Thursday, July 19, 2012

நோன்பின் சட்டங்கள் - தொடர் 16 - பி.ஜே

ஒருவருக்காக மற்றவர் நோன்பு நோற்றல் / சிறுவர்கள் நோன்பு நோற்பது

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒருவரது சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் என்பது முக்கியமான கொள்கையாகும். ஒவ்வொருவரும் தத்தமது செய்கைகளுக்குப் பொறுப்பாளிகள் என்றாலும் இதிலிருந்து சில வணக்கங்கள் மட்டும் விதி விலக்குப் பெறுகின்றன. நோன்பும் அவ்வாறு விதிவிலக்குப் பெற்ற வணக்கங்களில் ஒன்றாகும்.

நோன்பு களாவாகவுள்ள நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்காக அவரது பொறுப்பாளர் நோன்பு நோற்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 1952

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். அல்லாஹ்வின் தூதரே! என் தாய் மீது ஒரு மாத நோன்பு (கடமையாக) உள்ள நிலையில் மரணித்து விட்டார். அவரது சார்பில் நான் அதை நிறைவேற்றலாமா?என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஆம்! நிறைவேற்றலாம். அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்பட அதிகம் தகுதியானது என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 1953

புகாரியின் மற்றொரு ஹதீஸில் ஒரு பெண் வந்து இவ்வாறு கேட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நோன்பு கடமையாகி களாவாகவுள்ள நிலையில் யாரேனும் மரணித்து விட்டால் அவரது வாரிசுகள் அவருக்காக நோன்பு நோற்கலாம் என்று கூறுவதை விட நோற்பது அவசியம் என்று தான் கூற வேண்டும். ஏனெனில் கடனுடன் நோன்பை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒப்பிட்டுள்ளார்கள். மேலும் கடனை விட நிறைவேற்றுவதற்கு அதிகத் தகுதியுடையது எனவும் கூறுகிறார்கள்.

இறந்தவர்களுக்காக மார்க்கத்தில் இல்லாத கத்தம் பாத்திஹா ஓதுவதை விடுத்து இறந்தவர் மீது நோன்பு களாவாக இருந்தால் அதை நிறைவேற்றலாம். இறந்தவரின் சொத்துக்களுக்கு மட்டும் வாரிசாக ஆசைப்படுவோர் மார்க்கம் அவர்கள் மீது சுமத்திய இந்தக் கடமையைச் செய்வதில்லை. நாமறிந்த வரை பெற்றோர்களுக்காக ஹஜ் செய்பவர்களைக் கூட காண்கிறோம். ஆனால் நோன்பு நோற்பவர்களைக் காண முடியவில்லை. பெற்றோர் மீது கடமையான நோன்புகள் களாவாக இருந்தால் தான் வாரிசுகள் நோற்க வேண்டும். உபரியான சுன்னத்தான நோன்புகளுக்கு ஆதாரம் இல்லை. ஏனெனில் இறந்தவர்களை அது குறித்து அல்லாஹ் விசாரிக்க மாட்டான். மேலும் இந்த ஹதீஸில் கடமையான நோன்பு பற்றியே கூறப்பட்டுள்ளது.

சிறுவர்கள் நோன்பு நோற்பது 

இஸ்லாத்தின் எல்லாக் கடமைகளும் பருவ வயதை அடைந்தவர்களுக்கு மட்டுமே உரியதாகும். சிறுவர்களுக்கு நோன்போ, தொழுகையோ கடமையில்லை என்றாலும் தொழுகைக்கு ஏழு வயது முதலே பயிற்சியளிக்க வேண்டும். பத்து வயதில் தொழாவிட்டால் அடிக்க வேண்டும் என்றெல்லாம் ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் நோன்பைப் பொறுத்த வரை இத்தகைய கட்டளை ஏதும் நபிகள் நாயகத்தினால் பிறப்பிக்கப்படவில்லை. பருவமடைந்தவர்களுக்கே பயணத்தில் இருப்பதாலும், நோயாளியாக இருப்பதாலும், கர்ப்பிணியாக இருப்பதாலும் நோன்பிலிருந்து மார்க்கம் சலுகையளித்துள்ளது. எனவே சிறுவர்களை தொழுகையைப் போல் கட்டாயப்படுத்தி நோன்பு நோற்குமாறு வற்புறுத்தக் கூடாது.

தொழுகைக்குப் பலவிதமான நடைமுறைகள், ஓத வேண்டியவை உள்ளன. அவற்றையெல்லாம் சிறுவயது முதலே கற்றுப் பயிற்சி எடுக்கும் அவசியம் உள்ளது. ஆனால் நோன்பைப் பொறுத்த வரை பருவமடைந்தால் அடுத்த நாளே நோன்பைக் கடைப்பிடிக்க முடியும்.

அதே நேரத்தில் சிறுவர்களுக்குச் சக்தியிருந்தால் அவர்களையும் நோன்பு நோற்கச் செய்ய அனுமதி உள்ளது. அனுமதி தானே தவிர அவசியமில்லை.


ரமளான் மாதத்தில் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் ஆஷுரா நோன்பு தான் கடமையான நோன்பாக இருந்தது. இந்த நோன்பு குறித்துப் பின்வரும் செய்தி புகாரி, முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. ஆஷுரா தினத்தில் நாங்களும் நோன்பு நோற்போம். எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்கச் செய்வோம். அவர்களுக்குத் துணியால் விளையாட்டுப் பொருளையும் தயார் செய்து வைத்துக் கொள்வோம். அவர்கள் உணவு கேட்கும் போது அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து நோன்பு துறக்கும் வரை கவனத்தைத் திருப்புவோம். அறிவிப்பவர்: ருபைய்யி பின்த் முஅவித் (ரலி) நூல்கள்: புகாரி 1960, முஸ்லிம் 2092

இந்தச் செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை அனுமதித்துள்ளார்கள் என்பது தான் தெரிகிறது. அவர்கள் தொழுகைக்குக் கட்டளையிட்டது போல் கட்டளை இடவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மேலும் ஆஷுரா நோன்பு என்பது ஒருநாள் மட்டுமே நோற்கும் நோன்பாகும்.
 
ஒரு நாள் என்பதால் சிறுவர்களுக்கு விளையாட்டுக் காட்டலாம். ரமளான் நோன்பு ஒரு மாதம் முழுவதும் உள்ள நோன்பாகும். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து சிறுவர்கள் நோற்றதாக எந்த ஆதாரமும் நமக்குக் கிடைக்கவில்லை.

இதில் கவனிக்க வேண்டிய அம்சம் சிறுவர்கள் நோன்பு நோற்பதால் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என்றால் அவர்களையும் நோன்புக்குப் பயிற்றுவிக்கலாம். நாகூர் ஹனீஃபாவின் ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழைப் பாலகன் என்ற கட்டுக் கதையை நம்பி சிறுவர்களை நோன்பு நோற்கச் சொல்லி சாகடித்து விடக் கூடாது.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner