Monday, July 16, 2012

நோன்பின் சட்டங்கள் - தொடர் 11 - பி.ஜே

நோன்பை முறிக்கும் செயல்கள்

சுபுஹ் முதல் மஃரிப் வரை உண்ணாமல் இருப்பது, பருகாமல் இருப்பது, இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பது ஆகிய கட்டுப்பாடு தான் நோன்பு எனப்படுகிறது.

நோன்பாளிக்கு இந்த மூன்றைத் தவிர வேறு எதையும் செய்யக் கூடாது என்று தடை இல்லை. இம்மூன்று காரியங்களில் எதைச் செய்தாலும் நோன்பு முறிந்து விடும்.

இவை தவிர நோன்பாளி கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மீக ஒழுங்குகளும் உள்ளன. அவற்றையும் கடைப்பிடிக்க வேண்டும். பொய்யான பேச்சையும், பொய்யான (தீய) நடவடிக்கையையும் யார் கைவிடவில்லையோ அவர் பசித்திருப்பதும், தாகமாக இருப்பதும் அல்லாஹ்வுக்குத் தேவையில்லாத ஒன்று என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1903, 6057

எதை அல்லாஹ் தேவையில்லை என்று கூறினானோ அதற்கு அல்லாஹ் எந்தக் கூலியையும் தர மாட்டான். எந்த இலட்சியத்தை அடைவதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டதோ அந்த இலட்சியத்தை மறந்து விட்டுப் பசியோடும், தாகத்தோடும் இருப்பதில் பயனேதும் இருக்க முடியாது.

பொதுவாகவே பொய்கள், புரட்டுகள் மற்றும் தவறான நடவடிக்கைகளில் இருந்து விலகியிருக்க வேண்டும். ஆனால் நோன்பின் போது கண்டிப்பாக அவற்றிலிருந்து அதிகமாக விலகிக் கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காமல் இவற்றால் நோன்பு முறியாது என்று ஃபத்வாக்கள் அளித்து வந்ததால் தான் முஸ்லிம்களிடம் நோன்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

நோன்பு நோற்றுக் கொண்டு சினிமாக் கொட்டகைகளில் தவம் கிடப்பது, நோன்பு நோற்றுக் கொண்டு கலப்படம், மோசடி போன்ற செயல்களில் ஈடுபடுவது, பொய், புறம் பேசுவது ஆகியவற்றில் சர்வ சாதாரணமாக முஸ்லிம்கள் ஈடுபடுகின்றனர். பசியோடு இருப்பது மட்டும் தான் இறைவனுக்குத் தேவை என்று எண்ணுகின்றனர். இந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

நம்முடன் சண்டைக்கு வருபவர்களிடம் பதிலுக்குச் சண்டை போட பொதுவாக அனுமதி உள்ளது. நம்மிடம் எந்த அளவுக்கு ஒருவர் வரம்பு மீறுகிறாரோ அந்த அளவுக்கு வரம்பு மீறவும் அனுமதி இருக்கிறது. நோன்பாளி இந்த அனுமதியைக் கூட பயன்படுத்தக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளார்கள்.

நோன்பு நோற்றிருக்கும் போது உங்களிடம் ஒருவர் சண்டைக்கு வந்தால் – அறியாமையாக நடந்து கொண்டால், ஏசினால், நான் நோன்பாளி எனக் கூறிவிடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)நூல்: புகாரி 1894, 1904, 

பொதுவாக அனுமதிக்கப்பட்ட சண்டையையே தவிர்த்து விட வேண்டும் என்றால் நோன்பில் எவ்வளவு பக்குவமாக இருக்க வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

சாதாரண நாட்களில் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் கிடந்து ஹராமான காட்சிகளைப் பார்ப்பவர்கள் நோன்பு நோற்ற நிலையிலாவது அதிலிருந்து விடுபட வேண்டும். நமது நோன்பைப் பாழாக்கி விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner