Friday, December 5, 2014

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் - தொடர் 3 - பி.ஜே

திருக்குர்ஆனுடன் மோதும் வகையில் அமைந்த இன்னும் சில ஹதீஸ்களைப் பார்க்கலாம்.

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع (8/ 127(

7231 - حَدَّثَنِى سُرَيْجُ بْنُ يُونُسَ وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ قَالاَ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِى إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ عَنْ أَيُّوبَ بْنِ خَالِدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَافِعٍ مَوْلَى أُمِّ سَلَمَةَ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ أَخَذَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- بِيَدِى فَقَالَ « خَلَقَ اللَّهُ عَزَّ وَجَلَّ التُّرْبَةَ يَوْمَ السَّبْتِ وَخَلَقَ فِيهَا الْجِبَالَ يَوْمَ الأَحَدِ وَخَلَقَ الشَّجَرَ يَوْمَ الاِثْنَيْنِ وَخَلَقَ الْمَكْرُوهَ يَوْمَ الثُّلاَثَاءِ وَخَلَقَ النُّورَ يَوْمَ الأَرْبِعَاءِ وَبَثَّ فِيهَا الدَّوَابَّ يَوْمَ الْخَمِيسِ وَخَلَقَ آدَمَ عَلَيْهِ السَّلاَمُ بَعْدَ الْعَصْرِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فِى آخِرِ الْخَلْقِ وَفِى آخِرِ سَاعَةٍ مِنْ سَاعَاتِ الْجُمُعَةِ فِيمَا بَيْنَ الْعَصْرِ إِلَى اللَّيْلِ ».

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து கூறினார்கள்: கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் சனிக்கிழமை பூமியைப் படைத்தான். பூமியிலே ஞாயிற்றுக்கிழமை மலையைப் படைத்தான். திங்கட்கிழமை மரங்களைப் படைத்தான். செவ்வாய்க்கிழமை உலோகங்களைப் படைத்தான். புதன்கிழமை ஒளியைப் படைத்தான். வியாழக்கிழமை பூமியிலே உயிரினங்களை பரவச் செய்தான். வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் வெள்ளிக்கிழமையின் கடைசி நேரமான அஸர் மற்றும் இரவுக்கு மத்தியில் கடைசி படைப்பாக ஆதமைப் படைத்தான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (4997)


முஸ்லிம் என்ற நூலில் இடம் பெற்றிருக்கும் இந்தச் செய்தியில் ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொன்றைப் படைத்து மொத்தம் ஏழு நாட்களில் அல்லாஹ் இந்த உலகத்தைப் படைத்ததாக உள்ளது.

ஆனால் திருக்குர்ஆனின் கீழ்க்கண்ட வசனங்களில் உலகம் ஆறு நாட்களில் படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்.

திருக்குர்ஆன் 7:54

உங்கள் இறைவன் அல்லாஹ்வே. அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்.

திருக்குர்ஆன் 10:3

"உங்களில் அழகிய செயல்பாடுகள் உள்ளவர் யார்?' என்பதைச் சோதிப்பதற்காக அவனே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்.

திருக்குர்ஆன் 11:7

அவனே வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்.

திருக்குர்ஆன் 25:59

வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் அல்லாஹ்வே ஆறு நாட்களில் படைத்தான்.

திருக்குர்ஆன் 32:4

வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எந்தக் களைப்பும் ஏற்படவில்லை.

திருக்குர்ஆன் 50:38

வானங்களையும், பூமியையும் அவனே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

திருக்குர்ஆன் 57:4


இந்த வசனங்களுக்கு மாற்றமாக மேற்கண்ட ஹதீஸ் அமைந்துள்ளது. ஏழு நாட்களில் உலகம் படைக்கப்பட்டதாகக் கூறுவதுடன் அதில் சொல்லப்படும் விபரங்களும் மேற்கண்ட வசனங்களுக்கு முரணாக அமைந்துள்ளன.

திருக்குர்ஆனுடன் மோதுவதால் திருக்குர்ஆனுக்கு விளக்கம் சொல்ல வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறி இருக்க மாட்டார்கள்; இது முஸ்லிம் நூலில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் இது பொய்யான இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று நாம் முடிவுக்கு வர வேண்டும்.

நாம் மட்டும் தான் இப்படி சொல்கிறோம் என்று கருதக் கூடாது. தலை சிறந்த இஸ்லாமிய அறிஞரான இப்னு தைமியா அவர்களும் இது ஏற்கத்தக்க ஹதீஸ் அல்ல என்று கூறுகிறார்கள்.

 وَلَوْ كَانَ أَوَّلُ الْخَلْقِ يَوْمَ السَّبْتِ وَآخِرُهُ يَوْمَ الْجُمُعَةِ لَكَانَ قَدْ خُلِقَ فِي الْأَيَّامِ السَّبْعَةِ وَهُوَ خِلَافُ مَا أَخْبَرَ بِهِ الْقُرْآنُ مَعَ أَنَّ حُذَّاقَ أَهْلِ الْحَدِيثِ يُثْبِتُونَ عِلَّةَ هَذَا الْحَدِيثِ مِنْ غَيْرِ هَذِهِ الْجِهَة

படைப்பின் துவக்கம் சனிக்கிழமையாகவும் படைப்பின் முடிவு வெள்ளிக்கிழமையாகவும் இருந்தால் ஏழு நாட்களிலும் படைத்தல் நிகழ்ந்துள்ளது என்று ஆகிறது. இது குர்ஆன் கூறுவதற்கு முரணாக அமைந்துள்ளது. இது அல்லாத நுணுக்கமான குறைபாடும் இதில் உள்ளதாக ஹதீஸ் கலை மேதைகள் கூறியுள்ளனர்

ஆதாரம்: இப்னு தைமியா அவர்களின் பதாவா எனும் நூல்.

ஆறு நாட்களில் உலகம் படைக்கப்பட்டது என்று கூறும் குர்ஆன் வசனங்களை மறுத்தால் தான் ஏழு நாட்களில் உலகம் படைக்கப்பட்டது என்ற இந்தச் செய்தியை ஏற்றுக் கொள்ள முடியும்.


எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் சொல்லியிருக்கவே மாட்டார்கள் என்று மறுக்கின்றோம்.

இதுபோல் அமைந்த இன்னொரு ஹதீஸைக் காணுங்கள்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்களது வீட்டிற்குச் செல்வது வழக்கம். அவர் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களின் துணைவியராவார். அவ்வாறே ஒரு நாள் (பகலில்) நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்றபோது அவர் நபி (ஸல்) அவர்களுக்கு உணவளித்த பின் அவர்களுக்குப் பேன் பார்த்து விடலானார். அப்போது நபி (ஸல்) அவர்கள் உறங்கி விட்டார்கள். பிறகு சிரித்தபடி விழித்தார்கள்.

7002 தொடர்ந்து உம்மு ஹராம் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே! ஏன் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், என் சமுதாயத்தாரில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் இந்தக் கடலின் மத்தியில் பயணம் செய்யும் புனிதப் போராளிகளாக எனக்குக் காட்டப்பட்டனர். அவர்கள் கட்டில்களில் வீற்றிருக்கும் மன்னர்களாக அல்லது மன்னர்களைப் போன்று இருந்தார்கள் என்று கூறினார்கள். உடனே நான், அல்லாஹ்வின் தூதரே! என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும் படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று சொன்னேன். அப்போது எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். பிறகு (மீண்டும்) தமது தலையைக் கீழே வைத்து (உறங்கி)விட்டுப் பிறகு சிரித்தபடி விழித்தெழுந்தார்கள். அப்போதும் நான், ஏன் சிரிக்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், என் சமுதாயத்தாரில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் புனிதப் போர் புரிபவர்களாக எனக்குக் காட்டப்பட்டார்கள் என்று முன்பு போலவே பதிலளித்தார்கள். அதைக் கேட்டு நான், அல்லாஹ்வின் தூதரே! என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் நீங்கள் (கடல் பயணம் செய்து அறப் போருக்கு) முதலாவதாகச் செல்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறியபடியே உம்மு ஹராம் (ரலி) அவர்கள் முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களின் (ஆட்சிக்) காலத்தில் கடல் பயணம் மேற்கொண்டார்கள். பின்பு அவர்கள் கடலிலிருந்து புறப்பட்ட போது தமது வாகனத்திலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்டார்கள்.

நூல் : புகாரி 7001, 7002

இந்த ஹதீஸ் சொல்லும் செய்தி என்ன?

நபிகள் நாயகம் இரத்த சம்மந்தமான உறவோ பால்குடி உறவோ இல்லாத அந்நியப் பெண் வீட்டுக்குச் சென்றுள்ளார்கள் என்று இச்செய்தி கூறுகிறது. சென்றது மட்டுமில்லாமல் அந்தப் பெண் பேன் பார்த்து ஒருவரை ஒருவர் தொடும் அளவுக்கு நெருக்கமாக இருந்துள்ளதாகவும் இச்செய்தி கூறுகிறது. மேலும் அங்கேயே படுத்து உறங்கியதாகவும் இச்செய்தியில் கூறப்படுகிறது. அவர்கள் திடீரென விழித்து சிரித்த போதெல்லாம் அந்தப் பெண்மணி நபிகள் நாயகத்தின் அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டே இருந்துள்ளார் என்ற கருத்தும் இதில் அடங்கியுள்ளது.

மேலும் இது ஒரு நாள் மட்டும் நடந்தது அல்ல. அடிக்கடி அந்தப் பெண்மணியின் வீட்டுக்கு நபியவர்கள் செல்வது வழக்கம் என்றும் இச்செய்தியில் கூறப்படுகிறது.

இது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்து இருப்பார்களா? அவர்கள் அன்னியப் பெண்கள் விஷயத்தில் எந்த அளவு விலகி இருப்பார்கள் என்பது ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பைஅத் செய்ய வரும் போது பெண்கள் கையை நீட்டினால் கூட தொட மாட்டார்கள் எனும் அளவுக்கு பேணுதலாக இருந்துள்ளனர். அவர்களின் நற்பண்புகளை நம்பும் எந்த முஸ்லிமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படி நடந்து இருப்பார்கள் என்று நம்ப முடியுமா? இதை நம்பினால் நபிகள் நாயகம் அவர்களின் அப்பழுக்கில்ல்லாத பரிசுத்த வாழ்வை நம்ப முடியாது போகும். அது போன்ற ஹதீஸ்களை நிராகரிக்கும் நிலை ஏற்படும்.

திருக்குர்ஆன் கற்பிக்கும் ஒழுக்க வாழ்வுக்கான கட்டளைகளையும் விதிகளையும் நபியவர்களே மீறியுள்ளார்கள் என்ற கருத்தும் இதனால் ஏற்படுகிறது.

(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 24:30

அன்னியப் பெண்கள் முன்னால் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளூமாறு கட்டளையிடும் மார்க்கத்தில் அன்னியப் பெண் பேன் பார்க்கும் அளவுக்கும் அவர்கள் வீட்டிலேயே அவர்கள் முன்னிலையில் படுத்து உறங்குவதற்கும் அனுமதி இருக்குமா?

திருக்குர்ஆன் ஒழுக்கத்தைக் கற்றுத் தந்த அளவிற்கு வேறு எந்த வேத நூல்களிலும் நீங்கள் பார்க்க முடியாது. ஆண்கள் ஆண்கள்தான், பெண்கள் பெண்கள்தான் என்ற அடிப்படையை அடித்துச் சொன்ன மார்க்கம் இஸ்லாம்.

அன்னியப் பெண் பேன் பார்த்து விடும் அளவுக்கு நபியவர்கள் நடந்து கொண்டார்கள் என்று புகாரியில் இடம் பெற்றாலும் அது கட்டுக்கதையாகத் தான் இருக்க முடியும். நபிகள் நாயகத்தின் மகத்தான ஒழுக்கத்தைப் பார்த்து இஸ்லாத்தை ஏற்ற மக்கள் இது போன்ற செயலைப் பார்த்தால் அவர்களை விட்டு விலகி இருப்பார்கள்.

மேலும் நபிகள் நாயகத்தைக் குறை கூறி இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்க யூதர்கள் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டார்கள். நபிகள் நாயகம் அவர்கள் இது போல் நடந்து இருந்தால் இதை வைத்தே நபிகள் நாயகத்தின் நற்பெயரைக் கெடுத்து இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து இருப்பார்கள். இஸ்லாத்தின் எந்த ஒரு எதிரியும் இது குறித்து விமர்சனம் செய்ததாக எந்தக் குறிப்பும் இல்லை. எனவே இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்பது மேலும் உறுதியாகின்றது.

சுயநலனில்லாத அவர்களின் பரிசுத்த வாழ்க்கையைக் கண்டுதான்  அம்மக்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள்.

'நூறு சதவிகிதம் இவரை நம்பலாம்' என்று நபிகள் நாயகத்தின் மீது அவர்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை தான் இஸ்லாத்தை அவர்கள் ஏற்பதற்கு முதல் காரணமாக இருந்தது.

எந்த ஒரு மனிதனும் தனது கடந்த கால வாழ்க்கையை மக்களுக்கு நினைவூட்டி என்னை நம்புங்கள் எனக் கூற முடியாது. ஏனெனில் எவரது கடந்த கால வாழ்க்கையும் முழு அளவுக்குத் தூய்மையாக இருக்க முடியாது. மகான்களேயானாலும் அவர்களின் இப்போதைய நிலையைத் தான் பார்க்க வேண்டுமே தவிர கடந்த காலத்தைப் பார்க்கக் கூடாது என்று மக்கள் நினைக்கின்றனர்.

தாம் இறைத்தூதர் என்பதற்கு தமது கடந்த கால வாழ்க்கையையே சான்றாகக் காட்டும் தைரியம் நபிகள் நாயகம் அவர்களுக்கு மட்டுமே இருந்தது.

இதை முன் வைத்தே இறைத்தூதர் என்பதை நிலை நாட்டுமாறு திருக்குர்ஆனும் அவர்களுக்குக் கட்டளையிட்டது.

'அல்லாஹ் நாடியிருந்தால் இதை உங்களுக்குக் கூறியிருக்க மாட்டேன். அவனும் இதை உங்களுக்கு அறிவித்திருக்க மாட்டான். உங்களிடம் இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன். விளங்க மாட்டீர்களா?' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன் 10:16 )

இறைத்தூதராக ஆவதற்கு முன்னர் பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்த நபியவர்கள் இறைத்தூதராக ஆன பின்னர் அதைவிட பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

ஆனால் மேற்கண்ட செய்தி இந்த அடிப்படையைத் தகர்த்து சுக்கு நூறாக்கி விடுகிறது.

அறிவிப்பாளர்கள் சரியாகத்தானே இருக்கின்றார்கள் என்று கூறி இதற்கும் முட்டுக் கொடுக்கும் அறிஞர்கள் உள்ளனர். அறிவிப்பாளர் நல்லவர் என்று பார்க்கிறார்களே தவிர அல்லாஹ்வின் தூதருடைய கன்னியத்துக்கு கடுகளவும் மதிப்பு கொடுக்க மறுக்கிறார்கள். 

இந்தப் பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மஹ்ரமான உறவினராக இருந்திருக்கலாம் என்றும், பால்குடித் தாயாக இருந்திருக்கலாம் என்றும்,  முட்டுக் கொடுக்கின்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பால்குடித் தாய்மார்கள் யார் என்று வரலாற்றில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பட்ட்டியலில் உம்மு ஹராம் என்ற பெயரே பதிவு செய்யப்படவில்லை.

இந்தப் பெண்மணி நபிகள் நாயகம் அவர்களின் காலத்திற்கு 40  வருடங்கள் கழித்து இறக்கின்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்)  அவர்களுக்கு பால் கொடுத்தவராக இந்தப் பெண்மணி இருந்தால் அந்தப் பெண்மணிக்கு நபியை விடக் குறைந்தது பதினைந்து வயதாவது அதிகமாக இருந்திருக்க வேண்டும். முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் கடற்படையில் சேர்ந்து யுத்தம் செய்யப் போகின்றார்கள் என்றால் அந்தப் பெண்மணிக்கு நபியவர்களை விட வயது குறைவாக இருந்திருக்க வேண்டும் என்பதைக் கூட விளங்காமல் பால்குடித் தாயார் என்று கூறுகிறார்கள்.

நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.

திருக்குர்ஆன் 68:4

இந்த செய்தியில் சொல்லப்படுவது மகத்தான நற்குணம் ஆகுமா?

நபி அவர்களின் குணங்களையே இந்தச் செய்தி தவறாக சித்தரித்தாலும் சிலர் முட்டுக் கொடுத்து சரிதான் என்று வாதிடுகின்றனர்.

ஆனால் நாம் இந்தச் செய்தி இஸ்லாத்திற்கே விரோதமாக இருப்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படி செய்திருக்க மாட்டார்கள் என்று நாம் மறுத்தாக வேண்டும்.

நீங்கள் பெரிய பெரிய ஆலிம்களாகச் சிந்திக்க வேண்டாம். மூஃமின்களாக சிந்தியுங்கள். இறையச்சமுடையவர்களாக சிந்தியுங்கள். இது போன்ற செய்தியை ஆதரித்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது பழி சுமத்தியது போல் ஆகுமா? ஆகாதா? அல்லாஹ்வுடைய தூதர் இப்படி நடந்து கொள்வார்களா?

இது போல் மக்களை நடந்து கொள்ளச் சொல்லி ஃபத்வா கொடுக்கத் தயாராக இல்லாதவர்கள் நபி அவர்கள் செய்தார்கள் என்று மட்டும் சொல்வது சரியா?

புகாரி இமாம் அவர்கள் மிகப் பெரிய அறிஞர் ஆனால் அவரும் மனிதரே. மனிதருக்கு தவறு வரத்தான் செய்யும்.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner