Thursday, April 5, 2012

தேன் கூடும் திருமறைக் கூற்றும் - எம். ஷம்சுல்லுஹா

இன்று நிலத்தடி நீர் மிக மிக அரிதாகி விட்டது. காரணம் மணல் கொள்ளை! ஆற்றுப் படுகையில் இருக்கும் அடுக்கடுக்கான மணல் தட்டுக்கள் தான் நிலத்தடி நீரின் பிடிமானங்களாக இருக்கின்றன. ஆற்றுப்படுகையில் நடக்கும் அபரிமிதமான, அளவுக்கதிகமான மணல் கொள்ளையின் காரணமாக அந்த மணற் தட்டுக்கள் பறி போய் நிலத்தடி நீர் சேமிப்பாகவில்லை.

கொள்ளையடிக்கப்படும் மணல் எங்கு செல்கின்றது? மனிதர்கள் கட்டுகின்ற மாளிகைகளுக்கு! அறிவியல் விலங்கான மனிதன் ஒரு வீட்டைக் கட்டுகின்ற போது, இன்னொரு வளத்தை அழித்து, தன்னுடைய வீட்டைக் கட்டிக் கொள்கின்றான்.

பறவைகள் சில குச்சிகளை வைத்துக் கட்டுகின்றன. எறும்பு, கரையான் போன்றவை மண்ணை வைத்து வீட்டை அமைத்துக் கொள்கின்றன. இவையெல்லாம் கூடு கட்டுகையில் தங்கள் இனத்திற்கும், மற்றவர்களுக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மனிதன் மட்டுமே தான் கட்டுகின்ற வீட்டுக்காக மனித இனத்திற்கும், அடுத்த இனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றான்.

ஆனால் அல்லாஹ்வுடைய படைப்பின் அற்புதமான இந்தத் தேனீ, யாருக்கும் எதற்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் தன் மெழுகுக் கூட்டிற்கான மூலத்தை எப்படிப் பெற்றது? யார் கொடுத்தது? தேனீக்களில் பாட்டாளித் தேனீ, ஆண் தேனீ, ராணித் தேனீ என்று மூன்று வகைகள் உள்ளன. இதில் இளைய பாட்டாளித் தேனீ அல்லது பணியாளர் தேனீ தங்களின் அடிவயிற்றுக் கிடங்கில் அமையப் பெற்றிருக்கும் மெழுகுச் சுரப்பிகளில் இருந்து மெழுகைச் சுரக்கின்றன. இவ்வாறு சுரக்கப்பட்ட மெழுகை, தேனீக்கள் மென்று குழைத்து இந்தத் தேனடையை உருவாக்குகின்றன.

மென்று, குழைத்து, கட்டப்படுகின்ற தேன் கூட்டின் விதவிதமான அறைகளின் சுவர்கள் நன்கு காய்ந்து கனமாகி விடுகின்றன. ஆனால் அதே சமயம், 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பமூட்டப்பட்டால் நெகிழ்ச்சியடையும் நிலையையும், 145 டிகிரி அளவுக்கு வெப்பமூட்டப்பட்டால் உருகும் நிலையையும் அடைந்து விடுகின்றன.

இங்கு தான், கூடுகளைக் கட்டிக் கொள் (16:68) என்று அல்லாஹ் குறிப்பிடும் கட்டளையைச் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். மனிதன் தான் கட்டும் வீட்டிற்காக பெரிய சிமெண்ட் கிடங்கை வெளியில் வைத்திருக்கின்றான். கட்டடத்திற்கு சிமெண்ட் மட்டும் போதாது. ஜல்லி, இரும்பு, செங்கல், மணல், தண்ணீர் என பல மூலப் பொருட்கள் தேவைப்படுகின்றன.

குறிப்பாக வீட்டுச் சுவர்களைக் கட்டும் போது, சுடப்பட்ட செங்கல்களை அடுக்கி வைத்துக் கொண்டு அதன் மீது முகட்டைப் போட்டு விட முடியாது. அந்தச் செங்கல்களில் ஏற்படும் இடைவெளிகள் அடைக்கப்பட வேண்டும். செங்கல்களில் ஏற்படும் இடைவெளிகளை அடைப்பதற்கு சிமெண்ட் சாந்துகளைப் பயன் படுத்துகின்றோம். மனிதனுக்கு மட்டும் தான் இந்த அறிவுத் திறன் இருக்கிறதா? என்று பார்த்தால் அல்லாஹ்வின் அற்பப் படைப்பான, அதே சமயம் அற்புதப் படைப்பான இந்தத் தேனீக்கு மனிதனை விஞ்சுகின்ற அறிவுத் திறன் இருக்கின்றது.

இந்தச் சின்னஞ்சிறு தேனீ பல்வேறு மரப்பட்டைகள், மலர் அரும்புகளில் இருந்து செந்நிறத்துப் பிசினைச் சுமந்து கொண்டு வந்து தேன் கூட்டில் உள்ள கீறல்களை, இடைவெளிகளை அடைக்கின்றன. அதில் உள்ள பாந்துகளை இந்தப் பிசின் சாந்துகளை வைத்துச் சரி செய்து கொள்கின்றன.

மனிதன் மட்டுமே தான் கட்டுகின்ற வீடுகளுக்கு அழகிய வண்ணம் (பெயிண்ட்) தீட்டுகின்றான் என்று எண்ணி விடக் கூடாது. அல்லாஹ்வின் இந்தச் சிறிய படைப்பும் தான் கட்டும் வீட்டிற்கு செந்நிறப் பிசினைக் கொண்டு வண்ணம் தீட்டிக் கொள்கின்றது. இதனால் அந்தத் தேன் கூட்டில் ஒரு பளபளப்பு பளிச்சிடுகின்றது.

இவ்வாறு இந்தச் சின்னஞ்சிறு அரிய படைப்பின் அடிவயிற்றுக் கிடங்கிலிருந்து கிடைக்கின்ற மெழுகின் மூலம் எழுகின்ற மெழுகு மாளிகையான தேன் கூடு, அந்தத் தேனீக்கு மட்டுமல்லாமல் மனித இனத்திற்கும் சேர்த்தே பயன்படுகிறது.

இருட்டில் வாழும் இந்தக் குருட்டு மனிதனுக்கு வெளிச்சம் தரும் மெழுகுவர்த்தியாகவும், அழகு சாதனங்களுக்கும் அவனது வீட்டில் அலங்கரிக்கும் மரச் சாமான்களுக்கும் மெருகூட்டும் வண்ணக் கலவை யாகவும் அது பயனளிக்கின்றது.

மனிதன் இயற்கை வளத்தைச் சுரண்டியும், அடுத்தவரின் அல்லது அடுத்த பிராணியின் சொத்தைச் சூறையாடியும் தன் வீட்டைக் கட்டிக் கொள்கின்றான். ஆனால் இந்தத் தேனீயோ தன் சொந்தக் காலில் நின்று, சொந்த மூலத்தைக் கொண்டே தன் கூட்டைக் கட்டிக் கொள்கின்றது.

தாவர இனத்தில் போய் தேனீ சில சேர்மானங்களைப் பெறுகின்றது. அவ்வாறு தாவர வர்க்கத்திலிருந்து அந்தச் சேர்மானங்களைத் தானமாகப் பெற்றுவிடவில்லை. அதற்குப் பரிகாரமாக அந்தத் தாவரத்தின் மலர்ச்சிக்காகவும், வளர்ச்சிக்காகவும் மகரந்தச் சேர்க்கையைக் காணிக்கை யாகக் கொடுத்து விடுகின்றது.

சிலந்தியும் தன் சொந்தக் காலில் நின்று, தன் உடலிலிருந்து உருவாகும் திரவத்திலிருந்து இழைகளைப் பின்னி வலையை அமைத்துக் கொள்கின்றது. ஆனால் அதனால் மனித சமுதாயத்திற்கு எவ்விதப் பயனும் இல்லை. மேலும் அது மனிதனுக்கு இடர் விளைவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் தேனீயும், தேன் கூடும் மனித சமுதாயத்திற்கு மாபெரும் பலனை அளித்துக் கொண்டிருக்கின்றது.

இந்த வகையில் "கூடு கட்டுக'' என்று தேனீயை நோக்கி அல்லாஹ் கூறும் கூற்று வெறும் கூற்றாக இல்லை. மனிதனின் அறிவுக் கண்ணைத் திறக்கின்ற, சிந்தனை ஊற்றாக அமைந்துள்ளது.

என் கூட்டைக் கட்டுவதற்காக மெழுகு எனும் மூலத்தை என்னுள் சுரக்க வைத்தவன் தன்னிகரில்லா என்னிறைவன் என்று அல்லாஹ்வின் படைப்பாற்றலுக்கு சாட்சி கூறி நிற்கின்றன, இந்தத் தேனீக்கள்!

அதிசயப் புதையல்! அதிரசப் படையல்

தேன் கூடு என்பது இன்ன பிற பொடிப் பொடி ஈக்கள், பெரும் பெரும் பறவைகள் கட்டுகின்ற கூடுகள் போன்றதல்ல! அல்லாஹ்வின் அற்புதங்களைச் சுமந்து நிற்கும் அதிசயப் புதையலாகும்; அதிரசப் படையலாகும். தேன் கூடு என்பது தேனீக்கள் வசிக்கின்ற ஒரு வீடு மட்டுமல்ல!

பூக்கள் சுரக்கின்ற இன்சுவை மதுர பானம் (சங்ஸ்ரீற்ஹழ்), மகரந்தத் தூள் ஆகியவை தேனீயின் வயிற்றில் போய் செரிமானம் ஆகி வயிற்றின் வழியாக வெளியேறும் அமிர்த பானமான தேனைக் காக்கின்ற, செயல் நுணுக்கம் தாங்கிய சேமிப்பு வங்கி தான் தேன் கூடு! பாலினச் சேர்க்கைக்குரிய பள்ளியறை! தேனீக்கள் பொறிக்கின்ற சினை முட்டைகளையும் அந்தச் சினை முட்டைகள் ஈனுகின்ற குஞ்சுகளையும் காக்கின்ற கரு என தேன் கூட்டின் பன்பமுகப் பயன்பாட்டைப் பட்டியல் போடலாம்.

தொங்கும் தொழில் நுட்பத் தொழிற்சாலை

 மரக் கிளைக்கு இடையிடையே அந்தரத்தில் தொங்கும் இந்தத் தேன் கூடு வெறும் தேன் கூடல்ல! தொங்கும் தொழில் நுட்பத் தொழிற்சாலை! அமுதம் சுரக்கும் அதி மதுரத் தேன் ஆலை! இங்கு இருபத்தி நான்கு மணி நேரமும் தொழில், பணி நடந்து கொண்டே இருக்கின்றது.

 திட்டமிடப்பட்ட தேன் கூட்டு அறைகள்

தேனீயின் பணிகளுக்குத் தக்க தேன் கூட்டில் திட்டமிடப்பட்டு அறைகள் அமைக்கப்படுகின்றன. தேன் கூட்டில் ஒரு பகுதி வளரும் ஆண் தேனீக்களுக்காகவும், தேன் மற்றும் மகரந்தத் தூளை சேமிப்பதற்காகவும் கட்டப்படுகின்றது.

ஆண் தேனீக்களுக்காகக் கட்டப்படும் அறைகள் பணியாளர்களுக்காகக் கட்டப்படும் அறைகளை விடப் பெரிதாக அமைக்கப்படுகின்றன. இந்த அறைகள் மூடப்பட்டு விட்டால் ஒரு குவிமாடத்தை (உர்ம்ங்) போல் காட்சி அளிக்கும். பாட்டாளித் தேனீக்களின் அறைகள் மூடப்பட்டு விட்டால் தரை மட்டமாகக் காட்சியளிக்கும்.

ஆண் தேனீக்களின் அறைகள் தேன் கூட்டின் நடுவிலும் கீழ்ப் பகுதியின் வலது
புறத்திலும் கட்டப்படுகின்றன. பாட்டாளித் தேனீக்களின் அறைகள் தேன் கூட்டின் மேற்பகுதியில் இடது புறத்தில் கட்டப்படுகின்றன.

ராணித் தேனீக்களின் அறைகள்

தேன் கூட்டின் முகத்தில் நேராக, அதே சமயம் பாட்டாளித் தேனீக்களின் அறைகளுக்கு எதிராக, செங்குத்தாக ஓர் அறை தொங்கும். இது தான் ராணித் தேனீயின் அறையாகும்.

படுக்கை விட்டத்தில் அமைந்துள்ள அறைகள் பாட்டாளி அல்லது ஆண் தேனீக்களின் அறைகளாகும்.

குஞ்சுகளுக்குரிய அறை

 குஞ்சுகள் அல்லது முட்டை அல்லது முட்டைப் புழுக்களுக்காகத் தயாரிக்கப்பட்ட அறையில் தான் இளம் ராணி பருவம் அடைவதற்காக வளர்க்கப்படுகின்றது. ராணித் தேனீயின் இந்த அறை சாதாரண முட்டைப் புழுக்களுக்கான அறையை விட அகலமானது.
இவ்வாறு ராணீத் தேனீக்கள், ஆண் தேனீக்கள், பாட்டாளித் தேனீக்கள் எனப்படும் பெண் தேனீக்கள் என்று மூன்று வகையான தேனீக்களுக்கும் இந்தத் தேன் கூட்டில் தனித்தனி அறைகள் கட்டப்படுகின்றன.

மனிதன் என்ற அறிவியல் விலங்கு தான் பொறியியல் வல்லுநர்களைக் கொண்டு மாட மாளிகைகளையும், கூட கோபுரங்களையும் கட்ட முடியும். வரவேற்பறை, சமையலறை, படுக்கையறை, ஒப்பனை அறை என்று பல்வேறு அறைகளைக் கட்ட முடியும் என்று கற்பனை செய்து கொண்டிருக்கின்றான்.

ஆனால் அந்தக் கற்பனைகளை எல்லாம் தகர்த்தெறிந்து விட்டுத் தன்னிகரற்ற முறையில் தனி பாணியில் பொறியியல் கலை நுட்பத்துடன் கூடு கட்டி, தேனீக்கள் மனிதனை, மனித அறிவை விஞ்சி நிற்கின்றன.

இதனால் தான் மனிதனின் அறிவை விஞ்சுகின்ற தேனீக்களின் இந்தத் தொழில் நுட்பக் கலையை மனிதன் கண்டறியும் வகையில் திருக்குர்ஆனில் தேனீ என்ற அத்தியாயத்தில் அல்லாஹ் தேனீக்களைப் பற்றிக் குறிப்பிடுகிறான்.

இது உண்மையில் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகின்றது. தேனீ கூடு கட்டும் விதம், அது கொண்டு வருகின்ற மகரந்தத் தூள், மொண்டு வருகின்ற தேன் மதுர இன்சுவை பானம், சிவப்பு நிறப் பிசின் போன்றவற்றைச் சேமிக்கும் பணியும் பாங்கும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதோடு அதிர்ச்சியிலும் உறைய வைக்கின்றது.

மனிதனைப் போன்று சுற்றுப் புறச் சூழலை அழித்து தனக்கு வீடு கட்டாமல், இந்தத் தேனீக்கள், தான் கட்டுகின்ற கூட்டிற்காகச் சேமித்து வரும் மகரந்தத் தூள் மூலம் தாவர இனத்தின் உருவாக்கமும், இனப் பெருக்கமும் நடைபெறுகின்றது.

- ஆன்லைன் பி.ஜே

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner