Monday, March 5, 2012

அறுக்கப்பட்டதை உண்ணுதல் - திருக்குர்ஆன் விளக்கம்

இவ்வசனங்களில் (5:3, 5:4, 6:118, 6:119, 6:121, 11:69, 16:5, 16:14, 22:28, 22:36, 23:21, 35:12, 36:72, 40:79, 51:26) உயிரினங்களை மனிதன் அறுத்து உண்ணலாம் என்று அனுமதிக்கப்படுகிறது. இந்த அனுமதி ஜீவகாருண்யத்திற்கு எதிரானதாக சிலரால் கருதப்படுகிறது. ஆழமாகச் சிந்திக்கும் பொழுது இது மனித குலத்துக்கு நன்மை செய்கின்ற ஒரு அனுமதி என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

உயிரினங்களை உணவுக்காகக் கொல்லக் கூடாது என்போர் அது உயிர் வதை என்றே காரணம் கூறுகின்றனர். உயிர் வதை தான் காரணம் என்றால் பல விஷயங்களை அவர்கள் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.
கால்நடைகளை விவசாயப் பணிகளிலும், பாரம் இழுக்கும் பணிகளிலும் பயன்படுத்துவது உயிர் வதையா? இல்லையா?

கன்றுகளுக்காக தாய்ப் பசுவிடம் சுரக்கும் பாலை ஏமாற்றி அருந்துவது உயிர் வதையா? இல்லையா?

இன்றைய அறிவியல் உலகில் தாவரங்களுக்கும் உயிர் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதே! அப்படியானால் தாவரங்களையும், காய் கனிகளையும் உண்பது உயிர் வதை இல்லையா?

மனிதன் அருந்துகின்ற தண்ணீ ரிலும் கோடிக் கணக்கான உயிர்கள் இருப்பது இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த உயிர்களுடன் தண்ணீரை அருந்துவது உயிர் வதையா? இல்லையா?

கொசு, தேள், பாம்பு போன்ற எத்தனையோ உயிர்களை மனிதன் தனது சுய நலத்திற்காகக் கொல்வது உயிர் வதையா? இல்லையா?

உயிரினங்களை உட்கொள்ளக் கூடாது என்பதற்கு உயிர் வதை தான் காரணம் என்றால் மேற்கண்டவற்றிலும் உயிர் வதை இருக்கிறதே என்பதைச் சிந்திக்க வேண்டும்.

அசைவம் சாப்பிடக் கூடாது என்பதற்கு உயிர் வதை தான் காரணம் என்றால் தாமாகச் செத்த பிராணிகளையும், மீன்களையும் தவிர்ப்பது ஏன்?
 
மீன்களைத் தவிர எந்த உணவும் கிடைக்காத துருவப் பிரதேசங்களில் வசிப்பவர்கள் இக்கொள்கையைக் கடைப்பிடித்தால் உலகில் வாழ முடியுமா?
 
இவ்வாறு தவிர்ப்பவர்கள் கண் பார்வை கூர்மையடைவதற்காக மீன் எண்ணையால் செய்யப்பட்ட மாத்திரைகளை உட்கொள்கின்றனர். இவர்களின் மனசாட்சி இதை ஏற்றுக் கொள்கிறது.

இது போன்ற கேள்விகளைச் சிந்தித்தால் தனது நன்மைக்காக மனிதன் அல்லாத பிற உயிரினங்களை வதைப்பதையும், கொல்வதையும் மனிதனின் உள் மனது ஏற்றுக் கொள்கிறது என்று அறிந்து கொள்ளலாம். போலித் தனமாகவே, முன்னோர் கூறியதில் கொண்ட குருட்டு நம்பிக்கையின் காரணமாகவே உயிர் வதை என்று காரணம் காட்டி அசைவ உணவுகளைத் தவிர்த்து வருகின்றனர்.

Sunday, March 4, 2012

சித்தப்பா மகளை திருமணம் செய்யலாமா?







தொழுகையில் விரலசைப்பதால் கவனம் சிதறுமா?

கேள்வி - தொழுகையில் விரலசைப்பதால் நம் கவனமும், மற்றவரின் கவனமும் சிதறாதா? தொழுகையில் இறையச்சத்துடன் தொழ வேண்டும் என்ற கட்டளை இதனால் கெடாதா? -  அப்துல்லாஹ், நாகர்கோவில்

பதில் - ஒரு அடிப்படை விஷயத்தைக் கவனத்தில் கொள்ளாமல் இக்கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். தொழுகை என்ற வணக்கத்தை எவ்வாறு நிறைவேற்ற வேண்டுமென்பதை நபி (ஸல்) அவர்கள் தான் நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள். மேலும், என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள் (புகாரி 631) என்று கூறியுள்ளார்கள். 

இவ்வாறு கூறிய நபி (ஸல்) அவர்கள் தொழும் போது விரலசைத்து தொழுதுள்ளார்கள். ...நபி (ஸல்) அவர்கள் தமது இடது முன் கையை இடது தொடை மீதும் மூட்டுக்கால் மீதும் வைத்தார்கள். தமது வலது முழங்கையை வலது தொடை மீது வைத்தார்கள். பின்பு தமது விரல்களில் இரண்டை மடக்கிக் கொண்டு (நடுவிரலையும் கட்டை விரலையும் இணைத்து) வளையம் போல் அமைத்து, ஆட்காட்டி விரலை உயர்த்தி அதன் மூலம் (யாரையோ) அழைப்பது போல் அவர்கள் அசைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)  நூல்: நஸயீ 879

இச்செய்தி தாரமீ 1323, அஹ்மத் 18115, இப்னு ஹுஸைமா பாகம் 1; பக்கம் 354, இப்னு ஹிப்பான் பாகம் 5; பக்கம் 170, தப்ரானீ கபீர் பாகம் 22; பக்கம் 35, பைஹகீ பாகம் 1; பக்கம் 310, ஸுனனுல் குப்ரா இமாம் நஸயீ பாகம் 1; பக்கம் 376, அல்முன்தகா இப்னுல் ஜாரூத் பாகம் 1; பக்கம் 62ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.

எனவே தான் நாம் விரலசைத்து தொழ வேண்டுமென்று கூறுகிறோம்.

தொழுகையில் பேணுதல் இருக்க வேண்டுமென்று சுட்டிக் காட்டிய நபி (ஸல்) அவர்கள் தான் விரலசைத்துத் தொழுதுள்ளார்கள். தக்பீர் கட்டி நிற்பவர் திடீரென்று குனிந்து ருகூவுச் செய்வதால் கவனம் திரும்புகிறது என்று சொல்ல முடியுமா? அது போன்று தான், விரலசைப்பதால் கவனம் திரும்புகிறது என்று சொல்வதும் அமைந்துள்ளது. நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்கன் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். 

அது பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்கன் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டு விட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்க்கொண்டனர். அவர்கல் ஒருவர், (இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுது கொண்டே இருக்கப் போகிறேன் என்றார். இன்னொருவர், நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன் என்று கூறினார். மூன்றாம் நபர் நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ள மாட்டேன் என்று கூறினார். 

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்கடம்) வந்து, இப்படி இப்படியெல்லாம் பேசிக் கொண்டது நீங்கள் தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி)  நூல்: புகாரி 5063

உங்களை விட அல்லாஹ்விற்கு அதிகம் அஞ்சுபவன் நானே! என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் விரலசைத்துத் தொழுதுள்ளதால் விரலசைத்துத் தொழுவது பேணுதலான ஒன்றே!

இறைவனுக்குச் செய்யும் வணக்கங்கள் மனிதனின் விருப்பு, வெறுப்பு அடிப்படையில் அமைந்தவை அல்ல! படைத்தவனின் விருப்பத்தின் அடிப்படையில் அமைந்தவையே! படைத்த இறைவன் தனது தூதர் மூலம் எப்படி தொழச் சொன்னானோ அதன்படி வணங்குவதே அல்லாஹ்வின் அன்பையும், கூலியையும் பெற்றுத் தரும் என்பதைக் கவனத்தில் கொள்க!

- பி.ஜே

கொள்கை விளக்கம் - பி.ஜே - தொடர் 4

தப்லீக் ஜமாஅத்

முஸ்லிம்களிடம் செல்வாக்குப் பெற்ற இயக்கங்களில் தப்லீக் ஜமாஅத் முதலிடம் வகிக்கின்றது. அந்த ஜமாஅத்தில் நம்மை இணைத்துக் கொள்ளலாமா? அந்த ஜமாஅத்தின் கொள்கை, கோட்பாடுகள் இஸ்லாமிய அடிப்படையில் அமைந்துள்ளனவா?

நாற்பது நாட்கள், ஒரு வருடம் என்று ஊர் ஊராக அழைத்துச் சென்று மக்களைத் தொழுகைக்கு அழைக்கின்றனர். இது சரியா? என்றெல்லாம் பல கேள்விகள் முஸ்லிம்களிடையே நிலவுகின்றன.

எனவே இது பற்றி நாம் விரிவாக ஆராய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

நாற்பது நாட்களுக்கோ, ஒரு வருடத்திற்கோ மார்க்க வேலைகளுக்காகவோ சொந்த வேலைக்காகவோ வெளியூர் செல்வது மார்க்கத்தில் குற்றமாகாது.

மார்க்கத்தை அறிந்து கொள்வதற்காகவும், பிறருக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும், அறப்போர் செய்வதற்காகவும், ஹலாலான முறையில் பொருளீட்டுவதற்காகவும், இன்ன பிற தேவைகளுக்காகவும் பிரயாணம் மேற்கொள்வதை மார்க்கம் தடுக்கவில்லை; அனுமதிக்கின்றது.

மூஸா (அலை) அவர்கள் சில விஷயங்களை அறிந்து கொள்வதற்காக இறைவனது கட்டளைப்படி ஹில்று (அலை) அவர்களைச் சந்திக்க மேற்கொண்ட பயணம் பற்றி இறைவன் குறிப்பிடுகிறான். (திருக்குர்ஆன் 18:60 - 18:82)
 
ஒரே ஒரு மார்க்கச் சட்டத்தை அறிந்து கொள்வதற்காக மக்காவிலிருந்து மதீனாவுக்குப் பயணம் செய்து வந்த நபித் தோழர்களும் இருந்துள்ளனர்.  புகாரி : 88, 2640


நல்ல காரியங்களுக்காகப் பிரயாணம் மேற்கொள்ளலாம் என்பதற்கு இவை சான்றுகளாக உள்ளன.  இது பற்றி இன்னும் ஏராளமான சான்றுகளும் உள்ளன.

எனவே பயணம் செய்வது சரியா? தவறா? என்ற அடிப்படையில் இதனை அணுகுவது சரியில்லை. இந்தப் பயணம் எதற்காக மேற்கொள்ளப்படுகின்றது என்ற அடிப்படையிலேயே இந்த ஜமாஅத் சரியான ஜமாஅத்தா? இல்லையா? என்ற முடிவுக்கு வர முடியும்.

'எதற்காக மக்களை அழைக்கிறீர்கள்?' என்று கேட்டால், 'தொழுகையின் பால் மக்களை அழைப்பதற்காகத் தான் ஆள் சேர்க்கிறோம்' என்று கூறுகின்றனர்.
  1. 'தொழுகை எனும் மிக முக்கியமான கடமையின் பால் மக்களை அவர்கள் அழைக்கின்றனர்; இதற்காக தங்கள் சொந்தப் பணத்தைச் செலவு செய்து பிரயாணம் மேற்கொள்கின்றனர்' என்பது உண்மை தான். 
  2. பெருமையும், கர்வமும் கொண்ட பலர், தப்லீக் ஜமாஅத் மூலம் சாதுவானவர்களாக  மாறியுள்ளதை மறுக்க முடியாது.
  3. பெரும் செல்வந்தர்கள் கூட இந்த ஜமாஅத்தில் செல்லும் போது சமையல் செய்வதற்கும் முன் வருகிறார்கள்.
  4. தஹஜ்ஜுத், லுஹா போன்ற வணக்கங்களைப் பேணுதலுடன் செய்து வருகின்றனர்.
  5. சினிமாக்களை விட்டு விடுகின்றனர்.

Saturday, March 3, 2012

ஹதீஸ் கலையின் அடிப்படை என்ன?

  • ஹதீஸ் என்றால் என்ன?
  • நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் என்பதன் விளக்கம் என்ன?
  • ஹதீஸின் வகைகள் எத்தனை?
  • குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் வேறுபாடு என்ன?
  • ஹதீஸ்களை சரியானது, தவறானது என்று ஏன் பிரிக்க வேண்டும்?
  • ஹதீஸ்களை எதை வைத்து சரியானது என முடிவு செய்யப்படுகிறது?

ஆதம் (அலை), ஹவ்வா (அலை) ஆகியோருக்கு தொப்புள் கிடையாதா?

கேள்வி - ஆதம் (அலை), ஹவ்வா (அலை) ஆகியோர் எந்த நாட்டில் இறக்கப்பட்டார்கள்? அவர்களுக்குத் தொப்புள் கிடையாது என்று கூறப்படுவது உண்மையா?  எம்.ஏ. ஜின்னாஹ், கடலூர் துறைமுகம்

பதில் - ஆதம் (அலை) அவர்கள் எங்கு இறக்கப்பட்டார்கள் என்பது குறித்து நேரடியாக குர்ஆன் ஹதீஸில் எந்தக் குறிப்பும் இல்லை. இது குறித்து ஏராளமான கதைகள் கூறப்படுகின்றன. இவற்றில் எதற்குமே ஆதாரம் இல்லை. ஆனால் முதன்முதலில் அல்லாஹ்வை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட ஆலயம் மக்காவில் உள்ள கஃபா தான் என்று அல்குர்ஆன் கூறுகின்றது.

அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.  அல்குர்ஆன் 3:96

மனித சமுதாயம் இறைவனை வழிபடுவதற்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் கஃபா என்றால் அதை ஏற்படுத்தியவர் ஆதம் (அலை) அவர்களாகத் தான் இருக்க வேண்டும். ஆதம் (அலை) அவர்கள் இறைத்தூதராக இருந்ததால் அவர்கள் வணங்குவதற்காக நிச்சயம் ஓர் ஆலயத்தை நிர்மாணித்திருப்பார்கள். அந்த ஆலயம் மக்காவில் உள்ள கஃபா என்று இறைவன் கூறுகின்றான். எனவே இதை வைத்துப் பார்க்கும் போது ஆதம் (அலை) அவர்களும் அவரது துணைவியாரும் இறக்கப்பட்டது மக்காவில் தான் என்பது தெளிவாகின்றது.

அவ்விருவருக்கும் தொப்புள் உண்டா என்று கேட்டுள்ளீர்கள். தொப்புள் என்பது கருவில் இருக்கும் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் செல்லும் குழாயின் இணைப்பாகவுள்ளது.

கருவில் வளரும் குழந்தைக்குத் தான் தொப்புள் கொடி இருக்கும். இறைவனால் நேரடியாக இருவரும் படைக்கப்பட்டதால் தொப்புள் இருக்க முடியாது என்ற லாஜிக்கின் அடிப்படையில் அவ்விருவருக்கும் தொப்புள் கிடையாது என்று சிலர் கூறுகின்றனர்.

ஆனால் இந்த லாஜிக்கை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் தொப்புள் கொடிக்கு இவர்கள் கூறுகின்ற காரணம் பொருந்தினாலும் அது ஆணுக்கும் பெண்ணுக்கும் கவர்ச்சியை அதிகரிக்கக் கூடிய ஒரு படைப்பாக அமைந்துள்ளது.

மனிதனை அழகிய வடிவில் படைத்தோம் என்று இறைவன் கூறுவது தொப்புளையும் சேர்த்துத் தான். தொப்புள் இல்லாத ஆணையோ பெண்ணையோ கற்பனை செய்து பாருங்கள். விகாரமாக இருக்கும். எனவே ஆதம், ஹவ்வா ஆகிய இருவரும் அவ்வாறு இருந்திருந்தால் நிச்சயமாக அது அழகிய வடிவமாக இருக்காது.

தொப்புள் இல்லாமல் இருப்பது தான் அழகிய வடிவம் என்றால் அவ்விருவரின் வழித் தோன்றல்களுக்கு மற்ற தழும்புகள் காலப்போக்கில் மறைவது போல் தொப்புளும் மறைந்து சமமாக ஆகி விடவேண்டும். அவ்வாறு ஆகாமால் வேண்டுமென்றே அல்லாஹ் குறிப்பிட்ட வடிவத்தில் அதை விட்டு வைத்துள்ளான். எனவே தொப்புள் கொடி லாஜிக் பேசி, ஆதம், ஹவ்வாவுக்கு தொப்புள் கிடையாது என்று கூறுவதை ஏற்க முடியாது.

- பி.ஜே

தீமைகளைக் கண்டிப்போம் - அப்பாஸ் அலீ எம்.ஐ.எஸ்.ஸி

பொதுவாகத் தீமைகள் செய்வது மனிதனின் இயல்பாக இருந்தாலும் தீமைகளைக் கண்டிப்பதும் எச்சரிப்பதும் இல்லாவிட்டால் தவறுகள் பெருகி விடும் என்பது மறுக்க முடியாத உண்மை. 

நன்மையை மட்டும் ஏவி, தீமையைக் கண்டு கொள்ளாமல் செல்பவர்களால் எக்காலத்திலும் மக்களை திருத்த முடியாது. இதற்குப் பொருத்தமான உதாரணமாக தப்லீக் ஜமாஅத்தினரை எடுத்துக் கொள்ளலாம். நன்மை வந்து விட்டால் தீமை தானாகச் சென்று விடும் என்று சொல்லிக் கொண்டு நன்மையை மட்டும் ஏவி வந்தார்கள். இதனால் நன்மையைச் செய்யும் நல்லவர்கள் ஒரு பக்கம் உருவானாலும் சமுதாயத்தில் வட்டி, வரதட்சணை, இணை வைப்பு, ஒழுக்கக் கேடுகள் இன்னும் ஏராளமான பாவங்கள் தொடர்ந்து இருந்து கொண்டே வந்தது. 

மேலும் அவர்களால் உருவாக்கப்பட்டவர்களில் பலர் நன்மையான காரியங்களில் ஈடுபடுவதைப் போல் தீமையான காரியங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே தான் தீமைக்குத் துணை போவது என்பது இவர்களுக்கு ஒரு பாவமாகவே தெரிவதில்லை.

ஆனால் தமிழகத்தில் தவ்ஹீத் எழுச்சி தொடங்கியது முதல், நன்மைகளை எடுத்துரைப்பதைக்  காட்டிலும் தீமைகளை அகற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவைகளைக் களைவதில் தவ்ஹீத் மார்க்க அறிஞர்கள் பெரும்பாடுபட்டார்கள். அவர்களின் அதிகமான உரைகள் தீமைகளைக் கண்டித்த வண்ணமே இருந்தது. 

குற்றங்களைக் கண்டித்ததோடு மட்டுமில்லாமல் எந்த ஒரு சூழ்நிலையிலும் தீமைக்கு யாரும் துணை போய்விடக் கூடாது என்றும் மக்கள் மனதில் பதியச் செய்தார்கள். இதன் விளைவாக சமுதாயத்தில் புரையோடிப் போயிருந்த வரதட்சணை, வட்டி, இணை வைப்பு, அனாச்சாரங்கள் போன்ற பாவங்களிலிருந்து கணிசமான மக்கள் விலகிக் கொண்டார்கள். சிறு சிறு தவறுகளைத் தவிர்த்து முழுக்க முழுக்க நன்மைகளை மட்டுமே செய்யும் மக்கள் உருவானார்கள். இந்த மக்கள் தங்களின் வாழ்க்கையின் மூலம் இவையெல்லாம் பாவங்கள் என்று மக்களுக்கு உணர்த்தியதால் மற்ற கொள்கையில் உள்ளவர்களும் இத்தீமைகளை உணர்ந்து கொண்டார்கள். பலர் தங்களை திருத்திக் கொண்டார்கள்.

ஒரு காலத்தில் தவறே கிடையாது என்று கருதி, பகிரங்கமாகச் செய்யப்பட்டு வந்த பாவங்கள் இன்றைக்கு மறைமுகமாகச் செய்யப்படும் அளவிற்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மறுமலர்ச்சிகள் எல்லாம் தீமைகளுக்கெதிராகக் குரல் கொடுத்ததன் விளைவாகத் தான் ஏற்பட்டது. தீமைகளை கண்டிப்பது அவசியமானது என்பதால் தான் நன்மைகளை ஏவ வேண்டும் என்று இறைவன் கூறும் போது, தீமைகளைத் தடுக்க வேண்டும் என்றும் இணைத்தே கூறுகிறான். 

கொள்கை விளக்கம் - பி.ஜே - தொடர் 3

தரீக்காவின் திக்ருகள்

சபையில் வட்டமாக அமர்ந்து  லாயிலாஹ இல்லல்லாஹ் 100 தடவை  பின்னர் எழுந்து நின்று ஒருவருக்கொருவர் கைகளைக் கோர்த்துக் கொண்டு அல்லாஹ் என்று 100 தடவை  அஹ்' என்று 100 தடவை  கூறுகிறார்கள்.

ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு பாடல்கள் பாடுகிறார்கள். ஒவ்வொருவரும் ஆடுவதால் கழுத்து, வயிறு, தோள்பட்டை ஆகியவை சுருங்கி சுருங்கி விரிகின்றன. இதை நடத்தி வைக்க ஒருவர் தமது உள்ளங்கைகளைத் தரையை நோக்கி வைத்து கைகளை வேகமாக அசைத்து திக்ருக்கு வேகமூட்டுகிறார். திக்ரு முடிந்ததும் சபையில் இருந்த அனைவரும் அவருடைய கைகளை முத்தமிடுவதற்காக முண்டியடித்துக் கொண்டு வருகின்றனர். இதில் காணப்படும் நிகழ்ச்சிகள் அனைத்தும் நபிவழியா? இந்தக் கூத்துக்கள் திருக்குர்ஆனுக்கும், நபிவழிக்கும் முரணானவை. ஷாதுலியா தரீக்காவின் திக்ரு' என்று சில பகுதிகளில் நடத்தப்படும் இந்த திக்ரு பற்றி விரிவாக நாம் அலச வேண்டும்.

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்ல் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! (அல்குர்ஆன் 7:205)

பணிவோடு தான் திக்ரு செய்ய வேண்டும் என்று இவ்வசனம் கட்டளையிடுகிறது. இந்தக் கட்டளைக்கு மாற்றமாக ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும், கைகால்களை உதறிக் கொண்டும் டான்ஸ் ஆடுகின்றனர். இதில் கடுகளவாவது பணிவு இருக்கிறதா என்று யோசியுங்கள்.

மனதிற்குள்ளும், உரத்த சப்தமின்றியும் திக்ரு செய்யுமாறு இவ்வசனத்தில் இறைவன் கட்டளையிடுகிறான்.

இந்த திக்ரோ பகிரங்கமாகவும், பயங்கர சப்தத்துடனும் நடத்தப்படுகின்றது. அல்லாஹ்வின் பள்ளியில் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக அல்லாஹ்வை திக்ரு செய்கிறார்கள். இது இறைவனுக்கு ஆத்திரமூட்டுமா? அன்பை ஏற்படுத்துமா? என்று சிந்தித்துப் பாருங்கள்!

இறைவனை திக்ரு செய்கிறோம் என்ற பெயரில் மனிதர்கள் இயற்றிய பாடல்களைப் பக்திப் பரவசத்துடன் மெய் மறந்து பாடுகின்றனர். மனிதனின் வார்த்தைகளை வணக்கமாகக் கருதுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இறைவனுக்கென்று அழகிய திருநாமங்கள் உள்ளன. அந்தத் திருநாமங்களைக் கூறியே இறைவனை அழைக்க வேண்டும்; திக்ரு செய்ய வேண்டும்.

Friday, March 2, 2012

முதல் நட்பு - ஜே. ஃபாஜிலா, திருத்துறைப்பூண்டி

உறவு என்பது மிக முக்கியமான ஒன்று. ஒருவருக்கு எந்த உறவு இருக்கிறதோ இல்லையோ நட்பு என்ற உறவு அனைவருக்கும் இருக்கும். இது ஒரு வித்தியாசமான உறவு. நம் மீது ஒரு வித அன்பு வைத்துப் பழகி, நம் இன்ப துன்பங்களை பங்கிட்டுக் கொள்ளும். இளமை முதல் முதுமை வரை பல கோணங்களில் இந்த நட்பு வரும். இந்த நட்பின் மூலம் பல உதவிகள் பெற்று முன்னேறியவர்கள் பலர்.

பொதுவாகத் தாய் தந்தை, அண்ணன் தம்பி, அக்கா தங்கை என அனைத்துமே நாம் எதிர்பாராத வித்தியாசமான கோணங்கள் கொண்ட உறவாகும். இதை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால் நட்பு என்ற உறவை நாமே நம் குணங்களுக்கு ஏற்பத் தேர்வு செய்கிறோம். பணத்திற்காக, பாசத்திற்காக, உடன் இருப்பவர் என்பதற்காக, உறவினர் என்பதற்காக, நண்பனுடைய நண்பன் என்பதற்காக இப்படிப் பல முறைகளில் நட்பைத் தேடுகிறோம். இவ்வாறு நாம் நட்பு கொள்ளும் நபர் அனுபவமுள்ள ஒருவராக, மற்றவரை விட நம் மீது அதிகம் பாசம் வைத்திருக்கும் ஒருவராக இருந்தால் அது மிகச் சிறந்ததாக இருக்கும்.

ஒருவர் விபரம் தெரிந்த பிறகு தேர்ந்தெடுக்கும் நட்பு வேண்டுமானால் சில நேரங்களில் தவறாகப் போகலாம். ஆனால் நமக்காக நம்முடைய இறைவன் நமக்கே தெரியாமல் சிறு வயதிலிருந்தே ஒரு நட்பை நமக்கு ஏற்படுத்தி உள்ளான். அதவும் நாம் முன்பே கூறியது போல் பல விஷயங்களில் அனுபவமுள்ள, அதிக பாசமுள்ள ஒருவர். அது தான் முதல் நட்பான தொப்புள் கொடி நட்பு.

ஆனால் சிலர் என் தாயை விட என் தோழிக்குத் தான் என்னைப் பற்றிய முழு விபரம் தெரியும். அவள் தான் என்னைப் புரிந்து கொள்பவள், பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்பவள் என்று கூறுகின்றனர். பெற்ற தாயை விட இந்தத் தோழமையை கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக எண்ணுகின்றனர்.
 

இல்லாத பெயரில் பொல்லாத பித்அத்கள் - ரஸ்மின் எம்.ஐ.எஸ்.ஸி

அன்னையர் தினம், முதியோர் தினம், ஆசிரியர் தினம், என்று பல விதமான தினங்களை இன்று மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த தொடரில் நமக்கும் காலத்திற்குக் காலம் ஏதாவது சில தினங்களை உருவாக்க வேண்டும் என்று நினைத்த இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த மத குருமார்கள் சிலர், நபியவர்களின் பிறந்த தினம், நபியவர்கள் மிஃராஜ் சென்ற தினம், என்று பல வகையான மார்க்கத்தில் இல்லாத கொண்டாட்டங்களை உருவாக்கி வைத்துக் கொண்டு அவற்றையும் மார்க்கம் என்ற பெயரில் காலா காலமாக அரங்கேற்றி வருகிறார்கள்.

அந்த வகையில் ஷஃபான் மாதம் 15ம் நாளை கபுராளிகள் தினம் (பராஅத் இரவு) என்று உருவாக்கி அதனை வெகு விமர்சையாக முஸ்லீம்களில் சிலர் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த கபுராளிகள் தினம் என்பது மார்க்கத்தில் உள்ளதா? நபியவர்கள் இதனை காட்டித் தந்தார்களா? கபுராளிகள் தினம் கொண்டாடுவதினால் நமக்கு ஏதும் நன்மை உண்டா? மரணித்தவர்களுக்கு ஏதும் நன்மை ஏற்படுமா என்பதையெல்லாம் மிகத் தெளிவாக விளக்குவதற்காகவே இந்த ஆக்கம் எழுதப்படுகிறது.

நபியவர்கள் காட்டித்தராதவை மார்க்கமாக முடியாது
 
இஸ்லாமிய மார்க்கத்தில் எதையாவது ஒன்றை இபாதத்தாக (வணக்கமாக) செய்ய வேண்டும் என்றால் அந்த வணக்கம் அல்லாஹ்வினாலும் அவனுடைய தூதரினாலும் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். எந்த வணக்கத்திற்கு இந்த அங்கீகாரம் இல்லையோ அந்த வணக்கம் இஸ்லாத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, நிராகரிக்கப்படும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமையான காரியம் நிராகரிக்கப்படும். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 2697

நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். நூல்: முஸ்லிம் 3243

ஆக நாம் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதற்கு இஸ்லாமிய அனுமதியுண்டா என்று பார்ப்பது முதல் கடமை. கபுராளிகள் தினம் என்று இன்றைக்கு கொண்டாடப்படும் தினத்திற்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை. அப்படி ஒரு இரவை அல்லாஹ்வோ, அவனுடைய தூதரோ காட்டித் தரவும் இல்லை. கபுராளிகள் தினம் கொண்டாடக் கூடாது, கொண்டாடுவது பாவமான காரியம் என்பதற்கு இந்த அளவுகோளே போதுமானதாகும்.
 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner