Monday, July 9, 2012

நோன்பின் சட்டங்கள் - தொடர் 5 - பி.ஜே

நோன்பின் நேரம்

சுப்ஹ் நேரம் வந்தது முதல் சூரியன் மறையும் வரை நோன்பின் நேரமாகும். அதாவது சுப்ஹ் நேரம் துவங்கியது முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமல், பருகாமல், உடலுறவு கொள்ளாமல் இருந்து நோன்பை முழுமைப்படுத்த வேண்டும்.

வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! அல்குர்ஆன் 2:187

இவ்வசனத்தில் ஃபஜ்ரு வரை உண்ணலாம், பருகலாம் என்று இறைவன் அனுமதிக்கிறான். ஃபஜ்ரிலிருந்து தான் நோன்பின் நேரம் ஆரம்பமாகிறது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

பெரும்பாலான முஸ்லிம்களிடம் காணப்படும் அறியாமையைச் சுட்டிக் காட்ட இது பொருத்தமான இடமாகும்.

தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் சுமார் இரவு மூன்று மணியளவில் ஸஹர் செய்வதற்காக எழுந்து உண்பார்கள். ஸஹர் முடிந்ததும் 3.30 மணியளவில் அல்லது நான்கு மணியளவில் நிய்யத் செய்வார்கள். (நிய்யத் பற்றிப் பின்னர் விளக்கப்படவுள்ளது.)

இவ்வாறு நிய்யத் செய்த பின் ஃபஜ்ரு நேரம் வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரமோ, அரை மணி நேரமோ மீதமிருக்கும். ஆனாலும் நிய்யத் செய்து விட்டதால் அதன் பிறகு எதையும் உண்ணக் கூடாது, பருகக் கூடாது என்று நினைக்கிறார்கள். இது தவறாகும்.

எந்த நேரம் முதல் உண்ணக் கூடாது என்று அல்லாஹ் நமக்குக் கட்டளையிட்டானோ அந்த நேரம் வரை உண்பதற்கு நமக்கு அனுமதியுள்ளது. நாம் நிய்யத் செய்து விட்டால் கூட, எப்போது முதல் நோன்பு நோற்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டானோ அப்போது முதல் நோன்பு நோற்கிறேன் என்பது தான் அதன் பொருள்.

எனவே 5.40 மணிக்கு சுபுஹ் வேளை வருகிறது என்றால் மூன்று மணிக்கே நிய்யத் செய்தாலும் 5.40 வரை உண்ணலாம்; பருகலாம்; இல்லறத்திலும் ஈடுபடலாம்.

இன்னொரு அறியாமையையும் நாம் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
சுபுஹ் நேரம் 5.30 மணிக்கு ஆரம்பமாகிறது என்று வைத்துக் கொள்வோம். 5.29 வரை உண்ணலாம்; பருகலாம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நோன்பு அட்டவணை என்று வெளியிடப்படும் அட்டைகளில் ஸஹர் முடிவு 5.20 என்றும், சுபுஹ் 5.30 என்று போடும் வழக்கம் உள்ளது.

அதாவது சுபுஹ் நேரம் வருவதற்குப் பத்து நிமிடம் இருக்கும் போதே ஸஹரை முடிக்க வேண்டும் என்று இந்த அட்டவணை கூறுகின்றது. இது அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமானதாகும்.

ஸஹர் முடிவும், சுபுஹ் நேரத்தின் துவக்கமும் ஒன்று தான். ஸஹர் முடிந்த மறு வினாடி சுபுஹ் ஆரம்பமாகி விடும். ஸஹர் முடிவுக்கும், சுபுஹுக்கும் இடைப்பட்ட நேரம் எதுவுமில்லை.

எனவே எப்போது சுபுஹ் நேரம் ஆரம்பமாகிறதோ அதற்கு ஒரு வினாடிக்கு முன்னால் வரை உண்ணவும் பருகவும் அனுமதி உள்ளது.

சுபுஹிலிருந்து நோன்பு ஆரம்பமாகின்றது என்றால் எது வரை நோன்பு நீடிக்கின்றது?

பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்! அல்குர்ஆன் 2:187

இரவு என்பது சூரியன் மறைந்தவுடன் ஆரம்பமாகிறது. எனவே சூரியன் மறைவது வரை உண்ணாமல் பருகாமல் இருக்க வேண்டியது அவசியம்.

மார்க்கம் பற்றிய அறிவு இல்லாத சிலர், ரமளான் அல்லாத நாட்களில் பகல் வரை சாப்பிடாமல் இருந்து விட்டு அரை நோன்பு வைக்கும் வழக்கம் உள்ளதாகக் கேள்விப்படுகிறோம்.

நோன்பு என்பது சுபுஹ் முதல் மஃக்ரிப் வரை முழுமையாக வைக்க வேண்டுமே தவிர அரை நோன்பு, முக்கால் நோன்பெல்லாம் இஸ்லாத்தில் கிடையாது.

சூரியன் மறைந்தவுடன் இரவு ஆரம்பமாகி விடுகின்றது. ஆனாலும் சூரியன் மறைந்து ஐந்து நிமிடங்கள் கழித்தே நோன்பு துறக்கும் வழக்கம் பெரும்பாலான ஊர்களில் காணப்படுகின்றது. இது முற்றிலும் தவறானதாகும்.
நோன்பு துறப்பதைப் பத்து நிமிடம் தாமதமாகச் செய்வது பேணுதலான காரியம் என்று இவர்கள் நினைப்பதே இதற்குக் காரணமாகும்.

சூரியன் மறையும் வரை என்ன? அதற்கு மேலும் என்னால் பட்டினி கிடக்க முடியும் என்று நினைப்பதும், நடப்பதும் ஆணவமான செயலாகத் தான் கருதப்படுமே தவிர பேணுதலாக ஆகாது.

இறைவா! நான் பசியைத் தாங்கிக் கொள்ள இயலாத பலவீனன். நீ கட்டளையிட்டதற்காகத் தான் இதைத் தாங்கிக் கொள்கிறேன் என்ற அடக்கமும் பணிவும், விரைந்து நோன்பு துறக்கும் போது தான் ஏற்படும்.

என் அடியானைப் பாருங்கள்! எப்போது சூரியன் மறையும் என்று காத்திருந்து மறைந்தவுடன் அவசரமாகச் சாப்பிடுகிறான். இவ்வளவு பசியையும் எனக்காகத் தான் இவன் தாங்கிக் கொண்டான் என்று இறைவன் இத்தகைய அடியார்களைத் தான் பாராட்டுவான்.

இதை நாமாகக் கற்பனை செய்து கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே இப்படித் தான் நமக்கு வழி காட்டியுள்ளார்கள்.

நோன்பு துறப்பதை விரைந்து செய்யும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் உள்ளனர் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழி. அறிவிப்பவர்: அபூதர் (ரலி) நூல்: புகாரி 1957

இந்தத் திசையிலிருந்து இரவு நம்மை நோக்கி வந்து, அந்தத் திசையில் பகல் பின்னோக்கிச் சென்று சூரியனும் மறைந்து விடுமானால் நோன்பாளி நோன்பு துறக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அபீ அவ்ஃபா (ரலி) நூல்: புகாரி 1954

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். சூரியன் மறைந்தவுடன் ஒரு மனிதரிடம், போய் நமக்காக (நோன்பு துறக்க) மாவுக் கரைசலைக் கொண்டு வருவீராக! என்றார்கள். அதற்கு அம்மனிதர், இன்னும் கொஞ்சம் மாலையாகட்டுமே! என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், போய் மாவைக் கரைத்து எடுத்து வருவீராக! என்றார்கள். இன்னும் பகல் நேரம் மிச்சமுள்ளதே!என்று அவர் கூறிக் கொண்டே சென்று மாவைக் கரைத்து எடுத்து வந்தார். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குடித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அபீ அவ்ஃபா (ரலி) நூல்: புகாரி 1941, 1955, 1956, 1958, 5297

இன்னும் பகல் உள்ளதே என்று அம்மனிதர் சுட்டிக் காட்டிய பிறகும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைக் கண்டு கொள்ளவில்லை. சூரியன் மறையும் நேரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டார்கள் என்பதை இதிலிருந்து அறியலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரியாத பேணுதலை யார் கண்டுபிடித்தாலும் அது நமக்குத் தேவையில்லை. 

ஸஹர் உணவு

சிரமமின்றி நோன்பைச் சமாளிப்பதற்காக, பின்னிரவில் உட்கொள்ளப்படும் உணவு ஸஹர் உணவு எனப்படுகிறது. ஸஹர் நேரத்தில் இவ்வாறு உணவு உட்கொள்வது கட்டாயக் கடமையில்லை என்றாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் பெரிதும் ஆர்வமூட்டப்பட்டுள்ளது.

நீங்கள் ஸஹர் நேரத்தில் உண்ணுங்கள். ஏனெனில் ஸஹர் நேர உணவில் பரக்கத் (புலனுக்குத் தெரியாத மறைமுகமான பேரருள்) உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: புகாரி 1923

நமது நோன்புக்கும், வேதம் கொடுக்கப்பட்ட (யூத, கிறித்த)வர்களின் நோன்புக்கும் வித்தியாசம் ஸஹர் நேரத்தில் உண்பதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 1836

ஸஹர் உணவு எவ்வளவு முக்கியமானது என்பதை இதிலிருந்து அறியலாம்.

ஸஹர் உணவைத் தாமதப்படுத்துதல்

ஸஹர் உணவை எந்த அளவுக்குத் தாமதப்படுத்தலாம் என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செயல்முறை விளக்கம் தந்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஸஹர் செய்து விட்டு (சுபுஹ்) தொழுகைக்கு ஆயத்தமாவோம் என்று ஸைத் பின் ஸாபித் (ரலி) கூறினார்கள். (ஸஹருக்கும் சுபுஹுக்கும் இடையே) எவ்வளவு நேரம் இருக்கும்? என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் என்று விடையளித்தார்கள்.  அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி 576, 1134, 1921, 575
 
தமிழகத்தில் சுப்ஹுக்கு ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் இருக்கும் போது ஸஹர் செய்யும் வழக்கத்தை மேற்கொண்டுள்ளனர். அது மட்டுமின்றி ஸஹர் செய்து விட்டு உறங்கி, சுபுஹ் தொழுகையைப் பாழாக்கி விடுகின்றனர்.

ஸஹர் செய்து முடித்தவுடன் சுபுஹ் தொழுகைக்கு ஆயத்தமாகும் அளவுக்குத் தாமதமாக ஸஹர் செய்வதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த நடைமுறையாகும்.

ஐம்பது வசனங்களை நிறுத்தி நிதானமாக ஓதிட, பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் போதுமானதாகும். சுபுஹுக்குப் பத்து நிமிடம் அல்லது பதினைந்து நிமிடம் இருக்கும் போது தான் ஸஹர் செய்யும் வழக்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner