Saturday, February 25, 2012

ஜின்களும்,ஷைத்தான்களும் - சகோ. அப்பாஸ் அலி - தொடர் 11

மனிதனாக உருமாறுவானா?

ஷைத்தான் மனித வடிவில் உருவெடுப்பான் என்று கூறுபவர்கள் கீழ்கண்ட ஹதீஸை ஆதாரமாக காட்டுவார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் ரமளானுடைய (ஃபித்ரா)  ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள்.  அப்போது ஒருவன் இரவில்  வந்து உணவுப் பொருட்களை அள்ளலானான்.  அவனை நான் பிடித்து, “உன்னை நபி (ஸல்)  அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்!” என்று கூறுகிறேன்.  அதற்கவன், “நான் ஒரு ஏழை! எனக்குக் குடும்பம் இருக்கிறது; கடும் தேவையும் இருக்கிறது!” என்று கூறினான்.  அவனை நான் விட்டுவிட்டேன்.  விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள், “அபூஹுரைராவே! நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! தான் கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தனக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவன் முறையிட்டான்; ஆகவே, இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்!” என்றேன்.  

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நிச்சயமாக அவன் பொய் சொல்லியிருக்கிறான்! மீண்டும் அவன் வருவான்!” என்றார்கள்.  “மீண்டும் வருவான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நம்பி அவனுக்காக (அவனைப் பிடிப்பதற்காகக்) காத்திருந்தேன்.  அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கிய போது அவனைப் பிடித்தேன்.  “உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்!” என்று கூறினேன்.  அதற்கவன், “என்னை விட்டுவிடு! நான் ஒரு ஏழை! எனக்கு குடும்பமிருக்கிறது; இனி நான் வரமாட்டேன்!” என்றான்.  அவன்மேல் இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்.  விடிந்ததும், நபி (ஸல்) அவர்கள் “அபூஹுரைராவே! உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?” என்று கேட்டார்கள். 

நான், அல்லாஹ்வின் தூதரே! அவன் (தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான்; ஆகவே, அவன் மேல் இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்!” என்றேன். நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான்; திரும்பவும் உம்மிடம் வருவான்!” என்றார்கள்.  

மூன்றாம் தடவை அவனுக்காகக் காத்திருந்தபோது, அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கினான்.  அவனைப் பிடித்து, “உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்( (ஒவ்வொரு முறையும்) “இனிமேல் வரமாட்டேன்!’ என்று சொல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய்! என்று கூறினேன். 

அதற்கவன், “என்னை விட்டுவிடும்! அல்லாஹ் உமக்குப் பயளிக்கக்கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்!” என்றான்.   அதற்கு நான், “அந்த வார்த்தைகள் என்ன?” என்று கேட்டேன்.  “நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்சியை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஓதும்! அவ்வாறு செய்தால், விடியும்வரை அல்லாஹ்வின் தரப்பிலிலிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார்; ஷைத்தானும் உம்மை நெருங்க மாட்டான்! என்றான்.  அவனை நான் விட்டுவிட்டேன்.  விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள் “நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்; அதனால்  அவனை விட்டுவிட்டேன்!’என்றேன். அந்த வார்த்தைகள் என்ன? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்சியை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதும்! அவ்வாறு ஓதினால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிலிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற(வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார்; ஷைத்தானும் உம்மை நெருங்க மாட்டான்!” என்று என்னிடம் அவன் கூறினான்” எனத் தெரிவித்தேன். -நபித் தோழர்கள் நன்மையான(தைக் கற்றுக் கொண்டு செயல்படுத்துவ)தில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தனர்- அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும்  உம்மிடம் உண்மையைத்தான் அவன் சொல்லியிருக்கின்றான்! மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். தெரியாது! என்றேன். அவன்தான் ஷைத்தான்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  நூல் : புகாரி (2311)

அபூஹுரைரா (ரலி) அவர்களிடத்தில் வந்த மனிதனை நபி (ஸல்) அவர்கள் ஷைத்தான் என்று கூறி இருக்கிறார்கள். எனவே ஷைத்தான் மனித வடிவில் உருவெடுப்பான் என்றக் கருத்தை இந்த ஹதீஸ் தருகிறது என்று சிலர் வாதிடுகிறார்கள்.

கெட்ட செயலை செய்பவர்களையும் கெட்ட குணமுள்ளவர்களையும் ஷைத்தான் என்று குறிப்பிடும் போங்கு குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் இடம்பெற்றுள்ளது. இந்த அடிப்படையை ஆதாரங்களோடு விளங்கிக்கொண்டால் மேற்கண்ட ஹதீஸையும் இது போன்று அமைந்த இன்ன பிற ஹதீஸ்களையும் சரியான பொருளில் விளங்கிக்கொள்ள முடியும்.

கெட்ட குணம் மற்றும் கெட்ட செயல் உள்ளவர்களுக்கு ஷைத்தான் என்று கூறப்படும்

நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது "நம்பிக்கை கொண்டுள்ளோம்'' எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது "நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே'' எனக் கூறுகின்றனர். அல்குர்ஆன் (2 : 14)

கெட்ட மனிதர்களை ஷைத்தான்கள் என்று அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் குறிப்பிட்டுள்ளான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போது உங்கள் முன்னால் எவராவது நடந்து செல்ல முனைந்தால் அவரைத் தடுங்கள். அவர் (விலகிக் கொள்ள) மறுத்தால் அப்போதும் அவரைத் தடுங்கள். அவர் (மீண்டும் விலக) மறுத்தால் அப்போது அவருடன் சண்டையி(ட்டுத் த)டுங்கள். ஏனெனில், அவன் தான் ஷைத்தான்.  அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)  நூல் : புகாரி (3275)
 
(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "அல்அர்ஜ்' எனுமிடத்தில்  பயணம் செய்துகொண்டிருந்தோம். அப்போது கவிஞர் ஒருவர் கவிதைகளைப் பாடிக்கொண்டு எதிரில் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அந்த ஷைத்தானைப் பிடியுங்கள். ஒரு மனிதருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதைவிடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று'' என்று கூறினார்கள்.  அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)  நூல் : முஸ்லிம் (4548)

தொழுபவரின் குறுக்கே செல்பவரையும் கவிதை பாடித்திரிபவரையும் ஷைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இங்கு சொல்லப்பட்டுள்ள ஷைத்தான் என்ற வார்த்தையை  அதன் நேரடிப் பொருளில் விளங்கமாட்டோம்.

நேரடிப் பொருளில் விளங்கினால் தொழுபவரின் குறுக்கே செல்பவரையும் கவிதை பாடுபவரையும் ஷைத்தான் என்று கூற வேண்டிய நிலை வரும்.  இவர்களிடம் கெட்ட செயல் உள்ளது என்ற அடைப்படையில் தான் இவர்களை ஷைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று எல்லோரும் புரிந்துகொள்கிறோம்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் சொல்லப்பட்ட ஷைத்தான் என்ற வார்த்தையும் இது போன்றே நேரடிப்பொருளில் பயன்படுத்தப்படாமல் கெட்டவன் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. திருடவந்தவனை பொய்யன் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருப்பது இதையே உணர்த்துகிறது.

ஸகாத் பொருளை திருடுவதற்காக வந்தவன் அபூஹுரைரா (ரலி) அவர்களை ஏமாற்றி திருட்டு வேளையில் ஈடுபட்டதால் அவனை ஷைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் உண்மையில் அவன் மனிதனாகத் தான் இருந்தான்.

மனிதர்களின் கண்களுக்குப்படாமல் வாழும் நிலையை ஷைத்தான்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். வந்தது ஷைத்தானாக இருந்தால் அவனை அபூஹுரைரா (ரலி) அவர்களால் பார்த்திருக்க முடியாது.

ஆனால் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அவனை பார்த்ததோடு மட்டுமல்லாமல் அவனை தன் கைகளால் பிடித்தும் கொள்கிறார்கள். வந்தவன் உண்மையான ஷைத்தானாக இருக்கவில்லை. கெட்ட மனிதனாகவே இருந்தான் என்பதை இதன் மூலம் அறியலாம்.

மேலும்  மனிதர்கள் யாரும் பார்க்க முடியாத வகையில் ஷைத்தானால் வர இயலும். இது தான் ஷைத்தான்களின் எதார்த்த தன்மையும் கூட. அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் வந்தவன் உண்மையான ஷைத்தானாக இருந்தால் அவன் அபூஹுரைரா (ரலி) அவர்களின் கண்களுக்குத் தெரியாமல் வந்து திருடிச் சென்றிருப்பான்.

திருடக்கூடியவன் யாரும் கண்டிராத வகையில் திருடிச் செல்லத் தான் விரும்புவான். ஆனால் அவனால் அவ்வாரு செய்ய இயலவில்லை. திருட வந்தவன் அபூஹுரைராவிடம் மாட்டிக் கொண்டு கெஞ்சுவதிலிருந்து அவன் சாதாரண மனிதன் தான் என்பதை சந்தேகமற அறியலாம்.

ஷைத்தான்களின் உணவு முறையும் மனிதர்களின் உணவு முறையும் முற்றிலும் வேறுபட்டதாகும். கால்நடைகளின் சாணங்களும் எலும்புகளும் கரிக்கட்டைகளும் தான் ஜின்களின் உணவு என்று ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது.

அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் வந்தவன் முன்பு கூறிய பொருட்களை திருடுவதற்காக வரவில்லை. மனிதர்களின் உணவாக இருக்கக்கூடிய பொருட்களையே திருடுவதற்காக வந்துள்ளான். வந்தவன் சாதாரண மனிதன் தான் என்பதை இக்கருத்து மேலும் வலுவூட்டுகிறது.

எனவே இந்த செய்தியை வைத்துக்கொண்டு ஷைத்தான் மனித வடிவத்தில் வருவான் என்று வாதிடுவது தவறாகும்.

நாய் வடிவில் வருவானா?
 
அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள், "உங்களில் ஒருவர் (திறந்தவெளியில்) தொழ நிற்கும்  போது தமக்கு முன்னால் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றது இருந்தால் அதுவே அவருக்குத் தடுப்பாக அமைந்துவிடும். சாய்வுக்கட்டை போன்றது இல்லாவிட்டால் கழுதை, பெண் மற்றும் கறுப்புநாய் ஆகியன அவரது (கவனத்தை ஈர்த்து) தொழுகையை முறித்துவிடும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.

உடனே நான், "அபூதர் (ரலிலி) அவர்களே! சிவப்பு நிற நாய், மஞ்சள் நிற நாய் ஆகியவற்றை விட்டுவிட்டுக் கறுப்பு நிற நாயை மட்டுமே குறிப்பிடக் காரணம் என்ன?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "என் சகோதரரின் புதல்வரே! நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் "கறுப்பு நாய் ஷைத்தான் ஆகும்'' என்று கூறினார்கள் என்றார்கள்.  அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்)  நூல் : முஸ்லிம் (882)


ஷைத்தான் நாய் வடிவில் உருமாறுவான் என்று கூறுபவர்கள் மேற்கண்ட ஹதீஸையே ஆதாரம் காட்டுகிறார்கள். கருப்பு நாயை ஷைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை வைத்து ஷைத்தான் நாய் வடிவில் வர முடியும் என்று வாதிடுகிறார்கள்.

ஆனால் உண்மையில் ஷைத்தான் நாயாக உருமாறினான் என்பதற்கோ அல்லது சாதாரண நாயாக இருந்த பிராணியின் உடம்பில் ஷைத்தான் நுழைந்து கொண்டான் என்று கூறுவதற்கோ இந்த செய்தியில் எந்த ஆதாரமும் இல்லை.

தீய குணமுள்ளவைகளுக்கும் கெடுதல் தருபவைகளுக்கும் ஷைத்தான் என்று கூறப்படும் என்பதற்கு முன்பு ஆதாரங்களை கூறியிருக்கிறோம். இந்த அடிப்படையில் தான் இந்த ஹதீஸிலும் கறுப்பு நாயை ஷைத்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மிகவும் கெடுதல் தரக்கூடிய பிராணி என்ற கருத்தில் கூறப்பட்டுள்ளது.

நாய் பாம்பு போன்ற பிராணிகளை நபியவர்கள் ஷைத்தான் என்று குறிப்பிட்டதைப் போல் ஒட்டகங்களையும் ஷைத்தான் என்று குறிப்பிட்டுள்ளார்கள். 

ஒட்டகத் தொழுவத்தில் தொழுவது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத் தொழுவத்தில் தொழாதீர்கள். ஏனென்றால் ஒட்டகங்கள் ஷைத்தான்களாகும் என்று கூறினார்கள். ஆட்டுகளை கட்டுமிடத்தில் தொழுவது பற்றி கேட்கப்பட்ட போது அங்கே நீங்கள் தொழுகலாம். ஏனென்றால் அவை பரகத்தாகும் என்று நபி  (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)  நூல் : அபூதாவுத் (156)


ஒட்டகங்கள் ஆடுகளைப் போன்று அமைதியாக இருக்கும் பிராணி இல்லை. தொழுது கொண்டிருக்கும் போது தொழுகையாளியின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் இடஞ்சல்களை தரும் பிராணி என்பதால் நபியவர்கள் ஒட்டகங்களை ஷைத்தான்கள் என்று கூறியுள்ளார்கள். இந்த அடிப்படையில் தான் நாய் பாம்பு போன்ற பிராணிகளையும் நபியவர்கள் ஷைத்தான் என்று கூறியுள்ளார்கள்.

பொதுவாக நாய்கள் அனைத்துமே கெடுதல் தரக்கூடியவை தான். வேட்டையாடுவதற்கும் சொத்துக்களை பாதுகாப்பதற்கும் இப்பிராணி உதவுவதால் இந்த வகை நன்மைக்காக மட்டும் நாய்களை பயன்படுத்திக்கொள்வதை மார்க்கம் அனுமதிக்கிறது.

ஆனால் கறுப்பு நிற நாய்கள் பார்ப்பதற்கு கொடூரமாகவும் கெடுதல் தரக்கூடியதாகவும் இருப்பதால் நபி (ஸல்) அவர்கள் கறுப்பு நிற நாயை மட்டும் கொல்லுமாறு கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்லும்படி எங்களுக்கு உத்தரவிட்டார்கள். அதையடுத்து, கிராமத்திலிலிருந்து ஒரு பெண் (மதீனாவை நோக்கி) தனது நாயுடன் வந்தால், அதையும் நாங்கள் கொன்றோம். பின்னர் நபி (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்வதற்குத் தடை விதித்தார்கள். மேலும், "கண்களுக்கு மேலே இரு வெண் புள்ளிகள் உள்ள கன்னங்கரிய நாயை (மட்டும்) கொல்லுங்கள். ஏனெனில், அது ஷைத்தான் ஆகும்'' என்று கூறினார்கள்.  அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)  நூல் : முஸ்லிம் (3199)


கறுப்பு நிற நாய் வெறிபிடித்த நாயாக இருப்பதால் அதைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதை பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கலாம். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும்!  அவற்றை இஹ்ராம் கட்டியவர் கொன்றால் அவர் மீது குற்றமில்லை! அவை காகம், பருந்து, தேள், எலிலி, வெறிநாய் ஆகியனவாகும்.  அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)  நூல் : புகாரி (1829)


எனவே கெடுதல் தரக்கூடிய வஸ்த்துக்களுக்கு ஷைத்தான் என்று கூறும் வார்த்தைப் பிரயோகம் ஹதீஸ்களில் காணப்படுவதால் இது போன்ற ஹதீஸ்களை கொண்டு வந்து ஷைத்தான் உருமாறுவான் என்று வாதிடுவதற்கு ஆதாரமாக காட்டடக்கூடாது.

ஷைத்தான் திடீரென நாயாக மாறினான் அல்லது நாயுடைய உடலில் ஷைத்தான் புகுந்து கொண்டதால் அந்த நாய் ஷைத்தானக மாறியது என்று தெளிவாக ஹதீஸில் இருந்தால் மட்டுமே ஷைத்தான் என்பது அதன் நேரடிப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறுவது  சரியாகும்.

உருமாறிய செய்தியோ உடலில் புகுந்த செய்தியோ ஹதீஸில் இல்லை என்கிற போது இவ்வாறு  வாதிடுவது தவறாகும். மாற்று மதத்தினர் தங்கள் கடவுள்களுக்கு இவ்வாறு உருமாறும் தன்மை இருப்பதாக நினைக்கிறார்கள். எனவ ஷைத்தான் இவ்வாறு மாறுவான் என்று நம்புவது ஒரு வகையில் மாற்று மதத்தினர்களின் நம்பிக்கையை ஒத்திருக்கிறது.

பாம்பு வடிவில் வருவானா?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மதீனாவில் இஸ்லாத்தைத் தழுவிய ஜின்கள் சில உள்ளன. உங்களில் ஒருவர், அவற்றில் எதையேனும் இந்தக் குடியிருப்புகளில் (பாம்பின் உருவில்) கண்டால் மூன்று நாட்கள் அவற்றுக்கு அவர் அறிவிப்புச் செய்யட்டும். அதற்குப் பின்னரும் அது அவருக்குத் தென்பட்டால், அதைக் கொன்றுவிடட்டும்! ஏனெனில், அது ஷைத்தான் ஆகும்.  அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)  நூல் : முஸ்லிம் (4504)

ஷைத்தான் பாம்பு வடிவில் வருவான் என்று கூறுபவர்கள் மேற்கண்ட செய்தியை தங்கள் வாதத்திற்கு ஆதாரமாக காட்டுகிறார்கள். ஷைத்தான் மனிதாகவும் நாயாகவும் வர முடியாது என்பதற்கு நாம் என்ன விளக்கங்களை கூறினோமோ அவ்விளக்கங்கள் அனைத்தும் இங்கேயும்  பொருந்திப்போகிறது.

கெடுதல் தருகின்ற வஸ்த்துக்களை ஷைத்தான்கள் என்று குறிப்பிடும் வார்த்தை பிரயோகத்தை  நபி (ஸல்) அவர்கள் கடைபிடித்துள்ளார்கள் என்பதை முன்பே பார்த்தோம். மூன்று நாட்கள் ஆகியும் வீட்டை விட்டு வெளியேறாவிட்டால் அது சாதாரண கெடுதல் தரக்கூடிய நச்சுப்பாம்பு என்பதால் ஷைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதைக்  கொல்லுமாறும் கட்டளையிட்டார்கள்.     

கெடுதல் தராத அல்லது கெட்ட குணமில்லாத உயிரினங்களுக்கு ஷைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எந்த ஆதாரமும் இல்லை. பாம்பு பள்ளி பருந்து தேள் எலி வெறிநாய் ஆகிய மனிதர்களுக்கு இடஞ்சல் தரும் பிராணிகளை நபி (ஸல்) அவர்கள் கொல்லுமாறு கட்டளையிட்டுள்ளார்கள். இவைகளால் கேடு உண்டு என்ற காரணித்திற்குத் தான் நபியவர்கள் இவைகளை கொல்லுமாறு கட்டளையிட்டார்கள்.

கருப்பு நாயும் பாம்பும் உண்மையில் ஷைத்தானாக இருந்தால் இவற்றை நாம் கொல்லும் போது ஷைத்தானையே கொல்கிறோம் என்று அர்த்தமாகிறது. மறுமை நாள் ஏற்படும் வரை இறைவனிடம் ஷைத்தான் சாகாவரம் வாங்கி இருக்கும் போது நம்மால் ஷைத்தானை எவ்வாறு கொல்ல முடியும் என்று சிந்தித்துப் பார்த்தாலும் நாயையும் பாம்பையும் ஷைத்தான் என்று குறிப்பிட்டதின் சரியான பொருளை விளங்கிக்கொள்ளலாம்.

நாமும் நமது பேச்சுக்களில் இந்த முறையை கடைபிடிக்கிறோம். ஒருவரை ஏசும் போது ஷைத்தான் என்று கூறி ஏசும் பழக்கம் நம்மிடம் உள்ளது. ஷைத்தான் என்று ஏசப்பட்டவர் உண்மையில் ஷைத்தான் என்று கேட்பவர்கள் யாரும் புரிந்துகொள்ள மாட்டார்கள். கெட்ட செயல்பாடு உள்ளதை உணர்த்துவதற்காகவே இவ்வாறு சொல்லப்பட்டது என்றே புரிந்துகொள்வோம்.

பூனை வடிவில் வருவானா?

பூனை வடிவில் ஷைத்தான் வருவான் என்றக் கருத்தையும் சிலர் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தொகுத்த ஃபத்ஹுல் பாரி என்ற நூலை மேற்கொள்காட்டுகிறார்கள்.

ஃபத்ஹுல் பாரி என்பது ஹதீஸ்களை பதிவு செய்கின்ற நூல் அல்ல. இமாம் புகாரி அவர்கள் தொகுத்த சஹீஹுல் புகாரிக்கு விரைவுரையாகும். பூனை வடிவில் ஷைத்தான் வந்ததாக எந்த அறிவிப்பாளர் தொடரும் இல்லாமல் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். நாம் தேடிப்பார்த்தவரை இப்படி ஒரு செய்தி ஹதீஸ் நூற்களில் எங்கும் இடம்பெறவில்லை. எனவே ஆதாரமில்லாமல் பூனை வடிவில் ஷைத்தான் வருவான் என்று நம்புவது தவறாகும்.

ஷைத்தானின் சூழ்ச்சிகள்

தீயவற்றை அலங்கரித்துக்காட்டுவான்
 
அவர்களுக்கு நமது வேதனை வந்ததும் அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? மாறாக அவர்களின் உள்ளங்கள் இறுகி விட்டன. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை ஷைத்தான் அவர்களுக்கு  அழகாக்கிக் காட்டினான்.  அல்குர்ஆன் (6 : 43)


அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமக்கு முன் சென்ற சமுதாயங்களுக்குத் தூதர்களை அனுப்பினோம். அவர்களது செயல்களை ஷைத்தான் அழகாக்கிக் காட்டினான். இன்னும் அவனே இன்று அவர்களின் உற்ற நண்பன். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.  அல்குர்ஆன் (16 : 63)

அவளும், அவளது சமுதாயமும் அல்லாஹ்வையன்றி சூரியனுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை (நல்) வழியை விட்டும் தடுத்துள்ளான். அவர்கள் நேர் வழி பெற மாட்டார்கள் (என்றும் அந்தப் பறவை கூறிற்று.)  அல்குர்ஆன் (27 : 24)
 
இவ்வாறே இணை கற்பிப்போரில் அதிகமானோர் தமது குழந்தைகளைக் கொல்வதை அவர்களின் தெய்வங்கள் அழகாக்கிக் காட்டி, அவர்களை அழித்து, அவர்களது மார்க்கத்தையும் அவர்களுக்குக் குழப்பி விட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக் கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக!  அல்குர்ஆன் (6 : 137)


தீய காரியங்களை செய்யுமாறு ஏவுவான்

நம்பிக்கை கொண்டோரே! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! யார் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறாரோ (அவர் வழி கெடுவார்). ஏனெனில் அவன் வெட்கக்கேடானவற்றையும் தீமையையும் தூண்டுகிறான்.  அல்குர்ஆன் (24 : 21)

ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.  அல்குர்ஆன் (2 : 268)

மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி. அவன் தீமையையும், வெட்கக் கேடானதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதையும் உங்களுக்குத் தூண்டுகிறான்.  அல்குர்ஆன் (2 : 168.169)

மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக்கொள்ள மாட்டீர்களா?  அல்குர்ஆன் (5 : 91)

தீய எண்ணங்களைத் தோற்றுவிப்பான்

"அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்'' (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.  அல்குர்ஆன் (4 : 119)
 
அவர்களுக்கு அவன் வாக்களிக்கிறான். ஆசை வார்த்தை கூறுகிறான். ஷைத்தான் அவர்களுக்கு ஏமாற்றத்தையே வாக்களிக்கிறான்.  அல்குர்ஆன் (4 : 120)

 
அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும்  இத்தகையோர் உள்ளனர்.  அல்குர்ஆன் (114 : 4)


ஸஃபிய்யா (ரலிலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் ரமளானில் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்கும்போது அவர்களைச் சந்திக்க நான் செல்வேன். சற்று நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுவேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னுடன் எழுந்து பள்ளியின் வாசல் வரை வருவார்கள். பள்ளியின் வாசலுக்கு அருகிலிலிருந்த உம்மு சலமாவின் வாசலை அடைந்தபோது அன்ஸாரிகளில் இருவர் நடந்து சென்றனர். நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் கூறினர். அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், "நில்லுங்கள்; இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த் "ஹுயை ஆவார்'' எனக் கூறினார்கள். அவ்விருவரும் (ஆச்சரியத்துடன்) "சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்றனர். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியது அவ்விருவருக்கும் உறுத்தியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கிறான்; உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை அவன் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்'' எனக் கூறினார்கள்.  நூல் : புகாரி (2035)

இறைமறுப்பாளர்களாக்க முயற்சிப்பான்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்கüல் ஒருவரிடம் (அவர் மனத்திற்குள்) ஷைத்தான் வந்து, "இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?'' என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், "உன் இறைவனைப் படைத்தவர் யார்?'' என்று கேட்கின்றான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் அடையும்போது அவர்  அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். (இத்தகைய சிந்தனையிலிருந்து) விலகிக்கொள்ளட்டும்.  அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)  நூல் : புகாரி (3276)

இறைநினைவை மறக்கடிக்க முயலுவான்

மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக்கொள்ள மாட்டீர்களா?  அல்குர்ஆன் (5 : 91)
 
ஷைத்தான் அவர்களை மிகைத்து விட்டான். அல்லாஹ்வின் நினைவை அவர்களுக்கு மறக்கச் செய்தான். அவர்களே ஷைத்தானின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! ஷைத்தானின் கூட்டத்தினரே நஷ்டமடைந்தவர்கள்.  அல்குர்ஆன் (58 : 19)


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தொழுகைக்கு பாங்குசொல்லப்பட்டதும் பாங்கைக் கேட்கக் கூடாது என்பதற்காக ஷைத்தான் காற்று விட்டவனாக ஓடுகிறான். பாங்கு முடிந்ததும் முன்னே வருகிறான். இகாமத் சொல்லப்பட்டதும் திரும்பி ஓடுகிறான். இகாமத் முடிந்ததும் முன்னே வருகிறான். தொழுதுகொண்டிருக்கும் மனிதரிடம் " நீ இதுவரை நினைத்திராதவற்றையெல்லாம் நினைத்துப் பார்''  என்று கூறுவான். முடிவில் அம்மனிதர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதை அறியாதவராகி விடுவார்.  அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)  நூல் : புகாரி (1222)

உறுதியாக இருந்தால் அஞ்சுவான்

ஷைத்தான் கூறும் ஆசைவார்த்தைகளுக்குக் கட்டுப்படாமல் தீமைகளை வெறுத்து ஒதுக்குவதில் உறுதியாக இருந்தால் ஷைத்தான் நம்மைப் பார்த்து பயப்படுவான். உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு இருந்ததால் அவர்களைப் பார்த்து ஷைத்தான் அஞ்சியதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதரிடம் (அவர்களுடைய மனைவிமார்களான) குறைஷிப் பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்கள் நபி (ஸல்) அவர்கüடம் (ஜீவனாம்சத் தொகையை) அதிகமாகத் தரும்படி தம் குரல்களை உயர்த்தி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் அனுமதி கேட்ட போது அப்பெண்கள் அவசர அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்தபடி எழுந்து கொண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தபடியே உமர் (ரலி) அவர்களுக்கு (உள்ளே வர) அனுமதி கொடுத்தார்கள். உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! தங்களை ஆயுள் முழுதும் அல்லாஹ் சிரித்தபடி (மகிழ்ச்சியாக) இருக்கச் செய்வானாக'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (என்னிடம் சகஜமாக அமர்ந்திருந்தவர்கள்) உங்கள் குரலைக் கேட்டவுடன் அவசர அவசரமாகப் பர்தா அணிந்து கொண்டார்களே'' என்று சொன்னார்கள். 

உமர் (ரலி) அவர்கள், "எனக்கு அஞ்சுவதை விட அதிகமாக அஞ்சத் தாங்கள் தாம் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறிவிட்டு, (அப்பெண் களை நோக்கி) "தமக்குத் தாமே பகைவர்களாகிவிட்ட பெண்களே! அல்லாஹ் வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பிடும் போது நீங்கள் கடின சித்தமுடையவராகவும் அதிகக் கடுமை காட்டக்கூடியவராகவும் இருக்கின்றீர்கள்'' என்று பதிலüத்தார்கள். (அப்போது) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஒரு பாதையில் சென்றுகொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் கண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறொரு பாதையில்தான் அவன் செல்வான்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)  நூல் : புகாரி (3294)

தன்னை பின்பற்றியவர்களை ஏமாற்றுவான்
 
அறிவுரை எனக்குக் கிடைத்த பின்பும் அதை விட்டு என்னை அவன் (ஷைத்தான்) கெடுத்து விட்டான். ஷைத்தான் மனிதனுக்குத் துரோகம் செய்பவனாகவே இருக்கிறான் (என்றும் கூறுவான்.)  அல்குர்ஆன் (25 : 29)


ஷைத்தான் அவர்களின் செயல்களை அவர்களுக்கு அழகானதாகக் காட்டியதை எண்ணிப் பாருங்கள்! "இன்று மனிதர்களில் உங்களை வெல்ல யாருமில்லை; நான் உங்களுக்கு அருகில் இருக்கிறேன்'' எனவும் கூறினான். இரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்த போது பின் வாங்கினான். "உங்களை விட்டும் நான் விலகிக் கொண்டவன். நீங்கள் பார்க்காததை நான் பார்க்கிறேன். நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன். அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்'' என்று கூறினான்.  அல்குர்ஆன் (8 : 48)
 
"(ஏக இறைவனை) மறுத்து விடு'' என்று மனிதனிடம் கூறி, அவன் மறுத்த பின் "நான் உன்னை விட்டு விலகியவன். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுகிறேன்'' எனக் கூறிய ஷைத்தானைப் போன்றவர்கள்.  அல்குர்ஆன் (59 : 16)

 
"அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதி அளித்தான். நானும் உங்களுக்கு வாக்குறுதி அளித்து உங்களிடம் வாக்கு மீறி விட்டேன். உங்களை அழைத்தேன். எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே என்னைப் பழிக்காதீர்கள்! உங்களையே பழித்துக் கொள்ளுங்கள்! நான் உங்களைக் காப்பாற்றுபவனும் அல்லன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவோரும் அல்லர். முன்னர் என்னை (இறைவனுக்கு) இணையாக்கியதை மறுக்கிறேன்'' என்று தீர்ப்புக் கூறப்பட்டவுடன் ஷைத்தான் கூறுவான். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு  அல்குர்ஆன் (14 : 22)

 
அவர்களுக்கு அவன் வாக்களிக்கிறான். ஆசை வார்த்தை கூறுகிறான். ஷைத்தான் அவர்களுக்கு ஏமாற்றத்தையே வாக்களிக்கிறான்.  அல்குர்ஆன் (4 : 120)


இறுதியில் நரகம் செல்வான்

"அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதி அளித்தான். நானும் உங்களுக்கு வாக்குறுதி அளித்து உங்களிடம் வாக்கு மீறி விட்டேன். உங்களை அழைத்தேன். எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே என்னைப் பழிக்காதீர்கள்! உங்களையே பழித்துக் கொள்ளுங்கள்! நான் உங்களைக் காப்பாற்றுபவனும் அல்லன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவோரும் அல்லர். முன்னர் என்னை (இறைவனுக்கு) இணையாக்கியதை மறுக்கிறேன்'' என்று தீர்ப்புக் கூறப்பட்டவுடன் ஷைத்தான் கூறுவான். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு  அல்குர்ஆன் (14 : 22)
 
வழி கெட்டவர்களுக்கு நரகம் வெளிப்படுத்தப்படும். "அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருந்தவை எங்கே?''  அவர்கள் உங்களுக்கு உதவுவார்களா? அல்லது தமக்குத்தாமே உதவிக் கொள்வார்களா? என்று அவர்களிடம் கேட்கப்படும். அவர்களும், வழி கெட்டவர்களும், இப்லீஸின் படையினர் அனைவரும் அதில் முகம் குப்புற தள்ளப்படுவார்கள்.  அல்குர்ஆன் (26 : 91)


காத்துக்கொள்ளும் வழிமுறைகள்

ஷைத்தான்களிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள அனைவரும் விரும்புகிறோம். இதற்கான வழிமுறைகள் குர்ஆனும் ஹதீஸ்களும் நமக்கு தெளிவாக கற்றுத்தருகிறது. இவற்றை அறியாத காரணத்தால் இஸ்லாமிய சமூகத்தில் வாழும் பலர் தகடு தாயத்து போன்ற இணைவைப்புக் காரியங்களிலும் சூடமேற்றுதல் திருஷ்டி கழித்தல் முட்டையை உடைத்தல் குர்ஆன் வசனங்களை எழுதி கரைத்து குடித்தல் போன்ற மூடநம்பிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

மாற்று மதத்தினரைப் பார்த்து காப்பியடிக்கப்பட்ட இந்த அநாச்சரங்கள் ஷைத்தானின் செயல்பாடுகளாகும். இவற்றை செய்தால் ஷைத்தானின் வலையில் விழுமுடியுமே தவிர அவனிடமிருந்து ஒரு போதும் காத்துக்கொள்ள இயலாது. பின்வருகின்ற விஷயங்களை கடைபிடிப்பதன் மூலமே ஷைத்தானிடமிருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும்.

சிறந்த பாதுகாவலன்

ஷைத்தானுடைய சதியிலிருந்து தப்பிப்பதற்கு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவதை விட சிறந்த வழி எதுவும் இருக்க முடியாது. ஷைத்தானை படைத்த வல்ல இறைவன் ஷைத்தானின் தீங்குகளிலிருந்து நம்மைக் காக்கும் சிறந்த பாதுகாவலன் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பின்வரும் வசனங்களை இதையே நமக்கு எடுத்துரைக்கிறது.

அவர்கள் புறக்கணித்தால் அல்லாஹ் உங்களின் பாதுகாவலன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! அவன் சிறந்த பாதுகாவலன். சிறந்த உதவியாளன்.  அல்குர்ஆன் (8 : 40)

 
உங்கள் பகைவர்களை அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்; அல்லாஹ் உதவி செய்யப் போதுமானவன்.  அல்குர்ஆன் (4 : 45)

 
"இவ்வேதத்தை அருளிய அல்லாஹ்வே எனது பொறுப்பாளன். அவனே நல்லோருக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான்'' (என்றும் கூறுவீராக!)  அல்குர்ஆன் (7 : 196)


நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் உதவுபவன். இருள்களிலிருந்து வெளிச்சத்திற்கு அவர்களைக் கொண்டு செல்கிறான். (ஏக இறைவனை) மறுப்போருக்கு தீய சக்திகளே உதவியாளர்கள். வெளிச்சத்திலிருந்து இருள்களுக்கு அவர்களைக் கொண்டு செல்கின்றனர். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பர்.  அல்குர்ஆன் (2 : 257)

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner