Monday, January 5, 2015

அனைவரும் ஆய்வு செய்ய முடியுமா?

கேள்வி - இஸ்லாத்தின் சட்ட திட்டங்களில் ஏற்படும் கருத்து வேறு பாட்டை ஒழிக்க முடியாதா ? எல்லோரும் தங்களின் கருத்துக்கு திருக்குரான் , ஹதீஸ்களைத் தான் மேற்கோள் காட்டுகிறார்கள், இதில் எது சரி என்று பாமரன் சுய ஆய்வு செய்து முடிவெடுப்பது எப்படி சாத்தியம் ? அப்படி நடுநிலையோடு சிந்தித்து தெரியாமல் தவறான முடிவெடுத்து அமல்கள் செய்தால் நாம் குற்றம் பிடிக்கப்படுவோமா ? - அப்துல்லாஹ் நாகூர்

பதில் பி.ஜே - பொதுவாக எந்த ஒரு விஷயமானாலும் அதை அனைவரும் ஒரே மாதிரியாகப் புரிந்து கொள்வதில்லை. இஸ்லாம் அல்லாத மற்ற விஷயங்களிலும் ஒருவரின் சிந்தனை மற்றவரின் சிந்தனைக்கு மாற்றமாக இருப்பது இயல்பாகவே உள்ளது. எனவே கருத்து வேறுபாடு என்பது எல்லாத் துறைகளிலும் தவிர்க்க இயலாத பிரச்சனையாகும்.

ஒரு மார்க்க விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் குழம்ப வேண்டிய அவசியமில்லை. இறைவன் நமக்கு வழங்கிய அறிவைப் பயன்படுத்தி நடுநிலையோடு நம்மால் இயன்ற அளவு சிந்திக்க வேண்டும். எக்கருத்து ஏற்புடையதாக உள்ளதோ அதை ஏற்க வேண்டும்.

மனோ இச்சைக்கு இடம் கொடுக்காமல் நியாயமாகச் சிந்தித்தாலே பெரும்பாலும் சரியான முடிவை பாமர மக்களாலும் எடுக்க முடியும். இவ்வாறு செயல்படும் போது சில நேரங்களில் தவறான முடிவை சரி என்று கருதவும் வாய்ப்புள்ளது.

இவ்வாறு தவறிழைப்பது மனித இயல்பு என்பதால் இறைவன் இதற்குக் குற்றம் பிடிக்க மாட்டான். மாறாக மார்க்க விஷயத்தில் நாம் செய்த முயற்சிக்காக ஒரு நன்மையை வழங்குகின்றான். சரியான முடிவு எடுத்தால் இரண்டு நன்மைகள் வழங்குகின்றான்.

7352حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ الْمَكِّيُّ حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ حَدَّثَنِي يَزِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْهَادِ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ عَنْ أَبِي قَيْسٍ مَوْلَى عَمْرِو بْنِ الْعَاصِ عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا حَكَمَ الْحَاكِمُ فَاجْتَهَدَ ثُمَّ أَصَابَ فَلَهُ أَجْرَانِ وَإِذَا حَكَمَ فَاجْتَهَدَ ثُمَّ أَخْطَأَ فَلَهُ أَجْرٌ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு ஒரு நன்மை உண்டு.

அறிவிப்பவர் : அம்ர் பின் அல்ஆஸ் (ரலி

புகாரி (7352)


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபியவர்களின் ஒரு கட்டளையைப் புரிந்து கொள்வதில் நபித்தோழர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இவ்வாறு கருத்து வேறுபாடு கொண்டதற்காக அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை.

4119حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْأَحْزَابِ لَا يُصَلِّيَنَّ أَحَدٌ الْعَصْرَ إِلَّا فِي بَنِي قُرَيْظَةَ فَأَدْرَكَ بَعْضُهُمْ الْعَصْرَ فِي الطَّرِيقِ فَقَالَ بَعْضُهُمْ لَا نُصَلِّي حَتَّى نَأْتِيَهَا وَقَالَ بَعْضُهُمْ بَلْ نُصَلِّي لَمْ يُرِدْ مِنَّا ذَلِكَ فَذُكِرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يُعَنِّفْ وَاحِدًا مِنْهُمْ رواه البخاري

அகழ்ப் போர் (முடிந்து வந்த) தினம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "பனூ குறைழா குலத்தினர் வசிக்குமிடத்தை நீங்கள் அடையும் வரை (உங்களில்) எவரும் அஸ்ருத் தொழுகையைத் தொழ வேண்டாம்'' என்று கூறினார்கள். வழியிலேயே அஸ்ரு(த் தொழுகை) நேரத்தை அவர்கள் அடைந்தனர். அப்போது சிலர், "பனூ குறைழாக் குலத்தினரை அடையும் வரை நாம் அஸ்ருத் தொழ வேண்டாம்'' என்று கூறினர். வேறு சிலர், "(தொழுகை நேரம் தவறிப் போனாலும் தொழ வேண்டாம் என்ற) அந்த அர்த்தத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை; ("வேகமாக அங்கு போய்ச் சேருங்கள்' என்ற கருத்தில் தான் இந்த வார்த்தையைக் கூறினார்கள்) எனவே, நாம் தொழுவோம்'' என்று கூறினர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இரு சாரார் குறித்தும் தெரிவிக்கப்பட்ட போது அவர்களில் எவரையும் அவர்கள் குறை கூறவில்லை.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி (4119)


அதே இது சிந்தித்து சுயமாக முடிவு செய்யும் போது உள்ள நிலையாகும். கண் மூடி பின்பற்றுவோர் இதைத் தங்களுக்கு ஆதாரமாக ஆக்கிக் கொள்ளக் கூடாது.

ஒரு இமாம் சொன்ன கருத்துக்கு என்ன ஆதாரம்? எதிர்க்கருத்து உடையவர்கள் வைக்கும் ஆதாரம் என்ன என்று கவனிக்காமல் எனது இமாம் என்ன சொன்னாலும் சரியாக இருக்கும் என்று நினைத்து செயல்பட்டால் அவருக்கு தண்டனை தான் கிடைக்கும். 

ஏனெனில் இவர் அல்லாஹ் என்ன சொன்னான்? அவனது தூதர் என்ன சொன்னார்கள் என்பது பற்றி எந்த கவனமும் செலுத்தவில்லை. சிந்திக்கவில்லை.

இமாம் சொன்னதற்கு எதிராக எத்தனை ஆதாரங்களை நாம் எடுத்துக் காட்டினாலும் அவர் ஏற்கப் போவது இல்லை.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner