Monday, June 25, 2012

பாவியாக்கும் பராஅத் இரவு

சூரியன் பொழுதை அடந்ததும் ஒரே பரபரப்பு! முஸ்லிம் வீடுகளில் பெண்கள் விழித்த உடனே மறக்காமல் கணவனிடம், கறி வாங்கிட்டு வாங்க என்று கூறுவதும், பாத்திஹா ஓத முன் கூட்டியே ஹஜரத்திடம் சொல்லி வர ஆளனுப்புவதுமாக வீடு முழுவதும் ஒரே பரபரப்பாகக் காட்சியளிக்கும்.

இது மாத்திரமா? மாலை நேரத்தில் ரொட்டி சுட்டு, வீடு வீடாகக் கொடுப்பதற்காக மாடிக் கட்டடங்கள் போல் அடுக்கப்பட்டிருக்கும். சிலர் நேர்ச்சைக்காக கோழிக் குழம்பு வைப்பார்கள்.

மஃக்ரிப் தொழுகை முடிந்ததும் பள்ளியிலேயே சூரத்துல் பாத்திஹா அமோகமாக ஆரம்பிக்கப்பட்டு விடும். ஹஜரத்தைக் கூட்டிச் செல்வதற்காக குழந்தைகளின் வரிசை ஒரு பக்கம். சில வீட்டினர் தங்கள் ரொட்டிகளை பள்ளிவாசலுக்கே அனுப்பி வைப்பார்கள். வழமைக்கு மாற்றமாக பள்ளிவாசலில் இறைச்சிக் குழம்பு வாடை மூக்கைத் துளைக்கும்.

தொழுகை முடிந்ததும் ஹஜரத் அவர்கள் வெளி வராண்டாவில் (வராண்டா இல்லாத ஊர்களில் உள் பள்ளியிலும்) யாசீன் ஓதுவார். எத்தனை தடவை தெரியுமா? மூன்று தடவை ஓத வேண்டுமாம். எதற்காக?

முதல் யாசீன் பாவ மன்னிப்பிற்காகவும்

இரண்டாவது யாசீன் கப்ராளிகளுக்கு ஹதியாவாகவும், நீண்ட ஆயுளுக்காகவும்

மூன்றாவது யாசீன் பரகத் கிடைக்க வேண்டியும் ஆக மொத்தம் மூன்று யாஸீன் ஓதப்படும்.


அது மட்டுமல்ல! வழமை போல் 8 மணிக்கு நடைபெறும் இஷா தொழுகை அன்றிரவு 10மணிக்கு நடைபெறும். காரணம் ஹஜரத்திற்கு வந்த பாத்திஹா ஆர்டர்களை முடித்து விட்டு, இரவு 8 மணிக்கு ஜமாஅத் தொழுகைக்கு வந்து சேர முடியாத நிலை. அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட தொழுகையை விட யாரோ உருவாக்கிய பராஅத் இரவு சிறந்ததாகப் போய் விட்டது, ஏழு வருடம் படித்த மார்க்க அறிஞருக்கு?

அந்நாளில் விசேஷத் தொழுகையும் நடைபெறும். எத்தனை ரக்அத்கள் தெரியுமா? 100ரக்அத்களாம். வேறு சில ஊர்களில் இதை விட அதிக ரக்அத்கள் கொண்ட தொழுகையும் உண்டு.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் இதைச் செய்யும் சுன்னத் வல் ஜமாஅத்தினரைச் சார்ந்த உலமாக்கள் குர்ஆன், ஹதீஸை விட மத்ஹபுகளுக்குத் தான் முன்னுரிமை வழங்குவார்கள். அந்த மத்ஹப் புத்தகங்களில் இவர்கள் செய்கின்ற இச்செயலுக்கு முரணாகக் கூறப்பட்டுள்ளது தான் வேடிக்கை. பராஅத் இரவு வணக்கத்தை மத்ஹப் ஆதரிக்கிறதா?

ரஜப் மாதத்தில் முதல் ஜும்ஆ இரவில் மஃரிபுக்கும் இஷாவிற்கும் இடையில் 12 ரக்அத் கொண்ட தொழுகையும், ஷஅபான் மாதத்தில் நடுப்பகுதி 15ஆவது இரவில் தொழும் 100ரக்அத்கள் கொண்ட தொழுகையும் இழிவாக்கப்பட்ட அனாச்சாரங்களாகும். இதை செய்யக் கூடியவர் பாவியாவார். இதை (தொழுகையை) தடுப்பது பொறுப்பாளர்கள் மீது கட்டாயமாகும்.

(இச்செய்தி ஷாபி மத்ஹபின் இஆனதுல் தாலிபீன் என்ற புத்தகத்தில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் இருக்கின்றது) மக்களிடம் அறிமுகமான ஷஅபான் பிறை 15ல் (இவர்களால் உருவாக்கப்பட்ட 100 ரக்அத்கள்) தொழும் தொழுகையும் ஆஷுரா தினமன்று தொழும் தொழுகையும் மோசமான அனாச்சாரங்களாகும். இது சம்பந்தமாக வரும் அனைத்து ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவைகளாகும்.

(இச்செய்தி ஷாஃபி மத்ஹபின் பத்ஹுல் முயீனில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.) பராஅத் இரவன்று பள்ளி வாசல்களிலும் வீதிகளிலும் கடை வீதிகளிலும் மின் விளக்குகளை வைப்பது (பித்அத்) அனாச்சாரமாகும் என்று ஹனஃபி மத்ஹபின் பஹ்ருர் ராஹிக் என்ற புத்தகத்தில் 5ஆம் பாகத்தில் 232ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

மத்ஹப் புத்தகங்களைப் பின்பற்றும் அறிஞர்கள் இதை ஏன் பின்பற்றுவதில்லை? இவர்கள் குர்ஆன், ஹதீஸையும் பின்பற்றவில்லை; மத்ஹபுகளையும் பின்பற்றவில்லை. மறுமையில் என்ன செய்யப் போகிறார்களோ? அல்லாஹ் இவர்களைக் காப்பாற்றுவானாக!

பராஅத் அன்று நோன்பு நோற்கலாமா?

ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராமாகும். ஏனெனில் ஷஅபான் பாதியாகி விட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ஆதாரப்பூர்வமாக இடம் பெற்றுள்ளது. (நூல்: ஷாஃபி மத்ஹபின் இயானதுத் தாலிபீன், பாகம்: 2, பக்கம்: 273)

*ஏன் இந்த சிறப்பு?*

அன்றைய தினம் இந்த அளவுக்கு என்ன தான் சிறப்பு என்கிறீர்களா? அன்று தான் ஷஅபான் பிறை 15ல் வரும் பராஅத் இரவாம். அந்த இரவைப் புனிதமிக்க இரவாக மாற்ற புதுப் புது பாத்திஹாக்களை உருவாக்கி, வித்தியாசமான முறையில் அலங்கரித்து வடிமைத்துள்ளார்கள் நவீன கால பராஅத் அறிஞர்கள்.

இத்தனை ஆர்ப்பாட்டங்களும் எதற்காகத் தெரியுமா? பராஅத் இரவு கொண்டாடுவதை மார்க்கம் என்று கருதியதால் தான். அது மட்டுமின்றி ஒரு கேள்வியும் கேட்கின்றனர். சிறப்பான இரவில் நற்செயல் செய்வது தவறா? என்பது தான் அக்கேள்வி.

மார்க்கத்தில் ஒரு காரியம் உள்ளது என்றும், இல்லாதது என்றும் சொல்வதற்கு எவருக்கும் எந்த அதிகாரமுமில்லை. இவர்கள் செய்யக் கூடிய இந்த வணக்கம் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதா? குர்ஆனை தெளிவுபடுத்த அனுப்பப்பட்ட தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் செய்துள்ளார்களா? அல்லது கூறியுள்ளார்களா? அல்லது ஸஹாபாக்கள் செய்ய நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. பராஅத் இரவுக்கும் அதற்கான வணக்கங்களுக்கும் ஆதாரம் என்ற பெயரில் ஒரு சில தப்பான விளக்கங்களும் பலவீனமான, இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களையும் கூறி, பாருங்கள்! இஸ்லாத்தில் சொல்லப் பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.

இவர்கள் மறுமையை அஞ்சிக் கொள்ளட்டும்! இவர்கள் காட்டும் அனைத்து செய்திகளும் பலவீனமானவை அல்லது இட்டுக்கட்டப்பட்டவை. இக்கருத்து அவர்களின் மத்ஹப் நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. சில ஆதாரங்கள் இவர்கள் தவறாக விளங்கியவையாகும்.

முதல் ஆதாரம்

தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம். அதில் தான் உறுதியான காரியங்கள் யாவும் பிரிக்கப்படுகின்றன. அல்குர்ஆன் 44:2-4


இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள பாக்கியமுள்ள இரவு, பராஅத் இரவு தான் என்பது இவர்களின் வாதம்.

நமது பதில்

திருக்குர்ஆனை பொறுத்த வரை ஒரு வசனத்தை இன்னொரு வசனம் அல்லது ஹதீஸ் விளக்கும். அந்த அடிப்படையில் இந்த வசனத்தில் உள்ள பாக்கியமுள்ள இரவு எது? என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் பின்வரும் வசனங்கள் அமைந்துள்ளன.

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். (அல்குர்ஆன் 97:1)

அது லைலத்துல் கத்ர் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அந்த இரவு ரமளான் மாதத்தில் தான் உள்ளது என்று பின்வரும் வசனம் விளக்குகின்றது.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன்2:185)


இந்த மூன்று வசனங்களிலிருந்து பாக்கியமிக்க இரவு என்பது ரமளான் மாதத்தில் உள்ள லைலத்துல் கத்ரைக் குறிக்கிறதே தவிர ஷஅபான் மாதத்தின் 15ஆம் இரவு அல்ல என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. எனவே பராஅத் இரவுக்கும் இவர்கள் காட்டும் வசனத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.

இரண்டாம் ஆதாரம்

ஷஅபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, பாவ மன்னிப்பு தேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களை போக்குகின்றேன். என்னிடம் கேட்கக் கூடியவர் உண்டா? நான் அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: இப்னுமாஜா 1378

நமது பதில்
 
இது ஆதாரப்பூர்வமான ஹதீஸல்ல. இது இட்டுக் கட்டப்பட்ட ஒன்றாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்னு அபீ ஸப்ரா என்பவர் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக்கூடியவர் என்று இமாம் அஹ்மதும், இப்னுல் மயீனும் கூறியுள்ளார்கள்.

அஸ்பஹானி அவர்கள் தம்முடைய அத்தர்கீப் நூலில் (ஹதீஸ் எண்: 1831) மற்றொரு அறிவிப்பாளர் தொடர் வழியாக இந்தச் செய்தியை பதிவு செய்துள்ளார்கள். அதில் உமர் பின் மூஸா அல்வஜீஹி என்பவர் இடம் பெறுகிறார். இவரும் நபிகள் நாயகம் கூறாதவற்றை இட்டுக்கட்டிக் கூறுபவர் என இமாம் அபூ ஹாதிம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

மூன்றாம் ஆதாரம்

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு நாள் இரவு, படுக்கையில் நபி (ஸல்) அவர்களை காணாமல் வெளியே தேடி வந்தார்கள். அப்போது அவர்கள் பகீஹ் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். ஷஅபான் மாதம் 15ஆம் இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி கல்ப் கோத்திரத்தாரின் ஆட்டு ரோமத்தின் எண்ணிக்கை அளவுக்கு (பாவங்களை) மன்னிக்கின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: திர்மிதி 670

நமது பதில்
 
இந்த ஹதீஸும் ஆதாரப்பூர்வமானது அல்ல. இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் யஹ்யா பின் அபீ கஸீர் என்பவர் உர்வாவிடமிருந்து கேட்கவில்லை. அதே போன்று ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பவர் யஹ்யா பின் அபீ கஸீரிடமிருந்து செவியேற்கவில்லை என்று இமாம் புகாரீ கூறிய கருத்தைப் பதிவு செய்து, இது பலவீனமான செய்தி என்பதை இந்த ஹதீஸைப் பதிவு செய்த திர்மிதி இமாம் அவர்களே தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.


நான்காவது ஆதாரம்

நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தில் அதிக நோன்பு நோற்பதைப் போன்று வேறு எந்த மாதத்திலும் நோற்பவராக இருக்கவில்லை. ஏனெனில் (வரும்) வருடத்தில் மரணிக்கக் கூடியவர்களின் தவணைகள் அம்மாதத்திலே மாற்றப்பட்டு விடும் என்பதனால் தான். அறிவிப்பாளர்: அதாவு பின் யஸார் நூல்: முஸன்னப் இப்னு அபீஷைபா 9764, ஃபலாயிலுர் ரமளான் - இப்னு அபித் துன்யா, பாகம்: 1, பக்கம்: 9, ஹதீஸ் எண்: 8

நமது பதில்
 
இந்த ஹதீஸை அறிவிக்கும் அதாவு பின் யஸார் என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி (ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும். மேலும் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் அல்மஸ்வூதி என்பவர் இடம் பெறுகிறார். இவர் தம்முடைய இறுதிக் காலகட்டத்தில் பக்தாதிற்கு வந்த பிறகு மூளை குழம்பி விட்டார். அதாவது இவரிடம் பக்தாதில் வைத்துக் கேட்டவர்கள் அறிவிக்கும் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகும். இவரிடமிருந்து அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் ஹைரான் என்பவராவார்.

அல்மஸ்வூதி என்ற அறிவிப்பாளர் மூளை குழம்பிய பிறகு தான் இவர் செவியேற்றுள்ளார். இந்த அடிப்படையிலும் இது மிகப் பலவீனமான நிலையை அடைகிறது.
ஐந்தாவது ஆதாரம்

ரமளான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும், ஷஅபான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும் சூரதுல் இக்லாஸ் எனும் சூராவை 1000 தடவை ஓதி எவர் 100 ரக்அத் தொழுகின்றாரோ அவருக்கு சொர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்படும் வரை அவர் மரணிக்க மாட்டார். அறிவிப்பவர்: முஹம்மத் பின் அலீ நூல்: ஃபலாயிலு ரமளான்- இப்னு அபித் துன்யா, பாகம்: 1, பக்கம்: 10, எண்: 9

நமது பதில்

இந்த ஹதீஸை அறிவிக்கும் முஹம்மத் பின் அலீ என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர்.

நபி (ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும். மேலும் இதுபற்றி அறிவிக்கும் அறிவிப்பாளர் தொடர்களில் உள்ள அதிகமானவர்கள் யாரென்றே அறியப்படாதவர்கள், இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை என இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தம்முடைய மவ்லூஆத் என்ற நூலில் (பாகம்: 2, பக்கம்: 129)குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் ஹதீஸ் கலை ஆய்விலுள்ள பெரும்பான்மையான உலமாக்கள் இதனை நபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என விமர்சித்து இவற்றைச் செய்யக்கூடியவர்கள் நரகத்திற்குரிய காரியத்தைச் செய்கிறார்கள் என மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஷாஃபி மத்ஹபைச் சார்ந்த இமாம் சுயூத்தி ஆவார்கள். அவர்கள் தம்முடைய நூலான அல் அம்ரு பில் இத்திபா வந்நஹ்யு அனில் இப்திதாஃ (நபிவழியை பின்பற்றும் உத்தரவும், பித்அத்துகளை உருவாக்குவதற்குத் தடையும்) என்ற நூலில் (பாகம்: 1, பக்கம்: 17) இவ்வாறு ஷஅபான் 15வது இரவில்,இல்லாத தொழுகையைத் தொழுபவர்களை எச்சரிக்கை செய்துள்ளார்கள். இதனால் ஏற்படும் அனாச்சாரங்களையும், அக்கிரமங்களையும் பட்டியலிட்டுள்ளார்கள்.

அறிஞர் இப்னு அபீ முலைக்கா அவர்கள் இவ்வாறு ஷஅபான் 15வது இரவை சிறப்பிப்பதை மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

அய்யூப் அவர்கள் அறிவிக்கிறார்கள்: நீதிபதியாக இருந்த ஸியாதன் முன்கிரிய்யு என்பவர்,ஷஅபான் 15ஆம் இரவின் கூலி லைலத்துல் கத்ரின் கூலியைப் போன்றதாகும் என்று கூறியதாக இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்களிடம் கூறப்பட்டது. என்னுடைய கையில் பிரம்பு இருக்கும் நிலையில் அவர் இவ்வாறு கூறியதை நான் செவியேற்றிருந்தால் அந்தப் பிரம்பினால் அவரைச் சாத்தியிருப்பேன் என்று இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். நூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் (பாகம்: 4, பக்கம்: 317)

முஹ்ம்மத் பின் ஸலாம் என்பார் அறிவிக்கிறார்கள்: நான் அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்களிடம் ஷஅபான் 15ஆம் இரவில் (அல்லாஹ்) இறங்குவதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் பலவீனமானவனே! 15ஆம் இரவு (பற்றிய செய்திகள் பலவீனமானவையாகும்.) அல்லாஹ் ஒவ்வொரு இரவிலும் இறங்குகிறான் என்று கூறினார்கள். நூல்: அகீததித் ஸலஃப் அஸ்ஹாபுல் ஹதீஸ், பாகம்: 1 பக்கம்: 12


பராஅத் இரவுக்கு இவர்கள் காட்டும் ஆதாரங்கள் ஒன்று கூட ஆதாரப்பூர்வமானவை அல்ல! எனவே இவர்கள் புதுமையான ஒரு காரியத்தை உருவாக்கியுள்ளார்கள். இவர்கள் பின்வரும் நபிமொழிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமையான காரியம் நிராகரிக்கப்படும். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 2697


நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். நூல்: முஸ்லிம் 3243

எனவே இத்தூய்மையான மார்க்கத்தில் அனைத்தும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதில் கூட்டவோ குறைக்கவோ யாருக்கும் அனுமதியில்லை.

அப்படி அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத ஒன்றை எவனாவது ஒருவன் மார்க்கம் என்று செய்தால் அது நிராகரிக்கப்படுவது மட்டுமின்றி, அதைச் செய்தவர் நரகத்திலும் புகுவார். இது நபிகளாரின் எச்சரிக்கையாகும்.

- ஆன்லைன் பி.ஜே

2 comments:

  1. SALAM,விழ்ப்புனர்வூட்டும் நல்ல பதிவு .தகவல்கள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது ..

    புதிய வரவுகள்:கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)

    கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?

    ReplyDelete

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner