Wednesday, June 20, 2012

தர்ஹா வழிபாடு - PJ - தொடர் 2

மக்கத்துக் காபிர்களின் நம்பிக்கையும் இன்றைய முஸ்லிம்களின் நம்பிக்கையும்....

இன்றைக்கு தமிழக முஸ்லிம்களில் பலர் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டு சமாதிகளிலும் வழிபாடு நடத்துகிறார்களே இது போன்று தான் மக்கத்துக் காபிர்களின் கடவுள் நம்பிக்கை இருந்தது.

அல்லாஹ்வைப் பற்றி இவ்வாறு நம்புவது மட்டும் போதும் என்றிருந்தால் அவர்களுக்கு ஒரு நபியை அல்லாஹ் அனுப்பி இருக்கத் தேவையே இல்லை. ஒரு வகையில் பார்த்தால் இன்றைய தமிழக முஸ்லிம்கள் பலரின் நம்பிக்கையை விட மக்கத்துக் காபிர்களின் நம்பிக்கை சற்று மேலானதாக இருந்தது என்று கூறலாம்.

ஏனெனில் இன்றைய தமிழக முஸ்லிம்களில் பலர் கடுமையான துன்பம் நேரிடும் போதும், பெரிய ஆபத்தைச் சந்திக்கும் போதும் முஹ்யித்தீனே என்று அழைப்பதைக் காண்கிறோம்.

ஆனால் மக்கத்துக் காபிர்கள் சிறிய துன்பம் ஏற்படும் போதும், சிறிய அளவிலான கோரிக்கையின் போதும் மட்டுமே அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்தனை செய்து வந்தனர்.

மிகப் பெரிய ஆபத்தின் போது அவர்கள் அல்லாஹ்வைத் தான் அழைப்பார்கள். குட்டித் தெய்வங்களையும், மகான்களையும் மறந்து விடுவார்கள்.

இதைப் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

'இதிலிருந்து அவன் எங்களைக் காப்பாற்றினால் நன்றி செலுத்துவோராக இருப்போம்' என்று பணிவாகவும், இரகசியமாகவும் அவனிடம் பிரார்த்தனை செய்யும் போது 'நிலம் மற்றும் கடலின் இருள்களிலிருந்து உங்களைக் காப்பாற்றுபவன் யார்?' என்று கேட்பீராக! 'இதிலிருந்தும், ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்' என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 6:63, 64)
'உங்களிடம் அல்லாஹ்வின் வேதனை வந்தால் அல்லது அந்த நேரம் வந்து விட்டால் அல்லாஹ் அல்லாதவர்களையா அழைக்கிறீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் பதில் சொல்லுங்கள்!' என்று கேட்பீராக! மாறாக அவனையே அழைக்கிறீர்கள். நீங்கள் இணை கற்பித்தவர்களை மறந்து விடுகிறீர்கள். அவன் நாடினால் அவனை எதற்காக அழைத்தீர்களோ அதை நீக்கி விடுகிறான். (அல்குர்ஆன் 6:40, 41)

கடலிலும், நிலத்திலும் அவனே உங்களைப் பயணம் செய்ய வைக்கிறான். நீங்கள் கப்பலில் இருக்கின்றீர்கள். நல்ல காற்று அவர்களை வழி நடத்துகிறது. அவர்கள் மகிழ்ச்சியடையும் போது புயல் காற்று அவர்களிடம் வருகிறது. ஒவ்வொரு இடத்திலிருந்தும் அவர்களிடம் அலையும் வருகிறது. தாம் சுற்றி வளைக்கப்பட்டு விட்டதாக அவர்கள் முடிவு செய்கின்றனர். வழிபாட்டை உளத்தூய்மையுடன் அவனுக்கே உரித்தாக்கி 'இதிலிருந்து எங்களை நீ காப்பாற்றினால் நன்றியுள்ளோராக ஆவோம்' என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றனர். (அல்குர்ஆன் 10:22)கடலில் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனைத் தவிர யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் மறைந்து விடுகின்றனர். அவன் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்தவுடன் புறக்கணிக்கிறீர்கள்! மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 17:67)அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி நிலத்தில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர். (அல்குர்ஆன் 29:65)மனிதர்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது தமது இறைவனிடம் திரும்பி அவனிடம் பிரார்த்திக்கின்றனர். பின்னர் அவர்களுக்குத் தன் அருளை அவன் சுவைக்கச் செய்தால் நாம் அவர்களுக்கு வழங்கியதற்கு நன்றி மறந்து தமது இறைவனுக்கு அவர்களில் ஒரு பகுதியினர் இணை கற்பிக்கின்றனர். அனுபவியுங்கள்! அறிந்து கொள்வீர்கள். (அல்குர்ஆன் 30:33, 34)

முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும் போது உளத்தூய்மையுடன் வணக்கத்தை உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி நிலத்தில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை. (அல்குர்ஆன் 31:32)

மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்படுமானால் தனது இறைவனிடம் சரணடைந்தவனாக அவனை அழைக்கிறான். பின்னர் இறைவன் தனது அருட்கொடையை வழங்கும் போது முன்னர் எதற்காகப் பிரார்த்தித்தானோ அதை அவன் மறந்து விடுகிறான். அல்லாஹ்வின் பாதையை விட்டு வழி கெடுப்பதற்காக அவனுக்கு இணை கற்பிக்கிறான். 'உனது (இறை) மறுப்பில் சிறிது காலம் சுகம் அனுபவித்துக் கொள்! நீ நரகவாசிகளைச் சேர்ந்தவன்' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 39:8)

மனிதனுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமானால் நம்மை அழைக்கிறான். பின்னர் நாம் அவனுக்கு நமது அருட்கொடையை வழங்கினால் 'எனது அறிவால் இது எனக்குத் தரப்பட்டது' எனக் கூறுகிறான். அவ்வாறல்ல! அது ஒரு சோதனை! எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 39:49)

மனிதனுக்கு நாம் அருள் புரிந்தால் அலட்சியம் செய்து தன் பக்கமே திரும்பிக் கொள்கிறான். அவனுக்குத் தீமை ஏற்பட்டால் அவன் நீண்ட பிரார்த்தனை செய்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 41:51)

மக்கத்துக் காபிர்கள் மிகப் பெரிய துன்பங்களின் போது அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களைப் பிரார்த்திக்கவில்லை என்பதை இவ்வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன. மிகப் பெரிய ஆபத்தின் போது அல்லாஹ்வை மட்டுமே நினைக்கும் அளவுக்கு நம்பிக்கை வைத்திருந்த அம்மக்கள் ஏன் இறைவனின் கோபத்திற்கும், கண்டனத்துக்கும் ஆளானார்கள்?

அல்லாஹ்வை அவர்கள் நம்பியிருந்தாலும் அவனது ஆற்றலைப் பற்றி அவர்கள் அறிந்திருந்தாலும் வணக்கங்களில் சிலவற்றை அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கும் அவர்கள் செய்து வந்தனர்.

இவ்வாறு மற்றவர்களை வணங்கும் போது அவர்களைக் கடவுள் என்ற நம்பிக்கையோ, அவர்களுக்கு அனைத்து ஆற்றலும் உண்டு என்ற நம்பிக்கையோ அவர்களிடம் இருக்கவில்லை.

'இந்த மகான்கள் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள். இவர்களுக்கு வழிபாடு நடத்தினால் அல்லாஹ்விடம் பேசி நமது தேவைகளைப் பெற்றுத் தருவார்கள். அல்லாஹ்விடம் நம்மையும் நெருக்கமாக ஆக்குவார்கள்' என்பது தான் அவர்களின் நம்பிக்கையாக இருந்தது.

இதைத் திருக்குர்ஆன் மிகத் தெளிவாகவே குறிப்பிடுகிறது.

அல்லாஹ்வையன்றி தமக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். 'அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்' என்றும் கூறுகின்றனர். 'வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 10:18)

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் 'அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை' (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 39:3)

'உங்களுக்கு நாம் வழங்கியவற்றையெல்லாம் உங்கள் முதுகுக்குப் பின்னால் விட்டு விட்டு உங்களை ஆரம்பத்தில் நாம் படைத்தது போல் தன்னந்தனியாக நம்மிடம் வந்து விட்டீர்கள்! தெய்வங்கள் என்று நீங்கள் கருதிக் கொண்டிருந்த, உங்கள் பரிந்துரையாளர்களை நாம் உங்களுடன் காணவில்லையே? உங்களுக்கிடையே (உறவுகள்) முறிந்து விட்டன. நீங்கள் கற்பனை செய்தவை உங்களை விட்டும் மறைந்து விட்டன' (என்று கூறப்படும்.) (அல்குர்ஆன் 6:94)

'அல்லாஹ்வையன்றி பரிந்துரை செய்வோரை அவர்கள் கற்பனை செய்து கொண்டார்களா? அவர்கள் எந்தப் பொருளுக்கும் உடமையாளர்களாக இல்லாமலும், விளங்காதும் இருந்தாலுமா?' என்று கேட்பீராக! 'பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே' என்று கூறுவீராக! வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது! பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்! (அல்குர்ஆன் 39:43, 44)


மக்கத்துக் காபிர்கள் அல்லாஹ்வை நம்பியதுடன் அவனிடம் தங்களைப் பற்றி எடுத்துச் சொல்லிப் பரிந்துரைப்பதற்காக மற்றவர்களை வணங்கி வந்தனர் என்பதை இந்த வசனங்கள் அறிவிக்கின்றன.

மரணித்தவர்களை அழைப்பதும், பிரார்த்திப்பதும் தவறல்ல என்று முஸ்லிம்களில் சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் தான் அல்லாஹ்வைக் கடவுளாக ஏற்று விட்டோமே! பரிந்துரை செய்பவர்களாகத் தானே பெரியார்களைக் கருதுகிறோம் என்று தங்கள் நிலையை நியாயப்படுத்திக் கொள்கின்றனர்.

மக்காவில் வாழ்ந்த காபிர்களும் இது போல் தான் நம்பினார்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையெல்லாம் வணங்கினார்களோ அவர்களைக் கடவுள்கள் என்று மக்காவின் காபிர்கள் கூறவேயில்லை. கடவுளிடம் பரிந்து பேசுபவர்கள் என்று தான் நம்பினார்கள் என்பதை மேற்கண்ட வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன

இந்த நம்பிக்கையை ஒழிக்கத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அனுப்பப்பட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த நம்பிக்கை ஒழிக்க அனுப்பப்பட்டார்களோ அதையே இஸ்லாம் என்ற பெயரில் முஸ்லிம்கள் செய்வது தான் வேதனையானது.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner