Saturday, December 13, 2014

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் - தொடர் 6 - பி.ஜே

முதல் ஆதாரம்


3268 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டுக் கொண்டே இருந்தது. இறுதியில் ஒரு நாள், அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: என் நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்து விட்டதை நீ அறிவாயா? என்னிடம் இரண்டு பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் எனது கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் مَا وَجَعُ الرَّجُلِ  இந்த மனிதரைப் பீடித்துள்ள வேதனை என்ன? என்று கேட்டார். மற்றொருவர், இவருக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். அதற்கு அவர், இவருக்கு சூனியம் வைத்தது யார்? என்று கேட்க, லபீத் பின் அஃஸம் (என்னும் யூதன்) என்று இவர் பதிலளித்தார். எதில்? என்று அவர் கேட்க அதற்கு, சீப்பிலும், (இவரது) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும் என்று அவர் பதிலளித்தார். அதற்கு அவர், அது எங்கே இருக்கிறது என்று கேட்க, (பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) தர்வான்' எனும் கிணற்றில் என்று பதிலளித்தார்.

(இதைச் சொல்லி முடித்த) பிறகு, நபி (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்த போது என்னிடம், அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன என்று கூறினார்கள். நான், அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர்கள், இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்தி விட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே குழப்பத்தைக் கிளப்பி விடும் என்று நான் அஞ்சினேன் என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு தூர்க்கப்பட்டு விட்டது.

புகாரி – 3268

5763 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பனூஸுரைக்' குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அஃஸம் என்பான் சூனியம் செய்தான். இதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமையூட்டப் பட்டார்கள். இறுதியில், அவர்கள் ஒரு நாள்' அல்லது ஓரிரவு' என்னிடம் வந்தார்கள். ஆயினும், அவர்கள் (என் மீது கவனம் செலுத்தாமல்) தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தார்கள்.

பிறகு (என்னிடம் கூறினார்கள்:) ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவைத் தரும்படி இறைவனிடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்து விட்டான். (கனவில்) என்னிடம் (வானவர்கள்) இரண்டு பேர் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், இந்த மனிதரின் நோய் என்ன? என்று கேட்டார். அத்தோழர், இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று சொல்ல, முதலாமவர் இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்? என்று கேட்டார். தோழர், லபீத் பின் அஃஸம் (எனும் யூதன்) என்று பதிலளித்தார். அவர், எதில் வைத்திருக்கிறான்? என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், ஆண் பேரீச்சம் பாளையின் உறையிலும் என்று பதிலளித்தார். அவர், அது எங்கே இருக்கிறது? என்று கேட்க, மற்றவர், (பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) தர்வான்' எனும் கிணற்றில் என்று பதிலளித்தார். இதைச் சொல்லி முடித்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று (பாளை உறையை வெளியே எடுத்துவிட்டுத் திரும்பி) வந்து, ஆயிஷா! அதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போல் உள்ளது; அதன் பேரீச்ச மரங்களின் தலைகள் ஷைத்தானின் தலைகளைப் போன்று உள்ளன என்று சொன்னார்கள்.

நான், அல்லாஹ்வின் தூதரே! அ(ந்தப் பாளை உறைக்குள் இருப்ப)தைத் தாங்கள் வெளியே எடுக்கவில்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ் எனக்கு (அதன் பாதிப்பிலிருந்து) குணமளித்துக் காப்பாற்றிவிட்டான். அதை வெளியே எடுப்பதன் மூலம் மக்களிடையே  குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் என்று சொன்னார்கள். பிறகு அந்தக் கிணற்றைத் தூர்த்துவிடும்படி அவர்கள் கட்டளையிட அவ்வாறே அது தூர்க்கப் பட்டது.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பாளர் ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்களின் ஓர் அறிவிப்பில், (சீப்பிலும் சிக்கு முடியிலும் என்பதற்கு பதிலாக) சீப்பிலும் சணல் நாரிலும்' என்று காணப்படுகிறது. தலையை வாரும் போது கழியும் முடிக்கே முஷாதத்' (சிக்கு முடி) எனப்படும். சணலை நூற்கும் போது வெளிவரும் நாருக்கே முஷாகத்' (சணல் நார்) எனப்படும்.

புகாரி –5763

5765 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள்.

-அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அவ்வாறிருந்தால் அது சூனியத்திலேயே கடுமையானதாகும்.-


(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? நான் எந்த விஷயத்தில் அல்லாஹ்விடம் தெளிவைத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தேனோ, அந்த விஷயத்தில் அல்லாஹ் எனக்குத் தெளிவை வழங்கிவிட்டான். (கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்து, ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். என் தலைமாட்டில் இருந்தவர் மற்றொருவரிடம், இந்த மனிதரின் நிலையென்ன? என்று கேட்டார். மற்றவர் சூனியம் செய்யப்பட்டுள்ளார் என்று சொன்னார். அதற்கு அவர், யார் அவருக்குச் சூனியம் வைத்தார்? என்று கேட்டார். மற்றவர், யூதர்களின் நட்புக் குலமான பனூ ஸுரைக் குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அஃஸம் என்பவர். இவர் நயவஞ்ச கராக இருந்தார் என்று பதிலளித்தார். அவர், எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)? என்று கேட்க, மற்றவர், சீப்பிலும் சிக்கு முடியிலும் என்று பதிலளித்தார். அவர், எங்கே (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)? என்று கேட்க, மற்றவர், ஆண் பேரீச்சம் பாளையின் உறையில் தர்வான்' குலத்தாரின் கிணற்றிலுள்ள கல் ஒன்றின் அடியில் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அ(ந்தப் பாளை உறை)தனை வெளியே எடுத்தார்கள். பிறகு (என்னிடம் திரும்பி வந்த) நபி (ஸல்) அவர்கள், இது தான்  எனக்குக் (கனவில்) காட்டப்பட்ட கிணறு. இதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) உள்ளது. இதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று உள்ளன என்று சொல்லிவிட்டுப் பிறகு அந்தப் பேரீச்சம் பாளை உறை வெளியே எடுக்கப்பட்டது என்றும் கூறினார்கள்.

நான், தாங்கள் ஏன் உடைத்துக் காட்டக் கூடாது? எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் எனக்கு  நிவாரணம் அளித்துவிட்டான்.  மக்களில் எவரையும் குழப்பத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.

புகாரி – 5765

5766 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைச் செய்வது போன்ற பிரமை அவர்களுக்கு ஏற்பட்டது. இறுதியில் ஒரு நாள் அவர்கள் என்னிடம் இருந்த போது அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டேயிருந்தார்கள். பிறகு என்னிடம், ஆயிஷா (விஷயம்) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவளித்துவிட்டான் என்று கூறினார்கள்.

நான், என்ன அது, அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கனவில்) என்னிடம் (வானவர்கள்) இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் என்னுடைய தலைமாட்டிலும் இன்னொருவர் என்னுடைய கால்மாட்டிலும் அமர்ந்தனர். பிறகு அவர்களில் ஒருவர் மற்றவரிடம், இந்த மனிதரின் நோய் என்ன? என்று கேட்க, மற்றவர், இவருக்குச் சூனியம் செய்யப்பட் டுள்ளது என்று பதிலளித்தார். முதலாமவர், இவருக்கு யார் சூனியம் வைத்தார்? என்று கேட்க, மற்றவர், பனூ ஸுரைக் குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அஃஸம் எனும் யூதன் என்று பதிலளித்தார். முதலாமவர், எதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது? என்று கேட்க, அடுத்தவர், சீப்பிலும் சிக்குமுடியிலும் ஆண்பேரீச்சம் பாளையின் உறையிலும் என்று சொன்னார். முதலாமவர், அது எங்கே வைக்கப்பட்டுள்ளது? என்று கேட்க, அடுத்தவர், தூஅர்வான் குலத்தாரின் கிணற்றில் என்று பதிலளித்தார்.

ஆகவே, நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று அதைக் கூர்ந்து கவனித்தார்கள். சுற்றிலும் பேரீச்ச மரங்கள் இருந்தன.

பிறகு ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து, அந்தக் கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) இருந்தது. அதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தானின் தலைகளைப் போன்று இருந்தன என்று சொன்னார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! அந்தக் கட்டைத் தாங்கள் திறந்தீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், இல்லை; எனக்கோ அல்லாஹ் ஆரோக்கியமளித்து குணப்படுத்திவிட்டான். அதைத் திறந்து காட்டினால் மக்கள் குழப்பமடைந்து விடுவார்களோ என அஞ்சினேன் என்று சொன்னார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களின் ஆணையின் பேரில் அக்கிணறு தூர்க்கப்பட்டது.

புகாரி – 5766

6063 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்கு (சூனியம் செய்யப்பட்டதால்) அவர்கள் இன்னின்னவாறு நடந்து கொண்டார்கள். அவர்கள் தம் வீட்டாரிடம் செல்லாமலேயே சென்றுவந்து விட்டதாகப் பிரமையூட்டப்பட்ட நிலையில் நீடித்தார்கள். அவர்கள் ஒரு நாள் என்னிடம், ஆயிஷா! நான் எந்த விவகாரத்தில் தெளிவைத் தரும்படி அல்லாஹ்விடம் கேட்டுக் கொண்டிருந்தேனோ அதில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான்.  இரண்டு பேர் என்னிடம் வந்தனர். அவர்களில் ஒருவர் என் கால்மாட்டிலும் மற்றவர் என்னுடைய தலைமாட்டிலும் அமர்ந்தனர். அப்போது என் கால்மாட்டில் அமர்ந்திருந்தவர் என் தலைமாட்டில் அமர்ந்திருந்தவரிடம் (என்னைக் காட்டி), இந்த மனிதரின் நிலை என்ன? என்று கேட்க, மற்றவர், இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். முதலாமவர், இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்? என்று கேட்க, மற்றவர், லபீத் பின் அஃஸம்' என்று பதிலளித்தார். முதலாமவர், எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)? என்று கேட்க, மற்றவர், ஆண் பேரீச்சம் பாளையின் உறை, (தலைவாரும்) சீப்பு, சிக்குமுடி ஆகியவற்றில் (சூனியம்) செய்யப்பட்டு தர்வான்' (குலத்தாரின்) கிணற்றில் ஒரு பாறைக்கடியில் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்.

ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்கு) வந்து (பார்த்துவிட்டு), இந்தக் கிணறுதான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்டது. அந்தக் கிணற்றினைச் சுற்றியிருந்த பேரீச்சம் மரங்களின் தலைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்றிருந்தன. அந்தக் கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்றிருந்தது என்று சொன்னார்கள்.

நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட அது வெளியே எடுக்கப்பட்டது. நான், அல்லாஹ்வின் தூதரே! அ(ந்தப் பாளை உறை)தனைப் பிரித்துப் பார்க்கவில்லையா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் என்னைக் குணப்படுத்திவிட்டான். நானோ மக்களுக்கெதிராகத் வன்மத்தைத் தூண்டி விடுவதை அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைத்தன லபீத் பின் அஃஸம், பனூ ஸுரைக் குலத்தாரிலுள்ள ஒருவன் ஆவான். (அவன்) யூதர்களின் நட்புக் குலத்தவன் ஆவான்.

புகாரி – 6063

6391 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைத் தாம் செய்துவிட்டதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிரமையூட்டப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) தம் இறைவனிடம் பிரார்த்தித்த பிறகு (என்னிடம்), (ஆயிஷா!) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவைத் தரும்படி நான் இறைவனிடம் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான் என்று கூறினார்கள். அதற்கு நான், அது என்ன? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டேன். அப்போது (பின்வருமாறு) கூறினார்கள்:

(கனவில்) என்னிடம் (வானவர்கள்) இரண்டு பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைமாட்டிலும், மற்றொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் தம் தோழரிடம், இந்த மனிதரின் நோய் என்ன? என்று கேட்டார். அதற்கு அவருடைய தோழர், இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளிக்க, முதலாமவர், இவருக்குச் சூனியம் வைத்தது யார்? என்று வினவினார். அதற்கு லபீத் பின் அஃஸம் என்று தோழர் பதிலளித்தார். அவன் எதில் (சூனியம் வைத்தான்)? என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், பேரீச்சம் பாளையின் உறையிலும் என்று பதிலளித்தார். அவர், அது எங்கே உள்ளது? என்று கேட்க, மற்றவர், தர்வானில் உள்ளது என்றார்.

-தர்வான்' என்பது பனூஸுரைக் குலத்தாரிடையேயிருந்த ஒரு கிணறாகும்.-

பிறகு அங்கு சென்று (பார்வையிட்டு) விட்டு என்னிடம் வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணை யாக! அக்கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்றுள்ளது. அதன் பேரீச்சம் மரங்கள் சாத்தானின் தலையைப் போன்று இருந்தன என்று குறிப்பிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து என்னிடம் அக்கிணற்றைப் பற்றித் தெரிவித்த போது நான், அல்லாஹ்வின் தூதரே! அ(ந்தப் பாளை உறைக்குள்ள இருப்ப)தைத் தாங்கள் வெளியில் எடுக்கவில்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், எனக்கோ அல்லாஹ் (அதன் பாதிப்பிலிருந்து) நிவாரண மளித்துவிட்டான். மக்களிடையே குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன்  என்று சொன்னார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் வழியாக வரும் ஓர் அறிவிப்பில், நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது; நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்; பிரார்த்தித்தார்கள். (திரும்பத் திரும்பப் பிரார்த்தித்தார்கள்) என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

புகாரி – 6391

சூனியத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்ற கருத்துடையவர்கள் இதை தங்களின் முதன்மையான ஆதாரமாக எடுத்துக் காட்டுகிறார்கள். இந்த ஹதீஸ்களில் சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது என்பது இவர்களின் வாதம்.

யூதன் ஒருவன் செய்த சூனியத்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள் என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. மேற்கண்ட ஹதீஸ்களில் பாதிப்பைக் கூறும் வாக்கியங்களைக் கவனமாகப் பாருங்கள்.

முதல் ஹதீஸில்

எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டுக் கொண்டு இருந்தது

என்று சொல்லப்பட்டுள்ளது.

இரண்டாவது ஹதீஸில்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமையூட்டப்பட்டவர்களாக ஆனார்கள்

என்று சொல்லப்பட்டுள்ளது.

மூன்றாவது ஹதீஸில்

தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள்

என்று சொல்லப்பட்டுள்ளது.

நான்காவது ஹதீஸில்

இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைச் செய்வது போன்ற பிரமை அவர்களுக்கு ஏற்பட்டது

என்று சொல்லப்பட்டுள்ளது.

ஐந்தாவது ஹதீஸில்

அவர்கள் இன்னின்னவாறு நடந்து கொண்டார்கள். அவர்கள் தம் வீட்டாரிடம் செல்லாமலேயே சென்றுவந்து விட்டதாகப் பிரமையூட்டப்பட்டுக் கொண்டே இருந்தது.

என்று சொல்லப்பட்டுள்ளது.

ஆறாவது ஹதீஸில்

இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைத் தாம் செய்துவிட்டதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிரமையூட்டப்பட்டுக் கொண்டே இருந்தது

என்று சொல்லப்பட்டுள்ளது.

ஒரு மனிதன் தான் செய்யாததை செய்ததாகச் சொல்லிக் கொண்டு இருப்பது மனநோயின் ஒரு வகையாகும். மேலும் மனைவியுடன் சேராமல் சேர்ந்ததாக நினைப்பது கடுமையான மனநோயாகும். இத்தகைய மனநோய் தான் நபியவர்களுக்கு சூனியத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டது என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன.

மன நோய் மட்டுமின்றி உடல் உபாதையும் ஏற்பட்டதாக முதலாவதாக நாம் குறிப்பிட்ட ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. مَا وَجَعُ الرَّجُلِ  இந்த மனிதரைப் பீடித்துள்ள வேதனை என்ன என்று வானவர்கள் பேசிக் கொண்டதாக இந்த அறிவிப்பில் உள்ளது. (வேதனை என்று மூலத்தில் இருக்க நோய் என்று சிலர் செய்த தமிழாக்கம் தவறானது என்பதைக் கவனத்தில் கொள்க)

இது ஏதோ ஒருநாள் நடந்ததாகச் சொன்னால் அது மனநோய் என்று சொல்ல முடியாது. ஆனால் இது அதிக காலம் நீடித்தது என்று இந்த அறிவிப்புகள் சொல்கின்றன. சில மொழிபயர்ப்பாளர்கள் இந்தக் கருத்துப்படி தமிழாக்கம் செய்யாவிட்டாலும் மூலத்தில் கான என்ற சொல் உள்ளது. இந்த நிலையில் நீடித்தார்கள் என்பது இதன் கருத்தாகும்.

இது எவ்வளவு காலம் என்று அஹ்மதில் உள்ள பினவரும் ஹதீஸ் தெளிவாகவும் கூறுகிறது.

நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட இந்த நிலை ஆறு மாதங்கள் நீடித்ததாக அஹ்மத் என்ற கிரந்தத்தில் இடம்பெற்ற செய்தி கூறுகிறது.

நூல் : அஹ்மத் (23211)

செய்யாததைச் செய்ததாக நினைக்கும் அளவுக்கு நபிகள் நாயகத்துக்கு ஆறு மாதகாலமாக கடும் பாதிப்பு ஏற்பட்டதாக இந்த ஹதீஸ்கள் சொல்வதால் சூனியத்தினால் எதுவும் செய்ய முடியும் என்று சூனியத்துக்கு ஆற்றல் உள்ளது என்ற கருத்துடையோர் வாதிடுகின்றனர்.

நாம் இரண்டு நாட்களாகக் கூறி வந்த இஸ்லாத்தின் அடிப்படைகளைப் புறக்கணித்து விட்டு விளங்குவதாக இருந்தால் இந்த வாதம் சரியானது தான்.

ஆனால் இதை நம்பும் போது திருக்குர்ஆனின் ஏராளமான வசனங்கள் மறுக்கப்படும் நிலை ஏற்படுகிறது.

அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல் ஏற்படுகிறது.

குர்ஆனின் பாதுகாப்பு கேள்விக் குறியாக்கப்படுகிறது.

நபிகள் நாயகத்தின் தூதுத்துவம் சந்தேகத்துக்கு உள்ளாக்கப்படுகிறது

என்பதையும் கவனத்தில் கொண்டு சிந்தித்தால் மறுத்து ஒதுக்க வேண்டிய ஹதீஸ்கள் பட்டியலில் இது முதலிடத்தில் இருக்கிறது எனலாம்.

இது இஸ்லாத்தை எப்படியெல்லாம் பாதிக்கின்றது என்று பார்ப்போம்.

முதலாவதாக இது அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலில் கொண்டு போய் சேர்க்கிறது.

அல்லாஹ்வின் இலக்கணம் என்ன?

அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை மறந்து விட்டான். "எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று கேட்கிறான்.

திருக்குர்ஆன் 36:78

(அவன்) வானங்களையும், பூமியையும் படைத்தவன். உங்களுக்கு உங்களிலிருந்தே ஜோடிகளையும், (கால்நடைகளுக்கு) கால்நடைகளில் ஜோடிகளையும் ஏற்படுத்தினான். அதில் (பூமியில்) உங்களைப் பரவச் செய்தான். அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

திருக்குர்ஆன் 42:11

அவனுக்கு நிகராக யாருமில்லை.

திருக்குர்ஆன் 112:4

அல்லாஹ்வைப் போல் எவனும் இல்லை என்றால் அவனைப் போல் கேட்பவன் இல்லை. அவனைப்போல் பார்ப்பவன் இல்லை. அவனைப்போல் செயல்படுபவன் இல்லை என்பது இதன் கருத்தாகும்.

மேற்கண்ட வசனங்களில் இருந்து இதை நாம் அறிந்து கொள்ளலாம்.

உதாரணமாக ஒருவர் பேசுவது இன்னொருவருக்குக் கேட்கும். இது போன்று அனைத்து மனிதர்களும் கேட்கக் கூடியவர்கள். அல்லாஹ்வும் கேட்கக் கூடியவனே.

ஆனால், நாம் கேட்பதும் அல்லாஹ் கேட்பதும் சமமாகாது. நமது கேட்புத்திறனுக்கு ஒரு எல்லை உண்டு.

ஒருவரைக் காண்பித்து இவர் அமெரிக்காவிலிருந்து கூப்பிட்டாலும் எந்தக் கருவியும் இல்லாமல் கேட்பார் என்று சொன்னால் இது ஷிர்க் ஆகிவிடும்.

அவ்லியா எனும் பட்டம் சூட்டி அடக்கம் செய்யப்பட்டவர்களை பலர் அழைக்கிறார்கள். அடக்கம் செய்த இடத்துக்குச் சென்றும் அழைக்கிறார்கள். எந்த இடத்தில் இருந்து கொண்டும் அழைக்கிறார்கள்.

எங்கிருந்து கூப்பிட்டாலும் இந்த அவ்லியாவிற்கு கேட்கும் என்ற நம்பிக்கையில் இவர்கள் கூப்பிடுகின்றார்கள்.

இப்போது இவருடைய கேட்கும் திறன் அல்லாஹ்வின் கேட்கும் திறனுக்கு சமமாக ஆக்கப்படுவதால் இதை இணைகற்பித்தல் என்று சொல்கிறோம்.

இது போன்றுதான் பார்ப்பது, கொடுப்பது, பாதிப்பை ஏற்படுத்துவது போன்றவைகளும்.

அவன் ”ஆகு” என்றால் ஆகிவிடும்.

எல்லா வகையிலும் ஒருவனை அல்லாஹ்வைப் போன்றவன் என்று நம்புவது எவ்வாறு இணை கற்பித்தலாக ஆகுமோ அது போல் ஒரு பண்பு மட்டும் ஒருவனுக்கு அல்லாஹ்வைப் போல் உள்ளது என்று நம்புவதும் இணை வைத்தலேயாகும்.

மக்கா காபிர்கள் அல்லாஹ் அல்லாத பல குட்டித் தெய்வங்களை வணங்கி வந்தனர். ஆனால் எல்லா ஆற்றலும் அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் உள்ளது என்று அவர்கள் நம்பினாலும் அவர்களை இணை வைத்தவர்கள் என்று தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

'வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப் புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்?' என்று கேட்பீராக! 'அல்லாஹ்' என்று கூறுவார்கள். 'அஞ்ச மாட்டீர்களா' என்று நீர் கேட்பீராக!

திருக்குர்ஆன் 10:31

'பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)' என்று (முஹம்மதே!) கேட்பீராக! 'அல்லாஹ்வுக்கே' என்று அவர்கள் கூறுவார்கள். 'சிந்திக்க மாட்டீர்களா?' என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 23:84,85

'ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?' எனக் கேட்பீராக! 'அல்லாஹ்வே' என்று கூறுவார்கள். 'அஞ்ச மாட்டீர்களா;?' என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 23:86,87

'பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)' என்று கேட்பீராக! 'அல்லாஹ்வே' என்று கூறுவார்கள். 'எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?' என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 23:88,89

'வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்?' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்று கூறுவார்கள். அப்படியாயின் 'எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?

திருக்குர்ஆன் 29:61

'வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்றே கூறுவார்கள். 'அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்' என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.

திருக்குர்ஆன் 29:63

'வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்று அவர்கள் கூறுவார்கள். 'அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்' என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிமானோர் அறிய மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 31:25

'வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்று கூறுவார்கள். 'அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!' என்று கேட்பீராக! 'அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 39:38

'வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான்' எனக் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 43:9

அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?

திருக்குர்ஆன் 43:87

மக்கத்துக் காபிர்கள் அல்லாஹ்வை நம்பியிருந்தார்கள், அவனது வல்லமையைப் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதை இந்த வசனங்கள் சந்தேகத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன.

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். 'அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்' என்றும் கூறுகின்றனர். 'வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 10:18

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் 'அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை' (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

திருக்குர்ஆன் 39:3

மக்கத்துக் காஃபிர்கள் பெரியார்கள் பற்றிக் கொண்டிருந்த நம்பிக்கையை இவ்விரு வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன.

இறைவனின் ஆற்றல் அந்தப் பெரியார்களுக்கு உண்டு என்று இவர்கள் நம்பவில்லை என்பது உண்மையே. ஆனால் மற்றொரு வகையில் இறைவனுக்குச் சமமான ஆற்றல் அந்தப் பெரியவர்களுக்கு உண்டு என்று இவர்கள் நம்பினார்கள்.

எங்கிருந்து அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும், எந்த நேரத்தில் அழைத்தாலும், எந்த மொழியில் அழைத்தாலும் அனைத்தையும் ஒரே சமயத்தில் அறிந்து கொள்ளும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரமே சொந்தமானதாகும். இதே போன்ற ஆற்றல் அந்தப் பெரியார்களுக்கு உண்டு என்று அவர்கள் நம்பினார்கள்.

இதன் காரணமாகவே உலகின் பல பாகங்களிலிருந்தும் பலரும் அந்தப் பெரியார்களைப் பிரார்த்திக்கின்றனர். தங்களது பிரார்த்தனையை அல்லாஹ் செவிமடுப்பது போலவே பெரியார்களும் செவிமடுக்கின்றனர் என்று நம்பி இந்த விசயத்தில் இறைவனுக்குச் சமமாகப் பெரியார்களை நம்புகின்றனர்.

முழுக்க முழுக்க இறைத்தன்மை பெற்றவர்களாக மற்றவர்களை எண்ணுவது மாத்திரம் இணைவைத்தல் அன்று. மாறாக, இறைவனது தன்மைகளில் ஏதேனும் ஒரு தன்மை இறைவனுக்கு இருப்பது போலவே மற்றவர்களுக்கும் இருப்பதாக எண்ணுவதும் இணைவைத்தலாகும். இதைப் புரிந்து கொள்ளாததாலேயே மக்கா காபிர்கள் இறைவனல்லாதவர்களைப் பிரார்த்தித்தனர்.

குட்டித் தெய்வங்கள் எல்லா வகையிலும் அல்லாஹ்வைப் போன்றவை என்று மக்கா காபிர்கள் நம்பாவிட்டாலும் அவர்களின் கேட்கும் திறன் அல்லாஹ்வின் கேட்கும் திறன் போன்றது என நம்பி இணை கற்பித்தவர்களானார்கள்.

சூனியக்காரர்கள் எல்லா வகையிலும் அல்லாஹ்வைப் போன்றவர்கள் என்று சூனியக்கட்சியினர் நம்பாவிட்டாலும் பிறருக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதில் அதற்கான வழிமுறைகளில் இல்லாமல் அல்லாஹ்வைப் போல் செயல்படுகிறார்கள் என்ற நம்பிக்கை இதனுள் இருப்பதால் இதுவும் அப்பட்டமான இணை வைத்தல் தான்.

சூனியக்காரனுக்கு அல்லாஹ்வைப் போல் செயல்பட முடியும் என்ற கருத்தை நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாக கூறும் ஹதீஸ்கள் தருவதால் இது கட்டுக்கதையாகத் தான் இருக்க முடியும்.

ஒரு மனிதர் ஆறு மாத காலத்திற்கு செய்ததைச் செய்யவில்லை என்று சொல்கிறாரென்றால் இவரைப் பற்றி மனநல மருத்துவர்களிடம் கேட்டால் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தான் சொல்வார்கள். நபி அவர்களை இப்படித்தான் இந்த ஹதீஸ் சித்தரிக்கிறது.

சாலிமுக்கு அன்னியப் பெண் பாலூட்டிய செய்தியும், உம்மு ஹராம் என்ற அன்னியப் பெண் வீட்டில் நபி அவர்கள் இருந்ததாக வரும் செய்தியும் பொது ஒழுக்கத்துக்கு  எதிராக இருப்பதால் நிராகரிக்கிறோம் என்றால் சூனியக்காரனுக்கு ஆற்றல் உள்ளதாக நம்புவது ஈமானைப் பாதிக்கும் பெரிய விஷயமாக இருக்கிறதே? இதை எப்படி ஏகத்துவக் கொள்கையில் உறுதியுள்ள முஸ்லிம்கள் நம்ப முடியும்?

மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி சூனியக்காரனுக்கு உள்ளது என்ற கொள்கை உள்ளவர்கள் நமது இந்த வாதத்துக்கு எதிர்வாதங்களையும் வைக்கிறார்கள்.

தங்களின் கொள்கை இணை கற்பித்தல் தான் என்பதை மறுக்க முடியாமல் நபிமார்களின் அற்புதங்களை எடுத்துக் காட்டி இதுவும் இணை கற்பித்தல் தானே என்கிறார்கள்.

அல்லாஹ்வைப் போல் நபிமார்கள் நடந்து கொள்ளவில்லையா? என நபிமார்கள் செய்த அற்புதங்களை ஆதாரமாக வைக்கின்றனர்.

இது அறிவீனமான வாதமாகும்.

நபிமார்கள் செய்த அற்புதங்கள் உண்மையில் மனிதனின் செயலைப் போன்றவை அல்ல என்பது உண்மை. எந்த மனிதனாலும் அதுபோல் செய்ய முடியாது என்பதும் உண்மை. ஆனால் நபிமார்கள் செய்த அற்புதங்கள் உண்மையில் அவர்கள் செய்தவை அல்ல.

மனிதர்களாக இருந்த நபிமார்களை இறைவன் தான் தனது தூதர்களாக அனுப்பினான் என்று மக்கள் நம்புவதற்கான சான்றுகளாகச் சில அற்புதங்களை அவர்கள் மூலம் அல்லாஹ் நிகழ்த்தினான். அதற்கும் நபிமார்களுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

அல்லாஹ் அனுமதித்தால் மட்டுமே எந்த அற்புதத்தையும் நாங்கள் செய்ய முடியும் என்று அவர்கள் வாயாலேயே அல்லாஹ் மக்களுக்கு அறிவிக்கச் செய்கிறான். இதைப் பல வசனங்களில் தெளிவுபட அல்லாஹ் கூறி இருக்கிறான்.

சூனியம் செய்பவர்களைப் பற்றி இப்படித்தான் இவர்கள் நம்புகிறார்களா? அல்லாஹ்விடமிருந்து வஹீயைப் பெற்று அல்லாஹ்வின் அனுமதியோடுதான் அவர்கள் சூனியம் செய்கிறார்களா? நபிமார்களின் அற்புதங்களுடன் சூனியத்தையும் ஒப்பிட எந்த நியாயகும் இல்லை.

ஆனால் நபிமார்கள் எப்போது அற்புதம் நிகழ்த்திக் காட்ட விரும்புகிறார்களோ, அல்லது அவர்களிடமிருந்து மக்கள் எப்போது அற்புதத்தை எதிர்பார்க்கிறார்களோ அப்போதெல்லாம் நபிமார்கள் அற்புதங்களை நிகழ்த்த முடியாது. அல்லாஹ் எப்போது அனுமதி அளித்துள்ளானோ அந்த நேரத்தில் மட்டும் தான் அவர்களால் அற்புதங்கள் நிகழ்த்த முடியும். அற்புதங்கள் நிகழ்த்தும் அதிகாரம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது.

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருக்குர்ஆன் 13:38

உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் சிலரைப் பற்றி நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ்வின் விருப்பப்படியே தவிர எந்த அற்புதத்தையும் கொண்டு வருவது எந்தத் தூதருக்கும் இல்லை. எனவே அல்லாஹ்வின் கட்டளை வரும் போது நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அப்போது வீணர்கள் நஷ்டமடைவார்கள்.

திருக்குர்ஆன் 40:78

'நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்' என்று அவர்களின் தூதர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 14:11

அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் நபிமார்கள் எந்த ஒரு அற்புதத்தையும் நிகழ்த்த முடியாது என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரமாக இவ்வசனங்கள் அமைந்துள்ளன.

'இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்யாத வரை உம்மை நாங்கள் நம்பவே மாட்டோம்' என்று கூறுகின்றனர். அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டும். அல்லது நீர் நினைப்பது போல் வானத்தைத் துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும். அல்லது அல்லாஹ்வையும், வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும். அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்) 'என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன்' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 17:90-93

மேற்கண்ட அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதானது தான். இவை அனைத்தையும் செய்து காட்டுமாறு அவர்கள் கோரிக்கை வைக்கவில்லை. இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தான் கோரினார்கள். அவ்வாறு செய்து காட்டினால் நபிகள் நாயகத்தை நம்புவதாகவும் கூறினார்கள்.

மனிதன் என்றும் இறைவனின் தூதர் என்றும் வாதிடும் என்னிடம் இறைவனிடம் கேட்பதை எப்படிக் கேட்க முடியும்? என்ற கருத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த பதிலில் அடங்கியுள்ளது.

அற்புதங்களை நிகழ்த்துபவன் அல்லாஹ் தான். அவன் நாடும் போது மனிதர்கள் மூலம் வெளிப்படுத்துகிறான் என்பதைப் புரிந்து கொள்ள இந்த ஆதாரங்கள் போதுமானவையாகும்.

அற்புதங்களைச் செய்பவன் அல்லாஹ் மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ள மற்றொரு கோணத்திலும் நாம் சிந்திக்க வேண்டும்.

எந்த நபி வந்தாலும் அவர்கள் மக்களிடம் சொல்வது நாங்கள் மனிதர்கள் தான். அல்லாஹ்விடத்திலிருந்து எந்த ஒரு கட்டளையும் வராமல் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று சொல்வார்கள்.

நபிமார்கள் மந்திரவாதிகளாக வரவில்லை. அவர்கள் எந்த நேரமும் அற்புதங்களைச் செய்ய முடியாது. ஆனால் சூனியக்காரர்கள் காசு கொடுத்தால் எந்த நேரம் வேண்டுமானாலும் சூனியம் செய்வார்கள்.

இப்படி சிந்தித்தால் சூனியமும் அற்புதமும் ஒரே மாதிரியானவை என்று சொல்வார்களா?

நினைத்த நேரத்தில் இல்லாமல் அல்லாஹ் நாடியபோது அற்புதங்களை நபிமார்களுக்கு கொடுத்தான். அந்த அற்புதங்களை நபிமார்கள் செய்யவில்லை. நபிமார்கள் மூலமாக அல்லாஹ் செய்தான்.

இதற்கு உதாரணமாக,

கைத்தடியைக் கீழே போட்டால் பாம்பாக மாறும் அற்புதத்தை மூஸா நபிக்கு கொடுத்ததை எடுத்துக் காட்டலாம்.

தூர்சினா மலைக்கு அல்லாஹ்விடம் பேச மூஸா நபி அவர்கள் செல்கின்றார்கள்.

"மூஸாவே! உமது வலது கையில் இருப்பது என்ன?'' என்று இறைவன் கேட்டான். "இது எனது கைத்தடி. இதன் மீது ஊன்றிக் கொள்வேன். இதன் மூலம் எனது ஆடுகளுக்கு இலை பறிப்பேன். எனக்கு வேறு பல தேவைகளும் இதில் உள்ளன'' என்று அவர் கூறினார். "மூஸாவே! அதைப் போடுவீராக!'' என்று அவன் கூறினான். அதை அவர் போட்ட போது உடனே அது சீறும் பாம்பாக ஆனது. "அஞ்சாமல் அதைப் பிடிப்பீராக! அதனுடைய முந்தைய நிலைக்கு அதை மாற்றுவோம்'' என்று அவன் கூறினான்.

திருக்குர்ஆன் 20:17-21
இது என் கைத்தடி. இதை ஊன்றிக் கொள்வேன். ஆடு, மாடுகளுக்கு இலை தழைகளைப் பரித்துப் போடுவேன் இன்னும் பிற வேலைகளையும் செய்து கொள்வேன் என்றார்கள். அப்போது மூஸா நபி அவர்களின் மனதில் அது வெறும் கைத்தடியாகத்தான் இருந்தது. அல்லாஹ் அதனைக் கீழே போடு என்று சொன்னான். அது பாம்பாக மாறியது. அல்லாஹ் கட்டளையிட்டு இந்த அற்புதத்தை அல்லாஹ்வே நிகழ்த்திக் காண்பித்தான்.

பின்னர் பிர்அவ்னிடம் சென்று மூஸா நபி அழைப்பு கொடுத்து அந்த அற்புதத்தை அல்லாஹ்வின் அனுமதியுடன் செய்து காட்டினார்கள். இதைக் கண்ட பிர்அவ்ன் இது சூனியமாகும். நமது நாட்டில் உள்ள சூனியக்காரர்களுடன் போட்டி ஏற்படுத்தி உம்மைத் தோற்கடித்துக் காட்டுகிறேன் என்று அறைகூவல் விட்டான்.

சூனியக்காரர்களும் வந்தனர். அவர்களுடைய சூனியங்களைச் செய்தனர். மூஸா நபியிடம் கைத்தடி இருந்தும் அவர்கள் அதைப் போட்டு எதிரிகளை முறியடிக்கவில்லை. அல்லாஹ்வின் கட்டளைக்கு காத்திருந்தார்கள். ஏற்கனவே பாம்பாக மாற்றி அல்லாஹ் காண்பித்திருந்தாலும் மீண்டும் அல்லாஹ்விடமிருந்து கட்டளை வந்த பின்பே அதனை மூஸா நபி செய்தார்கள்.

அல்லாஹ்வின் கட்டளை வந்த பின் கைத்தடியைப் போட்டதால் தான் சூனியக்காரர்களின் வித்தையை அது விழுங்கியது.

இதைப் பின்வரும் வசனங்களீல் இருந்து அறிந்து கொள்ளலாம்.

"மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீரா? நாங்களே போடட்டுமா?''  என்று அவர்கள் கேட்டனர். "நீங்களே போடுங்கள்!'' என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். "உமது கைத்தடியைப் போடுவீராக!'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது.  உண்மை நிலைத்தது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாயின.

திருக்குர்ஆன் 27:115, 116, 117

கைத்தடி கையில் இருந்தும் போட வேண்டிய நேரம் வந்தும் அவர்கள் தாமாக கைத்தடியைப் போடவில்லை. அல்லாஹ்வின் கட்டளைக்குப் பின்னரே போட்டார்கள். அதனால் தான் பாம்பாக மாறியது என்பதை இதிலிருந்து அறியலாம்.

எதிரிகள் விரட்டிக் கொண்டு வரும் போது மூஸா நபி அவர்கள் ஓடினார்கள். அப்போது எதிரில் கடல். பிர்அவ்ன் நெருங்கிவிட்டான். மூஸா நபி அவர்களின் கூட வந்தவர்கள் நாம் மாட்டிக் கொண்டோம் என்று சொன்னவுடன் மூஸா நபி அவர்கள் என் இறைவன் இருக்கின்றான். அவன் எனக்கு வழிகாட்டுவான் என்று சொன்னார்கள். அப்போது அல்லாஹ் உன்னுடைய கைத்தடியினால் இந்தக் கடலை அடியுங்கள் என்று கட்டளையிடுகின்றான். கடல் பிளந்தது.

முன்னரே கைத்தடி இருந்தும் அதனைக் கொண்டு மூஸா அவர்கள் அடிக்கவில்லை.

இதைப் பின்வரும் வசனங்களில் இருந்து அறியலாம்.

இரு கூட்டத்தினரும் நேருக்குநேர் பார்த்துக் கொண்ட போது "நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்'' என்று மூஸாவின் சகாக்கள் கூறினர். "அவ்வாறில்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான்'' என்று அவர் கூறினார்.  "உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது.

திருக்குர்ஆன் 26:61,62,63

மூஸா நபி அவர்கள் தமது சமுதாய மக்களை அழைத்துக் கொண்டு பயணித்த போது மக்கள் தண்ணீர் கேட்கின்றனர். ஆனால் அவர்கள் சென்ற இடம் பாலைவனம். தண்ணீர் கிடைக்காது. அப்போது மூஸா நபி அவர்கள் அல்லாஹ்விடம் துஆச் செய்தார்கள். அதற்கு அல்லாஹ் உன் கைத்தடியை வைத்து பாறையைத் தட்டு என்று சொன்னான். மூஸா நபி அவர்கள் செய்ததும் ஊற்று பீறிட்டு வருகின்றது.

ஆனால் மூஸா நபி அவர்கள் மக்கள் தண்ணீர் கேட்ட் போதே கைத்தடியால் பாறையில் அடிக்கவில்லை. அல்லாஹ்விடம் இருந்து கட்டளை வந்தால்தான் அற்புதம் நடக்கும் என்று அவர்கள் விளங்கி வைத்து இருந்தார்கள்.

இதைப் பின்வரும் வசனங்கள் தெளிவாக விளக்குகின்றன.

மூஸா, தமது சமுதாயத்திற்காக (நம்மிடம்) தண்ணீர் வேண்டிய போது "உமது கைத்தடியால் அந்தப் பாறையில் அடிப்பீராக!'' என்று கூறினோம். உடனே அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த்துறையை அறிந்து கொண்டனர். "அல்லாஹ் வழங்கியதை உண்ணுங்கள்! பருகுங்கள்! பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!'' (என்று கூறினோம்)

திருக்குர்ஆன் 2:60

கையில் கைத்தடி இருந்தும் தேவையான நேரத்தில் அதைப் போட்டு மூஸா நபி பாம்பாக ஆக்கவில்லை. தேவையான நேரத்தில் அதைப் போட்டு கடலைப் பிளக்கவில்லை. தேவையான நேரத்தில் அதைப் பாறையில் அடித்து நீரூற்றை வெளிப்படுத்தவில்லை. அல்லாஹ்வின் கட்டளை வந்ததால் தான்  இது நிகழ்ந்தது என்று தெளிவாக சொல்லப்பட்டு உள்ளது.

சூனியக்காரன் சூனியம் செய்யும் போது அது பலிப்பதற்கு அல்லாஹ்விடம் இருந்து அவனுக்கு வஹீ வரும் என்று இவர்கள் சொல்கிறார்களா?

தவ்ஹீதை நிலைநாட்டுவதற்கு காட்டிய அற்புதங்களை ஷிர்க்கை நியாயப்படுத்துவதற்காக காட்டுகின்றார்கள் என்பது தெளிவாகிறது.

ஈஸா நபியவர்கள் இறந்தவர்களை உயிப்பித்தல் உள்ளிட்ட பல அற்புதங்களைச் செய்தார்கள். இது பற்றி அல்லாஹ் கூறும் போது  எனது அனுமதியுடன் தான் இது நடந்தது என்றும், ஈஸா நபியால் நடக்கவில்லை என்றும் சொல்லிக் காட்டுகிறான்

இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (ஈஸாவை அனுப்பினான்.) "உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் விருப்பப்படி அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் விருப்பப்படி பிறவிக் குருடையும்,  குஷ்டத்தையும் நீக்குவேன்; இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்கு தக்கசான்று உள்ளது'' (என்றார்)

திருக்குர்ஆன் 3:49

"மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட்கொடையையும், ரூஹுல்குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களிடம் நீர் பேசினீர்! உமக்கு வேதத்தையும்,  ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் நான் கற்றுத் தந்ததையும் எண்ணிப் பார்ப்பீராக! என் விருப்பப்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி அது பறவையாக மாறியதையும், என் விருப்பப்படி பிறவிக் குருடரையும் வெண்குஷ்டமுடையவரையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இறந்தவர்களை என் விருப்பப்படி  (உயிருடன்) வெளிப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர்! அப்போது "இது தெளிவான சூனியமேயன்றி வேறில்லை'' என்று அவர்களில் (ஏகஇறைவனை) மறுப்போர் கூறிய போது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக!'' என்று அல்லாஹ் (ஈஸாவிடம்) கூறியதை நினைவூட்டுவீராக!

திருக்குர்ஆன் 5:110

மக்கள் கேட்கும் போதெல்லாம் அற்புதங்களை நபிமார்கள் செய்ததும் இல்லை. அல்லது அவர்களே ஆசைப்படும் போதெல்லாம் அற்புதங்களைச் செய்ததும் இல்லை.

சாமிரி செய்தது, தஜ்ஜால் செய்ய இருப்பது ஆகியவை அல்லாஹ்வின் செயல்பாடுக்ள் போல் உள்ளனவே அவையும் இணை கற்பித்தலா என்றும் இவர்கள் கேள்வி கேட்கின்றார்கள். அதை நாளை பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ்

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner