ரமளான் இரவு வணக்கங்கள் / இரவுத் தொழுகை தனியாகத் தொழலாமா? / தவறான கருத்துக்கள்
ரமளான் இரவு வணக்கங்கள்
புனித ரமளானில் நின்று வணங்குவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. ஆயினும் ரமளானில் தொழுவதற்கென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரத்தியேகமான வணக்கம் எதனையும் கற்றுத் தரவில்லை. அவர்களும் பிரத்தியேகமான எந்த வணக்கத்தையும் செய்யவில்லை.
ரமளானில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது? என்று ஆயிஷா (ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமளான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அபூ ஸலமா நூல்: புகாரி 1147, 2013, 3569
ரமளானில் விசேஷமான தொழுகை ஏதும் உண்டா? என்பதை அறிந்து கொள்வதற்காக அபூஸலமா அவர்கள் கேள்வி கேட்கிறார்கள். ரமளானுக்கென்று விசேஷமாகத் தொழுகை ஏதும் இல்லை என்று ஆயிஷா (ரலி) விடையளிக்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவு வணக்கத்தை அவர்களின் மனைவியர் தவிர மற்றவர்கள் அதிகம் அறிய முடியாது.
ரமளான் அல்லாத நாட்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுது வந்த ரக்அத்களையே ரமளானிலும் தொழுது வந்தார்கள். அதைத் தவிர மேலதிகமாக எந்தத் தொழுகைகளையும் தொழுததில்லை என்பதை இதன் மூலம் அறியலாம்.
தராவீஹ் என்ற பெயரில் 20 ரக்அத்கள் தொழும் வழக்கம் பரவலாக உள்ளது.
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பல்லாயிரக்கணக்கான ஹதீஸ்கள் இருந்தும் ஒரேயொரு ஹதீஸில் கூட தராவீஹ் என்ற வார்த்தையே இடம் பெறவில்லை. அல்லாஹ்வின் தூதருடைய வாயிலிருந்து இந்த வார்த்தை கூட வெளிப்பட்டதற்கு ஆதாரமில்லை.
இந்த வார்த்தையே ஹதீஸ்களில் இல்லை எனும் போது இது நாமாகக் கண்டுபிடித்த தொழுகை என்பதையும், மார்க்கத்திற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதையும் அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமளான் அல்லாத மாதங்களிலும் தொழுத தொழுகை தஹஜ்ஜுத், இரவுத் தொழுகை என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்மைகளை அதிகமதிகம் அள்ளித் தரக் கூடிய புனிதமிக்க மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தராத நடவடிக்கைகளில் இறங்குவதற்கு அதிகமாக அஞ்ச வேண்டும்.
இது தஹஜ்ஜுத் தொழுகை பற்றியதாகும்; தஹஜ்ஜுத் தொழுகை அல்லாத வேறு தொழுகையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதிருப்பார்கள் என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர்.
ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியே ரமளான் தொழுகை பற்றித் தான். கூரிய மதி படைத்த அவர்கள் ரமளானில் விசேஷத் தொழுகை கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்த பின் இவர்களின் வாதம் ஏற்கத்தக்கது தானா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.
இந்தப் பதினொரு ரக்அத்கள் அல்லாத வேறு தொழுகைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதிருக்கலாம் என்போர் அதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். எவ்வித ஆதாரமுமின்றி எழுப்பப்படும் இந்த வாதத்தை நாம் மதிக்க வேண்டியதில்லை. ரமளானுக்கு என்று தனியான தொழுகை இல்லை என்பதற்கு மேலும் பல சான்றுகளும் உள்ளன.
நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ரமளானில் நோன்பு நோற்றோம். ரமளானில் ஏழு நாட்கள் மீதமிருக்கும் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. இருபத்தி மூன்றாம் நாள் இரவில், மூன்றில் ஒரு பகுதி நேரம் வரை எங்களுக்குத் தொழுவித்தார்கள். அதன் பிறகு (சில நாட்கள்) தொழவில்லை. ரமளானில் மூன்று நாட்கள் எஞ்சியிருக்கும் போது மீண்டும் எங்களுக்குத் தொழுவித்தார்கள். தம் குடும்பத்தினரையும், மனைவியரையும் அதில் பங்கெடுக்கச் செய்தார்கள். ஸஹர் நேரம் முடிந்து விடுமோ என்று நாங்கள் அஞ்சும் அளவுக்கு நீண்ட நேரம் தொழுவித்தார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி) நூல்: நஸயீ 1347, 1587, 1588
ஸஹர் தவறி விடுமோ என்று அஞ்சும் அளவுக்கு அவர்கள் தொழுகை நடத்தியுள்ளார்கள். இஷா முதல் ஸஹர் வரை அவர்கள் ஒரு தொழுகையைத் தான் தொழுதிருக்கிறார்கள். அதாவது தஹஜ்ஜுத் தொழுகையையே தொழுதுள்ளார்கள். ரமளானுக்கென்று தனியாக ஒரு தொழுகையை அவர்கள் தொழவில்லை என்பதை இது தெளிவாக விளக்குகிறது.
நான் உமர் (ரலி) அவர்களுடன் ரமளான் மாதத்தின் ஓர் இரவில் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கே மக்கள் பிரிந்து பல குழுக்களாக இருந்தனர். சிலர் தனித்துத் தொழுது கொண்டிருந்தனர். சிலரைப் பின்பற்றி சிறு கூட்டத்தினர் தொழுது கொண்டிருந்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள், இவர்கள் அனைவரையும் ஓர் இமாமின் கீழ் திரட்டினால் அது சிறப்பாக அமையுமே என்று கூறி விட்டு, அந்த முடிவுக்கு உறுதியாக வந்து, மக்களை உபை பின் கஅபு (ரலி) அவர்களுக்குப் பின்னால் திரட்டினார்கள். பின்னர் மற்றொரு இரவில் நான் சென்றேன். மக்களெல்லாம் தங்கள் இமாமைப் பின்பற்றித் தொழுது கொண்டு இருந்தார்கள். அப்போது உமர் (ரலி), இந்தப் புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது. இப்போது தொழுது விட்டுப் பிறகு உறங்குவதை விட, உறங்கி விட்டு இரவின் இறுதியில் தொழுவது மிகவும் சிறந்ததாகும் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அப்துல் காரீ நூல்: புகாரி 2010
உமர் (ரலி) அவர்களின் இந்தக் கூற்றும் ரமளானுக்கு என்று விசேஷத் தொழுகை கிடையாது என்பதை அறிவிக்கின்றது. இப்போது தொழுது விட்டுப் பிறகு உறங்குவதை விட, உறங்கி விட்டு இரவின் இறுதியில் தொழுவது மிகவும் சிறந்தது என்ற அவர்களின் கூற்றிலிருந்து இதை விளங்கலாம். இரவில் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே தொழுகை தான். ஆரம்ப நேரத்தில் ஒரு தொழுகை, இரவின் கடைசி நேரத்தில் ஒரு தொழுகை என்று இரண்டு தொழுகைகள் கிடையாது என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.
மேற்கண்ட ஹதீஸில் உமர் (ரலி) அவர்கள் உபை பின் கஅபு (ரலி) அவர்களை இமாமாக நியமித்ததாகக் கூறப்படுகின்றது. சற்றுக் கூடுதல் விபரத்துடன் மற்றொரு ஹதீஸில் பின்வருமாறு கூறப்படுகின்றது.
உபை பின் கஅபு (ரலி) அவர்களையும், தமீமுத்தாரி (ரலி) அவர்களையும் மக்களுக்குப் பதினோரு ரக்அத்கள் தொழுவிக்குமாறு உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள். நூல்: முஅத்தா 232
அப்படியானால் ரமளானுக்குரிய சிறப்பு என்ன? என்ற கேள்வி எழலாம். எல்லா நாட்களிலும் இந்தத் தொழுகையைத் தொழ வேண்டும் என்றாலும் ரமளானில் இந்தத் தொழுகைக்கு அதிக அளவு ஆர்வமூட்டப்பட்டுள்ளது. யார் ரமளானில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் தொழுகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன.
இது போன்ற ஹதீஸ்கள் யாவும் ரமளானில் நின்று வணங்குவதற்கு ஆர்வமூட்டுகின்றன. நின்று வணங்குவது என்றால் நபியவர்கள் எவ்வாறு நின்று வணங்கினார்களோ அவ்வாறு வணங்குவதையே அது குறிக்கும். நபியவர்கள் பதினொரு ரக்அத்களே நின்று வணங்கியுள்ளதால் அதையே நாமும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
சில சமயங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 4+5 ரக்அத்கள் தொழுததற்கும் ஆதாரம் உள்ளது. நூல்: புகாரி 117, 697
சில சமயங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 12+வித்ர் தொழுததற்கும் ஆதாரம் உள்ளது. நூல்: புகாரி 183, 992, 1198, 4571, 4572
சில சமயங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வித்ருடன் சேர்த்து 13 ரக்அத்கள் தொழுததற்கும் ஆதாரம் உள்ளது. நூல்: முஸ்லிம் 1284
சில சமயங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 7 ரக்அத்கள் அல்லது 9 ரக்அத்கள் தொழுததற்கும் ஆதாரம் உள்ளது. நூல்: புகாரி 1139
சில சமயங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வித்ருடன் சேர்த்து 9 ரக்அத்கள் தொழுததற்கும் ஆதாரம் உள்ளது. நூல்: முஸ்லிம் 1201
சில சமயங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 8+5 ரக்அத்கள் தொழுததற்கும் ஆதாரம் உள்ளது. நூல்: முஸ்லிம் 1217
சில சமயங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 10+1 ரக்அத்கள் தொழுததற்கும் ஆதாரம் உள்ளது. நூல்: முஸ்லிம் 1222
சில சமயங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 9 ரக்அத்கள் தொழுததற்கும் ஆதாரம் உள்ளது. நூல்: முஸ்லிம் 1201
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 20 ரக்அத்கள் தொழுததற்கு எந்த ஆதாரமும் இல்லை.
தொழுகையின் நேரம்
இரவுத் தொழுகையின் நேரம் இஷா முதல் சுபுஹ் வரையிலுமாகும். இரவின் கடைசி நேரத்தில் தான் தொழ வேண்டும் என்று சிலர் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்தே இதை நாம் அறிந்து கொள்ள இயலும்.
தனியாகவும் தொழலாம்; ஜமாஅத்தாகவும் தொழலாம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையை ஒரு ரமளானில் மூன்று நாட்கள் மட்டுமே ஜமாஅத்துடன் தொழுதுள்ளார்கள். இதனால் மூன்று நாட்கள் மட்டுமே ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் மூன்று நாட்களுக்குப் பிறகு ஜமாஅத்தை விட்டு விட்டதன் காரணத்தை அவர்களே விளக்கியுள்ளார்கள்.
இத்தொழுகை கடமையாகி விடுமோ என்று அஞ்சியே நான்காம் நாள் ஜமாஅத் தொழுகை நடத்தவில்லை என்பதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய காரணம். இந்தக் காரணம் இல்லாவிட்டால் ஜமாஅத்துடன் தொழ எந்தத் தடையும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்குப் பின் எதுவுமே கடமையாக முடியாது என்பதால் எல்லா நாட்களும் ஜமாஅத்தாகத் தொழலாம். இது நபிவழிக்கு மாற்றமானதல்ல!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வீட்டில் இரவுத் தொழுகை தொழும் போது அவர்களைப் பின்பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) தொழுதுள்ளார்கள். இது புகாரி (183, 117, 138, 697, 698, 726, 859) உள்ளிட்ட பல நூல்களில் இடம் பெற்றுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் இதனைத் தனியாகவும் தொழுதுள்ளனர். மேலும் ஜமாஅத்தை இதற்கு வலியுறுத்தவில்லை என்பதால் தனியாகவும் தொழலாம்.
தவறான கருத்துக்கள்
- இரவுத் தொழுகை எட்டு ரக்அத்கள், வித்ரு மூன்று ரக்அத்கள் தொழுவதற்குப் பதிலாக 20 ரக்அத்களும், வித்ரு மூன்றும் தொழுவது.
- ஒவ்வொரு இரண்டு ரக்அத்களுக்கு இடையில் குறிப்பிட்ட சில திக்ருகளைக் கூறுவது.
- இந்தத் தொழுகையில் முழுக் குர்ஆனையும் ஓதியாக வேண்டும் என்று நம்புவது; நிறுத்தி நிதானமாக ஓதாமல் அவசரம் அவசரமாக ஓதுவது.
- சபீனா என்ற பெயரில் ஒரே இரவில் குர்ஆன் முழுவதையும் ஓதி குர்ஆனுடன் விளையாடுவது.
- தமாம் செய்தல் என்ற பெயரில் தொழுகையில் இல்லாத வாசகங்களை தொழுகையில் சேர்ப்பது.
- கூலிக்காக ஹாபிழ்களை அமர்த்தி குர்ஆனை அற்பக் கிரயத்துக்கு வாங்குவது; விற்பது. இந்த வழக்கங்கள் அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டியவையாகும். இவற்றுக்கு நபிவழியில் ஆதாரமோ, அனுமதியோ இல்லை.
0 comments:
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...