Wednesday, July 18, 2012

நோன்பின் சட்டங்கள் - தொடர் 13 - பி.ஜே

நோன்பை முறிக்கும் செயல்களை மறதியாகச் செய்தல்

நோன்பை முறிக்கும் காரியங்களை ஒருவர், தான் நோன்பு நோற்றுள்ள நினைவு இல்லாமல் செய்து விடலாம். பதினோரு மாதப் பழக்கத்தின் காரணமாக, தாகம் எடுத்தவுடன் தண்ணீரைக் குடித்து விடுவது உண்டு. குடித்தவுடன் அல்லது பாதி குடித்தும் குடிக்காமலும் உள்ள நிலையில் நோன்பு நோற்ற நினைவு வரும். இந்த நோன்பின் கதி என்ன? மறதியாகச் சாப்பிட்டால் அல்லது குடித்தால் எப்போது நினைவு வருகிறதோ உடனே அதை நிறுத்திக் கொண்டு விட்டால் அவரது நோன்புக்கு எள்ளளவும் குறைவு ஏற்படாது. நோன்பாளியாகவே அவர் தனது நிலையைத் தொடரலாம்.

ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது மறதியாகச் சாப்பிட்டாலோ பருகினாலோ அவர் தனது நோன்பை முழுமையாக்கட்டும். ஏனெனில் அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும், பருகவும் அளித்துள்ளான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1933, 6669

அவர் களாச் செய்ய வேண்டியதில்லை என தாரகுத்னீயில் இடம் பெற்ற ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.

எனவே மறதியாகச் சாப்பிட்டவர்கள், பருகியவர்கள், நினைவு வந்ததும் உண்ணுவதையும், பருகுவதையும் நிறுத்தி விட்டு நோன்பாளிகளாக இருந்து கொள்ள வேண்டும். அது முழுமையான நோன்பாக அமையும். நோன்பு நோற்றவர் மறதியாக உடலுறவு கொள்வது சாத்தியக் குறைவானதாகும். இது இருவர் சம்பந்தப்பட்டதாக இருப்பதால் ஒருவருக்கு மறதி வந்தால் மற்றவர் நினைவு படுத்திவிட முடியும். ஆனாலும் உண்மையிலேயே இருவருக்கும் மறதி ஏற்பட்டு விட்டால் இருவருக்கும் இது பொருந்தக் கூடியது தான்.

மனைவியுடன் நோன்பாளி நெருக்கமாக இருப்பது

நோன்பு நோற்பவர் பகல் காலங்களில் உடலுறவு கொள்ளாமல் விலகியிருப்பதுடன் உடலுறவுக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கைகளையும் தவிர்த்துக் கொள்வது சிறந்ததாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது தமது மனைவியரை முத்தமிடுவார்கள்; கட்டியணைப்பார்கள். அவர்கள் தம் உணர்வுகளை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தனர். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 1927

நோன்பாளி கட்டியணைப்பது பற்றி ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். மற்றொருவர் வந்து கேட்ட போது அவருக்கு அனுமதி மறுத்தார்கள். அனுமதி வழங்கப்பட்டவர் முதியவராகவும், அனுமதி மறுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தனர். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: அபூதாவூத் 2039

இதில் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது தான் முக்கியமான அளவுகோலாகும். முத்தமிடுவதில் ஆரம்பித்து உடலுறவில் போய் முடிந்து விடும் என்று யார் தன்னைப் பற்றி அஞ்சுகிறாரோ அத்தகையவர்கள் பகல் காலங்களில் அதைத் தவிர்த்துக் கொள்வது அவசியம்.

குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்பது இல்லறத்தில் ஈடுபட்டு, குளிப்புக் கடமையான நிலையில் ஸஹர் செய்வதற்காக எழக்கூடியவர்கள் குளித்து விட்டுத் தான் ஸஹர் செய்ய வேண்டுமா? இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறை என்ன?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இல்லறத்தில் ஈடுபட்டு விட்டுக் குளிக்காமல் நோன்பு நோற்பார்கள். சுபுஹ் வேளை வந்ததும் தொழுகைக்காகக் குளிப்பார்கள் என்று கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் பல உள்ளன. ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹு நேரத்தை அடைவார்கள். (அந்த நிலையில்) நோன்பும் நோற்பார்கள். அறிவிப்பவர்கள்: ஆயிஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி) நூல்: புகாரி 1926, 1930, 1932

தொழுகையை நிறைவேற்றத் தான் குளிப்பது அவசியமே தவிர நோன்புக்காகக் குளிக்க வேண்டியதில்லை. குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்று விட்டு சுப்ஹு தொழுகைக்காகக் குளிக்கலாம்.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner