Saturday, March 10, 2012

கொள்கை விளக்கம் - பி.ஜே - தொடர் 6

சகுனம் பார்த்தல்

நாள், நட்சத்திரம் பார்த்தல், சகுணம் பார்த்தல் ஆகியவற்றை இஸ்லாம் முழுமையாகத் தடை செய்கின்றது.

நாட்களிலோ, நேரங்களிலோ முற்றிலும் நன்மை பயக்கக் கூடியதும் கிடையாது. முற்றிலும் தீமை பயக்கக் கூடியதும் கிடையாது. எந்த நேரமானாலும் அதில் சிலர் நன்மையை அடைவார்கள். மற்றும் சிலர் கேடுகளை அடைவார்கள்.

ஒரு குறிப்பிட்ட நாள் நல்ல நாள் என்றால் அந்நாளில் யாரும் சாகக் கூடாது. யாருக்கும் நோய் ஏற்படக் கூடாது. அந்நாளில் கவலையோ, துக்கமோ நிம்மதியின்மையோ ஏற்படக் கூடாது. இப்படி ஒரு நாள் கிடையாது என்பது சாதாரண உண்மை.

எந்த நாள் கெட்ட நாள் என்று சிலரால் ஒதுக்கப்படுகின்றதோ அந்நாளில் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள், பொருள் வசதியடைந்தவர்கள் இருக்கிறார்கள்.

இஸ்லாமிய வரலாற்றிலிருந்து கூட இதற்கொரு உதாரணத்தைக் கூறலாம். முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்டு, மூஸா (அலை) அவர்கள் காப்பாற்றப்பட்டனர்.

அதே முஹர்ரம் பத்தாம் நாளில் ஹுஸைன் (ரலி) படுகொலை செய்யப்பட்டார்கள்.

மூஸா நபி காப்பாற்றப்பட்டதால் அதை நல்ல நாள் என்பதா?

ஹுஸைன் (ரலி) கொல்லப்பட்டதால் அதைக் கெட்ட நாள் என்பதா?


நாட்களுக்கும், நல்லது கெட்டது ஏற்படுவதற்கும் எந்தச் சம்மந்தமுமில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.
 
'இந்தக் காலங்களை மக்களிடையே நாம் சுழலச் செய்கிறோம்'.  (அல்குர்ஆன் 3:140)


சுழலும் சக்கரத்தின் கீழ்ப்பகுதி மேலே வரும், மேல் பகுதி கீழே செல்லும். இவ்வாறே காலத்தைச் சுழலவிட்டு சிலரை மேலாகவும் சிலரைக் கீழாகவும் ஆக்கிக் கொண்டிருப்போம் என்று இங்கே அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.

முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்ள வேண்டியவற்றில் விதியும் ஒன்றாகும்.

'நன்மை தீமை யாவும் அல்லாஹ்விடமிருந்தே ஏற்படுகின்றன என்ற விதியையும் நான் நம்புகிறேன்' என்ற உறுதி மொழி எடுத்த முஸ்லிம் நாள் நட்சத்திரம் பார்ப்பது அந்த உறுதி மொழிக்கு முரணாகும்.



ஒரு நாள், நல்ல நாள் என்றோ கெட்ட நாள் என்றோ இருக்குமானால் அதை அல்லாஹ் தான் அறிவான். அவன் அறிவித்தால் தவிர எவராலும் அறிய முடியாது.

அல்லாஹ் திருக்குர்ஆனில் இன்னின்ன நாட்கள் நல்ல நாட்கள் என்று கூறவில்லை. அல்லாஹ்வின் தூதரும் கூறவில்லை. அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறாததை மற்றவர்களால் எப்படி அறிய முடியும்?

இன்னின்ன நாட்கள் இன்னின்ன நபர்களுக்கு நல்ல நாட்கள் என்று நம்மைப் போன்ற ஒரு மனிதன் தான் முடிவு செய்கிறான். அவனிடம் சென்று அல்லது அவன் எழுதியதைப் பார்த்து நல்ல நாட்களைத் தீர்மானிக்கிறோம்.

நம்மைப் போன்ற ஒரு மனிதன் எப்படி இது நல்ல நாள் தான் என்று அறிந்து கொண்டான்? இதைச் சிந்திக்க வேண்டாமா?

வருங்காலத்தில் நடப்பதை அறிவிப்பதாகக் கூறுவதும் சோதிடமும் ஒன்று தான். ஒரு மந்திரவாதியிடம்(?) ஹஜ்ரத்திடம் சென்று எனக்கு நல்ல நாள் ஒன்றைக் கூறுங்கள் என்று கேட்கின்றனர். அவரும் ஏதோ ஒரு நாளைக் கணித்துக் கூறுகிறார். அதை நம்பி தமது காரியங்களை நடத்துகின்றனர்.
 
யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் அவனது நாற்பது நாட்களின் தொழுகை ஏற்கப்படாது என்பது நபிமொழி. நூல் : முஸ்லிம் 4137


யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் முஹம்மதுக்கு அருளப்பட்ட மார்க்கத்தை அவன் நிராகரித்து விட்டான் என்பதும் நபிமொழி.  நூல் : அஹ்மத் 9171

இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். உலகத்துக்கெல்லாம் நல்ல நாள் கணித்துக் கூறக் கூடிய பூசாரிகள், சாமியார்கள், ஜோதிடர்கள், ஹஸரத்துகளின் நிலைமையைப் பாருங்கள்! வறுமையிலும், தரித்திரத்திலும் வீழ்ந்து கிடப்பதையும், மக்களிடம் யாசித்து உண்பதையும் நாம் காணலாம்.

இவர்கள் தங்களுக்கு என்று விஷேசமான நல்ல நாளைத் தேர்வு செய்து தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள முடிந்ததா? இது ஒரு பித்தலாட்டம் என்பது இதிருந்தே தெளிவாகவில்லையா?

முஸ்லிம்கள் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் எந்த நல்ல காரியங்களையும் செய்யலாம். நாள் நட்சத்திரம், சகுணம், ஜோதிடம் ஆகிய அனைத்திலிருந்தும் விலகிக் கொள்வது அவசியமாகும். கப்ரு வேதனை கடல் பயணத்தில் இறந்தவர்கள், உடலை எரித்துச் சாம்பலாக்கி பல பகுதிகளில் தூவி விடப்பட்டவர்கள், மிருகங்களால் அடித்துக் கொல்லப்பட்டு அவற்றுக்கு உணவாகிப் போனவர்கள், ஆகியோருக்கு கப்ரு வேதனை எவ்வாறு? இவர்களுக்குக் கப்ரே கிடையாது எனும் போது கப்ரு வேதனை எவ்வாறு இருக்கும்?  என்ற சந்தேகம் பரவலாக இருக்கின்றது.

கப்ரு வேதனையைக் குறிப்பிடும் போது அடக்கம் செய்யப்பட்ட இடத்தைக் கூறுவது பெரும்பான்மையைக் கருத்தில் கொண்டே சொல்லப்படுகின்றது. மண்ணுக்குள்ளே தான் அந்த வேதனை நடக்கிறது என்று கருதிக் கொள்ளக் கூடாது. இவ்வாறு நாம் கூறுவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.

முஸ்லிம்களானாலும், முஸ்லிமல்லாதவர்களானாலும் அவர்கள் அனைவரும் கப்ருடைய வாழ்வைச் சந்தித்தே தீருவார்கள். முஸ்லிமல்லாதவர்களும் கப்ரில் வேதனை செய்யப்படுவார்கள் என்பதைப் பல ஹதீஸ்கள் கூறுகின்றன. (பார்க்க புகாரி: 1207, 1252)

மண்ணுக்குள் அடக்கம் செய்யப்பட்டவர்கள் மட்டுமே கப்ரில் வேதனை செய்யப்படுகிறார்கள் என்று நாம் கூறினால் பெரும்பாலான முஸ்லிமல்லாதவர்கள் அந்த வேதனையிலிருந்து விடுதலை பெறுகிறார்கள் என்ற நிலை ஏற்படும். ஏனெனில் அவர்களை மண்ணில் புதைக்காமல் எரித்துச் சாம்பலாக்கி விடுகின்றனர்.

பாவம் செய்த முஸ்லிம்களை கப்ரில் வேதனை செய்யும் இறைவன் முஸ்லிமல்லாதவர்களுக்கு அத்தகைய வேதனை வழங்க மாட்டான் என்பது இறைவனின் நியதிக்கும், அவனது நியாயத்திற்கும் ஏற்புடையதாக இல்லை.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது 'என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.  அல்குர்ஆன் 23:100

கப்ருடைய வேதனை என்பது ஒரு திரை மறைவு வாழ்க்கை என்பது இந்த வசனத்திருந்து புரிகிறது. மண்ணுக்குள் தான் அது நடக்க வேண்டும் என்று அர்த்தமில்லை.

ஓரு நல்லடியார் அடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் சில ஆண்டுகளுக்குப் பின் ஓரு கெட்டவர் அடக்கம் செய்யப்படுகின்றார். அடக்கம் செய்த இடத்திற்குள்ளேயே வேதனை நடக்கிறது என்றால் இங்கே கருத்துக் குழப்பம் ஏற்படும்.

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.  (அல்குர்ஆன் 39:42)

அனைத்து உயிர்களையும் இறைவன் தன் கைவசம் வைத்துள்ளான் என்பது இந்த வசனத்திலிருந்து தெளிவு. நமது புலனுக்குத் தென்படாத மற்றொரு உலகத்தில் அந்த ஆத்மாக்களுக்கு அவன் வேதனையோ, சுகமோ வழங்குவான் என்று எடுத்துக் கொண்டால் 'எவருமே கப்ருடைய வாழ்விலிருந்து தப்பிக்க இயலாது' என்ற கருத்து நிலை பெறும்.

கப்ருகளுக்கு நாம் ஸலாம் கூறுவதும், ஸியாரத்துக்குச் செல்வதும், கப்ரில் வேதனை செய்யப்பட்ட இருவரின் அடக்கத்தலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரீச்சம் மட்டையைப் பிளந்து ஊன்றியதும் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே வேதனை செய்யப்படுகின்றது என்ற கருத்தைத் தருவது உண்மையே.

இதை அடிப்படையாக வைத்து மண்ணுக்குள் தான் வேதனை செய்யப்படுகிறது என்று நாம் முடிவு செய்தால் முஸ்லிமல்லாதவர்கள் அந்த வேதனையிலிருந்து தப்பித்து விடுவார்கள் என்ற நிலை ஏற்படுகின்றது.

அடக்கம் செய்யப்பட்டவர்களின் கப்ரு வாழ்க்கை அடக்கத்தலத்தில் அமையும். அடக்கம் செய்யப்படாதவர்களுக்கு வேறு விதமான கப்ரு வாழ்வை அமைப்பது இறைவனுக்குச் சிரமமல்ல.

அல்லது அனைவருக்குமே மண்ணுலகம் அல்லாத மற்றொரு உலகில் கப்ருடைய வாழ்வை இறைவன் அமைக்கலாம்.

அடக்கத்தலம் அடையாளமாக இருப்பதால் அடக்கத் தலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டைகளை நட்டு வைத்திருக்கலாம். எப்படி வைத்துக் கொண்டாலும் கப்ருடைய வாழ்விலிருந்து எவரும் விதி விலக்கு பெற முடியாது என்பதில் சந்தேகமில்லை.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner