Sunday, January 4, 2015

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் - தொடர் 12 - பி.ஜே

சூனியக்காரன் விஷயத்தில் மட்டும் ஒட்டு மொத்த குர்ஆனுக்கு மாற்றமாக கருத்து கொள்வது ஏன்?

ஆதமுக்கு சஜ்தா செய்யுமாறு அல்லாஹ் கட்டளையிட்டதால் பெரியார்கள் காலில் விழலாம் என்று தர்காவாதிகள் வாதிடுகின்றனர். 2:34, 17:61, 7:11, 18:50, 20:116 ஆகிய வசனங்களை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

மேலோட்டமாக இதை மட்டும் பார்க்கும் போது இது சரியாகத் தோன்றினாலும் இது ஒட்டு மொத்த குர்ஆன் போத்னைக்கு மாற்றமாக உள்ளது என்று சொல்லி வேறு விளக்கம் கொடுத்தார்களா? அப்படியே ஏற்று மகான்களூக்கு சஜ்தா செய்யலாம் என்று சொன்னார்களா?

சூனியக்காரன் விஷயத்தில் மட்டும் ஒட்டு மொத்த குர்ஆனின் கருத்தைக் கவனிக்காமல் ஒரு வசனத்துக்கு பொருள் கொடுப்பது என்ன நியாயம்?

நபிகள் நாயகத்துக்கு மறைவான ஞானம் உள்ளது என்று கூறி பின்வரும் வசனங்களை சமாதி வழிபாடு செய்வோர் எடுத்துக் காட்டுகின்றனர்.

அவன் மறைவானதை அறிபவன். தனது மறைவான விஷயங்களை அவன் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான்.

திருக்குர்ஆன் 72: 26,27


அவர் (முஹம்மது) மறைவானவற்றில் கஞ்சத்தனம் செய்பவரல்லர்.

திருக்குர்ஆன் 81:24


மேலோட்டமாகப் பார்க்கும் போது அந்த அர்த்தத்துக்கு இடம் உள்ளது என்று இவர்கள் ஒப்புக் கொண்டார்களா? மறைவான ஞானம் யாருக்கும் இல்லை எனக் கூறும் ஏராளமான வசனங்களைக் கவனத்தில் கொண்டு இதற்கு மறு விளக்கம் கொடுத்தார்களா?

சூனியக்காரனுக்கு ஒரு ஆற்றலும் இல்லை எனக் கூறும் ஏராளமான வசனங்களை மறந்து விட்டு அதற்கும் முரணாக 2:102 வசனத்துக்கு இவர்கள் கொடுக்கும் விளக்கத்துக்கும் சமாதி வழிபாட்டுக் காரர்களின் வாதத்துக்கும் கடுகளவும் வித்தியாசம் இல்லை.

(இப்படி ஏராளமான வசனங்கள் உள்ளன அதைப் பின்னர் விளக்குவோம்.)

தர்காவிற்கு செல்பவர்கள் கூட இறந்தவரை நல்ல மனிதர்கள் என்று நினைத்துக் கொண்டு அல்லாஹ் இவருக்கு அற்புத ஆற்றலைக் கொடுத்திருக்கின்றான் என்று சொல்கின்றனர். ஆனால் சூனியக்காரனுக்கு ஆற்றல் உள்ளதாக நம்புபவர்கள் அல்லாஹ்வை நிராகரிப்பவனுக்கு அல்லாஹ் இந்த ஆற்றலைக் கொடுத்துள்ளான் என்று சொல்கின்றனர். இது தர்காவாதிகளின் நம்பிக்கையை விட கேடுகெட்ட நம்பிக்கையாகும்.

அடுத்ததாக,

சூனியத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்பதற்கு மேலும் ஆதாரங்கள் உள்ளன.

மறைவான விஷயங்களை அல்லாஹ் சொல்லிவிட்டால் அதனை நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

மலக்குகள், வர்னவர்கள், ஜின்கள், ஷைத்தான்கள், சொர்க்கம், நரகம் மீண்டும் உயிர்ப்பித்தல் என அல்லாஹ் பல விஷயங்களைக் கூறுகின்றான்.

இதனை சோதனைக்கு உட்படுத்தாமல் அனைத்து முஸ்லிம்களும் நம்புகின்றோம். ஏனென்றால் இது சோதித்து அறியும் விஷயம் அல்ல. அல்லாஹ் சொல்லிவிட்டான் என்ற ஒரே காரணத்திற்காக நம்புகின்றோம்.

ஆனால் சோதனைக்கு உட்படுத்தப்படும் சில விஷயங்களும் உள்ளன. அவற்றை சோதித்துப் பார்த்து அது உண்மையா? பொய்யா என்று நம்ப வேண்டும். குருட்டுத்தனமாக நம்பக் கூடாது.

உதாரணமாக வழுக்கையான ஒருவனுக்கு இந்த எண்ணையைத் தேய்த்தால் முடி வளர்ந்துவிடும் என்று சொன்னால் இதனை சோதனைக்கு உட்படுத்திய பின்னரே நாம் நம்ப வேண்டும்.

இணை கற்பித்தல் என்ற பிரச்சனை வரும்போது அதைச் சோதித்துப் பார்த்துத் தான் அறிய வேண்டும்.

சூனியக்காரனுக்கு சக்தி இருப்பதாகச் சொன்னால் இப்போதே இதனை சோதனைக்கு உட்படுத்தி பார்க்க முடியும். ஏனெனில் இணைவைத்தலுக்கு எதிராக அல்லாஹ் இந்த வழிமுறையைத் தான் நமக்குக் கற்றுத் தருகிறான்.

"அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்ற, உங்கள் தெய்வங்கள் பூமியில் எதனைப் படைத்தன?'' என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களிலாவது அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!" என்று கேட்பீராக! அல்லது அவர்களுக்கு நாம் ஒரு வேதத்தை அளித்து அதனால் (கிடைத்த) தெளிவில் அவர்கள் இருக்கிறார்களா? இல்லை. இந்த அநியாயக்காரர்களில் ஒருவருக்கொருவர் மோசடியையே வாக்களிக்கின்றனர்.

திருக்குர்ஆன் 35:40

"அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் பூமியில் எதைப் படைத்தனர் என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களில் அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு முன் சென்ற வேதத்தையோ, அறிவுச் சான்றையோ என்னிடம் கொண்டு வாருங்கள்!'' என்று (முஹம்மதே!) கேட்பீராக!

திருக்குர்ஆன் 46:4


அல்லாஹ்வைப் போல் ஒருவனுக்கு சக்தி உண்டா என்ற பிரச்சனை வந்தால் அதை நிரூபித்துக் காட்டுமாறு கேட்பது தான் அல்லாஹ் கற்றுத் தரும் வழிமுறையாகும்.

சூனியக்காரனுக்கு ஆற்றல் இருந்தால் அதை நிரூபித்துக் காட்டு என்று கேட்பதும் அவ்வாறு நிரூபிக்க இயலவில்லை என்று தெரியும்போது அது பொய் என்று அறிந்து கொள்வதும் இஸ்லாம் காட்டும் வழிமுறையாகும்.

சூனியம் வைக்கும் ஒருவனைக் காட்டுங்கள். நாங்கள் சொல்வதை அவன் செய்யட்டும் அல்லது அவன் தனக்கு என்ன சக்தி இருப்பதாகச் சொல்கின்றானோ அதனைச் செய்து காட்டட்டும் என்று கேட்டால் எவனும் முன்வருவதில்லை.


அல்லாஹ் கூறுகின்றான்.

எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணைகற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள முடியாது. (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானதே!  அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!  அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? "உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!'' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 7:191- 195

சிலைகளுக்கு கைகால்களை அமைத்து அந்தக் கைகளால் அவை மனிதனின் தேவைகளை நிறைவேற்றும் என்று சொல்கிறார்கள். இது எங்கள் நம்பிக்கை என்றும் சொல்கிறார்கள்.

இதை அல்லாஹ் ஏற்கவில்லை. அந்தக் கைகளால் எதையாவது பிடித்துக் காட்டட்டும். அந்தக் கால்களால் நடந்து காட்டட்டும் என்று கூறி இணைவைப்புக்கு எதிராக நாம் எடுக்க வேண்டிய நிலையை அல்லாஹ் கற்றுத் தருகிறான்.

சூனியக்காரனுக்கு ஆற்றல் உண்டு என்றால் அதைச் செய்து காட்டு! நிரூபித்துக் காட்டு என்று நாம் கேட்கிறோம். யாருமே நிரூபித்துக் காட்ட முன்வராவிட்டால் சூனியத்துக்கு ஒரு ஆற்றலும் இல்லை என்று புரிந்து கொள்வது தான் திருக்குர்ஆன் அடிப்படையில் எடுக்க வேண்டிய சரியான முடிவாகும்

இப்படியாக நாம் வாதம் வைத்தால் இவர்கள் எல்லாவற்றிலும் தர்க்கம் செய்து அறிவுப்பூர்வமாக பேசுகின்றார்கள் என்று வெட்கமில்லாமல் கூறுவார்கள்.

சூனியத்தை நம்புபவர்கள் அறிவு கெட்டவர்களாக இருந்து கொண்டு அறிவுப்பூர்வமாக பேசுகின்றவர்களை கேவலமாகச் சித்தரிக்கின்றனர்.

இஸ்லாத்தில் தர்க்கம் செய்து அறிவார்ந்த் முறையில் தான் பேச வேண்டும்.

இதோ ஹூது நபி விட்ட அறைகூவலைப் பாருங்கள்.

"எங்கள் கடவுள்களில் சிலர் உமக்குக் கெடுதி செய்து விட்டார்கள்'' என்றே கூறுகிறோம் (என அவர்கள் கூறினர்). "நான் (இதற்கு) அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறேன்; நீங்களும் சாட்சியாக இருங்கள்! அவனையன்றி நீங்கள் எதை இணை கற்பித்தீர்களோ அதை விட்டும் நான் விலகியவன்; எனவே அனைவரும் எனக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! பின்னர் எனக்கு எந்த அவகாசமும் அளிக்காதீர்கள்!'' என்று அவர் கூறினார்.

 திருக்குர்ஆன் 11:54, 55
ஹூது நபி சொன்னது போல் நாங்கள் சொல்கிறோம். சூனியக்காரனுக்கு ஒரு ஆற்றலும் இல்லை. அப்படி இருந்தால் எனக்குச் செய்து காட்டு என்று அறைகூவல் விடுக்கிறோம்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

திருக்குர்ஆன் 7:194
சிலைகளுக்கு ஆற்றல் உண்டு என்று சொன்னால் அதை நிரூபித்துக் காட்டுமாறு கேட்க வேண்டும் அல்லாஹ் எவ்வளவு அழகாக மேற்கண்ட வசனங்களில் கற்றுத்தருகிறான் என்று சிந்தியுங்கள்.

இணைகற்பித்தல் என்ற பிரச்சனை வந்தால் அதற்கான தீர்வு அதை நிரூபித்துக் காட்டச் சொல்வது தான். சூனியமும் இணை கற்பித்தல் என்ற என்ற நிலையில் இருப்பதால் அதையும் சோதனைக்கு உட்படுத்துவது தான் சரியான வழிமுறை.
முஸ்லிம் பெயர்தாங்கிகளும் சூனியக்காரர்களாக உள்ளனர். இவர்களுக்கு ஆற்றல் இருந்தால் உலக அளவிலும் இந்திய அளவிலும் முஸ்லிம்களை அழித்து ஒழிப்பதைக் கொள்கையாகக் கொண்டவர்களுக்கு சூனியம் வைத்து சமுதாயத்துக்கு நல்லது செய்திருக்கலாமே?
முஸ்லிம் அல்லாதவர்களிலும் சூனியக்காரர்கள் உள்ளனர் இவர்களை நம் நாட்டு அரசியல்வாதிகள் பயன்படுத்தி யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதோ அந்தத் தலைவரை ஊமையாக ஆக்கினால் போதுமே? அப்படி ஏதும் நடக்கக் காணோம்.

சூனியத்தின் மூலம் நாங்கள் எதையும் செய்வோம் எனக் கூறும் அனைவருக்கும் அனைத்து மதத்தவர்களுக்கும் நான் ஒரு அறைகூவல் விடுகிறேன்.

ஜைனுல் ஆபிதீனாகிய எனக்கு அவர்கள் சூனியம் செய்து காட்டட்டும். அவர்கள் கேட்கும் காலடி மண், போட்டு இருக்கும் சட்டை, தலைமுடி இன்னும் அவர்கள் எதை எல்லாம் கேட்கிறார்களோ அவை அனைத்தையும் தருகிறேன். எனக்கு அவர்கள் சூனியம் செய்து காட்டட்டும்.

என்னுடன் அவர்கள் ஒப்பந்தம் செய்துகொண்டு எந்த நாளில் எந்த நேரத்தில் எனக்கு சூனியம் செய்யப் போகிறார்கள் என்பதை விளம்பரப்படுத்தட்டும். நாமும் அதை விளம்பரப்படுத்துகிறோம்.

சூனியத்தின் மூலம் என்னை சாகடிக்கப் போகிறார்களா?

அல்லது என்னை மனநோயாளியாக ஆக்கப் போகிறார்களா?

அல்லது எனது கைகால்களை முடக்கப் போகிறார்களா?

என்பதையும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடட்டும். அதையும் மக்களிடம் நாம் விளம்பரம் செய்வோம்.


அவர்கள் குறிப்பிடும் நாளில் குறிப்பிடும் நேரத்தில் குறிப்பிடும் இடத்தில் மேடை போட்டு நான் அமர்ந்து கொள்கிறேன். மக்களில் ஒரு பெருங்கூட்டம் இதைப் பார்த்துக் கொண்டு இருக்கட்டும். அவர்கள் எனக்குச் செய்வதாக சொன்ன சூனியத்தைச் செய்து எனக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் நான் ஐம்பது லட்சம் ரூபாய் சன்மானம் தரத் தயார்.

எந்த மதத்தைச் சேர்ந்த சூனியக்காரர்களும் எனக்குச் செய்து இந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ளட்டும். தொகை போதாது என்றால் இதைவிடவும் அதிகமாகக் கொடுக்க நான் தயார் என்பதை பகிரங்க அறைகூவலாக விடுக்கிறேன். இதுவே சூனியம் பொய் என்பதை நிரூபித்துக்காட்டும். இன்ஷா அல்லாஹ்

சூனியக்காரனின் பிழைப்பில் நான் மண் அள்ளிப்போடுவதால் தங்கள் பிழைப்பைத் தொடர்வதற்கு இடையூறாக இருக்கும் எனக்கு சூனியம் செய்யும் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது.
அப்படி சூனியம் செய்ய முன்வருபவனுக்கு தவ்ஹீத் ஜமாஅத்காரர்களால் எந்த அச்சுறுத்தலும் வராது என்பதற்கு நான் உத்தரவாதமும் தருகிறேன்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டு மனநோய்க்கு ஆளானார்கள் என்ற செய்தி நூறு சதவிகிதம் கட்டுக் கதை என்பதை திருக்குர்ஆனின் சான்றுகளுடன் நாம் மேலும் அறிந்து கொள்வோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், முந்தைய நபிமார்களும் தம்மை அல்லாஹ்வின் தூதர் என்று சொன்னபோது, அதை ஏற்க மறுத்த காபிர்கள் சொன்ன காரணங்கள் என்ன?

சாப்பிடுகிறீர்கள்,

பருகுகிறீர்கள்,

எங்களைப் போல் மனிதர்களாக இருக்கிறீர்கள்,

நீங்கள் சோதிடக்காரர்கள்

திறமை வாய்ந்த புலவர்கள்

உங்களுக்கு யாரோ சூனியம் வைத்ததால் இப்படி புத்தி பேதலித்து உளறுகிறீர்கள்

என்று சொன்னார்கள்.

இவர்களின் மற்ற விமர்சனங்களை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் நபி சூனியம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறுவதையும், சோதிடக்காரர் என்பதையும் புலவர் என்பதையும் மட்டும் கடுமையான சொற்களால் மறுக்கிறான்.

இது பற்றி விபரமாகப் பார்ப்போம்.

தூதராக மனிதரையா அல்லாஹ் அனுப்பினான்? என்று அவர்கள் கூறுவதுதான், மனிதர்களிடம் நேர்வழி வந்த போது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது.

திருக்குர்ஆன் 17:94

"நீங்கள் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்வோராகவே இருக்கிறீர்கள்'' என்று கூறினர்.

திருக்குர்ஆன் 36:15

நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. உம்மைப் பொய்யராகவே கருதுகிறோம்.
திருக்குர்ஆன் 26:186

"நீர் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு இல்லை. நீர் உண்மையாளராக இருந்தால் சான்றைக் கொண்டு வருவீராக!''

திருக்குர்ஆன் 26:154

"இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடைவீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?'' என்று கேட்கின்றனர்.

திருக்குர்ஆன் 25:7

"இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்பதையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அருந்துவதையே இவரும் அருந்துகிறார்'' என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏகஇறைவனை) மறுத்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யெனக் கருதி, இவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை வழங்கினோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 23:33

"இவ்விருவரின் சமுதாயத்தினர் நமக்கு அடிமைகளாக இருக்கும் நிலையில் நம்மைப் போன்ற இரு மனிதர்களை நாம் நம்புவோமா?'' என்றனர்.

திருக்குர்ஆன் 23:47

அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. "இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார்? பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா?'' என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர்.
திருக்குர்ஆன் 21:3
இப்படியெல்லாம் நபிமார்கள் விமர்சிக்கப்பட்ட போது அதை அல்லாஹ் மறுக்கவில்லை. மாறாக இறைத்தூதர்கள் மனிதர்கள் தான் என்றே பதிலளித்தான்.

"நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்'' என்று அவர்களின் தூதர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 14:11

"என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 17:93

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்கு தூதுச்செய்தி அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! உணவு உட்கொள்ளாத உடலாக அவர்களை நாம் ஆக்கவில்லை. அவர்கள் நிரந்தரமாகவும் இருக்கவில்லை.

திருக்குர்ஆன் 22:7,8

சூனியத்தால் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று நம்புபவர்களாக மக்கள் இருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கம், நரகம் போன்றவற்றை மக்களுக்குச் சொன்னபோது அது அறிவுக்கு எட்டாமல் இருந்ததால் இவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று கூறினார்கள்.

நபிமார்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்று சொல்லும் போதும் அவர்களுக்கு மனநோய் ஏற்பட்டது என்று சொன்ன போதும் கடுமையாக மறுக்கிறான்.

"சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதனையே பின்பற்றுகிறீர்கள்'' என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம்.

திருக்குர்ஆன் 17:47

அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா?'' என்றும் "சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்'' என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.

திருக்குர்ஆன் 25:8

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர்'' என விமர்சனம் செய்தவர்களை அநியாயக்காரர்கள் என்று இவ்வசனங்கள் பிரகடனம் செய்கின்றன.

"இறைத் தூதர்களுக்கு சூனியம் வைப்பது சாதாரண விஷயம்; அதனால் அவரது தூதுப்பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது'' என்றிருந்தால் இந்த விமர்சனத்தை இறைவன் மறுக்க மாட்டான்.

இறைத்தூதர் சாப்பிடுகிறார்; குடிக்கிறார் என்று விமர்சனம் செய்யப்பட்ட போது, சாப்பிடுவதாலோ குடிப்பதாலோ தூதுப்பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதால் அதை இறைவன் மறுக்கவில்லை. எல்லாத் தூதர்களும் சாப்பிடத்தான் செய்தார்கள் என்று பதிலளித்தான்.

ஆனால் நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறிய போது, அநியாயக்காரர்கள் இப்படிக் கூறுகிறார்களே என்று மறுத்துரைக்கிறான். சூனியம் வைக்கப்பட்டு இறைத்தூதர் பாதிக்கப்பட்டால் அது தூதுப்பணியைப் பாதிக்கும் என்பதால் தான் இதை மறுக்கிறான்.

"இந்த வசனம் அருளப்படும் போது சூனியம் வைக்கப்படாமல் இருந்து, பின்னர் சூனியம் வைக்கப்பட்டிருக்கலாம் அல்லவா?'' என்று சிலர் பேசுவார்கள். இது ஏற்க முடியாததாகும்.

பின்னர் சூனியம் வைக்கப்படும் என்றால் அது நிச்சயம் இறைவனுக்குத் தெரிந்திருக்கும். நாளைக்குச் சூனியம் வைக்கப்படுவதை அறிந்துள்ள இறைவன் இன்றைக்கு அதை மறுப்பதால் எந்த நன்மையும் இல்லை.
மேற்கண்ட இரண்டு வசனங்களையும் அடுத்த வசனங்களையும் இவர்கள் கவனித்தால் இத்தகைய தத்துவங்களைக் கூற மாட்டார்கள்.

(முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பற்றி எவ்வாறு உதாரணங்களைக் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் வழிகெட்டு விட்டனர். அவர்கள் நேர்வழி அடைய இயலாது.
திருக்குர்ஆன் 25:9

உமக்கு எவ்வாறு அவர்கள் உதாரணம் காட்டுகிறார்கள் என்று கவனிப்பீராக! எனவே அவர்கள் வழிகெட்டனர். அவர்கள் நேர்வழியை அடைய இயலாது.

திருக்குர்ஆன் 17:48

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர்'' என்று விமர்சனம் செய்தவர்களை வழிகெட்டவர்கள் என்று இங்கே இறைவன் பிரகடனம் செய்கிறான். அவர்கள் நேர்வழியை அடைய இயலாது என்றும் கூறுகிறான்.

சூனியம் செய்யப்பட முடியாத ஒருவரை சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறுகிறார்களே என்பதால் தான் உம்மை எப்படி விமர்சிக்கிறார்கள் என்பதைக் கவனியும் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

திருக்குர்ஆனின் தெளிவான தீர்ப்பின்படி நபிகள் நாயகத்துக்கோ, வேறு எந்த இறைத்தூதருக்கோ எவரும் சூனியம் செய்யவோ, முடக்கவோ இயலாது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

சூனியம் செய்யப்பட்டவர் என்பதுடன் பைத்தியம் பிடித்து விட்டது என்றும் சொன்னார்கள். இதையேதான் இந்த சூனியத்தை நம்புபவர்களும் கூறுகின்றார்கள்.

அப்படிக் கூறி விட்டு நபிகள் நாயகத்துக்கு சூனியத்தால் பைத்தியம் ஏற்பட்டது என்று நாங்கள் சொன்னோமா என்று சூனியக் கட்சியினர் கேட்கிறார்கள்.

இது எப்படி இருக்கிறது?

இஸ்மாயீல் என்பவர் முபாரக் என்பவரின் பணத்தை அவருக்கு தெரியாமல் எடுத்து பதுக்கி வைத்துக் கொண்டார் என்று அபூபக்ர் என்பவர் கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அபூபக்கர் இவ்வாறு கூறியதை கேட்ட நான் இஸ்மாயீல் பணத்தை முபாரக் திருடினார் என்று அபூபக்கர் சொன்னதாக கூறுகிறேன். இதைக் கேட்ட அபூபக்கர் நான் திருடி விட்டார் என்று சொன்னேனா? தெரியாமல் எடுத்து வைத்துக்கொண்டார் என்று தானே சொன்னேன்? நான் சொல்லாததை சொன்னதாக எப்படிச் சொல்லலாம் என்று என்னிடம் சண்டைக்கு வருகிறார்.

இது போல் தான் இவர்களின் வாதங்கள் உள்ளன. திருடன் என்ற வார்த்தையைத் தான் சொல்லவில்லை. ஆனால் வேறு வார்த்தையில் அதைத் தான் சொன்னார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யாததை செய்ததாக ஆறுமாத காலம் சொல்லிக் கொண்டு இருந்தார்கள் என்பதும் ஆறுமாதம் மனநோயாளியாக இருந்தார்கள் என்று சொல்வதும் ஒரே கருத்தைச் சொல்லும் இருவேறு சொல் வடிவங்கள் தான்.

நபி அவர்களுக்குப் பைத்தியம் பிடித்துள்ளது என்று மக்கள் சொன்னவுடன் அல்லாஹ் கோபப்படுகின்றான்.

எனவே (முஹம்மதே!) அறிவுரை கூறுவீராக! உமது இறைவனின் பேரருளால் நீர் சோதிடர் அல்லர். பைத்தியக்காரரும் அல்லர்.

திருக்குர்ஆன்  52:29

நபி அவர்களை அல்லாஹ் பைத்தியமாக ஆக்க மாட்டான் என்று தெளிவாகச் சொல்லியுள்ளான்.

நூன். எழுதுகோல் மீதும், அவர்கள் எழுதுவதன் மீதும் சத்தியமாக, (முஹம்மதே!) உமது இறைவனின் அருட்கொடையால் நீர் பைத்தியக்காரராக இல்லை. உமக்கு முடிவுறாத கூலி உண்டு. நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.

திருக்குர்ஆன் 68:1-6

அவர்களின் தோழருக்கு (முஹம்மதுக்கு) எந்தப் பைத்தியமும் இல்லை என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அவர் தெளிவான எச்சரிக்கை செய்பவரே.

திருக்குர்ஆன் 7:184

இவ்வசனங்களை ஊன்றிக் கவனியுங்கள். நபிகள் நாயகத்துக்கு பைத்தியம் பிடிக்காமல் ஆக்கியது எனது அருள் என்று அல்லாஹ் சொல்கிறான். எவனுக்காவது சந்தேகம் இருந்தால் அவரைக் கவனித்து அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும் சிந்தித்துப் பார். அவருக்கு எந்த வகையான மன நோயும் இல்லை என்று அறிந்து கொள்வீர்கள் என்று அல்லாஹ் அறைகூவல் விடுக்கிறான்.

சூனியக் கட்சியினருக்கு மரண அடியாக அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.

 "நீங்கள் இருவர் இருவராகவோ, தனித் தனியாகவோ அல்லாஹ்வுக்காக சற்று நேரம் ஒதுக்கி பின்னர் "உங்கள் தோழருக்கு (எனக்கு) பைத்தியம் எதுவுமில்லை; கடுமையான வேதனைக்கு முன் அவர் உங்களுக்கு எச்சரிக்கை செய்பவரே தவிர வேறில்லை'' என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தையே உங்களுக்குப் போதிக்கிறேன்'' எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன் 34:46

நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டு அவர்கள் மன நோயாளியாக ஆனார்கள் என்று சொல்பவர்களே ஒவ்வொருவராக வந்து அல்லது இருவர் இருவராக வந்து முஹம்மது நபியை சோதித்துப் பாருங்கள். ஒவ்வொருவரும் அவரிடம் எந்த வகையான கேள்வியையும் கேட்டுப் பாருங்கள். அவர் மன நோயாளி போல் பதில் சொல்கிறாரா? மாமேதை போல் பதில் சொல்கிறாரா? என்று சோதித்துப் பார்த்தால் அவருக்கு எந்த வகையான மனநோயும் இல்லை என்று அறிந்து கொள்வீர்கள் என்று அல்லாஹ் அறைகூவல் விடுக்கிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதால் அவர்கள் மன நோயாளியானார்கள் என்ற செய்தி கட்டுக்கதை என்பதற்கு இந்த ஒருவசனமே போதிய ஆதாரமாக உள்ளது.

இதிலிருந்து நமக்கு என்ன தெரிகின்றது. நபி அவர்களுக்கு எந்த வித மனநோயும் வராது என்பது அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய தனிச் சிறப்பு.

மனநோய் என்று எவனாவது சந்தேகப்பட்டால் சோதனை செய்து பாருங்கள் என்று அறைகூவல் விட்ட நபி அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்று சொன்னால் இது எவ்வளவு தவறான கருத்து என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்க முடியாதென்றால், மற்றவருக்கு வைக்க முடியுமா என்ற சந்தேகம் வரலாம். இதை இன்ஷா அல்லாஹ் நாளை பார்க்கலாம்.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner