமதியுள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸும் தெளிவுபடுத்துகின்றது.

283 حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى أَخْبَرَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ أَخْبَرَنَا
أَبِي قَالَ سَمِعْتُ يَحْيَى بْنَ أَيُّوبَ يُحَدِّثُ عَنْ يَزِيدَ بْنِ أَبِي
حَبِيبٍ عَنْ عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ
الْمِصْرِيِّ عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ احْتَلَمْتُ فِي لَيْلَةٍ بَارِدَةٍ
فِي غَزْوَةِ ذَاتِ السُّلَاسِلِ فَأَشْفَقْتُ إِنْ اغْتَسَلْتُ أَنْ أَهْلِكَ
فَتَيَمَّمْتُ ثُمَّ صَلَّيْتُ بِأَصْحَابِي الصُّبْحَ فَذَكَرُوا ذَلِكَ
لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا عَمْرُو صَلَّيْتَ
بِأَصْحَابِكَ وَأَنْتَ جُنُبٌ فَأَخْبَرْتُهُ بِالَّذِي مَنَعَنِي مِنْ
الِاغْتِسَالِ وَقُلْتُ إِنِّي سَمِعْتُ اللَّهَ يَقُولُ وَلَا تَقْتُلُوا
أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَقُلْ شَيْئًا قَالَ أَبُو دَاوُد عَبْدُ
الرَّحْمَنِ بْنُ جُبَيْرٍ مِصْرِيٌّ مَوْلَى خَارِجَةَ بْنِ حُذَافَةَ وَلَيْسَ
هُوَ ابْنُ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ
الْمُرَادِيُّ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ عَنْ ابْنِ لَهِيعَةَ وَعَمْرِو بْنِ
الْحَارِثِ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ عَنْ
عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ عَنْ أَبِي قَيْسٍ مَوْلَى عَمْرِو بْنِ الْعَاصِ
أَنَّ عَمْرَو بْنَ الْعَاصِ كَانَ عَلَى سَرِيَّةٍ وَذَكَرَ الْحَدِيثَ نَحْوَهُ
قَالَ فَغَسَلَ مَغَابِنَهُ وَتَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ ثُمَّ صَلَّى بِهِمْ
فَذَكَرَ نَحْوَهُ وَلَمْ يَذْكُرْ التَّيَمُّمَ قَالَ أَبُو دَاوُد وَرَوَى هَذِهِ
الْقِصَّةَ عَنْ الْأَوْزَاعِيِّ عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ قَالَ فِيهِ
فَتَيَمَّمَ رواه أبو داود

தாதுஸ்ஸலாஸில் எனும் இடத்தில் நடந்த போரில் குளிராக இருந்த ஒரு இரவில் எனக்குத் தூக்கத்தில் விந்து வெளியானது. நான் குளித்தால் நாசமாகி விடுவேன் என்று அஞ்சினேன். எனவே தயம்மும் செய்து என் சகாக்களுக்கு சுப்ஹ் தொழுவித்தேன். இதை நபி (ஸல்) அவர்களிடம் (பின்னர்) தெரிவித்தேன். ''அம்ரே! உமக்குக் குளிப்பு கடமையாக இருந்த போது உமது சகாக்களுக்குத் தொழுவித்தீரா?'' என்று நபி (ஸல்) கேட்டனர். குளிப்பதற்குத் தடையாக இருந்த காரணத்தை அவர்களிடம் கூறினேன். ''உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்கள் மீது இரக்கம் உள்ளவனாக இருக்கிறான்'' என்று அல்லாஹ் கூறுவதை நான் செவியுற்றுள்ளேன் என்று விளக்கினேன். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். வேறு எதையும் கூறவில்லை.  அறிவிப்பவர் : அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)  நூல்கள் : அபூதாவூத் (283), அஹ்மத் (17144)

அம்ர் (ரலி) அவர்கள் நோயாளியாக இருக்கவில்லை. குளித்தால் உடலுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தால் குளிப்பை விடுகிறார்கள். இதற்குப் பதிலாக தயம்மம் செய்து கொள்கிறார்கள். இதை நபியவர்கள் கண்டிக்கவில்லை. மாறாக ஆமோதிக்கிறார்கள்.

நமது உடலுக்குத் தீங்கு தரும் எந்த காரியத்தையும் செய்யக் கூடாது என இஸ்லாம் கூறுகின்றது. எனவே அதிகாலையில் கடமையான குளிப்பை நிறைவேற்றினால் உங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அந்தக் குளிப்புக்கு பதிலாக நீங்கள் தயம்மம் செய்து கொள்ளலாம்.

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - பி.ஜே

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?


கேள்வி: உங்கள் மார்க்கத்தில் கடவுள் ஏன் மனித னாக வந்து நல்லவைகளை மக்களிடம் விளக்கவில்லை என்று முஸ்லிமல்லாத என் நண்பர்கள் கேட்கின்றனர்?  முஹம்மது கனி, சித்தார்கோட்டை..

பதில்: கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை என்று கேட்பதே அடிப்படையில் தவறானதாகும்.

நீங்கள் ஒரு ஆட்டுப் பண்ணையோ, கோழிப்பண்ணையோ வைத்திருக்கிறீர்கள். அவற்றை நீங்கள் வழி நடத்திச் செல்வதற்காக நீங்கள் ஆடாக, அல்லது கோழியாக மாறத் தேவையில்லை. நீங்கள் நீங்களாக இருந்து கொண்டே ஆடுகளை நீங்கள் விரும்பியவாறு வழி நடத்த முடியும். இன்னும் சொல்வதானால் உங்களால் ஆடாக மாற இயலும் என்று வைத்துக் கொண்டால் கூட மாற மாட்டீர்கள்! மனிதனாக இருப்பதில் உள்ள பல வசதிகளை இழக்க நேரிடும் என்று நினைப்பீர்கள்! மேலும் உங்களை விட பல விதத்திலும் தாழ்ந்த நிலையில் உள்ள ஜீவனாக நீங்கள் மாறத் தேவையில்லை. மாறவும் மாட்டீர்கள்!

உங்களுக்கும், ஆடுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை விட பல்லாயிரம் வேறுபாடுகள் கடவுளுக்கும், மனிதர்களுக்குமிடையே இருக்கின்றன.

எந்த விதமான பலவீனமும் இல்லாத கடவுளை, மலஜலத்தைச் சுமந்து கொண்டு எண்ணற்ற பலவீனங்களையும் உள்ளடக்கியுள்ள மனிதனாக மாறச் சொல்வதை விட கடவுளுக்குக் கண்ணியக் குறைவு வேறு இருக்க முடியாது.

முதலமைச்சராக இருக்கும் ஒருவர் முதல்வராக இருந்து கொண்டு தான் நாட்டை ஆள வேண்டும். அவரைச் சாக்கடையைச் சுத்தப்படுத்தும் வேலைக்குப் போகச் சொல்லக் கூடாது.

இருக்கின்ற தகுதியை விட இறக்கம் செய்வதை மனிதர்களே ஏற்க மாட்டார்கள் என்னும் போது கடவுள் எப்படித் தன்னை இழிவுபடுத்திக் கொள்வான்?

இழிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புவது தான் எந்த வகையில் நியாயமானது?

இப்படிச் சிந்தித்தால் கடவுள் கடவுளாக இருப்பது தான் பொருத்தமானது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

கடவுள் மனிதனாக வருவான் என்று கதவுகளைத் திறந்து வைத்து விட்டால் என்ன ஏற்படும் என்பதை நாட்டு நடப்புகளிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

நான் தான் கடவுள்; அல்லது கடவுளின் அவதாரம் எனக் கூறி யாரேனும் ஏமாற்ற நினைத்தால் கடவுள் மனிதனாக வருவான் என்று நம்பாத முஸ்லிம்களைத் தவிர மற்ற அனைவரையும் எளிதில் ஏமாற்றி விட முடியும். அவர்களைச் சுரண்ட முடியும்.

போலிச் சாமியார்கள் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோமே இதற்கெல்லாம் கூட கடவுள் மனிதனாக வருவான் என்ற நம்பிக்கை தான் அடிப்படை.

'கடவுள் மனிதனாக வரவே மாட்டான்' என்று உறுதியாக நம்பினால் மதத்தின் பெயரால் நடக்கும் ஏராளமான சுரண்டல்களைத் தவிர்க்கலாம். இன்னொரு கோணத்திலும் இது பற்றி ஆராயலாம்.

கடவுள் மனிதனாக வருகிறான் என்று வைத்துக் கொள்வோம்.

மனிதனாக வந்த காரணத்தினால் மனிதனைப் போலவே கடவுள் செயல்பட வேண்டும். உண்ண வேண்டும்; பருக வேண்டும்; மலஜலம் கழிக்க வேண்டும்; மனிதனைப் போலவே குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபட வேண்டும்.

சந்ததிகளைப் பெற்றெடுக்க வேண்டும். கடவுளால் பெற்றெடுக்கப்பட்டவனும் கடவுளாகவே இருப்பான்; கடவுளின் பிள்ளைகளான கடவுள்கள் கணக்கின்றி இப்பூமியில் வாழும் நிலை ஏற்படும்.

ஏதோ ஒரு காலத்தில் ஒரே ஒரு தடவை கடவுள் இப்பூமிக்கு வந்திருந்தால் கூட அவரது வழித் தோன்றல்கள் பல கோடிப் பேர் இன்றைக்கு பூமியில் இருக்க வேண்டும். ஆனால் கடவுளின் ஒரே ஒரு பிள்ளையைக் கூட நாம் பூமியில் காண முடியவில்லை. இதிலிருந்து கடவுள் மனிதனாக வரவே இல்லை என்று அறிந்து கொள்ளலாம்.


எனவே கடவுள் ஒரு காலத்திலும் மனித வடிவில் வந்ததுமில்லை. வருவது அவருக்குத் தகுதியானதும் அல்ல.
 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner