Wednesday, January 28, 2015

ஸலாமுக்கு முழுமையாக பதில் சொல்ல வேண்டுமா?

கேள்வி - ஒருவர் சலாம் முழுமையாகச் சொன்னால் பதிலும் முழுமையாகச் சொல்ல வேண்டுமா? - மன்சூர் தம்மாம்

பதில் பி.ஜே - ஒருவர் நமக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என்று பூரணமாக சலாம் கூறும் போது நாமும் அவருக்கு வஅலைக்கும் சலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என்று பூரணமாக சலாத்திற்கு பதில் தர வேண்டும்.

ஏனென்றால் நமக்கு கூறப்பட்ட முகமனையோ அல்லது அதை விட சிறந்த முகமனையோ கூறும் படி அல்லாஹ் கட்டளையிடுகிறான். பதிலளிப்பவரின் சலாம் முதலில் சலாம் கூறியவரின் சலாத்தைப் போன்று இருக்க வேண்டும். அல்லது அதை விடச் சிறப்பானதாக இருக்க வேண்டும்.

وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا إِنَّ اللَّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ حَسِيبًا(86)4

உங்களுக்கு வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விட அழகிய முறையிலோ, அல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள்! அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் (4 : 86)


ஆதம் (அலை) அவர்கள் மலக்குமார்களுக்கு சலாம் சொன்னார்கள். மலக்குமார்கள் ஆதம் (அலை) அவர்கள் கூறிய சலாத்தை விட சிறந்த சலாத்தைக் கூறினார்கள். அந்த மலக்குமார்கள் கூறிய சலாமே முஹம்மது நபியின் சமுதாயமாகிய நாம் கூற வேண்டிய சலாமாகும்.

حدثنا يحيى بن جعفر حدثنا عبد الرزاق عن معمر عن همام عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال خلق الله آدم على صورته طوله ستون ذراعا فلما خلقه قال اذهب فسلم على أولئك النفر من الملائكة جلوس فاستمع ما يحيونك فإنها تحيتك وتحية ذريتك فقال السلام عليكم فقالوا السلام عليك ورحمة الله فزادوه ورحمة الله فكل من يدخل الجنة على صورة آدم فلم يزل الخلق ينقص بعد حتى الآن

அல்லாஹ் ஆதமைத் தன்னுடைய உருவில் படைத்தான். அப்போது அவரது உயரம் அறுபது முழங்களாக இருந்தது. அவர்களைப் படைத்த போது நீங்கள் சென்று அங்கு அமர்ந்து கொண்டிருக்கும் வானவர்களுக்கு சலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் அது தான் உங்களது முகமனும் உங்களது சந்ததிகளின் முகமனும் ஆகும். என்று இறைவன் சொன்னான். அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று) அஸ்ஸலாமு அலைக்கும் என்று முகமன் சொன்னார்கள். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் (சாந்தியும் இறைவனின் கருணையும் உங்கள் மீது நிலவட்டும்) என்று வானவர்கள் பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (6227)


மேலும் பதில் சலாம் கூறுவதை நபி (ஸல்) அவர்கள் கடமை என்று கூறியுள்ளார்கள். சலாம் கூறியவர் பூரணமாக சலாம் கூறி நாம் குறைவாக பதில் சலாம் கூறினால் நாம் அவருக்கு செய்ய வேண்டிய கடமையில் குறைவு ஏற்பட்டதாக ஆகி விடுகின்றது.

حدثنا محمد حدثنا عمرو بن أبي سلمة عن الأوزاعي قال أخبرني ابن شهاب قال أخبرني سعيد بن المسيب أن أبا هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاطس تابعه عبد الرزاق قال أخبرنا معمر ورواه سلامة بن روح عن عقيل         

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓரு முஸ்லிம் (இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து.

1. சலாமிற்குப் பதில் சொல்லுதல்.

2. நோயாளியை நலம் விசாரித்தல்.

3. ஜனாசாவைப் பின்தொடர்ந்து செல்லுதல்.

4. அழைப்பை ஏற்றுக் கொள்ளுதல்.

5. தும்மியவருக்கு எர்ஹமுக்கல்லாஹ் என்று கூறுதல்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா  ரலி

நூல் : ( புகாரி 1240 )


حدثنا أحمد بن حنبل حدثنا عبد الرحمن بن مهدي عن سفيان عن أبي مالك الأشجعي عن أبي حازم عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال لا غرار في صلاة ولا تسليم قال أحمد يعني فيما أرى أن لا تسلم ولا يسلم عليك ويغرر الرجل بصلاته فينصرف وهو فيها شاك

சலாம் கூறுவதிலும் தொழுவதிலும் குறைவு வைக்கக் கூடாது.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : அபூதாவூத் (793)


சலாம் கூறியவருக்காக இறைவனிடம் சாந்தியை வேண்டுவதுடன் இறைவனுடைய அருளையும் அபிவிருத்தியையும் சேர்த்து வேண்டினால் நன்மைகள் அதிகம் கிடைக்கும்.

حدثنا محمد بن كثير أخبرنا جعفر بن سليمان عن عوف عن أبي رجاء عن عمران بن حصين قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال السلام عليكم فرد عليه السلام ثم جلس فقال النبي صلى الله عليه وسلم عشر ثم جاء آخر فقال السلام عليكم ورحمة الله فرد عليه فجلس فقال عشرون ثم جاء آخر فقال السلام عليكم ورحمة الله وبركاته فرد عليه فجلس فقال ثلاثون حدثنا إسحق بن سويد الرملي حدثنا ابن أبي مريم قال أظن أني سمعت نافع بن يزيد قال أخبرني أبو مرحوم عن سهل بن معاذ بن أنس عن أبيه عن النبي صلى الله عليه وسلم بمعناه زاد ثم أتى آخر فقال السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته فقال أربعون قال هكذا تكون الفضائل

''நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் '' என்று கூறினார். நபியவர்கள் அவருக்குப் பதில் ஸலாம் கூறினார்கள். பின்னர் அவர் உட்கார்ந்தார்.  நபி (ஸல்) அவர்கள் (இவருக்கு) பத்து (நன்மைகள்) என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்குப் பதில் கூறியவுடன் அவர் அமர்ந்தார். நபியவர்கள் ''(இவருக்கு) இருபது (நன்மைகள்)'' என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் பதில் கூறினார்கள். பிறகு அவர் உட்கார்ந்தார். நபி (ஸல்) அவர்கள் ''(இவருக்கு) முப்பது (நன்மைகள்)'' என்று கூறினார்கள்.''

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுசைன் (ரலி)

நூல் : அபூ தாவூத் (4521)

Wednesday, January 21, 2015

உணவுக்காக விலங்குகளைக் கொல்வது பாவமா?

கேள்வி : தாவரங்களுக்கு மைய நரம்பு மண்டலம் (ஈங்ய்ற்ழ்ஹப் சங்ழ்ஸ்ர்ன்ள் நஹ்ள்ற்ங்ம்) இல்லாததால் அவை வலியை உணர முடியாது. உணவுக்காகக் கொல்லும் போது தாவரங்களுக்கு வலிப்பதில்லை. ஆனால் விலங்குகளுக்கு மைய நரம்பு மண்டலம் (ஈங்ய்ற்ழ்ஹப் சங்ழ்ஸ்ர்ன்ள் நஹ்ள்ற்ங்ம்) இருப்பதால் அவைகளால் வலியை உணர முடியும். அதனால் உணவுக்காக விலங்குகளைக் கொல்வது பாவம் என்று வாதிடுகிறார்கள். இதற்கு தங்களின் பதில் என்ன? விளக்கம் தரவும். - பி.எம். அஜீஸ், திருத்துறைப்பூண்டி.

பதில் பி.ஜே : ஒரு உயிரை எப்படிக் கொல்லலாம்? கொன்று எப்படிச் சாப்பிடலாம் என்பது அவர்களின் வாதமா? வலியை உணருமா? உணராதா? என்பது அவர்களின் வாதமா?

இதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

நாம் 20-ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம். ஆடு மாடுகளைக் கூட வலியை உணராத வகையில் மயக்க நிலைக்குக் கொண்டு சென்று அறுக்க முடியும். அப்படி அறுக்கப்படும் உணவை அவர்கள் உட்கொள்ளத் தயார் என்றால் தான் இவ்வாறு வாதிட வேண்டும்.

'வலியை உணராத வகையில் பிராணிகளை நாம் அறுத்து உண்போமே' என்று அவர்கள் பிரச்சாரம் செய்து தாமும் உண்ண வேண்டும்.


ஆனால் அவ்வாறு உண்ண மாட்டார்கள். உண்ணக் கூடாது என்றே கூறுவார்கள்.

அப்படியென்றால் வலியை உணர்வது பற்றி எடுத்துக் கூறி வித்தியாசப்படுத்துவது போலித்தனமானது.

இவர்களின் வாதப்படி மனிதனைக் கூட வலியை உணராத வகையில் கொல்வது பாவமில்லை என்று ஆகிவிடும் அல்லவா? வலியை உணராத வகையில் மனிதனை இன்றைக்குக் கொலை செய்வது சாத்தியமான ஒன்றுதான்.

இதெல்லாம் குற்றம் என்று கூறுவார்களானால் வலியை உணர்வது என்ற காரணம் பொய் என்பது தெளிவு. ஒரு உயிரை எப்படி எடுக்கலாம் என்ற உள்ளுணர்வு தான் அசைவத்தைத் தவிர்க்கத் தூண்டுகிறது.

இந்தக் காரணம் தாவரத்திலும் இருக்கிறது.

தாவரம் என்ற உயிரை - அது வலியை உணரா விட்டாலும் - அதைக் கொல்வதும், சாப்பிடுவதும் என்ன நியாயம் என்ற கேள்வி விடையின்றி அப்படியே தான் உள்ளது.

இன்னொரு விஷயம் உங்களுக்குத் தெரியுமா? அறிவியல் முடிவின் படி இஸ்லாம் கூறும் முறையில் பிராணிகளை அறுத்தால் அவை தாவரங்களைப் போலவே வலியை உணராது.


உணவுக்காக விலங்குகளையும், பறவைகளையும் கொல்லுவதற்கு பலரும் பலவிதமான வழிகளைக் கடைப்பிடிக்கின்றனர்.

சிலர் கோழி போன்ற பறவையினங்களை நீரில் முக்கி திக்குமுக்காட வைத்து கொல்லுகின்றனர். மேல்நாடுகளில் கிட்டத்தட்ட இதே முறையில் விலங்குகளை கைத்துப்பாக்கியால் தலையில் சுட்டு அவைகளை நிலைகுலையச் செய்து கொல்லுகின்றனர். மனிதர்களுக்கு வாழ்க்கையின் எல்லாத் துறையிலும் இஸ்லாம் வழிகாட்டியிருப்பது போல் இந்தத் துறையிலும் - அதாவது உயிரினங்களை உணவுக்காகக் கொல்வதிலும் - திட்டவட்டமான வழியைச் சொல்லிக் கொடுக்கிறது. இறந்து போன பிராணிகளையும், பிராணிகளின் ஓட்டப்பட்ட ரத்தத்தையும் இஸ்லாம் தடை செய்கிறது.

பிராணிகளைக் கொல்லும் போது கூரிய ஆயுதம் கொண்டு கழுத்தை அறுத்து அவைகளைக் கொல்லும் படி பணிக்கிறது.

அப்படிச் செய்யும் போது தலைக்கு ரத்ததைக் கொண்டு செல்லும் ரத்த நாளமும், ரத்தத்தை தலைப் பகுதியிலிருந்து வெளிக் கொண்டு வரும் ரத்தக் குழாய்களும் அறுபடுவதோடு சுவாசக் குழாய் மற்றும் உணவுக் குழாய் முதலியவை ஒரு சேர அறுக்கப்பட்டு விடுகின்றன. அதன் காரணமாக அறுக்கப்பட்ட உடலிலிருந்து ரத்தம் முற்றிலுமாக வெளியேற்றப்படுகிறது. ஆனால் அடுத்த சில வினாடிகளில் வலிப்பினால் அவைகள் துடிக்கின்றன.

இதனைக் காணுகின்றவர்கள் இஸ்லாமிய முறை பிராணி களை வதை செய்யும் முறை என்றும் அது மனிதாபிமான செயலுக்கு ஏற்றதல்ல என்றும் வாதிடுகின்றனர்.

அவர்களின் இந்த குற்றச்சாட்டு உண்மை தானா? இஸ்லாம் சொல்லும் ஹலால் வழியை விடவும் மேற்கத்தியர்கள் கையாளும் முறை சிறந்தது தானா? அம்முறையைக் கையாள்வதால் உயிரினங்கள் வலியின்றி துன்பப்படாமல் இறக்கின்றனவா? அப்படிக் கொல்லப்படும் விலங்குகளின் மாமிசம் இரத்தம் ஓட்டப்பட்ட ஹலால் மாமிசத்தை விடவும் உண்ணுவதற்கு ஏற்றத் தகுதியை அடைகிறதா? மேற்கண்ட கேள்விகளுக்கு விடை காணும் நோக்கில் ஜெர்மனி நாட்டில் உள்ள ஹனோவர் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வை நடத்தியவர்கள் பேராசிரியர் சூல்ட்ஜ் மற்றும் அவரது துணை ஆய்வாளர் டாக்டர் ஹாஸிம் ஆவார்கள்.

அவர்கள் செய்த பரிசோதனையின் விவரத்தையும் அதன் முடிவுகளின் விவரத்தையும் கீழே தருகின்றோம்.

1) முதலில் உணவுக்காக அறுக்கப்படும் விலங்குகள் தேர்வு செய்யப்பட்டன. 2) அறுவை செய்து அவ்விலங்குகளின் தலையில் மூளையைத் தொடும்படி பல பகுதிகளில் மின்னணுக்கருவிகள் பொருத்தப்பட்டன.

3)  உணர்வு திரும்பியதும். முழுவதுமாக குணமடைய பல வாரங்களுக்கு அப்படியே விடப்பட்டன.

4) அதன் பிறகு பாதி எண்ணிக்கை விலங்குகள் இஸ்லாமிய ஹலால் முறைப்படி அறுக்கப்பட்டன.

5) மறு பாதி எண்ணிக்கை விலங்குகள் மேற்கத்தியர் கையாளும் முறைப்படி கொல்லப்பட்டன.

6) பரிசோதனையின் போது கொல்லப்பட்ட எல்லா விலங்குகளுக்கும் ஊஊஏ மற்றும் ஊஈஏ பதிவு செய்யப்பட்டன. அதாவது ஊஊஏ மூளையின் நிலையையும், ஊஈஏ இருதய நிலையையும் படம் பிடித்துக் காட்டின. இப்போது மேற்கண்ட பரிசோதனையின் முடிவுகளையும், அதன் விளக்கங்களையும் காண்போம்.

இஸ்லாமிய ஹலால் முறை:


1) இம்முறையில் விலங்குகள் அறுக்கப்பட்ட போது, முதல் மூன்று வினாடிகளுக்கு ஊஊஏயில் எந்த மாற்றமும் தென்படவில்லை. அறுக்கப்படுவதற்கு முன்னிருந்த நிலையிலேயே அது தொடர்ந்து நீடித்தது. விலங்குகள் அறுக்கப்படும் போது அவை வலியினால் துன்பப்படவில்லை என்பதை இது காட்டியது.

2) மூன்று வினாடிகளுக்குப் பின் அடுத்த மூன்று வினாடிகளுக்கு விலங்குகள் ஆழ்ந்த தூக்கம் அல்லது உணர்வற்ற நிலைக்கு ஆளாகின்றன என்பதை ஊஊஏ பதிவு காட்டியது. அந்நிலை உடம்பிலிருந்து அதிகப்படியான ரத்தம் பீறிட்டு வெளியாவதால் ஏற்படுகின்றது.

3) மேற்கண்ட ஆறு வினாடிகளுக்குப் பின் ஊஊஏ பூஜ்ய நிலையைப் பதிவு செய்தது. அறுக்கப்பட்ட விலங்கு எந்த வலி அல்லது வதைக்கும் ஆளாகவில்லை என்பதை இது காட்டியது.

4) மூளையின் நிலையை பூஜ்யமாகப் பதிவு செய்த நேரத்திலும், இதயத் துடிப்பு நிற்காமல் தொடர்ந்து துடிப்பதாலும் உடலில் ஏற்படும் வலிப்பினாலும் உடலிலிருந்து முற்றிலுமாக ரத்தம் வெளியேற்றப்படுகிறது. அதனால் அந்த மாமிசம் உணவுக்கேற்ற சுகாதார நிலையை அடைகிறது.


மேற்கத்தியரின் முறை:


1) மேற்கண்ட முறையில் கொல்லப்பட்ட விலங்குகள் உடனே நிலை குலைந்து உணர்வற்ற நிலைக்குப் போகின்றன.

2) அப்போது விலங்குகள் மிகக் கடுமையான வலியால் அவதியுறுவதை ஊஊஏ பதிவு காட்டியது. 

3) அதே நேரத்தில் விலங்குகளின் இதயம் ஹலால் முறையில் அறுக்கப்பட்ட விலங்குகளோடு ஒப்பிடும் போது முன்னதாகவே நின்று விடுகிறது. அதனால் உடல் மிகுதியான ரத்தம் தேங்கிவிடுகிறது. ரத்தம் உறைந்த அந்த மாமிசம் உட்கொள்ளத்தக்க சுகாதார நிலையை அடையவில்லை.

மேற்கண்ட ஆய்வுகள் இஸ்லாமிய ஹலால் முறையே சிறந்தது என்பதை எடுத்துக் காட்டுவதோடு அம்முறையே மனிதாபிமான முறை என்பதையும் நிரூபித்துள்ளது. ஹலால் முறையில் உயிர்கள் கொல்லப்படும் போது அவை வலி அல்லது வதையினால் துன்பப்படுவதில்லை. இங்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வார்த்தை ஒன்றை நாம் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

அல்லாஹ் எல்லாக் காரியங்களிலும் இரக்கத்தையும், கருணையையும் நாடுகிறான். ஆகவே நீங்கள் (விலங்குகளை) அறுக்கும் முன் உங்கள் ஆயுதத்தை நன்றாக (தீட்டி) கூராக்கிக் கொள்ளுங்கள். இதன் மூலம் அறுக்கப்படும் பிராணிக்கு துன்பத்தை நீக்குங்கள். (முஸ்லிம்: 3615)

வலியை உணர்வது தான் காரணம் என்று வைத்துக் கொண்டாலும் இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்பட்டதை அவர்கள் தாராளமாக உண்ணலாம்.

அவர்கள் கூறுவது போலித்தனமான வாதம் என்பதற்கு மற்றொரு சான்றையும் காட்ட முடியும்.

நாம் கொல்லாமல் தாமாகச் செத்துவிட்ட உயிரினங்களைச் சாப்பிட நாங்கள் தயார் என்று அவர்கள் கூற வேண்டும். ஏனெனில் அதை இவர்கள் கொல்லவில்லை. செத்த பின் அதைத் துண்டு துண்டாக வெட்டினாலும் அது வலியை உணராது. எனவே இதைச் சாப்பிடுவார்களா? முட்டை சாப்பிடுவார்களா? செத்த மீன்களைச் சாப்பிடுவார்களா? சாப்பிட மாட்டார்கள். இவற்றையும் சாப்பிடக் கூடாது என்றே அவர்கள் கூறுவார்கள். அப்படியிருக்க ஏன் போலியான காரணம் கூற வேண்டும்?

அர்த்தமுள்ள கேள்விகள்! அறிவுப்பூர்வமான பதில்கள் நூல்களிலிருந்து...

Sunday, January 18, 2015

ஹதீஸ்கள் குர்ஆனிற்கு முரண்படுமா? - தொடர் 16

இந்த நூல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போது அப்பாஸ் அலி எழுதியது. தற்போது ஜமாஅத்திலிருந்து வெளிவந்தவுடன் இந்த நூலில் உள்ள கருத்துகளுக்கு முழுவதும் மாறுபடுவதாகவும், இனி இந்த நூலிற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

 6. குர்ஆனில் நீக்கம் செய்யப்பட்டதா?


ஹதீஸ் :

குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால் தான் பால்குடி உறவு உண்டாகும் என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என்று மாற்றப்பட்டது. இவ்வசனம் குர்ஆனில் ஓதப்பட்டு வந்த காலத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் (2876)


(திருமணம் செய்த பிறகு விபச்சாரம் செய்தவன்) கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்ற வசனமும் (தாய் மகன் என்ற உறவை ஏற்படுத்துவதற்கு) பருவ வயதை அடைந்தவருக்கு பத்து முறை பால் புகட்ட வேண்டும் என்ற வசனமும் இறக்கப்பட்டது. எனது வீட்டில் உள்ள கட்டிலுக்கு அடியில் ஒரு தாளில் அவை (எழுதப்பட்டு) இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது அவர்களுடைய விஷயத்தில் கவனம் செலுத்தினோம். எங்களுடைய வீட்டுப் பிராணி ஒன்று (வீட்டிற்குள்) நுழைந்து அந்தத் தாளைச் சாப்பிட்டுவிட்டது.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : அஹ்மத் (20112)


ஐந்து தடவை பால் குடித்தால் பால்குடி உறவு ஏற்பட்டு விடும் என்ற வசனம் நபி (ஸல்) அவர்கள் இறக்கும் வரை குர்ஆனில் இருந்தது. அதை மக்களும் ஓதிக் கொண்டிருந்தார்கள். பிராணி ஒன்று வீட்டினுள் நுழைந்து எழுதி வைக்கப்பட்டிருந்த அந்த வசனத்தை உண்டு விட்டது. அதனால் இன்று அந்த வசனம் குர்ஆனில் இல்லை என்று மேலுள்ள செய்திகள் கூறுகிறது. பல காரணங்களால் இச்செய்தி தவறாகிறது.

1. குர்ஆனில் இருந்த ஒரு வசனம் தவறிவிட்டது என்று இந்தச் செய்தி கூறுகிது. ஆனால் குர்ஆனில் எதுவும் தவறாது. குர்ஆனைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான் என்று குர்ஆன் கூறுகிறது.

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.

அல்குர்ஆன் (15 : 9)


குர்ஆனில் எந்த விதமான மாற்றத்தையும் யாரும் ஏற்படுத்த முடியாது என்று குர்ஆன் கூறும் போது நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு குர்ஆனில் இருந்த ஒரு வசனத்தை மக்கள் குர்ஆனுடன் சேர்க்காமல் விட்டு விட்டார்கள். இன்றைக்கு நம்மிடம் இருக்கின்ற குர்ஆன் முழுமையானதல்ல. இன்னும் இரண்டு வசனம் அத்துடன் சேர்க்கப்பட வேண்டியுள்ளது என்று இந்த செய்தி கூறுகிறது. எனவே இந்தச் செய்தியை ஏற்றுக் கொள்ள முடியுôது.

2. குர்ஆன் எழுத்து வடிவில் பாதுகாக்கப்பட்டதைப் போல் பல நபித்தோழர்களின் உள்ளங்களிலும் பாதுகாக்கப்பட்டது. இதை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகிறான்.

மாறாக, இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கிறது. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள்.

அல்குர்ஆன் (29 : 49)


ஆனால் இச்செய்தி எழுதிவைக்கப்பட்டிருந்த தாளை பிராணி சாப்பிட்டதால் தான் அந்த வசனம் குர்ஆனில் இல்லை என்று கூறுகிது. இது சரியான காரணம் அல்ல. ஏனென்றால் எழுதி வைக்கப்பட்ட தாள் தொலைந்து விட்டாலும் பலருடைய உள்ளங்களில் அந்த வசனம் பாதுகாக்கப்பட்டிருக்கும். வசனம் தொலைந்து போனதற்குச் சொல்லப்படும் தவறான இந்தக் காரணத்தை வைத்தே இது உண்மை இல்லை என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.

3. குர்ஆனுடைய தனித்தன்மை என்னவென்றால் பல நபித்தோழர்களின் அங்கீகாரத்துடன் ஏக மனதாக குர்ஆன் தொகுக்கப்பட்டது. இக்குர்ஆனை தொகுக்கும் பணியை ஸைத் பின் சாபித் (ரலி) அவர்கள் செய்தார்கள். பல நபித்தோழர்களிடம் சென்று அவர்கள் வைத்திருந்த வசனங்களை ஒன்று திரட்டி பல நபித்தோழர்கள் முன்னிலையில் உஸ்மான் (ரலி) அவர்களின் காலத்தில் குர்ஆன் தொகுக்கப்பட்டது.

ஐந்து தடவை பால் புகட்டினால் பால்குடி உறவு ஏற்படும் என்ற வசனம் குர்ஆனில் இருந்ததாக ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர வேறு எந்த நபித்தோழர்களும் கூறவில்லை. குர்ஆனை மனனம் செய்து வைத்திருந்த பல நபித்தோழர்கள் இந்த வசனம் குர்ஆனில் உள்ளது என்று கூறவில்லை. குர்ஆனைத் தொகுக்கும் வேலை முடிக்கப்பட்ட போது ஏன் இந்த வசனத்தை விட்டு விட்டீர்கள் என்று யாரும் கேட்கவும் இல்லை.

அந்த நேரத்தில் வாழ்ந்து கொண்டிருந்த ஆயிஷா (ரலி) அவர்கள் கூட எந்த விதமான ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒட்டுமொத்த மக்களுக்கும் அல்லாஹ் இறக்கிய வசனத்தை ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர்த்து அந்த சமுதாயம் முழுவதும் எப்படி மறந்திருக்கும்?

4. இந்த வசனம் பருவ வயதை அடைந்தவர்களுக்கு பால் புகட்டுவது தொடர்பானது என்று இந்தச் செய்தி சொல்கிறது. சிறுவர்களுக்குத் தான் பால்குடி சட்டம் என்று திருக்குர்ஆன் பல இடங்களில் சொல்கிறது. சாலிமுடைய சம்பவத்தை விளக்கும் போது இது பற்றி தெளிவாகக் கூறினோம். பால்குடி உறவு இரண்டு வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்குத் தான் என்று குர்ஆன் கூறும் போது பெரியவர்களுக்கு 10 முறை பால் புகட்டுமாறு முரண்பாடாக குர்ஆன் கூறாது. 10 தடவையாக இருந்ததை 5 தடவையாக மாற்றி பருவவயதை அடைந்தவர்களுக்கு பால்புகட்டும் அசிங்கத்தை குர்ஆன் கூறுமா?

இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்பவர்கள் இந்த வசனத்தை அடிப்படையாகக் கொண்டு பருவ வயதை அடைந்தவர்களுக்கு பால் புகட்டலாம் என்று ஒரு தீர்ப்பு கூடத் தர மாட்டார்கள். இதைத் தங்களது வாழ்கையில் செயல்படுத்தவும் மாட்டார்கள். பருவ வயதை அடைந்தவர்களுக்கு பால் புகட்டலாம் என்ற சட்டம் குர்ஆன் கூறும் சட்டமாக இருந்தால் ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாமல் பல நபித்தோழர்கள் கூறியிருப்பார்கள். ஆனால் அவ்வாரு யாரும் கூறவில்லை.

5. பால்குடி உறவு ஏற்படுவதற்கு ஐந்து முறை பால் புகட்ட வேண்டும் என்ற வசனம் குர்ஆனில் இருந்ததாக ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக வந்துள்ளது. ஆனால் இதற்கு மாற்றமாக இரண்டுக்கு மேல் குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த அடிப்படையில் இந்த ஹதீஸ் மற்ற விமர்சிக்கப்படாத ஹதீஸ்களுடன் மோதுகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தடவையோ அல்லது இரு தடவைகளோ மட்டும் பால் குடிப்பதால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்படாது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : உம்முல் ஃபள்ல் (ரலி)

நூல் : முஸ்லிம் (2872)


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தடவையோ அல்லது இரு தடவைகளோ மட்டும் பால் குடிப்பதால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்படாது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி)

நூல் : நஸயீ (3257)


6. ஒருவரிடமிருந்து முரண்பட்ட பலவிதங்களில் செய்தி அறிவிக்கப்பட்டால் அந்தச் செய்திக்கு ஹதீஸ் கலை அறிஞர்கள் முள்தரப் (குளறுபடியானது) என்று சொல்வார்கள். இவ்வாறு முரண்பட்டு வரும் செய்திகள் அனைத்தும் நம்பகமான உறுதிமிக்க ஆட்கள் வழியாக வந்தாலும் முரண்பாடு வந்து விட்டதால் இதை அறிஞர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஐந்து முறை பால் குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்று நாம் விமர்சித்துக் கொண்டிருக்கின்ற ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் கூறுகிறது. பத்து முறை பால் குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்றும் மூன்று முறை பால்குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்றும் ஏழு முறை பால்குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்றும் ஆயிஷா (ரலி) அவர்கள் கருதியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று ஐந்து ஏழு பத்து என்று நான்கு விதத்தில் முரண்பட்டு அறிவிப்பு வருவதால் இந்த செய்தி குளறுபடியானதாகி விடுகிறது.

எனக்குப் பால்புகட்டுவதற்காக ஆயிஷா (ரலி) அவர்கள் என்னை அவர்களின் சகோதரியும் அபூபக்கர் (ரலி) அவர்களின் மகளுமான உம்மு குல்சூம் (ரலி) அவர்களிடம் அனுப்பினார்கள். இவர் என்னிடம் வந்து செல்வதற்காக 10 முறை இவருக்கு நீங்கள் பால் புகட்டுங்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் (உம்மு குல்சூமிடம்) கூறினார்கள். உம்மு குல்சூம் எனக்கு மூன்று தடவை பால் புகட்டினார்கள். பின்பு அவர்கள் நோயுற்றதால் எனக்கு மூன்று தடவை தவிர அவர்கள் பாலூட்டவில்லை. உம்மு குல்சூம் (ரலி) அவர்கள் எனக்கு முழுமையாக 10 முறை பாலூட்டாததால் நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து செல்லவில்லை.

அறிவிப்பவர் : சாலிம் பின் அப்தில்லாஹ்

நூல் : பைஹகீ பாகம் : 7 பக்கம் : 457


சஹ்லா (ரலி) அவர்களுடைய சம்வத்தில் சம்பந்தப்பட்ட சாலிம் வேறு. மேலுள்ள செய்தியில் சொல்லப்பட்ட சாலிம் வேறு. சாலிம் பின் அப்தில்லாஹ் என்பவர் உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்தில் தான் பிறக்கிறார். சாலிமிற்கு 10 முறை பால் புகட்டுமாறு ஆயிஷா (ரலி) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தடவையோ அல்லது இரு தடவைகளோ மட்டும் பால் உறிஞ்சிக் குடிப்பதால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்படாது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் (2869)

ஏழு தடவைக்கு குறைவாக பால் புகட்டினால் பால்குடி உறவு ஏற்படாது என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி)

நூல் : முஸன்னஃப் அப்திர்ரஸ்ஸாக் பாகம் : 7 பக்கம் : 466   


பல குழப்பங்கள் இந்தச் செய்தியில் இருப்பதால் எதிர்த் தரப்பினர் ஆதரிக்கும் அறிஞர்களில் பலர் நாம் எடுத்து வைத்திருக்கும் கேள்விகளை எழுப்பி இந்த ஹதீஸை மறுத்துள்ளார்கள். இந்த ஹதீஸை அறிவிக்கும் இமாம் மாலிக் இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளவில்லை.

சர்ஹஸீ குர்துபீ இப்னு அப்தில் பர் அலாவுதீன் என்ற இப்னுத் தர்குமானீ அபூ ஜஃஃபர் தஹாவீ நிலாமுத்தீன் நய்சாபூரி மற்றும் ஸர்கானீ உட்பட பலர் இந்த ஹதீஸ் தரும் தவறான கருத்துக்களை நிராகரித்துள்ளார்கள். குறிப்பாக இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இந்த ஹதீஸை மறுத்துள்ளார்கள்.

இமாம் இப்னு ஹஜரின் கூற்று :


فتح الباري - ابن حجر ள جزء 9 - صفحة 147 ன

وأيضا فقول عائشة عشر رضعات معلومات ثم نسخن بخمس معلومات فمات النبي صلى الله عليه وسلم وهن مما يقرأ لا ينتهض للاحتجاج على الأصح من قولي الاصوليين لأن القرآن لا يثبت الا بالتواتر والراوي روى هذا على أنه قرآن لا خبر فلم يثبت كونه قرآنا ولا ذكر الراوي أنه خبر ليقبل قوله فيه والله أعلم
இப்னு ஹஜர் அவர்கள் எத்தனை முறை பால் புகட்ட வேண்டும் என்பது சம்பந்தமாக ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து பல முரண்பட்ட தகவல்கள் வருவதாகக் கூறிவிட்டு பின்வருமாறு கூறுகிறார். குறிப்பிட்ட பத்து தடவை பாலருந்தினால் பால்குடி உறவு ஏற்படும் என்ற சட்டம் குறிப்பிட்ட ஐந்து தடவையாக மாற்றப்பட்டது. இந்த வசனங்கள் குர்ஆனில் ஓதப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள் என்ற ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்று அறிஞர்களின் சரியான கூற்றுப்படி ஆதாரத்திற்கு தகுதியாகாது.

ஏனென்றால் அதிகமானவர்களின் வழியாகத் தான் குர்ஆன் நிரூபணமாகும். இதை அறிவிப்பவர் இந்தக் கருத்தை ஹதீஸ் என்று சொல்லாமல் குர்ஆன் என்று சொல்கிறார். எனவே (அதிகமானோர் இவ்வாறு கூறாததால்) இது குர்ஆனாக ஆகாது. அறிவிப்பாளரின் கூற்று ஏற்றுக் கொள்ளப்படும் விதத்தில் அவர் இதை ஹதீஸ் என்றும் சொல்லவில்லை.

நூல் : ஃபத்ஹுல் பாரீ பாகம் : 9 பக்கம் : 147

அவர்களது விளக்கம்


குர்ஆனைப் பாதுகாப்பதாக அல்லாஹ் கூறும் வசனத்தில் திக்ர் என்ற வாசகம் வந்துள்ளது. திக்ர் என்பது குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டையும் எடுத்துக் கொள்ளும். ஹதீஸைப் பாதுகாப்பதாகவும் அல்லாஹ் கூறுவதால் ஐந்து தடவை பால்குடித்தால் பால்குடிஉறவு ஏற்படும் என்ற வசனம் ஹதீஸின் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று இதைச் சரிகாணுபவர்கள் கூறுகிறார்கள்.

நமது விளக்கம்


குர்ஆனில் இல்லாத ஒரு வசனம் இருந்ததாகக் கூறுவதோடு தங்களின் அலட்சியத்தால் காணாமல் போய்விட்டது என்று ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள். இதனால் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஓதப்பட்டு வந்த அந்த வசனம் இதன் பிறகு ஓதப்படவில்லை. இன்று வரை நாமும் அந்த வசனத்தை ஓதுவது கிடையாது.

முஸ்லிம்கள் பழைமைவாதிகளாக சித்தரிக்கப்படுவது ஏன்?

கேள்வி : முஸ்லிம்கள் பழைமைவாதிகளாகச் சித்தரிக்கப்படுவது ஏன்? முஸ்லிம்கள் தங்களது எதிரிகளை இனங்கண்டு கொள்ளாதது ஏன்? அனைத்து பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரை இந்துக்கள் என நினைத்து அவர்கள் எதிரிகளாகக் கருதுவது ஏன்? என்று பெங்களூரிலிருந்து வெளியாகும் தலித் வாய்ஸ் இதழில் ஒரு வாசகர் கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கு எவ்வாறு விளக்கம் அளிப்பது? - சாஜிதா ஹுஸைன், சென்னை.

பதில் பி.ஜே : முஸ்லிம்கள் பழமைவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டால் தான் இஸ்லாத்தின் பால் மற்றவர்கள் கவனத்தைத் திருப்ப மாட்டார்கள் என்பதற்காக திட்டமிட்டு இத்தகைய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நரபலியிடுதல், ஜோதிடம் பார்த்தல், விதவை விவாகம் மறுத்தல், பெண் சிசுக்களைக் கொல்லுதல், தீண்டாமையைக் கடைப்பிடித்தல், போன்ற எல்லா விதமான பழமை வாதத்திலிருந்தும் முஸ்லிம்கள் முற்றிலும் விடுபட்டுள்ளனர்.

மாயம், மந்திரம், புரோகிதம் போன்ற பித்தலாட்டங் களிலிருந்தும் முற்றிலுமாக விடுபட்ட சமுதாயமாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருவது கண்கூடாகத் தெரிந்த பின்பும் பழமைவாதிகளாகச் சித்தரிக்கப்படுவதற்குக் காரணம் இஸ்லாம் வளர்ந்து விடக்கூடாது என்ற ஒரே நோக்கம் தான்.

தாழ்த்தப்பட்டவர்களையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் முஸ்லிம்கள் பகைவர்களாகக் கருதுகிறார்கள் என்பதும் தவறாகும்.

பெரும்பாலான முஸ்லிம்கள் இந்துத்துவ சிந்தனை இல்லாத மேல் ஜாதி இந்துக்களையே முஸ்லிம்கள் எதிரிகளாகக் கருதாத போது தங்களைப் போலவே ஒடுக்கப்பட்ட மக்களைப் பகைவர்களாகக் கருத மாட்டார்கள்.

ஆயினும் சிலரது சதியின் காரணமாக ஒரு சில பகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பகைமை இருக்கிறது.

இத்தகைய மோதல்கள் குறைவான அளவே உள்ளன என்றாலும் இத்தகைய நிலைமை தாழ்த்தப்பட்டவர்கள் இஸ்லாத்தில் இணைவதற்கு பெரிய தடையாக உள்ளது என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும். தங்கள் சுமூகமான நடவடிக்கை மூலம் இத்தகைய எண்ணத்தை நீக்கப் பாடுபட வேண்டும்.

பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து

புதுமனை புகுவிழா கொண்டாடலாமா?

கேள்வி - புதுமனை புகுவிழா கொண்டாடலாமா? கடன் வாங்கிக் கட்டியிருக்கும் வீட்டிற்கும் இது பொருந்துமா? விருந்தும் வைக்க வேண்டுமா?

பதில் பி.ஜே - புதுமனைப் புகுவிழா என்ற ஒன்று மார்க்கத்தில் இல்லை. புதுமனைப் புகுவிழா என்ற பெயரில் மவ்லிது பாத்திஹா ஓதுதல் போன்ற மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடைபெறுகின்றன. புது வீட்டில் முதன் முதலில் பால் காய்ச்ச வேண்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது. முதன் முதலில் பால் காய்ச்சினால் பால் பொங்குவது போல் செல்வம் பொங்கும் என்ற நம்பிக்கை தாயத்துகள் மீது வைக்கப்படும் நம்பிக்கைக்கு ஒப்ப இருப்பதால் இது ஷிர்க் எனும் இணைவைத்தலில் சேர்ந்து விடும். சில இடங்களில் சுப்ஹ் தொழுகையைப் புது வீட்டில் ஜமாஅத்தாக நிறைவேற்றும் வழக்கமும் உள்ளது. இதுவும் பித்அத்தாகும். இவை கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

ஆனால் அதே சமயம் ஒருவர் புது வீடு கட்டி, அதில் குடிபுகும் போது விருந்தளிப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது.

7281ـ حدَّثَنا محمدُ بن عُبادةَ أخبرنا يزيدُ حدَّثَنا سليمُ بن حَيّان ـ وأثنى عليه ـ حدَّثَنا سعيدُ بن ميناءَ حدَّثَنا ـ أو سمعتُ ـ جابرَ بن عبد اللَّه يقول: جاءت ملائكة إلى النبيِّ صلى الله عليه وسلّم وهو نائم فقال بعضهم: إنه نائم، وقال بعضهم: إن العينَ نائمةٌ والقلبَ يقظانُ، فقالوا: إِن لِصاحبكم هذا مثلاً، قال: فاضربوا له مثلاً. فقال بعضهم: إِنه نائمٌ، وقال بعضهم: إن العينَ نائمةٌ والقلبَ يقظان، فقالوا: مثلهُ كمثل رجلُ بَنى داراً وجَعَلَ فيها مأدُبةً وبَعثَ داعياً، فمن أجاب الداعيَ دخلَ الدارَ وأكلَ من المأدبة، ومن لم يجبِ الداعيَ لم يدخل الدار ولم يأكل منَ المأدبة. فقالوا: أولوها له يَفقهها، فقال بعضهم: إنه نائم، وقال بعضهم إنَّ العينَ نائمةٌ والقلبَ يقظانٌ، فقالوا: فالدارُ الجنة والداعي محمدٌ صلى الله عليه وسلّم، فمن أطاعَ محمداً فقد أطاعَ اللَّه، ومن عصى محمداً صلى الله عليه وسلّم فقد عصى اللَّه، ومحمدٌ فرق بينَ الناس تابعَهُ قُتيبة عن ليث عن خالد عن سعيد بن أبي هِلال

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது அவர்களிடம் சில வானவர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் 'இவர் உறங்கிக் கொண்டிருக்கிறார்' என்றார். அதற்கு மற்றொருவர் 'கண்கள் தான் உறங்குகின்றன; உள்ளம் விழித்திருக்கிறது' என்று கூறினார். பின்னர் அவர்கள் 'உங்களுடைய இந்த நண்பருக்கு ஓர் உவமை உண்டு; இவருக்கு அந்த உவமையை எடுத்துரையுங்கள்' என்று பேசிக் கொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருவர் 'இவர் உறங்குகிறாரே!' என்றார். மற்றொருவர் 'கண் உறங்கினாலும் உள்ளம் விழித்திருக்கிறது' என்றார். பின்னர் அவர்கள் 'இவரின் நிலை ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் ஒரு வீட்டைக் கட்டினார். அவ்வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். (மக்களை) அழைப்பதற்காக ஓர் ஆளை அனுப்பினார். அழைப்பாளியின் அழைப்பை ஏற்று வந்தவர் வீட்டினுள் சென்றார்; விருந்துண்டார். அழைப்பை ஏற்காதவர் வீட்டிற்குள் நுழையவுமில்லை; விருந்து உண்ணவுமில்லை' என்று கூறினர்.

பின்னர் அவர்கள் 'இந்த உவமையை அவருக்கு விளக்கிக் கூறுங்கள்; அவர் புரிந்து கொள்ளட்டும்' என்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் 'இவர் உறங்குகிறாரே!' என்று சொல்ல மற்றொருவர் 'கண் தான் தூங்குகிறது உள்ளம் விழித்திருக்கிறது' என்றார். அதைத் தொடர்ந்து 'அந்த வீடு தான் சொர்க்கம். அழைப்பாளி முஹம்மத் (ஸல்) அவர்கள். முஹம்மத் (ஸல்) அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து விட்டார். முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்து விட்டார். முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்களைப் பகுத்துக் காட்டி விட்டார்கள்' என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி)

நூல்: புகாரி 7281


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அழைப்புப் பணிக்கு வானவர்கள் இங்கே ஒரு உவமையைக் கூறுகிறார்கள். புது வீடு கட்டி அத்ற்காக விருந்து ஏற்பாடு செய்து அவ்விருந்துக்கு மக்களை அழைப்பவர் போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அழைப்புப் பணி அமைந்துள்ளதாக இவ்வுதாரணத்தில் கூறப்படுகிறது.
புது வீடு கட்டி விருந்தளிப்பது நல்ல செயல் அல்ல என்றால் அந்தச் செயலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அழைப்புப் பணிக்கு வானவர்கள் உதாரணமாகக் காட்ட மாட்டார்கள்.
எனினும் இது அனுமதிக்கப்பட்ட செயல் தானே தவிர கட்டாயக் கடமை அல்ல. ஒருவர் புது வீடு புகும் போது விருந்தளிக்கவில்லை என்றால் அவர் இறைவனிடம் குற்றவாளி ஆகி விட மாட்டார்.

அதிலும் கடன் வாங்கி வீடு கட்டியிருந்தால் அவர் கடனை அடைப்பதற்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர, இது போன்ற விருந்துகளை அளிக்கக் கூடாது.

(823) ـ حدّثنا أبو اليمانِ قال: أخبرَنا شُعيبٌ عنِ الزُّهريِّ قال: أَخبرَنا عُروة بنُ الزُّبيرِ عن عائشةَ زوجِ النبيِّ صلى الله عليه وسلّم أخبرَتْه أَنَّ رسولَ اللهِ صلى الله عليه وسلّم كان يَدْعو في الصلاةِ: اللّهمَّ إني أعوذُ بكَ من عذاب القبرِ، وَأَعوذ بكَ من فِتنةِ المسيحِ الدَجّالِ، وَأَعوذُ بكَ من فتنةِ المحيا وفتنةِ المَماتِ. اللّهمَّ إني أعوذُ بكَ مِنَ المأْثَمِ وَالمَغْرَمِ. فقال له قائلٌ: ما أكثرَ ما تَستعيذُ منَ المغرَمِ ؟ فقال: إِنَّ الرجلَ إِذا غَرِمَ حَدَّثَ فكذَب، ووَعدَ فأَخْلَفَ.

اسم الكتاب: صحيح البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையில் துஆச் செய்யும் போது 'யா அல்லாஹ்! உன்னிடம் பாவத்தை விட்டும், கடனை விட்டும் பாதுகாவல் தேடுகின்றேன்' என்று தொழுகையில் கூறுவார்கள். (இதையறிந்த) ஒருவர், 'அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடன் படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாக பாதுகாப்பு தேடுவதற்கு காரணம் என்ன?' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'மனிதன் கடன்படும் போது பொய் பேசுகின்றான், வாக்குறுதி அளித்து அதற்கு மாறு செய்கின்றான்' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 823


(4839) ـ حدّثنا زَكَرِيَّاءُ بْنُ يَحْيَى بْنِ صَالِحٍ الْمِصْرِيُّ. حَدَّثَنَا الْمُفَضَّلُ يَعْنِي ابْنَ فَضَالَةَ عَنْ عَيَّاشٍ وَهُوَ ابْنُ عَبَّاسٍ الْقِتْبَانِيُّ عَنْ عَبْدِ اللّهِ بْنِ يَزِيدَ أَبِي عَبْدِ الرَّحْمَـنِ الْحُبُلِيِّ عَنْ عَبْدِاللّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّ رَسُولَ اللّهِ قَالَ: يُغْفَرُ لِلشَّهِيدِ كُلُّ ذَنْبٍ، إلاَّ الدَّيْنَ.

اسم الكتاب: صحيح مسلم

'அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்த ஷஹீதுக்கு கடனைத் தவிர எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 4839


இந்த ஹதீஸ்களிலும், இன்னும் இது போன்ற ஏராளமான ஹதீஸ்களிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடன் விஷயத்தில் கடும் எச்சரிக்கை செய்துள்ளார்கள். கடன் வாங்கி அல்லது கடன் இருக்கும் நிலையில் விருந்து வைப்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைகளை உதாசீனம் செய்வதாகும்.

Wednesday, January 14, 2015

ஒருவர் வாய் வைத்ததை மற்றவர் பருகலாமா?

கேள்வி -  ஒருவர் குடித்து விட்டு அல்லது சாப்பிட்டு விட்டு மீதம் வைத்ததை மற்றவர்கள் சாப்பிடலாமா? - சுக்ருல்லாஹ்

பதில் பி.ஜே -   ஒருவர் குடித்து விட்டு அல்லது சாப்பிட்டு விட்டு மீதம் வைத்ததை மற்றவர்கள் சாப்பிடுவதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை.

நபியவர்கள் தாம் சாப்பிட்டு விட்டு மீதமானதைப் பிற நபித்தோழர்களுக்கு வழங்கியுள்ளார்கள்.

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ قَالَ حَدَّثَنِي اللَّيْثُ قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ حَمْزَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ ابْنَ عُمَرَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِقَدَحِ لَبَنٍ فَشَرِبْتُ حَتَّى إِنِّي لَأَرَى الرِّيَّ يَخْرُجُ فِي أَظْفَارِي ثُمَّ أَعْطَيْتُ فَضْلِي عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالُوا فَمَا أَوَّلْتَهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ الْعِلْمَ  رواه البخاري

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னிடம் ஒரு பால் பாத்திரம் கொண்டு வரப்பட்டது. (அதிலிருந்த பாலை) நான் (தாகம் தீர) அருந்தினேன். இறுதியில் எனது நகக்கண்கள் ஊடே (பால்) பொங்கிவரக் கண்டேன். பிறகு (நான் அருந்தியது போக இருந்த) மிச்சத்தை உமர் பின் அல்கத்தாப் அவர்களுக்குக் கொடுத்தேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் இதற்கு (இந்தப் பாலுக்கு) தாங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்க, அதற்கு அவர்கள் அறிவு என்று பதிலளித்தார்கள்.

நூல்  புகாரி (82)


இது நபியவர்களின் கனவில் நடந்த சம்பவமாக இருந்தாலும் இதில் கூறப்பட்டவை மார்க்கமாகும்.

நபிமார்களின் கனவுகள் இறைச் செய்தியாகும். அதுமட்டுமல்ல  நடைமுறையில் எது ஆகுமானதோ அதைத்தான் நபிமார்கள் கனவிலும் காண்பார்கள்.

நபியவர்கள் தாம் அருந்தி போக இருந்த மிச்சத்தை இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு வழங்கியுள்ளார்கள். இதிலிருந்து ஒருவர் மீதம் வைத்த உணவை மற்றொருவர் சாப்பிடுவதில் தவறில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் நபியவர்களி்ல் தாம் அருந்தி மீதமிருந்ததை நபித்தோழர்களுக்கு வழங்கியுள்ளார்கள்.

2352  حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهَا حُلِبَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةٌ دَاجِنٌ وَهِيَ فِي دَارِ أَنَسِ بْنِ مَالِكٍ وَشِيبَ لَبَنُهَا بِمَاءٍ مِنْ الْبِئْرِ الَّتِي فِي دَارِ أَنَسٍ فَأَعْطَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقَدَحَ فَشَرِبَ مِنْهُ حَتَّى إِذَا نَزَعَ الْقَدَحَ مِنْ فِيهِ وَعَلَى يَسَارِهِ أَبُو بَكْرٍ وَعَنْ يَمِينِهِ أَعْرَابِيٌّ فَقَالَ عُمَرُ وَخَافَ أَنْ يُعْطِيَهُ الْأَعْرَابِيَّ أَعْطِ أَبَا بَكْرٍ يَا رَسُولَ اللَّهِ عِنْدَكَ فَأَعْطَاهُ الْأَعْرَابِيَّ الَّذِي عَلَى يَمِينِهِ ثُمَّ قَالَ الْأَيْمَنَ فَالْأَيْمَنَ  رواه البخاري

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதிலிருந்து அவர்கள் (பால்) குடித்தார்கள். அப்போது அவர்களுடைய வலப் பக்கம் மக்களில் மிகக் குறைந்த வயதுடைய சிறுவர் ஒருவரும் இடப் பக்கம் வயது முதிர்ந்தவர்களும் இருந்தனர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (அச்சிறுவரை நோக்கி), சிறுவனே! நான் இதை முதியவர்களுக்குக் கொடுத்து விட எனக்கு நீ அனுமதியளிக்கிறாயா? என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவர், அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கக் கூடிய மீதத்தை எவருக்கும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறினார். ஆகவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (அந்தப் பால்) தாம் (குடித்து) மீதம் வைத்ததை அந்தச் சிறுவருக்கே கொடுத்து விட்டார்கள்.

நூல்  புகாரி (2352)


453   حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ مِسْعَرٍ وَسُفْيَانَ عَنْ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ كُنْتُ أَشْرَبُ وَأَنَا حَائِضٌ ثُمَّ أُنَاوِلُهُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَضَعُ فَاهُ عَلَى مَوْضِعِ فِيَّ فَيَشْرَبُ وَأَتَعَرَّقُ الْعَرْقَ وَأَنَا حَائِضٌ ثُمَّ أُنَاوِلُهُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَضَعُ فَاهُ عَلَى مَوْضِعِ فِيَّ وَلَمْ يَذْكُرْ زُهَيْرٌ فَيَشْرَبُ  رواه مسلم

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நான் (ஏதேனும் பானத்தைப்) பருகிவிட்டு அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். அப்போது அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள். மாதவிடாய் எற்பட்டிருந்த நான் இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்துவிட்டு அதை நபியவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வை(த்துப் புசி)ப்பார்கள்.

நூல் முஸ்லிம் (505)


மேற்கண்ட நபியவர்களின் செயல்பாடுகளிலிருந்து ஒருவர் மீதம் வைத்ததை மற்றொருவர் சாப்பிடுவதில் தவறில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

இது மனம் ஒப்புவது சம்மந்தமான பிரச்சனையாகும். ஒருவரது மனம் ஒப்பினால் இவ்வாறு செய்து கொள்ளலாம். ஒப்பாவிட்டால் விட்டு விடலாம். சமுதாயத்தில் கணவன் மனைவியரிடையே இந்த விஷயத்தில் அனைவருக்கும் மனம் ஒப்புவதை நாம் கான்கிறோம். மற்றவர்கள் விஷயத்தில் அவ்வளவாக மனம் ஒப்புவதில்லை.

ஒருவரிடம் உள்ள அசுத்தம் மற்றும் பொருத்தமான ஏனைய  காரணங்களினால் ஒருவர் மீதம் வைத்ததை மற்றொருவர் வெறுத்தால் அதைக் குறை கூற மார்க்கத்தில் ஆதாரம் இல்லை.

Tuesday, January 13, 2015

நீ இந்தியனா அல்லது முஸ்லீமா?

கேள்வி - எனது நன்பர் நீ இந்தியனா அல்லது முஸ்லிமா என்று கேட்கிறார் நான் முதலில் முஸ்லிம் இரண்டாவது இந்தியன் என்று பதில் சொன்னேன் இது சரியா நபியவர்கள் என்ன சொல்கிறார்கள்? - செய்யது இப்றாஹீம்

பதில் பி.ஜே - நீ இந்தியனா அல்லது முஸ்லிமா? என உங்கள் நண்பர் உங்களிடம் கேட்டுள்ளார். இக்கேள்வி தவறானதாகும்.

இந்தியன் என்பதும் முஸ்லிம் என்பதும் ஒன்றொக்கொன்று எதிரான அர்த்தம் கொண்ட பெயர்கள் என்று கருதினாலே இவ்வாறு கேள்வி கேட்க முடியும். இந்தியனாக இருப்பவர் முஸ்லிமாக இருக்க முடியாது. முஸ்லிமாக இருப்பவர் இந்தியனாக இருக்க முடியாது என்ற தவறான கருத்து இக்கேள்வியில் அடங்கியிருக்கின்றது.

ஒருவர் இந்தியனாக இருந்துகொண்டு முஸ்லிமாக வாழ முடியும். இந்திய நாட்டில் வாழ்பவருக்கு இந்தியன் என்று சொல்லப்படும். இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றவருக்கு முஸ்லிம் என்று சொல்லப்படும். இந்திய நாட்டில் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று அதனடிப்படையில் வாழ்வதற்கு எந்தத் தடையும் இல்லை. நாம் அனைவரும் அவ்வாறே வாழ்ந்துகொண்டுஇருக்கின்றோம். இதை விளங்கியிருந்தால் இக்கேள்வியை உங்கள் நண்பர் கேட்டிருக்கமாட்டார்.

உதாரணமாக உங்களைப் பார்த்து நீ மனிதனா? உயிரினமா? என்று கேட்டால் அக்கேள்வி எப்படி அர்த்தமற்றதோ அது போன்றே இந்த கேள்வியும் அமைந்துள்ளது. இப்படி ஒருவர் நம்மிடம் கேட்டால் நான் மனித உயிரினமாக இருக்கின்றேன் என பதிலளிப்போம். அதேப் போன்று நான் இந்திய நாட்டில் வாழும் முஸ்லிமாக இருக்கின்றேன் என்று உங்கள் நண்பருக்கு பதிலளியுங்கள்.

Monday, January 12, 2015

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் - தொடர் 15 - பி.ஜே

சூனியம் என்பது ஏமாற்றக் கூடிய தந்திர வித்தை என்பதையும், சூனியத்தின் மூலம் எந்த ஒரு மனிதருக்கும் உடலளவிலோ, மனதளவிலோ எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என்பதையும் தக்க ஆதாரங்களுடன் நாம் பார்த்து வருகிறோம்..

சூனியத்தின் மூலமாக சில காரியங்களைச் செய்யலாம் என்ற கருத்துடையவர்கள் திருக்குர்ஆன் 2:102 வசனத்தை எடுத்துக்காட்டி சூனியத்தினால் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என இவ்வசனம் சொல்வதாக வாதிடுகின்றனர்.

இவ்வசனம் சொல்வது என்ன? என்பதை எவ்வாறு புரிந்து கொள்வது? இது சூனியத்துக்கு ஆற்றல் உள்ளது எனச் சொல்கிறதா? எதிராகச் சொல்கிறதா என்பதை நாம் விளக்கமாக அறிந்து கொள்ள வேண்டும்.

இதன் சரியான பொருளை அறிந்து கொள்வதற்கு முன்னால் மேற்கண்ட வசனத்திற்கு அப்துல் ஹமீது பாக்கவி, ஜான் ட்ரஸ்ட், ரஹ்மத் அறக்கட்டளை ஆகியோர் வெளியிட்ட மொழி பெயர்ப்ப்புகளைக் கீழே தந்துள்ளோம்.

அப்துல் ஹமீது பாக்கவி மொழி பெயர்ப்பு

 மேலும், (அந்த யூதர்கள்) ஸுலைமானுடைய ஆட்சியைப் பற்றி (அவர்களுக்கு) ஷைத்தான் ஓதிக் (கற்றுக்) கொடுத்திருந்த (சூனியம், மாய மந்திரம் ஆகிய)வைகளைப் பின்பற்றினார்கள். ஆனால் ஸுலைமானோ "நிராகரிப்பவராக" இருக்கவில்லை; அந்த ஷைத்தான்கள்தான் உண்மையாகவே நிராகரிப்பவர்களாக இருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் மனிதர்களுக்கு சூனியத்தையும் "பாபிலூன்" (என்னும் ஊரில்) "ஹாரூத்" "மாரூத்" என்னும் இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டிருந்தவற்றையும் கற்றுக்கொடுத்து வந்தார்கள். அவ்விரு மலக்குகளோ (அவர்களிடம் சூனியத்தைக் கற்கச்சென்ற மனிதர்களை நோக்கி) "நாங்கள் சோதனையாக இருக்கிறோம். (இதைக் கற்றால் நீங்கள் நிராகரிப்பவர்களாகி விடுவீர்கள். ஆதலால் இதைக்கற்று) நீங்கள் நிராகரிப்பவர்களாகிவிட வேண்டாம் என்று கூறும் வரையில் அவர்கள் அதனை ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதேயில்லை, (இவ்விதம் கூறிய பின்னும் இதைக் கற்க விரும்பியவர்கள்) கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பிரிவினை உண்டுபண்ணக் கூடிய வழியை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வார்கள். அல்லாஹ்வின் கட்டளையின்றி அதன் மூலம் அவர்கள் ஒருவருக்குமே தீங்கிழைத்திட முடியாது. அன்றி, அவர்களுக்கு யாதொரு பலனுமளிக்காமல் தீங்கிழைக்கக் கூடியது எதுவோ அதைத்தான் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். தவிர, (இறை நம்பிக்கைக்குப் பதிலாக) அ(ச்சூனியத்)தை எவன் விலைக்கு வாங்கிக் கொண்டானோ அவனுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதைத் தெளிவாக சந்தேகமற அவர்களும் அறிந்திருக்கிறார்கள். அன்றி, தங்களையே விற்று அவர்கள் எதை வாங்கிக் கொண்டார்களோ அது (மிகக்) கெட்டது. (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே! 2:102

ஜான் ட்ரஸ்ட் மொழிபெயர்ப்பு


அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்; ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக் கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக் கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?2:102

இந்த இரண்டு மொழிபெயர்ப்புகளிலும் சிவப்பு வண்ணமாக நாம் காட்டியுள்ள சொற்களைத் தான் இது விஷயத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த இரண்டு மொழிபெயர்ப்புகளிலும் சொல்லப்படுவது என்ன?

இரு வானவர்கள் மக்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுக்க வந்தனர்.

அவ்வாறு கற்றுக் கொடுக்கும் போது சூனியத்தைக் கற்காதே! கற்றால் காபிராகி விடுவாய் என்று சொல்லாமல் கற்றுக் கொடுக்க மாட்டார்கள்.

இப்படி அவர்கள் எச்சரிக்கை செய்த பின்பும் சூனியத்தைக் கற்க விருப்பம் கொண்டவர்கள் கணவன் மனைவியரிடையே பிரிவினை ஏற்படுத்துவதைக் கற்றுக் கொண்டார்கள்.

மேற்கண்ட இரண்டு மொழி பெயர்ப்புகளிலும் சூனியத்தைக் கற்க விரும்பியவர்கள் சூனியத்தின் ஒரு வகையான கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்துவதைக் கற்றுக் கொண்டனர் என்ற கருத்து வருகிறது.

சூனியத்தினால் கணவன் மனைவியைப் பிரிக்க முடியும் என்பதற்கு இது ஆதாரம் என்கின்றனர்.

சூனியத்துக்கு ஆற்றல் உள்ளது என்று திருக்குர்ஆனே சொல்வதால் அதை நம்புகிறோம் என்றும் வாதிடுகின்றனர்.

இவ்வாறு மொழி பெயர்ப்பதற்கு இலக்கணப்படி இடம் உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. வேறு விதமாக பொருள் கொள்வதற்கும் இலக்கணப்படி இடமுள்ளது.

தற்கொலைத் தாக்குதல் பற்றி இஸ்லாம்

கேள்வி - தற்கொலைத் தாக்குதல் பற்றி இஸ்லாம் கூறும் பதில் என்ன? 
ஏ.எல். ஹாஸிம், ராசல் கைமா, யூ.ஏ.இ.

பதில் -
தற்கொலைக்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாத அளவுக்குச் சான்றுகள் உள்ளன.

ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்து கொண்டார். உடனே அல்லாஹ், எனது அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்தி விட்டான். எனவே அவனுக்குச் சொர்க்த்தை ஹராமாக்கி விட்டேன் என்று கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி),

நூல்: புகாரி 1364


யார் தமது கழுத்தை நெறித்துத் தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகிலும் கழுத்தை நெறித்துக் கொண்டிருப்பார். யார் தம்மைத் தாமே (ஆயுதத்தால்) தாக்கி, தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகிலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருப்பார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: புகாரி 1365

தற்கொலை செய்து கொண்டால் நிரந்தர நரகம் என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே தற்கொலை கூடாது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் போரில், எதிரிகளை அழிப்பதற்காக தற்கொலை செய்யலாம் என்று சிலர் வாதிடுகின்றனர். இது தற்கொலை அல்ல! இதுவும் போர் தான் என்றும் கூறுகின்றனர். எனவே இதுகுறித்து விரிவாகப் பார்ப்போம்.

ஒரு காரியம் நிரந்தர நரகம் என்று தெரிந்த பின்னால் அதில் விழுந்து விடாமலிருக்க மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். தற்கொலைத் தாக்குதல் கூடும் என்று வாதிட்டால் அதற்கான தெளிவான நேரடியான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அது போன்ற நேரடியான ஆதாரம் எதையும் இவர்கள் காட்டுவதில்லை. இன உணர்வைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இவர்களிடம் இல்லை என்பது தான் உண்மை!

போர் என்பதே தற்கொலை தான், எத்தனையோ நபித்தோழர்கள் போரில் கொல்லப்பட்டுள்ளனர், இதுவெல்லாம் தற்கொலையா? என்ற வாதத்தை முன் வைக்கின்றனர். இதுவும் ஏற்றுக் கொள்ள முடியாத வாதமாகும்.

போரில் பங்கெடுக்கும் போது வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. தவறினால் உயிர் தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இரண்டையும் ஒருசேர எதிர்பார்த்துத் தான் போரில் களம் இறங்குவர். ஆனால் தற்கொலைத் தாக்குதல் என்பது அவ்வாறல்ல! இதில் உயிரோடு திரும்புவது என்ற பேச்சுக்கே இடமில்லை. உயிரை மாய்ப்பது மட்டுமே இங்கு உள்ளது. இதையும் போரில் வீர மரணம் அடைவதையும் சமமாகக் கருத முடியாது.

போரில் கூட தற்கொலை செய்து கொள்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கீகரிக்கவில்லை என்பதை புகாரியின் 2898, 3062 போன்ற ஹதீஸ்களில் காணலாம்.

தற்கொலைத் தாக்குதல்களை நியாயப்படுத்த இவர்கள் மற்றொரு வாதத்தையும் எடுத்து வைக்கின்றனர். ஒருவன் வாழ முடியாத நிலையில் செய்வது தான் தற்கொலை. ஆனால் தற்கொலைத் தாக்குதல் என்பது அவ்வாறல்ல! இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடுவோர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இதைச் செய்யவில்லை. எதிரிகளை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே செய்கின்றனர். எண்ணத்தின் அடிப்படையில் தான் கூலி கிடைக்கும் என்ற அடிப்படையில் தற்கொலைத் தாக்குதல் அனுமதிக்கப் பட்டது தான் என்ற வாதத்தை முன் வைக்கின்றனர்.

எண்ணத்தின் அடிப்படையில் தான் கூலி என்பதற்கு இவர்கள் கூறும் தவறான வியாக்கியானத்தின் மூலம் இதை நியாயப்படுத்த நினைக்கின்றனர்.

எண்ணத்தின் அடிப்படையில் கூலி என்பது அனுமதிக்கப்பட்ட விஷயங்களில் தான். தடுக்கப்பட்ட ஒரு காரியத்தை நல்ல எண்ணத்தில் செய்கின்றேன் என்று கூறி யாரும் நியாயப் படுத்த முடியாது.

உதாரணமாக நோன்பு வைப்பவர் அல்லாஹ்வுக்காக நோன்பு வைப்பதாக எண்ணிக் கொண்டு வைத்தால் அவருக்கு நோன்பின் கூலி கிடைக்கும். ஆனால் தனது உடல் இளைப்பதை நோக்கமாகக் கொண்டு நோன்பு வைத்தால் நோன்பின் எல்லா விதிகளும் பின்பற்றப்பட்டாலும் அவருக்கு நோன்பிற்கான கூலி கிடைக்காது. இதே உதாரணத்தை தடுக்கப்பட்ட செயல்களுக்குப் பொருத்திப் பார்க்க முடியாது.

போரையே எடுத்துக் கொள்வோம். போரில் காயம் ஏற்படும் போது வலி தெரியாமல் இருப்பதற்காக ஒருவர் மது அருந்தினால் அது குற்றமில்லை என்று கூற முடியுமா? அவருக்குப் போதையில் இருக்க வேண்டும் என்பது நோக்கமல்ல! வலி தெரியாமல் மேலும் மேலும் போரிட வேண்டும் என்பதற்காகத் தான் குடிக்கின்றார். இதற்காக அல்லாஹ் அவருக்கு நன்மையை வழங்கி விடுவான் என்று யாரும் வாதிட மாட்டார்கள்.

விபச்சாரம் என்ற நோக்கம் இல்லாமல், எதிரிகளின் குடும்பத்தை நிர்மூலமாக்குவதை நோக்கமாகக் கொண்டு அவர்களின் பெண்களைக் கற்பழிக்கலாம் என்று கூற முடியுமா? அல்லது இஸ்லாத்தின் விரோதிகள் என்பதால் அவர்களுடைய சொத்துக்களைக் கொள்ளையடிக்கலாம், திருடலாம் என்று வாதிட முடியுமா? நோக்கம் நல்லதாக இருந்தாலும் செயல் அனுமதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கு இவையே போதுமான உதாரணங்கள்.

தற்கொலைத் தாக்குதல்கள் கூடும் என்று வாதிப்பவர்கள் இந்தப் பிரச்சனையை மார்க்க அடிப்படையில் சிந்திக்காமல் உணர்வுப்பூர்வமாக மட்டுமே சிந்திக்கின்றார்கள். உலகெங்கும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், நேருக்கு நேர் மோத முடியாத அளவுக்குள்ள எதிரியின் ஆயுத பலம், இன உணர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல்களை நியாயம் கற்பிக்கின்றனர்.

ஆனால் ஒரு முஸ்லிம் எவ்வளவு தான் அநீதி இழைக்கப்பட்டாலும், என்ன நியாயம் அவனிடம் இருந்தாலும் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் மட்டுமே நடக்க வேண்டும். அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விட உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து விடக் கூடாது. இதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்காது.

இதைக் கவனத்தில் கொண்டு இந்தப் பிரச்சனையை நாம் ஆராய்ந்தால் உலகின் பல பகுதிகளில் நடக்கும் தற்கொலைத் தாக்குதல்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை அறியலாம்.

உலகில் நடக்கும் தற்கொலைத் தாக்குதல்களில் பெரும்பாலானவை யாருக்கு எதிராக நடத்தப்படுகின்றன என்று பார்த்தால், இதில் பலியாவோர் பொது மக்களாக இருப்பதைக் காண முடியும்.

பொதுமக்கள் பயணம் செய்யும் பேருந்துகள், இரயில்கள், விமானநிலையங்கள், கடைவீதிகள், வணிக வளாகங்கள் போன்றவை தான் தற்கொலைத் தாக்குதல்களின் முக்கிய இலக்காக உள்ளன.

போர்க் களத்தில் எதிரிகளுடன் நேருக்கு நேர் நின்று மோதும் போது எதிரிகளைக் கொல்வதை யாரும் கொலை என்று கூற மாட்டார்கள். ஆனால் இத்தகைய போர்க்களங்களில் கூட பணிவிடை செய்வதற்காக வந்துள்ள பெண்களையும், சிறுவர்களையும் கொல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்ற செய்தி புகாரி 3014, 3015 ஆகிய ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளன.

புகாரியில் 3012, 3013 ஆகிய ஹதீஸ்களில், பெண்களும் குழந்தைகளும் அவர்களைச் சேர்ந்தவர்களே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி அவர்களைக் கொல்வதை நியாயப்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. இதை ஆதாரமாகக் கொண்டு தற்கொலைத் தாக்குதல் மூலம் பொதுமக்களைக் கொல்வது தடையில்லை என்ற வாதத்தை முன் வைக்கின்றனர். ஆனால் இந்த ஹதீஸ் மாற்றப்பட்டு விட்டது.

நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் போர்க்களத்தில் பெண்களும் சிறுவர்களும் கொல்லப்படுவதை முதலில் அனுமதித்தனர். பின்னர் இதைத் தடை செய்து விட்டனர் என்ற செய்தி அபூதாவூதில் 2298வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

ஒரு செயல் முதலில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தடை செய்யப்பட்டால் தடையைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே போர்க்களத்தில் கூட பெண்களையும் சிறுவர்களையும் கொல்வதற்கு அனுமதியில்லை என்பது தான் அல்லாஹ்வின் தூதருடைய தெளிவான தீர்ப்பாகும்.

நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் அனுப்பிய ஒரு படையினர் சிறுவர்களையும் கொன்று விட்டனர். இதைக் கேள்விப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விசாரணை நடத்திய போது, அவர்களும் இணை வைப்பவர்களின் வழித் தோன்றல்கள் தானே என்று நபித்தோழர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள்  நாயகம் (ஸல்) அவர்கள், "கொலை செய்வதில் இவர்கள் வரம்பு மீறி விட்டனர். சிறுவர்களைக் கொல்லாதீர்கள்! சிறுவர்களைக் கொல்லாதீர்கள்! பிறக்கும் குழந்தைகள் யாவும் (இஸ்லாம் எனும்) இயற்கை மார்க்கத்திலேயே பிறக்கின்றன. அவர்கள் உணர்ந்து கொள்ளும் வரை அதிலேயே உள்ளனர். அவர்களின் பெற்றோர்கள் தான் அவர்களை மாற்றி விடுகின்றனர்'' என்று கூறினார்கள்.

(நூல்: அஹ்மத் 15036, 15037)


குழந்தைகளைக் கொல்லக் கூடாது என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் அதற்கான காரணத்தையும் இங்கு குறிப்பிடுகின்றார்கள்.

முன்னர் அனுமதிக்கப்பட்டு பின்னர் தடைசெய்யப்பட்டதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் யஸீத் பின் அபீசுஃப்யான் தலைமையில் படை அனுப்பியபோது பிறப்பித்த பத்து கட்டளைகளில் பெண்களையும் சிறுவர்களையும் முதியவர்களையும் கொல்லாதீர்கள் என்ற கட்டளையையும் சேர்த்துப் பிறப்பிக்கின்றார்கள். இந்தச் செய்தி முஅத்தாவில் 858வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்களையும் சிறுவர்களையும் போரில் கொல்லக் கூடாது என்ற தடை தான் இறுதியானது என்பதை அபூபகர் (ரலி) அவர்கள் உறுதிப்படுத்துகின்றார்கள்.

ஆனால் இதற்கு மாற்றமாக பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள், பொதுமக்கள், பயணிகள், வர்த்தகர்கள் என்று போருக்குச் சம்பந்தமில்லாத அப்பாவிகளை இலக்காக வைத்து தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்படுவதே இது மார்க்கத்திற்கு முரணானது என்பதை வலியுறுத்துகின்றது.

மார்க்கம் அனுமதித்த காரியத்தைச் செய்யும் போது இது போன்ற விளைவுகளைப் பற்றி கவலைப்படக் கூடாது. ஆனால் தற்கொலைத் தாக்குதலுக்கு அனுமதி இல்லை என்பதால் இதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் இங்கு நாம் குறிப்பிட வேண்டியுள்ளது.

அப்பாவிகள் கொல்லப்படுவதைக் காணும் முஸ்லிமல்லாதவர்கள், முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் வெறுப்புடன் பார்க்கத் துவங்குகின்றனர். இதனால் இஸ்லாத்தின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகின்றது.

தற்கொலைத் தாக்குதல்களை நியாயப்படுத்துவோரில் பலர் தங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத போது, அதாவது தொலைவான பகுதிகளில் நடக்கின்ற போது மகிழ்ச்சி அடைகின்றார்கள். ஆனால் அதே சமயம் தாங்கள் வாழும் பகுதியில் நடந்து, அதனால் இவரது குடும்பமோ சொத்துக்களோ பாதிக்கப்படும் போது அதைக் கண்டிக்கின்றார்கள்.

மார்க்க அடிப்படையிலும் சரி! இதுபோன்ற தர்க்க ரீதியிலான காரணங்களாலும் சரி! தற்கொலைத் தாக்குதல்களுக்கு அனுமதி இல்லை என்பது தான் உண்மையாகும்.

(குறிப்பு: 2004 பிப்ரவரி ஏகத்துவம் இதழில் வெளி வந்த கேள்வி)

Sunday, January 11, 2015

ஹதீஸ்கள் குர்ஆனிற்கு முரண்படுமா? - தொடர் 15

இந்த நூல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போது அப்பாஸ் அலி எழுதியது. தற்போது ஜமாஅத்திலிருந்து வெளிவந்தவுடன் இந்த நூலில் உள்ள கருத்துகளுக்கு முழுவதும் மாறுபடுவதாகவும், இனி இந்த நூலிற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

கவிதை விமர்சித்த அறிஞர்கள்


இமாம் கஸ்ஸாலி அவர்கள் அஸ்ஸுன்னா என்ற தன்னுடைய நூலில் நாம் வைக்கின்ற கேள்விகளை முன்வைத்து இந்த ஹதீஸ் நபி (ஸல்) அவர்கள் சொன்னது கிடையாது என்று தெரிவித்துள்ளார். இந்த ஹதீஸில் உள்ள விகாரத்தைக் குறைப்பதற்காக பல அறிஞர்கள் முயற்சி செய்துள்ளார்கள்.

ஆனால் இவர்கள் கொடுத்துள்ள எந்த விளக்கமும் பொருத்தமானதாக இல்லை. எந்த விளக்கம் கொடுத்தாலும் இதில் உள்ள சிக்கலுக்கு முழுமையான முடிவைக் காணமுடியாது என்று நஸயீ நூலிற்கு விரிவுரை எழுதிய நூருத்தீன் அஸ்ஸனதீ என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

அபூமன்சூர் சஆலபீ அவர்களும் இந்த ஹதீஸை மறுத்துள்ளார்கள். இப்னு ஹஜர் தஹபீ சூயூத்தி போன்றோர் தங்களது நூற்களில் இந்த அறிஞரின் கருத்துக்களைப் பல இடங்களில் பதிவு செய்துள்ளார்கள். இந்த அறிஞர் ஸமாருல் குலூப் என்ற தன்னுடைய நூலில் பின்வருமாறு இந்த ஹதீஸை மறுக்கிறார்.

ثمار القلوب  جزء 1 - صفحة 53 

( لطمة موسى ) تضرب مثلا لما يسوء أثره وفى أساطير الأولين أن موسى سأل ربه أن يعلمه بوقت موته ليستعد لذلك فلما كتب الله له سعادة المحتضر أرسل إليه ملك الموت وأمره بقبض روحه بعد أن يخبره بذلك فأتاه فى صورة آدمى وأخبره بالأمر فما زال يحاجه ويلاجه وحين رآه نافذ العزيمة فى ذلك لطمه فذهبت منها إحدى عينيه فهو إلى الآن أعور وفيه قيل ( يا ملك الموت لقيت منكرا ... لطمة موسى تركتك أعورا ) وأنا برىء من عهدة هذه الحكاية

மூஸா (அலை) அவர்கள் (மலக்கை) அடித்த சம்பவம் மோசமான தகவலுக்கு உதாரணமாகச் சொல்லப்படும். முன்னோர்களின் கட்டுக் கதைகளில் (பின்வருமாறு) இருக்கிறது. மரணத்திற்கு தயாராகிக் கொள்வதற்காக மூஸா தன்னுடைய இறைவனிடம் தான் மரணிக்கும் காலத்தை அறிவிக்குமாறு கேட்டார். மூஸா மரணித்தவுடன் வெற்றியடைவார் என்று அல்லாஹ் விதியாக்கிவிட்ட போது மூஸாவிடம் மரணத்தின் மலக்கை அனுப்பி அவரிடம் இந்தச் செய்தியை தெரிவித்த பின்பு அவரது உயிரைக் கைப்பற்றி வருமாறு மலக்கிற்கு அல்லாஹ் கட்டளையிட்டான். வானவர் மூஸாவிடம் மனிதவடிவில் வந்து விஷயத்தைக் கூறினார். தொடர்ந்து இருவரும் கடுமையாக விவாதித்துக் கொண்டும் தர்க்கித்துக் கொண்டும் இருந்தனர். இவ்விஷயத்தில் வானவர் தன்னை மிகைத்து விட்டதை மூஸா கண்ட போது வானவரை அடித்து விட்டார். இதனால் வானவரின் இரு கண்களில் ஒன்று போய் விட்டது. அவர் இன்று வரை ஒற்றைக்கண் கொண்டவராகவே இருக்கிறார். இது தொடர்பாக (பின்வரும் பாடல்) சொல்லப்பட்டுள்ளது.

மரணத்தின் மலக்கே (உனது கூற்றை) மறுத்தவரை நீ சந்தித்தாய்

மூஸா அடித்த அடி உன்னை ஒற்றைக்கண் உள்ளவராக்கிவிட்டது.

இச்சம்வத்தை சஆலபீ அவர்கள் பதிவு செய்து விட்டு இச்சம்பவத்திற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கூறுகிறார்.

எனவே அல்லாஹ்விற்கும் ரசூல்மார்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் இது போன்ற தகவல்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்று ஒளிவு மறைவில்லாமல் கூறுவதே ஏற்புடையது.

5. நபிகள் நாயகம் (ஸல்) அன்னியப் பெண்ணுடன் பழகினார்களா?


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்களது வீட்டிற்குச் செல்வது வழக்கம். அவர் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களின் துணைவியராக இருந்தார். ஒரு நாள் பகலில் நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்ற போது அவர் நபி (ஸல்) அவர்களுக்கு உணவளித்த பின் நபி (ஸல்) அவர்களுக்குப் பேண் பார்த்து விடலானார். அப்போது நபி (ஸல்) அவர்கள் உறங்கி விட்டார்கள். பிறகு சிரித்தபடி விழித்தார்கள்.

தொடர்ந்து உம்மு ஹராம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே ஏன் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் என் சமுதாயத்தாரில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் இந்தக் கடலின் மத்தியில் பயணம் செய்யும் புனிதப் போராளிகளாக எனக்குக் காட்டப்பட்டனர். அவர்கள் கட்டில்களில் வீற்றிருக்கும் மன்னர்களாக அல்லது மன்னர்களைப் போன்று இருந்தார்கள் என்று கூறினார்கள். உடனே நான் அல்லாஹ்வின் தூதரே என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று சொன்னேன். அப்போது எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். பிறகு (மீண்டும்) தலையை வைத்து விட்டுப் பிறகு சிரித்தபடி விழித்தெழுந்தார்கள். அப்போதும் நான் ஏன் சிரிக்கிறீர்கள்? அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் என் சமுதாயத்தோரில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் புனிதப் போர்புரிபவர்களாக எனக்குக் காட்டப்பட்டார்கள் என்று முன்பு போலவே பதிலளித்தார்கள். அதைக் கேட்டு நான் அல்லாஹ்வின் தூதரே என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் நீங்கள் (கடல் பயணம் செய்து அறப்போருக்கு) முதலாவதாகச் செல்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள் என்று கூறினார்கள். உம்மு ஹராம் (ரலி) அவர்கள் முஆவியா பின் அபீ சுஃப்யான் (ரலி) அவர்களின் (ஆட்சிக்) காலத்தில் கடல் பயணம் மேற்கொண்டார்கள். பின்பு அவர்கள் கடலிலிருந்து புறப்பட்ட போது தமது வாகனத்திலிருந்து கீழே விழுந்து இறந்து விட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : புகாரி (7001)


நபி (ஸல்) அவர்கள் என் சமுதாயத்தினரில் முதலில் கடலில் (சென்று) புனிதப் போர் புரியும் படையினர் (சொர்கம் புகுவதற்கான தகுதியை) ஏற்படுத்திக் கொண்டு விட்டார்கள் என்று கூறினார்கள். இதைச் செவியுற்ற நான் அல்லாஹ்வின் தூதரே நான் அவர்களில் ஒருத்தியா? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் நீங்கள் அவர்களில் ஒருவர் தாம் என்று பதிலளித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் எனது சமுதாயத்தினரில் சீசருடைய நகரத்தின் (பழைய கான்ஸ்டான்டி நோபிள் அல்லது தற்போதைய இஸ்தான்பூலின்) மீது படையெடுக்கும் முதலாவது படையினர் மன்னிக்கப்பட்டவர்கள் ஆவார் என்று கூறினார்கள். அவர்களில் நானும் ஒருத்தியா? அல்லாஹ்வின் தூதரே என்று நான் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் இல்லை என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : உம்மு ஹராம் (ரலி)

நூல் : புகாரி (2924)


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள். உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு உணவளித்துவிட்டு அவர்களுடைய தலையில் பேண் பார்த்து விடுவதற்காக உட்கார்ந்தார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள்

நூல் : முஸ்லிம் (3535)

நபி (ஸல்) அவர்கள் தனது தலையை உம்மு ஹராம் (ரலி) அவர்களிடத்தில் வைத்தார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள்

நூல் : முஸ்லிம் (3536)    

மார்க்கத்திற்கு முரணானவற்றில் கணவனின் கட்டளைக்கு கட்டுப்படலாமா ?


Saturday, January 10, 2015

ஆண்களிடமிருந்து பெண்கள் வரதட்சணை வாங்குவது ஆண்களுக்குக் கஷ்டமாகாதா?

கேள்வி : திருமணத்தின் போது ஆண்கள் பெண்களிடமிருந்து வரதட்சணை வாங்குவதை இஸ்லாம் மார்க்கம் தடை செய்கிறது. ஆனால், திருமணத்தின் போது பெண்கள் ஆண்களிடமிருந்து வரதட்சணை வாங்குவதை அனுமதிக்கிறது. இது ஆண்களுக்குக் கஷ்டமாகாதா? என்று என் நண்பர் ஒருவர் கேட்கிறார். - அப்துல் முனாப், அல்-அய்ன்.

பதில் பி.ஜே : கொடுப்பது எப்போதுமே கஷ்டமானது தான். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மனைவிக்குச் சோறு போடுவதும் உடைகள் மற்றும் அணிகலன்கள் எடுத்துக் கொடுப்பதும் கூட ஆண்களுக்குக் கஷ்டமானது தான்.

அதற்காக ஆண்கள் மீது அந்தச் சுமையைச் சுமத்தக் கூடாது என்று அந்த நண்பர் கூற மாட்டார்.

இதில் கஷ்டத்தைக் கவனத்தில் கொள்வதை விட நியாயத்தைத் தான் கவனத்தில் கொள்ள வேண்டும். சைக்கிள் வாங்குவதை விட கார் வாங்குவது கஷ்டமானது என்பதால் நாம் கார் வாங்காமல் இருப்பதில்லை. கார் மூலம் கிடைக்கும் கூடுதல் வசதி மற்றும் சொகுசுக்காகக் கஷ்டத்தைப் பின்னுக்குத் தள்ளி விடுகிறோம்.

அது போல் தான் திருமண வாழ்க்கையின் மூலம் ஆண்கள் அதிக வசதியையும், சொகுசையும் இன்பத்தையும் அனுபவிக்கிறார்கள்.

சிறிது நேரம் இருவரும் இன்பத்தை அனுபவிப்பதில் மட்டும் சமமாக உள்ளனர். பின்விளைவுகளைச் சுமப்பதில் சமமாக இல்லை.

இவனது கருவைச் சுமப்பதால் அவள் படும் சிரமங்களை எண்ணிப் பார்க்க வேண்டும். பிரசவிக்கும் சிரமம், குடும்பத்தாருக்கு சேவை செய்யும் சிரமம் என ஏராளமான துன்பங்களைப் பெண்கள் தான் சுமக்கிறார்கள். ஆணுக்குச் சுகம் மட்டுமே கிடைக்கிறது. எனவே மஹர் கொடுப்பது அவனுக்குச் சிரமமாக இருந்தாலும் அவன் கொடுக்க வேண்டும் என்ற நியாயத்தைப் புறக்கணிக்க முடியாது.

இது முதலாவது காரணம். பெண் மீது வரதட்சணை சுமை சுமத்தப்பட்டால் அதை அவளது தந்தை தான் தனியாகச் சுமக்க வேண்டும். ஆனால் ஆண் மீது அந்தச் சுமையைச் சுமத்தினால் அவனது தந்தையுடன் அவனும் சேர்ந்து உழைக்க முடியும். இந்த விஷயத்தில் கஷ்டத்தைத் தாங்கும் வலிமை ஆண்களுக்குத் தான் அதிகமாகவுள்ளது என்பது இரண்டாவது காரணம்.

பொதுவாக உலகில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக எண்ணிக்கையில் பிறக்கிறார்கள். ஆண்களை விட பத்து வருடத்திற்கு முன்பே திருமணத்துக்கு தயாராகவும் ஆகிவிடுகிறார்கள்.

திருமணத்துக்குத் தகுதியான பெண்கள் என்று கணக்கிட்டால் அவர்கள் அத்தனை பேருக்கும் கணவர்கள் கிடைக்க வேண்டுமானால் பத்து வருடங்களுக்கு ஆண்களாக மட்டுமே பிறக்க வேண்டும்.

பிறப்பில் பெண்கள் அதிகமாகவுள்ளதாலும், திருமணத்துக்குத் தயாராவதில் ஆண்கள் பத்து வருடம் பின்தங்கியுள்ளதாலும் ஆண்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

எனவே தான் பெண்கள் மிக மிக கணிசமான அளவுக்கு வரதட்சணை கொடுக்க வேண்டிய நிலைமை உள்ளது. ஆண்கள் மஹர் கொடுக்க வேண்டும் என்ற நிலை உருவாகும் போது பெண்கள் தாறுமாறாகக் கேட்க மாட்டார்கள். எண்ணிக்கையில் மலிந்து கிடப்பதால் அற்பமான தொகையைப் பெற்றுக் கொண்டே வாழ்வு கிடைத்தால் போதும் என்ற முடிவுக்கு வருவார்கள்.

வரதட்சணை பத்து லட்சம், இருபது லட்சம் என்ற அளவுக்குப் போனாலும் மஹர் கொடுத்து மணம் முடிப்பவர்கள் சில ஆயிரங்களில் தான் இன்றளவும் நிற்கிறார்கள். இது ஆண்களுக்கு தாங்கக்கூடிய கஷ்டமே. பெண்கள் கொடுக்க வேண்டும் என்றால் இதை விடப் பல மடங்கு அதிகமாக அவர்களிடம் கேட்பார்கள். கேட்டு வருகிறார்கள்.

இந்த வித்தியாசங்களைப் புரிந்து கொண்டால் ஆண்கள் தான் மஹர் கொடுக்க வேண்டும் என்பதில் உள்ள நியாயத்தை அந்த நண்பர் ஒப்புக் கொள்வார்.

பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் - தொடர் 14 - பி.ஜே

சூனியத்தைப் பற்றி காபிர்களின் நம்பிக்கை இது என்றால் அல்லாஹ்வின் பார்வையில் சூனியம் என்பது என்ன? அதை இப்போது பார்ப்போம்.

108. அவர் தமது கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது.

109, 110. "இவர் தேர்ந்த சூனியக்காரராக உள்ளார். உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்?'' என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர்.

111, 112. "இவருக்கும், இவரது சகோதரருக்கும் அவகாசம் அளிப்பீராக! (சூனியக்காரர்களைத்) திரட்டி வருவோரைப் பல ஊர்களுக்கும் அனுப்புவீராக! அவர்கள் தேர்ந்த சூனியக்காரர் ஒவ்வொருவரையும் உம்மிடம் கொண்டு வருவார்கள்'' என்றும் (ஃபிர்அவ்னிடம்) கூறினர்.

113. சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் வந்தனர். "நாங்கள் வெற்றிபெற்றால் எங்களுக்குப் பரிசு உண்டா?'' என்று அவர்கள் கேட்டனர்.

114. "ஆம்! நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்கள்'' என (அவன்) கூறினான்.

115. "மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீரா? நாங்களே போடட்டுமா?'' என்று அவர்கள் கேட்டனர்.

116. "நீங்களே போடுங்கள்!'' என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.

117. "உமது கைத்தடியைப் போடுவீராக!'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது.

118. உண்மை நிலைத்தது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாயின.

119. அங்கே அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்; சிறுமையடைந்தனர்.
120. சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர்.

திருக்குர்ஆன் 7:108 - 120

65. "மூஸாவே! நீர் போடுகிறீரா? நாங்கள் முதலில் போடட்டுமா?'' என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர்.

66. "இல்லை! நீங்களே போடுங்கள்!'' என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல்182 அவருக்குத் தோற்றமளித்தது.

67. மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார்.

68. "அஞ்சாதீர்! நீர் தான் வெல்பவர்'' என்று கூறினோம்.

69. "உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்'' (என்றும் கூறினோம்.)

70. உடனே சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்து, "மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்'' என்றனர்.

திருக்குர்ஆன் 20:65-70


இவ்வசனங்கள் கூறுவதைக் கவனியுங்கள். சூனியக்காரர்கள் மகத்தான சூனியத்தைச் செய்தனர் என்று 7:116 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

மூஸா நபிக்கு எதிராக களம் இறங்கிய சூனியக்காரர்கள் சாதாரணமானவர்கள் அல்லர். மிகவும் திறமை வாய்ந்த சூனியக் கூட்டம். அவர்கள் செய்து காட்டியது சிறிய சூனியம் அல்ல. மகத்தான சூனியத்தைச் செய்தனர். அந்த மகத்தான சூனியத்தால் அவர்கள் செய்து காட்டியது என்ன?

அவர்கள் செய்த சூனியத்தின் மூலம் கயிறுகளும் கைத்தடிகளும் பாம்புகளாக மாறவில்லை. மாறாக பாம்பு போல் பொய்த்தோற்றம் ஏற்படுத்தியது என்று 20:66 வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.

மகத்தான சூனியத்தின் மூலம் பொய்த்தோற்றம் தான் ஏற்படுத்த முடிந்தது. மெய்யாக எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. மகத்தான சூனியத்தின் சக்தியே இதுதான் என்றால் சாதாரண சூனியத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

20:69 வசனத்தில் சூனியக்காரர்கள் செய்தது தில்லுமுல்லு (சூழ்ச்சி) என்றும் அல்லாஹ் கூறுகிறான். சில தில்லுமுல்லுகளைச் செய்து சூனியத்தால் ஏதோ செய்துவிட்டதாக கண்களுக்குக் காட்ட முடிந்தது.

மேஜிக் எனும் தந்திரக் கலையைத் தொழிலாகச் செய்யும் மேஜிக் நிபுனர்கள் ஒரு மனிதனைப் படுக்க வைத்து அல்லது நிற்க வைத்து அவனை இரண்டு துண்டுகளாக வெட்டுவது போல் காட்டுவார்கள். சிறிது நேரத்தில் இரு துண்டுகளாக அறுக்கப்பட்டவர்களை இணைத்து பழைய நிலைக்கு கொண்டு வருவார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் அந்த மனிதனை இரண்டாக வெட்டவில்லை. வெட்டாமலே வெட்டியது போல் வண்ண விலக்குகளால் ஜாலம் செய்து நம் கண்களை ஏமாற்றுவார்கள். அது போல் தான் சூனியக்காரர்களும் ஏமாற்றுவார்கள். உண்மையில் அவர்கள் ஏதும் செய்வதில்லை.

இவை கண்கட்டி வித்தைதான் என்று மேஜிக் செய்பவர்கள் சொல்லிவிடுவார்கள்.

ஆனால் சூனியக்காரர்கள் தான் செய்வதைப் பற்றி இப்படி சொல்ல மாட்டார்கள் அவ்வளவுதான் வித்தியாசம்.

ஒருவரைக் கட்டிலில் படுக்க வைத்து, கட்டிலின் நான்கு கால்களையும் உருவி விடுவார்கள். கட்டிலின் நான்கு கால்களும் உருவப்பட்ட பின்னர் பார்த்தால் அந்த மனிதர் அந்தரத்தில் தொங்குவது போல் தெரியும்.

ஆனால் உண்மையில் இப்படிச் செய்ய முடியாது. மெல்லிய கம்பியால் அந்தக் கட்டில் தூக்கிக் கட்டப்பட்டு இருக்கும். அது நம் கண்களுக்கு தெரியாததால் அந்த மனிதன் அந்தரத்தில் மிதப்பதாகத் தெரியும்.

யானையை மறைய வைப்பார்கள். மக்கள் கூடி இருக்கும் போது யானையை மேடையில் ஏற்றி லைட் ஆஃப் செய்து ஆன் செய்தால் யானை இருக்காது. இதே போன்று அடுத்து செய்தவுடன் மீண்டும் யானை வந்துவிடும். இவை ஒன்றிரண்டு செக்கெண்டுகளில் செய்வார்கள்.

நிஜமாகவே யானையை இப்படி காணாமல் போகச் செய்ய முடியுமா? முடியவே முடியாது.

இது வண்ண விளக்குகளால் நம் கண்ணை ஏமாற்றும் வித்தையாகும். ஒரு சில வண்ண விளக்குகளைப் போட்டால் சில வண்ணங்கள் மறைந்துவிடும். அதே போன்று யானையின் கருப்பு வண்ணத்தை மறைக்க அதற்கான விளக்கைப் போட்டால் யானை அதே இடத்தில் இருந்தாலும் அவை நம் கண்களுக்குத் தெரியாது. அங்கு சென்று தொட்டுப் பார்த்தால் யானை அதே இடத்தில் தான் இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கண்களுக்கு யானை இல்லாத தோற்றத்தை நமக்கு நம் கண் ஏற்படுத்தும். இவைதான் கண்ணை மயக்குவது ஆகும்.

மேலே உள்ள வசனங்களில் அல்லாஹ் பயன்படுத்தியுள்ள வாசகங்களைக் கவனமாகப் பாருங்கள்!

பெண்கள் வாசனை திரவியங்கள் போட்டுக் கொள்ளலாமா?

கேள்வி - வெளியில் செல்லும் போது பெண்கள் வாசனை திரவியங்கள் போட்டுக் கொள்ளலாமா?

பதில் பி.ஜே -  நறுமணப் பொருட்கள் இரு வகைகளில் உள்ளன.

தனது உடலில் துர்வாடை இருக்கக் கூடாது என்பதற்காக பயன்படுத்தும் மென்மையான நறுமணமும் உண்டு. ஆட்களை தன் பக்கம் இழுக்கும் வகையிலான நறுமணமும் உண்டு. முதல் வகையான நறுமணம் அருகில் நெருங்கி வருவோருக்கும் மட்டுமே உணர முடியும். இரண்டாம் வகை நறுமணம் தூரத்தில் போகும் நபரையும் சுண்டி இழுத்து திரும்பிப் பார்க்க வைக்கும்.

பெண்கள் வீட்டுக்குள் இருக்கும் போது இரண்டு வகையான நறுமணங்களையும் பூசிக் கொள்ளலாம். ஆனால் வெளியே செல்லும் போது முதல் வகையான நறுமணப் பொருட்களை மட்டுமே பயன்படுத்தலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இரண்டு வகையான நறுமணப்பொருட்கள் இருந்துள்ளன.

و حدثنا عمرو بن سواد العامري حدثنا عبد الله بن وهب أخبرنا عمرو بن الحارث أن سعيد بن أبي هلال وبكير بن الأشج حدثاه عن أبي بكر بن المنكدر عن عمرو بن سليم عن عبد الرحمن بن أبي سعيد الخدري عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم قال غسل يوم الجمعة على كل محتلم وسواك ويمس من الطيب ما قدر عليه إلا أن بكيرا لم يذكر عبد الرحمن وقال في الطيب ولو من طيب المرأة
 
வெள்ளிக்கிழமை குளிப்பதும் பல் துலக்குவதும் பருவமடைந்த அனைவர் மீதும் கடமையாகும். மேலும் தன்னால் இயன்ற நறுமணத்தையும் பூசிக் கொள்ள வேண்டும். (நறுமணப் பொருள் இல்லாத பட்சத்தில்) பெண்களுக்கான நறுமணப் பொருளையாவது பூசிக் கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் முஸ்லி ம் 1400

ஆண்களின் நறுமணமும் பெண்களின் நறுமணமும் அன்று தனித்தனியாக இருந்துள்ளன என்பதையும் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பதையும் இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

حدثنا محمد بن بشار حدثنا يحيى بن سعيد القطان عن ثابت بن عمارة الحنفي عن غنيم بن قيس عن أبي موسى عن النبي صلى الله عليه وسلم قال كل عين زانية والمرأة إذا استعطرت فمرت بالمجلس فهي كذا وكذا يعني زانية وفي الباب عن أبي هريرة قال أبو عيسى هذا حديث حسن صحيح
 
ஒவ்வொரு கண்ணும் விபச்சாரம் செய்கிறது. ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு (ஆண்களின்) சபைக்குச் சென்றால் அவள் விபச்சாரம் செய்பவள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : திர்மிதி 2710

கண்கள் விபச்சாரம் செய்கிறது எனக் கூறி விட்டு பெண்கள் நறுமணம் பூசுவது பற்றி நபிகள் நாயகம் கூறுவதால் ஆண்கள் சபைக்குச் சென்று அவர்கள் அப்பெண்ணை ஏறெடுத்துப் பார்க்கும் நிலையை ஏற்படுத்துவதால் அவளும் விபச்சாரி எனக் கூறியுள்ளனர்.

மற்றொரு ஹதீஸில்

أخبرنا إسمعيل بن مسعود قال حدثنا خالد قال حدثنا ثابت وهو ابن عمارة عن غنيم بن قيس عن الأشعري قال قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة استعطرت فمرت على قوم ليجدوا من ريحها فهي زانية
 
தனது நறுமணத்தை மற்றவர்கள் நுகர வேண்டும் என்ற நோக்கத்துக்காக ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு சென்றால் அவள் விபச்சாரி என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றனர். நஸாயீ 5036

அன்னிய ஆண்களைக் கவரும் நோக்கத்தில் நறுமணம் பூசி செல்வதையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள் என்பதையும் அவ்வாறு இல்லாமல் நறுமணம் பூசிக் கொண்டு செல்ல தடை இல்லை என்பதையும் இதில் இருந்து ஊகம் செய்யலாம். இன்னும் சொல்லப் போனால் தெளிவாக அனுமதிக்கும் ஹதீஸ்களும் உள்ளன.

 حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا يحيى بن سعيد القطان عن محمد بن عجلان حدثني بكير بن عبد الله بن الأشج عن بسر بن سعيد عن زينب امرأة عبد الله قالت قال لنا رسول الله صلى الله عليه وسلم إذا شهدت إحداكن المسجد فلا تمس طيبا
 
உங்களில் ஒருத்தி பள்ளிவாசலுக்கு வருவதாக இருந்தால் அவர் நறுமணம் பூச வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்லி -ம் 674 வது ஹதீஸ் கூறுவதைப் பொதுவான தடைக்கு ஆதாரமாக சிலர் காட்டுவது ஏற்க முடியாததாகும்.

ஏனெனில் இது இஷாத் தொழுகைக்கு அதாவது இரவுக்கு மட்டும் உள்ள தடை என்பதைப் பின்வரும் ஹதீஸ்கள் விளக்குகின்றன.

حدثنا هارون بن سعيد الأيلي حدثنا ابن وهب أخبرني مخرمة عن أبيه عن بسر بن سعيد أن زينب الثقفية كانت تحدث عن رسول الله صلى الله عليه وسلم أنه قال إذا شهدت إحداكن العشاء فلا تطيب تلك الليلة
 
உங்களில் ஒருத்தி இஷாவுக்கு வருவதாக இருந்தால் அவர் நறுமணம் பூச வேண்டாம் என்று நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.  முஸ்லிம் 673

இந்த ஹதீஸையும் முந்திய ஹதீஸையும் ஸைனப் என்ற சஹாபி தான் அறிவிக்கிறார். எனவே அவர் பொதுவாக அறிவிப்பதை விட குறிப்பாக அறிவிப்பதைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்த அறிவிப்பை அபூஹுரைரா அவர்களின் அறிவிப்பும் உறுதி செய்கின்றது. அது வருமாறு:

حدثنا يحيى بن يحيى وإسحق بن إبراهيم قال يحيى أخبرنا عبد الله بن محمد بن عبد الله بن أبي فروة عن يزيد بن خصيفة عن بسر بن سعيد عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة أصابت بخورا فلا تشهد معنا العشاء الآخرة
 
எந்தப் பெண்ணாவது நறு மணப் புகை பூசிக் கொண்டால் அவள் நம்மோடு இஷா தொழுகைக்கு வர வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ரலி) நூல் முஸ்லிம் 675

எனவே இஷா தொழுகைக்குப் போகும் போது நறுமணம் பூசிக் கொண்டு செல்லக் கூடாது என்றால் அது இஷாவுக்கு மட்டும் உரியது என்று புரிந்து கொள்ளலாம். அது இரவில் நறுமணம் பூசிக் கொண்டு செல்லக் கூடாது என்ற கருத்தையும் தரும் என்றும் புரிந்து கொள்ளலாம். மற்ற நேரங்களில் பெண்கள் ஆண்களைச் சுண்டி இழுக்கும் வகையிலான நறுமணமாக இல்லாமல் சாதாரண நறுமணம் பூசி வெளியே செல்ல அனுமதி உண்டு என்பதை இந்த ஹதீஸ்கள் உணர்த்துகின்றன.

Friday, January 9, 2015

குடும்பத்தினர் மாத்திரம் கலந்து பிறந்த நாள் கொண்டாடலாமா?

கேள்வி - எனது குடும்பத்தினர் மாத்திரம் கலந்து கொண்டு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடலாமா?     விளக்கம் தரவும். - இர்பான்

பதில் பி.ஜே - பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை. ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் கடைபிடிக்க வேண்டிய சந்தோஷமான துக்கமான காரியங்கள் அனைத்தையும் இஸ்லாம் கற்றுத்தந்திருக்கின்றது. இதில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இஸ்லாம் குறிப்பிடவில்லை.

இந்த சமுதாயத்துக்கு பெரும் பாக்கியமாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது பிறந்த நாளை அவர்களும் கொண்டாடவில்லை. கொண்டாடுமாறு மக்களுக்கும் கூறவில்லை. ஏன் நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட நபித்தோழர்களிடையே இப்படிப்பட்ட ஒரு கலாச்சாரம் இருக்கவில்லை.

மேலும் இக்கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் அமைந்துள்ளது. மனிதனுடைய பிறப்பில் அவனுடைய சாதனை எதுவும் இல்லை. ஒவ்வொரு மனிதனுடைய பிறப்பும் அவன் வளர்வதும் இறைவனுடைய அருளாலே நடந்துகொண்டிருக்கின்றது. எனவே இதில் மனிதன் தன்னை பெருமைப்படுத்திக்கொள்வதில் என்ன தத்துவம் அடங்கியிருக்கின்றது?

மேலும் இறைவன் நமக்கு விதித்த காலக்கெடுவில் ஓராண்டு கழிந்துவிட்டது எனக் கவலைப்படுவதைத் தவிர பிறந்த நாளில் சந்தோஷப்படுவதற்கு என்ன இருக்கின்றது?

இது பிற்காலத்தில் கிரிஸ்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட கொண்டாட்டமாகும். கிரிஸ்தவர்களின் கெட்ட கலாச்சாரத்தை நாம் பின்பற்றக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

3456حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ حَدَّثَنَا أَبُو غَسَّانَ قَالَ حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودَ وَالنَّصَارَى قَالَ فَمَنْ رواه البخاري

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :

''உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ''அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா  நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''வேறெவரை?'' என்று பதிலலித்தார்கள்.
 
புகாரி (3456)

எனவே பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு நீங்கள் பிறரை அழைத்தாலும் பிறரை அழைக்காமல் உங்கள் குடும்பத்தினர் மட்டும் கொண்டாடினாலும் அது தவறு. இதை நாம் கைவிட வேண்டும்.

Thursday, January 8, 2015

ஹதீஸ்கள் குர்ஆனிற்கு முரண்படுமா? - தொடர் 14

இந்த நூல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போது அப்பாஸ் அலி எழுதியது. தற்போது ஜமாஅத்திலிருந்து வெளிவந்தவுடன் இந்த நூலில் உள்ள கருத்துகளுக்கு முழுவதும் மாறுபடுவதாகவும், இனி இந்த நூலிற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துப் பிழைகள்


நபி (ஸல்) அவர்கள் கணவில் கண்டதைப் பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில் ஆயிஷாவே எனக்கு அல்லாஹ் பதிலளித்ததை நீ பார்த்தாயா? என்று கேட்டதாக அஹ்மதில் 23211 வது செய்தியில் இடம்பெற்றுள்ளது. நபி (ஸல்) அவர்களுடைய கனவில் அவர்களுக்குக் காட்டப்பட்ட விஷயத்தை ஆயிஷா (ரலி) அவர்கள் பார்த்திருக்க முடியாது என்பது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமல்ல. நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அப்படியிருக்க நீ பார்த்தாயா? என்று நபி (ஸல்) அவர்கள் எப்படி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்பார்கள்?.

மேற்கண்ட செய்திகளின் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று அறியப்பட்டாலும் அதில் கூறப்படும் கருத்துக்கள் குர்ஆனிற்கு எதிராக அமைந்துள்ளதாலும் அந்த அறிவிப்புக்களில் முரண்பாடு இருப்பதினாலும் இதை நாம் ஏற்கக் கூடாது.

இது போன்ற ஹதீஸ்களைத் தான் நாம் ஏற்கக் கூடாது என்று சொல்கிறோம். இவ்வாறு இல்லாத பல்லாயிரக்கணக்கான ஹதீஸ்களை ஏற்றுக் கொள்கிறோம். ஏற்றுக்கொள்ளும் படி வலியுறுத்தி வருகிறோம். குர்ஆன் மட்டும் போதும் ஹதீஸ் வேண்டாம் என்று கூறுவோருடன் விவாதம் புரிந்து ஹதீஸின் முக்கியத்துவத்தையும் அவர்களுக்குக் கூறி வருகிறோம்.

4. மூஸா (அலை) வானவரை தாக்கினார்களா?


உயிர் பறிக்கும் மலக்கு ஒருவர் மூஸா (அலை) அவர்களிடம் அனுப்பப்பட்டார். அவர் வந்த போது மூஸா (அலை) அவர்கள் வானவர் கண் பிதுங்கும் அளவுக்கு அடித்து விட்டார்கள். உடனே அவர் அல்லாஹ்விடம் போய் இறைவா மரணிக்க விரும்பாத ஒரு அடியானிடம் நீ என்னை அனுப்பி விட்டாய் என்றார். பிறகு அல்லாஹ் அவரது கண்ணைச் சரிபடுத்திவிட்டு அவரை ஒரு மாட்டின் முதுகில் கையை வைக்கச் சொல்லி அவரது கை எத்தனை ரோமங்களை அடக்கிக் கொள்கிறதோ அத்தனை வருடங்கள் அவர் உயிர் வாழலாம் என்பதையும் கூறும் என அனுப்பி வைத்தான். (அவ்வாறே அவர் மூஸா (அலை) அவர்களிடம் வந்து கூறிய போது) மூஸா (அலை) இறைவா அதற்குப் பிறகு? எனக் கேட்டதும் அல்லாஹ் பிறகு மரணம் தான் என்றான். உடனே மூஸா (அலை) அவர்கள் அப்படியானால் இப்பொழுதே (தயார்) எனக் கூறிவிட்டு அல்லாஹ்விடம் (பைத்துல் முகத்தஸ் என்னும்) புனிதத்தலத்திலிருந்து கல்லெறியும் தூரத்திலுள்ள இடத்தில் தம் உயிரைக் கைப்பற்றுமாறு வேண்டிக் கொண்டார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறும் போது நான் மட்டும் இப்போது அங்கு (பைத்துல் முகத்தஸில்) இருந்தால் உங்களுக்கு அந்த செம்மணற் குன்றிற்கருகில் உள்ள பாதையிலிருக்கும் மூஷா (அலை) அவர்களது கப்ரைக் காட்டியிருப்பேன் எனக் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (1339)


மூஸா (அலை) அவர்களிடம் மரணத்தின் வானவர் வந்து உங்களது இறைவனுக்கு பதில் தாருங்கள் என்று கூறினார். அப்போது மூஸா (அலை) அவர்கள் மரணத்து வானவரின் கண்ணில் அடித்து கண்னை பிதுங்கச் செய்து விட்டார். எனவே அந்த வானவர் அல்லாஹ்விடம் சென்று மரணத்தை விரும்பாத உனது அடியானிடம் என்னை நீ அனுப்பி விட்டாய். அவர் என் கண்னை பிதுங்கச் செய்து விட்டார் என்று கூறினார். அல்லாஹ் அவருக்குக் கண்ணைத் திரும்பக் கொடுத்து என்னுடைய அடியானிடம் சென்று நீ வாழ்வதையா விரும்புகிறாய்? நீ வாழ்வதை விரும்பினால் ஒரு மாட்டின் முதுகில் உனது கையை வை. உனது கை எத்தனை ரோமங்களை அடக்கிக் கொள்கிறதோ அத்தனை வருடங்கள் நீர் உயிர் வாழலாம் என்று சொல்லுங்கள் எனக் கூறினான். (இதை வானவர் கூறிவிட்டவுடன்) மூஸா (அலை) இறைவா அதற்குப் பிறகு? எனக் கேட்டதும் பிறகு மரணம் தான் என்று அல்லாஹ் கூறினான். உடனே மூஸா (அலை) அவர்கள் அப்படியானால் இப்பொழுதே (தயார்) எனக் கூறிவிட்டு அல்லாஹ்விடம் (பைத்துல் முகத்தஸ் என்னும்) புனிதத்தலத்திலிருந்து கல்லெறியும் தூரத்திலுள்ள இடத்தில் தம் உயிரைக் கைப்பற்றுமாறு வேண்டிக் கொண்டார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறும் போது நான் மட்டும் இப்போது அங்கு (பைத்துல் முகத்தஸில்) இருந்தால் உங்களுக்கு அந்த செம்மணற் குன்றிற்கருகில் உள்ள பாதையிலிருக்கும் மூஷா (அலை) அவர்களது கப்ரைக் காட்டியிருப்பேன் எனக் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் (4375)

மேலுள்ள ஹதீஸ்களைத் தெளிவாகப் படித்தால் தான் பின்னால் நாம் சொல்லப் போகின்ற கருத்துக்கள் புரியும். இந்த ஹதீஸ் பல குர்ஆன் வசனங்களுக்கு முரண்படுவதால் நபி (ஸல்) அவர்கள் இதைச் சொல்லியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று சொல்கிறோம்.

1. மூஸா நபியின் உயிரைக் கைப்பற்றுவதற்குரிய நேரம் வந்த போதும் மூஸா (அலை) அவர்கள் ஒத்துக் கொள்ளாததால் அல்லாஹ் மூஸா நபிக்கு ஆயுளை நீட்டிக் கொடுத்தான் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. ஆனால் ஒவ்வொரு உயிருக்கும் அல்லாஹ் ஏற்படுத்திய காலக்கெடு வந்துவிட்டால் அதில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் உடனே உயிர்கள் கைப்பற்றப்பட்டு விடும் என்று குர்ஆன் கூறுகிறது.

"அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக்கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்.

அல்குர்ஆன் (10 : 49)

அதற்குரிய தவணை வந்து விட்டால் எவருக்கும் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

அல்குர்ஆன் (63 : 11)


2. அல்லாஹ் ஒன்றை தீர்ப்பளித்து விட்டால் அதை ஏற்றுக் கொள்வது ஒரு முஃமினின் மீது கடமை. இறைவன் அளித்த தீர்பபை நிராகரித்ததோடு அத்தீர்ப்பைக் கொண்டு வந்த தூதரையும் தாக்குவது இறைத் தூதரின் பண்பாக இருக்க முடியாது. இப்படிப்பட்ட செயல் இறை நிராகரிப்பில் தள்ளிவிடும்.

மூஸா (அலை) அவர்கள் இந்த தாக்குதலை நிகழத்திய பிறகு அல்லாஹ் தனது முடிவை மாற்றிக் கொண்டு அவகாசம் அளித்தான் என்று முற்றிலும் இறைத் தன்மைக்கு மாற்றமான கருத்தை இந்த ஹதீஸ் சொல்கிறது. இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் பொருந்தாத தன்மைகள் இருப்பதாக இந்த ஹதீஸ் சொல்வதால் இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது.

3. மூஸா (அலை) அவர்கள் மரணத்தை விரும்பாதவராக இருந்தார் என வானவர் அல்லாஹ்விடம் கூறியுள்ளார். மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் ஆயுளை நீட்டித் தந்த போது அதற்குப் பிறகு என்ன நடக்கும் என்று மூஸா கேட்கிறார். இதற்குப் பிறகு மரணம் என்று அல்லாஹ் கூறுகிறான். அப்படியானால் இப்பவே எனது உயிரை எடுத்துக் கொள் என்று மூஸா கூறுகிறார்.

மரணமே இல்லாத வாழ்க்கையை எனக்குக் கொடுப்பதாக இருந்தால் கொடு. எப்படியும் நான் மரணித்தாக வேண்டும் என்று நினைத்தால் இந்த அவகாசம் எனக்கு வேண்டியதில்லை. இப்பவே உயிரை எடுத்துக்கொள் என்ற கருத்தில் மூஸா கூறியுள்ளார். இந்த வாக்கியங்கள் மூஸா (அலை) அவர்கள் கடுமையாக மரணத்தை வெறுத்தார்கள் என்று கூறுகிறது.

மரணிக்கவே கூடாது என்று பேராசைப்படுவது நிச்சயமாக இறைத் தூதரான மூஸா (அலை) அவர்களின் குணமாக இருக்க முடியாது. மாறாக யூதர்கள் இவ்வாறு விரும்பியதாகக் குர்ஆன் கூறுகிறது.

மற்ற மனிதர்களை விட, (குறிப்பாக) இணை கற்பித்தோரை விட வாழ்வதற்கு அதிகமாக ஆசைப்படுவோராக அவர்களைக் காண்பீர்! அவர்களில் ஒருவர் ஆயிரம் வருடங்கள் வாழ்நாளாக அளிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார். அவ்வாறு வாழ்நாள் அளிக்கப்படுவது வேதனையிலிருந்து அவரைத் தடுக்கக் கூடியதாக இல்லை. அவர்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.

அல்குர்ஆன் (2 : 96)

அற்பமான இந்த உலக வாழ்க்கையை விட மறுமையின் வாழ்வே உண்ணதமானது என்று நன்கு உணர்ந்தவர்கள் நபிமார்கள். அல்லாஹ்விடத்தில் மாபெரும் சிறப்பைப் பெற்றிருந்த மூஸா நபிக்காக பல இன்பங்களை அல்லாஹ் தயார் செய்து வைத்திருக்கும் போது இதை அனுபவிப்பதை விட்டுவிட்டு அற்பமான இந்த உலகத்தில் வாழ்வதை மூஸா (அலை) அவர்கள் தேர்வு செய்திருக்க மாட்டார்கள்.

4. அல்லாஹ்வின் தூதர்களை இழிவுபடுத்துகின்ற வேலைகளை ஃபிர்அவ்ன் அபூ ஜஹ்ல் ஷைபா உத்பா போன்ற கொடியவர்கள் தான் செய்தார்கள். அத்தூதர்களைப் பொருட்படுத்தாமல் அவர்கள் கொண்டு வந்த அல்லாஹ்வின் கட்டளைகளைத் தூக்கிவீசினார்கள். தூதர்களைக் கொடுமைப்படுத்தினார்கள்.

உறுதி மிக்க தூதர் என்று இறைவனால் சிலாகித்துச் சொல்லப்படும் மூஸா (அலை) அவர்களும் அல்லாஹ்வின் தூதுவரான வானவரை இழிபடுத்தி அவர் கொண்டு வந்த கட்டளையைத் தூக்கி வீசினார் என்று சொன்னால் ஃபிர்அவ்னிற்கும் மூஸா (அலை) அவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் ஆகிவிடும். பொறுமையின் சிகரமாய்த் திகழ்ந்த மூஸா (அலை) அவர்கள் ஒரு போதும் ஃபிர்அவ்ன் செய்த காரியத்தைச் செய்திருக்க மாட்டார்கள்.

5. உனது இறைவனுக்கு பதிலளி என்று கூறிய வானவரை மூஸா (அலை) அவர்கள் தாக்கியுள்ளார்கள். வஹீயைக் கொண்டு வந்த அப்பாவி மலக்கை நாசப்படுத்தும் செயலை மூஸா நபி செய்தார்கள் என்று இச்செய்தி கூறுகிது. அல்லாஹ்வுடைய கட்டளையைக் கொண்டுவரும் வானவரை அடிப்பது அல்லாஹ்வை அவமதிக்கும் செயல் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

வந்தவரிடத்தில் தான் வாழ விரும்புவதாக பக்குவமாக எடுத்துச் சொல்லியிருக்கலாம். எடுத்த எடுப்பிலே கண் பிதுங்குகின்ற அளவிற்கு மூஸா (அலை) அவர்கள் அடித்தார்கள் என்று மூஸா (அலை) அவர்களை வேட்டையாடும் மிருகத்தைப் போல் இச்சம்பவம் சித்தரிக்கிறது. அல்லாஹ்வின் தூதர்களான வானவர்களைப் பகைத்துக் கொள்பவர்கள் இறை நிராகரிப்பாளர்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

அல்லாஹ்வுக்கும், வானவர்களுக்கும், அவனது தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகாயீலுக்கும் யார் எதிரியாக இருக்கிறாரோ, அத்தகைய மறுப்போருக்கு அல்லாஹ்வும் எதிரியாக இருக்கிறான்.
அல்குர்ஆன் (2 : 98).

இஸ்லாம் குடும்பக் கட்டுப்பாட்டை ஆதரிக்கின்றதா?

மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக இந்தியாவில் வறுமை தலைவிரித்தாடுகிறது. இந்த நிலையில் குடும்பக் கட்டுப்பாட்டை இஸ்லாம் எதிர்க்கிறது. முஸ்லிமல்லாதவர்கள் குடும்பக்கட்டுப்பாட்டைக் கடைபிடித்து வரும் போது முஸ்லிம்கள் மட்டும் மக்கள் தொகையைப் பெருக்கி பெரும்பான்மையாகி வருகின்றனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருந்து வருகின்றனர்.

இந்தியாவில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதும் கூறும் குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.

இந்தக் குற்றச்சாட்டைப் பல வழிகளில் அலசிப்பார்க்க வேண்டும்.

மக்கள் தொகைப் பெருக்கத்தால் உணவு மற்றும் இடப் பற்றாக்குறையும் வறுமையும் ஏற்படும் என்ற வாதம் சரியானதா என்பதை முதலில் பார்ப்போம்.

வறுமையும் உணவுப் பற்றாக்குறையும் மக்கள் தொகை மிகவும் குறைவாக இருந்த கால கட்டங்களிலும் உலகெங்கும் இருந்துள்ளன. இன்று உலகில் வாழும் மக்கள் தொகையை 500 கோடியிலிருந்து வெறும் ஐந்து கோடியாகக் குறைத்தாலும் வயிற்றுக்கு உணவு கிடைக்காதவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். இதுதான் எதார்த்த நிலையாகும்.

மக்கள் தொகை குறைவாகவே இருந்த காலத்திலும் மக்கள் தொகை மிகுதியாக உள்ள காலத்திலும் மக்கள் அனைவரின் தேவைகளுக்கும் அதிகமாகவே உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இன்று 500 கோடி மக்கள் வாழ்கிறார்கள் என்றால் 1000 கோடி மக்களுக்குப் போதுமான உணவுகள் உலகில் உள்ளன. உணவுப் பொருள்கள் சிலருக்குக் கிடைக்காமல் போவதற்குக் காரணம் விநியோக முறையில் ஏற்படும் தவறுகளும், பலருக்குப் போதுமான உணவுகள் ஒரு சிலரிடம் குவிந்து கிடப்பதும் தான். ஏழை நாடுகள் உணவுக்காக அலை மோதும் போது பணக்கார நாடுகள் உணவுப் பொருள்களைக் கடலில் கொட்டுவதை நாம் பார்க்கிறோம்.

ஏழை நாடுகளில் வாழும் பரம ஏழைகள் ஒரு கவள உணவுக்கு ஏங்கும் போது பணத்திமிர் பிடித்த ஏழை நாட்டுச் செல்வந்தர்கள் உணவையும், பொருளாதாரத்தையும் விரயம் செய்து வருகின்றனர். இதுதான் சிலருக்கு உணவுகள் கிடைக்காமல் போவதற்கு உண்மைக் காரணம்.

இந்தியாவில் 100 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 5 கோடி மக்களிடம் 200 கோடி மக்களுக்குத் தேவையான செல்வங்கள் குவிந்து கிடக்கின்றன. இந்திய மக்கள் தொகையை 100 கோடியிலிருந்து 10 கோடியாகக் குறைத்தால் வறுமையும், பசியும் நீங்கிவிடப் போவதில்லை. அப்போதும் அதில் ஒரு கோடிப் பேர் பட்டிணி கிடக்கும் நிலை தான் ஏற்படும்.

5 லட்சம் பேரிடம் 20 கோடி மக்களுக்கான உணவுகள் குவிந்திருக்கும் நிலை தான் ஏற்படும். அப்போதும் பற்றாக்குறையும் பசியும் ஒரு பக்கத்தில் இருக்கத் தான் செய்யும்.

உலக மக்கள் தொகையை வெறும் நூறு நபர்களாகக் குறைத்தால் கூட பத்துப் பேருக்கு உணவு கிடைக்காது என்பது தான் எதார்த்தமான நிலை. எனவே உணவுப் பற்றாக்குறை என்ற காரணத்தைக் கூறி குடும்பக்கட்டுப்பாட்டை நியாயப்படுத்த முடியாது.

உலகில் உள்ள நிலப்பரப்புகளில் ஐந்து சதவிகிதம் இடம் கூட மனிதர்களால் பயன்படுத்தப்படவில்லை. 95 சதவிகிதத்திற்கும் அதிகமான இடங்கள் உபரியாகத் தான் உள்ளன. ஏனைய பொருட்களின் பற்றாக் குறையும் இத்தகையது தான்.

ஆகவே மக்கள் தொகை குறைவதால் பசியும் வறுமையும் பறந்தோடி விடும் என்பது மோசடியான வாதமாகும்.

இன்னும் சொல்லப் போனால் மக்கள் தொகை பெருகுவதால் உலகத்துக்கு ஏராளமான நன்மைகள் கிடைத்தன, இனியும் கிடைக்கும் என்பதே உண்மையாகும்.

மனிதனுக்கு நெருக்கடியும் நிர்பந்தமும் ஏற்படும் போது தான் அவன் அறிவைப் பயன்படுத்தி தீர்வு காண முயல்கிறான். எத்தகைய பிரச்சனைகளையும் சமாளிக்கும் திறனுடன் தான் மனிதன் படைக்கப்பட்டுள்ளான்.

மக்கள் தொகை குறைவாக இருந்த போது நெல்லை விதைத்து ஆறுமாதம் கழித்து மனிதன் அறுவடை செய்தான். மக்கள் தொகை பெருகும் போது மூன்று மாதங்களில் அறுவடை செய்யக் கூடிய அதிக விளைச்சலைத் தரக்கூடிய வீரிய ரக நெல்லைக் கண்டு பிடித்தான். இன்னும் மக்கள் தொகை பெருகும் போது காலையில் விதைத்து விட்டு மாலையில் அறுவடை செய்யக் கூடிய நெல்லை மனிதன் நிச்சயம் கண்டுபிடிக்கத் தான் போகிறான். அப்போது தாறுமாறாக உணவுகள் குவியக் கூடிய அற்புதத்தை உலகம் காணத் தான் போகிறது.

மக்கள் தொகை குறைவாக இருந்த காலத்தில் மழை நீர், கிணற்று நீர், ஆற்று நீர் ஆகியவற்றை மட்டும் பருகி வந்த மனிதன் இன்று ஆழ்கிணறுகளைத் தோண்டுகிறான். செயற்கை மழை பெய்ய வைக்கிறான். கடல் நீரைக் குடிநீராக்குகிறான். கழிவு நீரையும் குடிப்பதற்கு ஏற்றதாக மாற்றுகிறான். இது மக்கள் தொகைப் பெருக்கத்தினால் மனிதனுக்குக் கிடைத்த நன்மை.

ஒரு கோழிக்குஞ்சு கோழியாக வளர்வதற்கு ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும். மக்கள் தொகை குறைவாக உள்ள போது இது தான் நிலமை. மக்கள் தொகை பெருகிய பின் மிக விரைவாகவும் அதிக எடையுடனும் வளரக் கூடிய கோழி இனங்களைக் கண்டு பிடித்து விட்டான். சேவல் இல்லாமல் தினந்தோறும் முட்டை இடும் கோழி இனத்தையும் மனிதன் கண்டு பிடித்துள்ளான்.

ஒரு படி பால் கறப்பதற்கே தாளம் போட்ட நிலை மாறி 100 லிட்டர் வரை பால் கறக்கும் பசுக்களையும் மனிதன் கண்டுபிடித்து விட்டான். ஆடுகள், மாடுகள், தாவரங்கள், மீன்கள் மற்றும் அனைத்திலும் அசுர வளர்ச்சியை மனிதன் ஏற்படுத்தி விட்டான். இதற்கெல்லாம் காரணம் மக்கள் தொகைப் பெருக்கமே.

அது மட்டுமின்றி காய்கள், பழங்கள் மட்டுமின்றி ஆடு, மாடு போன்றவற்றைகளையும் பல மடங்கு பெரிய அளவில் உருவாக்குவதில் மனிதன் வெற்றி கண்டு விட்டான். ஐந்து கோழிகள் தேவைப்படக்கூடிய குடும்பத்திற்கு ஒரு கோழியே போதுமானது என்ற நிலை விரைவில் ஏற்படவுள்ளது. கோழியை ஒரு ஆட்டின் அளவுக்குப் பெரிதாக உற்பத்தி செய்வதை மனிதன் கண்டுபிடித்து விட்டான். மனித குலம் பல்கிப் பெருகியது தான் இந்தக் கண்டு பிடிப்புக்குக் காரணம்.

குடிசை வீடுகள் மாடி வீடுகளாக மாறியதும், அகல் விளக்குகள் மின் விளக்குகளாக மாறியதும், மாட்டுவண்டிகள் பேருந்துகளாக விமானங்களாக மாறியதும், எல்லாத் தயாரிப்புகளும் இயந்திர மயமானதும் மக்கள் தொகைப் பெருக்கத்தினாலேயே.

சந்திரன், செவ்வாய் கிரகங்கள் பற்றி மனிதன் ஆராய்ச்சி செய்வதற்கும் மக்கள் தொகைப் பெருக்கம் தான் காரணமாக இருக்கிறது.

சாதாரண நடைமுறை உண்மையையே இதற்குச் சான்றாகக் கூறலாம். நம்முடைய பாட்டன்மார் காலத்தில் ஒரு தேவைக்காக நூறு முட்டைகள் வாங்க முயன்றால் கடைத் தெருவில் அவ்வளவு இருப்பு இருக்காது.. இன்றைக்கு இலட்சம் முட்டைகள் வேண்டுமானாலும் வாங்கலாம். இருப்பு உள்ளது. வாங்குவதற்கு பலரிடம் பணம் தான் இருப்பதில்லை. உணவுப் பொருளுக்கு எந்தப் பற்றாக்குறையும் மக்கள் தொகைப் பெருக்கத்தினால் ஏற்படவில்லை. விநியோக முறையில் உள்ள தவறுகளால் தான் சிலருக்குக் கிடைப்பதில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

இன்னொரு கோணத்திலும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மனிதனை இறைவன் படைக்கும் போது வெறும் வயிறை மட்டும் கொடுத்து அனுப்பவில்லை. மூளையையும் கொடுத்தே அனுப்புகிறான்.

பிறக்கவிருந்த 1000 சிசுக்களைக் குடும்பக்கட்டுப்பாடு என்ற பெயரில் அழித்து விடுவதாக வைத்துக் கொள்வோம். அந்த ஆயிரத்தில் ஒருவன் ஐம்பதாயிரம் மக்களின் வறுமையைப் போக்கும் ஆற்றலுடையவனாக இருப்பான். பெரிய விஞ்ஞானி, மிகச் சிறந்த தலைவனாவதற்கான தகுதி பெற்றவன், அவர்களில் இருக்கக் கூடும். குடும்பக் கட்டுப்பாடு என்ற பெயரில் அத்தகையோர் உருவாகாமல் தடுப்பது மனித குலத்திற்குக் கேடு விளைவிக்குமே தவிர நன்மை பயக்காது என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தனிப்பட்ட நபர்கள் தமது சுய விருப்பத்தின் படி தமது குடும்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள விரும்பினால் அதைச் சில நிபந்தனைகளுடன் இஸ்லாம் அனுமதிக்கின்றது. எல்லோரும் குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்று அரசாங்கம் கட்டாயப்படுத்தவோ பிரச்சாரம் செய்யவோ உரிமை இல்லை என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.

காண்டம் (ஆணுறை) போன்றவற்றைப் பயன்படுத்தி கர்ப்பம் அடைவதைத் தவிர்த்துக் கொள்ளலாம். பெண்களுக்கு எதிர்காலத்தில் பின்விளைவுகளை ஏற்படுத்துகின்ற, கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துவது, காப்பர் டி போன்ற சாதனங்களைப் பயன்படுத்துவது, ஆண்களுக்கு மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்துகின்ற வாசக்டமி போன்ற அறுவை சிகிச்சைகளைச் செய்வது, குழந்தை பெறுகின்ற தன்மையை ஆணோ பெண்ணோ அடியோடு நீக்கிக் கொள்வது போன்றவற்றை இஸ்லாம் கடுமையாக எதிர்க்கிறது.

தனது எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்வதும், கடவுள் கொடுத்த குழந்தை பெறும் தன்மையை அடியோடு நீக்கி விடுவதும் குற்றம் என இஸ்லாம் கூறுகிறது.

ஒரு தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன என்பதால் அவர்கள் குழந்தை பெறும் தன்மையை நிரந்தரமாக நீக்கிக் கொள்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். எதிர்பாராமல் இரண்டு குழந்தைகளும் மரணித்து விட்டால் அந்தத் தன்மையை யாரால் திருப்பித் தர இயலும்? இப்படி அறிவுப்பூர்வமாக இஸ்லாம் சிந்திக்கச் சொல்கிறது.

சுருங்கச் சொல்வதென்றால் தாயின் உடல் நலக்குறைவு, இயலாமை போன்ற காரணங்களுக்காக சுயக் கட்டுப்பாட்டுடன் குறைவான குழந்தைகளைப் பெற்றெடுத்தால் அல்லது குழந்தை பெறுவதை அறவே தவிர்த்துக் கொண்டால் அது அவர்களின் உரிமை. அதை இஸ்லாம் தடுக்கவில்லை.

இது நமக்கு மிகவும் பயனளிக்கும் திட்டம் என்று பிரச்சாரம் செய்தால் அதில் எள் முனையளவு கூட உண்மை இல்லை என்பதால் இஸ்லாம் அதை எதிர்க்கும்.

குடும்பக் கட்டுப்பாட்டை நிராகரித்து முஸ்லிம்கள் தங்கள் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் தவறானதாகும்.

குடும்பக் கட்டுப்பாடு என்பது பயனற்ற திட்டம் என்று முஸ்லிம்களுக்கு மட்டும் இஸ்லாம் போதிக்கவில்லை. உலக மக்கள் அனைவருக்கும் போதிக்கின்றது. முஸ்லிமல்லாதவர்களும் இந்தப் போதனையை ஏற்றுக் கொண்டு தமது மக்கள் தொகையைப் பெருக்கிக் கொண்டால் இஸ்லாமோ முஸ்லிம்களோ இதற்குத் தடையாக இருக்கமாட்டார்கள். மாறாக வரவேற்பார்கள்.

முஸ்லிமல்லாதவர்கள் ஒரு தவறான பிரச்சாரத்தை நம்பி ஏமாந்தால் அதைப் போல் முஸ்லிம்களும் ஏமாற வேண்டும் என்று கூறுவது எந்த வகையிலும் நியாயமாகாது.

மாறாக முஸ்லிம்கள் எவ்வாறு இந்த விஷயத்தில் பொய்ப்பிரச்சாரத்தை மெய்யென நம்பி ஏமாறாமல் இருக்கிறார்களோ அதுபோல் மற்றவர்களும் ஏமாறாமல் இருக்க முயல்வது தான் அறிவுடைமையாகும்.

ஏதோ இந்தியாவில் பெரும்பான்மையாக ஆவதற்காக இந்திய முஸ்லிம்கள் செய்து கொண்ட முடிவல்ல இது.

மாறாக முற்றிலும் முஸ்லிம்களே வாழ்கின்ற நாடுகளிலும் இஸ்லாத்தின் நிலைபாடு இது தான் என்பதை உணர்ந்தால் இது போன்ற குற்றச்சாட்டை யாரும் சுமத்த மாட்டார்கள்.

பி.ஜே எழுதிய குற்றச்சாட்டுகளும்,  பதில்களும் நூல்களிலிருந்து....
 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner