Thursday, February 16, 2012

மறுமையில் கஃபா இடித்து தரைமட்டமாக்கப்படுமா?


கேள்வி : மறுமையின் பத்தாவது அடையாளமாக கஅபா இடித்துத் தரைமட்டமாக்கப்படும் என்பது உண்மையா? இதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் உள்ளதா? ஹஸன் பரீத், திருச்சி 

பதில் : நாங்கள் உரையாடிக் கொண்டிருக்கும் போது எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். நீங்கள் என்ன உரையாடிக் கொண்டிருக்கின்றீர்கள்? என்று கேட்டார்கள். இறுதி நாளைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம் என்ற நாங்கள் கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அதற்கு முன்னால் பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அது ஏற்படாது, 1. புகை, 2. தஜ்ஜால், 3. அதிசய மிருகம் 4. சூரியன் மேற்கிலிருந்து உதித்தல் 5. ஈஸா (அலை) இறங்குதல் 6. யஃஜூஜ் மஃஜூஜ் 7,8,9. கிழக்கு, மேற்கு மற்றும் அரபிய தீபகற்பத்தில் ஏற்படும் மூன்று பூகம்பங்கள் 10. இவற்றில் இறுதியாக யமனிலிருந்து மக்களை அவர்களது மறுமையின் பக்கம் துரத்திச் செல்லும் நெருப்பு ஆகியவை ஆகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஹுதைஃபா பின் உஸைதுல் கிஃபாரி (ரலி) நூல் : முஸ்லிம் 5162

கியாமத் நாளின் பத்து அடையாளங்களைக் குறிப்பிடும் ஹதீஸ் இது தான். இந்தப் பத்து அடையாளங்களில் கஅபா இடிக்கப்படுவது குறிப்பிடப் படவில்லை. எனினும் கஅபா இடிக்கப்படும் என்று தனியாக ஹதீஸ் உள்ளது. 

"(வெளிப்பக்கமாக) வளைந்த கால்களையுடைய கருப்பு நிறத்தவர்கள் ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி கஅபாவை உடைப்பதை நான் பார்ப்பது போன்று இருக்கின்றது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புகாரி 1595

"அபிஸீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் கஅபாவை இடித்து பாழ்படுத்துவார்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 1591, 1596

இந்த ஹதீஸ்களில் கியாமத் நாள் வரும் போது கஅபா இடிக்கப்படும் என்று கூறப்படாவிட்டாலும் பின்வரும் ஹதீஸ் அந்த விளக்கத்தைத் தருகின்றது. 

"யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும். உம்ராவும் செய்யப்படும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : புகாரி 1593

கியாமத் நாளின் பத்து அடையாளங்களில் ஒன்றான யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் தோன்றிய பிறகு தான் கஅபா இடிப்பு நடைபெறும் என்பதால் இதுவும் கியாமத் நாளின் அடையாளங்களில் ஒன்று தான் என்பதை அறிய முடிகின்றது. 

- பி.ஜே

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner