Sunday, July 8, 2012

நோன்பின் சட்டங்கள் - தொடர் 4 - பி.ஜே

விடுபட்ட நோன்பை களாச் செய்வது எப்போது?

மேற்கண்ட சலுகைகளைப் பெற்றவர்கள் விடுபட்ட நோன்பை எவ்வளவு நாட்களுக்குள் களாச் செய்ய வேண்டும்?

இதற்கு மார்க்கத்தில் எந்தக் காலக் கெடுவும் விதிக்கப்படவில்லை. வேறு நாட்களில் நோற்று விட வேண்டும் என்று மட்டுமே திருக்குர்ஆன் கூறுகிறது.

ரமளான் மாதத்தில் சில நோன்புகள் தவறி விடும். அதை ஷஅபான் மாதத்தில் தான் என்னால் நோற்க முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளே இதற்குக் காரணம் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி 1950

ஷஅபான் மாதம் என்பது ரமளானுக்கு முந்தைய மாதமாகும். ஒரு ரமளானில் விடுபட்ட நோன்பை மறு ரமளானுக்கு முந்தைய மாதம் வரை தாமதப்படுத்தி ஆயிஷா (ரலி) களாச் செய்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலேயே இது நடந்துள்ளதால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

விடுபட்ட நோன்பைக் களாச் செய்வதற்கு குறிப்பிட்ட காலக் கெடு எதுவும் இல்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

ஆயினும் மரணத்தை எதிர் நோக்கியவனாக மனிதன் இருக்கிறான். எந்த நேரத்திலும் மரணம் அவனை அடைந்து விடலாம். நோன்பை விட்டவர்களாக நாம் மரணித்தால் என்னவாகும் என்பதற்கு அஞ்சி, எவ்வளவு சீக்கிரம் நிறைவேற்ற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றி விடுவது சிறந்ததாகும்.

ரமளான் மாதத்தை முடிவு செய்தல்

நோன்பைக் கடமையாக்கிய இறைவன், யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும் என்று கூறுகிறான். இவ்வசனத்தை ஆரம்பமாக நாம் சுட்டிக் காட்டியுள்ளோம்.

ரமளான் மாதத்தை உலக மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அடைய மாட்டார்கள். ஒருவர் பின் ஒருவராகத் தான் அடைவார்கள் என்பதால் தான், யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்று அல்லாஹ் கூறுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்நாளில் மதீனாவில் பிறை காணப்பட்ட போதெல்லாம் அந்தச் செய்தியை தம்மால் இயன்ற அளவுக்கு அறிவிக்குமாறு எந்த ஏற்பாட்டையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யவில்லை. நான்கு கலீபாக்கள் காலத்திலும் இத்தகைய ஏற்பாடு எதையும் செய்யவில்லை.

மாதத்தை எப்படி முடிவு செய்வது என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்கள்.

நீங்கள் பிறை பார்த்து நோன்பைத் துவக்குங்கள். பிறை பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஅபான் மாதத்தின் நாட்களை முப்பது நாட்களாக முடிவு செய்து கொள்ளுங்கள் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழி. அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1909, 1907

மேக மூட்டமாக இருந்தால் வானில் பிறை இருப்பதற்குச் சாத்தியம் இருக்கிறது. எனவே உயரமான உஹது மலை மீது ஏறிப் பாருங்கள் என்றோ, அக்கம் பக்கத்து ஊர்களுக்குப் போய் விசாரித்துக் கொள்ளுங்கள் என்றோ கூறாமல், பிறை பிறக்கவில்லை என்று முடிவு செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்.

ஒரு பகுதியில் காணப்படும் பிறை அப்பகுதியினரை மட்டும் தான் கட்டுப்படுத்தும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இதைப் பின்வரும் நிகழ்ச்சி மேலும் உறுதி செய்கின்றது.

என்னை உம்முல் ஃபழ்ல் (ரலி) அவர்கள் சிரியாவில் இருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் ஒரு அலுவலுக்காக அனுப்பி வைத்தார்கள். நான் அங்கே சென்று அவர்கள் தந்த அலுவலை முடித்தேன். நான் அங்கே இருக்கும் போது ஒரு வெள்ளிக்கிழமை இரவு ரமளானின் முதல் பிறையைப் பார்த்தேன். பின்னர் மாதத்தின் இறுதியில் மதீனா வந்தடைந்தேன். என்னிடம் இப்னு அப்பாஸ் (ரலி) விசாரித்தார்கள். நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள்? என்று கேட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை இரவு பிறை பார்த்தோம் என்று கூறினேன். நீ பிறை பார்த்தாயா? என்று கேட்டார்கள். ஆம்! நானும் பார்த்தேன். மக்களும் பார்த்தார்கள். மக்களெல்லாம் நோன்பு நோற்றனர். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு நோற்றார்கள் எனக் கூறினேன். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நாங்கள் சனிக்கிழமை இரவு தான் பிறையைப் பார்த்தோம். எனவே நாங்களே மறு பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்களை நாங்கள் நிறைவு செய்யும் வரை நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். அப்போது நான், முஆவியா (ரலி) பிறை பார்த்ததும், அவர்கள் நோன்பு நோற்றதும் உங்களுக்குப் போதாதா? எனக் கேட்டேன். அதற்கவர்கள், போதாது! இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: குரைப் நூல்: முஸ்லிம் 1819

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner